முகில் 4
ஆதிரன் பஞ்சாயத்தைப் பார்க்கும் ஆர்வத்தில் புறப்பட அவனின் சிறுபிள்ளைத்தனமான ஆர்வத்தை எண்ணி சிரித்த வண்ணம்,
“என்னங்க சார் இது.. சின்ன புள்ள மாதிரி இவ்வளவு சந்தோஷப்படுறீங்க..”
“இல்ல செந்தாழினி இதெல்லாம் நான் பார்த்ததே இல்லை இப்பதான் முதன் முதல் பார்க்கிறேன் அதுதான் ரொம்ப எக்சைட்டிங்கா இருக்கு
படத்துல பாக்குறது எல்லாம் நேர்ல பாக்குற ரொம்ப டிஃபரண்டா அன்ட் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் தானே அதான் எனக்குள்ள என்ன அறியாம ஒரு ஹப்பினஸ் வந்துட்டு..”
ஆதிரன் ஒன்று மாறி ஒன்று ஆங்கில வார்த்தைகளால் பேச அவளால் அதற்கு பதில் கூற முடியாமல் திணறினாள்.
அவன் கூறும் வார்த்தைகள் ஏதோ நல்லதாகத் தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டவள்,
“சரிங்க சார் வாங்க அதுக்குள்ள போய் குளிச்சிட்டு அப்படியே காலை சாப்பாட முடிச்சிடுவோம்
நேரத்துக்கு பஞ்சாயத்துக்கு போனால்தான் அங்கு நடக்கிற புதினங்களைப் பார்க்கலாம்..” என்று கூற செந்தாழினி உடன் சென்று ஆற்றில் குளித்துவிட்டு உடைமாற்றி உணவினை உண்டு முடித்துவிட்டு நேரடியாக பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு சென்றனர்.
அவர்கள் செல்லவும் நேரமும் சரியாக இருந்தது. அங்கு ஊர்மக்கள் அனைவரும் குழுமி இருந்து தங்களுக்குள் ஒவ்வொரு கதைகளையும் பேசி எதனையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தனர்.
அங்கு ஆதிரன் டிப் டாப்பாக ஜீன்ஸும், டி-ஷர்ட்டும் அணிந்து கூலிங் கிளாஸ் போட்டு கையில் கேமராவுடன் செந்தாழினி அருகில் வந்து நிற்க அனைவரும் ஆதிரனை விசித்திரமாகப் பார்த்தனர்.
ஆதிரன் இரவில் ஊருக்குள் வந்ததால் பெரும்பாலும் ஒரு சிலரைத் தவிர வேறு கண்களுக்கு அவன் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதனால் அவன் யார்..? எனப் புரியாத மக்கள் செந்தாழினியிடம்,
“யாரு புள்ள இவரு..?, எப்போ வந்தாரு..?, எங்கிருந்து வந்திருக்காரு..?, உன்னோட உறவுக்காரரா..?, இல்லனா உனக்கு கல்யாணம் பேசின மாப்பிள்ளையா..?” என்று அங்கு இருப்பவர்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கேள்விகளை தொடுக்க,
அவை அனைத்திற்கும் அமைதியாக பதில் கூறிய செந்தாழினி இறுதியாக உனக்கு பார்த்து வைத்திருக்கும் மாப்பிள்ளையா என்று கேட்டதும் சங்கடமாகிப் போனது அவளுக்கு
அதுவும் அருகில் இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஆதிரனுக்கு இது நன்றாகவே கேட்டிருக்கும் என்று அவர் என்ன நினைப்பாரோ என்று எண்ணத்துடன் திரும்பிப் பார்த்த பின்பு தான் அவளுக்கு நிம்மதியே வந்தது.
ஆம் அவன் அது எல்லாம் கேட்கும் நிலைமையில் இல்லை சுற்றி இருந்தவர்களை கண்களால் ஆச்சரியத்துடன் ஆராய்ந்த படியே நின்றான்.
வயதுக்கு வந்த பெண்கள் ஆதிரனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்க,
அவர்களை விட வயது கூடிய பெண்கள் அவனை விழுங்குவது போல மோகப் பார்வையுடன் கண்களால் மொய்த்துக் கொண்டிருக்க செந்தாழினிக்கு தான் இவர்களின் செயல்களைப் பார்த்து வெட்கமாகிப் போனது.
அனைவரின் கேள்விகளுக்கும் சலிக்காமல் பதில் சொன்னவள், ஆதிரனை அருகில் அழைத்து,
“சார் நீங்க நேத்து ரொம்ப நேர தாமதமா வந்ததால இந்த ஊர்ல இருக்கிறவங்களுக்கு நீங்க வந்தது தெரியாது அதுதான் மாறி மாறி எல்லாரும் கேட்டுகிட்டு இருக்காங்க அவங்களுக்கெல்லாம் பதில் சொல்லத் தானே வேணும் இல்லன்னா தப்பா நினைச்சுப்பாங்க நீங்க இதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க..”
“இல்ல செந்தாழினி அவங்க கேக்குறது நியாயம் தானே என்ன இப்பதான் முதல் முதலா பார்த்து இருக்காங்க அப்ப நான் யாருன்னு அவங்களுக்கு மனசுக்குள்ள ஒரு கேள்வி வரும் தானே பரவாயில்லை நான் இவங்களை எல்லாம் வைத்து ஒரு போட்டோ எடுக்கவா..?”
அவ்வாறு கூறியதும் மிகவும் நிலைமையை புரிந்து கொண்டு மிக எளிமையாக நடந்து கொள்ளும் ஆதிரனின் குண இயல்பு செந்தாழினிக்கு வெகுவாக பிடித்து விட்டது.
உடனே சத்தமிட்டு,
“எல்லாரும் கொஞ்ச நேரம் சத்தம் போடாம இருங்க இவர் தான் நம்ம ஊருக்கு வந்திருக்க பிரகாஷ் அண்ணாவோட நண்பன்
இவரு பிரகாஷ் அண்ணா கூட தான் வேலை பார்க்கிறார் லீவுக்கு நம்ம ஊர பார்த்துட்டு அப்படியே இங்கே இருக்கிற அழகான இடங்களை படம் பிடிக்க வந்திருக்காரு
இப்போ உங்க எல்லாரையும் படம் பிடிக்கணுமாம் அதனால எல்லாரும் அசையாம சத்தம் போடாம நில்லுங்க..” என்று அனைவரும் கேட்கும் படி கூச்சலிட்டு செந்தாழனி கூறினாள்.
அவ்வாறு கூறியதும் அந்த சனத் திரளுக்குள் சலசலப்பு உண்டானது. எல்லோருக்கும் ஒரே குசியாகிவிட்டது.
பெண்கள் தாங்கள் அணிந்திருந்த சேலையை, தாவணியை ஒழுங்காக சரி செய்ய ஆண்கள் தலைமுடியை கோதியபடி தங்களது வீர மிகுந்த பெரிய மீசையை நீவி விட்டபடி நிமிர்ந்து கம்பீரமாக நிற்க, அவர்களின் செயலைப் பார்த்து ஆதிரனுக்கு புன்னகை அரும்பியது.
மாவீரன், அழகு மங்கையர் என கூட்டமாக நிற்பவர்கள் ஒவ்வொருவரையும் பகுதி பகுதியாக புகைப்படம் எடுக்க திடீரென அங்கு ஏற்பட்ட சலசலப்பும், சந்தோசமும் ஒரு நொடியில் அனைவர் முகத்திலும் துடைத்து எடுத்தார் போல் காணாமல் போனது.
அனைவரும் இருந்த இடத்திலிருந்து எழும்பி நின்றனர். ஒரு சிலர் தோளில் போட்டு இருக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டினர்.
சிலர் கைகளை முன்னே கட்டிக்கொண்டு தலை குனிந்து நிற்க சிறு பிள்ளைகள் தொடக்கம் பெரியவர்கள் வரை ஒரே திசையைப் பார்த்து சத்தம் போடாமல் நிற்க,
கேமராவின் ஊடாக மக்களின் முக மாற்றத்தை உணர்ந்து கொண்ட ஆதிரன் திடீரென்று மக்களின் முகம் தீவிரமாக மாறிவிட்டதே என்று அவர்கள் பார்க்கும் திசையை நோக்கி திரும்பிப் பார்த்தான்.
அப்பொழுது தூரத்திலிருந்து ஒரு கார் அவர்களை நோக்கி வர அந்த காரில் இருந்து தலையில் நரை விழுந்த பெரிய மீசை வைத்த ஒரு 60 வயதை எட்டும் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்த ஒரு பெரியவர் காரில் இருந்து இறங்கி வந்தார்.
அவர் காரில் இருந்து இறங்கியதும் அனைவரும் கையெடுத்து கும்பிட்டு ஒன்று சேர “வணக்கம் ஐயா..” என்று கூற அவர் சிறு தலை அசைப்புடன் முன்னாள் கம்பீரமாக நடந்து சென்றார்.
அவரின் நடையையும், கம்பீரத்தையும் பார்த்து அவர் தான் பஞ்சாயத்து தலைவர் என்று ஆதிரன் ஊகித்து விட்டான்.
ஆலமரத்திற்கு கீழே அவர்களுக்கு என்று கதிரைகள் போடப்பட்டிருந்தன. அதில் நடுவில் உள்ள பெரிய கதிரை புலிப்பல் பதித்து மிக கம்பீரமாக அமைக்கப்பட்டிருந்தது.
அதில் போய் பண்ணையார் அமர்ந்ததும் அருகில் இருக்கும் நான்கு கதிரைகளிலும் ஏனைய பெரியவர்கள் வந்து அமர்ந்தனர்.
“எல்லாரும் வந்தாச்சு தானே பஞ்சாயத்து ஆரம்பிக்கலாம்..” என்று அருகில் இருக்கும் ஒரு வயதானவர் எழுந்து கூற, பஞ்சாயத்து ஆரம்பமாகியது.
“யாரு பிராது கொடுத்தது..? கொடுத்தவங்க முன்னுக்கு வாங்க..” என்று கம்பீரமான குரலில் வரதராஜன் அழைத்தார்.
அழைத்ததும் ஒரு பாவாடை தாவணி அணிந்து 18 வயது மதிக்கத்தக்க பெண் சில காயங்களுடன் அழுது கொண்டே அந்தக் கூட்டத்திற்கு முன் வந்து நின்றாள்.
அவளுக்கு பின்னால் அவளது தாய், தந்தையர் இருவரும் கண்ணீர் சிந்திய படி வந்து நின்றனர்.
அவர்களைப் பார்த்து தீவிரமான முகத்துடன்,
“என்ன பிராது சீக்கிரமா சொல்லுங்க..” என்றதும்,
அந்தப் பெண்ணின் தந்தை கண்ணில் வழிந்த நீரை அழுந்தத் துடைத்து விட்டு,
“ஐயா நாங்க காலம் காலமா உங்க பண்ணையில தான் வேலை செய்றோம் நான், என்னோட பொஞ்சாதி, பொண்ணு எல்லாம் பத்து வருஷத்துக்கு மேல வேலை செய்றோம்.
திடீரென்று நேத்து என் பொண்ணு உடம்பெல்லாம் காயத்தோடு ஓடி வந்து ரொம்ப நேரமா அழுதுட்டே இருந்தா என்னை ஏதுன்னு நாங்க ரொம்ப பதறிப் போயிட்டோம்
வளமையா நானும் என் பொஞ்சாதியும் பொண்ணும் ஒரே இடத்துல தான் வேலை செய்றனாங்க
ஒன்னா தான் வேலைக்கு போவோம் ஒன்னா தான் வீடு திரும்புவோம்
நேத்து என் பொஞ்சாதிக்கு உடம்புக்கு ரொம்ப முடியல அதனால நான் வேலைக்கு வரமாட்டேன்னு பொண்ணு கிட்ட தகவல் சொல்லி வேலைக்கு அவளையும் அனுப்பி வைச்சேன்.
வேலை முடிஞ்சு ரொம்ப தாமதமா தான் வீட்டுக்கு வந்தா வீட்டுக்கு வந்தவ ஒண்ணுமே சொல்லாம அழுதுகிட்டே இருக்கா பாவி பொண்ணு இப்படி யார்கிட்டயோ மானம் மரியாதைய பறி கொடுத்துட்டு வந்து நிற்கிறாளே..!” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார் மல்லிகாவின் தந்தை.
அங்கிருக்கும் அனைவரும் அவரைப் பார்த்து இரக்கம் கொண்டனர். ஆண்மகன் அழுதால் மனம் தாங்குமா அவரது அழுகை அனைவரது மனதிலும் வேதனையை உண்டாக்கியது.
“என் பொண்ணு உலகம் அறியாதவையா அவளுக்கு ஒண்ணுமே தெரியாது சின்னப்பொண்ண என்ன பண்ணி வச்சிருக்காங்க பாருங்க நீங்கதான் யாருன்னு கண்டுபிடிச்சு சொல்லணும்..” என்று மல்லிகாவின் தாய் உடல் நிலை முடியாமல் இருமியபடி மூச்சு விட சிரமப்பட்டு கொண்டு அழுதார்.
அவர்கள் கூறிய விடையங்களை கேட்ட வரதராஜன் தனக்கு கீழ் இருக்கும் அந்த நால்வருடனும் மாறி மாறி தங்களுக்குள் கலந்துரையாடினர்.
அவர்களுடன் பேசிய பின்பு அந்த பெண்ணை பார்த்து,
“இந்தா பொண்ணு உன்ன தொட்டது யாருன்னு உன்னால அடையாளம் காட்ட முடியுமா..?”
அவ்வாறு கேட்டதும் அந்த சிறுமி அந்த கேள்வியை கூட காதில் வாங்க முடியாமல் தவித்துப் போய் மீண்டும் தாவணியால் வாயை பொத்திக்கொண்டு அழுதாள்.
அப்போது கூட்டத்திற்குள் சலசலப்பு மீண்டும் ஆரம்பமாக ஒவ்வொருவரும் இவனா இருக்குமோ அவனா இருக்குமோ என்று தங்களுக்குள் பேசத் தொடங்கினர்.
அப்போது அந்தக் கூட்டமே அதிரும் வண்ணம் பெரும் சத்தத்துடன் புல்லட் பைக்கில் காற்றைக் கிழித்துக்கொண்டு வேகமாக பண்ணியாரின் மகன் செந்தூரன் அங்கு வந்து இறங்கினான்.
அவனை அங்கு பார்த்ததும் அனைவரும் வரதராஜனுக்கு எப்படி மரியாதை செலுத்தினரோ அவ்வாறே அவனுக்கும் தவறாது மரியாதையை வாரி வழங்கினர்.
வரதராஜனாவது அனைவருக்கும் தலையசைத்து அந்த மரியாதையை ஏற்றுக்கொண்டான். ஆனால் செந்துரனோ யாரின் முகத்தையும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவனுக்கு கொடுத்த மரியாதையை கிஞ்சித்தும் மதிக்கவும் இல்லை.
அவனைக் கண்டதும் அங்கு கூடியிருந்த செந்தாலினி உட்பட அனைத்து பெண்களின் முகத்திலும் அப்பட்டமாக புழுவை பார்ப்பது போல ஒரு அருவருப்பு தன்மை தென்பட்டது.
உடனே அந்த கூட்டத்திலிருந்து செந்துரனின் அடியாள் ரங்கன் வந்து புல்லட்டை பிடிக்க செந்தூரன் இறங்கி தோரணையுடன் நடந்து வர பஞ்சாயத்து தலைவர்கள் இருக்கும் இடத்திலிருந்து சற்று தள்ளி அவர்களுக்கு நிகராக கதிரை போடப்பட்டது.
“என்னப்பா பஞ்சாயத்து முடியப் போகுதா..?” என்று கால் மேல் கால் போட்டு ஆட்டியபடி திமிராக மல்லிகாவை பார்த்து கேட்க,
“இல்ல தம்பி எங்க அந்த பொண்ணு தான் வாயே திறக்க மாட்டேங்குதே அது வாய திறந்து யாருன்னு சொன்னா பஞ்சாயத்து அஞ்சு நிமிஷத்துல முடிஞ்சிருக்கும்..” என்று வரதராஜன் கூற,
தலைகுனிந்து அழுது கொண்டிருந்த மல்லிகாவோ நிமிர்ந்து இருவரையும் அனல் கக்கும் பார்வையை பார்த்துவிட்டு மீண்டும் தலை குனிந்தாள்.
அந்த பெண்ணின் தந்தையோ,
“ஐயா நீங்க தான் இதுக்கு ஒரு நல்ல முடிவா சொல்லணும் அவன் யாரா இருந்தாலும் கண்ட துண்டமா வெட்டி போடணும்
உங்களை நம்பித் தானே ஐயா உங்களோட இடத்துக்கு வேலை செய்ய என்னோட பொண்ண அனுப்பி வச்சேன் அப்ப அவளோட பாதுகாப்பு உங்கள்ளையும் தானே தங்கி இருக்கு
உங்க இடத்துக்கு வேலைக்கு வர்றவங்களுக்கு நீங்க தானே பாதுகாப்பு இதுக்கு நீங்கதான் ஒரு நியாயம் வழங்கணும்..” என்றதும் வரதராஜனுக்கு கோபம் தலைக்கேறியது.
உடனே எழுந்து கதிரையை காலால் உதைத்து,
“என்னடா சொன்ன வேலைக்கார நாயே..!” அந்த இடமே அதிரும்படி கர்ச்சித்தார் வரதராஜன்.