தன்னுடைய டப்பா அலைபேசிக்கு சார்ஜேற்றி விட்டு அன்றிரவு வெகுநேரம் வரைக்கும் நந்தனின் அழைப்புக்காக காத்திருந்த சம்யுக்தா, இறுதியில் ஏமாற்றத்தைத் தழுவிக் கொண்டு உறங்கிப் போனாள்.
தன்னுடைய டப்பா அலைபேசிக்கு சார்ஜேற்றி விட்டு அன்றிரவு வெகுநேரம் வரைக்கும் நந்தனின் அழைப்புக்காக காத்திருந்த சம்யுக்தா, இறுதியில் ஏமாற்றத்தைத் தழுவிக் கொண்டு உறங்கிப் போனாள்
மறுநாள் முழுவதும் வழமை போல் வீட்டுவேலை, துணிக்கடை எனக் கடந்து போனது அவளுக்கு.
‘உங்களை மீட் பண்ணனும்’ என அவள் காலையில் அனுப்பி வைத்த குறுஞ்செய்தியைப் பார்த்து விட்டு ஏழரை மணியளவில் ஸ்டோரருகே வந்து காரை பார்க் செய்திருந்தான் யதுநந்தன். கூடவே குட்டி யுவனியும் தந்தையுடன் வந்திருந்தாள்.
அவனின் வரவை ஸ்டோரின் கண்ணாடி கதவினூடே கண்ணுற்று அறிந்து கொண்டவள், கைப்பையை மாட்டிக் கொண்டு விறுவிறுவென கார் அருகே வந்து நிற்க,
“ஹாய்!” என்றான் நந்தன், சிறு புன்னகையுடனே!
“குட் ஈவினிங்!” என்றவள் தன் கையிலிருந்த பையை அவன் கையில் திணிக்க,
“ஹேய், வாட்!” என்றான் புரியாத பாவனையில்.
“நானே புதுசு வாங்கிப்பேன் சார். இவ்ளோநாள், எனக்கு ஃபோன் அவ்ளோவா யூஸ் ஆகாத காரணத்தினால் வாங்காம விட்டிருந்தேன். இனி வாங்கிடுவேன். ஒன்னும் பிரச்சனை இல்ல..” என்று ஒட்ட வைத்த புன்னகையுடன் குரல் தாழ்த்திப் பேசினாள், சம்யுக்தா.
அதற்குள், “மம்மி..” என்ற கொஞ்சலோடு சிறியவள் அவளிடம் தாவியிருக்க, அவளை நெஞ்சில் சாய்த்து ஒருகையால் அணைத்தபடி மற்றொரு கையால் அவளின் தலை வருடிக் கொடுத்தாள்.
பாப்பா வேற இப்போல்லாம் அடிக்கடி உன்னைத் தேடறா! நைட்ல தூங்காம என் தூக்கத்தையும் சேர்த்து இல்லாம பண்ணி, ஒரே அழுகை. தேவைப்படறப்போ வீடியோ கால்லயாவது உன்னை அவளுக்கு காட்டி சமாதானம் பண்ணலாமேனு யோசிச்சேன்..” என்று பொறுமையாக விளக்கம் கொடுக்க,
‘அப்போ இதுக்காக தான் ஃபோன் வாங்கிக் கொடுத்தாரா? நான் என்னவோ என்னைப் பார்த்து பரிதாபப்பட்டு, ஒரு ஃபோன் கூட வாங்க வக்கில்லைனு கிண்டல் பண்றாப்ல வாங்கி தந்ததா இல்லையா நினைச்சுக்கிட்டேன்? ப்ச்! என்ன சம்யு நீ..’ என தன்னையே திட்டிக் கொண்டவளின் முகத்தில் அசடு வழிந்தது.
அவன் பேசிய பாவனையில், தன் மீதான பரிதாபமோ தாழ்வுணர்ச்சியோ இல்லை என்பதை புரிந்து கொண்ட பிறகே, நிம்மதியாக மூச்சு விட முடிந்தது அவளால்.
“அது வந்து..”
“என்ன?”
“நீங்க ஏன் சார் வாங்க போனீங்க? நானே வாங்கி இருப்பேன் இல்லையா..”
கண்களை சுழற்றியவன், “நீ வாங்க இருந்ததை நான் வாங்கி இருக்கேன். இதுல அவ்ளோ பெருசா என்ன இருக்கு?” என்று கேட்க, அவனிடம் திணித்ததை மீண்டும் தன் கையோடே எடுத்தவள்,
“சாரி! நீங்க எனக்காக வீண் செலவு பண்ணிட்டிங்களேனு டென்ஷன் ஆகிட்டேன்.” என்று தன் வீணான கற்பனை அவனுக்கு சந்தேகத்தை விதைத்து விடக் கூடாதென்பதற்காய் சமாளித்தாள்.
நேற்று அந்த மோதிரம் பற்றிக் கேட்டதும் அவன் கொடுத்த விடை அவளைப் பெரும் மனவருத்தத்தில் ஆழ்த்தி இருக்க, அத்தோடே அவன் அலைபேசியை பரிசளித்தது வேறு, அவளது யோசிக்கும் திறனை முற்றிலும் இழக்கச் செய்திருந்தது.
அவன் ஆரம்பத்திலே இந்தத் திருமணத்தின் நோக்கம் பற்றிச் சொன்ன பிறகும் தான் இவ்வாறு வருந்தி, அவன் மீதும் வீண் கோபம் கொள்வது தவறென இப்போது தான் மெல்ல புலப்படத் தொடங்கியது அவளுக்கு.
மானசீகமாக நெற்றியில் அறைந்து கொண்டவள், “தேங்க்ஸ்!” என்று கூறி முன்வரிசைப் பற்கள் தெரியும்படி புன்னகை சிந்த, சிறு தலை அசைப்புடன் கையிலிருந்த அலைபேசியை தூக்கிப் போட்டு கேட்ச் பிடித்தவாறே,
“போகலாமா?” என்று கேட்டான் நந்தன்.
“எங்க போக?”
“வீட்டுக்கு!” என்றவன் கதவைத் திறந்து விட்டுக் கண் காட்ட, யுவனியுடன் சொகுசாய் ஏறிக் கொண்டவள் ஓட்டுநர் இருக்கையில் வந்து அமர்ந்தவனைத் திரும்பிப் பார்த்தாள்.
‘நீயும் டென்ஷன் ஆகி, மத்தவங்களையும் டென்ஷன் பண்ற சம்யு!’ என மீண்டுமொரு முறை தன்னையே கடிந்து கொண்டவளுக்கு சிரிப்பு வரப் பார்த்தது.
விரியத் துடித்த இதழ்களின் மீது ஆள்காட்டி விரல் பதித்து கண்ணாடி வழியாக வெளியே வெறித்தவள்,
“என்னாச்சு?” என்று கேட்டவனைத் திரும்பிப் பாராமலே ‘எதுவுமில்லை’ என்பது போல் இருபுறம் மறுப்பாகத் தலை அசைத்தாள்.
“மம்மி..” என தன் பிஞ்சுக்கரத்தால் சம்யுக்தாவின் கன்னத்தில் தட்டிய யுவனி, அவளின் கவனம் தன்மேல் பதிந்ததைக் கண்டுவிட்டு தன் பால்பற்களைக் காட்டினாள்.
யுக்தா சிரிப்புடனே சிறியவளுடன் கொஞ்சலில் இறங்கிவிட, இருவரையும் கடைக்கண்ணால் பார்த்தபடி வண்டி ஓட்டியவன் அடுத்த இருபதாவது நிமிடத்தில் ஒரு ரெஸ்டாரண்ட் முன்பு காரை நிறுத்தி இருந்தான்.
“டின்னெர் எடுத்துட்டு வீட்டுக்கு போகலாம் சம்யு! முன்ன எல்லாம் அடிக்கடி பாப்பாவை நைட்டுல வெளியே கூட்டிட்டு வருவேன்.” என்றான்.
‘மறுக்காம கூட வாயேன்!’ என்ற கெஞ்சல் அவனது குரலில் இழையோடுவதாய் அவள் உணர்ந்தது, அவளின் பிரமையோ அல்லது உண்மையோ என்னவோ.. யார் கண்டது?
“ஆனா.. அம்மா எனக்காக காத்திட்டு இருப்பங்களே சார்! இங்க டைம் ஸ்பென்ட் பண்ணிட்டேன்னா வீட்டுல போய் அவங்களுக்கு உணவு சமைக்க லேட்டாகிடும். வேறொரு நாள் பார்ப்போமே!” எனத் தயங்கியவளின் பொறுப்புணர்ச்சி அவனுக்குப் பிடித்திருந்தது.
உண்மையிலே யுவனி வானத்து நட்சத்திரங்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்த மேர்க்யூரி விளக்குகளைப் பார்த்து கைகொட்டி சிரித்துக் கொண்டிருந்தாள்.
போதாத குறைக்கு, “மம்மிஈ! தைத்து.. ஸ்தார்..” என தனக்குத் தெரிந்த பாஷையில் லைட்டையும், ஸ்டார்ஸையும் அறிமுகம் செய்து வைக்கத் தொடங்கியும் விட்டாள்.
அதற்கு மேலும் மறுக்க மனம் வரவில்லை சம்யுக்தாவுக்கு. முகத்தை அப்பாவியாகத் தூக்கி வைத்துக் கொண்டவள், “லேட் ஆகிடாதுல?” என்று கேட்டபடி காரிலிருந்து இறங்கி, யுவனிக்காக கை நீட்ட,
தன் கையில் துள்ளிக் கொண்டிருந்தவளுக்கு ஒவ்வொன்றையும் கைகாட்டி அறிமுகம் செய்தபடி யுக்தா நடக்க, நடையை மெல்லமாக்கி அவளுடன் சேர்ந்து கொண்டான் நந்தனும்.
“ஏதோ பேசணும்னு சொல்லி மெசேஜ் பண்ணி இருந்தியே சம்யு? ஈஸ் எவிரிதிங் ஆல்ரைட்?” என வெயிட்டரிடம் தங்களுக்கு வேண்டியவற்றை ஆர்டர் செய்து விட்டு நந்தன் கேட்க, யுக்தாவுக்கு பகீரென்றது.
நாலாபுறமும் தலை அசைத்தவள், “எந்த பிரச்சனையும் இல்ல. அந்த ஃபோனை ரிட்டர்ன் பண்ண தான் வர சொல்லிருந்தேன்.” என எச்சிலைக் கூட்டி விழுங்க,
“ம்ம்..” என்ற முனகலைத் தவிர அவனிடமிருந்து வேறெந்த கேள்வியும் எழவில்லை.
அரைமணி நேரம் கழிந்திருக்கும்!
சாப்பிட்டு முடித்து எழுந்து நிற்கும் போது, இரண்டு பார்சல்களோடு ஒரு பை மேஜைக்கு வந்தது. அதை எடுத்துக் கொண்டு பணத்தை புத்தகத்தினுள் வைத்துவிட்டு இருவருடன் அங்கிருந்து வெளியேறியவன்,
“நான் ரெஸ்டாரண்ட்டுல சாப்பிட்டேன். என் தங்கச்சிங்க மட்டும் வீட்டு சாப்பாடு சாப்பிடணுமானு நீ சண்டை போட முன்னால, இந்தா நானே அவங்களுக்கு டின்னர் வாங்கிட்டேன். போய் சமைச்சி டயர்ட் ஆக வேண்டிய அவசியம் உனக்கு இருக்காது.” எனக்கூறி பையை அவளிடம் நீட்டினான், யதுநந்தன்.
தான் என்ன உணருகிறேன் என அவளுக்கே புரியவில்லை. அடி மனதிலிருந்து எழுந்த இன்னதென அறியாத ஓருணர்வு, அவளை முழுவதுமாக ஆக்கிரமித்து மேனியை சிலிர்க்க வைத்தது.
தன்னை மட்டந்தட்டுகிறானோ என்ற சிந்தனைக்கு பதில், என் தங்கச்சிங்க மேல அக்கறை காட்டுறாரே என்ற நெகிழ்ச்சி அவளது கண்களை கணப் பொழுதில் கலங்கச் செய்தது.
சிறு தலை அசைப்புடன் அதை வாங்கிக் கொண்டவள், வீடு வந்து சேரும் வரைக்கும் வாய் திறக்கவில்லை. அவனும் யுவனியின் ‘லாலாலா’ பாடலில் லயித்துப் போயிருந்ததால் அவளின் அமைதியைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அதே இதமான மனநிலையுடன் அடுத்து வந்த நாட்களும் றெக்கை கட்டிப் பறந்து போனது, சம்யுக்தாவுக்கு.
இரவு நேரங்களில் யுவனியிடமிருந்து விட்டு விட்டு வந்த வீடியோ அழைப்பு, நாட்கள் நகர்வில் ‘தினமும்’ என்றாகிப் போனது.
‘யுவனி’ என்ற மையப் புள்ளையைக் காரணமாய் வைத்து, இருவரும் தயக்கமின்றி தங்கள் விருப்பு வெறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நெருங்கிப் போயிருந்தனர்.
சம்யுக்தாவின் ‘சார்’ என்ற அழைப்பு கானலாய் மறைந்து போய், நந்தனின் சம்யு என்ற விளிப்பு ‘சம்மு’ என்பதாய் திரிபடைந்து இருந்தது.
யுவனி அழுது அடம்பிடித்து மம்மியிடம் பேசுவதற்காக அழைப்பு விடுத்து பாதியிலே உறங்கிப் போய் விடுவதால், அடுத்த அரைமணி நேரத்துக்கு சிறியவளை மையமாய் வைத்தே பேச்சு மெல்ல வளரும்.
தன் வேலைகளைப் பிற்போட்டு, ராப் பொழுதை எதிர்பார்க்கும் அளவுக்கு சம்யுக்தாவின் மனதில் எதிர்பார்ப்புக்களும், ஆசைகளும் எக்கச்சக்கமாக வேர் விட்டிருந்தன.
இடைக்கிடையே இருவருக்கும் அரிதான சந்திப்புகளும் நிகழாமல் இல்லை.
எல்லாம் நன்றாகத் தான் இருந்தது, ஒன்றைத் தவிர! அது, ‘ஃபோனை எக்ஸ்சேன்ஞ் பண்ணிக்கலாம் யுக்தா..’ என்ற சாந்தனாவின் நச்சரிப்பு!
‘எதுவா இருந்தா என்ன.. யூஸ் பண்ணிக்க ஒன்னு இருந்தாலே போதும். நீ உன் ஃபோனைக் கொடுத்துட்டு என்னோடதை எடுத்துக்கோ!’ என்று யுக்தா சொல்லி இருப்பாள் தான். ஆனால் அது அவள் மணக்கப் போகிறவன் வாங்கிக் கொடுத்த முதல் பரிசு என்பதால் மனம் தயங்கியது.
‘வாயை மூடிட்டு சும்மா இருக்கியா சந்தா? இது அவர் வாங்கிக் கொடுத்தது. நீ யூஸ் பண்ணுறதைப் பார்த்தா என்னை என்னனு நினைப்பாரு?’ எனக் கேட்டு, தங்கையை அதட்டி வைக்கலாம் என்று பார்த்தால்,
“அப்போ நீயாவது புதுசு வாங்கித் தாயேன்!’ எனப் புதிதாய் ஒரு சிபாரிசை முன் வைத்தாள் சாந்தனா.
போதும் போதுமென்று ஆகிவிட்டது சம்யுக்தாவுக்கு.
யதுநந்தன் வேறு இரவில் உரையாடி விட்டு அழைப்பைத் துண்டிக்கும் போது, ‘சார்ஜ்ல போடு சம்மு!’ என தினந்தோறும் நினைவூட்டுகிறேன் என்ற பெயரில் அவளைக் கடுப்பேற்றித் தள்ள, அலைபேசியை வகை வகையாக முறைப்பதையன்றி வேறு வழி இருக்கவில்லை பெண்ணுக்கு.
இன்னும் ஒரு வாரத்தில், முன்னரே தேதி குறித்து வைத்தாற்போல் இருவருக்கும் திருமணம் என்றிருக்க, முந்தைய நாளிரவு நந்தன் அலைபேசியில் அனுப்பி வைத்திருந்த அழைப்பிதழ் வடிவங்களை சாவித்திரிக்குக் காண்பித்தாள் சம்யுக்தா.
அதில் மனங்கவரும்படி நீல வண்ணத்தில் இருந்த ஒன்றை கை காட்டியவர்,
“கார்ட்ஸ் எவ்ளோ வேணும்னு கேட்டாரும்மா.” என்றவளிடம், “சொந்தம்னு சொல்லிக்க இருக்குற நாலைஞ்சி குடும்பத்துக்கும், அக்கம் பக்கத்தவங்களுக்கு கொடுக்கவும் சேர்த்து கணக்கு பார்த்து நீயே சொல்லிடுமா..” என்றார்.
தன் மூத்த மகளின் திருமணத்துக்கு தன்னால் ஓடியாட முடியாதே என்ற எண்ணத்தில் அவர் மனம் சோர்ந்து காணப்பட்டது.
‘கவலை வேணாம்மா. சேர்த்து வைச்சிருக்குற பணத்தை வைச்சு, பந்தி போடற ஏற்பாடுகளை சரிவர பார்த்துக்கலாம். பார்வதி ஆண்ட்டி கிட்ட இதைப் பத்தி பேசியாச்சு!
அது போக, காருண்யராஜ் ஐயா கிட்ட மேரேஜ் பத்தி சொன்னதும், தேவைப்படற ட்ரெஸ், துணி வகை பத்தியெல்லாம் உனக்கு கவலையே வேண்டாம்மானு சொல்லிட்டாரு. எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடும். நீங்க இப்படி பீல் பண்ணிட்டு இருக்குறதைப் பார்த்தா எனக்கு டென்ஷன். ரிலாக்ஸ் ஆகுங்களேன் அம்மா!’ எனக் கூறி அவரையும் ஆறுதல் படுத்தியதென்னவோ சம்யுக்தா தான்!
வீட்டை சுத்தம் செய்வதில் தொடங்கி, திருமண ஏற்பாடுகளை செய்வது வரை எல்லாவற்றையும் இழுத்து போட்டுக் கொண்டு அமர்ந்த வித்யாவின் அன்னைக்கு உதவியாக, அக்கம் பக்கத்தினர் ஒரு சிலரும் நட்புணர்வுடன் கை கொடுத்தனர்.
மெல்ல களைகட்டியது, வீடு!
சம்யுக்தாவுக்கு நாள் நெருங்க நெருங்க யோசனையில் மண்டை காய்ந்தது.
திருமணம் முடிந்த கையோடு தான் புகுந்த வீட்டுக்கு சென்றுவிட்டால், இங்கே தாய் தங்கையரைக் கவனித்துக் கொள்வது யார்? அவர்களை அப்படியே அம்போவென விட்டுவிட்டுத் தான் மட்டும் எவ்வாறு அங்கு செல்வது எனப் பலவாறும் சிந்தித்தவளுக்கு இதைப் பற்றி முன்பே யதுநந்தனிடம் பேசாமல் விட்டேனே என நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது.
தறிகெட்டு ஓடி தன் நிம்மதியைப் பறித்துக் கொண்ட யோசனைக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணியவள், மறுநாள் ‘வெட்டிங் ஷாப்பிங்’ செய்வதற்காக நந்தனுடன் வெளியே வந்திருந்த நேரத்தில், அதைப் பற்றி அவனிடம் கேட்க நினைத்தாள்.
‘உன்னை தனியா அனுப்புறது நல்லாருக்காது யுக்தா. வித்யாவும் உங்க ரெண்டு பேர் கூட வரட்டும் என்ன..’ என்று தூர நோக்கு சிந்தனையுடன் கூறி பார்வதி வித்யாவையும் அவர்களுடன் அனுப்பி வைத்திருக்க, குட்டி யுவனியை தன்னோடே மல்லுக்கட்டி வைத்துக் கொண்டாள் கீர்த்தனா, இருவருக்கும் தனிமை தேடிக் கொடுக்கும் பொருட்டு!
வித்யா சற்றுத் தள்ளி பின்னாலே வந்து கொண்டிருப்பதால், இப்பொழுது பேசி விடலாமா வேண்டாமா என்ற யோசனையில் கைவிரல் நகங்களைக் கடித்துத் துப்பினாள் சம்யுக்தா.
“என்னாச்சு?” என்று கேட்டவன் அவளையும், கடித்துத் சீரற்றதாய் ஆக்கி வைத்திருந்த அவளது ஆள்காட்டி விரலின் நகத்தையும் மாறி மாறிப் பார்க்க,
“கொஞ்சம் பேசணும்..” என்றாள் யுக்தா.
“சரி பேசு!”
“அச்சோ, வித்யா இருக்கால்ல? அவ காதுல விழுந்துட்டா என்னை உண்டு இல்லைனு பண்ணிடுவா.. எப்படி பேசுறது?” என்று டென்ஷனாகக் கேட்க, திரும்பி பராக்கு பார்த்தபடி வந்து கொண்டிருந்தவளைப் பார்த்தவன்,
“அவ தூரத்துல தானே வந்துட்டு இருக்கா? நீ பேசலாம் சம்மு. எதுவும் ப்ரோப்லேமா என்ன..” என்று வினவினான்.
மறுப்பாகத் தலை அசைத்தவள், “ப்ரோப்லேம் இல்ல. ஆனா ரொம்ப முக்கியம்!” என்க, தோளை உலுக்கிக் கொண்டவன் தங்களை நெருங்கி வந்த வித்யாவிடம்,
“சிஸ்டர், நீங்க பிரைவசி தர மாட்டேன்குறிங்களாம்னு உங்க ஃப்ரெண்ட் குறை பட்டுக்குறா.. கொஞ்சம் என்னனு கேளுங்க.” என்றிட,
“எதே!” என கூவியது வித்யா மட்டுமல்ல, யுக்தாவும் தான்!
‘ஐயோ இவ கேலி செய்தே என்னைப் படுத்தி எடுப்பாளே!’ எனப் பதறியவள், “நான் எப்போ அப்படி..” எனப் பேச வர முன்பே,
“பார்றா! இருக்குடி உனக்கு. நீதானே என்னை கூட வானு அழைச்சிட்டு வந்த?” என்று படபட பட்டாசாய் பொரியத் தொடங்கியிருந்தாள், வித்யா.
“இல்ல வித்யா, இவரு..” என்றவள் மேற்கொண்டு பேசுவதற்குள்,
“உங்க அம்மா தான், அப்படி ரெண்டு பேரையும் தனியா அனுப்புறது நல்லாருக்காது. துணைக்கு வித்யாவையும் கூட்டிட்டு போனு சொல்லிட்டாங்க. இல்ல சம்மு?” என்று கேட்டான், நேற்றிரவு அலைபேசி உரையாடலின் போது சம்யுக்தா கூறியதை மனதிற்கொண்டு.
அப்போது வித்யாவின் அலைபேசி ஒலிக்க, “இருங்க, வந்திடறேன்..” என்றுவிட்டு அங்கிருந்து வேக நடையிட்டு நகர்ந்தவளைப் பார்த்திருந்த யுக்தா,
“ஏன் இப்படி செய்திங்க?” என்றாள், விட்டால் அழுது விடுவேன் என்ற முகபாவனையோடு.
“என்ன செய்தேன்?” என குறும்பு கூத்தாடும் நயனங்களோடு கேட்டவனை மனம் விட்டு ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை.
பலமாக மூச்சு வாங்கியபடி அவனைப் பாவமாக ஏறிட்டவள், “நான் அப்படி உங்ககிட்ட சொல்லவே இல்ல. எதுக்கு பொய் சொன்னிங்க?” என்று வினவ, கண் அசைத்து எதையோ கை காட்டினான் நந்தன்.
அங்கே, ஒரு ஆடவனுடன் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள் வித்யா.
“ரொம்ப நேரமா எதையோ உன்கிட்ட சொல்ல ட்ரை பண்ணிட்டு இருந்ததை அவதானிச்சேன் சம்மு. நம்ம கிட்ட பேசுறப்போ கூட அவ பார்வை அங்க தான்..”
“அடடே! இது ஷ்யாம் இல்ல?” என பரவசம் பொங்க துள்ளியவள் அந்த ஆடவனை சற்று உன்னிப்பாக உற்று நோக்கி விட்டு, “ஆமா, கன்ஃபார்ம் அது ஷ்யாம் தான். ஆனா எப்போ இங்க வந்தான்னு தெரியலையே!” என்றிட,
“உஃப்! தெரிஞ்சவங்க தானா?” என்று கேட்டான் நந்தன்.
“ஆமா, வித்யா விரும்புற பையன். காலேஜ் முடிச்ச கையோட ஷ்யாம் ஃபாரின் போய்ட்டான். எப்போ வந்தான்னு தெரியல. வித்யாவுக்கு மேல் படிப்பு படிக்க பிடிக்கலனு தான், வீட்டுல இருக்காம எனக்கு உதவியா துணிக்கடைல வேலைக்கு வந்தா! இனி என்ன? அவங்க வீட்டுல பேசி வந்தா டும்டும் தான்..” என்றாள், உண்மையான குதூகலத்துடன்.
அவளின் மகிழ்ச்சியை முறுவலுடன் பாத்திருந்தவன், “உன் ஃப்ரெண்டை இங்கிருந்து அனுப்பி வைக்க தான் ப்ரைவசி பத்தி பேசுனேன். கூடவே, நீயும் ஏதோ பேசணும்னு சொன்னியே?” என்றான்.
ஆமென்ற தலை அசைப்புடன் பட்டுப்புடவைகள் விரித்துப் போட்டிருந்த மேஜையருகே வந்து நின்றவள், அவற்றை ஒவ்வொன்றாய் எடுத்து பார்க்கத் தொடங்கினாள்.
இருவரும் வந்திருந்தது காருண்யராஜின் கடைக்குத் தான் என்பதால், பிரித்துப் பார்க்காமலே புடவைகளில் அது எந்த டிசைன், இது என்ன டிசைன் என விலாவாரியாய் அனைத்தும் தெரிந்து தான் இருந்தது அவளுக்கு.
இடையில் காருண்யராஜ் வந்து, ‘உனக்கு தானே சம்யுக்தா! புடிச்சதை எடுத்துக்கோ’ எனக் கூறி நந்தனை சங்கடத்தில் ஆழ்த்தி விடுவாரோ என்ற தயக்கம் வேறு அவளை தடுமாற்றம் கொள்ளச் செய்தது.
புடவைகளை அலைந்தவாறே, சில தினங்களாய் மண்டையைக் குடைந்து கொண்டிருந்த கேள்வியைக் கட்டவிழ்த்தாள், சம்யுக்தா.
இங்கே, இருவருக்கும் பழக்கப்பட்ட அதே ரெஸ்டாரண்ட்டில் அவினாஷுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தாள் சாந்தனா.
“வீட்டுல உன் அக்கா கிட்ட பேசுனா எல்லாம் க்ளியர் ஆகிடும்னு சொன்ன.. நான் வந்து பேசுனேன். ஆனா எதுவுமே வேலைக்காகலயே தனா?
எங்க வீட்டுல வேற எனக்கு பிரெஷர் பண்ணிட்டே இருக்காங்க. நீ இப்படி பிடி கொடுக்காம நின்னா நான் எப்படி நம்ம லவ்வ பத்தி வீட்டுல பேசுவேன்? அவங்களை உன் வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன்..” என மூச்சு விடாமல் பேசினான் அவினாஷ்.
“எனக்கும் எதுவும் புரிய மாட்டேங்குது அவினாஷ். அவளுக்கு வீட்டுல மாரேஜ் ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்கு. அதுனால அவ இந்த விஷயத்தை கொஞ்சம் ஆற போட்டிருக்கானு தோணுது. நான் எதுக்கும் அவ கிட்ட இன்னொரு வாட்டி பேசி பார்க்கறேன்..” என்றவள் மறந்தும், அந்த ‘டீல்’ பற்றி சொல்லவில்லை.
அப்படி சொல்லி விட்டால், அவினாஷும் ‘அவங்க சொல்றது சரி தானே?’ என யுக்தாவுக்கு ஒத்து ஓதுவானோ என்ற தயக்கம்!
இப்போதென்றால் பரவாயில்லை, ஆனால் திருமணத்துக்கு பிறகும் அலுவலகம், வீடு என்று அலைந்து திரிய வேண்டி வருமோ என்ற பயம்!
எல்லாவற்றுக்கும் மேலால் அவன் தனக்கு ‘சோம்பேறி’ என்ற முத்திரை குத்தி விடுவானோ என்ற எரிச்சல்! இவையெல்லாம் சேர்ந்து அவளை வெகுவாக அலைக் கழித்ததில், டீல் பற்றி சொல்லாமல் சாமர்த்தியமாக முழுங்கிக் கொண்டாள் சாந்தனா.
அதன் பிறகும் தொடர்ந்தது, இருவரின் சாம்பாஷனை.
தன் நிர்ப்பந்த நிலை பற்றிக் கூறி, சாந்தனாவின் பொறுமையை மேலும் உச்சத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியவன் விடைபெற்றுக் கொண்டு சென்றுவிட,
‘ஸ்ஸ், இதுக்கொரு முடிவு காண வேணாமா?’ என மண்டையை பீய்த்துக் கொள்ளாத குறையாக எரிச்சலில் பற்களைக் கடித்தாள் சாந்தனா.
சூடேறி, பொங்கி வழியக் காத்திருந்த எரிமலை எவ்விடம் வெடிக்குமோ.. சற்றுத் தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது தான் நலம்!