நாணலே நாணமேனடி – 16

5
(9)

அன்றிரவு வீட்டுக்கு வந்ததும் நந்தனைப் பிடித்துக் கொண்டாள் சம்யுக்தா.

“நீங்க எதுக்கு சந்தாவுக்கு மாமாவோட கம்பெனியை சஜஸ்ட் பண்ணீங்க?” என ஆரம்பித்தவளை கை நீட்டிப் பேச விடாமல் தடுத்தவன்,

“சொந்தத்துக்குள்ள அவ விரும்பும்படி வேலை பார்க்க கம்பெனிஸ் இருக்குறப்போ, சாந்தனா எதுக்கு வெளியே போய் தடுமாறி திரியனும்? என்கிட்ட பேசிட்டு இருக்கும் போது கம்பெனிஸ் பத்தி கேட்டா. நான் என்னவோ நார்மலா தான் சொன்னேன். அதுவுமில்லாம அது என் அப்பாவோடதுனு அவளுக்கு தெரியாது..” என்றான், அமைதியான குரலில்.

“எனக்கும் மாமாவோட கம்பெனி பத்தி அவகிட்ட சொல்லி இருக்கலாம் தான். பொறுப்பு வரணும்னா முதுகை வளைக்கணும். தேடி பெறணும். ஈஸியா கிடைச்சா எதுக்குமே பெறுமதி இருக்காது..” என்றவளைப் புரியாமல் பார்த்தவன்,

“இன்டெர்வியூ மூலமா தான் சாந்தனாவை செலக்ட் பண்ணி எடுத்தாங்க சம்மு. ரெண்டு நாளைக்கு முன்ன அவ அங்க போற நாள், நான் ஆதவனை வேறொரு வேலை விஷயமா வெளிய அனுப்பி இருந்தேன். ஏன்னா சாந்தனாவுக்கு ஆதவனைத் தெரியும். அதுனால!

மானேஜர் தான், அவளோட ஸ்டடி லெவல், டேலண்ட் பார்த்து அப்பாவுக்கு கால் பண்ணி பேசி, வேலைக்கு வர சொல்லிருந்தாரு.

நான் ரெகமண்ட் பண்ணி, வலுக்கட்டாயமா அவளை வேலைக்கு சேர்த்திக்க வைக்கல. முயற்சி எந்தளவு முக்கியம்னு எனக்கு தெரியாம இல்ல சம்மு. நீ இதை புரிஞ்சிக்கணும்.” என்றான், அவளுக்கு புரிய வைக்கும் நோக்கில்.

“ஆனா நீங்க என்கிட்ட இதைப் பத்தி ஒரு வார்த்தை சொல்லலையேங்க..”

புருவத்தை அழுத்தமாக நீவி விட்டவனின் கண்கள், உள்ளங்கைகளுக்குள் முகத்தைப் புதைத்தபடி அமர்ந்திருந்தவளை ஆழ்ந்து நோக்கின.

“உன்னைப் பார்த்த அப்பறம் பாப்பா ரொம்ப சந்தோசமா இருக்கா சம்மு. நீ அவளுக்காக அவ்ளோத்தையும் பார்த்து பார்த்து பண்ணுறப்போ, நான் உனக்கு இதை மட்டுமாவது செய்ய கூடாதானு யோசிச்சேன்..”

விலுக்கென்று தலை தூக்கிப் பார்த்தவளுக்கு, தான் உணருவது எந்த மாதிரியான உணர்வென்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத நிலை.

அவளது பார்வையை மிகக் கவனமாக தவிர்த்தவன், “இதுக்கு மேல சமைக்க நேரமில்ல. நான் போய் டின்னருக்கு வெளியால ஏதும் வாங்கிட்டு வர்றேன்..” என்றுவிட்டு வெளியேறி விட,

‘கடவுளே!’ என தலையில் கை வைத்துக் கொண்டவளுக்கு அதிகப்படியான யோசனையில் மண்டை காய்ந்தது.

மூர்த்தி விடயத்தைக் கூறிய மாத்திரத்தில், பதறிப் போய் மறுத்த தாயின் முகம் வேறு கண்முன் மின்னலாய் தோன்றி அவளை இம்சித்தது.

எவ்வளவோ சமாதானங்கள் சொல்லிப் பார்த்தும் ‘அசைவேனா?’ என தன் மறுப்பில் உறுதியாய் நின்றவரின் மனம் புரியாமல் இல்லை, சம்யுக்தாவுக்கு.

ஆனால் வேறு வழி? அவளுக்குமே உகந்த வழியென்று இதைத் தவிர வேறெந்த யோசனையும் பிடிபடவில்லை.

சிந்தனை! சிந்தனை! சிந்தனை! தலை வலித்தது. மனதை அது சென்ற இடத்திற்கண் கண்டபடி ஓடவிட்டு கண்களை இறுக மூடிக் கொண்டு கட்டிலில் சாய்ந்தவள், சற்று நேரத்தில் யதுநந்தன் வந்து தோள் தட்டி எழுப்பும் வரை அசையவில்லை.

“சம்மு, எழுந்திரு! சாப்பிட்டுட்டு தூங்கு..” என்றவனைக் கண்கள் சுருங்கப் பார்த்தபடி எழுந்து அமர்ந்தவள், கிளிப் நீங்கப் பெற்றதால் முகத்திலும் காற்றிலும் அசைந்தாடிய கூந்தலை அள்ளி கொண்டையிட்டாள்.

கைக் கடிகாரத்தைக் கழற்றி மேஜை மேல் வைத்தபடி நிமிர்ந்தவனின் பார்வை, உறக்கம் கலையாமல் கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தவள் மீது தேங்கியது.

கொண்டைக்குள் அடங்காமல் தப்பிக் கொண்ட ஓரிரு முடிக்கற்றைகள், மின்விசிறிக் காற்றின் தயவால் அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்க, அதைக் காதோரம் ஒதுக்கி விட்டபடி கண்களை கசக்கியவளின் தோற்றம், படு ரசனைக்குரியதாய் இருந்தது அவனுக்கு.

அவனும் ரசனை உடையவன் தான்! ஒரு காலத்தில் பல்லவிக்குப் பிடித்தமான முறையில் அறையை வடிவமைத்து அழகு பார்த்தவனின் கை வண்ணம் தான், வீட்டைச் சுற்றியிருந்த பசுமை பொங்கும் இரம்மியமான தோட்டமும்.

எதை செய்தாலும் அழகையும், நேர்த்தியையும் முன்னிறுத்திப் பார்ப்பதில் வல்லவன். இயற்கையில் லயித்துப் போகும், இயற்கை அன்னையின் பாரிய ரசிகன்.

அப்படிப்பட்டவன் கலைந்த ஓவியமாய் காட்சி தந்தவளை ரசிப்பதில் தவறில்லையே!

தொண்டையை செருமியபடி கட்டிலை விட்டு எழுந்து நின்றவள், கால்கள் பின்னி தடுமாறி விழுந்து விடாமல் இருப்பதற்காக சுவற்றைப் பிடித்துக் கொள்ள,

“என்னாச்சு உனக்கு?” என்று வினவியபடி அவளருகில் வந்து நின்றான், யதுநந்தன்.

“தலை வலிக்குது..”

காரணத்தை ஊகிக்க முடிந்தது அவனால். வருத்தப் பெருமூச்சொன்றை வெளியேற்றியவன், “நான் சாப்பாட்டை ரூம்க்கு எடுத்துட்டு வர்றேன். நீ இங்கயே இரு!” என்றுவிட்டு நகரப் பார்க்க,

“நான் ஓகே தான். பாப்பா எங்க?” என்று கேட்டாள், அவன் முகம் பார்த்து.

“அப்பா அவளுக்கு ஊட்டி விட்டு, தூங்க வைச்சிட்டாங்க. நீயும் சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு!” என்றவன் உணவருந்தி விட்டு அறைக்கு வந்ததும்,

“நிறைய யோசிச்சுப் பார்த்தேன். எனக்கு இதைத் தவிர வேறெந்த ஐடியாவும் தோணல சம்மு. எப்படியும் உன்னால வீட்டுல போய் தங்கி அம்மாவைப் பார்த்துக்க முடியாது. பாப்பா உன்னை ரொம்பத் தேடுவா!

நர்ஸ் வைக்கிறதுல கூட உனக்கு இஷ்டமில்ல. அதுனால தான் அவங்களை இங்க கூட்டிட்டு வர்றதைப் பத்தி யோசிச்சி டேட் கிட்ட பேசுனேன். அவருக்கும் முழு விருப்பம். நானே பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டாரு.

நீ மறுப்பியோனு உன்கிட்ட சொல்ல வேணாம்னு அவர் சொன்னதால, நானும் மறைச்சிட்டேன். மத்தபடி நானே முடிவு எடுக்கணும்னு நினைக்கல. உனக்கு நான் சொல்லுறது புரியும்னு நினைக்கிறேன்..” என்று தன் செயலுக்கான விளக்கத்தை அளிக்க,

“ஆனா அம்மா சம்மதிக்க மாட்டாங்க போலருக்குங்க..” என்றாள் சம்யுக்தா, வருத்தம் மேலோங்கிய குரலில்.

தன் திட்டத்தில் அவளுக்கும் முழு சம்மதம் என்பதை புரிந்து கொண்டவனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

புன்னகை முகமாய், “திரும்ப பேசி பார்க்கலாம் சம்மு..” என்றவனைப் பார்த்து ஆமோதிப்பாய் தலை அசைத்தவள் கட்டிலில் முகம் குப்புற விழுந்து விட, அவளுக்கு தலைவலி மாத்திரை கொடுத்து வலுக்கட்டாயமாக விழுங்க வைத்தான் நந்தன்.

அவனது அக்கறை கூட உரைக்காத அளவுக்கு தலைவலி படுத்தி எடுக்க, “குட் நைட்!” என்றவள் உறங்கிப் போன பிறகும், தூக்கமின்றி நெடுநேரம் வரை விழித்திருந்தது என்னவோ, ஆடவன் தான்.

அவனின் கலக்கத்துக்கு காரணம் தான் என்னவோ!?

இங்கே இப்படியிருக்க, தூக்கம் மறந்து, இராக் குருவியாய் அலைபேசி வழியே காதலனுடன் சரசமாடிக் கொண்டிருந்தாள் சாந்தனா.

“ஆமா அவினாஷ். மாமாவே தான் என்னோட டேலண்ட்டைப் பார்த்து, அவங்க அப்பா கம்பெனியை சஜஸ்ட் பண்ணாங்க..” என அவள் பச்சையாய் புளுகியதை அழைப்பின் மறுபுறத்தில் இருந்தவன் நம்பியிருக்க வேண்டும்,

“நீ கெட்டிக்காரி தான்!” என மனந்திறந்து வாழ்த்தினான்.

“வீட்டுல சும்மா இருக்குறதை, கலியாணம் வரைக்குமாவது வேலைக்கு போய் வரலாம்னு யோசிச்சேன். இன்டெர்வியூல பாஸ். அவங்க என்னையே செலக்ட் பண்ணிட்டாங்க..” என்றவள் அவினாஷின் பாராட்டுக்களைக் கேட்டு மனம் குளிர்ந்து போனாள்.

உண்மையில் நடந்தது இதுதான்!

யுக்தாவின் ‘டீலை’ மனதிற்கொண்டு, என்ன தில்லாலங்கடி வேலை பார்த்து தன் காரியத்தை சாதித்துக் கொள்ளலாம் என்ற பலமான சிந்தனையில் சாந்தனா சுற்றிக் கொண்டிருந்த போது தான், நந்தனின் தந்தைக்கு ஒரு ஐடி நிறுவனம் இருப்பதை அறிந்து கொண்டாள், சத்யாவின் மூலம்.

யதுநந்தன் லாயர் என்பதை அறிந்து வைத்திருந்தவளுக்கு, இது முற்றிலும் புதுத் தகவல்!

அக மகிழ்ந்து போனவள் அவன் யுக்தாவைக் காண வீட்டுக்கு வந்திருந்த நேரமொன்றில், அவனிடம் பேச்சு வளர்த்து, ‘நல்ல கம்பெனிஸ் பத்தி சொல்லுங்க மாமா’ என்று வேண்ட,

‘யாமிருக்க, இவள் ஏன் அலைந்து திரிந்து வேலை தேட வேண்டும்?’ என்ற நல்லெண்ணத்தில், தந்தையின் நிறுவனத்தை அவளுக்கு பரிந்துரை செய்தான். ஆனால் அது தங்களது நிறுவனம் என் வாய் திறக்கவில்லை.

அதுவே பெருத்த ஏமாற்றம் தான் சாந்தனாவுக்கு!

நன்றி கூறிவிட்டு அமைதியாக நகர்ந்தவள் மறுநாள் நிறுவனத்துக்கு சென்றிருந்த போது தான், நந்தன் தன்னைப் பற்றி அங்கே ‘ரெகமண்டு’ செய்திருக்கவில்லை என்றே தெரிந்தது. மீண்டுமொரு ஏமாற்றம்!

எல்லோரையும் போன்று, அவளையும் நேர்காணலின் பின்னரே வேலைக்கு தேர்ந்தெடுத்தனர்.

‘இதற்கு நான் வேறு கம்பெனிஸ்க்கே போயிருப்பேனே!’ எனப் பொங்கிப் பிரவாகம் எடுத்த மனதை இரு தட்டு தட்டி அடக்கி வைத்தவள், அவினாஷிடம் பெருமை பீத்திக் கொண்டிருப்பது எல்லாம் நகைச் சுவைக்குரிய விடயம் தான்!

“எல்லாம் சரி! இப்போ தான் உன் அக்கா கலியாணம் முடிஞ்சுதே? இனி நான் வந்து வீட்டுல பேசலாம் இல்லையா தனா..” என காரியத்தில் கண்ணாக அவினாஷ் கேட்டதும், அவனது பாராட்டை செவியேற்று சிறகின்றி வானில் பறந்து கொண்டிருந்தவள் தொப்புக்கடீர் என்று சமதரையில் வந்து விழுந்தாள்.

‘இப்போ தான் கைகூடி வந்துட்டு இருக்கு. அதுக்குள்ள இவன் வேற அவசரப்படறானே!’ எனப் பதறியவள்,

“கொஞ்சம் நாள் பொறுத்துக் கோங்களேன் அவி. இங்க எல்லாத்தையும் நானே சரி பண்ண வேண்டியதா இருக்கு..” என சமாளிப்பில் இறங்கி விட, நேரம் பஞ்சாய் பறந்தது.

நேர நகர்வில் நாட்களும் கழிந்து போக, யுக்தா காருண்யராஜிடம் கேட்டிருந்த ஒருவார லீவு பத்து நாட்களாகி, இதோ நேற்றோடு முடிந்தும் விட்டது.

இன்றிலிருந்து வேலைக்கு சென்றாக வேண்டுமென்ற முனைப்போடு கண் விழித்த நேரம் தொட்டு பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள் சம்யுக்தா.

காலை உணவை மேஜை மீது கடை பரப்பியவள், “மாமா, சாப்பிட வாங்க..” என கூடத்தில் பத்திரிகை புரட்டிக் கொண்டிருந்தவரை அழைக்கும் போதே சிறியவளுடன் அவ்விடம் வந்து சேர்ந்தான் நந்தன்.

யுவனியை அவனே குளிப்பாட்டி ஆயத்தப்படுத்தி இருக்கிறான் என்பதை ஊகித்தவள் சிரிப்புடன் கைகளை நீட்ட, “மம்மி! பசிக்கு..” என்ற மழலை சிணுங்கலோடு தாயிடம் தாவினாள், யுவனி.

‘நான் தானே உன்னை தூக்கிட்டு நின்னேன். என்கிட்ட பசிக்குதுனு சொல்றதுக்கு என்ன..’ எனும் விதமாய் மகளை ஒரு லுக்கு விட்டவன் தட்டைத் திருப்பி தனக்கென இட்லி எடுத்து வைத்துக் கொண்டான்.

“பசிக்குதா யுவிக் குட்டி?” என கொஞ்சியவள், சிறியவளுக்கென்று தனியாக செய்து வைத்திருந்த தேங்காய் துருவல் தூவிய இனிப்பு இட்லியை சிறிதாக விள்ளி, அவளுக்கு ஊட்டியபடியே,

“மாமா.. சாம்பார்!” என மாமனாருக்கும் பரிமாறினாள்.

‘இங்க நானும் இருக்கேன்..’ என சிறுபிள்ளைத் தனமாக சொல்லத் துடித்த நாவை அடக்கிக் கொண்டு கண்களை நாலாபுறமும் சுழற்றிய நந்தன், அவனுக்கே புதிது!

அவளிடமிருந்து எதையோ எதிர்பார்க்கிறான். ஆனால் அது என்னவென்று அவனுக்குமே புரியாத நிலை! கஷ்டம் தான்..

‘எழுந்ததில் இருந்து யந்திரமாக வேலை பார்க்கிறாளே’ என அவளுக்காக இரங்கி, உறக்கம் கலைந்து சிணுங்கிக் கொண்டிருந்தவளை குளிக்க வைத்து, ஆயத்தப்படுத்தினானே?

அஃதிருக்க, ‘பசிக்கிதுனு என்கிட்ட சொல்லி இருக்கலாம்’ என ஆதங்கப்பட்டவனின் ஆழ்மனம், ‘அவளுக்கு லேட் ஆகிடப் போகுது!’ என மனையாளுக்காக அக்கறைப்பட்டது கூட புது மாற்றம் தான்!

நேற்று தலை வலிக்கிறதென கூறி அவள் உறங்கி விட்ட பிறகும், மனம் கனக்க அவளையே வெறிக்க வெறிக்கப் பார்த்திருந்து விடியும் தருணத்தில் உறங்கிப் போனவனுக்கு மட்டும் களைப்பென்று ஒன்று இருக்காதா என்ன..

தன்னிடத்தில் ஏதோவொரு வித்தியாசத்தை உணர்ந்தவன், அதைப் பற்றி மேலும் துருவித் துருவி ஆராய்ந்து யோசிக்க விரும்பாதவனாய்,

“அம்மா கிட்ட திரும்ப பேசுனியா சம்மு?” என அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.

“நேத்தும் சந்தா ஃபோனுக்கு கால் செய்து, அம்மா கிட்ட பேசுனேன். அதுலாம் சரி வராதுனு பிடிவாதமா நிற்கிறாங்க..” என்றவளின் செவிகளுக்குள்,

‘பொண்ணைக் கொடுத்துட்டு, குடும்பமே போய் மாப்பிள்ளை வீட்டுல குந்திக்கிட்டாச்சுனு ஊரு பேசும் யுக்தா. இது சரி வராது! சந்தா கிட்ட நல்லவிதமா பேசி, நிலைமையைப் புரிய வைச்சிட்டா வித்யா பொண்ணுக்கும் கஷ்டம் இருக்காது. பார்வதியும் நம்மளுக்காக செய்த வரைக்கும் பத்தாதா என்ன..’ என்ற வருத்தம் தோய்ந்த தாயின் குரல் ஒலித்தது.

‘அவகிட்ட நான் பேசின வரைக்கும் போதும்மா. பொறுப்பு வரதுனா இந்நேரம் தலைக்கு மேல வந்திருக்கணும். இதை நான் எப்படி உங்க கிட்ட சொல்லுவேன்? நீங்க வீணா வருத்தப்படுவீங்க இன்னுமின்னும் உடம்பைக் கெடுத்துப்பிங்க இல்லையா..’ என மனதோடு தாயிடம் கேட்டவளுக்கு நந்தன் கூறிய எதுவும் புத்திக்கு உரைக்காமல் போனது.

இரண்டு முறைகள் அழைத்துப் பார்த்தவன், மூன்றாவது முறையாக, அவளது தோளில் தட்டி, “சம்மு..” என்று குரலுயர்த்தி சத்தமாக அழைத்தான்.

சட்டென்று இயல்புக்கு மீண்டவள், தன்னையே புரியாத பார்வை பார்த்திருந்த தந்தை-மகனைப் பார்த்து திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல் திருதிருவென முழிக்க,

“திடீர்னு எந்த லோகத்துக்கும்மா போய்ட்ட?” என அவளை சகஜமாக்கும் பொருட்டு கேள்வி எழுப்பினார் மூர்த்தி.

உதட்டில் நெளிந்த முறுவலோடு அவளின் முகபாவங்களை உள்வாங்கிக் கொண்டிருந்த நந்தன், “சந்திரன்.. ஐ கெஸ் அவ சந்திரனுக்கு தான் போயிருப்பா டேட்! தினமும் நைட்டு அதைத் தான் ரொம்ப நேரம் பார்த்துட்டு இருப்பா..” என முந்திக் கொண்டு பதில் அளித்தான்.

“என்ன! நான் எப்போ பார்த்தேன்?” என வியந்து வினவியவளிடம் ஏதோ கூற வாயெடுத்தவன் தந்தையின் ரசனைச் சிரிப்பைக் கண்டு விட்டு,

“நீயும் உட்கார்ந்து சாப்பிடு! நேரம் போயிட்டே இருக்கு..” என்று கூறி லாவகமாக தன் பேச்சைத் திசை திருப்பினான்.

சுவர் கடிகாரத்தைப் பார்த்து அவன் கூறியதை உறுதிப்படுத்திக் கொண்டவள், யுவனியின் வாயைத் துடைத்து விட்டு மேஜையில் அமர, சிறியவளை தன் கையில் வாங்கிக் கொண்டான் யதுநந்தன்.

“பரவால்ல, நீங்க சாப்பிடுங்க..” என அவசரமாக மறுத்தாள் யுக்தா, சங்கடத்தில் நெளிந்தபடியே..

“நான் சாப்பிட்டு முடிச்சிட்டேன்..” என்று கூறியபடி நகர்ந்து சென்று கை கழுவி வந்தவன்,

“எப்படி ஸ்டோருக்கு போக போற?” என்று அதி முக்கியமான கேள்வியைக் கேட்க, அதன் பிறகு தான் அது பற்றிய யோசனையே எழுந்தது யுக்தாவுக்கு.

முன்பு என்றால் அவளின் வீட்டுத் தெருமுனையில் பஸ் நிறுத்தப்படுவதால்  எந்தக் கஷ்டமும் இருக்கவில்லை. இருபது நிமிடப் பயணம் தான்! பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை பஸ் வந்து சென்று கொண்டே இருக்கும்..

வேலை முடிந்த பிறகு பெரும்பாலும் வித்யா கை கொடுப்பதால் அதைப் பற்றிய பயமும் இருக்கவில்லை. இதை யோசிக்க மறந்தேனே என மனம் நொந்தவள், “இங்கிருந்து ஸ்டோருக்கு எவ்ளோ நேரம் எடுக்கும்?” என்று கேட்க,

“தர்ட்டி ஃபைவ் மினிட்ஸ் கிட்ட!” என உடனடி பதில் வந்தது நந்தனிடம் இருந்து.

“பஸ்டாப்புக்கு?”

“அஞ்சு நிமிஷம்..”

ஆசுவாசமாக மூச்சை இழுத்து விட்டவள், “ஓ, பக்கத்துல தானே? நடந்தே போயிட்டா நேரத்துக்கு பஸ் கிடைக்கும்..” என்று கூற,

“நீ ஏன்மா நடந்து போகணும்? நந்தா நீயே மருமகளைக் கூட்டிட்டு போய் விட்டுட்டு வந்துடேன்..” என மருமகளிடம் அக்கறையாகத் தொடங்கி, மகனிடம் முடித்தார் மூர்த்தி.

“ப்ச்! நீங்க வேற. உங்களுக்கு எதுக்கு கஷ்டம்.. நானே பார்த்துக்கறேன்னு சொல்லுவா பாருங்க டேட்!” என நந்தன் நேரம் பார்த்து குட்டு வைக்கவும்,

“இல்ல பரவால்ல மாமா.. நானே போயிப்பேன்!” என சம்யுக்தா அவசரப்பட்டு வாய் விடவும் சரியாக இருக்க, கலகலத்து சிரித்தார் மூர்த்தி.

யுக்தா அசடு வழிந்தாள்.

“அதெப்படி நீ சரியா சொல்லிட்ட நந்தா?” என வியந்தவர்,

“அந்த இந்த கதைக்கெல்லாம் இடமில்லை. நந்தா நீ காரை எடு! இந்தாம்மா.. நீ சாப்பிட்டுட்டு கிளம்பு. நேரமாகிட்டே இருக்கு.” என இறுதியாக தன் முடிவைக் கூறிவிட, அதற்கு மேல் மறுப்பானேன்?

நல்ல மருமகளாய் சரியென்று தலை அசைத்தபடி இரண்டு இட்லிகளை அவசர அவசரமா உள்ளே தள்ளியவள், டைல்ஸ் தரையில் குடுகுடுவென ஓடித் திரிந்தவளின் கன்னம் கிள்ளி முத்தமிட்டு விட்டு, வெளியே விரைந்தாள்.

கார் மெல்ல சாலையில் வழுக்கியது.

இருக்கையில் சொகுசாக அமர்ந்து கொண்டு,  “என்னால உங்களுக்கு வீண் சிரமம். இனிமே நானே போய்ப்பேன்ங்க..” என்றவள், வேகமெடுத்த கார் பேருந்து நிறுத்தத்தைத் தாண்டி சீறிப் பாய்வதைக் கண்டுவிட்டு,

‘துணிக்கடைல வேலை பார்க்க, கார்ல போய் இறங்குற ரெஸ்பெக்ட் பிச்சைக்காரி நான்தானோ?’ என்று நினைத்தாள்.

தன் நினைப்பை எண்ணி சிரித்துக் கொண்டிருந்தவளைத் திரும்பிப் பார்த்தவன், “ராத்திரி நேரத்துல நீ ரொம்ப நேரம் பேல்கனில நின்னுட்டு இருப்பது எனக்குத் தெரியாதுனு நினைச்சியா சம்மு?” என்று வினவ,

“ஆனா அது எப்படி உங்களுக்கு தெரியும்?” என்று குறுக்கு விசாரணை செய்தாள் சம்யுக்தா.

கண்களை உருட்டியவன், “தூக்கம் கலைஞ்சி பார்க்குற நேரங்களில், உன்னை பல தடவைகள் பேல்கனியில பார்த்திருக்கேன்..” என்றான், வெகு சாதாரண முகபாவனையுடன். ஆனால் கள்ளம் தெரிந்தது அவனின் கண்களில்.

“ஓ..”

“அதுல அப்படி என்னத்த பார்ப்ப?”

“நீங்க ஒரு அஞ்சி நிமிஷம் நிலவைப் பார்த்திங்கனா இந்த கேள்வியைக் கேட்க மாட்டிங்க..” என கண்ணாடி வழியே சாலையை வெறித்தபடி கூறியவளை திரும்பிப் பார்த்தவனின் உதடுகள் சிரிப்பில் துடித்தன.

அவனுக்கு தெரியாததா என்ன.. பல்லவியை இழந்து வாடிய ஒவ்வொரு இரவிலும், உறக்கத்தைத் தொலைத்தவனாய் தன்னைப் போன்றே தனிமையில் கருகி ஒளி வீசிய நிலவிடம் தானே ஆறுதல் தேடினான்?

அதை இப்படி அருகில் இருப்பவளிடம் எடுத்துச் சொல்வான்?

பல்லவியுடன் சல்லாபமாடியபடி இரா வானை அழகு படுத்தியவளை அவன் ரசிக்காத நாள் தான் உண்டா என்ன..

சரி, நிற்க! அக் களங்கமற்ற பிறையாளுக்கு அவன் ரசிகனே அல்லன் என்று வைத்துக் கொண்டாலும், பிறகேன் அவளையே அறையின் ஒருபக்க சுவரில் ஓவியமாக்கி வைத்திருக்கிறான்?

யோசிக்க மறந்து, ‘நீ இதுநாள் வரை நிலவை ஒரு தடவையாவது ரசித்துப் பார்த்திருக்கிறாயா?’ என்று வினவியவளின் கேள்வி அபத்தம்!

தொலைவில் கண் சிமிட்டி மின்னியே தன் மனதுக்கு ஆறுதலளிக்கும் அந்த நிலவை அவளுக்குப் பிடித்துப் போகவும் ஏதேனும் ஒரு பிரத்தியேகக் காரணம் இருக்குமே! அது என்னவோ என அறியும் ஆவலில் அவன் எழுப்பிய கேள்வி, அவளது கொஞ்சநஞ்ச புரிதலுக்கு அப்பாற்பட்டது தான்!

“சரி, நான் நிலவை ரசிக்கலனு வைச்சிக்கோ. நீ அதுல எதைத் தேடுவ? அதுவும் எல்லாரும் உறங்கிப் போன அந்த நேரத்துல..”

முறுவல் நெளிந்திருந்த அவளின் கீற்றான இதழ்கள் மெல்ல விரிந்து செப்பின, அந்த ஒற்றை வார்த்தையை!

“ம்ம், நிம்மதி!”

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!