“எனக்கு அந்த ஷர்ட் தான் வேணும் சோ எனக்கே தந்துடுங்க” என்றான் அதிகாரத் தோரணையில்…. “டேய் விபீ இது உன்னோட அண்ணனுக்காக அவன் விருப்பப் பட்டதுனு எடுத்தேன் டா இதையாச்சும் அவனுக்காக விட்டு கொடுடா” என்றார் மன்றாடிய படி சித்ரா.
அவரின் பதிலில் அவரை உறுத்து விழித்தவன் “அவன் தான் ஃபோரின் போறான்ல சோ வாட்? இது போல நிறையவே அவனுக்கு கிடைக்கும்” என்றான் சாவகாசமாக….
இருவரின் வாக்குவாதத்தையும் கேட்டுக் கொண்டே அங்கு வந்த பிரதாபன் அவனைப் பார்த்த பார்வையிலேயே வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தெனாவட்டாக கதைத்துக் கொண்டு இருந்தவன் மடித்துக் கட்டிய வேஷ்டியை அவிழ்த்து விட்ட படி மரியாதையின் நிமித்தம் தலை தாழ்த்தி நிற்க…
“உன்னோட அண்ணன் போல பொறுப்பா இருக்க பார் விபீஷன் உன்னோட தட்கூறி ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஊர் சுத்தாமல் என்னோட மில் மார்கெட் கணக்கை பார்க்கணும் இப்போவே கிளம்பி என்னோட வா” எனக் கடினக் குரலில் கட்டளையிட்டவர் அவனை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்து விட்டு நகர்ந்து விட….
அவர் செல்லும் வரை யாருக்கு வந்த விருந்தோ என இவ்வளவு நேரமும் கோபத்தில் பற்களை கடித்து தன்னை சமன் செய்த படி நின்று இருந்தவன் சித்ராவின் கையில் இருந்த ஷர்ட்டை கிட்டத்தட்ட பறித்து இருந்தான்.
“டேய் விபீ” என்றவர் மேலும் பேச எத்தனிக்கும் முன்னரே “அம்மா” என்ற கனிவான குரலில் அவரின் வார்த்தைகள் சட்டென தடைப் பட்டு விட்டன.
தலையை கோதிக் கொண்டே முகத்தில் மென் சிரிப்புடன் விழிகளில் தீட்சண்யப் பார்வை தவிழ அமைதியின் மறு உருவமாக சலிப்பாக நின்றுக் கொண்டு இருந்த விபீஷன் முன் வந்து நின்ற ஜெய் ஆனந்த் “உனக்கு பிடிச்சு இருந்தா எடுத்துக்கோ டா என்றவன் அவனின் தோளில் கையை போட்டுக் கொண்டே உனக்கு எது தேவையா இருந்தாலும் என்கிட்ட கேளுடா ஐ வில் ஹெல்ப் யூ” என்றான் மென் புன்னகையுடன்…
தன் தோளில் இருந்த ஜெய் ஆனந்த்தின் கையை சட்டென தட்டி விட்டவன் “நோ தேங்க்ஸ்” என முகத்தில் அடித்தது போலக் கூறியவன் அங்கு இருந்து விருட்டென மாடியேறி தன் அறையை நோக்கி சென்று இருந்தான்.
அவனின் உதாசீனத்தில் சட்டென முகம் வாடினாலும் தன் அன்னையின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்தவன் “ என்னோட தம்பி இன்னுமே எனக்கு வளர்ந்த பிள்ளை போல தான் மா என்றவன் மேலும் பேச்சை மாற்றும் பொருட்டு என்னோட டிரஸ் எல்லாம் பேக் பண்ணி வச்சிட்டேன் என்றவன் சற்று தயங்கிய படி தியா எங்க?” என்று கேட்டு இருந்தான்.
“அவ நேரத்துக்கே காலேஜ் கிளம்பிட்டா பா என்றவர் குரல் தழுதழுக்க இன்னும் எத்தனை வருஷத்துக்கு அவனுக்கு எல்லாமே விட்டு கொடுக்க போற ஆனந்த்” என்றார் சற்று காட்டமாகவே…
“ப்ச்… அம்மா என்ன பேச்சு இது அவனும் உங்களோட பையன் தான். நான் யூ எஸ் கிளம்பி போனதும் அவனை திட்டிட்டு இருக்காதிங்கமா அவனோட இஷ்டம் போல இருக்கட்டும்” என்றான் சித்ராவின் கன்னத்தைக் கிள்ளிய படி…
“நீ இப்படியே பேசிட்டு இருடா அவனோட போக்கே சரி இல்லை. அவனோட இந்த குணத்தை மாத்த முடியாமல் ஒரு அம்மாவா தோத்து போய்ட்டேன் போல டா” என்றார் எங்கோ வெறித்துக் கொண்டே…
“ஓ மை கோட் அம்மா அவன் என்னோட தம்பி அவன் உரிமையா கேக்குறப்போ அதை நான் பண்றதுல தப்பே இல்லை என்றவன் குரல் தாழ்த்தி பிளீஸ் இனிமேல் இப்படி பேசுறதை நிறுத்துங்க ” என்றவன் அறியவில்லை அவளின் உயிரானவளைக் கூட அவன் தனதாக்கிக் கொள்வான் என…
அந்த நாள் எப்படியோ கடந்து விட அடுத்த நாள் காலையிலேயே தனது மருத்துவ படிப்பிற்காக அமெரிக்காவினை நோக்கி கிளம்பி இருந்தான் ஜெய் ஆனந்த்.
ஆம், அவனது கனவே மகப்பேறு மருத்துவனாக வர வேண்டும் என்பதே அதற்காகவென நன்றாகப் படித்தவன் நினைத்ததைப் போலவே இதோ கிளம்பியும் இருந்தான். ஆனால், அவனுக்கு மாறான அவனது தம்பியோ பிஎஸ்சி அக்ரிகல்ச்சரை பயின்று விட்டு வீட்டோடு பிடிவாதமாக இருந்து விட பிரதாபனோ கொதித்து விட்டார். அவனின் இந்த தான்தோன்றிச் செயல்கள் ஒவ்வொன்றுக்கும் ஜெய் ஆனந்த்தை முன்னிலை நிறுத்திப் பேசப் பேச அவனுக்கோ ஒருக் கட்டத்தில் சொந்த அண்ணன் மீதே கொஞ்சம் கொஞ்சமாக ஆத்திரம் பல்கிப் பெருகியது. ஜெய் ஆனந்த்திற்காக வீட்டார் செய்யும் ஒவ்வொன்றையும் மட்டும் அல்ல… அவனாக விரும்பி ஒன்றைச் செய்தாலும் கூட ஜெய் ஆனந்த் அவன் மீது வைத்திருக்கும் அன்பைப் பயன்படுத்தி அவன் மூலமாகவே பெற்றுக் கொள்வான். இதே தொடர்கதையாகி கொண்டே இருந்ததே தவிர இதோ இன்று ஜெய் ஆனந்த் சென்று ஐந்து வருடங்கள் கடந்தும் இன்னும் அவனின் ஜெய் ஆனந்த் மீதான ஒரு வித பழி வெறியை வளர்த்துக் கொண்டு இருந்தானே தவிர அதில் ஒரு வீதம் கூட அவனின் மீதான கட்டுக்குள் அடங்கா ஆத்திரத்தை குறைக்கவே இல்லை என்றே கூறலாம்.
எங்கனம் குறையும் ஜெய் ஆனந்த் சென்ற பிறகும் கூட அவனை வைத்தே விபீஷனை குறைத்துப் பேசினால் அவனும் மனிதன் தானே ஆத்திரம் வராதா என்ன? அதுவே நாளடைவில் ஜெய் ஆனந்த் மீது கொலை வெறியையே வளர்த்துக் கொண்டு இருந்தது.
இதில் என்ன வித்தியாசம் என்றால் அவன் தேர்ந்தெடுத்த மருத்துவப் படிப்பை அவனும் பயில முயலவில்லை அவ்வளவு தான். ஐந்து வருடங்களுக்குப் பிறகு… காலைக் கதிரவன் செவ்வனே தன் பணியைச் செய்ய அதே நேரம் அக் கிராமத்தின் செல்வந்தக் குடும்பம் என மக்களால் பேசப்படும் பிரதாபனின் மாளிகை போன்ற வீடே ஆரவாரமாக இருந்தது என்றே சொல்லலாம்.
ஆம், இன்று பிரதாபனின் மூத்த மகன் ஜெய் ஆனந்த் ஐந்து வருடங்களுக்குப் பிறகு வெளிநாட்டில் தனது மருத்துவ படிப்பை முடித்துக் கொண்டு அதுவும் நிரந்தரமாக அவனின் சொந்த ஊரிலேயே அவன் நிர்மாணித்த வைத்தியசாலையை தன் பொறுப்பில் நிர்வகிக்க வருகின்றான் என்றால் சொல்லவும் வேண்டுமா? ஒருவனைத் தவிர அந்தக் குடும்பமே மகிழ்ச்சிக் கடலில் ஆர்ப்பரித்துக் கொண்டு இருந்தது.
ஆம், அந்த ஒருவன் வேறு யாராக இருக்க முடியும்? ஜெய் ஆனந்தின் உடன் பிறந்த தம்பி விபீஷன் ஆக தானே இருக்க முடியும்.
இத்தனைக்கும் ஜெய் ஆனந்த் அன்பானவன், ஆளுமையானவன், எதனையும் நிதானமாக யோசித்து செயல் படுத்துபவன் அவன். அதனாலோ என்னவோ குடும்பத்தில் மட்டும் அல்ல அந்த அந்தக் கிராமத்து மக்களுக்கு கூட அவனை மிகவும் பிடித்துப் போனது தான் நிஜம்.
தங்கள் கிராமத்திற்காகவே வைத்தியசாலையை அவன் நிர்மாணித்து விட இனி சொல்லவா வேண்டும்? அவனின் குணத்திலும் தோற்றத்திலும் ஈர்க்கப்பட்ட மக்கள் அவனின் இச் செயலில் நெகிழ்ந்து போயினர்.
வாசலில் ஆரத்தி தட்டுடன் நின்று இருந்தார் அவனின் செல்ல அத்தை வித்யா.
ஆம், வித்யா பிரதாபனின் அன்புத் தங்கை. பிரதாபனின் உயிர் நண்பனான நாதன் தனது தங்கை மீது கொண்ட காதலை உணர்ந்து கொண்ட பிரதாபன் ஒரு வாரத்திலேயே வித்யாவிற்கும் நாதனுக்கும் திருமணம் செய்து வைத்து விட… அவர்களின் வாழ்க்கையோ மிகவும் மகிழ்ச்சியாக சென்றது. திருமணத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்தே வித்யாவினதும் நாதனினதும் அன்புக்குச் சான்றாக அடுத்தடுத்த வருடங்களில் இரு பெண் குழந்தைகளை ஈன்றெடுத்தார் வித்யா. அதனைத் தொடர்ந்து மூன்று வருடத்திலேயே யார்க் கண் பட்டதோ வாகன விபத்தில் நாதனின் உயிர்ப் பிரிந்து விட துடித்துப் போன வித்யா தனக்குள் மனதளவில் இறுகி விட்டார்.
உயிர் நண்பனின் இறப்பும் தங்கையின் விதவைக் கோலமும் காண சகியாது தன் வீட்டிலேயே தங்க வைக்க முடிவெடுத்த பிரதாபனின் முடிவை மறுத்த வித்யா அவரின் வீட்டின் பக்கத்திலேயே சேமிப்பில் இருந்த நாதனின் பணத்தில் புதிய வீடோன்றினை அமைத்து தன் பிள்ளைகளுடன் குடி புகுந்து வாழ்ந்தவருக்கு தன் அண்ணனின் சாயலில் இருக்கும் ஜெய் ஆனந்த் மீது கொள்ளைப் பிரியம் என்றே சொல்லலாம்.
இதோ அவனின் வருகைக்காக ஆளுக்கு முன் அதி காலையிலேயே வந்து நின்று விட்டார் வித்யா.
“வித்யா என்ன நீ மட்டும் வந்து இருக்க ஆஹித்யா பவ்யா ரெண்டு பேரையும் அழைச்சிட்டு வரலையா?” என்ற சித்ராவின் கேள்வியில் சலித்துக் கொண்ட வித்யா “ரெண்டு பேருமே மாமா வர்றார்னு காலேஜ் போகாமல் தூங்கிட்டு இருக்காங்க அண்ணி. அப்படியே அவ்வளவு அக்கறை இருந்தால் எழுந்து வந்து இருக்கணுமே” என்று நொடித்துக் கொண்டார் வித்யா.
“சின்ன பிள்ளைங்க அப்படி தான் விடு வித்யா” என்றவர் சத்தம் கேட்டு வாசலைப் பார்க்க… வெள்ளை நிற ஃபெராரி காரில் இருந்து கூலர்ஸ் உடன் ஆளை அசத்தும் கம்பீரமான அழகுடன் ஆளுமையாக இறங்கியவன் இருவரையும் நோக்கி மென் புன்னகையுடன் வந்துக் கொண்டு இருந்தான் ஜெய் ஆனந்த்.
கிராமம் என்றால் சொல்லவும் வேண்டுமா? அக்கம் பக்கத்தில் சிலர் அவனைச் சூழ… அனைவரிடமும் முகம் சுளிக்காமல் மென் புன்னகையுடன் பார்த்து பேசி விட்டு திரும்பியவனை ஒரு சிறுப் பெண் பிள்ளை தனது தாயின் அணைப்பில் இருந்து அவனிடம் தாவ முற்பட… அச் சிறு பிள்ளையின் தாய் தான் பதறிப் போனார். அவரின் பதறிய தோற்றத்தைத் பார்த்து “எதுக்காக இவ்வளவு டென்ஷன்? என்று கேட்டவன் இதழ்கள் புன்னகையில் விரிய அப் பெண் பிள்ளையை ஏந்திக் கொண்டவன் சோ ஸ்வீட்” என்று கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்தவன் முகத்தில் அச் சிறு பெண் முத்தம் பதித்து விட்டு அழகா இருக்கீங்க” என்று சொல்ல… நாவினால் கன்னத்தை முட்டிப் புன்னகைத்தவன் “தேங்க்ஸ் பியூட்டி” என்றவனின் வெட்கப் புன்னகையில் அங்கு நின்று இருந்த அனைவருமே ஒரு கணம் ஈர்க்கப்பட்டு தான் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்க “இந்த பார்மலிட்டி எல்லாம் கொஞ்சமே கொஞ்சம் ஓவர் தான்” என்று நெற்றியை நீவிக் கொண்டே சொன்னவன் எதேர்ச்சியாக மாடியைப் பார்த்தவன் அதிர்ந்தே விட்டான்.