நாணலே நாணமேனடி – 01

5
(22)

மூடுபனி படர்ந்த இளங்காலைப் பொழுதில் நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு சற்று நேரகாலத்துடன் வீட்டினுள் நுழைந்தான், யதுநந்தன்.

கூடத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து ஆங்கிலப் பத்திரிகையைக் கண்ணாடியின் உபயோகமின்றி புரட்டிக் கொண்டிருந்தவரை கண்டும் காணாத பாவனையில் வேக நடையிட்டு அறை நோக்கி நடந்தவனை,

“நந்தா!” என அழைத்து நிறுத்தினார், கிருஷ்ணமூர்த்தி.

“ப்ச்!” என வெளிப்படையாகவே சலித்துக் கொண்டவனுக்கு, ‘இவரிடம் பேச்சுக் கொடுத்து, இன்றைக்கும், காலையிலேயே என் மூடைக் கெடுத்துக் கொள்ள வேண்டுமா?’ என்ற கடுப்பு எழாவிட்டால் தான் அதிசயம்!

எரிச்சலை அப்பட்டமாக முகத்தில் தேக்கி அவர் புறம் தன் பார்வையைத் திருப்பியவன், “என்ன டேட்?” என்று அசுவாரஷ்யமாக வினாத் தொடுத்தான், நெற்றியில் வழிந்த வியர்வையை புறங்கையால் துடைத்தபடி!

“நான் சொன்னதைப் பத்தி யோசிச்சிப் பார்த்தியா, நந்தா? உன் நல்லதுக்கு தானே கண்ணா சொல்லுறேன்..” என குரலில் தேனொழுகப் பேசினார், கிருஷ்ணமூர்த்தி.

மூச்சை ஆழமாக இழுத்தவன் அதைப் பொறுமையாக வெளியேற்றியபடி தந்தையின் அருகே வந்து அயர்வாக அமர்ந்தான்.

அவருமே கையிலிருந்த பத்திரிகையை மடித்து ஓரமாக வைத்து விட்டு மகனின் புறமாக தன் உடலைத் திருப்பி வாகாக அமர்ந்து, அவன் முகம் நோக்கினார்.

“லிஸ்ன் டேட், எப்பவும் சொல்லுறது தான். ஆனா நீங்க ஏன் எப்பவும் இல்லாத மாதிரி கொஞ்ச நாளா இந்த விஷயத்துல இவ்ளோ அக்கறை காட்டுறிங்கனு தான் புரியல..” என நெற்றியை நீவி விட்டபடி பேசி நேரடியாகவே விஷயத்தில் குதித்தான், யதுநந்தன்.

“நந்தா, கேளு!”

“டேட் ப்ளீஸ், மே ஐ க்னோ வாட்ஸ் த ரீசன்?”

கிருஷ்ணமூர்த்தியின் உதடுகளில் இன்னதெனப் புரியாத ஒரு புன்னகை விரிந்தது. எப்படிப் பார்த்தாலும் அந்த இதழ் நெளிவுக்கான காரணம் என்னவென்று யதுநந்தனுக்குப் பிடிப்படவில்லை.

அவனை, “நீ என்னனு நினைக்கிற நந்தா?” என்ற சிரிப்புடன் கூடிய கம்பீரக் குரலில் கேட்டு இயல்புக்கு அழைத்து வந்த கிருஷ்ணமூர்த்தியின் வலது கை, மகனின் தோள் பட்டையை ஆதூரமாக வருடி விடத் தொடங்கியிருந்தது.

வழமை போலவே தான் தொடுத்த அம்புக்கு பதில் புதிதாய் ஒரு கணை எய்த தந்தையைக் கடுப்புடன் ஏறிட்டவனுக்கு எதிலும் மனம் ஒட்டவில்லை. நிம்மதி கெட்ட, ரசனையற்ற வாழ்வென்றே தோன்றிற்று!

‘இப்போ திருமணத்துக்கு என்ன அவசியம் வந்தது? திடீர்னு இவருக்கு என்னாச்சு?’ என தீவிரமாக யோசித்தவனுக்கு தலை வலி மட்டுமே எஞ்சியது.

யோசனையின் முடிவில் களைத்துப் போனவனாய் இரண்டு வாரங்களாக எந்த பதிலை உதிர்த்தானோ, அதையே நிறுத்தி, நிதானமாகச் செப்பினான்.

“எனக்கும், பல்லவிக்கும் இடைல யாரும் வர நான் அனுமதிக்க மாட்டேன் டேட். நான் இப்படியே வாழ்ந்துட்டு போய்டறேன். என்னால முடியாதுனு நினைக்கிறிங்களா?”

கசப்போடு நகைத்த பெரியவர், “இதை வார்த்தையால சொல்ல வேணா இலகுவா இருக்கலாம் நந்தா..” என்பதோடு நிறுத்திக் கொள்ள,

“எனக்கு யோசிக்க நேரம் வேணும் டேட்!” என்று கூறிக் கொண்டு சட்டென்று எழுந்து நின்றவன் தாமதியாமல் சென்று அறைக்குள் புகுந்து கொண்டான்.

மூர்த்தியின் சுருக்கம் விழுந்த முகத்தில் கவலை ரேகைகள் கோடிட்டு, அவை அவரை யோசனையெனும் அதல பாதாளத்தில் கதறக் கதற இழுத்து சென்று தள்ளின.

அறைக்கு வந்தடைந்த யதுநந்தனுக்குள், நடைபயிற்சியின் போது இயற்கை அன்னை வாரி இறைத்த அழகை ரசிக்கும் போதிருந்த மனநிலை மாறி ஒருவித இறுக்கம் குடி புகுந்தது.

சில நேரங்களில் ‘இதுதான் வாழ்க்கை’ என நிதர்ஷனத்தை ஏற்றுக் கொள்ள முயலும் மனம், பல நேரங்களில் ‘என்னடா வாழ்க்கையிது?’ என்ற விரக்திச் சிந்தனையைத் தோற்றுவிக்கிறது.

“திடீர்னு டேட்க்கு என்னாச்சு.. ஏன் எனக்கு மறுமணம் பண்ணி வைக்க ட்ரை பண்ணுறாரு? நான்தான் வேணாம்னு சொல்றேனே.. பிறகும் ஏன்?” என வாய் விட்டே புலம்பியவன் அடுத்த அரைமணி நேரத்தில் குளித்துத் தயாராகி அறை விட்டு வெளியே வரும் போது, கிருஷ்ணமூர்த்தி கூடத்தில் இருக்கவில்லை.

மீண்டும் புதிதாக ஆரம்பிப்பாரோ என்ற சலிப்பில் இருந்தவனிடமிருந்து, அவர் அங்கே இல்லை என்றதும் ஒரு நீண்ட நெடுமூச்சொன்று வெளிப்பட்டது.

உணவு மேஜைக்கு முன் அமர்ந்து, “கீர்த்தி..” என அழைக்க வாயெடுப்பதற்குள்,

“பசிக்குதா, குட்டிமா?” எனக் கொஞ்சியபடி இரண்டு வயதேயான ஒரு பெண் குழந்தையுடன் பின்னறைக்குள் இருந்து வெளிப்பட்டாள் கீர்த்தனா.

வந்தவள், “கூப்பிட்டீங்களா, சார்?” என்று புன்னகை முகமாய் வினவ, அவளது கேள்விக்கு பதிலளிக்காமல் குழந்தைக்காக கையை நீட்டினான், யதுநந்தன்.

அதற்குள், “பப்பு..” என்ற கொஞ்சலான அழைப்புடன் அவனிடம் தாவியிருந்த யுவனி, அவனின் கழுத்து வளைவில் முகம் புதைத்து செல்லமாகச் சிணுங்கினாள்.

“பாப்பாவுக்கு பசிக்குதோ.. மம் மம் சாப்பிடலாமா?” என சிறியவளை கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க வைத்தவன் கீர்த்தனா நீட்டிய தட்டை வாங்கி அவளுக்கு விளையாட்டுக் காட்டியபடி ஊட்டி முடிப்பதற்குள், ஆவி பறக்கப் பறக்க தேநீர் கோப்பையுடன் அங்கு வந்து விட்டிருந்தாள் கீர்த்தனா.

“அங்கிள் என்ன சொல்லுறாரு சார்?” என்று கேட்டவளின் கையிலிருந்த கப்பை எடுத்து மேஜை மீது வைத்தவன் யுவனியின் வாயைத் துடைத்து விட்டபடி,

“முடியல கீர்த்தி. அப்பா எனக்கு ஏன் இந்தளவு ப்ரெஷர் பண்றாருனு புரியல.” என்றான் சலிப்புடன்.

“எல்லாம் சரிதான்..” என்று இழுவையாய் நிறுத்தியவள் சற்றுத் தயங்கி விட்டு,

“ஆனா யுவனிக்கு அம்மா வேண்டாமா? அவ பொம்பள புள்ள. என் குழந்தைய என்னால வளர்க்க முடியாதுனு நீ நினைக்கிறியானு என்கிட்ட கேட்கலாம். அஃப்கோர்ஸ், எவ்ளோ அன்பு கிடைச்சாலும் ஒரு கட்டத்துல அம்மா பக்கத்துல இல்லையேனு அவ ஏங்க தான் செய்வா சார்!

சில நேரங்கள்ல அம்மாங்குற உறவு பக்கத்துல இல்லையேனு நினைக்கும் போது வரும் வேதனை இருக்குல்ல? அதை வார்த்தையால சொல்ல முடியாது. நான் என் அனுபவத்துல சொல்றேன் சார்..” என்றவளின் குரல் இறுதியில் கரகரத்தது.

யதுநந்தன் அயர்வுடன் இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தான். அவன் கையில் யுவனி அங்குமிங்குமாய் நர்த்தனமாடிக் கொண்டிருந்தாள்.

“பொம்பள புள்ள வளர வளர அம்மாவை ரொம்ப எதிர்பார்க்கும். எவ்ளோ தான் ஆராட்டி, சீராட்டி வளர்த்தாலும் அம்மா வேணும் சார். பணத்தால எல்லாத்தையும் செஞ்சிட முடியாது. என்னைக்கும் அன்புக்காக குட்டிமாவை ஏங்க வைச்சிடாதீங்க..” என்றவள்,

“உங்களுக்கு அட்வைஸ் பண்ணுற அளவுக்கு நான் தரம் உயர்ந்து போய்டல சார்..” என்றாள் தாழ்ந்த குரலில். அவளின் குரலில், ‘புரிஞ்சிக்கவே மாட்டேங்குறீங்களே!’ என்ற ஆதங்கம் அப்பட்டமாகத் வெளிப்பட்டது.

இன்று நேற்றல்ல. பல்லவி என்று யதுநந்தனின் வாழ்வில் ‘இல்லை’ என்று ஆகிப் போனாளோ, அன்று தொட்டு அவள் சொல்லும் அறிவுரை தான் இது!

கிருஷ்ணமூர்த்தி இன்று நேற்றுத் தான் நந்தனிடம் மறுமணம் பற்றி பேசுகிறார். செய்து கொள்ளேன் என வற்புறுத்தவும் செய்கிறார். ஆனால் கீர்த்தனா? அவள் தினம் தினம் சாடைமடையாக யுவனியைக் கை காட்டி அதைப் பற்றி பேசிக் கொண்டு தான் இருக்கிறாள். அவன் தான் புரிந்து கொள்ள மாட்டேன் என முரட்டுக் குழந்தையாக அடம்பிடித்துக் கொண்டிருக்கிறான்.

பல்லவியை நேசித்த மனம் இன்னொரு பெண்ணை மனைவியாய் ஏற்கத் துணியுமா என்பதை யோசிக்கவே மலைப்பாக இருந்தது யதுநந்தனுக்கு.

அதுவுமன்றி தங்கள் இருவரின் கரைகடந்த நேசத்தின் அன்புப் பரிசாய் அவனியில் ஜனித்த பூக்குவியல், இன்னொரு பெண்ணை ‘அம்மா’ என்று அழைப்பதா? நினைக்கும் போதே ஆடவனின் தொண்டைக் குழியில் துக்கப்பந்து உருண்டது.

“சார்..” என்ற மெலிதான அழைப்புடன் அவன் தோள் தொட்ட கீர்த்தனா, பேச்சைத் திசை திருப்பும் எண்ணத்தோடு சுவர் கடிகாரத்தைக் கை காட்டினாள்.

யோசனை நீங்கி, ‘நேரமாகி விட்டதே!’ என்ற பரபரப்பு அவனுக்குள் குடி கொண்டு விட, நேர்த்தியாக ட்ரிம் செய்யப்பட்டிருந்த தாடியை இழுத்து விளையாடிக் கொண்டிருந்த இளவரசியின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு,

“எதுனாலும் எனக்கு கால் பண்ணு. டேட் வீட்டுல தான் இருப்பாரு கீர்த்தி. பாப்பாவைக் கவனமா பார்த்துக்கோ!” என்று கூறியவாறு மனமேயின்றி சிறியவளை கீர்த்தனாவிடம் நீட்டினான்.

‘நீங்க சொல்லி தான் நான் குட்டிமாவைப் பார்த்துக்கணுமா சார்? இது என்னோட கடமை இல்லையா..’ என்று நினைத்துக் கொண்டவளின் வதனம் வேதனையின் பிடியில் சட்டென்று வாடிப் போனது.

தொண்டைக் குழி தாண்டி இறங்க மறுத்த உணவை கடமைக்கே என கொறித்த யதுநந்தனின் மகிழுந்து, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் போர்டிகோவிலிருந்து வழுக்கிக் கொண்டு வாசலைத் தாண்டியது.

அன்று மாலையில் யுவனியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சற்றுத் தொலைவில் இருந்த பூங்காவிற்கு வந்திருந்தார், மூர்த்தி.

இது என்றாவது நடக்கும் அதிசயம்! இரண்டடி எடுத்து வைத்தாலே களைத்துப் போவதால், சிறியவளுடன் ஓடியாட முடியவில்லை என என்றாவது ஒருநாள் தான் பூங்கா, கடற்கரை என அவளை அழைத்துச் செல்வார்.

கார் விபத்தொன்றில் சிக்கிய போது முறிந்து போன முழங்கால் எலும்பு, சிகிச்சைக்கு பிறகும் முழுதாக குணமாகி இருக்கவில்லை என்பதால் ஓரளவுக்கு மேல் அவரால் தெம்பாக நடக்கவும் முடியாது.

அதைப்போல் இன்றும் சமன்பட மறுத்த மனதை ஆசுவாசப் படுத்துவதற்காகவென்று சிறியவளுடன் இங்கு வந்திருந்தார், கிருஷ்ணமூர்த்தி.

புற்றரையில் பாய் விரித்து சிறியவளை விளையாட்டுப் பொருட்களுடன் அமர வைத்திருந்தவரின் பார்வை, நொடிப் பொழுதேனும் அவளை விட்டு அகலவில்லை.

துணையற்ற அவருக்கு, பேத்தியின் நகைப்பொலி மட்டுமே மன உளைச்சலைத் தீர்க்கும் ஒரே அருமருந்து!

நந்தன் சிறுவயதாக இருக்கும் போதே அவரது மனைவி இறைவனடி சேர்ந்து விட்டதால், மகனின் வாழ்வும் தன்னுடையது போன்றே ஒற்றையாக கழிந்து போய் விடுமோ என்ற பயம் அவருக்கு!

“தாத்தூ.. பட்டர்ஃபை!” என தனக்குத் தெரிந்த மொழியில், பூவில் சிறகடித்த தேன் சிட்டை பெரியவருக்கு அறிமுகப்படுத்தி வைக்க விழைந்தாள், யுவனி.

“அது பட்டர்ஃப்ளை இல்லடா செல்லம். அது ஹனி பர்ட்!” என சிரிப்புடன் பேத்தியின் கன்னம் கிள்ளிக் கூற,

“ஹ..ன்னி பறந்து..” எனப் புதிதாய் ஒன்றை உச்சரித்தாள் குறும்புக்காரி.

“ஹாஹா, பறக்கலடா. இதோ இருக்கு! அது பறவை. பாப்பாவுக்கு சாக்லேட் புடிக்குமே? அது போல அந்த பர்டுக்கும் இனிப்பு தான் ரொம்ப புடிக்குமாம். அதுனால ஹனி பர்டுனு சொல்லுறாங்க..” என ஏற்ற இறக்கங்களுடன் சொல்லிக் கொண்டிருந்தவரை குவிந்த இதழ்களுடன் ஆர்வமாகப் பார்த்திருந்தவளின் குண்டுக் கண்கள் திடீரென பெரிதாக விரிந்து கொண்டன.

“பப்புஊ..” எனக் கூவி அழைத்தவள் தத்தக்க பித்தக்கவென காரிலிருந்து கீழிறங்கிய நந்தனை நோக்கி ஓடப் போக, வேக நடையிட்டு மகளை நெருங்கியவன் அவளைக் கொத்தாகத் தூக்கிக் கொண்டான்.

“பப்பு.. அது ஹன்னி பர்டு!” என ஆர்வமாக தனக்குத் தெரிந்ததை தந்தையிடம் பகிர்ந்து கொள்ள நினைத்துப் பூவை கை காட்ட, அங்கே தேன்சிட்டு இருக்கவில்லை. அது எப்போதோ பறந்து விட்டிருந்தது.

சிறியவளின் இதழ்கள் அழுகையில் பிதுங்கின.

“ச்சு, என்னாச்சு பாப்பாவுக்கு? எதுக்கு அழணுமாம்..” என்று கொஞ்சியவனிடம் தான் கண்டதையும், தாத்தா சொல்லித் தந்ததையும் மழலையில் கைகளால் காற்றில் ஓவியம் தீட்டியபடி சொல்லத் தொடங்கினாள் யுவனி.

அவற்றை எல்லாம் சிறு தலையசைப்புடன் உள்வாங்கியபடி தந்தையின் அருகே வந்தமர்ந்த யதுநந்தனின் கண்கள் தந்தையை மிகக் கடுமையாக முறைத்தன. மாற்றமாக முகம் மட்டும் அதீத களைப்பில் சோர்ந்து போயிருந்தது.

மகனின் கோப முறைப்புக்கான காரணத்தை ஊகித்துக் கொண்டவரின் உதடுகளில் புன்னகை நெளிந்தது.

“சின்னவளோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு நினைச்சேன் நந்தா. ரெஸ்ட் எடுக்குறேன்னு சொல்லிட்டு வீட்டையே ரவுண்டு அடிக்க முடியல.”

மகளின் கன்னத்தில் முத்தமிட்டபடியே, “ஏன் வீட்டுலேர்ந்தா மட்டும் என்ன.. கார்டன் இல்லையா? உங்களுக்கு நேரம் தான் இல்லையா டேட்? பேத்தியை எந்த நேரம் வேணா கொஞ்சிக் கோங்களேன். எதுக்கு இவ்ளோ தூரம் வரணும்?” என்று சிறு குரலில் கடிந்து கொண்டான் நந்தன்.

மூர்த்தியின் கண்கள் அந்தப் பூங்காவை வெகு ஆர்வத்துடன் அலசின.

அவரின் பார்வை நிலைத்த இடத்தில், மர இருக்கையில் அமர்ந்து நாலைந்து வயதான குழந்தையை மடியில் வைத்து, அவளது அழுகையை நிறுத்தப் பலவாறெல்லாம் கொஞ்சிக் கொண்டிருந்தாள் ஒரு பெண்.

அநேகமாக அவள் தான் அந்தக் குழந்தையின் தாயாக இருக்க வேண்டும்!

ஓடி விளையாடிக் கொண்டிருந்த சமவயது சிறியவனைக் கை காட்டியபடி அழுது கொண்டிருந்தவனின் அழுகையை அவ்விள வயதுப் பெண் இரண்டே நிமிடத்தில் அடக்கி வைத்ததைப் பார்த்திருந்தவர்,

“இதையெல்லாம் நம்ம வீட்டு தோட்டத்துல பார்க்க முடியுமா நந்தா?” என்று கேட்க, அவனது பார்வையும் அத்திசையில் பயணித்தது.

தாயின் கன்னத்தோடு இழைந்து கொண்டிருந்தவளின் கண்ணீர் முற்றிலும் வடிந்து போயிருந்தது. மழலையின் முகத்தில் ஒட்டியிருந்த சிரிப்பு, அவர்களைப் பார்த்திருந்த யதுநந்தன் முகத்திலும் அம்சமாய் விரிந்தது.

அதைப் போன்றே பல காட்சிகளைக் கை காட்டினார் கிருஷ்ணமூர்த்தி. அத்தனையும் மிகுந்த ரசனைக்குரியவையே!

தாயுடன் சேர்ந்து, தந்தையிடம் முகம் திருப்பி அமர்ந்திருந்த இளசுகளின் செல்லக் கோபம்.. அன்னையின் கொஞ்சலில் சிரித்துக் கொண்டிருந்த மழலையின் கள்ளமற்ற சிரிப்பு.. ஈன்றவளின் தோள் சாய்ந்து வெகு சுவாரஷ்யமாகக் கதை பேசிக் கொண்டிருந்த சிறியவர்களின் ஆர்வம்.. தங்கள் விளையாட்டில் நடை பழக்கித் தந்தவளையும் இணைத்துக் கொள்ள சிறியவர்கள் செய்த அட்டகாசங்கள் என பலப் பல!

உண்மையிலே அந்தக் காட்சிகளில் மூழ்கித் தான் போனான், யதுநந்தன்.

எவ்வளவு அழகு! இயற்கையோடு சேர்த்து, கண்களுக்கு விருந்தாக எத்தனை அருமையான, அற்புதமான காட்சிகள்.

‘இதையெல்லாம் தவற விட்டேனே!’ என்ற சிறு சுணக்கம் அவனுக்குள்.

மகனின் தோள் தட்டியவர், “இப்போ நான் காட்டின அத்தனைலயும் ஒரே ஒரு ஒற்றுமை இருக்கு. நீ கவனிச்சியா நந்தா?” என்று வினவ, சுவார்ஷய மனநிலை மாறாமல் மீண்டுமொரு முறை அக்காட்சிகளில் லயித்தான், யதுநந்தன்.

சில நிமிட ஆராய்ச்சியின் பின், “யா டேட். பேபிஸ் தானே? எவ்ளோ அழகா வாழ்க்கையை என்ஜோய் பண்ணுறாங்க. திரும்பவும் ஒரு தடவை அந்த வயசுக்கு போய்ட மாட்டோமானு இருக்கு. அப்போல்லாம் அடிக்கடி நான் உங்க ரெண்டு பேரோட பூங்கா, பீச்னு வருவேன்ல டேட்?” என்றான், சிறு பிள்ளையின் குதூகலத்துடன்.

ஆமெனும் விதமாகத் தலை அசைத்தபடி இருக்கையை விட்டு வெகு அசிரத்தையுடன் எழுந்து கொண்ட மூர்த்தி, “அதெல்லாம் அழகான மெமரிஸ் இல்ல?” என்று கேட்க,

“ம்ம்..” என்றான் முனகலாய்!

அவனைப் பார்த்து அர்த்தமாகப் புன்னகைத்தவர், “அந்த மெமரிஸை உன்னால யுவனிக்கு கொடுக்க முடியுமா?” என்று கேட்டதில் சட்டெனத் திகைத்தான், நந்தன்.

அவனது திகைப்பை உள்வாங்கிக் கொண்டே, “இப்போ யோசிச்சி பாரு பா. நான் கை காட்டின காட்சிகள்ல இருந்த அந்த ஒரு ஒற்றுமை என்னனு! புரியும். நான் குழந்தைகளை சொல்லல..” என்றவர் அங்கிருந்து ஆடி அசைந்து காரை நோக்கி நடந்தார்.

யதுநந்தனின் பார்வை மீண்டுமொரு முறை பூங்காவை மொய்த்தது.

அவனுக்குள் ஆர்வத் தீக்குச்சியைப் பற்ற வைத்தவரோ, எதிர்பாராத நேரத்தில் கிட்டிய அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட குஷியுடன் மகனை எதிர்பார்த்தவராக காரில் அமர்ந்திருந்தார்!

தொடரும்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!