அந்த உணவகத்தில் யதுநந்தனின் வருகைக்காக காத்திருந்தாள் சம்யுக்தா.
‘நேற்றிரவு அழைப்பு விடுத்து இவ்விடத்தில் தானே சந்திக்க வேண்டும் என்பதாய் சொன்னார்?’ என நினைத்தவள் கண்களை சுழற்றி, சுவற்றில் அழகுக்காக பொறிக்கப்பட்டிருந்த ரெஸ்டாரண்ட் பெயரைப் பார்த்து அதை உறுதிப்படுத்திக் கொண்டாள்.
அன்று சாந்தனா தன் காதலனை அறிமுகப்படுத்தவென அழைத்து வந்த அதே உணவகம் தான்! அன்றிருந்த தயக்கமும், பிரமிப்பும் சற்றே அடங்கியிருந்தது அவளின் பார்வையில்..
“மிஸ்..” என்ற நயமான அழைப்புடன் அருகே வந்து நின்ற வெயிட்டரைப் பார்த்து சிறு தலை அசைப்புடனான முறுவலை உதிர்த்தவள்,
“ஒருத்தங்களுக்காக வெயிட் பண்ணுறேன்..” என சுருக்கமாக உரைக்க, புரிந்து கொண்டவனாய் நகர்ந்து சென்றான் வந்தவன்.
‘என்னை சந்திக்க வருவது யாரென்று கூட தெரியாமல் இப்படி அமர்ந்திருக்கிறேனே! எல்லாம் இந்த கனிகா அக்கா புருஷனால வந்தது. ஒரு போட்டோவையாவது அம்மாகிட்ட கொடுத்துட்டு போயிருக்க கூடாதா?’ என மனதினுள் தரகரைக் கழுவிக் கழுவி ஊற்றியவளுக்கு, அவனுக்கு அழைப்பு விடுத்து தான் அமர்ந்திருப்பது எவ்விடம் என தெரிவித்து விடலாமா என்ற யோசனையில் மண்டை காய்ந்தது.
வெட்கமோ, தயக்கமோ என்னவோ.. ஏதோவொன்று, அவளை நந்தனுக்கு அழைப்பு விடுக்க விடாமல் தடுத்தது.
‘அவருக்குமா என்னைத் தெரியாம இருந்திடப் போகுது? பொறுத்து தான் பார்ப்போமே..’ என முடிவு எடுத்தவள் பலவித யோசனைகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாள்.
பாவையின் உடல் அவ்விடம் இருந்ததே தவிர, யோசனைகள் எங்கெங்கோ அநாதாரவாய் திரிந்தது. பார்வை ஏதோவொரு எதிர்பார்ப்புடன் உணவக வாயிலில் பதிந்திருந்தது.
மொத்தமாக ஐந்து நிமிடங்கள் பறந்து போக, உணவகத்தின் கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டு யுவனியுடன் உள்ளே நுழைந்தான் நந்தன்.
கலகல மழலைச் சிரிப்பு சத்தத்தில் யோசனை தெளிந்தவளின் பெருவிழிகள் நகைத்துக் கொண்டே உள்ளே வந்தவர்ளைக் கண்டதும், அன்றொரு நாளின் நினைவில் மெல்ல சிரித்தன.
“இந்த ரெஸ்டாரண்ட்டுக்கு ரெகுலர் கஸ்டமரா இருப்பாரு போல! அன்னைக்கும் இதே இடத்தில் தானே இவங்களை மீட் பண்ணேன்?” என்று முணுமுணுத்த நேரத்தில், அவளை இணங்கண்டு கொண்டு அவளிடம் விரைந்து வந்தவன்,
“சாரி! வந்து ரொம்ப நேரமாச்சா?” என இயல்பாய் கேட்டவாறே முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
வார்த்தைகள் தொண்டைக் குழியிலே சிக்கிக் கொள்ள, குரலை செருமி பேச முயற்சித்தவளின் கண்கள் வெளியே தெறித்து விடும் அளவுக்கு விரிந்தது, அடுத்ததாக செவியேற்ற யுவனியின் அழைப்பில்.
“எ.. என்ன!” என கடினப்பட்டு வார்த்தைகளைக் கக்கியவளின் பார்வை ஆடவனில் பதிய,
“பாப்பா, ஷ்!” என மகளை அதட்டியவன் ஒரு சங்கடப் புன்னகையைத் தொடர்ந்து,
“அன்னைக்கு என்னோட தங்கச்சி, மம்மியைப் பார்த்துட்டு வானு என்கூட பாப்பாவை அனுப்பி வைச்சா.. இங்கே வந்ததும், கீழ விழ போய் நீ அவளைத் தாங்கி புடிச்சி ஆறுதல் படுத்தினதாலா நீதான் மம்மினு முடிவே பண்ணிட்டா..” என்று கூறி நிறுத்தியவன்,
“காஃபி ஓகேவா?” என வினவினான்.
அவள் தான் அதிர்ச்சியில் மூச்சடைத்துப் போனவளாய், அசைய மறுத்த தலையை வலுக்கட்டாயமாக கடமைக்கே என ஆட்டி வைத்தாள்.
பார்வை ஒரு நொடியேனும் தன்னையே குறுகுறுவென்ற பார்வையும், அழுகையில் பிதுங்கிய இதழ்களுமாய் பார்த்திருந்த சிறியவளை விட்டு அகலவே இல்லை.
ஆர்டர் செய்துவிட்டு மீண்டும் வாகாக அவள் புறம் திரும்பி அமர்ந்தவன், “டோன்ட் யூ ரிமெம்பெர் அஸ்?” என்று கேட்டான், அவளின் உறைநிலையைக் கவனித்து விட்டு!
பதற்றத்தில் நாலாபக்கமும் தலையாட்டி வைத்தவள் இறுதியில், தந்தையின் கோர்ட்டினுள் முகம் புதைத்தபடி தன்னை கள்ளத்தனமாகப் பார்த்திருந்தவளை நோக்கி கைநீட்டி ‘வா’ எனும் விதமாய் கண்சிமிட்ட, அதுவரையே காத்திருந்தாளோ அல்லது, அதற்காகத் தான் உதடு பிதுக்கி அழ தயாராக இருந்தாளோ என்னவோ தந்தையின் கழுத்தைக் கட்டிக் கொண்டு மடியில் ஏறி நின்றவள் ஒரேயடியாக யுக்தாவிடம் தாவினாள்.
யதுநந்தனுக்கு ஏக அதிர்ச்சி! ஒரே பார்வையில் இப்பெண் இந்த அளவுக்கு சிறியவள் மனதில் இடம்பிடிப்பாள் என நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை அவன்.
இளமொட்டுக்கள் தான் எத்தனை சாமர்த்தியசாலிகள்? அன்று கீர்த்தனா, ‘மம்மியைப் பார்த்துட்டு வா’ எனக் கூறி, பவித்ராவை சந்திப்பதற்காக அவளைத் தன்னுடன் அனுப்பி வைத்தபோது நடந்த சம்பவம் நினைவில் ஊஞ்சலாடியது நந்தனுக்கு.
‘மம்மி’யைக் காண வேண்டுமென்ற பேராவலில் இருந்தவளது மனம், தான் மேஜையினின்று கீழே விழப் போனதும் தாவியணைத்து, தன்னை நெஞ்சோடு சாய்த்து தலை கோதி விட்டவள் தான், கீர்த்தனா சொல்லி அனுப்பிய அந்த ‘மம்மி’ என்று நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
அன்று பதிந்தது தான், இன்றும் அப்படியே அழியா ஓவியமாய் இருக்கிறது யுவனியின் மனதில்!
பொதுவாக சிறியவர்களைப் பொறுத்த வரையில், ஒரு விடயம் முதல் பார்வையில் எவ்விதம் மனதில் பதிந்து போகின்றதோ, அதுவே தான் என்றென்றும் நிலைக்கும்!
மம்மியைக் காண வந்தவளது மனதில் யுக்தாவின் முகம் மிக ஆழமாய் பதிந்து போயிற்று என்பது மறுக்க முடியாத உண்மை. அதனால் தான் மம்மியென உருகிக் கொண்டிருக்கிறாள்.
சிறியவளை எதுவிதத் தயக்கமும் இன்றி தன் மடியில் அமர்த்திக் கொண்டவளை சில நொடிகள் உற்றுப் பார்த்தவனின் நெஞ்சில், தன் முடிவில் தவறில்லை என்ற எண்ணம் அவனை மீறி எழுந்தது.
“உன் பேர் என்ன?” என்று முகத்தை மறைத்த முடியை காதுக்குப் பின்னால் ஒதுக்கி விட்டபடி கேட்டவளின் கன்னம் தொட்டுப் பார்த்து குதூகலித்த யுவனி, “ப்.. பாப்பா..” என பதிலிறுத்த,
“அடடே! உன் பேரு பாப்பாவா?” என்று கேட்டவளுக்கு சிரிப்பு வந்தது.
இடம் கருதி கட்டுப்படுத்திக் கொண்டவள் யதுநந்தனின் மெல்லிய சிரிப்பு சத்தம் செவியைத் தீண்டியதும் சடுதியில் தலை தூக்கிப் பார்த்தாள்.
சிரிப்பில் விரிந்த உதடுகளுடன் அலைபேசி தொடு திரையில் தட்டிக் கொண்டிருந்தவன், “அவ பேரு யுவனி!” என அவளின் கேள்விக்கு தானே விடை புகன்றான்.
“யுவனி..” என்று அழைத்தபடி மீண்டும் சிறியவளிடம் கொஞ்சப் போனவளின் கவனத்தை, நேரம் கடந்து கொண்டிருப்பதை உணர்ந்து, “மிஸ் சம்யுக்தா..” என்ற விளிப்பில் தன்னிடம் நிலைக்க விட்டவன்,
“பேசலாமா?” என்று கேட்டான், மணிக்கட்டைத் திருப்பி நேரத்தைப் பார்த்தபடி.
அவளின் அமைதியை சம்மதமாகக் கொண்டு, “தரகர் உங்க கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லி இருப்பாங்க. என்னோட இந்த ரீமேரேஜ் யுவனிக்காக மட்டு..” என்றவன் தொடர முன்பே,
“இல்லல்ல! அவரு எங்ககிட்ட எதையும் சொல்லல சார்.” என அவசரமாக இடைபுகுந்தவளின் நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பின.
அநாகரிகமாக இடையிட்டுப் பேசி விட்டேனே என சங்கடத்தில் நெளிந்தவள், “அ.. அது.. அவரு உங்களைப் பத்தி எதுவும் சொல்லல சார். உங்களைப் பார்க்குறது கூட, இதோ இப்ப தான்..” என்றாள் தயக்கம் பாதி, பதற்றம் மீதியாய்!
யதுநந்தனின் புருவங்கள் ஒரே சமநிலையில் மெல்ல ஏறி இறங்கின.
“வெயிட், வாட் டூ யூ மீன்?”
“ஆ.. ஆமா சார்! உங்களுக்கு இது மறுமணம்னு எங்ககிட்ட தரகர் சொல்லல..” என்றாள் யுக்தா, அன்னையின் முகத்தில் தெரிந்த தெளிவை நினைவுபடுத்தியபடி.
சாவித்திரி எதையும் தன்னிடம் மறைக்கவில்லை. தரகர் தான் பாதியை முழுங்கி விட்டு, மீதியை மட்டும் சொல்லி வைத்திருக்கிறார் என உறுதியாக நம்ப முடிந்தது அவளால்.
‘தரகர் நம்ம கனிகா புருஷன்டி. பொய்யெல்லாம் சொல்லி ஏமாத்திட மாட்டாங்க..’ என குரலில் நம்பிக்கை தொனிக்கக் கூறிய அன்னையின் முகம் மனக்கண் முன் தோன்றியதும், விரக்தியில் சுழிந்தது அவளின் இதழ்கள்.
சுயநலம் சூழ்ந்த இவ்வுலகில், ஈன்றவளை அன்றி வேறாரையும் நம்பும் மனநிலையில் அவளில்லை.
கை கொடுக்க யாருமில்லை எனத் தெரிந்தும், தூர நின்று எள்ளி நகையாடும் குடும்பத்தினரைப் பார்த்துப் பார்த்தே ‘உறவுகள்’ என்ற வார்த்தையைக் காது கொடுத்துக் கேட்கவே மனம் கசந்தது அவளுக்கு.
இந்தப் பாரிய சுமையைத் தூக்குவதற்கு அவளிடம் இருக்கும் நம்பிக்கைகளில் ஒன்று, தன்னம்பிக்கை. மற்றொன்று சோர்ந்து விழும் போதெல்லாம் தோள் தொட்டு தூக்கி விட விழையும் அன்னை சாவித்திரியின் அன்பு.
“ஆர் யூ ஓகே?” என்று கேட்டான் ஆடவன், கூர்விழிகளால் அவளை ஆராய்ந்தபடி.
ஆமெனும் விதமாகத் லேசாகத் தலை அசைத்தவள், “ஆக்சுவலி தரகர் எதுவுமே எங்ககிட்ட சொல்லல. பொறுமையா சொல்லிக்கலாம்னு நினைச்சிருப்பாங்களோ என்னவோ..” என்று நிறுத்தி, சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தாள்.
“அன்னைக்கு நான் ஏதோ யுவனி மம்மினு கூப்பிட்டதும் அம்மாவைத் தேடறதா நினைச்சுட்டேன் சார்..”
பெருமூச்சுடன், “அவ அம்மா ஈஸ் நோ மோர்!” என நந்தன் கூறியதும், தன் மனதில் எழுந்த கேள்விக்கான பதில் கிட்டியதில் யுக்தாவிடமிருந்து பெருமூச்சொன்று கிளம்பியது.
ஆர்டர் செய்திருந்த ‘கேப்பஸினோ’ மேஜைக்கு வந்து விட, ஒன்றை அவள் புறமாகத் தள்ளி வைத்தவன் மற்றொன்றை சுவைத்தபடியே,
“உண்மையை சொல்லனும்னா ரீமேரேஜ்க்கான ஐடியாஸ் எதுவுமே எனக்கு இல்ல. எல்லாம் பாப்பாவுக்காக மட்டுந்தான்! அவ என்னைக்கும், எதுக்காகவும் ஏங்கி போய்ட கூடாதுனு மனசு ஆசைப்படுது..” என்றான்.
சிறு வயதில் தாயை இழந்த பிறகு அவன் தாயன்புக்காக ஏங்கிய தருணங்கள் நினைவலைகளில் மோதிச் சென்று, அவனை நிம்மதி இழக்கச் செய்தன.
கிருஷ்ணமூர்த்தி அவனுக்கு அன்னையாக, தந்தையாக, யாதுமாக இருந்து எந்தவொரு குறையும் தெரியாதபடி வளர்த்தாலும், அடிக்கடி அடிமனதின் ஏக்கம் வெளிப்பட்டு அவனை ஏக்கக்குழியில் தள்ளாமல் இல்லை.
அதுவுமின்றி யுவனி பெண் குழந்தை அல்லவா? அவர்கள் வளர வளர தாயின் அருகாமைக்கு ஏங்கத் தான் செய்வார்கள் என்று மூர்த்தி அடிக்கடி சொல்லிச் செல்வது ஒரு புறமிருக்க, கீர்த்தனா வேறு தினந்தோறும் தவறாமல் தன் பங்கிற்கு பஜனை பாடுவது அவனை யோசனைப் பாதாளத்தில் தள்ளும்.
அப்படி இருக்கையில் பூந்தோட்ட வளாகத்தில் தாயன்பை சித்தரிக்கும் கண் கொள்ளாக் காட்சிகளை மூர்த்தி கை நீட்டிக் காட்டி மனதின் அடி ஆழத்தில் புதைந்து போயிருந்த தவிப்பை தோண்டி எடுத்ததோடு,
‘உன்னால இந்த நாட்களை யுவனிக்கு கொடுக்க முடியுமா நந்தா?’ என்ற கேள்வியின் மூலம் அவனை ஆழ்ந்த சிந்தனைக்கு ஆளாக்கி விட்டிருந்தார்.
இன்று வரைக்கும் வறண்டு போகாத ஜீவநதியாய் மனதில் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும் தவிப்பும், தாயன்புக்கான ஏக்கமும் யுவனியையும் வாட்ட வேண்டுமா என அவன் பதறிப் போனதன் விளைவு, அவனை இந்த முடிவெடுக்கத் தூண்டியது எனலாம்.
தன் உதிரத்தில் உதித்தவளை ஒரு கையால் சுற்றி வளைத்தபடி மற்றொரு கையால் கேப்பஸினோவை கரண்டியால் அள்ளி அவளுக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தவளை உற்றுப் பார்த்தான் ஆடவன்.
‘பிடிக்கலையா.. சரிதான், போயிட்டே இரு.’ என பவித்ராவை நிராகரித்து அலட்சியப் போக்கில் போக விட்டது போல், தாயன்புடன் யுவனியை அரவணைத்துக் கொண்டவளை விட்டுக் கொடுக்க மனம் ஒப்பவில்லை அவனுக்கு.
யுக்தாவின் செயற்கை வண்ணம் தீட்டப்படாத அன்பு யுவனிக்கு என்றுமே கிடைத்தால் என்ன என்ற பேராசை பூதாகரமாய் நெஞ்சில் வேரூன்ற, “தரகரோட மறதிக்கு வருந்துறேன். நானாவது உங்ககிட்ட ஒருவாட்டி ஃபோன்ல சொல்லி இருக்கலாம்..” எனச் சொல்லி விட்டு அவளிடமிருந்து விடைபெற நின்றவன், மாறாக,
“நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று கேட்டு வைத்தான்.
மூர்த்தி அவளைப் பற்றி தேடியறிந்து அவனிடம் பகிர்ந்து கொண்ட விடயங்களில் யாவுமே திருப்திகரமாகத் தான் இருந்தது. அவளது தியாக உணர்வும், மன தைரியமும் அவனைப் பெருமளவில் ஈர்த்தன.
யுவனிக்கு அன்னை என்றால் அது இவளாகவே இருக்கட்டும் என முடிவு செய்து கொண்டவன், “எதைப் பத்தி?” என படபடக்கும் இமைகளோடு கேட்டவளிடம்,
“இந்த மேரேஜ் பத்தி! உங்களுக்கு எல்லாம் தெரியும்னு நினைச்சேன்..” என்றான்.
சிந்தனை ரேகைகளை முகத்தில் படர விட்டு, யோசனையெனும் அதல பாதாளத்தில் தொப்புக்கடீரென குதித்தவள், தன்னை மீட்டெடுத்து இயல்புக்கு மீளவே வெகு நேரமானது.
சாந்தனாவின் திருமணத்தை மனதில் இருத்தியவளுக்கு தன் வாழ்வுக்கு என்றும் யுவனி போல் ஒரு பிடித்தம் இருப்பின் நன்றாக இருக்குமே என்ற யோசனை தலை தூக்கியது.
எப்படியும் இதை மறுத்து விட்டால், சீதனம், வரதட்சணை என அலைகழித்து இன்னும் பல ஆண்டுகள் கூட கடக்கலாம். பிறகு சாந்தனாவின் திருமணமும் அல்லவா தாமதமாகும்? தன் சுயநலத்துக்காக அவளின் வாழ்வில் விளையாடுவதா என்ற எண்ணம் வேறு அவளை வதைக்க, இமைக்குடைகள் தூக்கினாள் பாவை.
தன் கையிலிருந்த எச்சில் ஒழுகிய லாலிபாப்பை நீட்டி, “மம்மிஈ.. லாலி!” என்றாள் சிறியவள்.
அவளின் கூந்தலை வருடிக் கொடுத்தபடி யதுநந்தனை ஏறிட்டவள், “எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. ஆனா என்கிட்டே சில கண்டிஷன்ஸ் இருக்கு சார்!” என மெல்ல ஆரம்பித்து வைத்தாள்.
‘என்ன’ என்பது போல் கண்களை சுருக்கி அவளை நோக்கினான் யதுநந்தன்.
“அப்பா சின்ன வயசுலயே இறந்துட்டாரு. அம்மாவுக்கு பக்கவாதம் வந்து கட்டிலோட தான் பலவருஷமா அவங்க வாழ்க்கை கழியுது சார். எனக்கு ரெண்டு தங்கச்சிங்க.
அவங்களுக்கும், அம்மாவுக்கும் என்னைத் தவிர வேற யாரும் துணைக்கு இல்ல. என்னைக்கும் நான் அவங்களுக்கு கொடுக்குறதை தடுக்க கூடாது. அடுத்து.. அடுத்து நான் என்னைக்கும் போல வேலைக்கு போய் வருவேன். இதுல ஏதும் ஆட்சேபணை இருக்கா சார்?” என தயக்கம் துறந்து, குடும்பத்தினரின் நலம் கருதி கேள்வி தொடுத்தாள் யுக்தா.
“நீங்க எதைப் பத்தியும் கவலைப்பட அவசியமில்லை. உங்களோட எந்த சுதந்திரமும் மறுக்கபடாது. உங்க தங்கச்சிங்க பொறுப்புல எனக்கும் பங்கிருக்கு. அம்மாவைப் பத்தி மண்டைய பிச்சிக்கிட்டு யோசிக்க வேண்டிய தேவை கூட உங்களுக்கு இல்ல. டிரஸ்ட் மீ!” என சில நொடிகளுக்குப் பிறகு பதிலம்பு புறப்பட்டது அவனிடமிருந்து.
எதையோ கண்டு கொண்ட திருப்தியில் பெதும்பையின் இதழ்களில் புன்னகை நெளிந்தது.
மனதில் ஒரு நிம்மதி வியாபிக்க, பெருமூச்செறிந்தவள், “தேங்க்ஸ்!” என்கவும்,
“யுவனிக்காக மட்டுந்தான்..” என அவன் முந்திக் கொண்டு பேசவும் சரியாக இருக்க, சட்டென்று நகைத்தவள், சற்றும் சிந்தியாமல்,
“ம்ம்..” என்றாள் முனகலாய்.
வீட்டில் என்னென்ன எதிர்ப்புகள் எழுமோ.. அன்னை என்ன சொல்வாரோ என்ற சிந்தனையில் மூழ்கிப் போனவளை, “மம்மிஈ!” என்ற அழைப்பு நிகழுக்கு அழைத்தது.
சட்டென திடுக்கிட்டு நிமிர்ந்தவளுக்கு, காப்பி தட்டை நீட்டிய கையோடு இத்தனை நேரம் தான் அன்றைய நாளின் நினைவில் தன்னிலை மறந்து நின்றிருப்பது தெரிய, மானசீகமாக தலையில் கை வைத்துக் கொண்டவள், “வா..” என சிறியவளை நோக்கி கை நீட்டினாள்.
அதற்குள் கூடி இருந்தவர்கள் மெல்லிய குரலில் கிசுகிசுக்கத் தொடங்கியிருக்க, சாவித்திரிக்கு தவிப்பில் நெஞ்சம் விம்மித் தணிந்தது.
யுவனியை தூக்கியபடி அன்னையின் அருகே வந்து நின்றவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “அம்மா.. எனக்கு புடிச்சிருக்கும்மா. ப்ளீஸ் மறுக்காதீங்களேன்!” என காற்றாகிப் போன குரலில் முணுமுணுக்க, அதற்குள்,
“இதெல்லாம் என்ன யுக்தா.. உனக்கென்ன அவ்ளோ வயசாச்சு? ரெண்டாந்தாரமா போற அளவுக்கு உன்னோட பொறுமை எல்லை மீறிடுச்சா என்ன..” என தேள் கொடுக்காய் கொட்டினார், சாவித்திரியின் ஒன்றுவிட்ட அக்காள் ஒருத்தி.
அவளைப் பார்வையாலே அடக்கிய யுக்தா, “இந்த விஷயத்தை எங்க கிட்ட விட்டுடுங்க பெரியம்மா. இவ்ளோ நாள் தனியாவே குடும்பத்தைக் காப்பாத்தி இவ்ளோ தூரம் வரத் தெரிஞ்ச எனக்கு, இந்த விஷயத்திலும் சுயமா முடிவெடுக்க உரிமை இருக்கு..” என அதிரடியாய் பதிலடி கொடுக்க, பேசிய வாயில் பெரிய பூட்டு தொங்கிற்று!
மூடிய வாய் திறக்கவில்லை, பெரியம்மாக்காரி.
நெஞ்சில் சுகமாக சாய்ந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த யுவனியின் தலை வருடியபடி, சாவித்திரியை ஏறிட்டுப் பார்த்தாள் சம்யுக்தா. கண்களில் இறைஞ்சல்! முகத்தில் அப்பட்டமான அப்பாவிப் பாவனை!
தாயிடமிருந்து கிடைத்த நீண்ட மௌனத்தில், தன் கெஞ்சலுக்கான பதில் ஒழிந்திருப்பதைப் புரிந்து கொண்டவள் முகம் விகசிக்க, நந்தனைத் திரும்பிப் பார்த்தாள்.
“என்னதிது? பொண்ணு வீட்டுல உனக்கு இது மறுமணம்னு சொல்ல சொல்லிருந்தேனே தரகர் கிட்ட? ஏன் புதுசா விஷயம் தெரியிறது போல இப்படி நடந்துக்குறாங்க..” என பொங்கிய மூர்த்தியை அமைதிப்படுத்திக் கொண்டிருந்த நந்தன், பாவையின் விழிப் பார்வை தன்னில் பதிவதைக் கண்டு,
“ஏதும் பிரச்சனையா என்ன?” என்று கேட்டாள், எதுவும் அறியாத பாவனையில்.
அதற்கு மேலும் என்ன.. சட்டென சத்தமடங்கிப் போனவர்களைப் பார்த்து திருப்திப்பட்டுக் கொண்டவள் யுவனியை மீண்டும் கீர்த்தனாவிடம் கொடுக்கப் போக,
“மம்மிஈ..” என்ற வீறிடலுடன் யுக்தாவின் நெஞ்சோடு ஒன்றினாள் யுவனி.
சிரிப்புடன் மூர்த்தியின் காலருகே குனிந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டவள், தன்னையே வெறிக்க வெறிக்கப் பார்த்திருந்த தாயை ஒருமுறை பார்த்து விட்டு உள்ளே செல்ல, மூர்த்திக்கு பரம திருப்தி!
சற்றுமுன் ஆழியாய் கொந்தளித்துக் கொண்டிருந்த மனம், யதுநந்தனின் மறைமுக விருப்பிலும், யுக்தா நடந்து கொண்ட முறையிலும் அமைதியடைந்து களிப்பில் ஆரவாரித்தது.
எல்லாம் நல்லபடியாக முடிந்து, எண்ணி இன்னு
ம் ஒன்றரை மாதத்தில் திருமணம் என முடிவாயிற்று!
வெளியேற முன் சிறு தலை அசைப்பைப் பரிசாகக் கொடுத்து விட்டு நகர்ந்தவனின் நிர்மலமான முகத்திலிருந்த ஏதோவொன்று வஞ்சியின் கன்னி மனதை குறுகுறுக்கச் செய்தது.