காலச் சக்கரம் முன்னும் பின்னுமாக சுழன்று, யுக்தா-நந்தன் வாழ்வில் மூன்று மாதங்களை தன் சுழற்சிக்கு இரையாக்கிக் கொண்டிருந்தது.
இடையில் ஒருநாள், முதல் மாத சம்பளத்தை மொத்தமாக கொண்டு வந்து யுக்தாவுக்கு நீட்டி, அவளின் மனம் குளிர்வித்த சாந்தனா, மறுநாள் விடியலில் அவினாஷின் குடும்பத்தினரை எந்தவொரு முன் அறிவித்தல், ஏற்பாடும் இன்றி வீட்டுக்கு வரவழைத்து அவளுக்கு நெஞ்சுவலியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தாள்.
முன்னாளில், அவள் சம்பளத்தைக் கையில் பொத்தியதும் ‘கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா! கண்களுக்குச் சொந்தமில்லை.’ என ஐயத்தில் மயங்கிய தமக்கை மனம், அடுத்த நாள் தான் தங்கையின் சூட்சுமமான நடத்தைக்குக் காரணம் இதுவெனப் புரிந்து கொண்டாள்.
“நீ சம்பாதிச்ச பணம். உன் தேவைக்கு உதவும் வைச்சுக்கோ சந்தா!” என மனதில் மகிழ்ச்சி ஊற்றெடுக்க அவள் பணத்தை வாங்க மறுத்த போது,
“முதல் மாச சம்பளத்தை உன் கைல தரணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன் யுக்தா. ப்ளீஸ் மறுக்காத!” எனக் கூறி வற்புறுத்த வேறு செய்தாள் சாந்தனா.
ஆனால் வேண்டாமென விடாப்பிடியாக மறுத்த பெரியவள், கூட்டமாக வந்திறங்கிய அவினாஷின் குடும்பத்தினரை சங்கடத்துடன் வரவேற்றதோடு இடையிடையே குள்ளநரியின் தந்திரத்தை தன்னகத்தே கொண்டிருந்தவளை கடுமையாக முறைக்கவும் தவறவில்லை.
இது இப்படியிருக்க,
வந்தவர்கள் வீட்டையும், சாந்தனாவுக்கு பிறந்த வீட்டினரால் கொடுக்கப் போகும் நகைகளின் பெறுமதியையும் பேசினார்களே தவிர, மணப்பெண் பற்றிய எந்தத் தகவலையும் அவ்விடத்தில் அலசவில்லை என்பது ஆச்சரியக்குறி!
அதுவுமன்றி, வந்திறங்கியதும் பரந்த நிலப்பரப்பில் கட்டப்பட்டிருந்த விஷாலமான வீட்டைப் பார்த்து அவினாஷின் அன்னையினது கண்களில் நட்சத்திரங்கள் பிரகாசமாக மின்னினவே!
யுக்தா பற்களைக் கடித்தாள்.
‘முதலில் பக்குவமாக அன்னையிடம் விடயத்தை எடுத்துக் கூறி சம்மதத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு, நடக்க வேண்டியதைப் பற்றி சிந்திக்கலாம்’ எனத் திட்டம் தீட்டி நேரம் கைகூடி வரும் வரை காத்திருந்ததை அறியாமல், சாந்தனா முந்திக் கொண்டது அவளுக்கு அதீத கோபத்தைக் கொடுத்தது என்றால், அது மிகையில்லை.
போதாதென்று, “இப்போ எங்க வீடு சும்மா தானே இருக்கு யுக்தா? அதனால் அதுலயே எங்களால தங்கிக்க முடியும்னு நான் அவர் கிட்ட சொல்லிட்டேன்!” என்று பெரிய மனுஷியாய் இடையிட்டுப் பேசி, வந்தவர்கள் முன்னிலையில் வாயடைக்க வேறு முயன்றாள் சாந்தனா.
“நாங்க இதைப் பத்தி பேசி ஒரு முடிவுக்கு வர்றோம்ங்க..” என்பதோடு பேச்சு வார்த்தைகளை முடித்துக் கொண்டதால் நல்லதாய் போயிற்று!
“வர்றேன் அண்ணி!” என கண்ணியமான முறையில் யுக்தாவிடம் விடைபெற்றுக் கொண்ட அவினாஷின் கண்கள், தன் காதலுக்காக அவளிடம் இறைஞ்சி நின்றன.
அதை யுக்தா புரிந்து கொள்ளாமல் இல்லை.
“நான் அம்மா கிட்ட பேசி பார்க்கறேன் அவினாஷ். இங்க வந்தா தங்கிக்க ஒரு வீடு மட்டும் இருந்தா போதும்னு சொன்ன நீங்க, இப்போ உங்க வீட்டாளுங்க தங்கம், பொன்னு பேசும் போது அமைதியா இருந்திங்களே! என்னால ஏத்துக்க முடியல..” என வாழைப் பழத்தில் ஊசியை இறக்குவது போல், தன் மனதில் எழுந்த ஆதங்கத்தை பட்டும்படாமலும் சொல்லி அவனை அனுப்பி வைத்தாள்.
அவர்கள் சென்று விட,
“அவன் தான் எனக்கு வேணும். இல்லனா நான் செத்து போய்டுவேன்!” என காலாகாலத்து அந்த பழைய டயலாக்ஸை முணுமுணுத்தபடி சாந்தனா செய்த அலப்பறைகள் எண்ணில் அடங்காதவை!
எப்படியாகத் தான் இருந்தாலும், தங்கையின் ஆசை இதுவல்லவா என இளகியிருந்த யுக்தாவின் மனம், அவள் பிடித்த பிடிவாதத்தில் மீண்டும் பாறையாய் இறுகிற்று!
ஆனாலும் தனிமையில், காதோடு காது வைத்தாற்போல், “அந்த வீட்டை சும்மா தானே மூடி வைச்சிருக்கோம் அம்மா! அது நம்ம சந்தாவுக்காவது உதவினா என்ன?”என சாவித்திரியிடம் நயமாக எடுத்துச் சொல்லாமல் இல்லை.
“அதுக்கென்ன? அந்த வீடு அப்படியே வேணா இருக்கட்டும்! இவ்ளோ கஷ்டங்களையும் சுமக்குற நீயே, எங்களைப் பத்தி யோசிச்சி, வீடு வேணும்னுட்டு வந்த வரன்களை எல்லாம் வேணாம்னு மறுத்து, கடைசில நீ மட்டும் போதும்னு சொன்ன மாப்பிள்ளையோட கையை கெட்டியாப் பிடிச்சுக்கிட்ட!
ஆனா அவ உன்னைப் போல இல்ல யுக்தா. நோகாம வயித்தை நிறைக்கிற மகராசி இப்போ தான் வேலைக்கு போகவே ஆரம்பிச்சு இருக்கா.. அடம் பிடிக்க வேற செய்றா, பார்த்தியா?
அதுக்குள்ள நினைச்சதை கொடுத்துட்டா திரும்ப பழையபடி ஆட தொடங்கிடுவா! கொஞ்ச நாள் போகட்டும், விடு!” என ஒரே போடாக மறுக்காமல், தனக்கு இஷ்டமில்லை என்பதை முகபாவனைகள் மூலம் அப்பட்டமாக வெளிக் காண்பித்தார் சாவித்திரி.
இனி என்ன..
அன்றைய நாள் தொங்கிப் போன சாந்தனாவின் முகம் இன்னுமே பழைய நிலைக்கு திரும்பிய பாடில்லை.
கன்னங்களை உப்பிக் கொண்டு திரிபவளைப் பார்க்கும் போது பெரியவள் மனதில் இரக்கம் சுரந்தாலும், அன்னையைத் தாண்டி தன்னால் எதை செய்து விட முடியும் என்ற வருத்தம்!
அது மட்டுமன்றி, சற்றும் பொறுப்பின்றி, கஷ்ட நஷ்டங்களைப் புரிந்து கொள்ளாமல் சுற்றிக் கொண்டிருப்பவள் வேலைக்குப் போவதே தன் டீலுக்குப் பயந்து தான் என்று இருக்கும் போது, காதல் விவகாரப் பிரச்சனைகள் நீங்கி தெளிவாகி விட்டால் வீட்டோடு இருந்து விடுவாள்.
அவசரப்பட்டு அவளைக் கட்டிக் கொடுத்து, புகுந்த வீட்டின், சாந்தனாவுடைய வளர்ப்பு பற்றிய வீண் கதை காரணங்களைக் கட்டி சுமப்பானேன் என்ற தயக்கம் வேறு, யுக்தாவுக்கு!
இன்னும் ஒருசில மாதங்கள் கழியட்டும் என எண்ணிக் கொள்வதை அன்றி வேறு வழி தெரியவில்லை.
சாந்தனாவின் பொறுப்பின்மையை அவதானித்து விட்டு நந்தனும் அதையே தான் சொல்லி இருந்தான், அவளிடம்.
அன்றும், சமையலறை வேலைகளை முடித்துக் கொண்டு அறை நோக்கி நடந்தவளை எதிர்ப்பட்ட சாந்தனா, என்றும் போல் மோவாயைத் தோளில் பலமாக இடித்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அவளைக் கண்டு கொள்ளாமல் அறைக்குள் புகுந்து கொண்ட யுக்தாவுக்கு மனம் ரணமாய் வலித்தது.
தங்கையரின் ஆசைகள் ஒவ்வொன்றையும் தன்னால் இயன்றவாறு பார்த்து பார்த்து செய்து கொடுத்தவளுக்கு, கேட்டது கிடைக்காத ஏமாற்றத்தில் முகத்தை இரண்டரை கிலோ அளவிற்கு நீட்டி வைத்திருக்கும் சாந்தனாவின் முகம் வருத்தத்தைக் கொடுத்தது.
அன்னையின் மனம் உருகுமாறு பேசி, வீட்டுடன் சாந்தனாவை அவினாஷுக்கு கையளிக்க சம்மதிக்க வைக்கலாம் தான்! முடியாமல் இல்லை.
ஆனால் பொறுப்பு? அது ரொம்ப முக்கியமாயிற்றே!
அவ்வளவு வேண்டாம்! ‘பொறுப்பு’ என்ற தலைப்பை முன்னிறுத்தி வீட்டில் இவ்வளவு பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்கும் போது கூட, அவள் வீடு வந்து சேர்வது எட்டரை மணி தாண்டிய பிறகு தான்!
இத்தனைக்கும் அவள் அலுவலகதிலிருந்து வெளிப்படுவது, ஷார்ப்பாக ஆறு மணிக்கு!
அன்னையின் மனம் கவருமாறு நடந்து கொள்ள வேண்டுமென்று ஒரு எண்ணமின்றி, நான் நினைச்ச மாதிரி இருப்பேன் என்ற திமிரோடு வலம் வருகிறாள்.
இனி எங்ஙனம் சாவித்திரி மனம் இளகுவதும், திருமணத்துக்கு சம்மதிப்பதுவும்?!
அவளின் அலட்சியப் போக்கும், திமிரான நடத்தைகளும் சீராகும் வரை, கண்ணிருந்தும் குருடன் போல் நடந்து கொண்டாக வேண்டுமென்று மனதினுள் சூளுரைத்துக் கொண்டு, அமைதி காக்கின்றாள் சம்யுக்தா.
மறுப்பதற்கு இல்லை. ‘ஈன்றெடுத்தவள் பெண்ணை சரியாக வளர்க்கவில்லை. பொறுப்பில்லாத, ஊர் சுத்திக் கழுதையை அல்லவா மகனுக்கு மணமகளாக தேர்ந்தெடுத்து இருக்கிறேன்’ என ஊரறிய காரித் துப்பி, ஒருநாளும் அவர்கள் அன்னையின் வளர்ப்பைக் குறை சொல்லிவிடக் கூடாதே என்ற பயமும், அளவுக்கு அதிகமாகவே இருந்தது, அவளுக்கு!
கதவை சாற்றிவிட்டு யோசனை படிந்த முகத்தோடு அவ்விடத்திலே நின்று விட்டவளை, லேப்டாப்பில் எதையோ தீவிரமாக தட்டிக் கொண்டிருந்த நந்தனின் கண்கள் ஏறிட்டன.
அவனின் கூரிடும் பார்வையைக் கூட உணராமல் நகத்தைக் கடித்துத் துப்பியவள், யோசனை தீராமல் அறையைத் திறந்து கொண்டு மீண்டும் வெளியேறப் போக,
“இங்க வா..” என கை நீட்டி அழைத்து, அவளைத் தன்னருகே அமர்த்திக் கொண்டவன்,
“ஒன்னும் பிரச்சனை இல்லைல?” என்று கேட்க, அந்த ஒற்றை வரியிலே பாதி பாரம் குறைந்த உணர்வு யுக்தாவுக்குள்.
இல்லை என்பதாய் தலை அசைத்தவள், “சந்தாவைப் பார்க்குறப்போ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க. நான் ஒரு நல்ல அக்காவா நடந்துக்கலையா என்ன?” என்று கண்களில் நீர் மின்ன வினவ,
“ப்ச், எனக்கு தெரிஞ்சி நீ ரொம்ப வித்தியாசமானவ சம்மு. தங்கச்சிங்களைப் பத்தி நீ ரொம்ப நினைக்கிற.. அவங்களையும், அவங்க எதிர்காலத்தையும் பத்தி நிறைய யோசிக்கிற.. அவங்களுக்காக எல்லாத்தையும் செய்யணும்னு ஆசைப்படற.. ஒரு அக்கா இந்தளவுக்கு இருக்குறது ரொம்ப பெரிய அதிசயம்!” என்றான், அவளின் மனப்பாரத்தை இறக்கி வைக்கும் விதமாக!
அவினாஷின் வீட்டினர் வந்து சென்ற இந்த இரண்டு மாதக் காலப் பகுதியில், இதே கேள்வியை இத்தோடு எத்தனையாவது தடவையாக கேட்கிறாள் என அவளே அறியாள்.
அவனும் சலிக்காமல் வகை தொகையாக பதில் கூறி, அவளை ஆறுதல் படுத்த முயன்று கொண்டிருக்கிறான்.
சொல்லப் போனால், மென்கரங்கள் இரண்டையும் நோகாமல் மெல்லப் பற்றி அவளுக்கு ஆறுதல் கொடுக்கும் அந்த ஓரிரு நிமிடங்களையும் மிகவும் எதிர்பார்த்தான் ஆடவன்.
“நிஜமாவா? ஆனா நீங்க சும்மா தானேங்க சொல்றிங்க?”
வழமையான அதே கேள்வி! இம்முறை சட்டென்று சிரிப்பு பீரிட்டது நந்தனுக்கு.
சிரிப்பை மறைக்காமலே, “நான் ஏன் சும்மா சொல்ல போறேன்? இவ்ளோ நாள் என் கண்ணால பார்த்ததை வைச்சு சொல்லுறேன் சம்மு..” என்க,
“அப்பறம் ஏன் சிரிக்கிறீங்க..” என்ற முணுமுணுப்புடன் கை விரல் நகங்கள் பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கினாள், சம்யுக்தா.
அவளையே விழி எடுக்காமல் பார்த்திருந்தவனுக்கு, மனதினுள் ஏதேதோ எண்ணங்கள்! துளிர் விடும் ஆசைகள்! எதையோ புதிதாக உணர்ந்தான்.
தினம் தினம் அவளின் அருகாமை புதுவித உணர்வைத் தோற்றுவிக்கிறது அவனுக்குள். அது என்னவாக இருக்கும் என்பதை இதுநாள் வரை ஆழ்ந்து யோசித்ததில்லை என்றாலும், அது பிடித்திருந்தது. அதில் திளைத்து, இன்பம் அனுபவிக்க விரும்பினான்.
“நீ ரொம்ப அழகு..” என்றவனின் பார்வை மயிலிறகாய் வருடியது, நெருக்கத்தில் தெரிந்த பாவையின் படபடப்பு குறையாத அழகு வதனத்தை!
இமைகள் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க, வியப்புடன் ஏறிட்டுப் பார்த்தவளின் கண்களில் ஊற்றெடுத்த கண்ணீரூற்று சட்டென்று நின்று போனது.
வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் சிக்கிக் கொள்ள, தலையைப் பக்கமாக சரித்து, “அ.. அழும் போது அழகுன்னு சொல்லுறீங்களா?” என திக்கித் திணறி, அழுகையில் பிதுங்கிய இதழ்களுடன் கேட்டாள்.
யதுநந்தனின் உதட்டில் நெளிந்திருந்த புன்னகையின் பரப்பளவு கூடியது.
தனியாளாய் நின்று சிறு வயது தொட்டு குடும்பப் பொறுப்பை சுமந்தாலும், அவள் இன்னும் மனதளவில் சிறு குழந்தை தான் எனப் புரிந்தது.
ரசிக்கப் பிடித்திருந்தது.
‘இந்த குழந்தைத் தனம் பவி கிட்ட இருக்கலையே!’ என காரணமே இன்றி, முன்னவளை இவளோடு ஒப்பிட்டுப் பார்த்தது, அவன் மனம்.
அவனின் கட்டுப்பாட்டை மீறி அவளை நோக்கி நீண்ட வலிய கரம், பாவையின் பட்டுக் கன்னங்களை அழுந்தக் கிள்ளியது.
“ஸ்ஸ், ஏன் கிள்ளுறீங்க?” என தொட்டாற்சிணுங்கியாய் சிணுங்கினாள்.
“நீ எப்போவும் தான் அழகு!” என அவன் ரகசியமாக வாய்க்குள் முணுமுணுத்தது அவளை வந்தடையவில்லை. கன்னம் கிள்ளிய கரம், அவள் உணராதவாறு அவளின் விழிநீரையும் துடைத்து விட்டு, தன்னிடத்துக்கு மீண்டது.
“யுவி.. ந்.. நான்.. யுவியைப் பார்த்துட்டு வர்றேன்ங்க..” என அவஸ்தை தாளாமல் சட்டென்று எழுந்து கொண்ட யுக்தா, திரும்பிப் பார்க்காமல் ஓட்டமும் நடையுமாக அறையை விட்டு வெளியேறி விட,
“உஃப்!” என்ற நெடுமூச்சுடன் கட்டிலில் மல்லாக்க விழுந்தான் யதுநந்தன்.
அவளைப் பிடித்திருந்தது; அவளுடன் இரவு, பகல் பாராமல் நேரம் செலவு செய்ய பிடித்திருந்தது; அவளை தன் அருகாமையில் பார்த்து மயங்கப் பிடித்திருந்தது; அவளின் தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் ஸ்பரிசித்துப் பார்க்கப் பிடித்திருந்தது;
கண்ணீர் சிந்தி நிற்கையில், அதைத் துடைத்து விட்டு, அறியாத பாவனையில், பிதுங்கும் அந்த இதழ்களை சுண்டிப் பார்க்கப் பிடித்திருந்தது; சில நேரங்களில் தன்னை மீறி அவள் மீது எழும் உரிமை உணர்வு மிகவும் பிடித்திருந்தது;
மொத்தத்தில், எல்லாமே பிடித்தது; அவளை சுற்றிய அனைத்தும் அழகென்று தோன்றிற்று ஆடவனுக்கு.
திருமணமாகிய புதிதில், நட்பென்று மார்தட்டி அவளுடன் இயல்பாய் நடந்து கொள்ள முடிந்தவனால், இப்போது ஏனோ தள்ளி நின்று கண்ணியம் காப்பது அந்நியம் என்றே தோன்றியது.
உரிமை உணர்வு அடிக்கடி தலை தூக்கி, அவளை நெருங்குமாறு உத்தரவிட்டது.
‘நட்பைத் தாண்டிய ஏதோவொன்று! இதற்குப் பெயரென்ன!’ எனத் தீவிர சிந்தனையில் அவன் மூழ்க இருந்த நேரத்தில், அதைக் கெடுக்கவென்றே,
“ம்க்கும்! யுவிக்குட்டி தூங்கிட்டா. இன்னைக்கு கிட்சேன்லயே நேரம் போய்ட்டதால, அவ கூட டைம் ஸ்பென்ட் பண்ணவே கிடைக்கலங்க..” என்று கூறிக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள், சம்யுக்தா.
யதுநந்தனின் கண்கள் அவளை நோக்கின. தன்னைக் கடந்து பேல்கனிக்கு நடந்தவளைப் பார்வையாலே பின் தொடர்ந்தவனின் மௌனம் அவளை சோதிக்க,
“என்னாச்சு?” என்று கேட்டபடி திரும்பிப் பார்த்தாள்.
கண்களை மூடி ‘எதுவுமில்லை’ என மறுப்பாகத் தலை அசைத்தவன் கட்டிலில் அனாதையாகக் கிடந்த லேப்டாப்புடன் ஐக்கியமாகி விட! இல்லை, இல்லை ஐக்கியமாகியது போல் நடிக்கத் தொடங்கி விட, மார்புக்கு குறுக்காகக் கைகளை கட்டியபடி பேல்கனியில் சென்று நின்றவளின் பார்வை, நிலவை அன்றி வேறெங்கு நிலைத்திருக்கப் போகிறது?
கண்கள் மூடி, இரவின் கூதல் காற்றில் சிலிர்த்தவளுடைய மனம் இன்ப வெள்ளத்தில் மூழ்கிப் போயிருந்தது. யதுநந்தனின் மாற்றங்கள் அடி மனதில் கட்டிக் கரும்பாய் தித்தித்தது.
‘வாடைக் காற்றினில் ஒரு நாள்..
ஒரு வாசம் வந்ததே, உன் நேசம் என்றதே!
உந்தன் கண்களில் ஏதோ..
மின்சாரம் உள்ளதே, என் மீது பாய்ந்ததே!
மழைக்காலத்தில் சாியும் மண் தரை போலவே
மனமும் உனைக் கண்டதும் சாியக் கண்டேனே!’ என்ற பாடல்வரிகளை இதழுக்குள் முணுமுணுத்தவளின் கை விரல்கள், அதற்கேற்றாற்போல் பெல்கனி ட்ரில்லில் மெல்ல தாளம் தட்டின.
புன்னகைத்துக் கொண்டிருந்தவள் திடீரென காற்றின் சிலுசிலுப்பைத் தாண்டி தன் மேனியில் வெம்மையின் கதகதப்பை உணர்ந்தாள்.
கணவனின் திடீர் அணைப்பு, முதல் அணைப்பு.. இல்லை இதை அணைப்பென்று சொல்லி விட முடியாது. பின்னிருந்து நெருங்கி நிற்பதால் அவனின் மூச்சுக்காற்று அவளை பூவாக உரசியது. அவ்வளவே!
ஆனால் அந்த நெருக்கமே, அவளுக்குள் பரவசத்துடன் பதற்றத்தையும் ஒருசேர விதைத்தது.
“தூங்கலையா சம்மு?” என்றவனின் குரல் மயக்கத்தில் லேசாகக் குழைந்ததோ, என்னவோ! சற்று நெளிந்து அவனிடமிருந்து விலக முயன்றாள் சம்யுக்தா, நாணத்துடன்.
அவளின் இருபக்க தோளில் கை பதித்து, அவளைத் தன் புறமாக திருப்பியவனின் கண்கள் கவி பாடின; கதை பேசின; அந்தரங்க ரகசியமொன்றை அவளுக்கு உணர்த்த விழைந்தன.
“எ.. என்ன?!” வார்த்தைகள் திக்கின, சம்யுக்தாவுக்கு.
மறுப்பாகத் தலை அசைத்தவள், “நா.. நான் தினமும் இந்நேரம் இங்க தான் இருப்பேன். அவ்ளோவா க்.. குளிரலயே!” எனத் தயங்க, உதடு விரிய முறுவலித்தவன் சட்டென்று குனிந்தான்.
திடீரென கன்னம் குறுகுறுத்தது, பாவைக்கு.
என்ன நடந்ததென்று அவள் சுதாகரிக்க முன்பே, “ரொம்ப லேட் ஆகிடுச்சு, வந்து தூங்குமா! டயர்ட்டா வேற இருக்க..” என்று அக்கறையாகக் கூறி விட்டு அவன் விலகிச் சென்று விட்டான், நந்தன்.
அவனின் மீசை அழுந்தியதில், கன்னம் கன்றிச் சிவக்க, ‘உண்மையா.. இன்றேல், எல்லாம் என் பிரமையா?’ என்ற யோசனையுடன் ஸ்தம்பித்து நின்றதென்னவோ, சம்யுக்தா தான்!