கால் வந்ததைப் பார்த்த பார்வதி, வேலுச்சாமியிடம், “அண்ணா கிருத்திஷ்தான் கால் பண்றான். நான் நினைக்கிறேன் அன்னத்தோட பேச எடுப்பான் போல..” என்றவாறு ஆன் பண்ணி காதில் வைத்தவர், “சொல்லு கிருத்திஷ்.. என்ன பண்ற?” என்றார்.
“ஆபிஸ் போக ரெடியாயிட்டு இருக்கேன் அம்மா.”
“ரோஹித் எப்போ வர்றான் கண்ணா?”
“ரோஹித்க்கு மார்னிங் ப்ளைட். அவனை சென்ட் ஆஃப் பண்ணிட்டுதான் ஆபிஸ் போவேன். அன்னம் அங்க இருக்காளா அம்மா?” என்றான்.
பார்வதியும் சிரித்துக் கொண்டு, “அதுதானே போனை எடுத்தும் என்னைக் கேட்கல உன் பொண்டாட்டியைத்தான் கேக்குற சரி சரி..” என்று அவனை கலாய்க்க, அவனும், “என்ன ஓட்டுறீங்கனு நல்லாவே தெரியுது. பரவால்ல எங்க என்னோட பொண்டாட்டி?” என்றான். “பார்டா என் பையன் வாயிலிருந்து இப்படியொரு வார்த்தையா? கிருத்திஷ் அன்னத்துக்கு இப்போ வலிப்பு வந்துருச்சுடா. மயங்கிட்டா, அதனால படுக்க வைத்திருக்கிறேன்.” என்றார்.
“என்ன மயக்கம் வந்துருச்சா? இந்த மூணு நாள்ல அப்படி எதுவும் அன்னத்துக்கு வரலையே. என்னாச்சு அம்மா அங்க?” என்றான்.
அவரும் வேலுச்சாமி சொன்னதை அப்படியே சொல்ல, “அம்மா அவ இருக்கும் போது எதுக்குமா இந்த விஷயத்தை எல்லாம் சொல்றீங்க? சரி இப்போ அன்னம் ஓகே தானே? வேற எதுவும் பெருசா இல்லையே?” “இல்லடா அவ எந்திரிச்சதும் உனக்கு கால் பண்ணி குடுக்கிறேன் பேசு.”
“சரிம்மா ஊர்ல இருக்குறவங்க எல்லோரும் பேசிட்டு இருக்கிறதைப் பற்றி மாமாவை கவலைப்பட வேண்டாம்னு சொல்லுங்க. ரோஹித் அங்க வந்ததும், நான் சீக்கிரமாவே இங்க வர்றதுக்கான வேலையை பார்க்கிறேன். அன்னம் எந்திரிச்சதும் மறக்காம கால் பண்ணுங்க.” என்றவன் ஃபோனை வைத்துவிட்டு வெளியே வந்தான்.
“என்னம்மா மாப்ள என்னவாம்?” என்று கேட்டார் வேலுச்சாமி.
“அன்னத்தோட பேச கால் பண்ணினான். அன்னத்துக்கு இப்படி ஆயிடுச்சுன்னு சொன்னதும் பதறிட்டான். ஊர் பேசுறதை எல்லாம் பெருசா எடுத்துக்க வேணாம். அவங்க என்ன வேணா பேசிட்டு போகட்டும்னு சொல்லிட்டான். அன்னத்துக்கு மயக்கம் தெளிஞ்சதும் கால் பண்ணி கொடுக்கணும் அண்ணா.” என்றார்.
“மாப்ளைக்கு ரொம்ப தங்கமான மனசுல.”
“ஆமா… ஆமா.. உங்க மாப்பிள்ளை சின்ன வயசுல எங்களைப் படுத்தி எடுத்தது எங்களுக்குத்தான் தெரியும்.” எனற பார்வதி, வேலுச்சாமியிடம் கிருத்திஷ் சின்ன வயதில் செய்த குறும்புத்தனத்தை எல்லாம் சொல்லி சிரித்தபடி இருந்தார்.
ரோகித் ஜனகனிடம் வந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு, “இன்று முதல் உங்களுடைய சுமாரான சாப்பாட்டில் இருந்து எனக்கு விடுதலை. அண்ணா அந்த சாப்பாட்டுக்கு மாட்டிக்கிட்டாங்க.” என்றான்.
சிறிது நேரத்தில் ஹென்றியும் அங்கே வந்துவிட ஹென்றியுடன் ரோகித்தும் கிருத்திஷூம் ஏர்போர்ட்டிற்குச் சென்றனர். ஏர்போர்ட்டில் வைத்து ரோஹித் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த கிருத்திஷ், “என்ன இராவைத் தேடுற போல. எங்க இரா இன்னும் வரல?” என்றான்.
இதைக் கேட்டு பதறிய ரோஹித், “ஐயோ இரா.. அண்ணாவை நீ அண்ணானு சொல்லாத. என் அண்ணன் உனக்கு அண்ணானா நீ எனக்கு தங்கச்சியாயிடுவ வேணாம் வேணாம்.. நீ அண்ணானு சொல்லாத.” என்றான் ரோஹித். அவனைப் பார்த்து சிரித்த கிருத்திஷ், “டேய் ஏன்டா இப்படி பண்ற?” என்று அவன் தலையில் அடித்தவன், “நீ அண்ணானே சொல்லுமா.”
இராவும், “ஓகே அண்ணா.” என்று அவனுடன் பேச ஆரம்பித்தாள். இதைப் பார்த்த ரோஹித் அவளை கிருத்திஷிடம் மாட்டி விட எண்ணி, “எங்க அண்ணாவைப் பார்த்தா உனக்கு பயம்னு சொன்னே. ஆனா இப்போ இவ்வளவு கூலாக பேசுற?”
“ஆமா ஆனா அது அப்போ. இப்போ ரொம்ப ஸ்வீட்டா பேசுறாங்க.” என்றாள்.
“சரி நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க நான் இதோ வந்துடறேன்.” என்று கிருத்திஷ் அங்கிருந்து ஒரு கடைக்கு சென்றான். அங்கிருந்த ஒரு பொருளை வாங்கி பேக் பண்ணி எடுத்துக்கொண்டு வந்தான்.
அதற்குள் இங்கு ரோஹித் இராவிடம், “பாத்து பத்திரமா இரு. நான் போயிட்டு சீக்கிரமா வந்துடுவேன் சரியா? டைமுக்கு சாப்பிடு. ஃப்ரீயா இருக்கும் போது கால் பண்ணு.” என்றான். அவளும், “சீனியர் உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன். நீங்களும் பத்திரமா போயிட்டு வாங்க. அத்தை அக்கா எல்லோரையும் கேட்டேன்னு சொல்லுங்க.”
“கண்டிப்பா நான் போயிட்டு உனக்கு அண்ணிகூட பேச கால் பண்றேன்.”
“ஓகே சூப்பர் சீனியர்.” என்றாள். இப்படியாக இருவரும் பேசிக்கொள்ள ப்ளைட்டுக்கான அறிவிப்பு வந்ததும் இராவின் கண்களில் கண்ணீர்.
“வாட் இஸ் திஸ் இரா? சின்ன பிள்ளை போல அழுத்திட்டு. அழாத நான் சீக்கிரமா வந்துடுவேன்.” என்றவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் இரா.
“பயப்பட வேணாம் இரா. நான் சீக்கிரமா வந்துருவேன். நாங்க இருக்கனும்னாலும் அண்ணா அங்க இருக்க விடவே மாட்டான். அண்ணியை கூட்டிட்டு நாங்க சீக்கிரமே வந்தாகணும்.” என்றான். அப்போது அங்கே வந்த கிருத்திஷைப் பார்த்து இருவரும் விலகினர்.
“ப்ரோ என்ன கையில?” என்றான். “ரோகித் இதை அண்ணிகிட்ட கொடுத்துடு.” என்றான்.
“வாவ் அண்ணிக்கு கிப்ட்டா? ஓஹோ சூப்பர் ப்ரோ கலக்குறீங்க. என்ன கிப்ட் ப்ரோ?”
“அதெல்லாம் சொல்ல முடியாது. அங்க போய் அவகிட்ட குடுத்திட்டு அவ பிரிக்கும் போது நீ பாத்துக்கோ.” என்றான்.
“சரி பார்த்து பத்திரமா போ. அங்கே ரீச் ஆயிட்டு எனக்கு கால் பண்ணு.” என்று அவனை வழி அனுப்பி வைத்துவிட்டு, கிருத்திஷ் வரும் வழியில் இராவையும் காலேஜ்ஜில் விட்டுவிட்டு கம்பெனிக்குச் சென்றான்.
கம்பெனிக்கு சென்று போனை எடுத்து பார்க்க பார்வதியிடமிருந்து கால் வரவே இல்லை. ‘அன்னம் இன்னும் மயக்கத்திலதான் இருக்கிறாளா?’ என்று நினைத்துக் கொண்டான் கிருத்திஷ். ஏனோ அவளுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்று பதட்டமாக இருந்தது கிருத்திஷிக்கு. மனம் முழுவதும் அன்னத்தின் நினைவுகளே இருந்தாலும், மனதை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு அந்த ப்ராஜெக்ட்டுக்கான பிரசன்டேஷனை செய்ய ஆரம்பித்தான். பிரசன்டேஷன் முடிந்து ப்ரஜெக்ட் அவனது கைக்கு வந்து சேர்ந்தது. சிறிது ப்ரேக் எடுத்தவன் தனது கேபினுக்கு வந்து பார்வதிக்கு கால் பண்ணினான்.
போன் எடுத்தார் பார்வதி, “அம்மா, அன்னம் எந்திரிச்சிட்டாளா?” என்று கேட்டான்.
“ஆமா கண்ணா. இப்போதான் அன்னம் எந்திரிச்சா. உனக்கு கால் பண்ண வர்றேன் நீயே கால் பண்ணிட்ட இரு அன்னத்துக்கிட்ட கொடுக்கிறேன்.” என்றவர் போனை அன்னத்திடம் கொடுத்து விட்டு, “அன்னம் நான் பக்கத்துல இருக்கிற மல்லிகா அக்கா வீடு வரைக்கும் போயிட்டு வரேன். நீ அவன்கூட பேசிட்டு இரு சரியா?” என்று சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து சென்றார்.
ஏற்கனவே பார்வதிக்கு வீடியோ காலிலே கிருத்திஷ் அழைத்திருந்ததால் அவளது முகம் நன்றாக விளங்கியது.
“ஏய் என்னாச்சுடி?” என்றான் எடுத்த எடுப்பிலேயே அன்னத்திடம். கிருத்திஷின் “டி” என்ற அழைப்பு அவளை அவனைப் பார்க்க வைத்தது.
“உன்ன தான் கேட்கிறேன் என்னாச்சுடி? எதுக்கு டென்ஷன் ஆகற? யாரு என்ன வேணா சொல்லிட்டு போகட்டும். அதுக்கு நீ கஷ்டப்படுவியா? நான் எப்படி பயந்துட்டேன் தெரியுமா?” என்றவன் முகத்தில் அவளுக்கான பரிதவிப்பு நன்றாகத் தெரிந்தது.
“மாமா.. மாமா… நெஜமா எனக்கு ஒண்ணுனா நீ துடிச்சிப் போயிடுவியா?” என்று கேட்டாள். அவள் ஒருமையில் பேசியதை கவனித்தான் கிருத்திஷ். “நான் துடிக்காம வேற யாருடி துடிப்பா? உன் கழுத்தில மூணு முடிச்சு போட்டு தாலி கட்டி இருக்கேன்.”
“இல்ல மாமா தாலி கட்டிட்டா மட்டும் அக்கறை வந்திடுமா மாமா? உனக்கு என்ன புடிக்கும் தானே? நீ என்ன தப்பா நினைக்கல மாமா?” என்றாவளது கண்கள் அருவியை திறந்து விட்டாள்.
“எதுக்குடி இப்பிடி அழுற? முதல்ல எல்லாத்துக்கும் அழுறதை நிறுத்து அன்னம்.” என்றான் கிருத்திஷ். “அப்போ நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு மாமா. நீ என்ன அப்படி நினைக்கல தானே. ஊர்ல இருக்கிறவங்க அப்படி சொல்றாங்கனு நீங்க அப்படி நினைக்கல தானே.” என்றாள்.
“இங்க பாருடி வந்தேன்னு வை உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்குத் தெரியாது. எதுக்குடி இப்போ அழுற திரும்பவும் மயக்கம் போட்டு படுத்துக்க போறியா? என்னைப் பதற வைக்காதடி. இங்க பாரு ஊரு என்ன வேணா சொல்லட்டும் அன்னம். நீ எப்படின்னு எனக்கு தெரியும். இது நாள்வரை உன்னை நான் தப்பா நினைக்கிற மாதிரி நீ நடந்துக் கிட்டதே இல்ல. நமக்கு இப்படி கல்யாணம் நடந்தது ஒரு வகையில நலம் தான். ஏன்னா இப்படி ஒரு பொண்டாட்டி கிடைச்சிருக்கு.”
“மாமா நீங்க எப்படி பேசுறீங்க?”
“ஆமா நீ என்ன பேச வைக்கிற. எனக்குள் இருந்த அந்த காதல வெளியில எடுத்தவ நீ தானே. சத்தியமா சொல்றேன்டி உன்னை விட்டுட்டு என்னால இருக்கவே முடியல. அதுவும் நீ அங்க மயக்கத்துல படுத்திருக்கனு அம்மா சொன்னதும், இங்க இருக்கிற வேலை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு அங்க வரலாம்னு தான் பார்த்தேன். ஆனா வர முடியாது நிலைமை.”
“மாமா எப்போவும் இதே மாதிரி என் கூட அன்பா இருக்கணும்.”
“என் கூட வந்து இங்க இருடி. உன்னை எப்படி அன்பா பாத்துக்கிறேன்னு பாரு.”
“மாமா உங்களுக்கு நான் பொருத்தமே இல்ல.”
“பொருத்தம்னு எதை சொல்ற அன்னம்? என்ன மாதிரியே படிச்சிட்டு ஸ்டைலா பேசிட்டு, மார்டனா டிரஸ் பண்றது அது சொல்றியா? அதில்லடி பொருத்தம். மனசு பொருத்தமா இருக்கணும், மனசு அழகா இருக்கணும், உன் மனசு குழந்தை மனசுடி. அதனால தான் நான் உன் கிட்ட வழிக்கு விழுந்துட்டேன் தெரியுமா? பொண்ணுங்க இங்கேயும் இருக்காங்க. ஆனா யார்கிட்டயும் அசராத நான் உன்கிட்ட விழுந்துட்டேனா அந்த கள்ளங் கபடம் இல்லாத வெள்ளை மனசு தான் காரணம். உன் கூட சேர்ந்து அங்கு இருந்த அந்த மூணு நாள்ல நான் உன் மேல பாசம் மட்டும் தான் வச்சிருந்தேன். காதல் இல்லை. ஆனா உன்னை விட்டுட்டு எப்போ அந்த ப்ளைட்ல ஏறி உட்கார்ந்தனோ நான், அப்போ இருந்து எனக்கு உன் முகம் தான். உன்னையும் என் கைக்குள்ளேயே வச்சிருக்கணும் போல ஒரு ஆசை. அப்போதான் நான் புரிஞ்சுகிட்டேன் உன்மேல வச்சது பாசம் இல்லை காதல்னு.”
“மாமா என்னால நம்பவே முடியல. என்னையும் ஒருத்தர் காதலிக்கிறார்னு. இப்படி பாசமா பேசறதை நினைக்கும் போது ஒரு மாதிரி சந்தோஷமா இருக்கு மாமா.”
“எதை பத்தியும் கவலைப்படாத அன்னம். இனிமே உன் வாழ்க்கையில சந்தோஷம் மட்டும்தான் இருக்கும். அது நான் உனக்கு குடுக்குற வாக்கு சரியா? சாப்பிட்டு பத்திரமா இரு. ரோஹித் உனக்கு ஒரு பரிசு கொண்டு வருவான்.”
“என்ன மாமா சொல்றீங்க பரிசா? எனக்கா மாமா? என்ன பரிசு அது?”
“இப்ப சொல்ல முடியாது. அவன் கொண்டு வந்ததும் பார்த்து தெரிஞ்சுக்க. சரி நான் ஆஃபிஸ்ல இருக்கேன். வீட்டுக்கு போயிட்டு பேசுறேன்.”
“மாமா நீங்களும் பத்திரமா இருங்க.”
“சரி.” என்று போனை வைக்கப் போனவன்.
“அன்னம் இங்க பாரு.”என்றதும் அவள் அவனது கண்களைப் பார்க்க இரு இதழ்களைக் குவித்து தொலைபேசி வழியாக அவளுக்கு முத்தத்தை அனுப்பினான். அன்னத்தின் கன்னங்கள் இரண்டும் வெட்கத்தில் சிவந்தன.
வெட்கத்தில் சிவக்கும் அவளது கன்னங்களை பார்த்த கிருத்திஷுக்கு அதை இப்போதே கடிக்க வேண்டும் போல இருந்தது. “அன்னம், நீ என்னை ரொம்ப டெம்ப் பண்ற. சரி நான் வீட்டுக்கு போயிட்டு பேசுறேன்.”