வேகமாக மேல் ஏறியவன் “தியா உள்ள போ” என்ற அழுத்தமான குரலில் “மாமா பிளீஸ் நான் வேணும்னா அதோ அந்த மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிட்டு பார்க்கட்டுமா?” என்று கேட்க…
அவளை நன்றாக முறைத்த ஜெய் ஆனந்த் “என்ன விளையாடுறியா தியா? என அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே இவ்வளவு நேரமும் அமைதியாக இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்த விபீஷனோ “அப்போ நீ நில்லு பட் கடைசி வரையும் நீ கேட்டதை கொடுக்க முடியாது” என்றவன் புருவத்தை ஏற்றி இறக்க…
அவன் அப்படி சொன்னதும் அங்கு நின்று பார்க்க வேண்டும் என்ற தனது ஆசையை கை விட்டவள் “ஹும்… உள்ள போறேன்” என்றவள் பழிப்பு காட்டி விட்டு செல்ல…
போகும் அவளை பார்த்துக் கொண்டே தன்னை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டு இருந்த ஜெய் ஆனந்த்தைப் பார்த்து கர்வமாகப் புன்னகைத்தவன் கை வைத்தது என்னவோ தேன் கூட்டில் தான்.
அதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்தில் இருவரும் தேன் அடையுடன் வீட்டினுள் நுழைய ஹாலில் இருந்து வாயிற் கதவையே பார்த்துக் கொண்டிருந்தவள் கண்கள் மின்ன இருவரையும் நெருங்க, “ஹே கிட்ட வராத வெயிட் வெயிட் “ என்ற ஜெய் ஆனந்த்தின் குரல் எல்லாம் அவள் காதில் விழவே இல்லை.
அவன் கைகளில் இருந்த தேன் அடையை நாவினால் சப்பு கொட்டிய படி வாங்க முயன்றவளிடம் “க்ளீன் பண்ணிட்டு தரேன் டி” என்று சொல்ல…
“ஐயோ மாமா அது வரையும் எனக்கு பொறுமை இல்லை என்று வாங்க முயன்றவளிடன் அவன் பின்னோடு வந்த விபீஷனோ “நான் க்ளீன் பண்ணிட்டேன் வேணுமா?” என்று அவன் கேட்க….
“நீங்க சரியான ரூல்ஸ் ராமானுஜம் போல நடந்துக்கிறீங்க மாமா” என்று ஜெய் ஆனந்த்தை திட்டி விட்டு அவனைத் தாண்டி பின்னால் நின்ற விபீஷனை நெருங்கி இருந்தாள் பெண்ணவள்.
அவள் தன்னிடம் கதைக்கும் போது தான் அதிகப்படியாக நடந்துக் கொள்கின்றோமோ என்ற எண்ணம் தோன்ற சட்டென பின்னால் திரும்பி பார்த்தவன் இதயம் வேகமாக துடித்தது.
வேறு என்னவாக இருக்கும் அவள் விரலால் தேனை எடுத்துச் சப்பு கொட்டி சுவைத்த படி விழிகள் மூடி நிற்க, அவளின் இதழ்களில் தேங்கி நின்ற தேனை கண நேரத்தில் தன் விரல்களால் ஒற்றி எடுத்த விபீஷன் தன் இதழ்களில் வைத்து சுவைத்து இருந்தான்.
சட்டென அதிர்ந்து விழிகளை திறந்தவள் சும்மாவே அவனின் அதிரடியில் ஒருவித ஊசலான மனநிலையில் இருக்க, இப்போதைய அவனின் செயல் அவளின் முகத்தை சிவக்க வைத்து இருந்தது.
அவளைப் பொறுத்த வரையில் முதல் ஆணின் ஸ்பரிசம் அல்லவா?
இக் காட்சியை வெறித்த படி இமை சிமிட்டாமல் மூச்சு விடக் கூட மறந்து பிரம்மை பிடித்தவன் போல நின்று இருந்தான் ஜெய் ஆனந்த்.
அவளோ அங்கு நிற்க முடியாமல் மாடியேறி மேலே ஓடி விட, ஹாலில் எஞ்சி நின்றது என்னவோ ஜெய்யும் விபீஷனும் தான்.
விபீஷனோ, குரலை செருமிக் கொண்டே சன்னமாக விசில் அடித்த படி ஜெய் ஆனந்த்தை கடந்து செல்ல முற்பட… “விபீஷன்” என்ற ஜெய் ஆனந்தின் அழைப்பில் சட்டென அவன் நடையோ நிற்க…
உடன் பிறந்தவன் மீதான அதீத நம்பிக்கை ஒரு புறம் இருக்க, தான் உயிருக்கு மேலாக விரும்பும் பெண்ணிடம் அவன் நடந்துக் கொண்ட விதம் என்பன கண்ணால் கண்ட பின்னும் எப்படி அவனிடம் கேட்பது? என்று எல்லாம் எண்ணம் வளம் வர, தலையை உலுக்கி சமன் செய்தவன் அவன் புறம் திரும்பாமலேயே “நத்திங்” என்றவன் வந்த வழியே வெளியேறி இருந்தான்.
அவன் எதைக் கேட்க வேண்டும் என்று நினைத்தானோ அதை இப்போதே கேட்டு இருந்தால் அவனின் பதிலை வைத்து ஏதேனும் கணித்து இருப்பானோ என்னவோ விதியின் செயலை எங்கனம் மாற்ற முடியும்?
அன்று இரவும் அமைதியாக உணவை உண்டுக் கொண்டு இருந்த ஜெய் ஆனந்தின் முகத்தை பார்த்த பிரதாபன் “என்னப்பா ஹாஸ்பிடல்ல எந்த பிரச்சனையும் இல்லை தானே?” என்று கேட்க…
சோர்வாக முகத்தை வைத்து இருந்தவன் அவரின் கேள்வியில் சட்டென தன்னை நிதானித்துக் கொண்டவன் “அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா… நெக்ஸ்ட் வீக் நைட் டியூட்டி சோ அதான் திங்க் பண்ணிட்டு இருந்தேன்” என்றான்.
அவனுக்கு நேர் எதிரே சாப்பிட்டுக் கொண்டு இருந்த விபீஷனின் இதழ்களில் யாரும் அறியா ஒரு வன்மப் புன்னகை தோன்றி மறைந்து இருந்தது.
“சரிப்பா உடம்பை பார்த்துக்கோ…” என்றவர் குரலை செருமிய படி சித்ராவை பார்க்க, அவரோ கண்களால் சைகை செய்த படி சாப்பிட்டு எழ போன ஜெய் ஆனந்த்தை “டேய் கொஞ்சம் இரு பேசணும்” என்றார்.
அவரை புருவம் உயர்த்தி பார்த்தவன் “ம்ம்… சொல்லுங்க” என்றவாறு மீண்டும் இருக்கையில் அமர்ந்தான்.
“அது வந்துப்பா… உனக்கும் முப்பது வயசாகுது” என்று இழுவையாக சித்ரா சொல்ல…
“சோ வாட்?” என்றான்.
“மதியம் உன்னோட ஜாதகம் எடுத்திட்டு நம்ம குடும்ப ஜோசியரை பார்க்க போயிருந்தேன்” என்றார் மேலும் பேச்சை இழுத்த படி…
தன் அன்னை என்ன பேச வருகிறார் என ஊகித்த விபீஷனுக்கோ உடல் இறுகிப் போக அப்படியே அங்கு நடக்க போவதை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.
“அம்மா பிளீஸ்… எதுவா இருந்தாலும் நேரா சொல்லுங்க நான் என்ன சொல்லிற போறேன்?” என்றான் இதழ்களில் தேங்கிய புன்னகையுடன்… “உனக்கு எண்ணி மூணு மாசத்துகுள்ள கல்யாணம் ஆகணுமாம் டா. அதான் உனக்கு பிடிச்ச பொண்ணு யாரும் இருந்தால் அதையே பேசி முடிச்சிடலாம் ஆனந்த்” என்றார் பிரதாபனை கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டே…
இதழ் குவித்து ஊதிக் கொண்டே விழிகளை மூடித் திறந்தவன் “பொண்ணு இருக்கா பட் நாளைக்கு அவகிட்ட பேசிட்டு சொல்றேன். எனக்கு அவளோட பிடித்தம் ரொம்ப முக்கியம்” என்று பேச்சை முடித்து இருந்தான்.
அவனின் பதிலில் முகம் சடுதியில் மலர அதற்கு எதிர் மாறாக அவனின் உடன் பிறந்தவனுக்கோ உள்ளே தகித்துக் கொண்டு இருந்தது.
“அப்படியே விபீஷனுக்கும் பொண்ணு பார்த்து பேசி முடிச்சிடலாம். அப்போ ரெண்டு பேருக்கும் ஒரே மேடைல கல்யாணத்தை வச்சுடலாம்” என்றார் பிரதாபன் “ஆமாங்க” என ஆமோதித்த சித்ராவின் பார்வை எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்து இருந்த விபீஷனில் படிய, அவருக்கோ அவனின் இறுகிய தோற்றத்தில் கிலி பிடித்தது.
“விபீஷன்” என்று சித்ரா அழைக்க….
பிரதாபன் அருகில் இருப்பதால் சட்டென சிரித்த போல முகத்தை வைத்துக் கொண்டவன் “என்ன மா” என்றான்.
இப்போது “உனக்கு இஷ்டம் தானே?” என்ற கேள்வி வந்தது என்னவோ பிரதாபனிடம் இருந்து தான்.
“எனக்கு ஓகே பா…” என்றவன் பார்வை ஜெய் ஆனந்த்தின் மீது படிந்து மீண்டது.
இங்கு இப்படி இருக்க, கட்டிலில் அமர்ந்து முட்டியில் முகம் புதைத்து இருந்த ஆஹித்யாவிற்கோ என்னவென்றே தெரியாத உணர்வு.
எத்தனையோ பேர் காதலை கூறி இருந்தாலும் தன்னை இவ்வளவு காலமாக நிமிர்ந்தும் பார்க்காத ஒருவன் திடீரென தன்னிடம் நெருக்கம் காட்டும் போது அவனிடம் மட்டும் எப்படி பேச்சற்று நின்றேன் என்ற எண்ணம் அவளுள் நொடிக்கு நொடி அதிகரித்தது.
ஒருவேளை அவனை காதலிக்கின்றேனா? என்ற கேள்வி தோன்றிய மறு நொடி அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
எப்படி அவன் மேல் காதல் வரும் ? அதுவும் ஓரிரு நாட்கள் பேசிய ஒருவனிடம்? “ஐயோ!” என்று சொல்லிக் கொண்டே தலையைப் பற்றிக் கொண்டவள் மெதுவாக சுவரில் சாய்ந்து ஆழ்ந்து சிந்தித்த படி உறகிப்போனவள் தன் இதழ்களை யாரோ வருவது போல இருக்க உறங்கியவாறே இதழை புறங் கையால் துடைத்தவள் மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு போக மீண்டும் அதே வருடல் சற்று அழுத்தமாவதை உணர்ந்தவள் சட்டென எழுந்து அமர்ந்தாள்.
விழிகள் இரண்டும் விரிய தலையில் அடித்துக் கொண்டவள் “ஹையோ கனவுலயுமா? விட மாட்டான் போலயே” என்று சொல்லிக் கொண்டவள் வலக் கரமோ உயர்ந்து தனது இதழை வருடிக் கொண்டவள் எண்ணம் தானாக விபீஷனின் வருடலை ஞாபகப் படுத்த அவளது கன்னங்களோ குப்பென சிவந்த அதே கணம் தொலை தூர நிலவை வெறித்துக் கொண்டு பால்கனியில் நின்று இருந்தான் ஜெய் ஆனந்த்.
விபீஷனின் செயலிற்கு அவளின் எதிர் வினை வெட்கம் அல்லவா? மீண்டும் மீண்டும் அதே காட்சி தன் கண் முன் விரிய அவனது விழிகளில் இருந்து தானாக கண்ணீர் வழிந்தது.
இதயம் தாளம் தப்பி துடித்தது. தன்னால் தாழ முடியாத ஒன்று நடக்கப் போகிறதோ என்று மனம் வெதும்ப தன்னை நிலைப்படுத்த முயன்று தோற்றவன் அப்படியே மண்டியிட்டு அமர்ந்து கொண்டவன் இதழ்களோ “தியா இஸ் மைன்” என்று சொல்லிக் கொண்டன.
அதே சமயம் அறைக்குள் வந்த பிரதாபனோ, உடையை மடித்துக் கொண்டு இருந்த சித்ராவை பார்த்தவர் “சித்து“ என்றார்.
தனிமையில் இருக்கும் போது அவர் அழைக்கும் சித்து என்ற அழைப்பு அவரின் முகத்தை சிவக்க வைக்க, “என்னங்க?” என்றார் குழைவாக…
கட்டிலில் அமர்ந்துக் கொண்டவர் “என்னோட மனசுல ஒன்னு தோணுது மா” என்றார்.
“ஆமா சித்து, சாப்பிடுறப்ப தான் இத பத்தி நான் யோசிச்சேன். இதை பத்தி நாளைக்கு வித்யாகிட்டையும் ஒரு வார்த்தை கேட்டுட்டு ஆஹித்யாகிட்டயும் பேசிடலாம்” என்றார் பூறிப்புடன்…
“ஏங்க விபிஷன் ஒத்துப்பானா?”
“அவன் தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டானே அப்புறம் என்ன? யாரா இருந்தாலும் அவன் கட்டிப்பான்” என்றவர் நிம்மதியாக படுத்துக் கொள்ள… ஏனோ சித்ராவிற்கு தான் மனதுக்கு ஏதோ தவறாகப் பட, ஒருவித பதைப்பதைபுடனேயே அவர் அருகில் படுத்துக் கொண்டார்.
ஒழுங்காகக் கூடி பேசி இருந்தால் ஜெய் ஆனந்தின் மனதில் இருப்பவள் யார் என தெரிந்து இருக்குமோ என்னவோ? இவர்கள் ஒன்று நினைத்திருக்க, விதியோ நடக்கப் போவதை எண்ணி சிரித்துக் கொண்டது.
Waiting for next epi jeeshu sis 💞