முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 33

5
(7)

அரண் 33

நடப்பது ஒன்றும் அறியாமல் அற்புதவள்ளி தொலைபேசியில் சிரித்து பேசி மகிழ்ந்து கொண்டிருந்தாள்.

சில நிமிடங்களிலேயே யாரோ இருவர் வந்து கை தாங்கலாக துருவனை தூக்கிக்கொண்டு செல்ல, அந்த ஹோட்டலில் சில பேர் ரேகாவை சந்தேகத்துடன் நோட்டமிட்டனர்.

“மது அதிகமாக அருந்தியதால் போதை ஏறி நடக்க முடியாமல் இருக்கின்றார் அதனால் தான் தூக்கி செல்கின்றேன்..” என்று ஒருவாறு பல பொய்களை வாரி இறைத்து கூறி சமாளித்து விட்டு ஹோட்டலில் இருந்து வெளியே வந்து அவனை கருப்பு நிற காரில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.

அற்புத வள்ளி தொலைபேசியில் உரையாடிவிட்டு வந்து பார்த்தால் துருவன் இருந்த இடத்தில் யாரையும் காணவில்லை.

மனதில் பயம் தொக்கி நிற்க உடனே சஞ்சலமும் குடி கொண்டது. பின்பு ‘ஒருவேளை துருவன் என்னோடு விளையாடுகின்றார் போல சிறிது நேரம் அதே இடத்தில் இருந்தால் அவரே வந்து விடுவார் எப்போ பார்த்தாலும் பயங்காட்டி விளையாடுவது தான் இவருக்கு வேலை..” என அவர்கள் இருவரும் இருந்த இடத்தில் போய் இருந்து கொண்டு துருவனுக்காக காத்திருந்தாள் வள்ளி.

அந்தப் பெரிய ஹோட்டலில் மனிதர்கள் வருவதும் போவதுமாக இருக்க துருவன் அங்கு வந்த பாடு இல்லை. மீண்டும் மனதிற்குள் பயம் ஒட்டிக்கொள்ள அந்த ஹோட்டலை கண்களால் சுற்றும் மற்றும் துலாவிப் பார்த்தாள்.

‘இப்போ அவரை எங்கே என்று தேடுவேன் பக்கத்துல பாத் ரூம்முக்கு போய் இருப்பேரோ..’ என்று சிறிது நேரம் இருந்தவள் அவன் வராமல் போக மனதுக்குள் மீண்டும் பயம் குடிகொண்டது.

அருகில் இருக்கும் ஒவ்வொரு மேசைகளையும் கண்களால் ஆராய்ந்தாள் அவன் எங்கும் இல்லை.

மேலே மாடியிலும் போய் பார்த்தாள் அங்கும் அவன் இல்லை. ‘எங்கே மாயமாக மறைந்து போனார் இந்த திக்கற்ற தேசத்தில் மொழி தெரியாத பிரதேசத்தில் நான் எவ்வாறு அவரைத் தேடுவேன்.

யாராவது பிரண்ட்ஸோட போயிட்டாரு அப்படி என்ன தனியா விட்டுட்டு போக மாட்டாரே..!’ என்று சிந்தித்தவள் பைத்தியக்காரி போல் அங்கும் இங்கும் ஓடி ஓடி,

“என்னங்க.. என்னங்க..” என்று சத்தமிட்டு அழைத்துக் கொண்டு திரிந்தாள்.

எங்கே தேடியும் துருவன் இல்லை என்று உணர்ந்ததும் பைத்தியக்காரி போல் கண்கள் நீர் பெருக்கெடுக்க திம்மி விம்மி அழுகையுடன் ஓடி ஒவ்வொரு மேசையாக அங்கு உணவு அருந்துபவர்களை பார்த்து வள்ளி,

“இங்கே ஒரு நீல கலர் கோட் சேர்ட் போட்டு ஒருத்தர் இருந்தாரு என் கூட தான் இருந்தாரு அவரு எங்க போனாருன்னு பாத்தீங்களா உங்ககிட்ட ஏதாவது சொல்லிட்டு போனாரா..? என்று தமிழில் கேட்டால் அங்கு இருப்பவர்களுக்கு எப்படி தெரியும் அவர்கள் இந்தப் பெண் கூறும் மொழி என்னவென்று தெரியாமல் விழித்தனர்.

அதனையே மீண்டும் பைத்தியக்காரி போல செய்கையில் செய்து காட்ட அதுவும் அவர்களுக்கு புரியவில்லை.

ஒவ்வொரு மேசையாக பாய்ந்து செய்கை மூலமும் அவள்,

“பெரிய உயரமான ஒரு ஆண் கோட் சூட் போட்டு நின்றாங்க என்னோடு தான் வந்தாரு நீங்கள் அவரை பார்த்தீர்களா..?” என்று அவள் நடித்துக் காட்ட அதுவும் அங்கு பலன் இன்றி போனது.

இருள் சூழ்ந்த திக்கற்ற காட்டில் வழி தெரியாமல் நிற்கும் குழந்தையைப் போல அழுது கொண்டு நின்றாள்.

ஒரே நாளில் சொர்க்கத்தை காட்டிய கடவுள் நரகத்தையும் காட்டிவிட்டார் என்பது போல் அவளுக்கு இருந்தது.

இன்று தான் முதன் முதலாக நாங்கள் வாழ்க்கையை ஆரம்பித்திருக்கின்றோம் ஆரம்பித்த முதல் நாளே வாழ்க்கை முடிந்து விட்டதா…?

என்னை திகட்ட திகட்ட காதல் புரிந்தவர் எவ்வாறு என்னை விட்டு செல்வார் ஒருவேளை என்னை பிடிக்காமல் இப்படி விட்டு விட்டு ஓடி விட்டேரோ..!

சேச்சே அப்படி இருக்காதுஇ என்னோட கணவர் அப்படிப்பட்டவர் இல்லை இன்று அவர்  என்னுடன் நடந்து கொண்ட விதம் எல்லாம் என் மீது இருந்த முழுமையான மாசற்ற காதலையே வெளிப்படுத்தியது அதில் சிறிது கூட மோகம் தென்படவில்லை அப்படி இருக்கையில் அவர் எப்படி என்னை விட்டு அகல எண்ணுவார்.

அப்படி என்றால் அவர் எங்கு சென்றார் என்னிடம் கூறிவிட்டாவது சென்று இருக்கலாம் அல்லது என்னை அழைத்துக் கொண்டாவது சென்று இருக்கலாம்.

என்ன நடந்திருக்கும் என்று புரியாமல் சந்தேகத்தில் அங்கிருக்கும் ஆண்களுக்குரிய வாஷ்ரூம் வாசலில் நின்று பார்த்தாள்.

அங்கிருந்து ஒவ்வொரு ஆண்களும் வருவதும் போவதுமாக இருக்க இவ்வளவு வாசலிலிருந்து ஒவ்வொருத்தரையும் உற்று நோக்க அவளை அனைவரும் விசித்திரமாக பார்த்தனர்.

அங்கும் இல்லை என்று உறுதியான பின்பு மீண்டும் ஹோட்டலின் மூளை முடுக்கு எல்லாம் தேடினாள்.

அப்போதுதான் ஒன்றை நன்கு அவதானித்தவள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து அதே இடத்தில் வேரூன்றிய மரம் போல நின்றாள்.

அவளது பார்வை சென்ற திசை இருவரும் ஒன்றாக அமர்ந்திருந்த இடமாகும். அங்கு துருவனின் அலைபேசி அனாதையாக இருந்தது.

‘அவர் எங்கு சென்றாலும் அலைபேசியை விட்டு விட்டு செல்ல மாட்டார். அவரது அலைபேசி இங்க இருக்கிறது என்றால் அவரை எங்கேயாவது யாராவது..’ என்று அதற்கு மேல் வலியால் எதையுமே சிந்திக்க முடியவில்லை.

மூளை அப்படியே எதையும் யோசிக்க விடாமல் வேலை நிறுத்தம் செய்தது.

‘அச்சச்சோ ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டதா கடவுளே நான் நினைக்கிற மாதிரி ஒன்றுமே நடந்து இருக்க கூடாது என்னோட புருஷனை நீ தான் காப்பாத்தணும் மாரியம்மா..” என்று மனதிற்குள் பலநூறு வேண்டுதல்களை வைத்துக் கொண்டிருந்தாள்.

அவளது என்ன ஓட்டங்கள் அங்கும் இங்கும் அலைபாய ஒரு கட்டத்துக்கு  மேல் சிந்திக்க முடியாமல் அப்படியே அதே இடத்தில் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

அவளைப் பார்த்தால் இதுதான் துருவனின் அழகிய அன்பு மனைவி என்று கூறினால் யாருமே நம்ப மாட்டார்கள்.

சிறிது நேரத்தின் முன் அழகின் சொரூபமாக ஏழில் கொஞ்சும்  பெண்ணவளாக காட்சி தந்த அற்புதவள்ளி.

தற்போது அங்கு துருவனைத் தேடித் திரிந்தமையால் உடல் முழுவதும் வியர்வை பூத்து, வியர்வையினால் ஆடைகள் நனைந்து, சேலை கசங்கி, அழகிய அவளது நீண்ட கூந்தல் களைந்து, அழுது அழுது முகம் வாடி மிகவும் அலங்கோலமாக இருந்தாள்.

இந்தியாவில் சந்தையில் மீன் விற்பவள் என்று கூறினால் கூட யாரும் நம்ப மாட்டார்கள் அதைவிட அலங்கோலமாக நின்றிருந்தாள்.

அங்கு இவளது செய்கைப் பார்த்து ஒவ்வொருத்தரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். சிலர் கைநீட்டி அவளைக் காட்டி சிரித்து மகிழ்ந்தனர்.

அவள் காட்டுவது அனைவருக்கும் வித்தையாகவே இருந்தது. தெருவில் குரங்கு நடனமாடிக் வித்தை காட்டுவது போல அங்கிருப்பவர்களுக்கு அவள் அப்படியே காட்சி அளித்தாள்.

அவளுக்கோ சுற்றம் முழுதும் மறந்தது. அவளது ஒரே எண்ணம் துருவன் எங்கே சென்றார் அவருக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டதா..? இல்லையா..? என்பது மட்டும் தான்.

‘என்ன செய்வதென்று புரியாமல் கையில் உள்ள தனது அலைபேசியைப் பார்த்தவள் உதவிக்கு யாருக்காவது அழைப்பு எடுத்து விஷயத்தை கூறலாம்..’ என்று அதனை எடுத்து கையில் வைத்து நம்பரை அழுத்த பயத்தாலும் பதற்றத்தாலும் ஏற்பட்ட நடுக்கத்தால் அலைபேசி கீழே விழுந்தது.

அந்தோ பரிதாபம் கீழே விழுந்த அலைபேசி இரண்டு துண்டுகளாக சிதறி உடனே தனது உயிரை விட்டது.

மேலும் இடி மேல் இடி விழுவது போல அவளுக்கு இருந்தது. ‘ஏன் தான் கடவுள் இப்படி எல்லா வகையிலும் என்னை சோதிக்கிறாரோ தெரியவில்லை..’ என்று எண்ணி மனம் நொந்தவள்,

உடனே கண்கள் பிரகாசிக்க சிறு நம்பிக்கையுடன் கண் முன்னே இருந்த துருவனின் அலைபேசியை எடுத்து யாருக்காவது அழைப்பு எடுப்போம் என உற்சாகத்துடன் அதனை எடுத்து அழுத்திப் பார்த்தால், அதுவும் அவளுக்கு சதி செய்தது. அவள் மீண்டும் மீண்டும் அழுத்த, அந்தத் தொலைபேசியோ அதன் இரகசிய எண்ணைக் கேட்டு தொல்லை பண்ணியது.

அவளுக்கும் அந்த தொலைபேசியின் இரகசிய எண் யாதென்று அவளுக்குத் தெரியாதே..!

மனதில் கடவுளை நினைத்துக் கொண்டு சில எண்களை மாறி மாறி அழுத்த மூன்று தடவைகளுக்கு மேல் பிழையான குறியீட்டை அழுத்தியதால் அதுவும் தானாக  உறங்கி விட்டது.

அவளுக்கும் எங்கு சென்றாலும் ஏதாவது ஒரு முட்டுக்கட்டை வந்து முன்னே நிற்க அவளும் தனியாக என்னதான் செய்வாள், பேதையவள் விதி செய்யும் சதியால் மனதாலும், உடலாலும் துவண்டு தான் போனாள்.

நெஞ்சில் இருந்து இதயத்தை உயிரோடு யாரோ பிடுங்கி எடுப்பது போல அவளுக்கு மனம் தாழ முடியாமல் துன்பத்தில் தவித்தது.

ஒருவேளை வெளியில் போய் பார்ப்போம் அங்கு உள்ளே இருக்க அவளுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது.

உடனே அந்த ஹோட்டலை விட்டு வெளியே வந்து பார்த்தால் எந்த பக்கத்தால் எங்கு செல்வது என்றே புரியவில்லை.

துருவனுடன் பேசிக் கொண்டு வந்ததால் வந்த வழியை அவள் மறந்து விட்டாள்.

அவர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு அருகே இந்த உணவகம் இருந்தாலும் சற்று தூரம்தான் இருந்தது.

வலது பக்கம் நடந்து செல்ல வேண்டுமா இடது பக்கம் செல்ல வேண்டுமா என்று புரியாமல் குழப்பத்தில் தவித்து அதிலேயே அப்படியே இயலாமல் இருந்து விட்டாள்.

அந்தப் பாதையால் நடந்து செல்பவர்கள் அவளை விசித்திரமாகப் பார்த்தனர்.

அவர்கள் பார்க்கும் பார்வை எல்லாம் அவளுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. அவன் எங்கே என்ற கேள்வியே மனதில் மீண்டும் மீண்டும் பேரலையாக வந்து மோதிச் சென்றது.

அப்படியே கால்கள் துவண்டு போக தலை சுற்றுவது போலவும் இருக்க, தன்னை பலவீனமாக உணர்ந்தவள் கைத்தாங்கலாக அருகில் இருக்கும் மின்கம்பத்தை பிடித்துக் கொண்டு சாய்ந்து நிற்க, ஒரு பெரிய பலமான கையொன்று அவளது தோளினைத் தீண்டியது.

அந்த கையின் ஸ்பரிசத்தில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவள் அப்படியே உறைந்து போய் நின்றாள்.

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!