இருள் சூழ்ந்த வானில் தனிமையில் இருந்த நிலவின் அருகில் வந்தமர்ந்த நட்சத்திரம் போல ருத்ரதீரனின் வாழ்வினுள் வந்தாள் மைவிழி.
தன்னை கவனிக்க எவரும் இல்லை என ஒரு நாள் கூட நினைத்துப் பார்க்காத ருத்ரதீரனுக்கு மைவிழியின் கவனிப்பு புதிதாக இருந்தது. பிடிக்கவும் செய்தது.
தன் நினைவு தெரிந்து குறுகிய காலத்திலேயே தனிமையில் வாழத் தொடங்கியவன் தான் ருத்ரதீரன்.
ஆனால் தற்போது தன் படத்தில் நடிப்பதற்காக அழைத்து வந்த மைவிழியோ தன்னோடு இருக்கும் ருத்ரதீரனின் நலம் பற்றி கவனம் செலுத்தத் தொடங்கினாள்.
அதன் பின்னர் இருவரும் ஒன்றாகவே உணவு உண்ணத் தொடங்கினார்கள். அவளும் அவனது ஒவ்வொரு வேலைகளையும் தனக்கு பிடித்தவாறு மாற்றத் தொடங்கினாள்.
அவனது ஆடைகளை அயன் செய்வது மற்றும் அவன் அணிந்துக் கொள்ள ஆடைகளை எடுத்து வைப்பது என ஒவ்வொரு செயலும் ருத்ரதீரனின் மனதினை ஆட்க்கொண்டது.
ருத்ரதீரனும் மைவிழியின் வாழ்க்கை முறையையும் மாற்ற நினைத்து பல முயற்சிகளை செய்யத் தொடங்கினான். அதற்கு முதலில் அவன் கையில் எடுத்த விடயம் அவள் நடத்தையில் மாற்றம் கொண்டு வருவதே ஆகும்.
ஏனெனில் அவளது செயல்களையும் பேசுவதையும் பார்த்து பலர் கிண்டல் செய்வதும் சிரிப்பதுமாக இருப்பது அவனுக்கு புரிந்தது.
அவளது சிறுப்பிள்ளை தனம் ருத்ரதீரனுக்கு பிடித்திருந்தாலும் மற்றையவர்கள் பார்வையில் கேலியாக உள்ளது என உணர்ந்தவன் அதை மாற்ற நினைத்தான்.
“அம்மு….., நான் உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லனும்” எனக் கூறினான்.
“என்ன சார் சொல்லுங்க” என பதிலளித்துக் கொண்டே அவளது ஆடைகளை மடித்துக் கொண்டிருந்தாள் மைவிழி.
“அம்மு நாம கொஞ்சம் படிச்சா நல்லம்னு தோனுது..” எனக் கூற,
“அப்படியா சார் எந்த ஸ்கூலுக்கு போகப் போறீங்க”
“நானா….?, இல்லை நீ தான் படிக்கப் போற..” என்ற பதிலை தீரன் கூற மைவிழியின் உயிரோட்டம் ஒரு கணம் நிற்க அதிர்ச்சியோடு,
“என்னால முடியாது, நான் ஏற்கனவே நிறைய படிச்சுட்டேன் இனி படிக்க முடியாது” என கையில் இருந்த ஆடைகளை கீழேப் போட்டு விட்டு ஓட்டம் எடுக்க அவளை எட்டிப் பிடித்த ருத்ரதீரன் தன் கையினால் பூட்டிட்டு அசையாமல் வைத்துக் கொண்டான்.
“எங்கே ஓடப் பார்க்குற…., அம்மு நான் சொல்றதை கொஞ்சம் கேள் நீ கட்டாயமா சில விஷயங்களை தெரிஞ்சுக்கனும்” என்றான்.
“அம்மாஆஆ என்னால முடியாது, நான் சின்னப் பிள்ளையா இருக்கும் போதே ஸ்கூல் பக்கம் போக மாட்டேன், இப்போ பெருசான பிறகு என்னை படிக்கச் சொல்லி கொடுமை படுத்துறீங்களே” என முதலைக் கண்ணீர் வடிப்பது போல அழுதாள்.
“பல வருஷமா நடிக்கிற எனக்கு தெரியாதா எது உண்மை எது பொய்ன்னு, ஷூட்டிங்ல நடிக்க சொன்னா அதைப் பண்ணாம இங்கே நல்லாவே நடிக்குற அம்மு” என்று ருத்ரதீரன் கூற,
‘அச்சச்சோ நாம பண்ணினது பொய்ன்னு கண்டு பிடிச்சுட்டாரே, பரவாயில்லை வேற எதாவது சொல்லி சமாளிப்போம்’ என தனக்குள் நினைத்த மைவிழி,
“ம்ஹூம் எனக்கு லைட்டா ஜூரம் அடிக்குற மாதிரி இருக்கு சார், அதனாலே நாலு அஞ்சு மாசம் முடிய நான் படிக்க போகவா” எனக் கேட்டாள்.
“நீ என்ன காரணம் சொன்னாலும் நான் உன்னை விட மாட்டேன் அம்மு நீ கட்டாயமா இதைப் பண்ண தான் வேணும்” என்றான்.
“அய்யோஓஓ சார் படிக்க போனா அடிப்பாங்க அப்புறம் தோப்புக்கரணம்லாம் போடனும், நான் பாவம் தானே என்னை விட்டுருங்களேன்” என கெஞ்சினாள் மைவிழி.
ஆனால் அவனோ அதற்கு உடன்படாமல் இருக்க இரு கண்களையும் மூடிக் கொண்டு,
“என்னை காப்பாத்த யாருமே இல்லையா…?, இப்படி கொடுமைப் படுத்துறாங்களே…., கடவுளே நான் உன்கிட்டேயே வந்திடுறேன்” என்று கூறிக் கொண்டே ஒரு கண்ணைத் திறந்து பார்க்க ருத்ரதீரனோ கையினை கட்டியவாறு அவளை அழுத்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘இவர் என்ன சொன்னாலும் நம்மளை விட மாட்டார் போலவே இதுக்கு மேலே என்ன சொல்லலாம்’ என நினைத்தாள் மைவிழி.
அவள் செய்யும் குறும்பு தனத்தை பார்த்த தீரன் அவளின் தோளில் தட்டியபடி,
“போதும் போதும் நான் பார்த்திட்டேன். நீ நினைக்கிற மாதிரி இல்லை அம்மு அங்கே உனக்கு அடிக்கவோ தோப்புக்கரணம் போட வைக்கவோ யாரும் இருக்க மாட்டாங்க ஏன்னா உனக்கு எல்லாம் சொல்லி தரப்போறது நான் வேலைக்கு வைக்குற ஆள்தான் சோ உனக்கு பிடிக்கலைன்னா ஆ ஆளையே மாத்திடலாம்.” எனக் கூறினான்.
“சாகனும்னு முடிவெடுத்த பிறகு கிணத்துக்குள்ள தானா விழுந்தாதான் என்ன தள்ளி விட்டாதான் என்ன, எப்படியும் நீங்க என்னை விடப் போறது இல்லை வேற வழியில்லை நான் போக தானே வேணும்” என சலிப்போடு பேசினாள்.
“ஹா ஹா நீ நல்லா பாட்டி மாதிரி பேசுறடி. சரி போய் வேலையை செய்” என அவளின் தலையில் தட்டிவிட்டுச் செல்ல அவளோ கவலையோடும் படிக்க வேண்டும் என்ற சிந்தனையோடும் சென்றாள்.
இவ்வாறு இருவரும் நன்கு புரிந்துக் கொண்டு பழக ஆரம்பிக்கத் தொடங்கினார்கள். அவனது ஷூட்டிங்கும் சிறப்பாக சென்று கொண்டிருந்தது.
அதிவேக வீதியில் செல்லும் காருக்கு குறுக்கே வரும் பள்ளம் போல அவனது வேலையில் குறுக்கிட்டது படத்தில் வரும் முத்த காட்சிகள்.
சிறு சிறு தொடுகையை சகித்துப் போக தயாரான மைவிழியிக்கு முத்த காட்சியில் நடிக்க விருப்பமில்லாமல் இருந்தது. இதைப்பற்றி ருத்ரதீரனிடம் கூற வேண்டும் என நினைத்து அவனிடம் பேசுவதற்காக அவனை நோக்கி சென்றாள் மைவிழி.
“சார்….,” என தயக்கத்துடன் உள்ளே வந்து நின்ற மைவிழியை பார்த்து,
“வா அம்மு சிட்…., நீ ரெடி ஆகலையா..?” எனக் கேட்டான்.
“இல்லை சார் அந்த அக்கா நடிப்புக்கு உங்களுக்கு முத்தம் கொடுக்குற மாதிரி கொடுக்க சொன்னா அது உண்மையா” எனக் கேட்க,
“வெயிட் அம்மு நான் பார்க்கிறேன்” எனக் கூறி அவனது ஸ்கிரிப்ட் பைல்லை பார்த்தவன்,
“எஸ் அம்மு டுடே அந்த சீனும் தான் இருக்கு” என்றான்.
அவளோ தயக்கத்தோடு, “சார் இது மட்டும் வேணாமே…., என்னால நடிப்புக்கு கூட அப்படி பண்ண முடியாது.
இதை மட்டும் வேற யாரையாவது வெச்சு பண்ணுங்களேன்” என மெல்லிய குரலில் கேட்டாள்.
“அப்படிலாம் பண்ண முடியாதுடி இதை நீ தான் பண்ணணும், இது பெரிய விஷயமே கிடையாது இங்கே சாதாரணம் தான்” என்க,
“இல்லை சார் நான் அப்படி பண்ண மாட்டேன்.” எனக் கூறியவளோ கண்ணீர் வடிக்கத் தொடங்கினாள்.
தற்போது அவளது வதனத்தில் உண்மை புலப்பட்டது. இது அவளுக்கு பிடிக்காத ஒரு விடயம் இதை செய்வதால் மைவிழி பெரும் துன்பமடைவாள் என எண்ணியவன் அவளது விருப்பப்படி இந்த காட்சியை எடுக்காமல் இருக்க முடிவு எடுத்தான்.
“ஓகே அம்மு நீ சொன்ன மாதிரி இந்த சீனை நாங்க எடுக்காம விடுவோம்” எனக் கூற அவளது முகமோ ஒளிரும் மின்குமிழ் போல மாற,
“உண்மையாவா சொல்றீங்க..?”
“எஸ் அம்மு உனக்கு பிடிக்கலைன்னா இதை எடுக்காம விட்ரலாம்” எனக் கூறினான் ருத்ரதீரன்.
“இப்ப தான் சார் நிம்மதியா இருக்கு, நான் கேட்டதும் எதுவுமே சொல்லாம ஆமான்னு சொல்லிட்டீங்களே என்மேலே ஏதும் கோபமா” எனக் கேட்டாள்.
“உன்மேலே நான் கோபப்பட மாட்டேன் அம்மு. ஏன் மறுபடியும் இந்த சீனுக்கு நோ சொல்லாம எடுக்கனும்னு சொல்ல வர்ரியா..?” எனக் கேட்டான்.
“அச்சச்சோ இல்லை இல்லை நான் சும்மா கேட்டேன் என்னை விட்டுருங்க” எனக் கூறி அங்கிருந்து செல்ல ருத்ரதீரனின் கண்களுக்கு ஒரு சில நிமிடத்திலேயே பழைய மைவிழி வந்ததை பார்த்தான்.
அவளது மகிழ்ச்சியே பெரிது என நினைத்து எதற்காகவும் தன் கதையின் போக்கினை மாற்றாத ருத்ரதீரன் இன்று அனைத்தையும் மாற்றினான் மறந்தான்.
இவ்வாறு சென்றுக் கொண்டிருக்கையில் ஓரிரு நாட்களில் அவனது திரைப்படத்தை எடுக்கும் இடத்தில் உருவான சிக்கல் காரணமாக சூட்டிங் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனால் அனைவருக்கும் விடுமுறை கொடுத்த ருத்ரதீரன் மைவிழி பற்றி சிந்தித்தான். அவள் வந்ததிலிருந்து தொடர்ந்து வேலை என இருந்ததால் ஓய்வே கொடுக்கவில்லை என எண்ணியவன் அவளை எங்காவது கூட்டிச் செல்லத் திட்டமிட்டான்.
அவனது திட்டம் பற்றி மைவிழியிடம் கூற நம் நாயகிக்கோ ஊர் சுத்துவது என்றால் தேனில் சக்கரை இட்டு சாப்பிடுவது போல சந்தோஷமான செயல் அல்லவா.? எனவே அவளும் அவனுடன் செல்ல உடன்பட்டாள்.
இருவரும் காலை நேரம் தம் வீட்டிலிருந்து பயணத்தை ஆரம்பித்தனர். அவனோ அவளுடைய கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டான்.
அவனது பிடியோ இனி ஒரு போதும் அவளை விடப் போவதில்லை என்பதைப் போல இருந்தது.