நாணலே நாணமேனடி – 19

5
(3)

சம்யுக்தா ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நாளும் வந்தது.

திருமணத்துக்கு உடுத்திக் கொண்ட அதே சந்தன நிற பட்டுச் சேலையில், தலை நிறைய மல்லிப்பூ சூடி இருந்தவளை விட்டு வேட்டி சட்டையில் இருந்தவனுக்கு பார்வையை அகற்றவே முடியவில்லை.

திருமணமன்றும் இதையே தான் கட்டி இருந்தாள். சொல்லப் போனால் சகல ஒப்பனைகளுடன், கைகளில் மருதாணி மணம் வீச, கூந்தல் அலங்காரங்களுக்குச் சற்றும் குறைவின்றி இதை விட ஜகஜோதியாய் ஜொலித்தாள்.

ஆனால் அன்றெல்லாம் அவளைப் பார்த்து மயங்கி நிற்கவில்லை யதுநந்தன். ஏதோ இன்று தான் அவளை முதன் முதலாக சேலையில் பார்ப்பது போல்.. இன்று தான் அவள் சந்தன நிற சேலையில் அழகே உருவாக தோற்றமளிப்பது போல்.. அடிக்கடி அவளை நோக்கி அவனின் கண்கள் ரசனையுடன் பயணித்தன; லஜ்ஜையின்றி நிலைத்தன.

அங்க வளைவுகளை விரசமின்றிப் புடம் போட்டுக் காட்டும் விதமாக அவள் சேலையை மடிப்பெடுத்துக் கட்டியிருந்த அழகு, அவனுக்குள் தடுமாற்றத்தை விதைத்தது.

பேச்சு ஒருபுறமிருக்க, பார்வை மட்டும் கள்ளத்தனமாக அவளில் பதிந்து மீள்வதை தன் முழுநேர பொறுப்பாக ஏற்றுக் கொண்டிருந்தது.

அவனைத் திருட்டு வேலை பார்க்க வைத்த பெண்ணோ, இங்கே, இருக்கையில் சொகுசாக சாய்ந்தபடி அருகில் அமர்ந்திருந்த வித்யாவுடன் பேச்சு வளர்த்துக் கொண்டிருந்தாள்.

“இப்போ என்னாச்சு யுக்தா?”

“என்னனு சொல்றதுடி? அவளை என்ன சொல்லி திருத்துறதுனு தெரியல. எனக்கு எதுவும் புரிய மாட்டேங்குது. பேசாம அவ ஆசைப்படி கலியாணம் பண்ணி வைச்சிட்டா என்னனு தோணின மறு நிமிஷம், கொடுக்க வீடு இருக்கா.. செலவு செய்ய பணமிருக்காங்குற நினைப்பும் கூடவே வந்து ஒட்டிக்கிது!” என்றாள், பெருமூச்சுடன்.

“நல்ல நேரத்துல போய் அவளைப் பத்தி பேசி டென்ஷனாகிட்டு! ப்ச், விடுடி. அப்படியே உன்னை இழுத்து வைச்சு அறைஞ்சிட போறேன்..” என அதட்டிய வித்யாவின் முகத்தில் அப்பட்டமான எரிச்சல்!

‘சிங்காரி எங்கே?’ என்று கூடத்தைக் கண்களால் அலசியவளின் பார்வையில் விழுந்தாள், பழரச கிளாஸுடன் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்த சாந்தனா!

தலையை இருபுறமாக ஆட்டி, “ப்ச், இவளைக் கண்டாலே பிடிக்க மாட்டேங்குது. டென்ஷன் ஏத்துறா கடன்காரி!” என சலித்துக் கொண்டவள்,

“வித்யா, அதோ ஸ்டேர்ஸ் கிட்ட கீர்த்தனா நின்னுட்டு இருக்காங்க பாரு. ரொம்ப டயர்ட்டா தெரியுறாங்க. குடிக்க ஏதாவது எடுத்து கொடுத்துட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க சொல்லிடறியாடி? பாவம்!” என்று இரக்கப்பட்ட தோழியைப் பார்த்து அனிச்சையாகப் புன்னகை சிந்தினாள்.

‘இதான் என் தோழி, யுக்தா!’ என்று பரவசத்தில் கூவிய மனதை மெல்லத் தட்டி அமைதிப்படுத்தியவள்,

“சரி, நான் போறேன்டி.. அதுக்கு முதல், அதான் தாலி கோர்த்து முடிச்சிட்டாங்களே! சடங்கு, சம்பிரதாயம் முடிஞ்சி போச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல ரிசெப்ஷன் வேற! அதனால நீ போய் ரெடியாகு..” என்று கூறியதை ஆமோதிக்கும் விதமாக,

“இதை சொல்லத் தான் நானும் வந்தேன்..” என்றாள், எங்கியிருந்தோ ஓடி வந்த ஒரு பதின்ம வயதுப் பெண்.

சம்யுக்தா கண்களை சுருக்கினாள்.

அதற்குள் அவர்களை நெருங்கி வந்து விட்டிருந்த நந்தன், “என்னாச்சு சினேகா?” என்று புதியவளிடம் வினவ,

“அம்மா, அண்ணிக்குப் போய் ரிசெப்ஷனுக்காக ரெடியாக சொன்னாங்க. நேரமாகிட்டே இருக்குன்னாங்க அண்ணா.” என்றாள், உட்சென்ற குரலில்.

“சரி, நீ போ!” எனக் கூறி அவளை அனுப்பி வைத்தவன், “அப்பாவழி உறவுக்கார பொண்ணு சம்மு. எனக்கு தங்கச்சி முறை. பேர் ஸ்னேகா!” என்க, ‘புரிந்தது’ எனும் விதமாகத் தலை அசைத்தாள், யுக்தா.

“அப்பறம், நீ இப்போ போய் ரெடியாகுறது தான் நல்லது. இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சவங்க வர ஆரம்பிச்சிடுவாங்க..” என்று கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தபடி சொன்னவன்,

“ஹெல்ப்க்கு நீங்களும் போங்க சிஸ்டர்..” என்றான், நகர முயன்ற வித்யாவிடம்.

“ஹா, கண்டிப்பா!” என்றவள் கீர்த்தனா நின்றிருந்த திசையில் கை காட்டி,

“முதல்ல நான் போய் கீர்த்தனாவைக் கவனிச்சிட்டு வரேன். அவ ரொம்ப டயர்டா இருக்கானு யுக்தா டென்ஷன் ஆகுறா..” என்று விட்டுச் செல்ல, நந்தனின் பார்வை கனிந்தது.

“இல்ல, அது வந்துங்க.. ஒரு ஓரமா உட்கார்ந்திருங்கனு நான் பலவாட்டி சொல்லியும் அவங்க கேட்கவே இல்ல. அதுனால தான்!” என விளக்கத்துக்காக முந்திக் கொண்டவளைப் பார்வையால் அமைதிப் படுத்தினான், ஆடவன்.

அவளின் இந்த இளக்கமும், இளகிய மனமும் தானே அவனை ஒரு மாயப் பாதாளத்தில் ஒவ்வொரு நாளும் மெல்ல மெல்லத் தள்ளிக் கொண்டிருக்கிறது?

பிறந்த வீட்டினரின் மீது அவள் காட்டும் கரிசனமும், சிறியவள் மீது குறையுறாது பொழியும் பாசமழையும், மூர்த்தியைத் தன் சொந்த தகப்பனைப் போல் அன்புடன் கவனித்துக் கொள்ளும் விதமும் என ஒவ்வொன்றும் அவன் மனக்கண் முன் மின்னலாய் தோன்றி மறைந்தது.

‘அப்போ நீ? அவ எல்லாரையும் கவனிக்கிறா! அன்பு காட்டுறா! அப்போ உனக்கு?’ என்ற அதி முக்கியமான கேள்வியை முன் வைத்தது, மனசாட்சி.

‘இந்த வினாவுக்கு விடை காணும் நேரம் இதுவல்ல’ என்று மனதிடம் கூறிக் கொண்டவனுக்கு எதைப் பற்றியும் வெகு ஆழமாக சிந்திக்க எண்ணமில்லை.

தலையை இருபுறமாகப் பலமாய் ஆட்டி யோசனைகளை தூர விரட்டியவனின் பார்வை, தேனை மொய்க்கும் வண்டாக, இன்னுமே நகராமல் கை பிசைந்து நின்றிருந்தவளில் பதிந்தது.

“வா சம்மு..” என அவளை நோக்கித் தன் வலக்கரத்தை நீட்ட, சுற்றி இருந்த உறவினர் தெரிந்தவர்களைக் கண்டு தயங்கி,

“இல்ல, நானே போயிப்பேன்ங்க..” என்றாள், நல்ல பிள்ளையாக.

கண்களைச் சுழற்றியவன், “சரி அப்போ, நீ ரூம்க்கு போ! ரெடியாக ரொம்ப நேரம் எடுத்துக்காத என்ன?” என்க, சரியென்றவள் சேலையின் இரு பக்கத்தை லேசாகத் தூக்கிப் பிடித்தபடி அறைக்கு விரைந்தாள்.

சரியாக அரைமணி நேரம் காற்றோடு கரைந்திருக்கும்!

சந்தன நிறத்திலிருந்து அடர் சிவப்பு நிற எம்பிராய்டர் சிஃபான் சேலைக்கு மாறி, அதற்கு மடிப்பு வைக்கப் போராடிக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.

‘நீ போ, நான் வருகிறேன்’ என்று கூறிவிட்டு நழுவிய வித்யாவை இன்னும் காணோமே என்ற எரிச்சல் அவளது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

கடைக்கு சுடிதார், வீட்டுக்கு தொங்க தொங்க டீஷர்ட் அல்லது இரவுடை என்பதைத் தாண்டி, ‘விஷேசம்’ என எந்தவொன்றுக்கும் அவள் பெரிதாக வெளிக்கிட்டுச் சென்றதில்லை.

தலைக்கு மேல் ஆயிரம் வேலைகள் வரிசை கட்டி நிற்கும் போது, விஷேசம், கலியாணம், கந்தூரி என அலைந்து திரியவெல்லாம் அவளுக்கு நேரம் மீதமிருக்கவில்லை என்பது உண்மை!

இருந்தாலும் இரண்டு மூன்று தடவைகள் தவிர்க்க முடியாத நேரங்களில் சேலை கட்டி இருக்கிறாள் தான். அதுவும் கட்டிலில் சாய்ந்தபடி சாவித்திரி சொல்லிக் கொடுக்க, அதன்படி கட்டி, ஓரளவு தெரிந்து வைத்ததைக் கொண்டு!

எது எப்படியோ, அன்று கீர்த்தனாவிடம் கூறியது போல சேலை கட்டிக் கொள்ள வெகு நேரம் எடுக்கும் யுக்தாவுக்கு. அவ்வளவாக கட்டிப் பழக்கமில்லாதபடியால், இதோ இப்போதும் சேலையும் கையுமாய் தடுமாறி நிற்கிறாள்.

அந்நேரம், கதவு தட்டப்பட்டது.

“வந்துட்டா போலருக்கு..” என்ற முணுமுணுப்புடன் சென்று கதவின் தாழ் நீக்கி விட்டுத் திரும்பியவள்,

“எவ்ளோ நேரமா இந்த சேலையோட மல்லுக் கட்டறேன் தெரியுமா? காலைல கீர்த்தனா வந்து கட்டி விட்டதால சரியா போச்சு. வரேன்னு சொல்லிட்டு இவ்ளோ நேரமா நீ எங்க போயிருந்த வித்யா?” என சேலையை உதறியபடி கேட்க, அவள் நின்றிருந்த கோலம் கண்டு கதவைத் திறந்து கொண்டு அறைக்குள் நுழைய காலடி எடுத்து வைத்தவனுக்கு மூச்சடைத்தது.

நிலை குத்திய கண்களோடு மூச்சை வேகமாக இழுத்து வெளியேற்றி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றவனுக்கு, அவள் கூறிய எதுவும் செவியில் ஏறவில்லை.

திரும்பிச் சென்றுவிடலாம் என நினைத்து வந்த வேகத்தில் சட்டெனத் திரும்பியவன், அப்போது தான் ஏதோ நினைவு வரப் பெற்றவனாய்,

“நீ கூப்பிட்டியா சம்மு?” என்று தனக்கு புறமுதுகு காட்டி நின்றவளிடம் கேட்க, அவ்வளவு நேரமும் வித்யா என எண்ணி வளவளத்துக் கொண்டிருந்த பூவையின் வாய், பூட்டு போட்டது போல் கப்பென்று மூடிக் கொண்டது.

ஒரு நிமிடம் என்ன நடப்பதென்று புரியாமல் உலகம் தலைகீழாகச் சுழலும் உணர்வு, பாவைக்கு!

தோளில் துஞ்சிக் கொண்டிருந்த சேலை முந்தானையை இழுத்து சரி செய்து கொண்டு அவசரமாகத் திரும்பியவள், “நா.. நான் கூப்பிடலையே..” எனத் திக்க,

“வித்யா சொன்னாங்க..” என புருவத்தை நீவியவனுக்கும் அவ்விடத்தே நின்றிருக்க முடியாதபடி கண்கள் அலை பாய்ந்தன; மனம் தடுமாறியது; மூச்சுத் திணறியது.

“வி.. வித்யாவா?” என்றவளுக்கு, இது தோழியின் மிக மட்டமான திட்டமாக இருக்குமென்று தெளிவாகப் புரிந்து போக, பற்களைக் கடித்தாள்.

தான் நின்றிருந்த தோற்றம் வேறு அவஸ்தையைக் கொடுக்க, உச்சி முதல் பாதம் வரை காரணமேயின்றி சட்டென்று செம்மை படர்ந்தது.

“நீ குயிக்கா வர சொன்னதா வித்யா தான் சொல்லிட்டு போனா.. அப்போ நீ கூப்பிடலையா?”

தோழியை விட்டுக் கொடுக்க மனமின்றி, “ஹா.. நான் கூப்பிட்டேன் தான்ங்க..” என்று கூற, அவளது தலை அசைப்புக்கு ஏற்றபடி காதில் தொங்கிய ஜிமிக்கியும் சேர்ந்தாடியது.

“ஒன்னும் பிரச்சனை இல்லைல?”

இல்லை என மறுப்பாகத் தலை அசைத்தவளின் சிந்தனா சக்தி மனதின் எங்கோவொரு மூலையில் ஓடிச் சென்று ஒழிந்து கொள்ள, அழைத்ததற்கான காரணமாக எதைச் சொல்வது எனப் புரியாமல் கைகளைப் பிசைந்தாள்.

“சொல்லு சம்மு..”

“ஏன் கூப்பிட்டேன்னு ம்.. மறந்துட்டேன்ங்க..”

முன் நெற்றியில் அறைந்தபடி, “நல்ல பொண்ணு தான், போ! அதுக்குள்ளவா மறந்துட்ட?” என்று கேட்டவன் அப்பாவித் தனம் சொட்டச் சொட்ட அவள் பார்த்த பார்வையில் மொத்தமாக உருகித் தான் போனான்.

“சாரிங்க..”

பரவாயில்லை என்பதாகத் தலை அசைத்தவன், “ஏதாவது தேவைப்பட்டா கூப்பிடு..” என்று விட்டு நகரவெனத் திரும்பி, திடீரென,

“அப்பறம் சம்மு..” என்று கொண்டு மீண்டும் அவள் புறமாகப் பார்வையை செலுத்த, ஆசுவாசமாக மூச்சை இழுத்திருந்தவள் அதை வெளியேற்ற மறந்து அவனை சடேரென்று ஏறிட்டுப் பார்த்தாள்.

“நீ ஏன் இன்னும் ரெடியாகாம இருக்க? நேரமாகிடுச்சு..”

மூச்சை மெல்ல வெளியேற்றியபடி லேசாகக் குனிந்து தன்னை ஒருமுறை பார்த்துக் கொண்டவள், “எனக்கெல்லாம் எண்ணி பத்தே நிமிஷத்துல சேலை கட்டத் தெரியாதுங்க. அவ்ளோவா கட்டிப் பழக்கமில்லங்குறதால, நிறைய நேரம் எடுக்கும்..” என்றிட,

“ஓ..” என்று இழுவையாய் நிறுத்தியவன், “நான் ஏதாவது ஹெல்ப் தரணுமா?” என்று யோசிக்காமல் பட்டென்று கேட்டு வைக்க,

“எதே!” எனக் கூவ வந்தவளின் குரல், அவன் மேலிருந்து கீழாக பார்த்த ஆராய்ச்சிப் பார்வையில் சட்டென்று தொண்டைக் குழியோடு புதைந்து போனது.

கோலி குண்டாக விரிந்து கொண்ட கண்களை இமைகளால் பொத்திப் பாதுகாக்க மறந்து, “வே.. வேணாம்ங்க.. நானே பார்த்துக்குவேன். அவ.. வித்யா இப்போ வந்துடுவா..” என்று சமரசம் செய்ய முனைந்தாள்.

அவளை சில நொடிகள் யோசனையாகப் பார்த்துக் கொண்டிருந்தவன், தாடையைத் தேய்த்தபடி திரும்பி, கதவை அடித்து சாற்றித் தாழிட்டான்.

கூடவே, “அவசரத்துக்கு பாவமில்ல..” என்ற பாழாய் போன முணுமுணுப்பு வேறு!

யுக்தாவுக்கு மனம் திக்கென்றது.

“என்னாச்சு?” என்று தட்டுத் தடுமாறி வார்த்தைகளைக் கோர்த்து அவள் கேட்டுவிட,

“வித்யா உன் தங்கச்சி கூட எங்கயோ வெளிக் கிளம்பிப் போனா..” என்றான் நந்தன், வெள்ளை சட்டையின் கையை மேலேற்றி விட்டபடி.

“சா.. சாந்தனாவைக் கூட்டிக்கிட்டா?”

“இல்ல, சத்யா!”

“அதானே பார்த்தேன்! அவ சாந்தனாவைக் கூட்டிக்கிட்டுப் போய்ட்டாலும்..” என முணுமுணுத்தவள் பொறுமையாகத் தன் அருகே வந்து குனிந்து அமர்ந்தவனைப் பார்த்து விட்டு, “என்ன?” என்று பதற்றமாகக் கேட்டபடி பின்னகர,

“என்னாச்சு?” என்று வினவினான், எதுவும் அறியாத பாவனையில்.

“என்ன பண்ணுறீங்க? இப்படிலாம் கீழ உட்கார்ந்திங்கனா உங்க வெள்ளை வேட்டி அழுக்காகிடும். அதுவுமில்லாம, நீ.. நீங்க இப்படி..”

“ப்ச், நான் உனக்கு ஹெல்ப் பண்றேன். நேரம் ஆகிடுச்சு!” என இடையிட்டுப் பேசியவனின் குரலில், அவளின் தடுமாற்றத்தைக் கண்டு விழைந்த குறிஞ்சிரிப்பு இழையோடியது. அவளின் அந்தத் தவிப்பு மிகவும் பிடித்திருந்தது; மென்மேலும் அவனை ரசிக்கத் தூண்டியது.

“ஐயோ!”

“என்னாச்சு?” கண்களை சுருக்கியபடி அவளை நிமிர்ந்து பார்த்தான், சிறு முறைப்புடனே.

“யுவி உங்களைத் தேடப் போறா!”

அலங்கோலமாகக் கிடந்த சேலையை இழுத்து மடிப்பை சரி செய்தபடி, “அவ டேட் கிட்ட இருக்குறப்போ யாரையும் தேட மாட்டா. கொஞ்சம் வாயை மூடிட்டு இரு!” என்று அதட்ட, வெட்கமும் தயக்கமும் ஒருசேர அவளைப் படுத்தி எடுத்தது.

அவஸ்தையாகக் கீழுதட்டை கடித்து விடுவித்தவள், “உங்களுக்கு சேலை கட்டத் தெரியுமா என்ன?” என்று வினவ, ஏதோ கூற வாயெடுத்தவன் சிறு தலைப்பை மட்டும் பதிலாகக் கொடுத்து விட்டு அமைதியாகிப் போனான்.

‘ஆமாம், நான் தான் பல்லவிக்கு மடிப்பு எடுத்து கொடுப்பேன். அவளுக்கு நான் சேலை கட்டி விட்டா ரொம்பப் புடிக்கும்..’ எனக் கூற வந்தவன், என்றும் போலன்று இன்று மௌனியாகிப் போனதன் காரணம் தான் என்னவோ!?

ஏதோவொன்று அவனை, தன் முதல் மனைவி பற்றிய நினைவுகளை யுக்தாவிடம் பகிர விடாமல் தடுத்தது. அது என்னவாக இருக்குமென்று சற்றே ஆழமாக யோசித்தாலே அன்றி, அவனுக்குப் புலப்படப் போவதில்லை.

மடிப்பை சரி செய்து முடிக்க சரியாக ஐந்து நிமிடங்களை மாத்திரம் எடுத்துக் கொண்டவன், முந்தானையை ஒற்றையாக விரித்து விட்டால் நன்றாக இருக்கும் என்ற தன் கருத்தையும் கூற, முடியாது என மறுப்பானேன்?

சரி என்று தலை அசைத்து, முந்தானையின் நேர்த்தியான மடிப்பை உதறி ஒற்றையாக தோளில் வழிய விட்டாள்.

கண்ணாடியில் ஒருமுறை தன்னைப் பார்த்து திருப்திபட்டுக் கொண்டவள் கொண்டையிட்டிருந்த கூந்தலை விரித்து விட்டு வாரியபடி,

“தேங்க்ஸ்ங்க..” என்றாள், செந்தூர நிறத்தை தத்தெடுத்துக் கொண்ட கன்னங்களை மறைக்கப் போராடியபடியே!

“ம்ம்..” என்றவன் மெல்ல நகர்ந்து, வார்ட்ராபைத் துழாவி, கையளவான சிறு பெட்டியிலிருந்த செயினை எடுத்து அவளிடம் நீட்ட,

“நான் நெக்லஸ் போட்டுக்கலாம்னு இருக்கேன்ங்க. மாமா எனக்காகவே எடுத்துட்டு வந்து கொடுத்தது..” என்றாள், சம்யுக்தா.

“இது பெல்லி செயின். இந்த சேலைக்கு பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறேன். இஷ்டம் இருக்குனா மாட்டிக்கோ!” என்றவன் அதை அருகிலிருந்த மேஜை மீது வைத்து விட்டு வெளியேறிவிட,

“யாரோடதா இருக்கும்?” என்று யோசித்தவளுக்கு, ‘பல்லவி!’ என்ற உடனடி பதிலே கிட்டியது.

ஆனால் இரண்டு, இரண்டரை வருடங்களுக்கு முன்பு பல்லவி உபயோகித்த செயின் இந்தளவுக்கு புதிதாகத் தெரியுமா.. அவ்வளவாக உபயோகிக்காத ஒன்றாகவே இருப்பினும், இப்படி தகதகவென மின்னுமா என்ன..

யோசனையின் முடிவில் இதழ்களைப் பிதுக்கியவளுக்கு ஏனோ அதை இடுப்பில் மாட்டிக் கொள்ளத் துளியும் பிடிக்கவில்லை.

‘ஆனால் அவன் ஆசையாக சொல்லிச் சென்ற பிறகும் எப்படி?’ எனப் பலவாறும் சிந்தித்து களைத்தவள் தன் அலங்கார ஒப்பனைகளை முடித்துக் கொண்டு, தலை முடியை மொத்தமாக விரித்துவிட்டு, நுதலில் சரசமாட ஆசை கொண்ட ஓரிரு கற்றைகளை மட்டும் தளரப் பின்னி, ஒரு சிறு கிளிப்பினுள் அடக்கிக் கொண்டு வெளியே வரும் போது, அடர் சிவப்பு நிற சட்டையை மறைக்கும்படி மேலால் கறுப்பு நிற கோர்ட், பளபளக்கும் ஷூ சகிதம் அவளுக்கு காட்சியளித்தான், யதுநந்தன்.

கண்கள் மின்னின, சம்யுக்தாவுக்கு.

யுவனி எங்காவது தென்படுகிறாளா என கண்களை நாலாபுறமும் சுழற்ற, அவளைக் கண்டுகொண்டு நெருங்கி வந்தாள் கீர்த்தனா.

“நானே ஹெல்ப்க்கு வரலாம்னு இருந்தேன் அண்ணி. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க போனதால லேட் ஆகிடுச்சு. ஆனா அதுக்குள்ள நீங்களே ரெடி ஆகிட்டிங்க..” என்று கொண்டே அவளை மேலிருந்து கீழாகப் பார்த்தவள்,

“வாவ்! ரொம்ப நேர்த்தியாக சேலை கட்டி இருக்கிங்க அண்ணி. எனக்கு தெரியாது, அப்படியே கட்டினாலும் ரொம்ப நேரம் எடுத்துக்குவேன்னு பொய் தான் சொன்னிங்களா என்ன..” என வியப்பு மேலிடக் கேட்டாள்.

யுக்தாவுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. வெட்கம் பிடுங்கித் தின்றது.

அதேநேரம் தான் இங்கனம் பொய்காரியாய் நின்றிருப்பது போன்ற பிரமை ஒருவித தவிப்பைக் கொடுத்தது.

கைகளை பிசைந்தபடி, “அவர் தான் கீர்த்தனா..” என்று தயங்க, கீர்த்தனாவின் கண்கள் ஆச்சரியத்தில் மேலும் விரிந்தன.

‘அதை ஏன் கேட்குற? எனக்காகவே யூடியூப் பார்த்து சேலை கட்ட பழகினவர், என்னோட அன்பு புருஷன். நான் கட்டினா கூட இவ்ளோ நேரத்தியும், அழகும் இருக்காதுடி..’

‘அவரே சேலை தேர்ந்தெடுத்து வாங்கி வந்து, எனக்கு பார்த்துப் பார்த்துக் கட்டி விடுவாரு கீர்த்தி..’

‘என்னோட யதுவைப் போல ஒருத்தர் புருஷனா கிடைக்க ரொம்ப கொடுத்து வைச்சிருக்கனும்டி. நான் என்ன என்னலாம் ஆசைப்படறேனோ, அதையெல்லாம் கேட்காமலே செய்து கொடுக்குறாரு. நான் எதிர்பார்த்ததை விட ரொம்ப ஸ்வீட்டா இருக்காரு. கடவுள் எனக்கு கொடுத்த பெஸ்ட் கிஃப்ட் அவரு தான்னு தயங்காம சொல்லுவேன்..’

‘அவர் தான் ஒவ்வொரு தடவையும் எனக்கு அழகு பார்த்து சேலை கட்டி விடுவாரு..’ எனப் பல்லவியின் குரல்கள் மனதின் ஒவ்வொரு மூலையினின்றும் ஒலிக்க, கீர்த்தனாவுக்கு கண்கள் குளமாகின.

கடினப்பட்டு கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள் தங்களை நெருங்கி வரும் நந்தனைக் கண்டுவிட்டு, “இருங்க அண்ணி, நான் வந்திடறேன்..” என்று கூறிக் கொண்டு அவசரமாக அகன்றாள். தன்னுடைய விழிநீருக்கான காரணத்தை ஊகித்து, அவன் மனம் வருந்தக் கூடும் எனப் பயந்திருப்பாள் போலும்!

நிலவை மறைக்கும் மேகம் போல், ஒற்றையாக விடப்பட்டிருந்த சேலை வழியே அவள் இடையில் அணிந்திருந்த செயின் பளபளத்து தன் இருப்பை அவனுக்குக் காட்டியது.

புன்னகை விகசித்த முகத்தோடு அவளருகே வந்து நின்றவன், “வா!” என்று அழைக்க,

“எதுக்கு?” என்று அதற்கும் தயங்கினாள், மயக்கும் பெண்மான்.

“வந்தவங்களை வரவேற்க வேண்டாமா மக்கு! வேற எதுக்கு கூப்பிட போறேன்?” என்று உரிமையோடு கடிந்து கொண்டவனின் குரல் அவளை சிலிர்க்க வைத்தது. மௌனமாக சிரித்துக் கொண்டாள்.

அதன் பிறகு நேரங்கள் வேகமாகக் கழிந்து போனது.

வந்தவர்களை வரவேற்று, அவர்களுக்கு புதுமண ஜோடியை அறிமுகம் செய்து வைத்ததோடு, ‘இனி என் மகளும் இவதான்..’ எனக் கூறிய கிருஷ்ணமூர்த்தி, தான் இந்த இரண்டு ஆண்டுகளாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்த ‘தன் மனையாளின்’ நகையை, நந்தனைக் கொண்டு யுக்தாவுக்கு அணிவிக்கச் செய்தார்.

மனம் நெகிழ்ந்தது, பாவைக்கு.

வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு ஜோடியாய் நின்று நன்றி நவின்றனர். சத்யாவுடன் நன்றாக ஒட்டிக் கொண்டு விட்டதால், சிறியவள் மம்மி-பப்புவைக் கூட மறந்து போயிருந்தாள்.

தான் பல தடவைகள் சென்று அவளை அழைத்தும், சித்தி, சித்தி என சத்யாவுடன் ஒன்றிக் கொண்ட நினைவில் புன்னகை அரும்பியது, சம்யுக்தாவின் முகத்தில்.

“என்னாச்சு?” உன்னைக் கண்டு கொண்டேன் என்கின்ற ரீதியில், சட்டென்று கேள்வி புறப்பட்டது நந்தனிடமிருந்து.

“யுவி சத்யா கிட்ட ரொம்ப நல்லா ஒட்டிக்கிட்டா!”

“ம்ம், நானும் பார்த்தேன்..” என்றவனின் உதட்டில் முறுவல் நெளிந்திருந்தது.

வந்தவர்கள் முன்னிலையில் யதுநந்தன் தலை குனிந்து விடக் கூடாது என்பதற்காக வெகு கண்ணியமாகவே நடந்து கொண்ட சம்யுக்தா, ரிசெப்ஷன் முடியும் வரை அவனை விட்டு நொடிப் பொழுதேனும் நீங்கினாள் இல்லை.

பசை போட்டு ஒட்டிக் கொண்டது போல் அவன் பின்னாலே திரிய, நந்தனுக்கு சிரிப்பு வந்தது.

தன்னை மறந்து அவன் சிரிக்கும் போது, மனசாட்சி இன்றி கண்களை உருட்டி அவனைக் கடுமையாக முறைத்து வைத்தாள்.

ரிசெப்ஷன் நல்லாபடியாக முடிந்து வந்திருந்தவர்கள் கலைந்து போகவே வெகு நேரமாகியிருக்க, அறைக்கு வந்ததும் தொப்பென்று கட்டிலில் விழுந்தாள், சம்யுக்தா.

அவளுடனே அறைக்குள் புகுந்தவன், “சம்மு, போய் பிரெஷ் ஆகிட்டு வந்து தூங்கு..” என்று அதட்ட,

“ரொம்ப டயர்ட்!” என்று கொண்டே கட்டிலில் அங்குமிங்குமாய் உருண்டவள்,

“யுவி தூங்கிட்டா இல்ல?” என்று கேட்க, ஆமெனும் விதமாகத் தலை அசைத்தவன் துண்டை எடுத்து கட்டிலில் விட்டெறிந்து குளியலறையைக் கண் காட்ட,

“முடியல இவரோட!” என வாய்க்குள் முணுமுணுத்தபடி எழுந்து நின்றாள்.

தலையிலிருந்த கிளிப்பைக் கழற்றி ட்ரெஸ்ஸிங் டேபிள் மீது வைத்தவள், கூந்தலைக் கொண்டையிட்டபடித் திரும்பிப் பார்க்க, கட்டிலில் அமர்ந்து காலாட்டிக் கொண்டிருந்தவனின் முகத்தில் திடீர் தடுமாற்றம்! சட்டென பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

“நீங்க முதல்ல போய் பிரெஷ் ஆகிட்டு வாங்க..” என்று கூறி அவனை பெரிய மனதுடன் அனுப்பி வைத்தவள் தன் அலங்காரங்களைக் கலைந்து முடிக்கும் தருவாயில், முகத்திலிருந்து வழிந்த நீரை துண்டால் ஒற்றியபடி வெளியே வந்தான் யதுநந்தன்.

“வந்துட்டிங்களா?”

ஆமோதிப்பாகத் தலை அசைத்தவன், ஏதோ நினைவு வந்தவனாக, “நீ என்ன படிச்சிருக்க?” என்று கேள்வி எழுப்பி பதிலுக்காக அவள் முகம் நோக்கினான்.

“காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்!” என அவன் முகம் நோக்காமலே பதில் இயம்பினாள், பாவை.

“நிஜமாவா?” என குரலில் ஆச்சரியம் சொட்டக் கேட்டவனை ஏறிட்டுப் பார்த்தவள், அவனின் வியப்புக்கான காரணத்தை ஊகிக்க முடியாமல், “ஏன் ஷாக்?” என்று கேட்க,

“இல்ல, நத்திங்!” என்றான், அவசரமாக!

“ம்ம்..”

“நீ ரொம்ப நல்லா இங்கிலிஷ் பேசுற!”

நீண்ட பெருமூச்சொன்றை வெளியேற்றியவள், “அது, எனக்கு பெரிய இடத்தாளுங்க போல தஸ்புஸ்னு இங்கிலிஷ் பேச ரொம்ப ஆசை! பணம் கட்டி படிக்க வைக்க அம்மா கிட்ட அவ்ளோ காசு இல்ல. மூனு வேளை சாப்பாட்டுக்கே உங்கம்மா மாரடிக்கிறப்போ, உனக்கு இங்கிலிஷ் ஒன்னு தான் குறைச்சல்னு சுத்தி இருக்குறவங்களோட கிண்டல்ஸ் வேற!

அப்பறம்.. நான் டென்த் படிச்சிட்டு இருக்குற நேரத்துல ஆர்வம் இருக்குற முப்பது பிள்ளைங்களை தேடி எடுத்து, ஒரு இன்ஸ்டிடியூட்ல பிரீ இங்கிலிஷ் கோர்ஸ்க்கு போக உதவினாங்க.

நானும் அம்மாவோட கால், கைல விழுந்து சம்மதம் வாங்கி, எனக்கும் வாய்ப்பு தாங்கனு கிளாஸ் டீச்சர் கிட்ட கெஞ்சி கூத்தாடி, ஒருவழியா கோர்ஸ் முடிச்சேன். அதனால இங்கிலிஷ் ஓரளவு பேச வருது..” என்றாள், மொட்டாய் மலர்ந்த முறுவலோடு.

கண்களை எட்டாத அந்த இதழ் விரியலில் அவளது மனவலியும் மெல்ல வெளிப்பட்டதோ! விழி எடுக்காது அவளையே சில நொடிகள் பார்த்திருந்தவன், “ஏன் மேல படிக்கல? படிப்புல ஆர்வம் இல்லையா சம்யு?” என்று வினா தொடுத்தான்.

“ஆர்வமா? அதுலாம் இருந்துச்சு சார்..” என்று இழுவையாய் நிறுத்தியவள் கண்களை மூடித் திறந்து நெடு மூச்செறிந்தவாறே,

“ஆனா அதுக்கான வாய்ப்பு கிட்டல. ஒருசில பொறுப்புகள் என் கைக்கு வந்துட்டதால படிப்பை பாதியில நிறுத்திட்டு வேலைக்கு போக தொடங்கிட்டேன். மரத்துக்கு மரம் தாவி சுவை பார்க்குற குரங்கு மாதிரி, நானும் பல ஷாப்ஸ்ல வேலை பார்த்து கேலக்ஸில தான் திருப்தி அடைஞ்சேன்..” என்றாள்.

அவள் சாதாரணமாகக் கூறுவது போல் தோன்றினாலும், சற்று உற்றுக் கவனித்தாலும் அந்த குரலில் இழையோடிய வருத்தத்தை இனங்கண்டு கொள்ள இயலும்!

அதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு புரிதல் இல்லையோ அல்லது, புரிந்தும் புரியாதது போல் இருந்து கொண்டானோ என்னவோ.. தெரியவில்லை.

கடிகாரத்தில் டிக் டிக் ஓசை தவிர்த்து, வேறெந்த சப்தமும் இன்றி பலமான நிஷப்தம் நிலவியது அவ்விடத்தே!

மௌனமாகக் கழிந்த அந்த ஓரிரு நிமிடங்களில் தன் இளமைக் காலத்தில் பயணித்தாள், சம்யுக்தா.

அவளையே பார்த்திருந்தவனின் உதடுகள் மெல்ல சத்தமின்றி முணுமுணுத்தன, “நீ ரொம்ப நல்லவ! உன் ஆசைகள் எல்லாம் நிறைவேறனும்னு நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்..” என!

‘நீதான் எனக்கு சொந்தமானவளை என்கிட்ட இருந்து பிரிச்சி, உன்கிட்ட கூப்பிட்டுக்கிட்ட!’ என ஓரிரு வருடங்கள் முன்பிருந்து அவன் கடவுள் மீது கொண்டிருந்த சிறுபிள்ளைத் தனமான கோபம், இந்நொடி வசதியாக மறந்து போயிற்று அவனுக்கு!

காரணம்?!

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!