நாணலே நாணமேனடி – 13

5
(4)

சம்யுக்தா தயங்கியது போல் எதுவும் நடக்கவில்லை.

 

காருண்யராஜ் ‘டிஸ்கவுண்ட்’ மூலமாக, வாங்கிய பட்டுச்சேலை மற்றும் பிறவற்றின் பெறுமானத்தைக் கொஞ்சமாகக் குறைத்து நந்தன் முன்னிலையில் அவளது தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படாவண்ணம் தான் நடந்து கொண்டார்.

போகிற போக்கில், ‘நாளைக்கு ஸ்டோர் வந்ததும் என்னை வந்து பாரும்மா, சம்யுக்தா!’ என சாடைமாடையாகப் பேசி கண்காட்டி விட்டுச் செல்ல,

‘நான் உங்களை வந்து பார்க்கலேன்னாலும் வழமையான அர்ச்சனை என்னைத் தேடி வராதா சாரே?’ என்ற நினைப்பில் சிரிப்பு பீரிட்டது சம்யுக்தாவுக்கு.

‘நீ முன்னாடி போ! நான் வந்திடறேன்’ என்றுவிட்டுச் சென்ற வித்யாவைக் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணாமல் போகவே, நந்தனின் அழைப்பின் பேரில் இருவரும் கலேக்ஸி ஸ்டோருக்கு முன்னால் பல்லிளித்துக் கொண்டிருக்கும் ‘கூலிங் ஸ்பாட்’டுக்குச் சென்றனர்.

எத்தனையோ தடவைகள் தன் மன ஆதங்கத்தைத் தணிக்க அவனிடம் பேச வேண்டுமென கடையில் இருக்கும் போதே முயன்றாலும், அதற்கான சந்தர்ப்பங்கள் கிட்டாமல் போனது.

ஸ்ட்ராவ்பெர்ரி பிளேவர் ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்து விட்டு இருக்கையில் தொய்வாக அமர்ந்தவனை, மார்புக்குக் குறுக்காக கைகளைக் கட்டியபடி ஏறிட்டவளின் இதழ்களில் புன்னகை விரிந்திருந்தது.

இழுத்து போட்டுக் கொண்டு தனக்கு ஏற்றதான பட்டை தேடிக் கொண்டிருக்கும் போது அவனாகவே முன்வந்து கரம் கொடுத்த நினைவில் மனம் குளிர்ந்தது, சம்யுக்தாவுக்கு.

அன்று நந்தன் பல்லவியைப் பற்றி பேசிய போது, ‘இதையெல்லாம் இனி சகிச்சு தான் ஆகணும்ல? ஆனா என்னால முடியுமா’ என்று கனமேறிய மனம், இப்பொழுது நந்தன் இயல்பு மாறாமல் தன்னுடன் பழகத் தொடங்கி இருப்பதைக் கண்டு சற்று இளகியது.

அவன் தேர்ந்தெடுத்த சந்தன நிற பட்டுச் சேலை பார்த்த பார்வைக்கே பிடித்துப் போன மாயம் தான் என்னவோ என்ற சிந்தனையூடே மேஜைக்கு வந்துவிட்ட ஐஸ்க்ரீமை சுவைக்கச் தொடங்கியவள்,

“அது வந்து..” என்று இழுவையாய் நிறுத்த, நந்தன் சிரித்தான்.

“ஏதோ முக்கியமா பேசணும்னு சொன்னியே சம்மு? அதை பேசுறதுக்கான நேரங்காலம் இன்னுமேவா கூடி வரல?”

“இல்ல, அது வந்து!”

“ப்ச்! என்ன தயக்கம் உனக்கு? எதுனாலும் நீ என்கிட்ட ஷேர் பண்ணிக்கலாம்னு சொல்லிருக்கேனே!” என சலித்து, அவளுக்கு தானே பேசுவதற்கான இலகுத்தன்மையை உருவாக்கிக் கொடுத்தான்.

“அது வந்து என்னன்னா, கலியாணத்துக்கு அப்பறம் நான் எங்க தங்கிக்க? நோ, ஐ மீன் நான்.. நான் உங்க வீட்டுக்கு வந்தாகணுமா..”

வாயினுள் நாவை சுழற்றிய நந்தன், “நீ என்ன கேட்க வரேன்னு சத்தியமா புரியல. கலியாணம் முடிஞ்சதும் என் கூட வந்து தான் ஆகணுமானு கேட்குறீயா சம்மு?” என்று புரியாத பாவனையில் கேட்க,

“ம்ம்..” என்றவளைத் தயக்கம் கொன்று தின்றது.

‘இந்த கேள்வி எவ்விதத்தில் நியாயம்?’ என்று மண்டையில் குட்டிய மனசாட்சியை தூர விரட்டியவள் தொண்டைக் குழி ஏற இறங்க அவனை ஏறிட்டாள்.

“இது என்ன கேள்வி?” என வாய் விட்டுச் சிரித்தவன், “ஏன் இதுல உனக்கேதும் ப்ரோப்லேம் இருக்கா சம்மு? எதையாவது சொல்ல விரும்புறியா என்ன..” என்று மென்குரலில் கேட்டான்.

“எப்படி சொல்லுறது.. எங்க வீட்டுல நான் இல்லைனா எதுவும் அசையாது. சின்ன தங்கச்சிக்கு இன்னுமே ஸ்கூல் போற வயசு. அம்மா ஸ்ட்ரோக்ல கட்டிலோட காலத்தைக் கழிக்கிறாங்க.

நான்தான் காலைல எழுந்து அவங்களுக்கு தேவையான வேலைகளை எல்லாம் செய்து கொடுப்பேன். அப்பறம் தான் ஸ்டோருக்கு வருவேன். இவ்ளோ நாள் நானே எல்லாம் செய்து கொடுத்த பிறகு, திடீர்னு வீட்டுல நான் இல்லாம போயிட்டா!!

எ.. எனக்கு புரியல. ஒரே யோசனையா இருக்குங்க..” என திக்கித் திணறி ஒருவாறு புலம்பி முடித்தவளுக்கு, நெறிந்த புருவங்களை நீவி விட்டுக் கொண்டிருந்தவனின் முகபாவனையை வைத்து, அவன் என்ன நினைக்கிறான் என்பதை ஊகிக்க முடியவில்லை.

அவ்வளவு நேரமும் தாகத்துக்கு இதமாய் தொண்டைக் குழிக்குள் வழுக்கிய இனிப்பான ஐஸ்க்ரீம் வேறு, இப்போது கசப்பதாய் தோன்றியது சம்யுக்தாவுக்கு.

ஒன்று, ‘இதை இப்போதான் சொல்ல தோணுச்சா?’ என கோபப்படுவான். இல்லையெனில், ‘பார்த்துக் கொள்கிறேன்’ என ஆறுதல் வார்த்தைகளை செப்புவானென எதிர்பார்த்தவளுக்கு, அவனின் அமைதி ஒருவித படபடப்பைக் கொடுத்தது.

மணிக்கட்டைத் திருப்பி நேரத்தைப் பார்த்தவன், “நேரமாகுது, வா போகலாம்!” என்று கூறிக் கொண்டு எழுந்து, ஐஸ்க்ரீமுக்கான பணத்தை செலுத்தி விட்டு வெளியேற,

‘என்ன இவர், எதுவுமே சொல்லாம போறாரு?’ என மண்டையைப் பீய்த்துக் கொள்ளாத குறையாக அவனைப் பின் தொடர்ந்தாள் சம்யுக்தா.

இருவரும் காரை நெருங்கும் போது, ஷ்யாமிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு அவர்களோடு வந்து இணைந்து கொண்டாள், வித்யா.

கண்ணாடி வழியாக வெளியே வெறிப்பதுவும், வித்யாவின் மூச்சுவிடாத பேச்சுக்கு ‘ம்ம்..’ கொட்டியபடி ஸ்டீயரிங் வீலை லாவகமாக கையாண்டு கொண்டிருந்தவனை யுக்தா ஏறிட்டுப் பார்ப்பதுமாய் நிமிடங்கள் கரைந்தது.

கார் வீட்டுக்கு முன் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.

இரு தோழிகளோடு சேர்ந்து தானும் இறங்கிக் கொண்டவன்,

“உள்ள வாங்க அண்ணா!” என்று வரவேற்ற வித்யாவைப் பார்த்து தலையசைத்து விட்டு, “பைக் டிரைவ் எல்லாம் எப்படி இருந்துச்சு சிஸ்டர்? உங்க லவர் என்ன சொல்லுறாரு.. எப்போ கலியாணம்?” என்று கேள்விகளை அடுக்க,

“அச்சோ!” என வெட்கத்துடன் தன்னிரு கைகளுக்குள் முகம் புதைத்துக் கொண்டாள், வித்யா.

சம்யுக்தாவின் முகத்தில் சிரிப்பு எட்டிப் பார்த்தது.

அவன் தன்னை சார்ந்தவர்களில், தன் ஒருத்தியைத் தவிர சற்று சகஜமாக உரையாடுவது வித்யாவிடம் மாத்திரம் தான் என்பதை அவளுமே அறிந்து தான் வைத்திருந்தாள்.

‘போக போக சரியாகிடும்’ என நினைத்துப் பெருமூச்சு விட்டவள் வித்யாவைப் பார்த்து கீழிதழை மடித்து நகைத்தாள்.

“அவர் பல வருஷமா ஃபாரின்ல இருந்தாரு அண்ணா. நேத்து நைட்டு இங்க வந்திருக்காருனு காலைல தான் எனக்கு தெரியும். அதுவும் உங்க ரெண்டு பேரோட ஸ்டோர் வரைக்கும் வந்ததுக்கு அப்பறம்! எனக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் தர நினைச்சிருக்காருனா பாருங்களேன்!” என்ற வித்யா,

“யுக்தாவோட கலியாணம் நல்லபடியா முடிஞ்ச பிறகு வீட்டுல வந்து பேசுங்கனு சொல்லிட்டேன்..” என்றாள், வெட்கத்தில் செக்கச் செவேரென சிவந்த கன்னங்களுடன்.

‘அடடா! இவளுக்கு வெட்கப்படக் கூடத் தெரிகிறதே’ எனத் தோழியின் மலர்ந்த முகத்தைப் பார்த்து வியந்து நின்றிருந்த யுக்தாவின் பார்வை,

“வாவ்! கங்கிராட்ஸ்.” என மனமுவந்து வாழ்த்தியவனின் மீது தவிப்புடன் பதிந்தது.

“தேங்க்ஸ் அண்ணா! என் கலியாணத்தை நீங்களும், யுக்தாவும் தான் முன்னின்னு நடாத்தி வைக்கணும். எதுக்கும் உதவும்னு இப்போவே சொல்லி வைச்சிட்டேன்..” எனக் கண் சிமிட்டிக் கூறியவள்,

“பேசிட்டு வா யுக்தா!” என இருவருக்கும் தனிமை தரும் பொருட்டு அங்கிருந்து நகர்ந்து விட, கண்களில் தேங்கிய தவிப்புடன் அவனை நோக்கினாள், பாவை.

“நீ எதைப் பத்தியும் யோசிச்சி ஸ்ட்ரெஸ் ஆக வேண்டிய அவசியமில்லை. நான் பார்த்துக்கறேன். கலியாணம் வரைக்கும் நீ உனக்கு பிரண்ட் கூட பேசியாவது அட்ஜஸ்ட் பண்ணிக்க பாரு சம்மு..” என்றவன் தெளிவு பிறந்த அவளின் முகத்தைப் பார்த்துவிட்டு,

“நான் பார்த்துக்கிறேன்..” என்று கூறி கண்களை மூடித் திறக்க,

“ரொம்ப தேங்க்ஸ்.” என்றாள், பெருமூச்சுடன்.

“ச்சில்!” என அவளின் கன்னம் தட்டியவன் காருக்குள் இருந்த பைகளைத் தன் கையில் எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடக்க, அந்த மென் ஸ்பரிசம் தந்த குறுகுறுப்புடன் அவனின் பின்னோடு சென்றாள், சம்யுக்தா.

பார்வதி ஓடி வந்து வாசலிலே வரவேற்றார்.

சிறு தலை அசைப்புடன் வீட்டினுள் நுழைந்தவன் கையிலிருந்த பைகளை வித்யாவிடம் கொடுத்து விட்டு இருக்கையில் அமர,

“பேபி வரலியா மாமா?” என்று வினவியபடி கையிலிருந்த புத்தகத்தை மூடி வைத்தாள் சத்யா.

அவன் பதில் கூற வாயெடுப்பதற்குள், “ச்சு! பெரிய மனுஷி மாதிரி பேசாம ஓடிப் போய்டு சத்யா..” எனக் கூறி அவளை விரட்டி விட்ட வித்யா, “எடுத்துக்கோங்க அண்ணா..” என தேநீர் தட்டை நீட்டினாள்.

பார்வதியிடம் எதையோ வெகு தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தவளை நிமிர்ந்து பார்த்தான், யதுநந்தன்.

பேசும் போது காற்றில் அங்குமிங்கும் நர்த்தனமாடும் அவளின் வெண்டை விரல்கள், அடிக்கடி நெற்றியின் உச்சி வகுட்டிலிருந்து வழிந்து முகத்தில் விழுந்த கூந்தல் கற்றைகளை காதோரம் ஒதுக்கி விடும் அழகை ரசித்தது அவன் மனம்.

ஆடவனின் பார்வை தன்மீது பதிந்ததை உணர்ந்து, இமை தூக்கி என்னவென்று விழி பாஷையால் வினவினாள் யுக்தா.

நீட்டப்பட்டிருந்த தட்டைக் கண் காட்டியவன் வயிற்றைத் தடவி ‘இடமில்லை’ என்பதாய் உதடு பிதுக்க, ‘தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை..’ என விரிந்த சிரிப்போடு கை விரித்தாள்.

கடைக் கண்ணால் அவளை முறைத்தவன் சமாளிப்பாகத் தலை அசைத்து, நன்றி கூறிவிட்டு தேநீரை வாங்கிக் கொண்டான்.

இப்படியே நேரங்கள் கழிந்து, நாட்கள் ஓடின!

நந்தனின் யோசனைப்படி திருமணம் முடிந்து தான் அங்கு சென்றுவிட்டால், தாய்க்கு துணையாக சில நாட்கள் இருந்து கொள்ளுமாறு வித்யாவிடம் வேண்டுகோள் வைத்தாள் சம்யுக்தா.

அவளும் மறுத்துரைக்காமல் சரியென்று சொல்லிவிட்ட பிறகு தான் சற்றே நிம்மதி பிறந்தது மணப் பெண்ணுக்கு.

திருமண வேலைகளில் வீடே பரபரப்பாக இருக்க, அவை எதிலும் கவனம் செலுத்தாமல் அன்று வியர்க்க விறுவிறுக்க யுக்தாவைத் தேடி வந்திருந்தாள் சாந்தனா.

அப்போது தான் சொந்தத்தில் ஒரு அக்கா கைகளில் மருதாணி பூசிவிட்டுச் சென்றிருக்க, கரத்தை நாலாபுறமும் திருப்பித் திருப்பி அழகு பார்த்துக் கொண்டிருந்தவள், திடீரென கண் முன் பிரசன்னமாகியவளை என்னவென்பது போல் ஏறிட்டுப் பார்த்தாள்.

“உன்கிட்ட பேசணும், யுக்தா..”

“என்னாச்சு சந்தா.. ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என அக்கறையுடன் வெளிப்பட்டது, அக்காளின் குரல்.

“பிரச்சனை தான் யுக்தா! உன்கிட்ட பேசுனா பாதி வேலை முடிஞ்சுது பெருசா பில்டப் விட்டு தான் அவினாஷை உன்கிட்ட பேச வைச்சேன். ஆனா நீ கொஞ்சமும் கண்டுக்காம இருக்குறது அவனை டென்ஷனாக்குது.”

“அதுக்கு..”

“எப்போ எங்க வீட்டுல வந்து பேசனு கேட்டுட்டே இருக்கான், யுக்தா. நீ எப்போ அம்மாகிட்ட இதைப் பத்தி பேசுவ?”

உதடு குவித்து, வெளியேற்றும் காற்றை கையில் ஊதிக் கொண்டிருந்தவள், “டீலை டீலில் விட்டுட்டியே, சந்தா..” எனக் கேலி செய்ய,

“ப்ச்! விளையாடாதடி..” என முகம் கருக்க, வெளிப்படையாகவே சலித்துக் கொண்டாள் சாந்தனா.

“என்னது! விளையாடறேனா? நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன் சந்தா. அன்னைக்கு அவ்ளோ அழுத்தமா சொல்லியும் நீ ஒரு இன்டெர்வியூவுக்காவது போய் வந்தியா என்ன..”

“வீட்டுல கலியாண ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்குறப்போ நான் எப்படி..”

“சும்மா காரணம் சொல்லாத சந்தா! அங்க இருந்த பத்திரத்தைத் தூக்கி நீ இங்க வைச்சதை கூட நான் பார்க்கல. ஃபோனும் கையுமா தானே சுத்திட்டு இருக்க? இவ்ளோ பேசுறவ போய் இன்டெர்வியூ அட்டென்ட் பண்ணிட்டு வரதுக்கு என்ன..”

“யுக்தா!” என ஏதோ பேச வந்தவளைக் கரம் நீட்டித் தடுத்தவள்,

“நீ எதுவும் சொல்ல தேவையில்லை. அம்மாவுக்கு உடம்பு முடியாம போனதும், உங்க ரெண்டு பேருக்கு என்னைத் தவிர வேற யாருமில்லையேங்குற எண்ணத்துல நானே எல்லாத்தையும் செய்து கொடுத்து, உன்னைக் ரொம்ப கெடுத்துட்டேன்.

நேத்து அம்மாகிட்ட பேசிட்டு இருக்குறப்போ, நீ பொறுப்பில்லாம சுத்திட்டு இருக்குறதை நினைச்சி ரொம்ப வருத்தப்பட்டாங்க. சத்யாவுக்கு இருக்குற பக்குவம் கூட உனக்கு இல்லனு அம்மா சொல்லும் போது, உன்னோட கலியாண விஷயத்தைப் பத்தி நான் எப்படி பேசுவேன்?

வீட்டுல இருபத்திமூனு வயசுல ஒரு பொம்பள புள்ள இருக்கா.. இருந்தும், கலியாணம் பண்ணிக்கிட்டு எப்படி அவரோட போய் வாழுவேன்னு வீட்டை நினைச்சி என் நிம்மதியை தொலைச்சி நின்னுட்டு இருக்கேன்டி.

இதெல்லாம் எங்க உனக்கு புரிய போகுது?

வித்யா கிட்ட நான் கலியாணம் முடிஞ்சி புகுந்த வீட்டுக்கு போயிட்டா, கொஞ்ச நாளைக்கு வந்து வீட்டுல தங்கி அம்மாக்கு துணையா இருந்துக்குறியானு கேட்குறப்போ, வெட்கம் பிடுங்கித் தின்னுச்சு.

அப்போ தான், இன்னைக்கு இல்லைனாலும், இன்னொரு நாள் நீ கண்டிப்பா வீட்டு கஷ்டத்தைப் புரிஞ்சுக்குவங்குற குருட்டு நம்பிக்கைல உன்னை உன் பாட்டுல சுத்த விட்டது எவ்ளோ பெரிய தப்புனு புரிஞ்சுது!

அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்துட்டேன்மா. நீ பார்த்துக்குவங்குற நம்பிக்கைல வீட்டை விட்டு போக கூட தைரியம் இல்லாத அளவுக்கு வளர்த்திருக்கேன், பார்த்தியா?

நீ எதைப் பத்தியும் யோசிக்கல. வித்யாவும் உன்னைப் போல தானே? அவ ஓடியாடி வேலை செய்றா.. ஆனா நீ வீட்டுல ஒரு துரும்பைக் கூட அசைக்கல. யாரைப் பத்தியும், எதைப் பத்தியும் எந்தக் கவலையும் உனக்கில்ல.

நான் தலையைப் பிச்சிக்கிட்டு உட்கார்ந்து இருக்கேன் சந்தா!” என தன் மன ஆதங்கத்தை மூழு விடாமல் கொட்டித் தீர்த்தாள். இறுதி இரண்டு வரியில் அவளின் குரல், அவளது மனக் கலக்கத்தைப் பறைசாற்றும் விதமாய் கரகரத்தது.

“அவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு. அவளைப் நல்லபடியா பார்த்துக்க வேண்டிய பொறுப்பு இனிமே எனக்கானது. வேலைக்கு போய்க்கிட்டு இதையெல்லாம் கவனிச்சுக்க வேண்டியிருக்கேனு மண்டை காயுது சந்தா.

எதைப் பத்தியும் யோசிக்காம அவசரப்பட்டு கலியாணத்துக்கு சம்மதிச்சிட்டேனோனு நேத்து ராத்திரியில இருந்து ஆயிரமாவது தடவை நினைச்சிட்டேன், தெரியுமா?” என்றவள் நிம்மதியிழந்து வேக மூச்சுக்களை இழுத்து வெளியேற்றினாள்.

மனம் கனத்தது!

விடிந்தால் திருமணம் என்றிருக்கும் போது, எதை எதையோ யோசித்து கலங்கி கொண்டிருந்தவளுக்கு தோள் சாய ஓர் உறவு அருகில் இருந்தாளே போதும் என்ற ஏக்கத்தில் நெஞ்சம் விம்மியது.

சாந்தனா உறைந்து போய் தமக்கையைப் பார்த்திருந்தாள். அவள் அறிய, இன்று வரைக்கும் யுக்தா இந்தளவுக்கு வருந்தி தன் ஆதங்கத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தியதில்லை.

அவளின் கலங்கிச் சிவந்த விழிகளைப் பார்க்கும் போது மனதுக்குள் ஏதோ பிசைந்தது, சாந்தனாவுக்கு.

இருக்கையில் கண் மூடி சாய்ந்து கொண்டவளை சற்று நேரம் பார்த்திருந்தவள் வந்த வழியே அமைதியாக வெளியேறிவிட, யோசனையில் தன்னை மூழ்கடித்திருந்த யுக்தாவும் மெல்ல உறக்கத்தினுள் ஆழ்ந்தாள்.

மறுநாள், ஆதவனின் காரில் மணப் பட்டுடுத்தி மணமகள் வித்யா, சாந்தனா மற்றும் பார்வதியுடன் கோயிலில் வந்திறங்க, பின்னாலே ஒரு மினி பஸ் வந்து நிறுத்தப்பட்டது.

நெருங்கிய சொந்தங்களும், நன்கு பழக்கமான அக்கம் பக்கத்தினரும் மாத்திரமே  யுக்தா வீட்டு சார்பில் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் செலவில் ‘ஹயர்’ செய்யப்பட்டது தான், இந்த மினி பஸ்!

யதுநந்தன் வீட்டினரும் இரண்டு காருக்கு வந்திறங்கினர்.

வரவேற்பை பெரிதாக செய்ய திட்டமிட்டிருந்தபடியால், திருமணத்துக்கு அவ்வளவு பெரிதாக யாரையும் அழைக்கவில்லை என கிருஷ்ணமூர்த்தி யாரிடமோ சொல்லிக் கொண்டிருப்பது யுக்தாவின் செவியிலும் விழுந்தது.

தன் கையிலிருந்து நழுவி யுக்தாவிடம் ஓடிவிட பரபரத்த யுவனியை சமாளிப்பது, எல்லாவற்றையும் விட பெரிய வேலையாக இருந்தது ஆதவனுக்கு!

ஐயர் மந்திரம் ஓத, ஆசீர்வாதம் பெற்று தேங்காயின் மீது வீற்றிருந்த தாலிக் கொடியை கையில் ஏந்தியவனுக்கு கைகள் நடுங்கின.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு, நெஞ்சில் ஆயிரமாயிரம் எண்ணங்கள், ஆசைகளுடன் பல்லவியின் கழுத்தில் தாலி கட்டிய நினைவில் கண்கள் கலங்கத் துடிக்க, இமைகள் சிமிட்டி அதை உள்ளிழுத்துக் கொண்டவன்,

‘யுவனிக்காக’ என எண்ணிக் கொண்டு, அருகிலிருந்தவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு, அவளைத் தன்னில் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான்.

‘என் பொண்ணு வாழ்க்கை சிறக்கணும்..’ என்ற வேண்டுதலோடு சக்கர நாட்காலியில் அமர்ந்திருந்த சாவித்திரி, அட்சதை தூவி அவளை முழுமனதோடு ஆசீர்வதித்தார்.

‘எல்லாம் நலமாகட்டும்!’ என முழங்கியது, ஆழியாய் ஆர்ப்பரித்த சம்யுக்தாவின் மனம்!

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!