நாணலே நாணமேனடி – 02

5
(8)

மூன்றடுக்காக உயர்ந்து நின்ற அந்த கட்டடத்தில், துருப்பிடிக்காத எஃகிலான சதுர வடிவ எழுத்துக்களை கொண்டமைந்த ‘கலேக்ஸி கிளோத்திங் ஸ்டார்’ என்ற பெயர் கதிரோனின் ஒளிபட்டு அழகாய் மின்னின.

அண்ணாநகரில் பெயர் போன துணிக்கடைகளில் இதுவும் ஒன்று!

எந்த வைபவமாக இருந்தாலும் விலை பற்றிய கவலையின்றி, தரமானதோ என்னவோ என்ற வீண் சந்தேகமின்றி மக்கள் திரள் திரளாக நாடி வரும் ஓரிடம். மக்களின் நம்பிக்கை வென்ற அந்த உயர்ரக துணிக்கடை, விஷால நிலப்பரப்பைத் தனதாக்கிக் கொண்டு அனைவரையும் வரவேற்று நின்றது.

அங்கே, ‘வெட்டிங் வேர்ஸ்’ பிரிவில் நின்றிருந்தாள் வித்யா.

“ஏம்மா! அந்த கோல்டன் பார்டர் சேலையை எடுத்துப் போடும்மா..” எனப் பரபரத்த பெண்ணுக்கு, அவர் கேட்டதை எடுத்து விரித்துக் காட்டியவளுக்கு தலை வின்வின்னென்று வலித்தது.

இத்துடன் குறைந்தபட்சம் இருபது சேலைகளையாவது இழுத்துப் போட்டு காட்டியாற்று! ‘சும்மா’ என்றாலே அரைமணி நேரம் செலவு செய்பவர்கள், திருமணமென்று வந்து விட்டால் சொல்லவா வேண்டும்?

இந்த டிசைனில் அந்த கலர் வேண்டும், இதே கலர்ல வேற டிசைன் வேண்டுமென டாவடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பார்த்த எதுவும் திருப்திகரமாக இல்லை என்றால், அவளுக்குத் தலை வலிக்காமலா இருக்கும்?

வாட்டத்தைக் காட்டிக் கொள்ளாமல் கேட்டவற்றை மலர்ந்த முகமாக எடுத்து பெரிய செவ்வக வடிவிலான மேஜை மீது விரித்துக் கொண்டிருந்தவளின் பார்வை அடிக்கடி ஸ்டோரின் வெளிவாசலில் பதிந்து மீண்டு கொண்டிருந்தது.

“இந்த டிசைன்ல சந்தன நிறம் கிடைக்குமா? என் பொண்ணுக்கு எடுப்பா இருக்கும்!”

“இந்த ஸாரிஸ் என்ன விலை?”

“பட்டு பருத்தி சேலை எடுத்து காட்டுமா. பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கணும், சொல்லிட்டேன்.” எனப் பல குரல்கள் ஒருங்கே காதை நிறைக்கும் போது கடலலையாய் பொங்கியெழும் எரிச்சலை முகத்தில் காட்டாமல் இருக்கவே பெரும்பாடுபட வேண்டியிருந்தது.

இழுத்துப் பிடித்த பொறுமையோடு, வண்ண சேலைகளை மேஜை மீது அள்ளிப் போட்டவளின் உள்மனம், தோழியை தனக்குத் தெரிந்த அனைத்து கெட்ட வார்த்தைகளையும் உபயோகித்து மிகக் கேவலமாக திட்டித் தீர்த்தது.

அப்போது வியர்க்க விறுவிறுக்க கடைக்குள் நுழைந்த ஒருத்தி, புறங்கையால் நெற்றி வியர்வையைத் துடைத்தபடி அவசரமாக படிக்கட்டில் ஏறுவதைக் கண்டு கொண்டு பற்களை நறநறத்தாள், வித்யா.

“இருக்குடி, உனக்கு!” என கடுப்புடன் முணுமுணுத்தவள் ஒரு திரள் மெல்ல அடுத்த பிரிவை நோக்கி நகர்ந்ததும், அருகிலிருந்த பெண்ணிடம் கண் காட்டிவிட்டு மாடியேறினாள்.

இரண்டாம் மாடியில், சேல்ஸ் கேர்ள்சுக்கு உபயோகித்துக் கொள்ளவென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழையும் போது, முகத்தில் நீர் சொட்டச் சொட்ட, அந்த கிளோத்திங் ஸ்டோருக்கான பிரத்தியேக உடையை அணிந்து, இடை வரை வளர்ந்த கூந்தலை போனிடைல் இட்டுக் கொண்டிருந்தாள், சம்யுக்தா!

“இன்றைக்கும் லேட்டு! அந்த மனுஷன், அவ வந்ததும் என்னை வந்துப் பார்க்க சொல்லிடுனு கத்திட்டு போனாருடி. தினமும் திட்டு வாங்குறியே? உனக்கென்ன வேண்டுதலா..” என்று ஆதங்கப்பட்ட தோழியைத் திரும்பிப் பார்த்தவள்,

“இதை தான் விதிங்குறது!” என புன்சிரிப்புடன் கூறியபடி சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த ஆளுயர் கண்ணாடியைப் பார்த்து காலரை இழுத்து சரி செய்து கொண்டே,

“சார் எங்க?” என்று கேட்டாள், பெரிதாக அலட்டிக் கொள்ளாத குரலில்.

“மாடி இறங்கு. உன்னைக் கண்டதும் எங்கிருந்தாவது புல்லட் பாய்ந்து வரும்.. ” எனக் கடுப்படித்தவள்,

“போறப்போ காதுல ஏதும் பஞ்சு அடைச்சிட்டு போ! இன்றைக்கு நல்லாவே லேட்டு. சவ்வு கிழியிற அளவுக்கு திட்டு கான்ஃபார்ம்..” என்க,

“ரொம்ப விசனப்படாதடி!” என்றாள் சம்யுக்தா, புன்னகை மாறாத முகத்துடன்.

அவளை முறைத்தவள், “சீக்கிரம் வந்திடு!” என்றுவிட்டு மேற்கொண்டு பேசாமல் அங்கிருந்து வெளியேறி விட, அறையை இழுத்து சாற்றிக் கொண்டு மாடி இறங்கினாள் சம்யுக்தா.

வித்யா சொன்னது போலவே, அவளைக் கண்டதும் எங்கிருந்தோ ஓடி வந்தார், துணிக்கடையின் உரிமையாளர்!

அவரைக் கண்டதும் நடையை நிறுத்தியவள் மரியாதை நிமித்தம் காலை வணக்கங்களை செப்ப வாய் திறக்கவிருந்த நேரத்தில், அவளுக்கான அர்ச்சனையை அவரே ஆரம்பித்து வைத்தார்.

“என்ன பொண்ணும்மா நீ? ஒருநாள்னா சரி. அதென்ன தினமும் லேட்டா வர்றது? பொறுப்புனு ஒன்னு வேண்டாமா.. உன்னைப் போலவே மத்தவங்களும் பல கஷ்டங்களுக்கு மத்தியில தான் வேலைக்கு வந்துட்டு போறாங்க. கொஞ்சம் பொறுப்பா நடந்துக்க பாரு சம்யுக்தா!” எனத் தொடங்கிய அறிவுரை அடைமழை ஐந்து நிமிடங்கள் வரை தொடர்ந்தது.

தினமும் கேட்டுப் புளித்துப் போன அதே வார்த்தைகள்! வழமையான அதே வரிகளைத் தான் பிசிரு தட்டாமல் தேய்ந்த ரெகார்ட்டர் போல் சொல்லிக் கொண்டிருக்கிறார், காருண்யராஜ்.

தான் இப்படி நடந்து கொள்வது சரியில்லை என மனசாட்சி உறுத்தினாலுமே, வேறு வழியில்லையே.. வேண்டுமென்றா தாமதமாக வருகிறாள்? கடமைகளும், பொறுப்புகளும் அல்லவா அவளது நேரங்களை ஈவிரக்கமின்றி கொள்ளையடித்துக் கொள்கின்றன?

இவை ஒரு புறமிருக்க, எவ்வளவு தான் திட்டினாலும், ஒருநாள் கூட வேலையை விட்டுத் தூக்கி இன்னலில் தள்ளிவிட நினைக்காத காருண்யராஜின் தயாளக் குணமே, அவரது திட்டல்களை தலை தாழ்த்தி கேட்டுக் கொள்ளும் பக்குவத்தை அவளுக்கு ஏற்படுத்தி விட்டிருந்தது.

வேறு எவராக இருந்தாலும், இத்தனை நாட்கள் வாய்ப்பறை அறைந்தும் தன் போக்கில் தாமதமாக வந்து செல்லும் யுக்தா போன்றவர்களின் வேலையை என்றோ பறித்துக் கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் காருண்யராஜ் பெயரைப் போலவே கருணை உள்ளம் படைத்தவர்! அவளது குடும்ப நிலையை அறிந்து வைத்திருந்தபடியால் வெறும் திட்டலோடு நிறுத்திக் கொள்வார்.

வேலையைப் பறித்து ஒரு கீழ்தட்டு குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தும் கொடு காரியத்தை அவர் இதுவரை செய்ய விழையவில்லை.

திருவிழாக்கள், நோன்புகள் என வந்து விட்டால் சம்பளத்தில் கருணை காட்டி, வேலை செய்யும் இளம் பெண்களின் மனதில் பால் வார்க்கத் தவறியதில்லை. சில நேரங்களில் திருவிழாவுக்கான உடைகளில் கூட அவரின் தாராளத் தன்மை வெளிப்படும்.

அவரது உயர் நற்குணங்களே என்றும் போல் இன்றும் சம்யுக்தாவை மௌனியாக்கி விட, அள்ளி வீசிய திட்டல்களைத் தலை குனிந்து கேட்டுக் கொண்டவள், அவர் அங்கிருந்து அகன்றதும் வித்யாவின் அருகில் வந்து நின்றாள்.

“என்னடி.. அர்ச்சனை பலமோ?” என காதோடு ரகசியக் கேலி செய்த தோழியை சற்றும் கண்டு கொள்ளாமல் தன் வேலை எதுவோ, அதைப் பொறுப்போடு செய்ய ஆரம்பித்து விட்டிருந்தாள் சம்யுக்தா.

மதிய உணவு வேளையில், கடையின் கதவில் தொங்கிய பலகையை திருப்பிப் போட்டு விட்டு பிரத்தியேக அறைக்குள் புகுந்து கொண்டனர் விற்பனைப் பெண்கள் இருபது, இருபத்தைந்து பேரும்!

தோழியின் ஹாட் பாக்ஸைப் பிரித்தபடி, “நேத்து பொண்ணு பார்க்க வர்றதா சொல்லிருந்தியே யுக்தா. விஷயம் ஓகே ஆச்சா?” என்று கேட்டாள் வித்யா.

“ம்ம், வந்திருந்தாங்க..”

“மாப்பிள்ளை எப்படி? பார்க்க ஹீரோ மாதிரி இருந்தாராடி..”

எள்ளல் சிரிப்புடன் இலவச இணைப்பாய் வந்து குரலில் ஒட்டிக் கொண்ட கேலியினூடே, “ஹீரோ மாதிரி தெரியல. முதுகு எலும்பு இல்லாதவன்னு தெரிஞ்சிக்கிட்டேன் வித்யா..” என்றாள்.

“ஊருல ஒருத்தன் கூடவா ஹீரோவா இல்ல? ப்ச், இவனுமாடி?”

“ம்ம்! கார், பெங்களா வேண்டாமாம். கலியாணம் முடிஞ்சி ரெண்டு பேரும் தங்கிக்க வசதியான வீடும், பத்து லட்சம் பணமும் ரொக்கமா கேட்குறாங்க. அவ்ளோ இருந்தா நம்ம ஏன் இவ்ளோ கஷ்டப்பட போறோம்டி?”

ஆமோதிப்பாகத் தலை அசைத்த வித்யாவிடமிருந்து நெடிய பெருமூச்சொன்று வெளிப்பட்டது.

சம்யுக்தா! அவளை நம்பித் தான் ஒரு குடும்பமே இருக்கிறது. ஆமாம்,அவளது சொச்ச சம்பாத்தியத்தில் தான் அவர்களின் வாழ்க்கையே ஓடிக் கொண்டிருக்கிறது.

குடித்துக் குடித்து, ஈரல் கரைந்து, குடும்பத்தை அனாதரவாக விட்டுவிட்டு அவளின் தந்தை இறந்து போனதன் பின், அனைத்து குடும்பப் பொறுப்புகளும் சாவித்திரியின் தலையில் வந்து வீழ்ந்தன.

அப்படியானால் அதற்கு முன்பெல்லாம் அவர் தான் குடும்பத்தை நல்ல முறையில் கவனித்து, மனைவி பிள்ளைகளின் தேவைகளை நிவர்த்தி செய்து வைத்தாரா என்று கேட்டால், ம்ம்கூம்! இல்லை தான்.

ஆனால் அப்போதெல்லாம் இரவு பகல் அயராது உழைத்த சாவித்திரிக்கு காமூகர்களின் பார்வையையும், கணவனை இழந்தவள் தானே என்ற அலட்சியத்தில் ஒட்டிக் கொள்ள வரும் உரசல் பேர்வழிகளின் நடத்தைகளையும் சமாளிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.

ஆனால் கணவனின் இழப்பிற்குப் பிறகு, அவற்றையும் கடந்து தன் மூன்று புத்திரிகளைக் கரை சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு மலைப்பைக் கொடுத்ததில் ஆச்சரியமில்லையே..

‘பிள்ளைகளுக்காக’ என ஓடி ஓடி பணக்கார வீடுகளில் கிடைக்கும் சிறு எடுபிடிகளோடு பேக்டரிகளிலும் வேலை செய்து ஓடாய் தேய்ந்து போன சாவித்திரிக்கு, தன் வாழ்க்கையைக் கட்டிலோடே கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம்!

ஆம், கடந்த பல வருடங்களாகவே பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டு கட்டிலோடு தான் படுத்துக் கிடக்கிறார்.

அன்றிலிருந்து அத்தனை பொறுப்புகளையும் குடும்பத்தின் மூத்த வாரிசான சம்யுக்தாவே சுமக்க வேண்டியதாயிற்று!

தனக்குப் பின் பிறந்தவர்களின் நலன் கருதி படிப்பைப் பாதியிலே நிறுத்திக் கொண்டவள், ‘தொட்டுக் கொள்கிறேன்’ என்பது போல் பல இடங்களில் வேலை பார்த்து இறுதியில் தான் இவ்விடத்தில் வந்து கரை ஒதுங்கியிருந்தாள்.

காருண்யராஜின் இரக்க குணம் அவளுக்குப் பெருத்த ஆசுவாசத்தையும், நிம்மதியையும் கொடுத்ததென்றால், நிச்சியமாக அது மிகையில்லை!

விடிந்ததும் காலையுணவை சமைத்து முடித்து, தாய்க்கு பணிவிடை செய்து, சிறியவளை பள்ளிக்கு செல்ல ஆயத்தப்படுத்தி விட்டு இங்கே வருவதற்குள் நேரம் பறந்து விடுகிறது.

எவ்வளவு முயன்றாலும், அரைமணி நேரமாவது தாமதமாகி விடும். பாவம், இதைத் தவிர அவளுமே வேறு என்ன தான் செய்ய?

யோசனையுடன் உணவை அலைந்து கொண்டிருந்த சம்யுக்தாவை இயல்புக்கு மீட்டு வந்தது, வித்யாவின் தொடுகை!

திடுக்கிட்டுத் தெளிந்தவள், தன்னையே வருத்தம் மேலோங்கப் பார்த்திருந்த தோழியைப் பார்த்து சமாளிப்பாகப் புன்னகை சிந்தி விட்டு எழுந்து கொண்டாள்.

அதற்குப் பிறகினி எங்கே ஓய்வு?

இரவு ஏழு மணி வரையிலும் புடவைகளை மடிப்பதுவும், பிரிப்பதுவும் என நேரம் றெக்கை கட்டிப் பறந்து விட, சற்று நேரம் ஓய்வுக்காக இருக்கையில் சாய்ந்திருந்தவள் வெளியே வரவும்,

“இருடி. லேட் ஆகிடுச்சு! வா, நானே ட்ரோப் பண்ணிடறேன்.” என்று கூறிக் கொண்டு பின்னாலே ஓடி வந்தாள் வித்யா.

மறுக்காமல் அவளது ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தவளுக்கு, மீதப்படுத்திய பஸ் செலவில் பேனா மை தீர்ந்து போனதாய் காலையில் சொல்லிக் கொண்டிருந்த இளைய தங்கைக்கு பேனாவையாவது வாங்கிக் கொடுக்கலாமே என்ற எண்ணம் தான்!

யோசனையின் பிடியில் சிக்கித் தவித்த சம்யுக்தா, வித்யா தன் தோளைத் தட்டி வீடு வந்து விட்டதாய் சொல்லும் வரை நிகழ் உறைக்காமல் ஸ்கூட்டியிலே தான் அமர்ந்திருந்தாள்.

நன்றி கூறிக் கொண்டு உள்ளே சென்றவளை வரவேற்றதென்னவோ, திண்ணையில் கால் நீட்டி அமர்ந்து சத்தம் போட்டு படித்துக் கொண்டிருந்த சத்யா தான்.

தன் முன்னே நிழலாட்டம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தவள் தமக்கையைக் கண்டு முகம் மலரப் பெற்றவளாய், “அக்கா!” என்று உற்சாகமாகக் கூவி அழைக்க,

“சந்தா எங்கே, சத்யா?” என அயர்வுடன் கேட்டுக் கொண்டே வீட்டினுள் புகுந்தாள் சம்யுக்தா.

“தூங்குறா..” என சிறு இதழ் சுழிப்புடன் கடுகடுத்தவளை புருவம் உயர்த்திப் பார்த்தவளுக்கும், சற்றும் பொறுப்புணர்வின்றி உண்பதும் உறங்குவதுமாய் காலத்தைக் கடத்தும் மூத்த தங்கையை நினைத்து ஏக வருத்தமே!

‘ஏண்டி இப்படி?’ என்று ஆதங்கமாக ஒரு வார்த்தை கேட்டு விட்டால் போதும்! சட்டென்று ஆழிப் பேரலையாய் கொந்தளித்து விடுவாள்.

‘சம்பாதிச்சு குடும்பத்தைக் காப்பாத்துறேன்னு பெரிய எகத்தாளமோ!’ என நெருப்புக் கங்குகளை அள்ளி வீசுவாள், மனசாட்சியின்றி!

வாயைக் கொடுத்து மனம் நொந்து போவானேன் என யுக்தாவும் இப்போது அவற்றை கண்டு கொள்ளாமல் கடந்து வரப் பழகி இருந்தாள்.

முகம், கைகால் அலம்பி வந்தவள் நேராகச் சென்றது, சாவித்திரியின் அறைக்கு.

ஒரு காலத்தில் சுறுசுறுப்பாக ஓடித் திரிந்த அன்னை, சிறகொடிந்த பறவையாய் இன்று கட்டிலோடு முடங்கிப் போயிருப்பதைப் பார்க்கும் போது கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

“அம்மா..” என்ற அழைப்புடன் தாயை விரைந்து நெருங்கி, அவரது தலையை மென்மையாக வருடி விட்ட பூவையின் முகத்தில் அப்பட்டமான வலி! வேதனை!

கண்களைப் பாதியாகத் திறந்து மகளை ஏறிட்ட சாவித்திரியின் உலர்ந்த உதடுகள் சிரித்தன. ஆனால் மாற்றமாக, சுமைகளை சுமக்கும் மகளை எண்ணி கண்களில் கண்ணீர் திரையிட்டது.

மகளின் வளமான வாழ்வுக்காக பெற்ற மனம் கடவுளிடம் வேண்டுதல் வைத்த நேரத்தில், இங்கே, குறுக்கும் நெடுக்குமாக அலைந்து, அறையின் நீள அகலங்களை அளந்து கொண்டிருந்தான் யதுநந்தன்.

தந்தை கை காட்டிய காட்சிகளைப் பூங்காவில் ரசித்துவிட்டு வந்தும் இன்றுடன் ஒரு வாரமாயிற்று!

அன்றிலிருந்து மனதை அழுத்தத் தொடங்கிய ஏதோவொரு பாரமொன்று, இத்தனை நாட்கள் அவனிடம் இருந்த கொஞ்சநஞ்ச நிம்மதியையும் மொத்தமாக சூறையாடிக் கொண்டிருந்தது.

தனக்குள்ளேயே யோசனையில் உலன்று திரிந்தவனுக்கு, இந்த ஒரு வாரமாக எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை.

ஒரு வாரத்துக்கு முன் தொண்டைக் குழிக்குள் இறங்கிய ஓரிரு மணி சோற்றுப் பருக்கைகளும் கூட இப்போது இறங்க மறுத்து விட, மூச்சு விடவும் சிரமப்பட்டு தடுமாறிக் கொண்டிருக்கிறான்.

அன்று கிருஷ்ணமூர்த்தி சொல்லிய அந்த ஒற்றுமை, குழந்தைகள் அல்ல. தாயன்பு!

ஆமாம், அவர் காட்டிய அத்தனைக் காட்சிகளும் தாயன்பைப் பட்டவர்த்தனமாகப் பறைசாற்றக் கூடியதாக இருப்பதை அன்றே அவதானித்து விட்டவனின் தூக்கம் மொத்தமாகப் பறிபோனது.

‘அந்த மெமரிஸை உன்னால யுவனிக்கு கொடுக்க முடியுமா?’ என்ற கேள்வி அவனது காதுக்குள் இன்னுமே கேட்டுக் கொண்டே தான் இருக்கிறது.

தன் பிடிவாதத்தால் மகளின் சந்தோசங்கள் பறிக்கப்பட்டு விடுமோ எனப் பலவாறெல்லாம் யோசித்துக் களைத்துப் போயிருந்தவன், ஏதோவொரு முடிவுடன் முகத்தை நீரால் அடித்து கழுவிக் கொண்டு தந்தையைக் காணச் சென்றான்.

அறைக் கதவை தட்டி அனுமதி வாங்கிக் கொண்டு அவன் உள்ளே நுழையும் போது ஏதோவொரு அரசியல் புத்தகத்தை வெகு ஆர்வத்துடன் படித்துக் கொண்டிருந்தார், கிருஷ்ணமூர்த்தி.

என்றுமில்லாதவாறு மகன் இன்று தன்னைக் காண அறைக்கு வந்திருப்பது பலவித யோசனையை அவருக்குக் கொடுத்திருக்க வேண்டும்,

முடிச்சிட்ட புருவங்களுடன் மெல்லத் தலை தூக்கி மகனை ஏறிட்டவர், ‘வா!’ என அருகே வந்து அமருமாறு கண் காட்ட, மூச்சை ஆழமாக இழுத்து வெளியேற்றியபடி பொறுமையாகக் கட்டிலில் அமர்ந்தான், நந்தன்.

“எப்போ பாரு தொந்தரவு பண்ணிட்டே இருக்குற சனியை, இன்று நீயே தேடி வந்திருக்கியே! என்ன விஷயம் நந்தா?” என்று கேலியாகக் கேள்வி தொடுத்தவரை முறைத்தவன்,

“உங்களோட பேசணும் டேட்!” என்றான் இறுகிய குரலில்.

“ஓ, பேசலாமே! என்ன?”

சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, கண்களை மூடித் திறந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்ட யதுநந்தன், நிறுத்தி, வெகு நிதானமாக வார்த்தைகளைக் கோர்த்தான்.

“டேட், எனக்கு மறுமணம் பண்ணிக்க சம்மதம்!”

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

1 thought on “நாணலே நாணமேனடி – 02”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!