நாணலே நாணமேனடி – 04

5
(8)

மாலை மங்கி மெல்ல இருள் சூழ ஆரம்பித்திருந்த நேரம்.

மேஜை விளிம்பில் அமர்ந்து தந்தையின் மடியில் காலூன்றி சில்மிஷம் செய்து கொண்டிருந்த யுவனி சலித்துப் போனவளாய், “பப்பு..” என சிணுங்கத் தொடங்கியிருக்க, ஒரு கட்டத்தில் யதுநந்தனுக்குமே எரிச்சல் மண்டியிட்டது.

‘எவ்வளவு நேரமாயிற்று. இன்னுமே காணோமே!’ என கடுகடுத்தவன் மணிக்கட்டைத் திருப்பி பார்க்க, மணி ஆறு மணிக்கு பத்து நிமிடங்கள் எனக் காட்டி நின்றது, கைக்கடிகாரம்!

பெருவிரலால் புருவத்தை நீவி விட்டபடி இருக்கையிலிருந்து எழுந்து நின்றவன், யுவனியைத் தன் வயிற்றோடு அள்ளி அணைத்து தூக்க முயல்கையில் அலைபேசி அலறியது.

“இரு போகலாம், பாப்பா!” என வயிற்றில் முகத்தை அங்குமிங்குமாய் புரட்டி சிணுங்கிய செல்லமகளின் கூந்தலைக் களைத்து விட்டபடி கூறியவன் தாமதியாமல் அழைப்பை இணைத்தான்.

மூர்த்தி தான் அழைத்திருந்தார்.

எடுத்ததுமே, “வாட்டிஸ் திஸ் டேட்? அந்த பொண்ணு இன்னுமே வரல. பன்ச்வாலிட்டி இல்லாத இவ..” என ஆரம்பித்தவன் மேலே தொடர முன்,

“ஹே, ஸ்டாப்! ஸ்டாப்! மூச்சு விட்டு பேசுப்பா நந்தா!” என இடைபுகுந்தவர்,

“சரிதான், நல்லதாப் போச்சு. ஒருவேளை அவளுமே உன்னைப் போல போட்டோ ஏதும் பார்க்காம ரெஸ்டாரண்ட் கிளம்பி வந்திருந்தா என்ன பண்ணிருப்ப நந்தா? உனக்கு அவ பேரு கூட தெரியாதுல..” என இழுவையாய் நிறுத்த,

“ஓ, ஷிட்!” என வெளிப்படையாகவே முன்நெற்றியில் அறைந்து கொண்டான், யதுநந்தன்.

‘இதை எப்படி மறந்தேன்? நான் அவளுடைய புகைப்படத்தைக் கூட பார்க்கவில்லையே! கடமைக்கே என கிளம்பி வந்தாயிற்று. குறைந்த பட்சம் பெயரை மட்டுமாவது கேட்டு அறியவில்லை. இதைப் பற்றி கொஞ்சம் கூட சிந்திக்க மறந்தேனே!

ஒருவேளை அவளும் மறுமணம் தானே என்ற அலட்சியத்தில் இங்கு வந்து, நானே அவளைத் தேடிக் கண்டு பிடித்து கரம் குலுக்கும் வரை எனக்காக காத்திருக்கிறாளோ என்னவோ!’ என நந்தன் சிந்தனையில் ஆழ்ந்த நேரம் வயிற்றில் முகம் புதைத்திருந்த யுவனி மெல்ல நகர்ந்தாள்.

அவனுமே தன் மடத்தனத்தை எண்ணி நொந்து போனவனாய் தலையில் கை வைத்து நின்றிருக்க, சிறியவள் மேஜை விளிம்பிலிருந்து மெல்ல முன்னோக்கி சரிந்தாள்.

அசைவுணர்ந்து அவன் அவசரமாக தலை குனிந்து பார்க்கவும், பிடிமானமின்றி யுவனி கீழே விழவும் சரியாக இருக்க,

“ஐயையோ!” என்ற அலறலுடன் அவளைத் தாவிப் பிடித்து தன் நெஞ்சோடு அணைத்திருந்தாள் ஒரு பெண்!

இவை எல்லாம் ஒரே நொடியில் நடந்தேறியவையே!

அதீத பதற்றத்தில் தன் துடிப்பை நிறுத்திக் கொண்ட நந்தனின் இதயம், இப்போது நிமிடத்திற்கு நூறு தடவைகள் என்ற வேகத்தில் துடிக்கத் தொடங்கிட, அலைபேசியை மேஜை மீது தூக்கிப் போட்டவன்,

“பாப்பா..” என்ற அவசர அழைப்புடன் அவளை தூக்க வந்தான்.

அதற்குள், “ஆர் யூ ஓகேடா, பேபி?” என யுவனியை முழுவதுமாக ஆராய்ந்து முடித்திருந்தவள், எதுவும் ஆகவில்லை என்ற நிம்மதிப் பெருமூச்சுடன் புன்னகையில் முகம் விகசிக்க அவளது தலை வருடி விடத் துவங்கியிருந்தாள்.

மகளை அணைக்க வந்த நந்தனின் கைகள் அப்படியே அந்தரத்தில் நின்றன.

கண்களோ, கீழே முட்டியிட்டு யுவனியின் தலை வருடி நெற்றி முத்தம் பதித்த பெண்ணின் தவிப்பைப் புரியாமல் பார்த்திருந்தன.

‘அப்பா சொன்ன பொண்ணு இவங்க தானோ?’ என யோசனைகள் எங்கெங்கோ பயணித்தன.

யுவனி பயத்தில் வெலவெலத்துப் போய் அவளது நெஞ்சோடு மேலும் ஒன்ற,

“ஒன்னுல்லடா பேபி, ஒன்னுல்ல. என்னைப் பாரு! அச்சோ இங்க பாரு..” என அவளின் தாடை தொட்டு நிமிர்த்தியவள்,

“எதுவுமே ஆகல பார்த்தியா? பேபி ஜாலியா ஜம்ப் செய்துட்டா, அவங்க கீழ விழுந்துடாம இருக்க நான் அப்படியே கேட்ச் பண்ணிட்டேன்.” எனக் கண் சிமிட்டிச் சொல்ல, விரல் சப்பியபடி அவளையே இமைக்காமல் பார்த்தாள் யுவனி.

சிறியவளின் கோலிகுண்டு விழிகள் புதியவளை வெகு ஆர்வத்துடன் வட்டமிட்டன.

“இனிமே இப்படிலாம் பண்ண கூடாது செல்லம். சரியா?” என்றவளின் கன்னம் தொட்ட யுவனி, “மம்..மீஈ!” என அழுகையில் பிதுங்கிய உதடுகளுடன் மழலையில் அழைத்தாள்.

பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், “ஓ, மம்மி கிட்ட போகணுமா? சரி வா..” என அவளைத் தூக்கிக் கொண்டு அவள் எழுந்து நிற்க, நந்தன் தான் மூச்சு விட மறந்து அவ்விடத்திலே உறைந்தான்.

சகலமும் மறந்து அவ்விளவயது யுவதியின் தவிப்பையும், ரோஜா மொட்டின் முகத்தில் வந்து போன பாவனைகளையும் ‘அடடா, கவிதை!’ என வியந்து பார்த்திருந்தவன் சிறியவளின் ‘மம்மிஈ!’ என்ற அழைப்பில் அதிர்ந்தான்.

‘எ.. என்னது.. மம்மியா?’ எனப் பதறியவன் எழுந்து நின்று கண்களை நாலாபுறத்திலும் சுழல விட்டவளை நோக்கி கைகளை நீட்ட,

“பப்புஊ..” என்ற அழைப்புடன் தந்தையிடம் தாவிக் கொண்டாள் யுவனி.

“கால் பேசிட்டு இருந்திங்களா! அதான் பேபி விழறதைப் பார்க்காம போய்ட்டிங்க சார். அவ ரொம்ப பயந்துட்டா. இனிமே கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க என்ன..” வார்த்தைகளை மெல்லிசை ராகமாய் அள்ளி வீசியவள் அப்போது தான் நினைவு வரப் பெற்றவளாக,

“பேபி அம்மாவைத் தேடறா சார்!” என்கவும், புரியாத பார்வையோடு அவ்விடம் வந்து நின்ற ஒருத்தி, “ஹாய்!” என நந்தனைப் பார்த்து கை அசைக்கவும் சரியாக இருந்தது.

“தாங்க் யூ!” என உதடு நெளியச் சொல்லியவன், அவளையும், புதிதாய் வந்து தோளோடு ஒட்டி நின்றவளையும் மாறி மாறிப் பார்க்க,

“எக்சியூஸ் மீ!” என்று விட்டு சிறு தலை அசைப்புடன் அங்கிருந்து நகர்ந்தாள் முன்னையவள்.

தான் சந்திக்க வந்தவள் அவளாகத் தான் இருக்குமென ஆடவன் ஒரு நொடியேனும் மகிழ்ந்திருக்க வேண்டும். இல்லையேல் அவள் விலகிச் செல்கையில் அவன் மனம் ஏமாற்றத்தில் அதிர்ந்திருக்குமா என்ன..

மூச்சை ஆழமாக இழுத்து வெளியேற்றி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் அங்கிருந்து நகர்ந்தவளை சில நொடிகள் பார்த்திருந்து விட்டு புரியாத பாவனையுடன் புதியவள் புறமாகத் திரும்பினான்.

வந்திருந்தவள், “ஹாய், ஐம் பவித்ரா!” என்ற சுய அறிமுகத்துடன் கை நீட்ட,

“மீ?” என ஆள்காட்டி விரல் நீட்டி தன்னை சுட்டிக் காட்டியவன் சந்தேகமாக பின்னால் திரும்பிப் பார்த்தான்.

யுவனி அவனின் கழுத்தில் தொங்கியபடி கண்ணுக்கெட்டிய தூரத்தில் – ஒரு மேஜையில் சென்றமர்ந்த ‘மம்மி’யை முகம் வாடப் பார்த்திருந்தாள்.

“மன்னிக்கணும். மாமா இப்போ தான் கால் பண்ணி சொன்னாரு, நீங்க என் போட்டோவையே பார்க்கலனு. நேர்லயே பார்த்துக்கிறதா சொன்னிங்களாம்!” என்றவளின் முகத்தில் புதிதாக சிவப்பு நிறத்தில் ஏதோவொன்று.. அது என்ன?

அடடே, வெட்கமா?

சகித்துக் கொள்ள முடியாமல் பார்வையை திருப்பிக் கொண்டவன், சிறு தலை அசைப்புடன் அமர்ந்து முன்னிருந்த இருக்கையைக் கை காட்ட,

“ப..ப்புஊ..” என தந்தையும் மோவாயைத் தொட்டுத் திருப்பி தன்னைக் காணச் செய்தாள் யுவனி.

“என்ன பாப்பா?” என்றவனுக்கு ரெஸ்டாரண்ட்டின் ஒரு மூலையைக் கை காட்டி யுவனை ஓவென அழத் தொடங்கிவிட, காரணம் என்னவெனப் புரியாமல் திகைத்தான் நந்தன்.

திரும்பி, அவளின் கை நீண்ட திசையில் தன் பார்வையைப் பதித்தவன் அங்கு கண்டதென்னவோ, ஒரு ஜோடியுடன் அமர்ந்து கதைத்துக் கொண்டிருக்கும் ‘அப்பெண்’ணைத் தான்!

இன்னதெனப் புரியாத புன்னகை ஒன்று நெளிந்தது, அவனது முரட்டு அதரங்களில்.

ஒருவேளை அது, அப்பெண் யுவனியை தவிப்புடன் அணைத்திருந்த விதத்தைக் கண் கூடாகக் கண்டதனாலாக இருக்கலாம். இன்றேல் அவளது கண்களில் சொட்டிய கனிவைக் கண்ணுற்றதாலோ அல்லது சாயம் பூசப்படாத உண்மையான அன்பைப் பார்த்ததால் கூட மலர்ந்திருக்கலாம்!

மகளின் தலைவருடி விட்டபடி முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவளை நோக்கியவன் முதன் முதலாக செப்பிய வார்த்தை,

“இது சரிவராது!”.

“சா..ர்!” என ஏகத்துக்கும் அதிர்ந்தாள், பவித்ரா.

அவன் உச்சரித்த வார்த்தைக்கான அர்த்தம் முதலில் புரியாவிட்டாலும், சில நொடிகள் கண்களை இறுக மூடிக் கிரகித்ததில் உடல் முழுவதும் தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு.

‘மறுமணமாக இருந்தாலும் பரவாயில்லை. பணம் இருக்கிறது. கட்டியிழுக்கும் அழகு முறுக்கேறிய புஜங்களிலும், பரந்த நெற்றிப் பரப்பில் தவழ்ந்த கேசக் கற்றைகளிலும் சற்று அதிகமாகவே தெரிகிறது. குடும்பத்துக்கென குறிப்பிட்ட ஒரு சொத்து மதிப்பு இருக்கிறது. வீடா அது? அப்பப்பா! பங்களா இல்லையா.. இவை பத்தாதா.. இன்னுமென்ன வேண்டும்?’

இவை தான் நந்தனின் புகைப்படத்தையும், அவன் பற்றிய சகல தகவலையும் அறிந்த பிறகு பவித்ராவின் யோசனையில் உதித்தவை!

அவள், வறுமைப் புயலில் சிக்குண்டு, இப்போது தான் மெல்ல கரை சேர்ந்து கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்துப் பெண்.

இத்தனை வருடங்கள் கனவாக மட்டுமே இருந்த வாழ்க்கை இனியாவது நிஜமாகப் போகிறதென மகிழ்ந்து, ‘மறுமணம். ம்ம், ஒரு குழந்தைக்கு தந்தையாகவே இருந்தாலும் பரவாயில்லை’ என மனத் திருப்தியுடன் சம்மதித்துத் தான் இங்கு வந்திருந்தாள்.

ஆனால் வழமையான சுகநல விசாரிப்புகள் கூட இன்றி, எடுத்ததுமே ‘சரிவராது’ என்றுவிட்டானே!

வானில் கட்டப்பட்ட ஆசைக் கோட்டைகள் யாவும் ஒரே நொடியில் சிதிலமடைந்து கீழே சரிந்ததில் மனம் சோர்ந்து போனாள், பவித்ரா.

அவளின் முகபாவனைகளை உள்வாங்கிக் கொண்டிருந்த நந்தன், “ஐ டோன்ட் திங்க் இட்ஸ் கோயிங் டு வொர்கவுட்!” என்க, கடுப்புடன் நிமிர்ந்தவளுக்கு யுவனியின் அழுகுரல் காதை நிறைத்துக் கொண்டே இருந்ததில் எரிச்சலாக வந்தது.

அவன் கூற வருவதைக் காது கொடுத்துக் கேளாமலே, “ஏன் பாப்பாவையும் கூட்டிட்டு வரணும்? பாருங்க, அவ டயர்ட்ல இப்படி அழுகுறா..” என வெளிப்படையாகவே சலித்துக் கொண்டாள்.

மகளின் முதுகை வருடி விட்டுக் கொண்டிருந்த யதுநந்தனின் கை, ஒரு நிமிட வேலை நிறுத்ததின் பின் மீண்டும் இயங்கின.

ஆரம்பத்தில், அவள் தன் நேரத்தை விரயம் செய்ததும் மனதோரத்தில் கசிந்த அதிருப்தி, அவளின் கன்னச் சிவப்பையும், தற்போது உதிர்த்த ஓரிரு வார்த்தைகளையும் கடந்து வந்த பிறகு மனம் முழுவதையும் விஷச் செடியாய் ஆக்கிரமித்தது.

“ஆக்சுவலி இந்த மறுமணமே பாப்பாவுக்காக தான். அட்டாச் ஆகுறாளானு பார்க்க தான் கூடவே கூட்டிட்டு வந்தேன்..” என்றதும் மனம் திக்கென்றது, பவித்ராவுக்கு.

‘முதலே கோணல்’ என மனதினுள் சலித்துக் கொண்டவன் தந்தையை மானசீகமாகக் கழுவி ஊற்றியபடி,

“ஐ ஃபீல் லைக் வி வாண்ட் டிஃபரெண்ட் திங்ஸ் ஃப்ரம் திஸ் ரிலேஷன்ஷிப்! அண்ட் ஐ டோன்ட் திங்க் வி ஆர் ரைட் ஃபார் இச் அதர், பவித்ரா!” என அலுங்காமல் குலுங்காமல் ஒரு இடியை இறக்கி வைத்தான்.

பவித்ரா பேச்சிழந்து மௌனியானாள்.

புருவத்தைப் பெருவிரலால் நீவி விட்டவன், “டைம் ஈஸ் கோல்டு! உங்க நேரத்தை வீணடிச்சிட்டேன். ரியல்லி சாரி!” என்று கொண்டே யுவனியை அணைத்தபடி எழுந்து நிற்க,

“சார்..” என்று அழைத்தபடி தானும் எழுந்து கொண்டாள்.

அரிய புன்னகை ஒன்றை உதட்டில் ஒட்ட வைத்துக் கொண்டவன் சிறு தலையசைப்புடனே விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

போகிற போக்கில், அவனின் பார்வை மூவர் சுற்றி அமர்ந்திருந்த அந்த மேஜையை பட்டும்படாமலும் தொட்டு மீண்டதேனோ..

அவனின் முதுகை வெறித்த பவித்ரா சட்டென்று இருக்கையில் அமர்ந்தாள். கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விட்டதே என தன் மீதே கழிவிரக்கம் பிறந்திற்று அவளுக்கு!

இந்த ஒரேயடி மறுப்புக்கு, தான் யுவனியைக் கண்டு எரிச்சலடைந்ததை அவன் புரிந்து கொண்டு விட்டது ஒரு காரணம் என்றால், மற்றொன்று தன் வரவால் ஏற்பட்ட காத்திருப்பும் தான் என்பதை அவன் இறுதியில் மன்னிப்புக் கோரியதை வைத்தே புரிந்து கொண்டாள், பவித்ரா.

தவறு தன் மீதும் தானே என வருந்தியவளுக்கு, அவனைப் பிடித்த அளவிற்கு, குட்டி யுவனியைப் பிடிக்கவில்லை என்பது தான் உண்மை!

‘சரி தான், விடு! மறுமணம் தானே? உனக்கொரு நல்ல வாழ்க்கை கிடைக்காமலா போய்டும் பவி?’ என நினைத்து மனதைத் தேற்றிக் கொண்டவள், கிட்டத்தட்ட,

‘சீச்சீ! இந்தப் பழம் புளிக்கும்!’ என எட்டிப் பறிக்க முயன்று, திராட்சை கைக்கு எட்டாமல் போன ஏமாற்றத்தில் தன்னைத் தானே ஆறுதல் படுத்திக்கொண்ட புத்திசாலி நரியின் மனநிலையில் இருந்தாள்.

அழகு பார்த்து இந்த ஓரிரு நாட்களுக்குள் கட்டி முடித்த கற்பனைக் கோட்டை, நிலத்தோடு தரை மட்டமாகிப் போனதை எண்ணி நெடு மூச்சொன்றை இழுத்துவிட மட்டுமே முடிந்தது, அவளால்!

‘எட்டிப் பறிக்க முயன்று, கிட்டாத சோகத்தில்..

இனிமை சொட்டும் திராட்சையுமே, புளித்து போனது ஈங்கு!

ஆஹா, இதுவன்றோ வாழ்க்கை தத்துவம்?

எது உன் கை வசமோ, அதுவே அமிர்தம்!

கரம் எட்டா வானை விட, ஆழி சூழ்ந்த இவ்வவனி மண்ணே நன்றன்றோ?

எது கை கூடவில்லையோ, அதுவே ஆலம்!

ஏங்கிப் போய் உப்புநீர் சுவைப்பதை விட, கிட்டியதை எண்ணி களிப்பதே மேலன்றோ?

படைத்தவன் உனக்கென்று குறித்ததை, யாராலும் தட்டிப் பறித்திட இயலாது. அது உனக்கென்று இல்லையேல், பிறகெப்படி எட்டிப்பிடிக்க நினைப்பாய், மானுடா!

உண்மைகள் கசக்கும்,

ஆனால் அதுவே என்றென்றும் நிலைக்கும்!’ என எங்கோ படித்த வரிகள், அவளின் மூளையில் மின்னல் கீற்றாய் தோன்றி மறைந்தன.

   ••••••••

தனக்கு முன் அமர்ந்திருந்தவனைப் பார்த்து சங்கடமாகப் புன்னகைத்த சம்யுக்தாவின் பார்வை, அவனுக்கருகே முகம் விகசிக்க நின்றிருந்தவளில் அடிக்கடி பதிந்து மீண்டு கொண்டிருந்தது.

அவசரமாக வருமாறு விடாமல் அழைப்பு விடுத்துத் தன்னை இவ்விடத்தில் அமர வைத்திருப்பவளே ஆரம்பிக்கட்டும் என யுக்தா அமைதி காக்கத் துவங்கியும் பத்து நிமிடங்கள் கடந்திருக்கும்!

வேலை பார்த்த சோர்வு வேறு அவளைப் படுத்தியெடுக்க, பெருமூச்சுடன் நாலா புறத்திலும் கண்களை சுழற்றினாள்.

மேல்தட்டு வர்க்கத்தினர் வந்து செல்லும் ஒரு ஐந்து நட்சத்திர விடுதி அது!

பார்வையை 360%யில் திருப்பினாலும் கண்ணைக் கவர்ந்திழுத்த அலங்காரங்களும், ‘சர்குலர்’ அமைப்பில் சுழன்று மேல்மாடி வரை நீண்டிருந்த படிக்கட்டுகளும் அவளை வெகுவாக ஈர்த்தன. ‘அடடா!’ என வியந்து அதிலே லயிக்க வைத்தது.

பலமுறைகள், ‘இந்த ஹோட்டல்சுக்கு போய் ஒருவேளை சாப்பாடு சாப்பிட, என்னோட மூனு மாச சம்பளமே தேறாது போலவே!’ என ஏக்கப் பெருமூச்சுடன் வாயைப் பிளந்திருக்கிறாள்.

பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டு, வெளிப்புறம் பிரம்மாண்டமாகக் காட்சியளித்த இந்த ஹோட்டலின் உட்புற கலைகளைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தை இலவசமாகவே ஏற்படுத்திக் கொடுத்த இவனுக்கே எல்லா நன்றிகளும் என உற்சாக மிகுதியில் பாவையவள் பரபரத்துக் கொண்டிருந்த நேரத்தில்,

“யுக்தா!” என்ற சாந்தனாவின் அழைப்பு அவளின் செவியைத் தீண்டி, அவளின் பரவசத்தை மண்ணோடு குழி தோண்டி புதைக்க வைத்தது.

திடுக்கிட்டு சுயம் மீண்ட சம்யுக்தா தங்கையை என்னவென்பது போல் பார்த்தாள்.

திகைப்பில் கொஞ்சமாய் பிளந்து கொண்ட அவளின் செம்மாதுளை இதழ்கள் இளையவளுக்கு கோபத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும், அவளைப் பார்வையாலே பஸ்பமாக்க முயன்றாள்.

அசடு வழிந்தவள், “சொல்லு சந்தா!” என விடயத்தை அறிந்து கொள்ளும் எதிர்பார்ப்புடன் நெடுநெடுவென வளர்ந்திருந்தவனை உற்றுப் பார்க்க,

“இவர் அவினாஷ்..” என அறிமுகப் படலத்தில் தொப்புக்கடீர் என்று குதித்தாள், சாந்தனா.

“ஹாய்!” என கையசைத்து அழகாய் இதழ் விரித்தவனைப் பார்த்து தலை அசைத்தவள், ‘யாரிவன்?’ என்ற கேள்வியைக் கண்களில் தேக்கி தங்கையை அழுத்தமாகப் பார்த்தாள்.

“நானும் தனாவும் ரெண்டு வருஷமா உயிருக்குயிரா விரும்புறோம். இப்போ கலியாணம் பண்ணிக்க ஆசைப்படறோம் சிஸ்டர்!” என வார்த்தைகள் நிதானமாக வெளிப்பட்டது, அவினாஷிடமிருந்து.

ஒரு பக்கமாய் நீண்டு, சாந்தனாவைத் தன் தோளோடு அணைத்துக் கொண்ட அவனின் வலிய கரம், ‘நான் என்றும் கை விட மாட்டேன்!’ என காதலியின் தமக்கையிடம் உணர்த்த விழைந்தது.

அதிர்ந்தாள், சம்யுக்தா!

தொடரும்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!