அடுத்த நாள் காலை யாருக்கும் காத்திராமல் பொழுது விடிந்தது. பார்வதியோ வேக வேகமாக காலை உணவை செய்து கொண்டிருந்தார். நீண்ட நேரம் அழுதழுது தூங்கியதால் அன்னத்திற்கு தலைவலித்தது. மெதுவாக எழுந்து அமர்ந்தவள் தலையில் கை வைத்துக் கொண்டிருந்தாள். அருகில் திரும்பிப் பார்க்க அங்கே கிருத்திஷைக் காணவில்லை. ‘என்ன மாமாவைக் காணல.. எங்கிட்ட சொல்லாமலே போயிட்டாங்களா?’ என்றவள், பதறி அடித்துக் கொண்டு குளித்துவிட்டு அத்தை பார்வதியிடம் ஓடி வந்தாள்.
“அத்தை மாமா எங்க?” என்று கேட்டாள்.
“என்னை காலையில எந்திரிச்சதும் மாமாவை தேடுற? அவன் கொஞ்சம் வெளில போயிட்டு வரேன்னு போயிருக்கான் அன்னம்.”
“சரி அத்த நான் கொஞ்சம் கோவில் வரைக்கு போயிட்டு வந்துடறேன்.” என்று சொல்ல அவரும், “சரி போயிட்டு வாம்மா. சீக்கிரம் வந்திடு.” என்றார்.
அவளும், “சரி அத்தை.” என்று சொல்லிவிட்டு கோயிலுக்கு சென்றாள்.
அங்கே அழகிய அலங்காரத்தில் காட்சி தந்தான் கருணைக்கடலான முருகன். அவனை இரு கண்கள் நிறைய பார்த்து மகிழ்ந்தவள், “முருகா மாமா நல்லா இருக்கணும். மாமா எந்தவொரு ஆபத்தும் இல்லாம அவங்க வீட்டுக்கு போய் சேரணும். நீதான் எப்பவும் அவங்க கூட இருந்து காப்பாத்தணும்.” என்று இறைவனை வேண்டினாள். பின்னர் பிரசாதத்தை வாங்கிக்கொண்டு மறுபடியும் வீட்டிற்கு வந்தாள்.
கிருத்திஷ் வந்ததும் நால்வரும் அமர்ந்து வழமை போல உணவு உண்டனர். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கிருத்திஷ், போன் வந்தது. ஹென்றி தான் அழைத்திருந்தான்.
“ஹலோ பாஸ்.. வேர் ஆர் யூ ரிட்டர்ன்? வெரி இம்போர்ட்டன் மீட்டிங் ஹியர்.”
“யெஸ் ஹென்றி ஐ நோ. ஐ வில் கம் ஆப்டர்நூன் பிளைட்.” என்றான்.
“ஓகே பாஸ். நான் உங்களுக்காக ஏர்போர்ட்ல வெயிட் பண்றேன்..”
“ஓகே ஹென்றி.” என்று சொல்லி ஃபோனை வைத்தவன் சாப்பிட்டு விட்டு எழுந்தான்.
எல்லோரும் சாப்பிட்ட பின்னர் ஹாலில் இருந்தனர். அப்போது, “அம்மா ஓகே நான் போயிட்டு வரேன். நீங்களும் சீக்கிரம் வந்துருங்க.” என்றவன் வேலுச்சாமியிடம் வந்தான். “மாமா எதுக்கும் பயப்படாதீங்க. எதைப் பற்றியும் யோசிக்காதீங்க.. எல்லாம் சரியாயிடும்..” என்றவன் அன்னத்திடம் எதுவும் பேசாமல் அறைக்குள் சென்றான்.
பார்வதியோ “அன்னம் போ” என்று கண்ணைக் காட்ட, “போங்க அத்தை” என்று சொல்லிவிட்டு கிருத்திஷின் பின்னால் சென்றாள்.
“மாமா என்மேல இருக்கிற கோபம் இன்னும் போகலையா மாமா? என்கூட பேசுங்க மாமா.” என்றாள். அதற்கு அவள் பக்கம் திரும்பியவன் கையைக் கட்டிக் கொண்டு அவளை நிமிர்ந்து பார்த்தான். அன்னம் தனது புடவை முந்தானையை கையில் வைத்து சுருட்டிக் கொண்டு தலை குனிந்து நின்றாள்.
“ஏய் இங்க பாரு.”
அன்னம் நிமிந்து அவனைப் பார்க்க கண்களில் கண்ணீர் அணைகட்டி நின்றது. தனது இரு கரங்களால் அவளது முகத்தை ஏந்தினான். “எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க?”
“இல்ல மாமா நான் உங்களை கஷ்டப்படுத்தி இருக்க கூடாது. என்னதான் இருந்தாலும் கல்யாணம் ஆயிட்டா புருஷன் வீட்டுக்கு போறது தானே சரி. என்ன பண்றது அம்மா இல்லை. அதனால் எப்பவும் அப்பா கூடவே இருந்துட்டு இப்போ அப்பாவை விட்டுட்டு வர மனசு இல்லை.” என்றாள்.
“நான் எப்படி உங்க அப்பா விட்டுட்டு போவேன்னு நீ நினைக்கலாம்? அந்த அளவுக்கு கல்நெஞ்சுக்காரனா நான்? மாமாவையும் கூட்டிட்டு தான் போவேன். உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போறதுக்கு இங்கேயும் அங்கேயும் நிறைய வேலை இருக்கு. பட் எனக்கு இப்ப டைம் இல்ல நான் அவசரமா போயாகணும். இங்க ரோஹித் வந்ததுக்கப்புறம் எல்லா வேலையையும் முடிச்சிட்டு உங்களை அங்க கூட்டிட்டு வருவான்.”
“என்ன மாமா அப்போ நீங்க வர மாட்டீங்களா?” என்றாள்.
“நான் எதுக்கு அதுதான் ரோஹித் வர்றானே. உங்களை ரொம்ப பத்திரமா அவன் கூட்டிட்டு வருவான்.” அன்னம் எதுவும் பேசாமல் மீண்டும் தலையை குனிந்து கொண்டாள்.
“ஐயோ அன்னம் இங்க பார். எதுக்கு மறுபடியும் மறுபடியும் தலையை குனிந்து கொண்டு இருக்க? எதுவா இருந்தாலும் முகத்தை பார்த்து பேசு.”
“மாமா எனக்கு பயமா இருக்கு நீங்க வர்றீங்களா எங்களை கூட்டிட்டு போக.”
“நான் சரியா சொல்ல மாட்டேன். பட் ட்ரை பண்றேன். பத்ரமா இரு. எதுக்கும் பதட்டப்படாத சரியா? நான் போயிட்டு வரேன்.”
“ஓகே பாய்.” என்றவன் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு பெட்டியை எடுத்துக்கொண்டு வந்தான். டாக்ஸி வர, அதில் பெட்டியை வைத்தவன், அதில் ஏறி சென்று விட்டான்.
அன்னத்துக்கு தான் அவன் சென்றதும் முகம் வாடிவிட்டது. அதைப் பார்த்த பார்வதி, “கவலைப்படாத அன்னம் கொஞ்ச நாள்தான். அதுக்கப்புறம் அங்க போயிடலாம்.” என்றார்.
ப்ளைட்டில் ஏறி இருந்த கிருத்திஷின் கண்களில் அன்னத்தின் முகம் அடிக்கடி வந்து போனது. கிருத்திஷ் அன்னத்திடம் பேசக் கூடாது என்று தான் இருந்தான். ஆனால் வேலுச்சாமி தான் அவனிடம் வந்து அவளைப் பற்றி எடுத்துச் சொன்னார்.
“மாப்ள என் மேல இருக்கிற பாசத்துல என் பொண்ணு அப்படி சொல்லிட்டா மாப்ள. தப்பா எடுத்துக்காதீங்க. எடுத்து சொன்னா அவ புரிஞ்சிப்பா.” என்றார். அவனுக்குமே அன்னத்திடம் பேசாமல் இருப்பது கஷ்டமாக இருக்க எப்போது பேசி விட்டான்.
இந்தியா வந்தது முதல் நடந்த அனைத்தும் அவனது மனக் கண்ணில் ஓடிக்கொண்டே இருந்தது. அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை இப்படி திருமணம் நடக்கும் என்று. ‘எது எது நடக்கணுமோ அது அது அப்படித்தானே நடக்கும் என்று நினைத்துக் கொண்டவன்’ அப்படியே தூங்கினான்.
மதியவேளை சமையலில் பார்வதிக்கு உதவி விட்டு அவர்கள் அறைக்குள் சென்றாள் அன்னம். வேலுச்சாமியும் சந்தைக்குச் சென்று விட பார்வதி சமைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு அன்னத்தின் நிலை புரிந்தது. அவரும் அந்த நிலையை கடந்து தானே வந்தார். அதனால் அவளை போய் தூங்க சொல்லிவிட்டு, இவர் சமையல் ஆரம்பித்தார்.
அறைக்குள் வந்த அன்னத்திற்கு காரணமே இல்லாமல் அழுகை முட்டியது. கிருத்திஷின் வாசம் அந்த அறையில் இருப்பது போல உணர்ந்தாள். எந்தப் பக்கம் பார்த்தாலும் அவனின் பிம்பம் தோன்றியது. கட்டிலில் படுத்தவள், ‘மாமா உங்க கூட நான் பெரிசாக பேசவே இல்லை. இந்த கல்யாணத்துக்கு அப்புறம் தான் உங்க கூட இருந்த அந்த ரெண்டு மூணு நாள்ல கூட அவ்வளவா பேசினது இல்ல. ஆனா இப்ப நீங்க இங்க இருந்து போனதுக்கப்புறம் உங்க ஞாபகமாவே இருக்கு. உன்ன பாக்கணும் போல இருக்கு மாமா’ என்றவளால் அதற்கு மேல் முடியாமல் போக, எழுந்து சென்று அங்கிருந்த அலமாரியில் பார்க்க கிருத்திஷின் டி-ஷர்ட் ஒன்று இருந்தது. அதை எடுத்து அவனின் வாசம் பிடித்தவள், கட்டில் வந்து அதை அணைத்துக் கொண்டு அப்படியே தூங்கிப் போனாள்.
சந்தையில் இருந்து வேலுச்சாமி வந்ததும் பார்வதி அவருக்கு குடிக்க மோர் கொண்டு வந்து கொடுத்தார். “அண்ணே மோர் குடிங்க அண்ணேன்.” என்று சொல்ல, அவரும் அதை வாங்கி குடித்துவிட்டு, “ஆமா பார்வதி எங்க அன்னத்த காணோம்?” என்றார்.
பார்வதியும், “இவ்வளவு நேரம் எனக்கு சமையல்ல கூட மாட ஒத்தாசையா இருந்தா அண்ணா. நான் தான் புள்ள முகமே வாடி போயிட்டு இருந்திச்சா அதுதான் போய் கொஞ்ச நேரம் தூங்கட்டும்னு அனுப்பி வச்சேன்.”
“என்னது தூங்கறாளா? அன்னம் பகல் நேரத்தில் தூங்க மாட்டாளே.”
“அவளுக்கு கிருத்திஷ் போனதிலிருந்து முகமே சரியில்ல. பாவமா இருந்துச்சு எப்படி கல்யாணம் நடந்தாலும், நம்ம பொண்ணுங்க தாலி கட்டிட்டா புருஷன் என்று நினைத்து வாழ ஆரம்பிச்சிடுவாங்க தானே. அதனால கிருத்திஷ் போய்ட்டானா அதுதான் அவளுக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு. அவன் அங்க போயிட்டு போன் பண்ணதுக்கு அப்புறம் தான் அன்னத்தோட பேச கொடுக்கணும்.” என்றார்.
“எப்படி பார்வதி, நான் வேண்டின அத்தனை சாமியும் தான் என் பொண்ணு அன்னத்துக்கு நல்ல ஒரு வாழ்க்கையை கொடுத்திருக்கு.”
“நானுமே நம்ம நாட்டு பொண்ணைத்தான் என் பையனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். அதுவும் நடந்துருச்சு. சரி நீங்க வாங்க அண்ணா நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.”
“சரிம்மா நான் குளிச்சிட்டு வந்துடறேன். அன்னத்தையும் வரச் சொல்லும்மா சேர்ந்து சாப்பிடும்.” என்று சொல்ல, பார்வதியும் அறைக்குள் வந்தவர், கட்டிலில் கிருத்திஷின் டி-ஷர்டைப் அணைத்துப் பிடித்தபடி தூங்கும் அன்னத்தை பார்த்தார்.
‘பாருடா மூணு நாள்ல இப்படியா?’ என்று சிரித்துக் கொண்டவர் அவள் தூங்கும் அழகை ஒரு போட்டோ எடுத்து மகனுக்கு அனுப்பி விட்டு வந்து அன்னத்தை எழுப்பினார்.
“அன்னம்.. அன்னம் எந்திர வா சாப்பிடலாம்.” அன்னமோ, “இல்ல அத்தை எனக்கு பசி இல்ல. நான் அப்புறமா சாப்பிடுகிறேன்.” என்றாள்.
“இப்படி சொன்னா எப்படி? வா கண்ணு கொஞ்சமாவது சாப்பிடு.”
“இல்ல அத்தை எனக்கு பசியில்லை வேண்டாமே.” என்று அவள் கெஞ்சினாள். அவர் எவ்வளவு வற்புறுத்தியும் அன்னம் சாப்பிட வரவில்லை.
“சரி ஆனால் கொஞ்சம் லேட்டா சாப்பிட்டு” என்று சொல்லிவிட்டு பார்வதி வெளியே வந்தார். வேலுச்சாமியிடம், “அன்னம் அப்புறமா சாப்பிடுறேன்னு சொல்றா. நான் எவ்வளவு கூப்பிட்டும் வரல. நீங்க வாங்க அண்ணா நாம சாப்பிடலாம். அவ கிருத்திஷோட பேசினதுக்கு அப்புறம் தான் சாப்பிடுவா போல இருக்கு.” என்று சிரித்துக் கொண்டே சொல்ல, வேலுச்சாமி, “என் அன்னம் இப்படி நடந்துக்கிறது எனக்கு ஆச்சரியமா இருக்கு பார்வதி. கல்யாணமானதும் பொண்ணுங்க அப்படியே மாறிடுவாங்கல.” என்று இருவரும் பேசிக் கொண்டு சாப்பிட்டனர்.
………………………………………………….
ரோஹித் காலேஜில் அவனது கடைசி எக்ஸாமை முடித்துவிட்டு வந்து, வெளியே கிரவுண்டில் ஒரு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த மாணவர்களும் அவனுடன் வந்து சேர்ந்து கொண்டனர். இவர்கள் நடனமாடுவதை தனது போனில் வீடியோ பண்ணிக் கொண்டிருந்தாள் இரா. நன்றாக ஆடி முடித்துவிட்டு நண்பர்களிடம் விடை பெற்றுக்கொண்டு இராவிடம் வந்தான்.
“இன்னைக்கு மிஸ்டர் நக்கீரர் அமெரிக்கா ரிட்டன்.”
“என்ன கிருத்திஷ் சார் வர்றாங்களா?” “ஆமா அண்ணா இன்னைக்கு நைட் வந்துருவான். நான் நாளைக்கு நைட்டுக்கு அங்க போறேன்.”
“சீனியர் நான் நாளைக்கு உங்களை சென்ட் ஆஃப் பண்ண ஏர்போர்ட் வந்துடுறேன்.”
“அப்புறம் நீ வராம எப்படி? கண்டிப்பா வரணும்.”
“ஆமா நீங்க மட்டுமா போறீங்க? மாமா வர்றாங்களா?”
“அப்பா வரல அவருக்கும் இங்க வேலை இருக்கு. நான் மட்டும் தான் போவேன்.”
“சரி பத்திரமா போயிட்டு வாங்க.”
“ஓகேடா, நீ கிளாஸ்க்கு கிளம்பு. நான் போயிட்டு கால் பண்றேன்.”
“சரி சீனியர்.” என்று ஒரு அணைப்புடன் அவனிடமிருந்து விலகினார். அவளைப் பார்த்து கண்ணடித்தவன், “ஓகே டேக் கேர் டார்லிங்.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.
ஜனகன் தனது ஆபிஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பார்வதியிடம் இருந்து கால் வந்தது.
“ஹாய் பாரு. ஹவ் ஆர் யூ?”
“நான் நல்லா இருக்கேன்ங்க. நீங்க எப்படி இருக்கீங்க?”
“நான் நல்லா இருக்கேன் பட் ஐ மிஸ் யூ.” என்றார்.
“ஆஹா இந்த மிஸ் யூ எல்லாம் கேட்டு எத்தனை வருஷமாச்சு?”
“ஏன்னா நீ என்னை விட்டு இவ்வளவு நாள் எங்கேயும் போனதில்ல. அப்புறம் எப்படி மிஸ் யூ வரும்? எப்போ பாரு இங்க வர்றதா இருக்க?”
“ஓகே பாரு மச்சானும் இங்க வர்றது ரொம்ப நல்லது. அங்க தனியாக இருந்து என்னதான் பண்ணுவாரு? ஆமா கிருத்திஷிற்கும் அன்னத்துக்கும் இடையே எப்படி போகுது? ஓகேதானே ரெண்டு பேரும்?”
“அதை ஏங்க கேக்குறீங்க?” என்றவர் அன்னம் நடந்து கொண்டதையும் கிருத்திஷ் நடந்து கொண்டதையும் சொன்னார்.
“நான் நினைக்கவே இல்ல பாரு. நம்ம பையனா இது?”
“நம்பித்தான் ஆகணும்.”
“சரி எப்படியோ ரெண்டு பேரும் சேர்ந்து நல்லா இருந்தா சரிதான்.”
“சரிங்க நீங்க ரொம்ப நேரம் ஆபீஸ் ஆபீஸ்னு ஆபீஸ்லயே இருக்க வேணாம். கிருத்திஷ் நைட்டுக்கு வந்துருவான். நீங்க ஏர்போர்ட்டிற்கு போய் பிக்கப் பண்ணிக்கோங்க.” என்றார்.
“இல்லை பாரு, கிருத்திஷை பிக்கப் பண்ண ஹென்றி போறேன்னு சொல்லி இருக்கான்.”
“அப்படியா ஓகேங்க. சரி நான் அப்புறம் பே சுறேன். வச்சிடட்டுமா?”