நயமொடு காதல் : 22

4.9
(10)

காதல் : 22

அனைத்திற்கும் மேலாக, பாஸ்போர்ட் எடுக்கும் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன. அதே நேரத்தில், அன்னத்திற்கும் கிருத்திஷிற்கும் இடையேயான காதலும் புரிதலும் சிறப்பாகவே இருந்தது. கிருத்திஷ் அடிக்கடி வேலுசாமியிடம் பேசி, அவரது உடல் நிலையைத் தெரிந்துகொண்டாள்.

இப்படியாக இருக்கும்போது, இருவருக்கும் பாஸ்போர்ட் கிடைத்தது. ரோஹித் உடனே கிருத்திஷ் கால் செய்தான். “அண்ணா, அண்ணிக்கும், மாமாவுக்கும் பாஸ்போர்ட் கிடைச்சிடுச்சு.” என்றான். 

“வாவ், சூப்பர், ரோஹித்! சரி, நீ என்ன பண்ணுற, நான் ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்றேன். நீ நாளைக்கு அவங்களை கூட்டிட்டு இங்க வந்துடு!” என்றான்.

“ஏன் அண்ணா உடனே அங்க வரணும்னு சொன்னா மாமாவும் அண்ணியும் என்ன சொல்லுவாங்கனு எனக்குத் தெரியாது.”

“அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்க. மாமாக்கிட்ட முன்னாடியே பேசிட்டேன். அதனால எந்தப் பிரச்சினையும் இருக்காது. நீ என்ன எதையாவது அம்மாக்கிட்ட சொல்லி, நீங்க நாலு பேரும் நாளைக்கு இங்க வந்துடுங்க.” என்றான்.

ரோஹித், “ஓகே ப்ரோ , நான் வீட்ல சொல்லிடுறேன்.” என்று ரோஹித் போனை வைத்தான். 

பின்னர் கிருத்திஷ் ஹென்றியை தனது கேபினுக்கு அழைத்து, நாளை இந்தியாவிலிருந்து அமெரிக்கா வருவதற்கு நாலு பேருக்கு டிக்கெட் ஆன்லைனில் புக் செய்யச் சொன்னான். 

அவனும் மறுபேச்சு இன்றி, “ஓகே, பாஸ்!” என்று அந்த வேலையை உடனே செய்ய அங்கிருந்து சென்றான்.

ரோஹித், “அம்மா… மம்மி… அண்ணி… மாமா… எங்க இருக்கீங்க? சீக்கிரம் வாங்க.” என்று கத்தினான். 

“என்ன சின்னு, எதுக்கு இப்போ எல்லோரையும் ஏலம் போடுற?” என்று கேட்டுக் கொண்டே பார்வதி வந்தார். 

“அம்மா, மாமாவுக்கும் அண்ணிக்கும் பாஸ்போர்ட் கிடைச்சிட்டு.” 

“அப்படியா? ரொம்ப சந்தோஷம். அப்போ அமெரிக்கா சீக்கிரமே போகலாம்னு சொல்லு.” என்றார்.

“ஆமா, பாஸ்போர்ட் வந்திட்டுனு அண்ணாக்கிட்ட சொன்னேன். அண்ணா, நாளைக்கே டிக்கெட் போடறானாம். நம்மளை உடனே அங்க வரச் சொல்றாங்க.” என்றான். 

“என்னது, நாளைக்கே வா? என்ற அன்னத்தைப் பார்த்த பார்வதி, “ஏனு அன்னம் உனக்கு அங்க உடனே போக விருப்பம் இல்லையா?” 

“அப்படி இல்லை அத்தை, திடீர்னு போகணும்னு சொன்னதும் நான் அதிர்ச்சி ஆயிட்டேன், அவ்வளவுதான்.” என்றாள்.

வேலுசாமிக்கு ஏன் இத்தனை அவசரம் என்று புரிந்தது. அன்னத்திடம், 

“அன்னம், அதுதான் மாப்பிள்ளை கூப்பிடுறார் இல்ல, போகலாம் அன்னம்.” என்றார். 

“அப்பா, நான் வர்லனா உங்க மாப்பிள்ளை அங்கிருந்து வந்து கயிறு கட்டி என்னை தூக்கிட்டுப் போயிடுவாரு.” என்றாள்.

வேலுசாமி, “ரோஹித் தம்பி இங்க செய்ய வேண்டிய வேலை கொஞ்சம் இருக்கு, நம்மளோட சொத்துக்கள் எல்லாமே அப்படியே இருக்கட்டும். அதை நம்ம மல்லிகாகிட்ட பார்த்துக்கச் சொல்லிட்டு போகலாம்,” என்றார். 

“சரிங்க அண்ணா அப்படியே பண்ணிடலாம். நம்ம ஒண்ணும் இங்க அப்பிடியே வராம இருக்கப் போறதில்லையே. வருஷத்துக்கு ஒரு தடவையாச்சும் கண்டிப்பா வந்துட்டுத் தான் போகணும்,” என்றார் பார்வதி.

“ஆமா, பார்வதி, எங்கிருந்தாலும் நம்ம ஊர் மாதிரி வருமா?” என்றார் வேலுச்சாமி. 

“சரி, நான் நம்ம தோட்டத்துக்கெல்லாம் போய் ஒரு சுத்து சுத்திட்டு வந்துடுறேன்,” என்றார். 

உடனே ரோஹித், “மாமா, நானும் உங்க கூட வரேன்,” என்று சொல்ல, பார்வதி, “சரி போயிட்டு சீக்கிரமாக வாங்க, அன்னம் வா நாம நமக்குத் தேவையானதும் எடுத்து வைக்கலாம்.” என்று அன்னத்தை அழைத்துக் கொண்டு சென்றார்.

“அன்னம், இங்க இருந்து உனக்கு ரொம்ப முக்கியமானதை மட்டும் எடுத்துக்க. அங்க வந்து இந்தப் புடவை எல்லாம் நீ கட்டத் தேவை இல்ல. சுடிதார் போட்டுக்கலாம்.” என்றார். 

“ஐயோ அத்தை சுடிதாரா? நான் புடவையே கட்டிப் பழகிட்டேன் அத்தை. சுடிதார் எல்லாம் வேண்டாம்.”

“அதெல்லாம் பரவால்ல, அன்னம். அங்க போயிட்டு நீ புடவை கட்டிக் கொண்டு இருந்தா, எல்லாரும் உன்னைத் தான் திரும்பிப் பார்ப்பாங்க. அங்க போய் நீ சுடிதார் போட்டுக்கலாம். உனக்குப் பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணிக்கலாம் சரியா?” என்றவர், அவளுடன் சேர்ந்து பெட்டியை அடுக்க ஆரம்பித்தார்.

அன்னம் அவளின் தாயின் இரண்டு புடவைகளையும், தாயின் போட்டோவையும் எடுத்து வைத்தாள். மேலும், வேலுசாமியின் உடைகளையும், அவருடைய முக்கியமான பொருட்களையும் எடுத்து வைத்து பெட்டியை பேக் செய்து முடித்தார்கள். 

பின்னர், பார்வதி தான் கொண்டு வந்த உடைகளை பெட்டியில் அடைத்து, எல்லாவற்றையும் தயாராக வைத்தார்.

வெளியே ரோஹித், வேலுசாமியுடன் தோட்டத்திற்குச் சென்று கொண்டிருக்கும்போது,

“மாமா, நீங்க பயப்படாதீங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்.” என்றான். “தம்பி, நான் எனக்காகப் பார்க்கலை. என் பொண்ணுக்காகத் தான் பார்க்கிறேன். அதுவும் மாப்பிள்ளை இவ்வளவு பாடுபடுறாங்க.” என்றார். 

“மாமா, அப்படி எல்லாம் சொல்லாதீங்க. நான் வந்து கொஞ்ச நாளிலேயே பார்த்துட்டேன். அண்ணி உங்க மேல எவ்வளவு பாசமா இருக்காங்க. அப்படி இருக்கும்போது, உங்களுக்கு எதாச்சும் ஆனா, அவங்களால தாங்கிக்க முடியாது. நம்மளோட முழு நம்பிக்கையை இந்த ஆபரேஷனுக்கு வைப்போம். 

இப்போ மருத்துவம் எவ்வளவு முன்னேறி இருக்கு? இந்த வருத்தம் எல்லாம் ஒரு சின்ன தூசு மாதிரிதான். இங்க பாருங்க மாமா, இந்த ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சதும், அடுத்த வருஷம் நம்ம இங்க இதே மாதிரி குடும்பத்தோட கோயிலுக்கு வருவோம்.” என்றான். “நீங்க இப்படி சொல்றது ரொம்ப சந்தோஷம் தம்பி.” என்றவர், தோட்டம் எல்லாவற்றையும் ஒரு தடவை சுற்றிப் பார்த்துவிட்டு வீடு திரும்பினார்கள்.

கிருத்திஷ் பார்வதிக்கு கால் செய்தான். “சொல்லு கண்ணா!” “அம்மா, நாளைக்கு டிக்கெட் போட்டுட்டேன். மார்னிங் பத்து மணிக்கு ஃபிளைட், அம்மா பத்திரமா வாங்க.” என்றான். 

“சரி கிருத்திஷ், ஆனா நீ ஏன் இவ்வளவு அவசரப்படுற? எனக்குப் புரியல. வேற ஏதோவொரு காரணம் இருக்குன்னு நினைக்கிறேன் கண்ணா.” என்றார். 

“சரிதான் அம்மா, அதெல்லாம் இங்க வந்ததுக்கப்புறம் சொல்றன். மாமாவுக்கும் அன்னத்திற்கும் ப்ளைட்ல வர்றதுக்கு இதுதான் ஃபர்ஸ்ட் டைம், கொஞ்சம் பாத்துக்கோங்க.” என்றான். 

“சரிப்பா, கண்டிப்பா! நாங்க பத்திரமா கூட்டிட்டு வந்துடுறோம்.” என்றார்.

“சரிம்மா, நீங்க எல்லாம் ரெடியா எடுத்து வைங்க. நான் அப்புறமா கால் பண்றேன்.” என்றான். 

“சரிப்பா.” என்று போனை வைத்தவர், அன்னத்தை அழைத்தார், “அன்னம் கிருத்திஷ் கால் பண்ணினான். நாளைக்கு பத்து மணிக்கு ஃப்ளைட். நம்ம இங்கிருந்து நேரத்தோட போகணும்.” என்றார். 

பின்னர் அன்னம், பக்கத்து வீட்டு மல்லிகாவிடம் பார்வதியுடன் சென்று சொல்லிவிட்டு வந்தாள். அன்று இரவு நால்வரும் நேரத்திற்குச் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றார்கள்.

அப்போது, அன்னத்திற்கு கிருத்திஷூடன் பேச வேண்டும் போல இருந்தது. அவனுக்கு கால் செய்தாள். முக்கியமான வேலை ஒன்று செய்து கொண்டிருந்த கீருத்திஷுக்கு போன் வந்தது. நம்பரைப் பார்க்காமல் கட் செய்துவிட்டான். 

“என்னது, மாமா போன் எடுக்கல?” என்று மறுபடியும் கால் செய்தாள். மீண்டும் கிருத்தீஷ் வேலையில் மும்முரமாக இருந்ததால் போனை கட் பண்ணினான்.

அன்னத்திற்கு பதட்டமாகிவிட்டது. “மாமா ஏன் போனை கட் பண்றாங்க?” என்றாள். “சரி, இன்னொரு தடவை எடுத்துப் பார்க்கலாம்,” என்று மீண்டும் கால் செய்தாள். 

போனை எடுத்த கிருத்திஷ் யார் கால் பண்ணியது என்றுகூட பார்க்காமல், “ஒருத்தவங்க ஒரு தடவை கால் பண்ணி காலை எடுக்காம கட் பண்ணாங்கன்னா, வேலையில இருக்காங்கன்னு தெரியாதா? மறுபடியும் கூப்பிட்டு கூப்பிட்டு தொல்லை பண்றீங்க?” என்று சத்தமிட்டான். 

அதை கேட்ட அன்னம், “மாமா.” என்று சொல்ல, அந்த ஒரு வார்த்தையில் அவனின் கோபம் தணிந்தது.

அமைதியா இருப்பதைப் பார்த்தவள், “மாமா நான்தான் கால் பண்ணினேன். நீங்க வேலையா இருக்கீங்களா? மன்னிச்சிடுங்க, மாமா,” என்று திக்கித் திக்கிப் பேசினாள். 

“இங்க பாரு அன்னம், ஒண்ணும் இல்ல, சரியா? நான் வேலையா இருந்தேன், அதான் கொஞ்சம் கத்திட்டேன். நீ பதட்டமாகாதே, அப்புறம் உனக்குப் பிரச்சனை ஆயிடும். ரிலாக்ஸாகு அன்னம். சாரிடா, யாருன்னு பாக்கலடா , அதனாலதான் கட் பண்ணிட்டேன்.” என்றான்.

“இல்ல மாமா, நீங்க எதுக்கு சாரி கேட்டுக்கிட்டு… நானும் ஒரு தடவை எடுத்துட்டு, நீங்க கட் பண்ணும்போது, வேலையில இருக்கீங்கன்னு நினைச்சுக்கணும். எனக்கு உங்ககூட பேசணும் போல இருந்துச்சு, அதான் கால் பண்ணினேன் மாமா.”

“நீங்க தான் எப்பவுமே கால் பண்ண மாட்டீங்க. நான் கால் பண்ணினாதான் பேசுவோம். அதனால, நீங்க கால் பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. சாரி மேடம்.” என்றான்.

“என்ன மாமா நீங்க இதுக்குப்போய் சாரி கேட்டுட்டு இருக்கீங்க. கால் எடுக்கலனா பரவால்ல மாமா. நீங்க நாளைக்கு ஏர்போர்ட்டுக்கு வருவீங்களா?” என்றாள். 

“ஏர்போர்ட்டிற்கு நான் கண்டிப்பா வரணுமா? ரோஹித்துக்கும் அம்மாக்கும் வீடு தெரியும். அவங்க கூட்டிட்டு வந்துடுவாங்க தானே?” என்றார். 

“என்ன மாமா, இப்படி சொல்றீங்க? வேற எப்படி சொல்லணும்? நாளைக்கு எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு.” 

“அப்போ, என்னை விட இந்த மீட்டிங் முக்கியமா?” 

“ஆமா, ஆமா, ரொம்ப ரொம்ப முக்கியமான மீட்டிங் அன்னம். அப்படியெல்லாம் வர முடியாது,” என்றார்.

“சரி மாமா நீ அங்கேயே போ! முக்கியமான மீட்டிங்னா, நான் என்ன பண்ணுவேன்?” என்றவளின் குரல் உடைந்தது. 

“சரி, நான் உனக்காக அந்த மீட்டிங்கைத் தள்ளிவைச்சு, கூட்டிட்டு வர வரேன். அப்படி வந்தா நீ எனக்கு என்ன தருவ?” என்று கேட்டான். 

“மாமா, நீங்க என்ன கேட்டாலும் தரேன்!” என்றாள் அன்னம். “பேச்சு பேச்சா இருக்கணும். சொன்ன வார்த்தையில இருந்து மாறக்கூடாது அன்னம்.”

““மாமா, நான் பேச்சு மாற மாட்டேன். நான் சொல்றதைத் தான் செய்வேன். நீங்க என்ன கேட்டாலும் தரேன். நீங்க ஏர்போர்ட்டுக்கு வரீங்களா மாமா?” என்றாள்.

“சரி, நீ நான் கேக்குறதைத் தரேன்னு சொல்ற. சோ, வர முயற்சி பண்றேன்.” என்றான். 

“சரிங்க மாமா, நீங்க வேலையைப் பாருங்க. நான் நாளைக்கு கூப்பிடுறேன்.” என்றாள். 

“ஓகேடா, பத்திரமா வந்து சேரு. உனக்காக நான் காத்திருக்கேன்.” என்றார். 

“சரிங்க, மாமா, நான் வைக்கிறேன்.” என்று போனை வைத்தாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!