இளஞ்செழியன் உடன் கைத்தொலைபேசியில் பேசிய அந்த குரல் மிகவும் எகத்தாளமாகவும், இளக்காரமாகவும் இளஞ்செழியனை மிரட்டி கொண்டிருந்தது.
யார் அந்த குரல் என்று நன்றாக இனம் கண்டவன் ,
“இங்க பார்… சும்மா என்ன மிரட்டுற வேலை எல்லாம் வச்சுக்காத… உன்னை விட பெரிய ஆட்கள் எல்லாம் எனக்குத் தெரியும்… கொஞ்சம் யாரோட பேசிகிட்டு இருக்கேன்னு நல்லா யோசிச்சு பார் …”
“செழியன் சார் என்னோட தேவை என்னன்னு உங்களுக்கு நல்லா தெரியும். அதை நீங்க கொடுத்துட்டீங்கன்னா உங்கட ரூட்ல நான் தலையிட மாட்டேன்…”
“சரி.. அந்தக் கம்ப்ளைன்ட் லெட்டர இங்க கொண்டு வா… நான் உனக்கு என்ன வேணுமோ அதுக்கு மேலேயும் தாரன்..”
“நீங்க பெரிய தாராள பிரபுன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. இதோ இன்னும் அஞ்சு நிமிஷத்துல உங்க வீட்டு வாசல்ல நிப்பேன் ..” என்று அவன் சொன்ன மறுகணமே போனை வைத்துவிட்டு ஒன்றும் பேசாமல் மீண்டும் உணவை உண்ணத் தொடங்கினான்.
இவர்களது உரையாடலை கவனித்த ஸ்ரீ நிஷா, ‘கம்ப்ளைன்ட் லெட்டரா..? என்னவாக இருக்கும்..?’ என்று யோசித்தபடி, ‘யாரோட கதைச்சுருப்பாரு..? யாரைப் பத்தி கம்பளைண்டா இருக்கும்..? இவரை பற்றி யாரும் கம்ப்ளைன்ட் பண்ணியிருப்பாங்களோ..?, இவரை ஜெயில்ல கொண்டு போய் போடப் போறாங்களோ.,?’
‘ஐயா ஜாலி…’
‘கடவுளே..! மகமாயி தாயே…! பராசக்தி…! இவரை மட்டும் ஜெயில்ல கொண்டு போய் போட்டாங்கன்னா… உங்களுக்கு நான் 500 தேங்காய் உடைகிறேன்… அப்படியே செஞ்சிருமா…’ என்று கடவுளை மனதிற்குள் வேண்டிக் கொண்டிருந்தாள்.
அவளது முகத்தில் திடீர் பரவச நிலையை பார்த்த இளஞ்செழியன், அவளை சுடக்கிட்டு அழைத்து,
“என்ன யோசனை போ போய் வேலையைப் பாரு..”
“எப்ப பார்த்தாலும் வேலையப் பாரு.. வேலையப் பாரு… சாப்பிட்டியா..? என்று அப்படி ஏதாவது ஒரு வார்த்தை கேட்கிறானா..? அவனுக்கு எல்லா வேலையும் நான் தான் செய்யணும்… இந்த ராமையா வேற எங்க போனார்ன்னு தெரியல… மனுஷன் போனவர் இன்னும் வரல்ல…
அப்படி அங்க என்னதான் செய்றாரோ தெரியல.. சொந்த ஊருக்கு போய் நல்லா ஜாலி பண்றேர் போல.. இவன் வேற யாரையும் வேலைக்கு வைக்கிறானுமில்ல..என்னையே வச்சு எல்லா வேலையும் செய்றான்.. ஆள் பார்க்கத்தான் பெரிய பணக்கார மாதிரி தெரிகிறான்…
ஆனா சரியான கஞ்ச பிசினாரி… ஹோட்டலில் போய் சாப்பிட மாட்டாராம், ஆனா ஊருக்கு ஊரு நாட்டுக்கு நாடு ஹோட்டல் வச்சி நடத்துவாராம்…வீட்டுக்கு காசை கட்டிக்கிட்டு அழுகிறான்..” என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்று சற்று நேரம் ஓய்வு எடுக்கலாம் என அப்படியே மெத்தையில் படுத்து இருந்தவள் தன்னை அறியாமல் உறங்கிப் போனாள்.
வாசலில் காலிங் பெல் அடிக்க உடனே சென்று கதவை திறந்தான் இளஞ்செழியன். ராகுல் உள்ளே நுழைந்தபடி,
“குட் மார்னிங் சார்.. எப்படி இருக்கீங்க..?”
“சுத்தி வளைக்காமல் நேராக மேட்டருக்கு வா.. அந்த கம்ப்ளைன்ட் லெட்டர் எங்க..?”
“ஏன் சார் அவசரப்படுறீங்க..? இந்தாங்க உங்களுக்காகத்தான் கொண்டு வந்தேன்..” என்று அந்த லெட்டரை இளஞ்செழியன் இடம் கொடுத்தான்.
அதனை கையில் இருந்து பிடுங்காத குறையாக வாங்கி எடுத்தவன் அதனை வாசித்துப் பார்க்காமல் கிழித்தெறிந்தவன், “யாரு அது..?”
“தெரியல சார்.. நான் போலீஸ் ஸ்டேஷன்ல இல்லாத நேரம் வந்திருக்கு.. யாரோ ஒரு வயசான அம்மா வந்து இந்த கம்பளைண்ட் லெட்டரை கொடுத்துட்டு போனாங்களாம்..”
“வேற டீடெயில்ஸ் எதுவும் தெரியுமா..?”
“இல்ல.. எல்லா டீடைல்ஸும் அந்த கம்பளைண்ட் லெட்டர்ல தான் இருந்துச்சு.. நான் வார அவசரத்துல அதை வாசிக்கல.. நீங்க படிச்சு பார்ப்பீங்கன்னு உங்கள்ட்ட தந்தா… நீங்க என்ன சார் வாங்கின உடனே கிழிச்சிட்டீங்களே..!”
அதை வாசிக்காமல் கிழித்த பின் தான் செய்த மடத்தனத்தை அப்போதுதான் புரிந்து கொண்டான் இளஞ்செழியன்.
“நீ வாசிக்கலையா..?”
“இல்ல.. அந்தப் பொண்ணோட போட்டோவை கொடுத்து இந்த கம்பிளைன்ட் லெட்டர கொடுத்துட்டு அவசரமா கண்டுபிடிச்சு தர சொல்லிட்டு போயிட்டாங்க என்று தான் கான்ஸ்டபிள் சொன்னான்.. அதனால தான் உங்களுக்கு உடனே கால் எடுத்தேன்..”
“ஓகே எவ்வளவு எதிர்பார்க்கிறே..?”
“இதுதான் சார் உங்கள்ல ரொம்ப பிடிச்சது.. நேரா விஷயத்துக்கு வந்துருவீங்க..”
“ம்ப்ச்.. சொல்லு… டைம் வேஸ்ட் பண்ணாத…”
“ஒரு பத்து லட்சம்..” என்று அவன் கூறியவுடன் உள்ளே சென்று செக் புக் எடுத்து வந்து அதில் 15 லட்சம் எழுதி கையொப்பமிட்டு அவனது கையில் கொடுத்தான்.
அதனை வாங்கி பார்த்ததும் அவனது அனைத்து பற்களும் வெளியே தெரியும்படி கண்கள் மிளிர சிரித்தான்.
“நீ கேட்டதுக்கு மேலேயே நான் உனக்கு தந்திருக்கேன்… இந்த மாதிரி ஏதாவது வேற கம்ப்ளைன்ட் அந்த பொண்ண பத்தி வந்துச்சுனா ஃபர்ஸ்ட் எனக்கு தான் இன்பர்ம் பண்ணனும் அதுக்கு சேர்த்து தான் அட்வான்ஸ் 5 லட்சம். இவளை தேடி வேற யாரும் வந்தா விஷயம் வெளியே போகக்கூடாது என்கிட்ட தான் பெஸ்ட் வரணும்.. ஓகே..”
“வாய் பிளந்தபடி அவன் கூறும் விடயங்களை நன்றாகக் கேட்டுவிட்டு “ராகுல நம்பினோர் கைவிடப்படார் நீங்க ஒன்னும் பயப்படாதீங்க இந்த பொண்ணு உங்களுக்கு தான் நான் யாரையும் நெருங்க விட மாட்டேன்…”
“அப்ப இந்த பொண்ண பத்தி திருப்பி வந்து கேட்டாங்கன்னா..?”
“நான் ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கிறேன்..”
“ஓகே தட்ஸ் குட்..” என்று கூறிவிட்டு வாயில் புறத்தைப் பார்த்தான்.
அவனது பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட ராகுல் “சரி செழியன் சார் நான் போயிட்டு வாரேன்..” என்று கூறியபடி அவன் சென்று விட்டான்.
ஸ்ரீநிஷா இதனை பார்த்திருப்பாளோ என்று சிறு படபடப்புடன் அவள் எங்கே என்று தேடி ஒவ்வொரு அறையாக திறந்து பார்க்கும் போது மூன்றாவது அறையில் தன்னை மறந்து கை, கால்களை அங்கும் இங்கும் வீசி பெரிய மலையையே தூக்கி எடுத்தவள் போல நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள்.
மழலை எவ்வாறு விளையாடிவிட்டு அசதியில் தூங்குமோ அப்படியே இவளும் அசந்து படுத்துக் கிடந்தாள். அவளது பால் முகம் மாறாத வதனத்தை அவன் இமை வெட்டாது பார்த்துக் கொண்டிருக்க அந்நேரம் பார்த்து சிறு சலனத்துடன் கண் அசைத்தவள் அம்மா என்று வார்த்தை உதிர்த்தாள்.
அவள் உதிர்த்த வார்த்தையில் அவள் இன்று காலையில் பேசிய அவ்வளவு விடயங்களும் அவனது நினைவில் வந்து அவனது நெஞ்சே குத்தீட்டியாக குத்தத் தொடங்கியது.
‘நான் அத எப்பவுமே மறக்க மாட்டேன் ஸ்ரீ… நீ ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டே… இன்னைக்கு நைட் உனக்கு இதுக்கான தண்டனை கட்டாயமாக காத்திருக்கு.. வெயிட் அண்ட் வாட்ச்..’ என்று மனதுக்குள் நினைத்தவன் அந்த அறையை விட்டு வெளியேறினான்
.
அவன் வெளியேறியதும் கண்களை மெதுவாக திறந்து பார்த்த ஸ்ரீநிஷா “அப்பாடா போயிட்டானா.. தூங்குற மாதிரி எவ்வளவு நேரம் தான் நடிக்கிறது.. இவன் பக்கத்துல வந்தா ஏதோ உடம்பில் ஊர்வது போல இருக்கிறது..
இவனை விட்டு எவ்வளவு சீக்கிரமாக போக வேண்டுமோ அவ்வளவு சீக்கிரமாக போயிடனும்..” என்று நினைத்தவள் மறுபக்கம் தலை சாய்த்து சரிந்து படுத்துக்கொண்டாள்.
திடீரென அவளுக்கு ஆச்சிரமத்தின் நினைவு வந்தது. ஆசிரமத்தில் எப்போதும் முதியவர்களுடனும், சிறுவர்களுடனும் பேசி ஆடிப் பாடி விளையாடுவது, வயது போனவர்களுக்கு உதவிகள் செய்வது, அவர்கள் கூறும் கதைகளை கேட்பது, சிறுவர்களுடன் கண்ணாமூச்சி ஆடுவது, ஓடிப் பிடித்து விளையாடுவது என அனைத்து விளையாட்டுகளும் அவளுக்கு அத்துபடியாகவே இருந்தது.
ஆனால் இன்றோ அது ஒன்றும் இல்லாமல் சிறகொடிந்த பறவை போல இந்த வீட்டுக்குள்ளே வட்டமடித்துக் கொண்டிருந்தாள்.
இந்த நினைவுகள் எல்லாம் அவளது நெஞ்சில் ஒரு விதமான சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் அள்ளித் தந்தது. ஆம் அவளுக்கு தனது ஆசிரமம் தான் பிறந்த வீடு. அந்த ஆசிரமத்தில் இருக்கும் போது அவளுக்கு குறை என்று ஒன்றுமே இருந்ததே இல்லை.
சரோஜாதேவி அவளை தன் பிள்ளை போல செல்லமாக பார்த்து பார்த்து கவனிப்பார். அப்படித்தான் அனைவரையும் சரோஜாதேவி பார்க்கின்றார்.
யாருக்கும் பாரபட்சம் பார்ப்பதே இல்லை..’ என்று சிந்தித்தபடியே மீண்டும் உறங்கிப் போனாள்.
எவ்வளவு நேரம் அப்படியே தூங்கினாள் என்று அவளுக்கு தெரியவே இல்லை.
வயிறு தாளம் போடவே கண் விழித்துப் பார்த்தவள் நேரம் மூன்றை தாண்டி இருந்தது.
எழுந்து வெளியே சென்று பார்த்தால் இளஞ்செழியன் நடமாட்டம் எங்கும் காணவில்லை.
எங்காவது சென்றிருப்பான் என்று சமையலறைக்குள் புகுந்தவள் உணவைத் தேடிப் பார்த்தால் ‘ஐயோ காலையில செய்த உணவு அவருக்கே போதுமானதாக இருந்துச்சு சாப்பாடு ஒன்னும் செய்யல..” என்று அருகில் இருந்த சில மரக்கறிகளை எடுத்து வெட்டி கடகடவென சமைத்து முடித்தாள்.
சமைத்து முடித்தவள் உணவை எடுத்துக்கொண்டு ஹால்க்கு வந்து டைனிங் டேபிள் வைத்து அள்ளி வாய்க்குள் திணித்தாள் உணவை. காலையிலிருந்து உணவு எதுவுமே உண்ணவே இல்லை.
காலையில் இளஞ்செழியனுக்கு அவனது உணவை உண்டு காண்பித்தது மட்டும்தான் அதன் பின்பு அவள் ஒன்றும் உண்ணவில்லை.
அதனால் பசியோடு சேர்த்து மேலதிக கொடுப்பனவாக தலைவலியும் கூட வந்தது. இப்போது உணவை உண்டு முடித்த பிறகு வயிறும் நிரம்பி தலைவலியும் காணாமல் போனது போல இருந்தது.
“ஆஹா..! ஸ்ரீ நிஷா என்ன அழகா சமைக்கிற அவ்வளவு ருசியா இருக்கு இந்த ருசியான உணவுக்குத் தான் அந்த இளஞ்செழியன் அடிமை போல.. அதுதான் எவ்வளவு பெரிய கனடாவுக்கு போய் ஹோட்டல் எல்லாம் வச்சிருக்கான் ஆனா என்னோட சாப்பாட்டுக்காக மட்டும் தான் வந்து ஆள் மிரட்டுவாரு… சமைச்சு சாப்பிட வேண்டியது தானே அவருக்கு என்னோட சமையல் ரொம்ப புடிச்சிருக்கு அதுதான் போல..
கனடால போய் ஹோட்டல் வைத்திருந்து என்ன பிரயோசனம் அம்மு உன் சாப்பாட்டுக்குத் தான் இங்க கெத்து..” என்று இல்லாத காலரைத் தூக்கி விட்டாள்.
இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த இளஞ்செழியன்,
“என்ன அம்முணி தூங்கி எழுந்தாச்சா.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிருக்கலாம் விடிஞ்சிருக்கும்…”
“இல்ல கொஞ்சம் உடம்புக்கு முடியல அதுதான்..”
“சாப்பிட்டு முடிச்சிட்டீங்களா..?”
“ஆமா… உங்களுக்கும் வேணுமா..?”
“இல்ல எனக்கு பசிக்கல..”
“ஏன் உடம்புக்கு என்ன செய்யுது..”
“ஒன்னும் இல்ல கொஞ்சம் இருக்கு ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்..”
சரி என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறி தோட்டத்தை
வலம் வந்தபடி பார்த்துக் கொண்டிருந்தவன் அப்போது தனது கனடாவில் இருக்கும் நண்பனின் ஞாபகம் வர,ரோஹித்துக்கு கால் பண்ணினான்.
கனடாவில் செய்யும் பிசினஸை அவனிடமே பொறுப்பு கொடுத்து வந்தான் அது சம்பந்தமாக விசாரிப்பதற்கு அழைத்திருந்தான் இளஞ்செழியன்.
“ஹாய் ரோஹித்.. ஹவ் ஆர் யூ மச்சி..”
“ஐ அம் ஆல் குட் மச்சி.. நீ எப்படி டா இருக்க..”
அதுக்கு பதில் கூறாது மௌனம் சாதிக்க அவனுக்கு அவனது மனநிலை நன்கு புரிந்து போனது. அவனது மௌனத்தைக் கலைக்க எண்ணி,
“நீ எப்ப கனடா வாரா மச்சி..?”
“இல்ல ரோஹித் நான் இனிமேல் கனடா வரமாட்டேன்..”
“என்னடா நான் உனக்கு கால் பண்ணனும்னு நினைச்சிட்டே இருந்தேன்.. இங்க பிசினஸ் கொஞ்சம் பிராப்ளமா போய்கிட்டு இருக்கு நீ வந்தா தான் ஏதாவது ஒரு முடிவு எடுக்கலாம்..
வொர்க்கர்ஸ் கொஞ்சம் கூட சம்பளம் எதிர்பார்க்கிறார்கள்.. அதோட ஹோட்டல்ல சில விஷயங்கள் சேஞ்ச் பண்ண வேண்டி இருக்கு டெக்கரேஷன் அடுத்து இனி கிறிஸ்துமஸ் வருது கிறிஸ்மஸ் டெக்ரேசன் செய்யணும்…
கிறிஸ்மஸ் ஆஃபர் போடணும் அது எல்லாம் நீ வந்தா தான் ஏதாவது சூப்பர் ஐடியா தருவ..
அதோட வார கஷ்டமர் உன்ன தான் கேக்குறாங்க… உன்னோட இந்தக் கை பக்குவம் இருக்கே அது இங்க யாருக்குமே இல்லடா அதனாலதான் பிசினஸ் டவுனாகுதோ தெரியல..”
“டேய் நீ என்னைய விட நல்ல சமைப்பியே டா அப்புறம் என்ன..?”
“இல்ல செழியன் பிசினஸ் ரொம்ப டல்லா போகுது எனக்கு கவலையா இருக்கு நீ சீக்கிரம் வா..”
“ஓகே ஓகே ஐ வில் ட்ரைடா வேற எதும் பிரச்சினை என்றால் கால் பண்ணு ஓகே நான் வைக்கிறேன்..” என்றபடி வைத்து விட்டு தனது சிந்தனைச் சுழலுக்குள் மாட்டிக் கொண்டான்.
இளஞ்செழியனின் கனவு கனடா தான் அவனது கனவின் மொத்த உருவமே கனடாவில் உள்ள அந்த ஹோட்டல் தான்.. தனது கனவினைத் தேடி கனடாவுக்கு செல்வானா..? அல்லது ஸ்ரீ நிஷாவுடன் இங்கேயே தங்கி விடுவானா..?