நிதர்சனக் கனவோ நீ! : 13 and 14

4.8
(42)

அத்தியாயம் – 13

ஆயிற்று ஜெய் ஆனந்த் சொன்னது போல அவன் வீட்டை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் கடந்திருந்தன.

அவன் வீட்டை விட்டு கிளம்ப முதல் காரணமே அவனது மனநிலை யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் தான்.

அவன் இல்லாத வீட்டில் விபீஷன் தான் நினைத்தது நடந்து விட்டது என்ற திருப்தியில் சந்தோஷமாக இருக்க, அவன் சொல்லி இருக்கா விட்டாலும் தனிமையை நாடி அவனே வீட்டை விட்டு வெளியேறி இருப்பான் என்று பாவம் அவன் அறியவில்லை.

உணவுத் தட்டை கொண்டு வந்து சித்ராவின் அருகில் வைத்தவர் “அண்ணி சாப்பிடுங்க” என்று சொல்லிக் கொண்டே அவரின் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து விட, “என் பையனை பார்க்கணும்” என்று சொன்னவரை பாவமாகப் பார்த்த வித்யா “அவன் இப்ப ஹாஸ்பிடல் கிளம்பி இருப்பான் அண்ணி” என்றார்.

“வா ஹாஸ்பிடல் போகலாம்”  என்றவரை அதிர்ந்து பார்த்த வித்யா “அண்ணி…” என்று எதையோ கூற வரும் முன்னரே “நீ போய் கூப்பிட்டா மறுபடி அவன் வந்துடுவானா? என்ற பெரு மூச்சுடன் அறைக்குள் வந்த பிரதாபன் பிடிவாதம் பிடிக்காமல் சாப்பிடு விபீஷன் மேரேஜ் முடியட்டும் அதுக்கு பிறகு கூட்டிட்டு வந்துடலாம்” என்றவர் அவரை சமாதானம் செய்ய….

“விபீஷன்” என்று கூற வந்தவரை இடை மறித்தவர் “அவனை பத்தி நினைச்சு எதுக்காக டென்ஷன் ஆகுற? நம்ம பையனை கூட்டிட்டு வர்றது என் பொறுப்பு. அதை நான் பார்த்துக்கிறேன்” என்று சொன்னவர் அறியவில்லை ஜெய் ஆனந்த் ஒரு போதும் திரும்பி வரப் போவதில்லை என…

பிரதாபன் கூறிய வார்த்தைகளில் அகம் மகிழ்ந்து போனவர் சாப்பிட ஆரம்பித்தார்.

அவரை சிறு புன்னகையுடன் பார்த்தவர் “வித்யா நீ என்ன சொல்ற?” என்று பிரதாபன் கேட்ட கேள்வியில் எதுவும் புரியாமல் விழித்தவர் “அண்ணா என்னது புரியல” என்று கேட்க…

“நடந்த பிரச்சனை என்னனு உனக்கு தெரியும் என்றவர் குரலை செருமிக் கொண்டே இவன் பண்ணி வச்ச வேலை இந்நேரம் ஊர்குள்ள பரவி இருக்கும் அதுக்காக மட்டும் சொல்லலை. அதே கோயில்லயே வேண்டப்பட்டவங்களுக்கு சொல்லி கல்யாணத்தை மறுபடி நடத்தி வச்சிடலாம்” என்று சொல்ல…

“அண்ணா விபீ…” என்றிழுத்தவரிடம் “வித்யா, நான் அவன் கிட்ட பேசுறேன்” என்று உறுதியான குரல் வந்தது என்னவோ சித்ராவிடம் இருந்து தான்.

 “ஹும் பேசு நான் பேசுனா அவன் பேசுற பேச்சுக்கு இழுத்து அறைய தான் தோணும் என்று சொன்ன பிரதாபன் மதியம் பேசிட்டு சொல்லு சித்ரா அடுத்து ஆக வேண்டிய வேலையை பார்க்கணும்” என்றவர் தளர்ந்த நடையுடன் சென்றார்.

அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே தனது வீட்டிற்கு வந்த வித்யா, உணவைக் கூட சாப்பிடாமல் எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்து இருக்க, கோபமாக அவள் அருகில் வந்தவர் ஓங்கி தலையில் கொட்டினார்.

சும்மாவே கண்ணீர் இதோ வழிந்து விடும் போல அமர்ந்து இருந்தவள் அவர் தலையில் கொட்டவும் அருவி போல கன்னத்தில் வழிய ஆரம்பித்து விட, வித்யாவோ பதறிவிட்டார்.

பின்னே, சாதாரணமாக அவர் கொட்டியதற்காகவா இந்த அழுகை?

அதுவும் எத்தனையோ முறை அவளை கொட்டி இருக்கின்றார் அப்போது எல்லாம் அழாதவளா இப்போது அழுகிறாள்?

“பவ்யா?” என்றழைத்த படி அவளின் அருகில் அமர்ந்தார் வித்யா.

அவளின் விழிகளில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் வழிந்ததேயன்றி வித்யாவின் பேச்சுக்கு பதில் எதுவும் கூறாமல் அமைதியாகவே இருந்தவளை பார்த்து உள்ளூர அச்சம் துளிர்க்க, தன் நடுங்கும் கரங்களால் பவ்யாவின் தோளைத் தொட்டு உழுக்கினார்.

“அம்மா” என்ற கேவலோடு வித்யாவை இறுக அணைத்துக் கொண்டு சொல்லோனா வேதனையில் வெடித்து அழுதாள் பெண்ணவள்.

உள்ளம் பதை பதைக்க “ஏன் டி அழுற சொல்லு டா தங்கம்?” என்று அவளின் கன்னத்தை தாங்கி பிடித்து கேட்க…

அப்போது தான், தான் செய்துக் கொண்டு இருக்கும் வேலையே அவளுக்கு உரைத்தது.

என்னவென்று சொல்வது?

அக்காவின் கணவனை காதலிக்கின்றேன் என்றா சொல்ல முடியும்? அதுவும் தன்னைப் பிடிக்காமல் காரி உமிழும் அவனை பற்றி என்னவென்று சொல்வாள்?

வேண்டாம்! வேண்டவே வேண்டாம்! என்னுடைய வலி என்னோடே போகட்டும். என் தமக்கை சந்தோஷமாக வாழ வேண்டும்? அதற்கு தான் ஒரு போதும் தடையாக இருக்கக் கூடாது என்று எண்ணியவள் அப்படியே பேச்சை மாற்றி இருந்தாள்.

 இறுதி பரீட்சையிக்கு தான் ஒழுங்காக படிக்காமல் சென்று எழுதி விட்டு வந்ததாக கூறி அவள் அழ, என்னவோ ஏதோ என்று பயந்துப் போன வித்யா அவள் இப்படி சொல்லவும் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டார்.

அவரின் சிரிப்பை உணர்ச்சி துடைக்கப்பட்ட முகத்துடன் பார்த்தவள் அமைதியாக இருக்க, வித்யாவோ “இதோ பார்டி இதெல்லாம் ஒரு விஷயமா? பாஸ் ஆகலனா மறுபடி எழுத கூட முடியும் அதுக்காக எதுக்கு உடம்பை வருத்திட்டு இருக்க?” என்றவர் உணவை பிசைந்து அவளுக்கு ஊட்ட ஆரம்பித்து விட்டார்.

“பாஸ் ஆகிட்டா சென்னைல ஜாப் ஆப்லை பண்ணலாம்னு இருக்கேன் மா”

“என்ன சென்னையா? என அதிர்ந்து போய் கேட்டவர் அவளின் வாடிய முகத்தைப் பார்த்து என்ன நினைத்தாரோ முதல்ல நீ பாஸ் ஆகு அதுக்கு பிறகு பார்த்துக்கலாம்” என்று அத்தோடு அந்த பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்து இருந்தார்.

 

இங்கு இப்படி இருக்க, மருத்துவமனைக்குச் சென்ற ஜெய் ஆனந்த்திற்கோ அவனது கவனம் எதிலும் லயிக்கவில்லை.

கடந்து போனதை நினையாதே மனமே என்று தனக்குள் உருப் போட்டுக் கொண்டு வேலையில் கவனத்தை செலுத்தத் தொடங்கியவனுக்கு மனதை அழுத்தும் நினைவுகளை நினையாமல் இருக்க முடியவில்லை.

சொல்லாத காதலின் தாக்கம் இப்போது தன் காதலை அவளிடம் கூறி இருக்கலாமோ என்ற எண்ணத்தை அவனுள் விதைத்து இருந்தது. தான் மாபெரும் தவறு இழைத்து விட்டதாகவே அவனுக்குத் தோன்றியது.

அதனாலோ என்னவோ அவனது சிந்தை, செயல் முழுதும் ஓரிடத்தில் நிலையாக இருக்க மறுத்தது.

அவனின் நிலையை அருகில் இருந்து பார்த்துத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துக் கொண்ட நவீன் “பிளீஸ் ஜஸ்ட் 1 வீக் டைம் எடுத்துக்கோ ஆனந்த்” என்று சொல்ல என்ன நினைத்தானோ “என் மென்டல் ஹெல்த் ஸ்டேபிள் ஆக சைக்கார்ட்டிஸ்ட்டை கன்சல் பண்லாம்னு இருக்கேன்” என்று கூறி நவீனின் அதிர்ச்சியை மேலும் கூட்டி இருந்தான் அவன்.

“ஆர் யூ க்ரேஸி? என்று கேட்டவன் டேய் நீ ஸ்டேபலா தான் இருக்க அண்ட் இப்போ கூட ஒன்னும் கேட்டு போகல உன் தியாகிட்ட போய் உன் காதலை சொல்லிடு” என்றவனை அனல் பார்வை பார்த்தவன் “அவ என் தம்பி பொண்டாட்டி நவீன்” என்றான் அழுத்தமாக…

“ தம்பி பொண்டாட்டியா இருந்தால் அப்போ எதுக்காக ஃபீல் பண்ணிட்டு இருக்க?” என்று அவன் கேட்கவும் அவனை அடிபட்ட பார்வை பார்த்தான்.

அவன் கேட்பதும் சரி தானே!

இறுகிய அவன் முகத்தை பார்த்தவன் “நான் தப்பா கேட்கல ஆனந்த். எனக்கு உன்ன பத்தி தெரியும் அண்ட் நீ எதுக்காக பீல் பண்றனு கூட தெரியும் முடிஞ்சு போனதை நினைச்சு எதுக்காக உன்னை வருத்திக்கிற ? என்று கேட்டவன் இழுத்துப் பெரு மூச்சை விட்டுக் கொண்டே ஹியர் லுக் ஆனந்த் இப்போ ஒன்னு மட்டும் சொல்றேன் நீ ஒரு டாக்டர்ங்குறதை மறந்துடாத” என்ற ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாகக் கூறியவன் தனது கேபினை நோக்கி சென்றிருந்தான்.

அவனின் இறுதி வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து இருப்பதை உணர்ந்து கொண்டவன் அக் கணம் முதல்  தன் உணர்வுகளுக்கு கடிவாளமிட்டுக் கொண்டான்.

உடன் பிறந்தவனின் மனைவி அவள்.

இனி அவளை நினைத்துக் கொண்டு நான் இருந்தால் அவ் உறவுக்கு மரியாதை ஏது?

வலித்தது .

உயிரை உடலில் இருந்து உருவி எடுத்தாற் போல வலித்தது.

முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டு சத்திர சிகிச்சை அறைக்குள் நுழைந்திருந்தான்.

முகத்தில் தெளிவுடன் உள்ளே வந்தவனை மெச்சுதலாக பார்த்த நவீனின் கையில் இருந்த அனஸ்தீசியா ஏற்றப்பட்ட இஞ்செக்சனை வாங்கியவன் விழிகளை மூடி  சுவற்றைப் பார்த்த படி படுத்து இருந்த கர்ப்பிணியின் முதுகுத் தண்டில் செலுத்தினான்.

மூளை தெளிவாக சிந்திக்க தொடங்கியதால் என்னவோ இம்முறை அவனின் கரங்கள் நடுங்காமல் இருக்க, அதனைத் தொடர்ந்து சில மணி நேரத்திலேயே அப் பெண்ணிற்கு அவனே சத்திர சிகிச்சையை மேற்கொள்ள ஆரம்பித்து இருந்தான்.

******************************

ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் உழன்றுக் கொண்டு இருக்க, காலையிலேயே கழுத்தில் மஞ்சள் கயிற்றுடன் கல்லூரிக்கு வந்தவள் தன் பின்னால் பேசும் பேச்சுக்களில் அறுவறுத்துப் போனாள்.

தன் மனநிலை முற்றாக உணரும் முன்னரே ஒரு திருமணம்.

 

அதற்குள் வீட்டில் வேறு ஆயிரத்தெட்டு பிரச்சனைகள்.

 இதில் தாலியை கட்டியவன் கூட அதன் பிறகு கண்ணாலே எரித்து விடுவது போல பார்க்க, அவனிடம் கூட என்ன பேசுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்று இருந்தது என்னவோ ஆஹித்யா தான்.

 

தாலி கட்டி விட்டான் என்று அவனை சட்டென மனம் ஏற்க மறுத்தது.

அவனை காதலிக்கின்றாயா என்று கேட்டால் கூட அவளுக்கு விடை தெரியாது பிறகு எங்கனம் அவனை கணவனாக ஏற்பது?

அவனை முற்றாக ஏற்றுக்கொள்ளும் வரை தனக்கான நேரத்தை தரும்படி அவனிடம் கேட்க வேண்டும் என்ற தெளிவாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்த பின்னரே முகம் தெளிந்து கல்லூரிக்கு கிளம்பி வந்து இருந்தாள்.

 

ஆனால், இங்கோ தன் திருமணம் பற்றி பின்னால் கிசுகிசுப்பாக பேச, அனைத்தையும் வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டு சென்று விடலாமா? என்று நினைத்தவளுக்கு தன் அன்னையின் முகம் மின்னி மறைய சட்டென அந்த எண்ணத்தை கை விட்டவள் அவளுக்கு நடக்கவிருக்கும் அசம்பாவிதம் தெரியாமலேயே வீட்டை நோக்கி விரைவாகக் கிளம்பி இருந்தாள்.

அத்தியாயம் – 14

களைப்பாக வீட்டுக்கு வந்தவள் இப்போதைக்கு எதனையும் சிந்திக்க திறன் அற்று அறைக்குள் சென்று கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

படுத்த மறு நொடியே தூக்கம் விழிகளை தாக்க,  மெதுவாக விழிகளை மூடியவள் விபீஷனின் உரத்த குரலில் தூக்கி வாரிப் போட எழுந்து அமர்ந்தாள்.

“நிம்மதியா தூங்க கூட முடியிறது இல்ல” என்று சலித்தவாறே விழிகளை கசக்கிக் கொண்டே கட்டிலில் இருந்து எழுந்தவள் “என்னால அவன் சொல்றதுக்காக எல்லாம் மறுபடி கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்றவன் வார்த்தைகள் இப்போது தெளிவாக அவள் காதுகளில் விழ, “இவனை” என்று பற்களை கடித்த படி வெளியில் வந்தவள் பிரதாபனின் வீட்டுக்குச் சென்றாள்.

நுழைவாயிலின் உள்ளே நுழையும் போதே, “தியா மா இங்க வாமா உன் புருஷன் கிட்ட என்னனு கேளு” என்று சித்ரா சொல்ல…

‘ போச்சுடா… என்னை பார்த்தாலே எரிக்கிற மாதிரி பாக்குறான் இவன்கிட்ட என்னத்தை பேசுறது என்று விரல் நகத்தை பற்களால் கடித்த படி இவன் என் புருஷன்னு யாராச்சும் சொன்னால் தான் புத்திக்கு உரைக்குது’ என்று மனதில் பேசிக் கொண்டே அவர்களை நெருங்கியவள் அவனை ஏறிட்டு கூட பார்க்க பயந்து போனவளாய் “அத்தை” என்றாள்.

“உனக்கு கோயில்ல வச்சு தாலி கட்டுறான் ஆனால் எல்லாருக்கும் சொல்லி மறுபடி கல்யாணம் பண்ணிக்க சொன்னால் முடியாதுனு சொல்றான்” என்று சித்ரா சொல்ல…

எனக்கு இந்த திருமணமே பிடிக்கவில்லை என்று வாய் விட்டுக் கத்த வேண்டும் போலிருந்தது அவளுக்கு…

விழிகள் ஜெய் ஆனந்த்தை தேடியது.

 ‘ ஐயோ மாமாவை தான் சண்டை போட்டு விரட்டி விட்டானே! இப்போ யார் என்னை காப்பாத்த போறதோ?’ என்று மனதில் புலம்பிக் கொண்டே சித்ராவின் அருகில் செய்வது அறியாது கைகளை பிசைந்த படி நின்று இருந்த தன் அன்னையை வெறித்தாள்.

வித்யாவோ பேசு என்பதைப் போல கண்களால் சைகை செய்ய, தன்னையே பார்த்துக் கொண்டு நின்று இருந்த விபீஷனிடம் திரும்பி விபீஷன் என்று அவன் பெயரை கூற வந்த நாவை அடக்கியவள் “மாமா, மறுபடி” என்று கூற வந்தவளை சலிப்பாக பார்த்தவன் “முடியாது. வேற பேசணுமா இருந்தால் மட்டும் பேசு” என்றான் அழுத்தமாக…

 

“கோவில்ல பதிவு பண்ணனும் விபீ என்றார்” சித்ரா

“அதை நானே பண்ணிட்டேன்” என்றான் சட்டென…

“நாங்க சொல்றதை கேட்க மாட்டேன்னு ஏன் டா பிடிவாதம் பிடிக்கிற? கஷ்டமா இருக்கு டா” என்றவரை “நீங்களா சொன்னால் கேட்க நான் தயாரா இருக்கேன் ஆனால் இந்த ஐடியாவை கொடுத்தது உங்க மூத்த மகன் ஆச்சே” என்று சொல்ல…

 

என்ன சொல்கின்றான் இவன்? ஜெய் ஆனந்த் சொன்ன ஒரே காரணத்திற்காக தான் தன் பிடியில் நிற்கின்றானா?

அவனின் விதண்டாவாதத்தில் கையை நீட்டி விடுவோமோ என்று அச்சம் கொண்ட சித்ரா “அவன் சொன்னதுக்காக இல்லை உனக்கும் ஆஹித்யாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க ஏற்கனவே முடிவு பண்ணி தான் வச்சு இருந்தோம். அதுக்குள்ள நீ அவசரப்படுவனு நான் கனவா கண்டேன்?” என்றவரை “அவன் சொல்ற வரை என் கல்யாணத்தை மறுபடி நடத்தலாம்ன்னு உங்களுக்கு தோணலை தானே மா” என்றவனை என்ன செய்வது என்று அவருக்கே தெரியவில்லை.

 

இவன் புரிந்து பேசுகின்றானா இல்லை புரியாமல் பேசுகின்றானா?

“சொல்றதை கொஞ்சமாச்சும் கேளுடா எனக் விழிகள் சிவந்து போய் நின்று இருந்த ஆஹித்யாவை காட்டி நம்ம வீட்டு பொண்ணு டா நாளைக்கு இவளை தப்பா யாரும் பேசிட கூடாது அது மட்டும் இல்ல பவ்யா நாளைக்கு இன்னொரு வீட்டுக்கு கல்யாணம் பண்ணி போற பொண்ணு அதுனால…” என்று கூற வந்தவரிடம் “மத்தவங்களுக்காக எனக்கு யோசிக்க முடியாது” என்றான் குரல் உயர்த்தி…

“அப்போ இந்த வீட்டை விட்டு வெளிய போ” என்ற அழுத்தம் திருத்தமான குரல் வந்தது என்னவோ நுழைவாயிலில் நின்ற படி இவர்களின் உரையாடல்களை பார்த்துக் கொண்டு நின்று இருந்த பிரதாபனிடம் இருந்து தான்.

“என்னங்க” என்றார் சித்ரா.

“சொல்றதை கேட்க முடியலனா எதுக்காக இவன் இந்த வீட்டுல இருக்கணும்?” என்று சொல்ல…

அவ்வளவு தான்.

“அஹான்… உங்க மூத்த பையனை நான் வெளில போக சொன்னதும் இப்போ  என்னை வெளிய அனுப்புறீங்க” என்று கசப்பாகப் புன்னகைத்தான்.

 

“நான் சொல்றதை கேட்டால் நீ இங்க இருக்கலாம்” என்றவரைப் பார்த்தவன் “அதான் சொல்றேனே நீங்களா சொல்றதை நான் கேட்க தயாரா இருக்கேன் அவன் சொல்லி அதை நீங்க என்னை பண்ண சொல்றதை நான் செத்தாலும் பண்ண தயாரா இல்லை” என்றான்.

 

ஆஹித்யாவுக்கோ, இவன் என்ன பைத்தியமா? என்று தான் தோன்றியது.

பிரதாபனுக்கோ, அவனின் பேச்சில் அடித்து கொன்று விடும் ஆத்திரம் எழுந்தது.

அடக்கிக் கொண்டவர்.

“என் கண்ணு முன்னால ஒரு நிமிஷம் கூட நிட்காத இந்த வீட்டை விட்டு கிளம்பு. உன்னால இங்க யாருமே சந்தோஷமா இல்லை. அப்படி எங்க சந்தோஷத்தை கெடுத்திட்டு தான் நீ இங்க இருக்கணும்னா சொல்லு நானே இந்த வீட்டை விட்டு போக தயாரா இருக்கேன்” என்று சொன்ன பிரதாபன் வீட்டின் உள்ளே சென்று விட, போகும் அவரை வெறித்துப் பார்த்தவன் வேகமாக உள்ளே சென்று தன் உடைகளை அடுக்க ஆரம்பித்தான்.

இருவரின் பேச்சிலும் தொனியிலும் அரண்டு போய் நின்றது என்னவோ வீட்டினர் தான்.

அவனுள் கட்டுக்கடகா ஆத்திரம்.

அனைத்தும் திரும்பியது என்னவோ ஜெய் ஆனந்த் மீது தான்.

அண்ணன் வாழ்வை கெடுக்க நினைத்தவனுக்கு இப்போது அனைத்தும் தலைகீழாக மாறி போனது.

அவன் இல்லாமல் தான் மட்டும் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்து இருந்தவனுக்கு, அவன் போன பின்பு அனைவரின் முகத்திலும் இருந்த உயிர்ப்பு அற்று போக, அப்படியென்றால்  நான் இவர்களுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லையா? என்ற எண்ணம் அவனின் சிந்தையை ஆட்கொண்டது.

அந்த கோபத்தில் இருந்தவனுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே ஜெய் ஆனந்த் ஆரம்பித்த திருமணம் பற்றிய பேச்சை  இப்போது அனைவரும் பேச கோபத்தின் உச்சிக்கே சென்று இருந்தான்.

உடைகளை அடுக்கி எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவன் ஹாலில் அமர்ந்து இருந்த பிரதாபனை அழுத்தமாகப் பார்த்து விட்டு வெளியேறியவனின் கையை பற்றிய சித்ரா “ இவளையும் கையோட கூட்டிட்டு போ” என்று அழுது வீங்கிய முகத்துடன் கையில் உடைப் பையுடன் நின்று இருந்த ஆஹித்யாவை காட்ட…

ஜெய் ஆனந்த்தை பழி வாங்க வேண்டும். அவனைக் கஷ்டப் படுத்த வேண்டும் என்றல்லவா அவளை திருமணம் செய்தான்.

அவள் மேல் காதல் என்றே ஒன்று இல்லாமல் எப்படி தன்னுடன் அழைத்து செல்ல முடியும்? அதுவும் அவன் திருமணம் செய்து கூட்டிக் கொண்டு வந்த அன்றே எப்படியும் தன்னையும் அவளையும் பிரித்து வைக்கத் தான் போகின்றார்கள் என்று ஊகித்து காய் நகர்த்தியவனுக்கு இப்போது அவளை உடன் அழைத்து செல் என்றால்? ஒரு கணம் திகைத்து விழித்தான்.

அவன் பதில் எதுவும் கூறாமல் இருக்கவும் “நீ சொல்றதை கேட்க போறது இல்ல. பரவால்ல ஆனால் இவளோட வாழ்க்கையை கெடுத்துடாத” என்றவரின் கலங்கிய தோற்றம் அவனை அசைத்து பார்த்தது.

எங்கே அவன் கூட்டிச் சென்று விடுவானோ என்று அச்சம் கொண்டவள் இல்லாத கடவுள்களை எல்லாம் இழுத்து வணங்க ஆரம்பித்தவள் வைத்த வேண்டுதல் கடவுளுக்கே கேட்கவில்லை போலும் “வா கிளம்பலாம்” என்ற அவனின் வார்த்தைகள் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதை போல தன் காதுகளில் ஒலித்தது.

‘ஹையோ இவனோடா இனி என் வாழ்க்கை’ என்று நினைத்து பதறிப் போனவள்  திரும்பி தனது அன்னையை முறைத்தாள்.

எங்கே தனது மகளின் வாழ்வு கெட்டு விடுமோ என்று பயந்து போனவர் அவனோடு அவளை அனுப்பும் முடிவை எடுத்து இருக்க, அதனை மறுத்து பேச முயன்றவளை ஒருவாறு பேசி சமாதானம் செய்தவர் இப்போதைய அவளின் மருண்ட பார்வையில் துணுக்குற்றவர் விபீஷன் அருகில் வந்து “ என் பொண்ணை கவனமா பார்த்துக்கோ விபீ” என்றார்.

அதற்கு “ம்ம்” என்றானே தவிர வேறேதும் அவன் பேச முயலவில்லை என்பதை விட எதுவும் கூற விரும்பவில்லை என்பது தான் நிஜம்.

தனது பைக்கில் ஏறிக் கொண்டே கடைசியாக வீட்டைப் பார்த்தவன் பார்வை சித்ராவின் மீது ஏக்கமாக படிய, அவனின் பார்வையில் உடைந்து சத்தமாக அழ ஆரம்பித்தவரை  “சித்ரா உள்ள வா” என்ற பிரதாபனின் குரல் ஒலிக்க, சேலை தலைப்பால் வாயை மூடி  அழுகையை அடக்கிக் கொண்டு உள்ளே ஓடி இருந்தார்.

 

தான் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது தன் தந்தைக்கு வலிக்கவில்லையா?

விரக்தி புன்னகை தோன்ற, மனதில் ஏதோ ஒன்றை இழந்த உணர்வு.

அவனை வெளியே போ என்று சொல்லி விட்டார் தான். என்ன இருந்தாலும் அவனும் மகன் தானே வெளியில் உணர்ச்சிகளை காட்டாமல் இருந்தவர் அவன் வெளியில் சென்றதும் அவரின் கன்னங்களை கண்ணீர் நனைத்ததை அவன் அறிய வாய்ப்பில்லையே!

“ஏறு” என்றவன் ஆஹித்யாவை பார்க்க…

உடலும் உள்ளமும் ஒருசேர பதற, அவன் பின்னே ஏறி அமர்ந்தவள் இனிமேல் தான் தன் விதியே மொத்தமாக தடம் புரள போகின்றது என்று அறியாமலேயே தன் அன்னையையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு அவனோடு கிளம்பி இருந்தாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 42

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “நிதர்சனக் கனவோ நீ! : 13 and 14”

  1. Superb dr… Jai I like Jai attitiude… Evlo feelings irunthalum control panitu as a doctor ah surgery panninathu semma….

    Aahithyaa, bayvaa paavam… Pls pa next epi la jai thiyava serthu vaipathu pola bavyavaiyum antha arrogant king vibi kuda serthu vachidu ma….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!