வெளிர் நிற ஆடையில், லட்சக்கணக்கான ஜோடிக் கண்களுக்கு விருந்தூட்டியபடி வானவெளியில் உலா வந்து கொண்டிருந்தவளை, மார்புக்கு குறுக்காகக் கைகளை கட்டியபடி பார்த்திருந்தாள் சம்யுக்தா.
ஊர் உறங்கிப் போயிருக்கும் காரிருள் சூழ்ந்த இந்நிஷப்த ராத்திரிப் பொழுதில், சகல ஒப்பனைகளுடன் இந்த நிலவு யாருக்காகத் தான் காத்திருக்கிறாளோ! ஒருவேளை, இந்த பூலோகத்துப் பூவை போன்றே அகம் திருடியவன் மனை திரும்பும் வரை தனிமையில் வானவீதியிலே நடை பயின்று கொண்டிருக்கிறாளோ, என்னவோ?!
தெரியவில்லை.
உடலை தொட்டுச் சென்ற கூதல் காற்று சில்லென்ற உணர்வைக் கொடுக்க, “ஸ்ஸ்..” என சிலிர்த்து கண்மூடிய கணத்தில், போர்டிகோவில் வழுக்கிக் கொண்டு வந்து நின்றது, யதுநந்தனின் கார்.
சத்தம் கேட்டு விழி திறந்தவள், பேல்கனியின் ஹாண்ட் ட்ரில்லில் சாய்ந்தபடி தரை நோக்கினாள்.
‘வேலை இருக்கு’ என்று விட்டுச் சென்றவன் இதோ இப்போது தான் வீடு திரும்பி இருக்கிறான். நேரம், பன்னிரண்டு மணிக்கு ஐந்து நிமிடங்கள்!
அன்னைக்கு உணவூட்டி, யுவனியை தட்டித் தூங்க வைத்து விட்டு அறைக்கு வந்தவள், ‘எங்க இன்னுமே இவரைக் காணோம்’ என்ற யோசனையுடன் அவனுக்குப் பலமுறைகள் அழைப்பு விடுத்தாள்.
‘சுவிட்ச் ஆஃப்’ என ஒரே பதிலை மீண்டும் மீண்டும் சொல்லிக் கடுப்பேற்றியது, அலைபேசி.
“ப்ச்!” என்ற சலிப்புடன் அதைக் கட்டிலில் தூக்கிப் போட்டு விட்டு பேல்கனியில் வந்து கை கொண்டவளுக்கு, இரவின் நிஷப்தமும், நிலவின் களங்கமற்ற தோற்றமும் மனதுக்கு இதத்தைக் கொடுத்தது.
அதிலே திளைத்துப் போனவளுக்கு, நந்தனின் கார் சத்தம் கேட்கும் வரை நேரம் போனதே தெரியவில்லை என்பது தான் உண்மை!
தலையை இருபுறமாக ஆட்டி, கண்களில் குடியிருந்த கொஞ்சநஞ்ச மயக்கத்தையும் தூர விரட்டியவளின் இதழில் மென்னகை மிளிர்ந்தது. கண்களில், பல வருடங்களுக்கு முன்பு தொலைந்து போன அதே உயிர்ப்பு; உடல்மொழியில் புதிதாக ஒரு இளமையின் சுறுசுறுப்பு.
அறைக்குள் அரவம் கேட்டு, மெல்ல எட்டிப் பார்த்தாள்.
“தூங்கலையா சம்மு?” என்று இயல்பாகக் கேட்டவன் அவள் பதில் கூற வாய் திறக்க முன்பே குளியலறைக்குள் புகுந்து, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவளருகே வந்து நின்றிருந்தான்.
அவன் வரவை உணர்ந்து புன்னகை சிந்தியவள்,
“நிலவுல இப்போ என்னத்த தேடிட்டு இருக்க சம்மு?” என பக்கவாட்டில் முகத்தைத் திருப்பி தன்னிடம் இயம்பியவனின் புறமாகத் தன் பார்வையை நிலைக்க விட்டாள்.
“என்னவா இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க?”
சிறிது நேரம் யோசிப்பது போல் பாவனை செய்தவன், “ம்ம், இன்னுமே நிம்மதியைத் தான் தேடறீயா என்ன? நீ ஹாப்பியா இல்லயா..” என்று வினவினான், சட்டென புஸ்வாணமாகிப் போன முகத்துடன்.
“இல்லைங்க, நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன். உங்களால!” என இன்முகத்துடன் உரைத்தவளின் குரல் இறுதியில் தேய்ந்து, அவனை சென்றடையாமல் அவளிலே தேங்கியது.
“அப்பறம் என்ன?”
“சார், இது என்ன கேள்வினே எனக்கு புரியல. எப்போவும் நான் மணிக்கணக்கா என்னோட கஷ்டங்களை சொல்லிப் புலம்புறப்போ கொஞ்சமும் சலிக்காம கேட்டுட்டு இருக்கும் அது. இப்போ நான் சந்தோசமா இருக்கேன். அதை ஷேர் பண்ணிக்க வேண்டாமா.. இது தான் உங்க நியாயமா?” என்று கேட்டவளின் கண்கள் இருளில் பளபளத்தன.
அதன் பிறகு அமைதியிலே நிமிடங்கள் சில கழிந்து போயின.
“ஆமா, உங்க ஃபோன் எங்க?” என வில்லில் இருந்து புறப்படும் அம்பாய் திடீரென அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒலித்தது யுக்தாவின் குரல், அன்றொரு நாள் அவன் அவளிடம் கேட்ட அதே தோரணையில்.
“அதுல சார்ஜ் தீர்ந்து போச்சு சம்மு..”
“ஃபோனுக்கு சார்ஜ் போட்டு வைக்க முடியாத அளவுக்கு என்ன வேலை சார்?” என உப்பிய முகபாவனையோடு கேட்டவளைத் திரும்பி முறைத்தவன்,
“என்னோட டயலாக்ஸ் எனக்கே ரிப்பீட் ஆகுது, பார்த்தியா?” என்று கேட்டான், ஒற்றைப் புருவத்தை தூக்கி அவளைப் பார்வையால் மிரட்டியபடி.
“ஏன் கூடாதா?” என இளமைத் துடிப்போடு வாயாடியவள் அறைக்குள் நுழைய,
“நேரம் பார்த்தியா? நீ ஏன் தூங்கல.. நாளைக்கு ஸ்டோருக்கு வேற போகணுமே?” என்று கேட்டபடி பின்னோடே வந்தவன், கையிலிருந்த துண்டை மேஜையோடு சேர்த்து போடப்பட்டிருந்த இருக்கையில் விரித்துப் போட்டான்.
அவனது கேள்விக்கு பதில் இயம்பாமல், “சீக்கிரம் வாங்க. உங்களுக்கு டின்னர் எடுத்து வைக்கிறேன்..” என்றுவிட்டு நகர எத்தனிக்க,
“பசிக்கவே இல்ல சம்மு. ஆபீஸ்ல, எம்ப்ளாயிஸ் ஏதோ பிரச்சனை பண்ணுறாங்களாம்னு டேட் சொல்லிட்டு இருந்ததால, அதைப் பத்தி பேசிட்டு வரலாம்னு ஆதவன் வீட்டுக்கு தான் போயிருந்தேன். இனி கவனிப்பைப் பத்தியெல்லாம் சொல்லவும் வேணுமா.. புருஷனும் பொண்டாட்டியும் ஒருவழி பண்ணிட்டாங்க! வயிறு ஃபுல்!” என்றான், தட்டையான வயிற்றைத் தடவிக் காட்டியபடி.
“அப்போ சாப்பாடு எடுத்து வைக்க வேண்டாமா?”
“வேணாம் சம்மு. நீ போய் தூங்கு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு நான் தூங்கிடறேன்!” என்று கொண்டே அறைக்குள் போடப்பட்டிருந்த சோபாவில் லேப்டாப்புடன் சென்று அமர்ந்தான்.
“ம்ம், சரிங்க..” என முனகியவளின் வயிற்றுக்குள் புகைவண்டி அதிவேகமாக ஓடியது.
அவன் வந்ததும் ஒன்றாகவே சாப்பிட்டுக் கொள்ளலாம் என பட்டினி கிடந்தவளுக்கு, இப்போது தனியாகச் சென்று சாப்பிட எண்ணமே வரவில்லை. அதுவுமன்றி, தன் ஒருத்திக்காகவென்று உணவு சமைக்க சோம்பல் பட்டவள் பசியைப் பொருட்படுத்தாமல், தலையிலிருந்த கிளிப்பைக் கழற்றிவிட்டுக் கட்டிலில் சாயப் போக,
“ஆமா, நீ சாப்பிட்டியா என்ன?” என திடுதிப்பென்று கேட்டான் நந்தன்.
பதறி எழுந்து நின்றவள் அவசரத்துக்கு பொய் சொல்லக் கூட நா எழாமல் திருதிருவென முழிக்க,
“என்ன!! அப்போ நீ சாப்பிடலையா சம்மு? எதுக்கு இப்படி பண்ணுறே.. எதுக்கு இவ்ளோ நேரமா நீ! ப்ச், முதல்ல என்கூட வா..” அதிர்ந்து, அதட்டலுடன் ஆரம்பித்தவன் இறுதி வரியை ஆதங்கத்துடன் உச்சரித்தபடி கதவைத் திறந்து கொண்டு வெளியேற,
“எனக்கு பசிக்கலங்க. நீங்க வேலைய செய்ங்க. எனக்கு தூக்கமா வருது!” என மறுக்கும் விதமாகப் பேசினாள், யுக்தா.
அவளை முறைத்தவன், “எனக்கு பசிக்குது!” என்றுவிட்டு திரும்பி நடக்க, இனி எங்கனம் அவள் மறுப்பதுவும், அவன் கேட்பதுவும்?
‘அந்நியன் மாதிரி பேசுறிங்களே! பசிக்கலைனு சொன்னிங்க; இப்போ பசிக்குது மாற்றமா பேசுறீங்க.. என்ன ராகமோ..’ என மனதினுள் புலம்பியபடி அமைதியாக அவனைப் பின் தொடர்ந்து வந்தவள், அவன் ஃப்ரிஜ்ஜைத் துழாவி பிரட், பட்டர் சகிதம் உணவு மேஜையில் அமரவதைப் பார்த்துவிட்டு,
“ஐந்து நிமிஷம் பொறுத்திங்கனா நான் ஏதாவது நார்மலா செய்து கொடுக்குறேன்ங்க..” என்றாள், அவசரமாக.
“ஏற்கனவே லேட்டு! இதுவே பரவால்ல. எனக்கு ஒரு கிளாஸ் மில்க் கிடைக்குமா?”
சரியெனும் விதமாகத் தலை அசைத்தவள் பாலைக் கொதிக்க வைத்து, அதை தனக்கும் அவனுக்குமாய் இரண்டு குவளைகளில் ஊற்றி, பாதாம் நறுக்கித் தூவி எடுத்து வர,
“வந்து உட்காரு சம்மு..” எனக் கூறி தட்டை அவள் புறமாகத் தள்ளி வைத்து, கண்களால் சாப்பிடுமாறு பணித்தான் ஆடவன்.
அவனின் இந்த அக்கறை பிடித்திருந்தது, யுக்தாவுக்கு.
ஒரு குவளையை அவன் புறமாக நகர்த்தி வைத்துவிட்டுப் புன்னகை முகமாய் அவனுக்கு நேர் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தவள், “நீங்களும் சாப்பிடுங்களேன்..” என்க, மறுக்காமல் சிறு தலை அசைப்புடன் பட்டர் தேய்த்த பிரட்டில் பாதியை எடுத்துக் கொண்டான்.
“ரொம்ப தேங்க்ஸ்ங்க..”
“இதுக்கெல்லாமா தேங்க் பண்ணுவாங்க? இது தான் லாஸ்ட்டா இருக்கணும். நைட்டு நான் எங்கயாவது வெளியே கிளம்பிப் போயிட்டா சாப்பிடாம இருக்காத என்ன.. சில நேரங்கள்ல நான் வெளியவே டின்னெர் முடிச்சிக்குவேன். புரிஞ்சுதா?” என்றவனின் குரலில் அதட்டலைத் தாண்டி,
‘நன்றிங்குறா!’ என்ற மனத் தாங்கல் அப்பட்டமாக வெளிப்பட்டது.
சம்மதமாகத் தலை ஆட்டியவள், “ஆனா நான் இதுக்காக நன்றி சொல்லலங்க..” எனத் தயங்கி நிறுத்த, ஆடவனின் புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டுக் கொண்டன.
“பின்ன?”
“அது, அம்மா.. தங்கச்சிங்க.. அவங்களுக்காக நீங்க பார்த்து பார்த்து ஒவ்வொன்னையும் செய்ததுக்கு ரொம்ப நன்றிங்க. அம்மா எல்லாத்தையும் என்கிட்ட சொன்னாங்க..” என்றவளின் கண்களில் கண்ணீர் கோர்த்தது.
கண்களை சுருக்கியவன், “நன்றி சொல்லி அந்நியனா ஃபீல் பண்ண வைக்காத சம்மு! நான் ஆரம்பத்துலயே சொன்னது தான். உனக்கு உறுதுணையா இருப்பேன். எந்த ஹெல்ப்னாலும் நீ இப்படி தயங்கிட்டு இருக்காம என்கிட்ட கேட்கலாம்..” என்றான். குரலில் சிறு கடுமை வெளிப்பட்டது.
கண்களில் உடைப்பெடுத்த கண்ணீர் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறி நின்றாள் சம்யுக்தா.
‘கடவுளாப் பார்த்து தான் இவரை என் வாழ்க்கைக்கு அனுப்பி வைச்சிருக்கணும்..’ என யோசிக்காமல் இருக்க முடியவில்லை அவளால்.
அவருக்கு புரிதல் இல்லை, என்மேல் காதலே இல்லை எனப் பலபேர் கோர்ட் நீதிபதியின் முன்னிலையில் கண்ணீர் சிந்தி நிற்பதைப் பார்த்து அவள் நிறையவே வருந்தி இருக்கிறாள். யாரெவரென்று தெரியாமல் திருமணம் செய்து கொண்டுவிட்டால் இப்படியெல்லாம் பிரச்சனை வருமோ எனப் பயந்திருக்கிறாள்.
ஆனால் அந்தப் பயத்துக்கு அர்த்தமே இல்லை என்பது போல், இந்த ஓரிரு மாதங்களுக்குள் எவ்வளவு அழகாக தன்னைப் புரிந்து கொண்டுள்ளான். அதுவுமன்றி எல்லாவற்றிலும் துணையாக இருப்பேன் என சந்தேகத்துக்கு இடமில்லாத வாக்குறுதி வேறு அளிக்கிறானே?!
இத்தனைக்கே மனம் இனிக்கிறது. ஒருவேளை அவனின் நேசமும் தனக்கென்று ஆகி விட்டால் எப்படி இருக்கும்? மனம் இன்பத் தித்திப்பில் ஆழ்ந்து விடாதா என்ன.. பூவுலக வாழ்க்கை சொர்க்காபுரியாக மாறி விடுமல்லவா என நினைக்கும் போதே கன்னங்கள் சிவந்தன; மனம் தித்தித்தது.
அடுத்த நொடியே, ‘ஆனா அதுக்கு சாத்தியம் இருக்கா என்ன.. பல்லவி இன்னும் அவர் மனசுல வாழ்ந்துட்டு தான் இருக்கா! அவரைப் பொறுத்த வரை, நான் அவனுக்கு நல்ல ஸ்நேஹிதி மட்டும் தான்’ என்ற நினைப்பில், மலர்ந்த புன்னகை சருகாய் வாடிப் போனது.
அவளின் முக பாவனைகளை உள்வாங்கியபடி கடினப்பட்டு பிரட்டை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தவன் திடீரென வாடிய முகமலரை உற்றுப் பார்த்தபடி, “என்னாச்சு?” என்று வினவ, சட்டென்று சுதாகரித்துக் கொண்டாள் யுக்தா.
“ஒ.. ஒன்னுமில்லங்க..”
“ஒன்னும் பிரச்சனை இல்லையே?”
இல்லை என்பதாய் தலை அசைத்தவள் அமைதியின் மறு உருவமாக சாப்பிட்டு முடித்து, குவளைகளைக் கழுவி வைத்து விட்டு அறைக்குள் நுழையும் போது,
“ம்ம்கூம்! நீ எதைப் பத்தியும் யோசிக்காத. நான் நாளைக்கு ஆபீஸ் வரலாம்னு தான் யோசிச்சிட்டு இருக்கேன்..” என அலைபேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தான் நந்தன்.
அது ஆதவனாக இருக்குமென்று ஊகித்தபடி, அவனைக் கடந்து சென்று, பேல்கனி கதவை மூடப் போனவள் கண் சிமிட்டிச் சிரித்த நிலவை மீண்டுமொரு முறை நிமிர்ந்து பார்த்தாள்.
சட்டென புன்னகை அரும்பிற்று அவள் முகத்தில்! விரித்து விடப்பட்டிருந்த கருங்கூந்தல் சில்லென்றடித்த காற்றின் உதவியோடு அவளின் கன்னங்ளுடன் இழைந்தது.
“சியூர் ஆதவா! நான் கண்டிப்பா நாளைக்கு வருவேன்..” என்று கூறிக் கொண்டு அழைப்பைத் துண்டித்து விட்டு நிமிர்ந்தவனின் பார்வை பாவையில் பதிந்தது.
அடங்காமல் காற்றில் நர்த்தனமாடிய அந்தக் கூந்தல் கற்றைகளை அவளின் காதோரம் சொருகி விட ஆடவன் மனம் ஆசை கொண்டது; கைகள் பரபரத்தன.
தலையை இருபுறமாக ஆட்டி தன் சிந்தனைகளை தூர விரட்டியவனின் பார்வை நொடிப் பொழுதேனும் அவளை விட்டு விலகிய பாடில்லை.
தாயின் சொல்லுக்கு அடங்காத சிறுவனன் போல் வேண்டாமென மறுக்க மறுக்கக் கேளாது மனம் அவளையே ரசிக்கச் சொன்னது. மாநிற அழகி அவனைத் தன் மோகனாங்க முறுவலால் மயக்கினாள்; அவனின் சிந்தனைகள் தன் வசப்படுத்திக் கொண்டு சண்டித்தனம் செய்தாள்.
“அது வந்துங்க..” அவளே தான் அழைத்தாள்.
“ஆங்!” எனத் தெளிந்தவன் சில நொடி இடைவெளியில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, “உன்கிட்ட கொஞ்சம் பேசணும் சம்மு. இப்படி வா!” என்று கூறியபடி சோபாவில் அமர,
“இதோங்க..” என்றவாறு கதவை சாற்றிக் கொண்டு அவனை நெருங்கி வந்தவள், “என்ன?” என்று கேட்டுக் கொண்டே அவனுக்கு சற்றுத் தள்ளி அமர்ந்தாள்.
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..”
“சரி, பேசுங்க..” என்றவள் கை கட்டியபடி சோபாவில் சாய, அவன் மனம் அசைந்தாடிக் கொண்டிருந்த அவளின் கருங்குழலில் லயித்தது, மீண்டும்.
“நம்ம கலியாணத்துக்கு நெருங்கின சொந்தங்களைத் தவிர வேற யாரையும் இன்வைட் பண்ணல சம்மு. பிறகு பெருசா ரிசெப்ஷன் வைச்சுக்கலாம்னு டேட் ஆடி நின்னுட்டதால நானும் எதுவும் மறுத்து பேசல.
நல்ல நாளாப் பார்த்து நானே ஏற்பாடு பண்ணுவேன்னு சொன்னவர், இவ்ளோ நாள் கழிச்சி இன்னைக்கு என்னைக் கூப்பிட்டு இந்த வார இறுதியில் ரிசெப்ஷன்னு சொல்லுறாரு..” என்று கூறியவன் பெருவிரலால் புருவத்தை அழுத்தமாக நீவி விட,
“நல்ல விஷயம் தானேங்க?” என தன்னை மறந்து வாய் விட்டாள், சம்யுக்தா.
“என்ன!”
“இல்லைங்க.. அ.. அது..” எனத் தடுமாறியவள், “நான்.. நான் வேணா மாமா கிட்ட பேசி பார்க்கட்டுங்களாங்க?” என்று திருதிருத்த பார்வையுடன் வினவ,
“என்னனு?” என்று புருவம் நெறிய கேள்வி எழுப்பினான், நந்தன்.
“அது.. இதுலாம் எதுவும் வேணாம்னு!”
“ம்க்கும்! அவர் கேட்பாரு போல தெரியல. நானும் பேசி பார்த்துட்டேன்..” என்றவன் நெடிய பெருமூச்சைத் தொடர்ந்து,
“ரிசெப்ஷன் வைக்கிறதால உனக்கு எந்தப் ப்ரோப்லமும் இல்லையே?” என்க, இல்லை எனும் விதமாய் இடவலமாகத் தலை அசைத்தாள் யுக்தா.
“மார்னிங் தாலி பிரிச்சி கோர்த்துட்டு, நைட் ரிசெப்ஷன் ஏற்பாடு பண்ண போறேன்னு சொன்னாரு. நீ கொஞ்சம் எதுக்கும் அவர் கிட்ட பேசி பாரு சம்மு..”
‘சரி’ என்றவளுக்கு உற்சாகம் தாளவில்லை.
விடிந்ததும் மூர்த்தியை அணுகி இதைப் பற்றிப் பேச, நந்தன் கூறியது போலவே, வரும் ஞாயிறன்று தாலி பிரித்துக் கோர்க்கும் சம்பிரதாயமும், இரவில் ரிசெப்ஷனும் ஏற்பாடு செய்ய இருப்பதாகச் சொல்லி, அவளின் தலை அசைப்பையும் பெற்றுக் கொண்டார், பெரியவர்.
மண்டையைக் குடையும் யோசனைகள் யாவும் இரக்கம் பார்த்து சற்று விலகி நிற்க, முழு மனதுடன் அந்த நாளை எதிர்பார்த்து நடமாடித் திரியலானாள், சம்யுக்தா.
மனம் சிறகுன்றி பறந்தது, பரந்து விரிந்த நீலவானிலே!
இந்த உற்சாகமும், ஆனந்தமும் நீடிக்குமா என்று கேட்டால், தெரியவில்லை. அதை விதியல்லவா தீர்மானிக்க வேண்டும் என்பது யதார்த்தமான பதில்.