பார்வதி மீண்டும் ஒருமுறை வந்து அன்னத்தை சாப்பிட அழைத்தார். ஆனால் அன்னமோ வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள். “ஐயோ அன்னம், அவன் பத்திரமா போயிடுவான். போயிட்டு கால் பண்ணுவான். நீ ஏன் பயப்படுற முதல்ல வந்து சாப்பிடு.” என்றார். “இல்ல அத்தை நான் மாமா அங்க பத்திரமா போனதுக்கு அப்புறம் சாப்பிடுறன்.” என்றாள். அதன் பிறகு பார்வதி அன்னத்தை தொந்தரவு செய்யவில்லை.
மிக நீண்ட நேரத்து பிரயாணத்தின் பின்னர் வந்து இறங்கினான் கிருத்திஷ். ஏர்போர்ட்டிற்கு வந்ததுமே ஃபோனை எடுத்து ஆன் பண்ணினான். ஆன் பண்ணியதும் உடனே வந்து விழுந்தது பார்வதியிடம் இருந்து ஒரு போட்டோ. ‘என்ன அம்மா போட்டோ அனுப்பி இருக்காங்க.’என்றவன் அதை எடுத்துப் பார்த்தான்.
அதில் அவனின் மனைவி தனது டீ-ஷர்ட்டை இறுக்கி அணைத்துப் பிடித்தபடி தூங்கிக் கொண்டிருக்கும் போட்டோ தெரிய அவன் உதடுகளில் புன்னகை வந்தது. இப்போதே அவளை அள்ளி அணைத்து தனக்குள் புதைத்துக் கொள்ள ஆசை பிறந்தது.
கிருத்திஷைப் பார்த்த ஹென்றி கையை அசைத்துக் கொண்டு அவனிடம் வந்தான். தனது பாஸின் முகத்தில் தெரிந்த புன்னகையை பார்த்ததும் மயக்கம் வராத குறை தான். என்னது நம்ம பாஸ் சிரிக்கிறாரா? அதுவும் அவரோட போனை பார்த்து சிரிக்கிறாங்க.
அவன் “பாஸ்.” என்ற உடனே போனைப் பார்த்து சிரித்த கிருத்திஷின் புன்னகை மறைந்தது. “பாஸ் டிராவலிங் எல்லாம் எப்படி இருந்துச்சு?”
“ம்ம்ம குட் போலாமா ஹென்றி?” என்றான்.
“ஓகே பாஸ்.” என்றவன் கிருத்திஷின் பின்னால் சென்றான்.
காரில் சென்று கொண்டிருக்கும் போது பார்வதிக்கு கால் பண்ணினான். இரவு நேர உணவையும் முடித்துவிட்டது. அன்னம் அறையில் இருந்து வெளியே வரவே இல்லை. படுத்தவாறு இருந்தாள்.
வேலுச்சாமியும் பார்வதியும் அவளை தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டு இரவு உணவையும் அவர்கள் உண்டு விட்டு, முற்றத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பார்வதியின் போன் சத்தமிட அதை எடுத்துப் பார்த்த பார்வதி, “அண்ணே கிருத்திஷ்தான் கால் பண்றான். வீட்டிற்கு போயிட்டான் போல இருக்கு.” என்றவர் உடனே போனை எடுத்து, “வீட்டிற்கு போயிட்டியா கண்ணா?” என்றார்.
“ஆமா அம்மா பத்திரமா வந்துட்டேன். வீட்டுக்கு தான் போயிட்டு இருக்கேன்.” என்றாள்.
“சரிப்பா நான் பயந்துட்டே இருந்தேன். எப்படியோ பத்திரமா போயிட்டல்ல அதுவே போதும். சரி நான் அனுப்புன போட்டோவை பாத்தியா?”
“பார்த்தேன் அம்மா.” என்றான்.
“கிருத்திஷ், அன்னம் நீ போனதிலிருந்து சாப்பிடவே இல்லை. நீ வீட்டுக்கு போய்ட்டு அப்புறம் அவகூட பேசுறியா? படுத்துக்கிட்டே இருக்கா.”
“சரிம்மா நான் வீட்டுக்கு போய்ட்டு அவகூட பேசுறேன். மாமா எங்க?”
“அண்ணேன் இங்கதான் இருக்காங்க.”
“சரிம்மா நான் வீட்டுக்கு போயிட்டு மாமா கூட பேசுறேன்.”
“ஓகே கண்ணா நான் வைக்கிறேன். பத்திரமா பாத்துப்போ.” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.
“அதுக்கென்ன பார்வதி மாப்ள பத்திரமா போயிட்டாரே அதுவே போதும்.” என்றார்.
கிருத்திஷ் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அப்போது ஹாலில் இருந்த ரோஹித்,
“நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை.. உன்னை போல என்னை எண்ணும் நீயும் நானும் ஒரு தாய் பிள்ளை….” என்று பாடிக்கொண்டே வந்து கிருத்திஷை அணைத்துக் கொண்டான்.
கிருத்திஷூம் அவனை பதிலுக்கு அணைத்தவன், “என்ன பண்ணிட்டு இருக்க ரோஹித்? எல்லாம் ஓகே தானே.”
“அண்ணா ப்ரொஜெக்ட் சப்மிட் பண்ணிட்டேன். அதுக்கப்புறம் எக்ஸாம் முடிச்சிட்டு நாளைக்கு இந்தியா போறேன். எனக்கு அண்ணிய பார்க்க ரொம்ப ஆவலா இருக்கு..” என்றான்.
அதற்கு கிருத்திஷ், “ஆமா நீ அங்க கண்டிப்பா போய்த்தான் ஆகணும். அங்க உனக்கு நிறைய வேலை இருக்கு.” என்றான்.
“ஐயோ அண்ணா அங்கேயும் வேலையா? நான் அங்க என்ஜாய் பண்ண தான் போறேன். தயவு செய்து எந்த வேலையையும் என் தலையில கட்டிடாத அண்ணா.”
“அதை அப்புறம் பாக்கலாம் வா. எங்க டாடி?” என்றான்.
“கண்ணா எப்படி இருக்க நல்லா இருக்கியா?” என்றவாறு வந்தார் ஜனகன்.
இவர்கள் பேசுவதை பார்த்த ஹென்றி, “ஓகே பாஸ் நான் போயிட்டு காலையில வரேன்.” என்றான்.
“ஓகே ஹென்றி பாய்.”
ஹென்றி சென்றதும் ஜனகன் மகனின் பக்கம் திரும்பி, “ஓகே கிருத்திஷ் குளிச்சிட்டு வா பேசலாம்.” என்றார்.
“ஓகே டாட்.”என்றவன் அங்கிருந்து அவனது அறைக்குள் சென்றான்.
“டாடி நம்ம நக்கீரன் எப்படி இப்போ நல்லா பேசுறான்? என்னால நம்பவே முடியல.”
“ரோஹித் அவன்கிட்ட அடி வாங்காம போயிடு. அவன் இப்படி மாறினதே சந்தோஷம்தான். வரட்டும் பேசுவோம்.” என்ற ஜனகன் இரவு நேரத்திற்கு சாப்பிட சாப்பாடு செய்ய சென்றார். அங்கிருந்து போனை எடுத்துக் கொண்டு நகர்ந்த ரோஹித்தின் டீ-ஷர்ட்டை எட்டிப் பிடித்தவர், “எங்க மகனே நழுவப் பார்க்குற வா சாப்பாடு செய்யலாம்..” என்று அவனையும் இழுத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றார்.
“இன்னைக்கு மட்டும் தான் ஹெல்ப் பண்ணுவேன்.. நாளைக்கு யாரு உங்களுக்கு இப்படி ஹெல்ப் பண்ணுவாங்க? உங்க பெரிய பையன் கிட்ட இதை எல்லாம் எதிர்பார்க்காதீங்க. நான் நாளைக்கு அம்மா கையாலே சாப்பிடுவேன்.” என்றவன் தந்தை சொன்ன வேலையை செய்து கொண்டிருந்தான்.
அறைக்குள் வந்த கிருத்திஷ் தான் கொண்டு வந்த பெட்டியை ஓரத்தில் வைத்துவிட்டு, குளித்துவிட்டு வந்தான். தலையை துவட்டியவாறு வந்து கட்டில் அமர்ந்தவன் போனை எடுத்து பார்வதிக்கு கால் பண்ணினான்.
“அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்.”
“சரிப்பா சாப்பிட்டியா?” என்றார் பார்வதி.
“இல்ல அம்மா இப்போதான் அப்பா சமைக்கிறாங்க.”
“ஓகே கண்ணா சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு.”
“அம்மா மாமா இருக்காங்களா?” என்றான்.
“ஆ.. அண்ணா இதோ இருக்காங்கப்பா.. இரு போனை கொடுக்கிறேன்.” என்றவர் வேலுச்சாமியிடம், “அண்ணன் கிருத்திஷ் பேசணுமாம்..” என்று போன கொடுத்தார்.
“மாப்ள நல்லபடியா போய்ட்டீங்களா?”
“ஆமா மாமா நான் நல்லபடியா வந்துட்டேன். அங்கே எல்லாம் ஓகே தானே. நீங்க நல்லா இருக்கீங்களா?”
“நான் நல்லா இருக்கேன் மாப்ள எந்த பிரச்சனையும் இல்லை.” என்று பேசினார். பின்னர் கிருத்திஷிடம் பார்வதி, “கண்ணா நீ கொஞ்சம் அன்னம் கூட பேசு.”
“இருங்க அம்மா வீடியோ கால் பண்றேன் அதை குடுங்க.” என்றான். “பாருடா அம்மா கூட ஆடியோல பேசிட்டு பொண்டாட்டி கூட வீடியோ கால் பேசுறியா?”
“ஐயோ அம்மா அப்படி இல்ல.” என்றான் கிருத்திஷ்.
“எப்படியோ சந்தோஷமா இருந்தா சரிதான்.” என்றவர் போனை எடுத்துக்கொண்டு அறைக்குள் வந்தார்.
அங்கே அன்னம் மதியம் இருந்து எப்படி படுத்தாளோ அப்படியே படுத்துக் கொண்டிருந்தாள்.
“அன்னம்… அன்னம்.. எந்திரி இந்தா போன். உன் புருஷன் உன் கூட பேசணுமாம்.”
“என்ன அத்தை மாமாவா எங்க மாமா?”
“போன்ல இருக்கான் பேசு..” என்றவர் ஃபோனை அவளிடம் கொடுத்துவிட்டு வெளியே சென்று விட்டார்.
“இன்னும் சாப்பிடல. அப்பா இப்போதான் சமைச்சுட்டு இருக்காங்க. அப்புறம்தான் சாப்பிடணும்.. ஆனா நீ ஏன் இன்னும் சாப்பிடல?” என்று கேட்டான்.
“இல்ல மாமா நீங்க இங்க இருந்து போனதிலிருந்து என் மனசுக்கு ஒரு மாதிரியா இருக்கு மாமா. ஏன் மாமா என்னை தனியா விட்டுட்டு போனீங்க?” என்றாள் அழுகையான குரலில்.
இதைக் கேட்ட கிருத்திஷிற்கு கவலையாக இருந்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்டாது அவளிடம், “நீதான் என் கூட வரமாட்டேன்னு சொன்னே. அப்பறம் என்ன இப்போ இப்படி சொல்ற?”
“இல்ல மாமா.. நீங்க இங்க என்கூட இருக்கும் போது எனக்கு எதுவும் தெரியல. இப்போ என்னை விட்டு ரொம்ப தூரம் போயிட்டீங்களா. அதை என்னால தாங்கிக்க முடியல மாமா.. மூணுநாள் தான் என்கூட இருந்தீங்க. ஆனா உங்க கூட ரொம்ப நாள் இருந்த மாதிரி இருக்கு. நீங்க இல்லாம எனக்கு இந்த அறையில இருக்கவே பிடிக்கல தெரியுமா?” என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவளது எல்லாம் உணர்வுகளையும் அவனிடம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள் அன்னம்.
அவளது வெள்ளந்தியான அன்பைப் புரிந்து கொண்டான் கிருத்திஷ்.
“அன்னம் இப்போ என்ன என்கிட்ட வரணும் அவ்வளவுதானே. சீக்கிரமா இங்க வந்திடுவ. அதற்கான வேலையை நான் செய்றேன் சரியா? அதுவரைக்கும் சாப்பிடாம இருக்காம நல்லா டைமுக்கு சாப்பிடணும் ஓகேவா?”
“நான் டெய்லி உனக்கு கால் பண்ணுவேன். ஃபோன்ல ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கலாம் பேசலாம். சரியா? பக்கத்தில் இருக்கும் போது பயந்து பயந்து பேசுவ. இப்போ போன் பண்ணா தான் தைரியமா பேசுறியா?”
“இல்ல மாமா உங்களோட கோபத்தை பாத்தாலே எனக்கு பயமா இருக்கு. அதனால தான் பேச வரல.” என்றாள். “என் கோபத்தை எங்க அம்மா சமாளிக்கிறாங்க தானே. அப்படி நீயும் சமாளிக்க கத்துக்க. அதான் உனக்கு நல்லது.” என்றான்.
“என்ன மாமா உங்க கோவத்தை பார்த்து நான் பயப்படுறன்ல, அப்போ எனக்காக கோவத்தை குறைக்க கூடாதா?” என்று கேட்டாள்.
“எனக்கு புரியும் அன்னம். உனக்காக என்னோட கோபத்தை குறைக்க முயற்சி பண்றேன். ஆனா இன்னும் நீ இவ்ளோ பேசுவனு எனக்கு அங்க இருக்கும் போது தெரியல. எப்படியும் நீ இங்க வரத்தானே வேணும். வந்ததுக்கு அப்புறம் பாத்துக்கலாம்.” என்றான்.
“சரி மாமா நீங்க போய் சாப்பிட்டு தூங்குங்க. பயணம் செஞ்சிட்டு போனது ரொம்ப களைப்பா இருக்கும்.” என்றாள்.
அவனும், “சரி நீயும் மதியம் இருந்து சாப்பிடாம இருக்கிற அன்னம். முதல்ல நீ போய் சாப்பிடு. நான் நாளைக்கு கால் பண்றேன்.”
“சரி மாமா. நான் போனை வைக்கிறன்.”
“ஓகை பாய்.” என்ற கிருத்திஷ் ஃபோனை கட் பண்ணினான். அவன் ஃபோனை வைத்ததும் அன்னம், “அத்தை..” என்று அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
“என்ன அத்தை.. நான் எத்தனை தடவை கூப்பிட்டேன் சாப்பிட.. ஆனா வெளியே வரவே இல்லை.. புருஷன் கூட பேசினதுக்கு அப்புறம் தான் வெளியே வர்ற. என்ன பண்றது சரி வா சாப்பிட.” என்றதும் அன்னம் அவரின் கையைப் பிடித்துக் கொண்டு, “எனக்கு ஒரு மாதிரியா ஆயிடுச்சா. அது தான் நான் வரல.” என்றாள்.
“சரி சரி என் பையனுக்காக உன்னை மன்னிக்கிறேன்.” என்றவர் அவளை அழைத்துச் சென்று சாப்பாடு வைத்தார். சாப்பிட்டுவிட்டு பார்வதியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தாள். அதன் பின்னர் சென்று இருவரும் தூங்கினார்கள்.