நாணலே நாணமேனடி – 17

5
(5)

யாவரும் உறங்கிப் போன அந்த ஆளரவமற்ற இராப் பொழுதில், தன்னந்தனியே மறுகி தவித்து மதியாளிடம் ‘நிம்மதி’யைத் தேடுவதாக யுக்தா சொன்னதிலிருந்து நந்தனுக்கு மனமே சரியில்லை.

புகுந்த வீட்டில் கூட சந்தோசமாக வாழ வழியின்றி, பிறந்த வீட்டைப் பற்றிய கவலையில் உழன்று கொண்டிருக்கும் யுக்தாவின் மனம் அவனுக்கு பிரமிப்பைக் கொடுத்தாலும்,

‘ஆனா பாவம் இல்ல?’ என்ற இரக்கத்தையும் அவள் மீது தோற்றுவித்தது.

அன்றிலிருந்து சரியாக மூன்றாவது நாள், யுக்தா துணிக்கடையிலிருந்து வீட்டுக்கு வரும் போது, கூடத்தில், சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார் சாவித்திரி.

இன்பமாக அதிர்ந்தவள், “அம்மா!” என்ற கூவலுடன் ஓடிச் சென்று கிருஷ்ணமூர்த்தியுடன் உரையாடிக் கொண்டிருந்த அன்னையை கட்டிக்கொண்டாள்.

“யுக்தா..” என மெல்லிய குரலில் அழைத்தவரின் வலக்கரம், மகளின் கன்னத்தை ஆதூரமாக வருடிக் கொடுத்தது.

“உங்களை இங்க எதிர்பார்க்கவே இல்லம்மா. நானே இந்த வார இறுதியில உங்களை எல்லாம் பார்க்க வரலாம்னு தான் இருந்தேன். ஆனா பாருங்க, நீங்களே வந்துட்டிங்க..” எனத் துள்ளும் குரலில் பேசியவளை வியந்து பார்த்த மூர்த்திக்கு அவளின் சந்தோசம் எந்தளவெனப் புரிந்தது.

‘நல்ல வேலை செய்தடா நந்தா!’ என மகனை மனதினுள் மெச்சிக் கொண்டவரின் முகத்தில் புன்னகையில் சாயல்!

“நான் எங்கே வந்தேன் யுக்தா? மாப்பிள்ளை தான் ரெண்டு மூனு நாளா, நீங்க ஏன் எங்ககூட வந்து தங்கிக்க கூடாதுனு கேட்டுட்டே இருந்தாரு. யோசிச்சி பார்க்கறேன்னு சொல்லி நானும் சும்மா இருந்துட்டேன்.

ஆனா இன்னைக்கு காலைலயே வந்து கிளம்புங்கனு உரிமையா கூப்பிடும் போது, என்னால மறுக்க முடியலடி. அதான் கிளம்பி வந்துட்டோம். பார்வதி எல்லாத்தையும் பேக் பண்ண உதவி செய்துட்டு, வீட்டுக்குப் போயிட்டா..” என்று மருமகனின் அன்பை எண்ணிப் பூரித்துப் போனவராய் சாவித்திரி கூறியதும், யுக்தாவுக்கு பரவசம் தாளவில்லை.

சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அறைக்கு விரைந்தவளை, தந்தை- மகளின் கலகல நகைப்பு வாசலிலே இன்னிசை ராகமாய் வரவேற்றது.

‘இன்று வீட்டுல தான் இருந்திருப்பாரு போல’ என ஊகித்தவளாய் சத்தம் எழாதவாறு அறைக்குள் நுழைந்தவளைக் கண்டதும்,

“மம்மி.. தூக்கு!” என கட்டிலில் தட்டுத் தடுமாறி எழுந்து நின்று, தன்னிரு கைகளைத் தூக்கினாள் யுவனி.

“ஹே, விழுந்துட போற பாப்பா..” என நந்தன் பதறிய நேரத்தில், “யுவிம்மா..” என்ற கொஞ்சலுடன் சிறியவளை அள்ளிக் கொண்டவளது கூரிடும் பார்வை,

“வந்துட்டியா சம்மு?” என்று கேட்டபடி கட்டிலில் அங்குமிங்குமாய் கிடந்த விளையாட்டுப் பொருட்களை அப்புறப்படுத்தத் தொடங்கியவனில் அழுத்தமாகப் பதிந்தது.

“பாப்பா உன்னை ரொம்பத் தேடறா.. அழுகையோ அழுகை! என்னால முடியல சம்மு. இந்த ரெண்டு நாளா டேட் எப்படி சமாளிச்சாங்கனு தெரியல..” தான் இன்று வீட்டில் தான் இருந்தததாக மறைமுகமாகக் கூறிக் கொண்டே பெருமூச்சுடன் நிமிர்ந்தவனின் பார்வை, யுக்தாவின் கழுத்தைச் சுற்றி கைகள் கோர்த்து, அவளின் நெஞ்சில் சாந்தஸ்வரூபினியாய் தலை சாய்ந்திருந்த யுவனியின் மீது பதிந்து மீண்டது.

“பேபி ரொம்ப அழுதாளா?” என்று கேட்டபடி முதுகை வருடிய அன்னையைத் தலை தூக்கிப் பார்த்தவளின் குட்டி உதடுகள் அழுகையில் பிதுங்கின.

அவளின் கன்னத்தில் முத்தமிட்டவள், “பாப்பா சமத்துக் குட்டியா விளையாடிட்டு இருப்பானு இல்லையா மாமா என்கிட்ட சொன்னாரு? அப்போ நேத்து கீர்த்தனா வந்தி..” என மேற்கொண்டு பேசவர முன்,

“சமாளிக்க முடியாம டேட் தான் வர சொல்லிருக்காரு போல. அது தெரியாம, அங்க இங்க அலைஞ்சி திரியாம வீட்டோட கவனமா இருனு சொன்னேனே! கேட்க மாட்டியானு அவளை நேத்திக்கு ரொம்ப நல்லா திட்டி வைச்சிட்டேன்..” என நெற்றியைத் தேய்த்தான் நந்தன்.

“மாமா என்கிட்ட எதையும் சொல்லவே இல்லைங்க..” என வருத்தம் மேலோங்கிய குரலில் சொல்லியவளின் மனசாட்சி,

‘சொல்லிருந்தா மட்டும் என்னத்த செய்து கிழிச்சி இருப்பியாம்?’ என நியாயமாகக் கேள்வி கேட்டு நேரம் பார்த்து குட்டு வைத்தது.

அதுவும் சரியென்றே தோன்றியது, யுக்தாவுக்கு.

‘நான் எவ்ளோ செல்ஃபிஷ்ஷா இருக்கேன்!’ எனப் புதிதாக ஒருபாரம் நெஞ்சில் வந்து குந்திக் கொண்டு, அவளை மூச்சடைக்க செய்தது.

ஆனால், அவள் ஒன்றும் தன்னுடைய சொந்தத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக யுவனியைத் தனியே விட்டு விட்டுச் சென்று துணிக்கடையில் நேரத்தைக் கடத்தவில்லை என்பது தான் உண்மை!

அதுவும் கூட தன் குடும்பத்தினருக்காகத் தான் என்று இருக்கும் போது, தன்னுடைய செயல்கள் யாவும் சுகநலமானவை என்பதாய் அவள் வருந்துவது எவ்விதத்தில் நியாயம்?

ஒருவேளை, தான் தன் குடும்பத்தினரின் நலனை யோசிக்கிறேனே தவிர, திருமண வாழ்க்கை தனக்குச் சுமத்திய பொறுப்புகளை கிடப்பில் போடுகிறேனே என யோசித்திருக்கவும் வாய்ப்புண்டு!

குற்றவுணர்ச்சியில் மனம் நொந்து நின்றிருந்த பூவையின் இதழ்கள், சிறியவளின் கூந்தல் படர்ந்த பிறை நுதலில் ஆழப் புதைந்தன.

தோளில் தொங்கிய கைப்பையைக் கழற்றி மேஜை மீது வைத்தவள் கதவை நோக்கி நடக்க,

“உன்னோட அம்மாவுக்கு கார்னர் ரூமையும், தங்கச்சிங்களுக்கு, அதுக்கு அடுத்ததா இருந்த ரூமையும் கொடுத்திருக்கேன். அதுல உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையே சம்மு?” என்று கேட்டான் யதுநந்தன், யோசனையினூடே!

தன் நடையை நிறுத்திவிட்டு அவன் புறமாகத் திரும்பியவள் சிறு தலை அசைப்புடனே, “ம்ம்..” என்க, தலை கோதியபடி கட்டிலின் ஒரு மூலையில் அமர்ந்தவன்,

“டேட்க்கு ஒரு அண்ணா, ரெண்டு அக்கா! எல்லாரும், என்னைக்கும் சந்தோஷமா, ஒன்னா, ஒற்றுமையா ஒரே வீட்டுல வாழனும்ங்குறது கிராண்ட்பாவோட ஆசையாம்!

மனசுக்கு புடிச்ச மாதிரி அவர் பார்த்துப் பார்த்து ரசிச்சிக் கட்டின வீடு தான் இதுனு டேட் அடிக்கடி அந்த நாள் நினைவுகள்ல மூழ்கி போய்டுவாரு. என் பசங்களுக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாதுனு கிராண்ட்பா ஆசைப்பட்டு கட்டினதால, இங்க எல்லா வசதிகளும் அத்துப்படி! எந்தக் குறையும் இல்ல.

ஆனா அவர் இறந்து போன கொஞ்ச நாட்கள்லயே அவங்களுக்குள்ள ஏதோ பெரிய பிரச்சனை வந்து, குடும்பம் பிரிஞ்சி, நாலு பேரும் திசைக்கு ஒன்னா சிதறிப் போய்ட்டாங்க.

சொத்துனு புது பிரச்சனை தலை தூக்கும் போது, சரி சமமா பிரிக்கப்பட்டு, கம்பெனியும், இந்த வீட்டுல பாதியும், ஒரு கணிசமான கணக்கும் அப்பாவுக்குனு ஒதுக்கப்பட்டிருக்கு. இந்த வீட்டின் மறுபாதி பெரியப்பாவோடது!

என் பகுதியை நான் தரை மட்டமாக்கி புதுசா கட்டப் போறேன், விற்க போறேன்னு அகங்காரத்துல அவர் குதிச்சப்போ, அப்பா ஆசைப்பட்டு கட்டின வீட்டை அழிக்கிறதானு கவலைப்பட்டு, டேட் தன்கிட்ட இருந்த பணத்தைக் கொடுத்து வாங்கி மீதி பாதியையும் தன்னுடையதாக்கி, இந்த வீட்டை என் பேருக்கு எழுதி வைச்சிட்டாராம்.

அப்போ எனக்கு சின்ன வயசு. இதைப் பத்தியெல்லாம் அந்தளவுக்குப் பெருசா எந்தத் தெளிவும் இல்ல. அம்மா எனக்கு ஆறேழு வயசிருக்கும் போதே இறந்து போயிட்டாங்க. அதுனால இந்த பெரிய வீட்டுல நான், டேட் ரெண்டு பேரும் மட்டுந்தான்!

டேட் எனக்கு எந்தக் குறையும் காட்டாம வளர்த்தாரு. ஆனா என் மனசுக்குள்ள ஒரு பெரிய குறை இருந்துட்டே இருக்கும். அது அம்மாவோட அன்பு! இனிமே கிடைக்கவே கிடைக்காதுலங்குற தவிப்பு..

உனக்கு தெரியுமா சம்மு? பிறந்ததுல இருந்தே அன்பு கிடைக்காம போறது ஒருவிதம். அங்க ஏக்கம் இருக்கும். மத்தவங்களைப் போல எனக்கும் அந்த அன்பு, அக்கறை, இன்ன உறவு இருந்திருந்தால் நல்லார்க்குமேங்குற தவிப்பும், ஆசையும் இருக்கும்.

ஆனா விவரம் புரியிற வயசு வரைக்கும் கூடவே இருந்து ஆராட்டி வளர்த்த ஒரு உறவு திடீர்னு இல்லைனு ஆகிட்டா, ரொம்ப கஷ்டம் சம்மு. தவிப்பு தாங்காம நெஞ்சே அடைக்கிற மாதிரி இருக்கும். அவங்களோட ஒன்னா இருந்த நினைவுகள் மனசை வருத்தும். அதே நிலைமை தான் எனக்கும்!

நான் சின்ன வயசா இருக்கும் போது அம்மா போய் சேர்ந்துட்டாங்க. அது வரை எனக்கு எல்லாமா இருந்தது அவங்க தான்! அந்த அன்பு இன்னும் என் அடி மனசுல இனிச்சிட்டே தான் இருக்கு. அந்த நாட்களை இப்போ நினைச்சாலும் தவிப்பு, இதம்னு ஒரே நேரத்துல ரெண்டு மனநிலை.

அந்த அன்பு என் பொண்ணுக்கு கிடைக்கணும்னு நினைச்சேன்.

ஒருசில வருஷங்கள் தான்.. இருந்தாலும் நான் மட்டும் அந்த அன்பை அனுபவிச்சிட்டு, சுயநலமா யோசிச்சி யுவனியை ஏங்க வைக்கிறதானு ஒரு தவிப்பு எழுந்துச்சு மனசுக்குள்ள.. ரொம்ப கஷ்டம்!” என்றவன் காற்றிலிருந்த ஆக்சிஜனை மொத்தமாக இழுத்து, துடிப்பை நிறுத்திக் கொள்ளப் பார்த்த இதயத்துக்கு தீனியாய் உள்ளே அனுப்பி வைத்தான்.

வேகமாக ஏறி இறங்கிய அவனின் நெஞ்சக்கூடு, அவனது தற்போதைய மனநிலையை அவளிடம் தெளிவாகப் பறைசாற்றிச் செல்ல முயன்றது.

விழி அகலாமல் அவனையே பார்த்திருந்தவளை, அவனின் தோள் தட்டி ஆறுதல் கொடுக்க இயலாதவாறு ஏதோவொன்று தடுத்தது. தயங்கி, கை பிசைந்து நின்றாள்.

சிறியவள் எப்போதோ கையிலிருந்து நழுவி இறங்கி, இலேசாகத் திறந்திருந்த கதவு வழியே கூடத்துக்கு ஓடி விட்டிருக்க, இக்கணம் அறைக்குள் அவ்விருவர் மட்டுமே!

நெஞ்சை நீவி விட்டபடி அவன் தன்னை இயல்புக்கு மீட்டு வருவதற்கு எடுத்துக் கொண்ட நிமிடங்கள் சிலவும், மௌனத்தின் கோரப் பிடியிலே கழிந்து போயின.

விரும்பியது கிடைக்காத ஏமாற்றத்தில், அன்னையின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கும் பாலவயதுப் பாலகனைப் போல், நந்தனது மனமும் பாவையிடமிருந்து ஏதோவொன்றை எதிர்பார்த்து, ஏமாற்றத்தைத் தழுவியது.

முகத்தில் போலிப் புன்னகையை ஒட்ட வைத்துக் கொண்டவன், “அதெல்லாம் விடு, பாரேன் சம்மு. இது வரை தான் இல்ல. ஆனா இனியாவது கிராண்ட்பாவோட ஆசைப்படி, இந்த வீட்டுல, குடும்பங்கள் சேர்ந்து ஒன்னா வாழ போறோம்னு டேட்க்கு சந்தோசம் தாங்கல!

அவங்களைக் கூட்டிட்டு வரேன்னு கால் பண்ணி சொல்லிட்டு நான் வீடு வந்து சேர முன்னவே, இவ்ளோ நாள் தூசு படிய மூடி வைச்சிருந்த ரூம்ஸை எல்லாம் திறந்து, ஆள் வைச்சு கண்ணாடி போல கிளீன் பண்ணி வைச்சிருந்தாரு..” என்றான், நகைப்புடனான குரலில்.

யுக்தா மனம் இளகிப் புன்முறுவலித்தாள்.

“அப்பறம், வீட்டுலேர்ந்து வாக்கிங் டிஸ்டன்ஸ்ல தானே அங்க ஸ்கூல் இருந்துச்சு? ஆனா இங்கிருந்து கொஞ்சம் தூரம் சம்மு. அதுனால சத்யாவுக்கு ஸ்கூல் போய் வர டிரைவர் நியமிச்சுட்டேன். இனி நீயும், கேப்ல தான் போவேன்னு பிடிவாதம் புடிக்காம நம்ம கார்லயே போய் வா என்ன!” என அலட்டிக் கொள்ளாத தொனியில் கூறியவனைப் பார்த்து அவள் அவசர அவசரமாக ஏதோ சொல்ல வருவதற்குள்,

“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் வந்திடறேன்..” என்றுவிட்டு அறையிலிருந்து வெளியேறினான் நந்தன்.

மென் தென்றலொன்று நெஞ்சை பஞ்சாய் வருடிச் சென்ற உணர்வு, சம்யுக்தாவுக்கு!

அவன் எதற்காக இதை எல்லாம் செய்ய வேண்டும்? ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்கிறானே என ஐஸ் கட்டியாய் மனம் குளிர்ந்தது.

மனைவிக்காக பார்த்துப் பார்த்து செய்யும் கணவன் அமைவதெல்லாம் வரம் என்பார்களே! அந்த வரத்தைத் தான் கடவுள் தனக்குக் கொடுத்திருக்கிறார் போலும். இலவச இணைப்பாக மாமனார் வேறு வஞ்சகமில்லா தூய மனதுடையவராய் அமைந்து விட்டார். அதிஷ்டம் தான்! என நினைக்கும் போதே கண்கள் கலங்கின.

கடவுளுக்கு மனதார நன்றி நவின்றவள், குளித்து உடைமாற்றிக் கொண்டு கூடத்துக்கு வரும் போது, சத்யாவுடன் டைல்ஸ் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள் யுவனி.

சக்கர நாற்காலியில் தொய்வாக சாய்ந்தபடி இருவரையும் ரசனையுடன் பார்த்திருந்த சாவித்திரியின் முகத்தில் இளநகை விகசித்திருந்தது.

சம்யுக்தா, “மாமா எங்க சத்யா?”

“ஆங்! இப்போ தான் ரூமுக்கு போனாருக்கா மூர்த்தி மாமா..”

சிறு தலை அசைப்புடன் தாயின் வீல் ஷேரைத் தள்ளிக் கொண்டு அவருக்கென ஒதுக்கியிருந்த அறைக்குள் நுழைந்தவளின் மனம் நிறைந்தது. அவ்வளவு நேர்த்தியாக சுத்தப்படுத்தப்பட்டு இருந்தது, அறை!

அவருக்கு கட்டிலில் படுக்க உதவிவிட்டு, சிறிது நேர உரையாடலின் பின் கூடத்துக்கு வந்தவள் ‘ஜில்’ என்ற இதமான மனநிலையில் இருந்தாள்.

சாவித்திரி மனந்திறந்து மருமகனைப் புகழ்ந்து தள்ளியதும், ‘நீ எப்பவும் சந்தோசமா இருக்கணும் யுக்தா..’ என கன்னம் வருடி மனமுவந்து வாழ்த்தியதும், அவளுக்குள் ஒரு சொல்லொணா இதத்தைத் தூவி விட்டிருந்தது.

“சந்தா எங்க?” என சிரித்த முகமாய் கேட்க,

“அவ இன்னுமே ஆபீஸ் விட்டு வரலக்கா..” என சலிப்புடன் பதில் புறப்பட்டது, இளையவளிடமிருந்து.

“என்ன!”

“ப்ச்! அக்கா, ச்சில்! நான் அப்போவே பார்வதி ஆன்ட்டி ஃபோனால கால் பண்ணி சொல்லிட்டேன், ஆபீஸ் முடிஞ்சதும் மாமா வீட்டுக்கு வந்துடுனு! டென்ஷன் ஆகாதீங்க..”

சற்று ஆசுவாசப்பட்டவள், “தினமும் இப்படி தான் லேட்டா வருவாளா சத்யா?” என்று வினவ,

“எட்டரை மணி! சில நேரம் மணி ஒன்பது கூட ஆகும்க்கா. எங்க போயிட்டு வர்றேனு வித்யா அக்கா கேட்ட்டுட்டா போதுமே, எடுப்பா மூஞ்சை வெட்டிட்டு உள்ள போய்டுவா! அம்மா கேட்டா ஃப்ரெண்ட்ஸ் பார்ட்டினு சொல்லுவா.. இந்த ஒரு ரெண்டு வாரத்துல இதுலாம் பழகி போச்சுக்கா..” என்றாள் சத்யா, சலிப்பு மாறாமலே!

யுக்தா பற்களை நறநறத்தாள்.

பொறுப்புடன் நடந்து கொள் என்று நாவைக் குறுந்தடியாகக் கொண்டு வாயாகிய பறையை மீண்டும் மீண்டும் அறைந்தாலும் இம்மூடச்சி சற்றும் கருத்திற்கொள்ள மாட்டேன் என்கிறாளே என ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவளுக்கு.

அவளிடம் இது பற்றிப் பேச வேண்டுமென்று நினைத்துக் கொண்டவளின் மனசாட்சி, ‘ப்பூ! சொன்னா கேட்டுக்க போறவ கிட்ட பேச போறாளாமே!’ என படுகேவலமாக கேலி செய்ததெல்லாம் வேறு கதை!

“மம்மி.. ஆராபிளான்!” என கையிலிருந்த விமான பொம்மையைக் காட்டி உற்சாகமாக ஆர்ப்பரித்தவளின் குரலில் இயல்புக்கு மீண்டவள்,

“அடடா! ஏராபிளான் எப்போ ஆராபிளான் ஆச்சு யுவிக்குட்டி?” என சிரிப்புடன் கொஞ்ச, முன்வரிசைப் பற்கள் தெரியும்படி கிளுகிளுத்தாள் யுவனி.

“பாப்பா கியூட். இன்னுமே எனக்கு அவ கூடவே இருந்துக்கலாம் இல்லக்கா?” என்று கேட்டவளைப் பார்த்து முறுவலுடன் ஆமெனும் விதமாக தலை அசைத்தவள்,

“இன்னைக்கு நீ ஸ்கூல் போகலையா என்ன?” என்று வினவினாள், என்னவோ ஏதோவென்ற யோசனையுடனே..

“இல்லகா. மாமா வர்றப்போ நான் வீட்டுல தான் இருந்தேன். பார்வதி ஆன்ட்டி ஏதோ வேண்டுதலுக்காக கோயிலுக்கு போய் வரணும்னு சொல்லிட்டு இருந்ததால நான் லீவ் போட்டு வீட்டோட இருந்துட்டேன்..”

“ம்ம்..” என்றவள் யுவனியின் கலைந்திருந்த முடியை கைகளால் வாரி சரி செய்தவாறே, “உனக்கு இங்க இருக்க புடிச்சிருக்குல்ல சத்யா?” என்று கேட்டது தான் தாமதம்!

“ஏன்கா இப்படி கேட்குற? யாராவது புடிக்கலைனு சொல்லுவாங்களா என்ன.. அதுவுமில்லாம மாமாவுக்கு உன்னைப் போலவே எங்க மேல ரொம்ப பாசம், தெரியுமா?

என்ன நடந்துச்சுனா, அவர் வீட்டுக்கு வந்த போது நான் ஹால்ல புக் படிச்சிட்டு இருந்தேன். ஸ்கூல் போகலையா என்னனு என்னை விசாரிச்சாரு.

நான் விஷயத்தை சொல்லி, பார்வதி ஆன்ட்டி கோயில் போயிருக்காங்கனு சொன்னதும், ரெண்டு நாளா எங்களோடவே வந்துட்டா என்னனு கேட்டுட்டு இருந்தவர் திடீர்னு, கிளம்புங்க போகலாம்னு ஆடி நின்னுட்டாரு. பார்க்கணுமே!

அம்மாவுக்கு மறுக்க மனசே வரலக்கா. அதுவுமில்லாம, மூர்த்தி மாமா வேற, என் மருமக மனசுக்குள்ளயே மறுகுறானு அன்னைக்கு சொன்னது அவங்களை ரொம்ப வருத்தி இருந்துச்சு.

உன் அக்காவுக்கு எங்களால நிம்மதி இல்ல, பார்த்தியானு புலம்பிட்டே தான் இருந்தாங்க. அப்பறம் இனி பார்வதி ஆன்ட்டி வந்ததும், அவங்களோட சேர்ந்து ட்ரெஸ் பேக் பண்ணி எடுத்துட்டு மாமாவோட இங்க வந்துட்டோம்.

எனக்கு இங்க இருக்க ரொம்ப புடிச்சிருக்கு அக்கா. மாமா சூப்பர்! பாப்பாக் குட்டி வேற இருக்கா.. இனி அவகூடவே இருந்துக்கலாம், இல்லையா?”

சம்யுக்தாவின் இதழ்கள் முறுவலில் நெளிந்தன!

ஆடவனின் ஒரு சிறு செயலும் பூவை மனதில் பசுமரத்தாணியாய் ஆழப் பதிந்து, அவன் மீதான ஒரு பெருமதிப்பு உண்டு பண்ணி, அவன்பால் அவள் கொண்ட நேசத்தின் அளவைக் கூட்டி விட்டது.

மழலையாக மாறி இருவருடனும் சற்று நேரம் விளையாடிக் களித்தவளுக்கு, தான் சிறுபராய நாட்களுக்குள் தொலைந்து போன பிரமை! பாரங்கள் மனதை அழுத்தாமல், சற்று நிம்மதியாக அவள் ஓடித் திரிந்ததெல்லாம் விவரம் புரியாத அந்த வயதில் தானே?

நேரம் செல்வதை உணர்ந்து சமையலறைக்குள் நுழைந்த சம்யுக்தா, பரபரப்புடன் இரவுணவை சமைத்து முடிக்கும் போது அரைமணி நேரம் கடந்திருந்தது.

உணவு மேஜையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கும் போது,

“ஏன் இவ்ளோ நேரத்தோட வந்துட்ட?” என்ற சத்யாவின் கேலிக் குரல் கேட்டு நிமிர்ந்தவளின் பார்வையில் விழுந்தாள், அப்போது தான் உள்ளே நுழைந்த சாந்தனா.

வைத்ததை வைத்தபடியே விட்டுவிட்டு, வேகநடையிட்டு அவளை நெருங்கிச் சென்றவளின் கண்கள், சட்டென்று பொங்கி வழிந்த எரிமலை போல் திடீரென்று மேலெழுந்த கோபத்தால் சிவப்பேறிப் போயிருந்தன.

“நீ கொஞ்சம் மூடிட்டு இருக்கியா?” என இளைய தங்கையை அதட்டிவிட்டுத் திரும்பியவளின் முன், இடுப்பில் கை ஊன்றியபடி வந்து நின்றவள்

“இந்த லட்சணத்துல நீ எப்படி சந்தா என்கிட்..” என படபடவென ஆரம்பிக்கவும்,

“அம்மாடி யுக்தா! வயிறு கடமுடாங்குது. சமையல் ஆச்சா என்ன?” என்று கேட்டபடி முன்னறை கதவைத் திறந்து கொண்டு மூர்த்தி வெளிப்படவும் சரியாக இருந்தது.

வாயை இறுக மூடிக் கொண்டவள், “உன்கிட்ட அப்பறம் பேசிக்கிறேன்..” என கடித்த பற்களிடையே வார்த்தைகளைக் கடித்துத் துப்பிவிட்டு,

“இப்போ தான் ஆச்சு! சூடாற முன்னால கூப்பிடலாம்னு தான் இருந்தேன். வாங்க மாமா. சத்யா வா! சந்தா பிரெஷ்ஷாகிட்டு சீக்கிரம் வா!” என்று கொண்டே யுவனியைத் தூக்கிக் கொண்டாள்.

சத்யா, தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட அறையை சாந்தனாவுக்குக் கை காட்டி விட்டு உணவு மேஜையில் வந்து அமர்ந்து கொண்டாள். நெடுநாட்கள் கழித்து அக்காளின் உணவை ரசித்து ருசிக்கப் போகும் ஆர்வம் அவளுக்கு.

இருவருக்கும் உணவு பரிமாறியவள் சிறியவளுக்கு ஊட்டிவிடத் துவங்க,

“நந்தா எங்கேம்மா?” என்று கேட்டார், கிருஷ்ணமூர்த்தி.

“ஏதோ முக்கியமான வேலைனு சொல்லிட்டு கிளம்பிப் போனாரு மாமா. இன்னுமே வரல. எங்க போனாருனு தெரியல..”

“நீயும் உட்கார்ந்து சாப்பிடும்மா..” என வழமை போல் அன்புக் கட்டளை பிறப்பித்தவரைப் பார்த்து மறுப்பாகத் தலை அசைத்தவள்,

“இல்ல மாமா, இருக்கட்டும்! அவர் வந்ததும் சாப்பிட்டுக்கறேன்..” என்றிட, அதற்கு மேலும் வற்புறுத்துவானேன்?

“அவன் எத்தனை மணிக்கு வருவானோ.. எங்க போறேன்னு கூடவா சொல்லிட்டு போகல?” என பொய்யாக சலித்துக் கொண்டார், பெரியவர்.

இங்கே, அறையை சுற்றிப் பார்த்து, ‘யப்பா! இவ்ளோ பெருசாருக்கு!’ என பிரமித்து, இனி எப்படியெல்லாம் வாழ முடியுமென தன்னை மறந்து கனவுலகில் சஞ்சரித்து விட்டு, ஆட்டமும் பாடலுமாய் குளியலறை முடித்துக் கொண்டு சாந்தனா உணவு மேஜைக்கு வரும் போது, மூர்த்தி உணவை முடித்துக் கொண்டு எழுந்து விட்டிருந்தார்.

“என்னமா.. வீட்டுக்கு வர லேட்டு? ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என துண்டில் கை துடைத்தவாறு அக்கறையாக கேட்டவரைப் பார்த்து ‘இல்லை’ எனும் விதமாகத் தலை அசைத்தவள்,

“அப்படிலாம் எதுவும் இல்லை மாமா. ஃப்ரெண்டு வீட்டுக்கு போயிருந்தேன். அதான்!” என்றாள் சமாளிப்பாக.

அவள் வேலைக்கு சேர்ந்து கொண்ட நாளிலே, நந்தன் மனையாளின் அலைபேசி வழியே அவளுக்கு அழைப்பு விடுத்து அலுவலகத்தில் எல்லாம் நலமா என்று விசாரித்தறிந்து கொள்ள,

‘ஆமா மாமா. நான் கேட்கவே நின்னேன், இது உங்களுக்கு தெரிஞ்சவங்க ஆபீஸா என்ன? கீர்த்தி அக்கா புருஷனை இங்க பார்த்தேனே..’ என எதுவும் அறியாத பாவனையில் கேட்டு வைத்தாள் சாந்தனா.

அதற்கு மேலும் மறைப்பானேன் என்று நினைத்து உண்மையை அவன் உடைத்து இயம்பிவிட, ‘அப்படியா?’ என சாந்தனா புதிதாக அதிர்ந்து கூவியதெல்லாம் சிறப்பு பரிசுக்குத் தகுதி பெற்ற அவளின் சாமர்த்தியப் பக்கம் தான்!

மூர்த்தி அங்கிருந்து அகன்றதும்,

“இதுவரை எப்படியோ.. சின்ன பொண்ணு தானேனு கண்டிக்காம விட்டுட்டேன் சந்தா. இனியும் என்னால அப்படி இருக்க முடியாது. அம்மாவோட வளர்ப்பை, யாராவது மனசால கூட உச் கொட்டுற அளவுக்கு நீ நடந்துக்க கூடாதுங்குறதுக்காக சொல்றேன், கேட்டுக்கோ..

இப்போ நீ இருக்குறது இன்னொருத்தங்க வீட்டுல இல்லையா? அதுனால பார்த்து பக்குவமா நடந்துக்க பாரு. இனி நீ ஆபீஸ் முடிஞ்சதும் நேரா வீட்டுக்குத் தான் கிளம்பி வரணும். புரிஞ்சுதா?” ஆதங்கத்துடன் தொடங்கி, மிரட்டலில் முடித்தாள் யுக்தா.

“என்ன! கூப்பிட்டு வைச்சு அசிங்கப்படுத்துறியா யுக்தா? தங்கினா இங்க தான் தங்குவேன்னு நான் ஒன்னும் தவம் கிடக்கல.

எல்லாத்தையும் செய்து தர்றேங்குறதுக்காக இப்படி கண்ட்ரோல் பண்ண நினைக்காத! நீ உன் மனசில என்னனு நினைச்சிட்டு இருக்க? வேலைக்கு போன்னதும் போனேன் தானே.. இங்க எல்லாமே நீ நினைச்சபடி நடக்கணும்னு நினைக்கிறியா?

செலவு செய்றேங்குறதுக்காக இப்படி அடிமையாக்க நினைக்காத!” என்று எகிறிக் கொண்டு வந்தவள் ‘ஈகோ’ அடி வாங்கியதில் அள்ளி வீசிய வார்த்தைக் கங்குகள் யுக்தாவைப் பெருமளவு வருத்தினாலும்,

“கூட கூட பேசிட்டு நிற்காத சந்தா.. நீ வேணா நான் கண்ட்ரோல் பண்ணுறதாவே நினைச்சிக்கோ!  உன் லவ் பத்தி வீட்டுல பேசணுமா.. அப்போ நான் சொல்றதை நீ கேட்டுத் தான் ஆகணும்.” என்றாள், முகத்தில் ஒட்ட வைத்த புன்னகையுடன்.

தொடர்ந்து, “அப்பறம் என்ன சொன்ன? வேலைக்கு போனு சொன்னதும் போனதா சொன்னியே! உண்மை தான். ஆனா அது ஒன்னும் என் செலவை கவர் பண்ணிக்க இல்ல. உன் நல்லதுக்காக தான் சொன்னேன்னு மறந்துட்ட போலருக்கு..” என்றவள் தோளிலே சாய்ந்தபடி சுகமாக உறங்கிப் போயிருந்தவளைத் தட்டிக் கொடுத்தபடி நகர்ந்தாள்.

கண்களில் கோடாய் வழிந்தது, கண்ணீர் துளி!

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!