வித்யாவிற்கு உதவிகளை செய்து விட்டு மீண்டும் அறைக்குள் வந்தமர்ந்து பேசிக் கொண்டிருந்த பெண்களுக்கோ, வரவேற்பறையில் பேச்சு சத்தம் கேட்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“ஆஹி, இது சரி வருமா?” என்று பவ்யா கேட்டு வைக்க,
“இவ்வளவு நேரம் உனக்கு வாய் வலிக்க அட்வைஸ் பண்ண எனக்கு. இல்லை இல்லை போன எபிசோட்ல அட்வைஸ்ஸை வாரி வழங்குன ரைட்டருக்காச்சும் கொஞ்சம் ரெஸ்பெக்ட் கொடுடி”
“ம்கும்” என நொடித்துக் கொண்ட பவ்யா, ஆஹித்யா கூறியதை போல திருமணத்திற்கு பிறகு விபீஷனுடன் பேச வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
அதனைத் தொடர்ந்து சித்ராவோ, இருவரையும் சமையலறைக்குலிருந்து அழைக்கவும், இருவரும் ஒரு பெரு மூச்சுடன் சமையலறையை நோக்கி சென்றனர்.
வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த ஜெய் ஆனந்த் மற்றும் விபீஷன், இருவரும் முகத்தில் எதுவும் காட்டிக் கொள்ளாமல் பிரதாபனிடம் பேசிக் கொண்டிருந்தாலும் மனதில் என்னவோ சொல்ல முடியாத உணர்வு இருவருக்குள்ளும் தோன்றிக் கொண்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து இரு ஆண்களின் கடைக் கண் பார்வையும் சமையலறையின் வாயிலை தான் நோட்டமிட்டிக் கொண்டிருக்க, அவர்களை ஏமாற்றாது இரு பெண்களும் கையில் காஃபியுடன் தலை தாழ்த்தி அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர்.
விபீஷனுக்கோ இதயம் படு வேகமாக துடித்தது. பவ்யா தலை தாழ்த்தி இருந்ததால் என்னவோ அவளை வஞ்சனை இல்லாமல் கண்களால் பருகிய படி கவனித்தான்.
முதலில் ஜெய் ஆனந்த்தை நெருங்கிய ஆஹித்யா, தடதடக்கும் இதயத்துடன் தன்னவனை தலை நிமிர்ந்து பார்க்க நாணியவளாய் இதழ் கடித்து தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு காஃபியை ஜெய் ஆனந்த்திடம் நீட்ட, அவனோ மென் புன்னகையுடன் அவளைப் பார்த்தானே தவிர அவள் நீட்டிய காஃபியை கையில் எடுத்துக் கொள்ளவில்லை.
சில நொடிகளில் அவன் இன்னுமே காஃபியை எடுக்கவில்லை என்று புரிந்த கணம் சங்கடமாக “மா…மாமா காஃபி” என திணறிய படி கூறினாள்.
அவனோ பதிலும் கூறவில்லை. காஃபியை எடுக்கவும் இல்லை.
அவனின் செயலில் விபீஷனோ சற்றே குனிந்து “டேய் எடு டா என் ஆல் வெயிட்டிங். அவளுக்கு கை வலிக்க போகுது” என்று மெலிதாக கூற,
சட்டென அவன் புறம் திரும்பி ஜெய் ஆனந்த் பார்த்த பார்வையில் விபீஷனின் இதழ்களோ பசை போட்டதை போல ஒட்டிக் கொண்டது.
ஜெய் ஆனந்த்தின் செயலில் பதறிய சித்ரா “ஆனந்த்” என்றார்.
அருகிலிருந்த பிரதாபனோ சித்ராவின் முகத்தில் தோன்றிய பதட்டத்தை எண்ணி நொந்துக் கொண்டவர் குரலை செருமி கண்களால் சைகை செய்ய, ‘ஹையோ என்னாச்சு மாமா சைலண்ட்டா இருக்காங்க’ என இப்போது திணறி போன ஆஹித்யா சற்றே நிமிர்ந்து விழிகளில் கலக்கத்துடன் தன்னவனை ஏறிட்டாள்.
அவ்வளவு தான். அவனின் முகத்தில் மிளிர்ந்த மந்தகாச புன்னகையில் அவளின் சித்தம் அவன் விழி வீச்சில் மொத்தமாக தொலைந்தது.
அவள் தன்னை ஏறிட்ட அடுத்த கணம், அவனோ அவள் கொடுத்த காஃபியை எடுத்து அவளிலிருந்து பார்வையை அகற்றாது பருக ஆரம்பித்து விட்டான்.
என்ன பார்வை இது? ஒற்றை பார்வை உயிரை உறிஞ்சுமா என்ன? மேனியில் சொல்ல முடியாத பரவசம் அவளுள்,
நெஞ்சம் படபடக்க, அவனை பாராதே என மனதை கடிவாளமிட்டு அடக்கியவள் பார்வையை கடினப்பட்டு தாழ்த்திக் கொண்டவள் விலகி நிற்க, பிரதாபன் சித்ரா உட்பட வித்யாவும் இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.
அவர்களை ரசனையாக பார்த்துக் கொண்டு நின்ற பவ்யாவின் பார்வையோ விபீஷனின் மீது படிய, அவள் தன்னை எப்போது பார்ப்பாள் என்று காத்திருந்தான் போலும், அவளின் பார்வை வீச்சில் சட்டென விழிகளை சிமிட்டி நாவால் உட்புறமாக கன்னத்தை வருடி மெலிதாக புன்னகைத்தான்.
அவனின் செயலில் வழமை போல கோபம் வர வேண்டிய பாவையவளுக்கோ வெட்கம் பிடுங்கி தின்ன, முகமோ சூடேறி சிவந்து போனது.
ஜெய் ஆனந்தின் செயலும் அதற்காக தன் தாமக்கை நாணியதையும் பார்த்தவளுக்கோ, ரசனையுடன் கூடிய எதிர் பார்ப்பில் மெல்ல பார்வையைத் திருப்பியவளுக்கு, அவளவன் அவளின் எதிர் பார்ப்பை செவ்வனே நிறைவேற்றியிருந்தான்.
அதனைத் தொடர்ந்து அவளும் காஃபியை நீட்ட, தன்னவள் தன்னைக் கண்டு வெட்கி சிவந்ததில் உள்ளூர ஆனந்த அதிர்ச்சி கொண்டான் அவன்.
அவளை சீண்டலாம் என்று நினைத்திருந்தவனுக்கு அவளின் தனக்கே தனக்கான வெட்க முகச் சிவப்பு ஆணவனை திக்கு முக்காட வைக்க, எவ்வித ஆரவாரமும் இன்றி அமைதியாக காஃபியை எடுத்துக் கொண்டான் விபீஷன்.
இனி கேட்கவும் வேண்டுமா? அவ்விடத்தில் கலகலப்புக்கு பஞ்சம் ஏது?
சித்ராவும் வித்யாவும் வீட்டுக்கு வரவழைத்த புரோதருடன் கல்யாண விடயங்களை பேச ஆரம்பித்து விட, பிரதபனுக்கோ அங்கு அமைதியாக இருக்க வேண்டிய நிலை தான்.
இருவரும் மின்னல் வேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்க, அவரும் என்ன தான் செய்வார்?
மென் புன்னகையுடன் பார்வையாளராக இருந்தார்.
அங்கிருந்து மெதுவாக நழுவி பவ்யா வெளியில் செல்வதை பார்த்துக் கொண்டே கழுத்தில் கரம் வைத்து நெட்டி முறித்த படி இருக்கையை விட்டு எழுந்த விபீஷனை பார்த்து குரலை செருமினான் ஜெய் ஆனந்த்.
அவன் தன்னை பார்த்ததும் நக்கலாக புன்னகைக்க, விபீஷனோ கேசத்தை கோதிக் கொண்டே வாயிலை நோக்கி நடந்தான்.
இதழ் குவித்து ஊதிக் கொண்டே விபீஷனின் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்பி விட்டு நவீனுக்கு அழைப்பை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றான்.
அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததன் அடையாளமாக ஒலிக்கவும் சட்டென அலைபேசியை எடுத்து பார்த்தவனுக்கு இதழ்களில் மெலிதான புன்னகை.
ஆம், ஜெய் ஆனந்த் தான் ‘ஆல் தி பெஸ்ட்’ என்று அனுப்பியிருந்தான்.
‘தேங்க்ஸ் டா’ என்று பதில் அனுப்பி வைத்தவன் தன்னவள் எங்கே என்று பார்வையால் அவ் இடத்தை சுழற்றி தேடினான்.
அவளோ, மரத்தின் கீழே நின்று விரல் நகங்களை கடித்துக் கொள்வதும் பின் நெற்றியை நீவிக் கொள்வதுமாக நின்றிருந்தாள்.
அவளின் செயலை கண்டவனுக்கோ ஏதோ பதட்டதில் இருக்கின்றாள் என்று புரிந்தது.
மெதுவாக அவள் இருக்கும் இடத்தினை நோக்கி நடந்தான்.
அவளை நெருங்க நெருங்க அவளின் பிதற்றல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவனின் செவியை தெளிவாக அடைந்தது.
“ஹையோ, எதுக்கு அவன் முன்னாடி வெட்கப்பட்ட லூசு ஆஆஹ்” என்று தலையைப் பிய்க்காத குறையாக பிதற்றியவள் விபீஷனின் கண் சிமிட்டல் மனக் கண்ணில் தோன்றி மறையவும், “அச்சோ அந்த லுக்கே என்னை என்னவோ” என்று சொல்லிக் கொண்டே முகம் சிவக்க திரும்பியவளுக்கு நெஞ்சே அடைத்து விட்டது.
இதழ் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டு மரத்தில் சாய்ந்து அவளையே விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டு நின்ற விபீஷனை பார்த்து அவளுக்கோ மேலும் பேச வார்த்தைகள் வர மறுத்தன.
‘பதிலுக்கு பதில் பேசுவ தானே ஏதாவது பேசித் தொலை’ என்று மூளை எச்சரிக்க, அதற்கு மாறாக அவளின் மனமோ சொல் பேச்சு கேட்காமல் அவனின் ஆளுமையான தோற்றத்தை ரசிக்க தூண்டியது.
இது என்ன புது வித அவஸ்தை?
‘ஹையோ,’ என மனதில் நொந்து கொண்டவளுக்கு அவனின் அடக்கப்பட்ட புன்னகையே தன் புலம்பல்களை கேட்டு விட்டான் என்று அப்பட்டமாக தெரிந்து போனது.
‘போச்சு, மானமே போச்சு’ என மனதில் ஆயிரமாவது முறையாக நொந்து கொண்டவள் அவனை தாண்டி நடக்க முயன்றவள் செவியில் அவனது வார்த்தைகள் தீண்டி அவளை மொத்தமாக சிவக்க வைத்து மயிர்க்கால்கள் சிலிர்த்து குத்திட்டு நிற்க வைத்து விட்டன.
விழிகளை மூடித் திறந்து ஒரு பெரு மூச்சை விட்டுக் கொண்டவள் “தேங்க்ஸ்” என்றாள்.
முதல் முறையாக அவனிடம் அமைதியாக பதில் கூறிக் கொண்டிருக்கிறாள்.
அவளை நினைத்தே அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
“நான் எப்படி இருக்கேன்னு சொல்லவே இல்லையே” என்றவனது கேள்வியில் அவளுக்கோ மயக்கம் வந்து விழ மாட்டோமா என்றாகி போனது.
‘ஓஹ் கோட் என்ன இது பேச கூட முடியாம ஷை ஆகுதே’ என மனதில் சொல்லிக் கொண்டவள் இப்போது அவனிடம் என்ன சொல்வது என்று நினைத்தே திணறி போனாள்.
“என்ன நோக்கி பரயு” என்றான் மலையாளத்தில்,
அவன் மலையாளத்தில் பேசியதும் புருவங்கள் உயர அவன் புறம் திரும்பியவள் தயங்கங்கள் விடை பெற்று செல்ல, அவளின் துடுக்குத்தனம் வெளியே வர “நீ சைட் நன்னாயி அடிக்குன்னாதாயி தொன்னுனு” என்று சொன்னவள் அதற்கு மேல் அவன் முன் நின்றால் தானே! வீட்டை நோக்கி வெட்கத்தில் ஓடியவளிடம் “சத்யமானோ பரயுனது?” என்றவன் கேள்வியில் அவளது நடை சட்டென தடைபட, “கண்ணாடி போயி நோக்கு” என்று சத்தமாக குரல் கொடுத்தவளுக்கு எங்கிருந்து இவ்வளவு பொறுமை வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை.
அப்படியே திரும்பியும் பாராமல் வீட்டுக்குள் நுழைந்து கொண்டாள் பாவை.
தன்னை கண்டதும் என்னவோ ஏச தான் போகின்றாள் என எண்ணி இருந்தவனுக்கு அவளின் முகத்தில் தோன்றிய தனக்கான வெட்கமும் பதில் கூற முடியாமல் சிலிர்த்து போய் திணறியதையும் கண்டவனுக்கு இதழ்களில் புன்னகை விரிந்தது.
நீண்ட நேரம் அப்படியே மரத்தில் சாய்ந்து நின்றவன் செவிகளில் அவள் கூறிய பதில் எதிரொலிக்க மெலிதான வெட்கப் புன்னகை அவனிடம்,
இங்கு இப்படி இருக்க, நவீனுடன் பேசிக்கொண்டே மொட்டை மாடிக்கு வந்தவன் மேலே கேட்ட ஆஹித்யாவின் குரலில் புருவங்கள் உயர “நவீன் ஐ வில் கால் யூ லேட்டர்” என அழைப்பைத் துண்டித்த ஜெய் ஆனந்த், ‘ எல்லாரும் கீழ இருக்காங்க இவ யார் கூட பேசிட்டு இருக்கா’ என இதழ்களுக்குள் முணுமுணுத்த படி, படிகளில் மேலேறி வந்தவன் அவளின் குரல் வந்த திசையை பார்த்தான்.
அங்கோ, அவளைக் கண்டவன் விழிகளோ அதிர்ச்சியில் பெரிதாக விரிந்து கொண்டன.
பின்ன, தானாக புலம்பிக் கொண்டு தலையை நங் நங்கென்று சுவரில் முட்டிக் கொண்டிருப்பவளை பார்த்து அதிராமல் இருக்க முடியுமா என்ன?
“தியா” என்றபடி அவளை நெருங்கியவனை அப்போதுதான் பார்த்தாள் பாவை.
‘ஆத்தி’ என மனதில் பதறியவள் நீ… நீங்க எப்… எப்போ வந்தீங்க மாமா?”
“ஜஸ்ட் நவ்” என்றவன் கரமோ தானாக உயர்ந்து அவளின் நெற்றியில் படர்ந்திருந்த முடிக் கற்றையை காதோரமாக ஒதுக்கி விடவும், அவனின் இச் சிறு செயல், அவன் மேல் காதல் கொண்ட பாவையவளின் இதயத்தின் துடிப்பை அதிகரித்தது.
“நர்வஸ் ஆகுற போல என்னாச்சு?”
‘எதையாவது சொல்லி சமாளி இப்போ’ என தன்னைத் தானே திட்டிக் கொண்டவள் “ஹி ஹி ஹி… சும்மா தான். தலை வலிச்சது அதான் கொஞ்சம் இதோ இந்த வால்ல முட்டி பார்த்தேன் அவ்ளோ தான்” என்றவள் பதில் அவளுக்கே உவப்பானதாக தோன்றவில்லை.
இருந்தும் அவன் நம்பி விட்டானா என முகத்தை ஆராய்ந்தாள்.
ஆனால், அவன் முகமோ சாதாரணமாக தான் இருந்தது.
“இஸ் இட்?” என்று கேட்டவன் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
அவனின் கேள்வியிலேயே, தான் கூறியதை அவன் நம்பவில்லை என்று புரிந்து போக, “எஸ் ஒப்கார்ஸ் மாமா” என்றாள்.
என்ன நினைத்தானோ “ஒயிட் அண்ட் டார்க் ப்ளூ சாரில அழகா இருக்க” என்றான்.
பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் இப்படி கூறுவான் என அவள் எதிர்பார்க்கவே இல்லை.
அவளும் சாதாரண உணர்வுகள் கொண்ட பெண் தானே!
அவன் முன்னிலையில் வெட்கம் தாழாது தனது இரு கரங்களாலும் முகத்தை மூடிக் கொண்டாள் பெண்ணவள்.
Wow super jeeshu sis