வஞ்சம் 19
அந்தரத்தில் தூக்கிய கால் பயத்தில் நடுங்கத் தொடங்கியது. அந்தக் காலின் நடுக்கம் உடல் முழுவதும் பரவி உடல் மேல் சிறு அதிர்வு ஒரு கணத்தில் தோன்றி மறைந்தது.
இரு கைகளாலும் கண்களை அழுந்தத் துடைத்து, கீழே பாய எத்தனிக்கும் போது இரு கரங்கள் அவளது இடையே இறுக்கிப்பிடித்துக் கொண்டன.
உடனே அந்தக் கரங்கள் யாருடையது என அறிந்த ஸ்ரீ நிஷா அந்தக் கரங்களின் பிடியிலிருந்து விடுபட துடித்தாள்.
கீழே அவளை இழுத்து உதறித் தள்ளிய இளஞ்செழியன்,
“என்ன காரியம் பண்ற ஶ்ரீ..” என்று அவள் அருகே வந்து அவளது இரு தோள்களையும் பிடித்து எழச்செய்ய முயற்சிக்க,
“ஏன் என்ன காப்பாத்துறீங்க? விடுங்க நான் செத்துப் போறேன்..” என அவன் தோள்களில் பிடித்திருந்த கையை தட்டி விட்டாள்.
அவளது இந்த திடீர் முடிவு இளஞ்செழியனுக்கும் சிறு பட படப்பை உருவாக்கியது. அவனது கரங்களும் மெல்ல நடுக்கம் கண்டன.
அதனை மறைத்துக் கொண்டு, “உனக்கு என்ன இப்ப சாகனும் தானே ஓகே நாளைக்கு மார்னிங் நீ சாகலாம் இப்ப வந்து தூங்கு..” என அவன் கூற அவனது விழிகளை கூர்ந்து கவனித்தாள்.
அவனும் எந்த சலனமும் இல்லாமல் “நீ வாழுறது என்றாலும் சாவுறது என்றாலும் அது என் அனுமதியுடன் தான் நடக்கும்..”
அவளது மனமோ அய்யோ எனக் கதறியது. “நீங்க என்ன என்னைய சாகச் சொல்றது நான் சாகமாட்டேன்.. நான் உயிரோட இருந்து உங்களோட சாவை பாத்துட்டு தான் கடவுளிடம் போவேன்..”
“வாவ்.. இதுதான் ஸ்ரீ எனக்கு உன்னில பிடிச்சது உன்னோட டீலுக்கு நான் மனப்பூர்வமாக சம்மதிக்கின்றேன்..” என்று கைதட்டி அவளைப் பாராட்டினான்.
அவனது கிண்டல் அவளை மேலும் கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது.
“உன் சாவு என் கையில தான்..” என்று வார்த்தைகளை கடித்து துப்பிய படி அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறினாள் ஸ்ரீ நிஷா.
அவள் செல்வதை பார்த்துக் கொண்டே இளஞ்செழியன் சிறிது நேரம் அசைவற்று நின்றவன் ஓங்கி தனது கைகளால் நிலத்தில் குத்தினான்.
அவனது கண்களில் இருந்து நீர் அவன் அறியாமல் மூக்கு நுனியில் நின்று கீழே நிலத்தில் விழுந்தது.
அந்த அறையில் மாட்டியிருந்த அவனும் அவனது அன்னையும் இணைந்து எடுத்த புகைப்படத்தை பார்த்து மானசீகமாக ‘என்னோட வாழ்க்கையில மட்டும் ஏன்மா இப்படி எல்லாம் நடக்குது..’ என்று நினைத்து அருகில் உள்ள மெத்தையில் தொப்பன்று விழுந்தான்.
கையில் ஏற்பட்ட காயம் மனதில் ஏற்பட்ட காயத்தை விட அவனுக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. கையில் இருந்து ரத்தம் சிந்த அப்படியே தன்னை அறியாமல் உறங்கிப் போனான்.
கோபத்துடன் கீழே வந்த ஸ்ரீநிஷா ஒரு அறையைத் திறந்து அதனுள் சென்றவள், தனது உடலில் அவன் தொட்ட இடங்களை எல்லாம் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி எரிக்க வேண்டும் போல இருந்தது.
உடனே குளியலறைக்குள் சென்று உடைகளை களைந்து நான்கு, ஐந்து தடவை சோப் போட்டு குளித்து முடித்து அப்படியே கண் அசந்து மெத்தையில் விழுந்து படுத்தாள்.
இவ்வாறு நாட்கள், மாதங்கள் ஆகின ஆனால் இளஞ்செழியனின் வரைமுறை அற்ற தொடுகை ஸ்ரீநிஷாவை விட்டு விலகியதாகவே இல்லை.
அவன் ஸ்ரீ நிஷாவுக்கு தண்டனை கொடுப்பதாக எண்ணி தனக்குத்தானே தண்டனையை வழங்கிக் கொண்டான்.
அன்று ஒரு நாள் காலைக் கதிரவன் தனது கடமையை தொடராமல் இருக்க மேகங்களோ கதிரவனைத் தேடி அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தன.
கருமேகமூட்டங்கள் கதிரவனை மறைக்க மழை மேகங்கள் தனது ஆட்சியை வானம் எங்கும் பரப்பிக் கொண்டிருந்தன.
ஸ்ரீ நிஷா எழுந்து தட்டுத் தடுமாறி கீழே வந்து தேநீரை தயார் செய்து கொண்டிருக்கும்போது வாசலில் அழைப்பு மணி அடிக்கும் ஓசை கேட்டது.
வளமையாக இளஞ்செழியன் வீட்டில் யாருமே வந்து போவதில்லை. திடீரென அழைப்புமணி ஓசை கேட்டதும் உற்சாகம் பிறந்தவளாக ஓடிச்சென்று கதவைத் திறந்தாள்.
அவள் எதிர்பார்த்தது போல முகம் எங்கும் புன்னகைகள் சிந்திய வண்ணம் ஓடிச்சென்று கட்டி அணைத்தாள் ராமையாவை.
அவளது இறுகிய அணைப்பே கூறாமல் கூறியது ராமையாவின் மீது அவள் வைத்த அன்பை. இறுக்கி அனைத்து படியே உடல் குலுங்க அழத் தொடங்கினால் ஸ்ரீ நிஷா.
அவளது அழுகையைக் கண்டு முதல் பயந்த ராமையா பின்பு அவளது அழுகை விடாமல் தொடர தன்னில் இருந்து அவளை பிரித்தெடுத்து அவளது கன்னத்தில் வடிந்த கண்ணீரைத் துடைத்து அருகில் உள்ள இருக்கையில் அமர வைத்து அவளை தேற்ற முயற்சி செய்தார்.
ஆனால் அவளது அழுகை முடிந்த பாடும் இல்லை. அவளது கண்ணீர் நின்ற பாடும் இல்லை.
சிறு புன்னகையுடன், “அழாத கண்ணம்மா அதுதான் நான் வந்துட்டேன்ல்ல இனிமே நீ அழக்கூடாது என் சமத்துப் பொண்ணுல்ல அழாத…” என்று அவளை ஆறுதல் படுத்தினார்.
அவரது இனிமையான அன்பான பேச்சினை கேட்டு அவளது மனம் கனிந்தது. ஆனால் அழுகையோ நிற்கவில்லை.
அழுது, அழுது ராமய்யா இங்கிருந்து சென்றது தொடக்கம் இன்று வரை இளஞ்செழியன் செய்த அனைத்து அட்டூழியங்களையும் ஒன்று விடாமல் ஸ்ரீநிஷா கூறி முடித்தாள்.
அனைத்தையும் பொறுமையாக கேட்டு முடித்த ராமையாவுக்கு பேரதிர்ச்சி அப்படியே ஒன்றும் கூறாமல் தரையிலே அமர்ந்தவரது கண்களில் இருந்து நீர் கசியத் தொடங்கின.
“நான் தூக்கி வளர்த்த பிள்ளையாம்மா இது..” என்று கூறி கண் கலங்கிய படி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது மாடிப்படிகளில் இருந்து இறங்கி இளஞ்செழியன் வந்து கொண்டிருந்தான்.
ராமையாவின் வருகையை கண்டதும் அவனது மனம் ஒரு பக்கம் சந்தோசம் அடைந்தாலும் மறுபக்கம் கவலையை தத்தெடுத்துக் கொண்டது.
ஏனெனில் நடந்த விஷயங்கள் அனைத்தும் ஸ்ரீ நிஷா இந்நேரத்துக்கு ஒப்பித்திருப்பாள் என்பது ராமையாவின் கண்களில் இருந்த கண்ணீரை பார்த்த உடனே நன்கு அறிந்து கொண்டான் இளஞ்செழியன்.
அவரிடம் இருந்து எவ்வாறு தப்புவது என்று புரியாமல் வேகமாக அருகில் சென்று,
“ஆஹ் ராமையா எப்ப வந்தீங்க..? எப்படி ஊர்ல எல்லாரும் நல்லா சுகமா..? இன்னும் கொஞ்ச நாள் இருந்து ரெஸ்ட் எடுத்துட்டு வந்து இருக்கலாமே..!” என்றதும் இராமையாவுக்கு சுர்ரென கோபம் எழுந்தது.
“ஏன் தம்பி உங்களோட காரியங்களுக்கு நான் தடையா வந்துட்டேனோ..?”
‘ஓஹோ ஸ்ரீ நிஷா நல்லாத்தான் எல்லாத்தையும் கூறி இருக்கா..’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டவன்,
“அப்படியெல்லாம் இல்ல நீங்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்.. நான் என்ன நினைக்கிறேனோ அதைத்தான் செய்வேன் அதுக்கு யாரும் தடையாக வந்துர முடியாது வந்திரவும் நான் விடமாட்டேன்..” என்று நிறுத்தி நிதானமாக கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றான்.
அவன் வேகமாக செல்வதை பார்த்ததும்
“தம்பி ஒரு நிமிடம்..” என்று கூறியதும் அவனது கால்கள் நகர மறுத்து அவ்விடத்திலேயே நிலைத்து நின்றன.
“நீங்க போற வழி சரியில்ல..”
“நான் சரியான பாதையை தான் தேர்ந்தெடுத்து இருக்கேன் அது எனக்கும் என் மனசாட்சிக்கும் மட்டும் தெரிந்தால் போதும்..”
“உங்களோட குணம் இது இல்லையே தம்பி அம்மா போனதும் அம்மாவை எரிச்ச இடத்துல உங்க நல்ல குணங்களையும் போட்டு எரிச்சிட்டீங்களா..?”
“நான் செய்றது சரிதாங்க ராமையா இவ அம்மாக்கு செய்த துரோகத்துக்கு இதுக்கு மேலேயும் நான் செய்யணும் இவள உயிரோட விட்டதை பெரிய விஷயம்..” என்றதும் ஸ்ரீ நிஷாவுக்கு கோபம் வந்தது.
“எதுவுமே செய்யாது என் மேல வீண் பழி சுமத்தாதீங்க இளஞ்செழியன்..”
ராமையாவுக்கு எதுவும் புரியவில்லை.
“என்னது அம்மாவா? அம்மாவுக்கும் ஸ்ரீ நிஷாவுக்கும் என்ன சம்பந்தம் எப்படி..?” என யோசித்தவாறு நின்றார்.
இளஞ்செழியன் கூறும் ஒவ்வொரு விடயங்களையும் கேட்க ராமையாவுக்கு தலையே வெடித்து விடும் போல இருந்தது.
“என்ன தம்பி சொல்றீங்க ஸ்ரீனிஷாவுக்கும் அம்மாவுக்கும் என்ன சம்பந்தம்..?”
“சம்பந்தம் இருக்கு அது தெரிய வேண்டிய நேரத்துல நல்லா தெரிய வரும் அப்ப நீங்க யோசிப்பீங்க..”
உடனே ஸ்ரீ நிஷா “உங்க அம்மாவை எனக்கு தெரியவே தெரியாது.. நான் இங்க வந்து போட்டோல தான் முதல் முறையாக பார்த்தேன் ஏன் இப்படி வீண் பழியை என் மேல சுமத்துறீங்க..”
ஸ்ரீ நிஷாவை திரும்பி ஒரு கணம் பார்த்த இளஞ்செழியன் கண்களாலேயே அவளை எரிக்கும் வண்ணம் கடும் கோபத்தில்,
“பொய் சொல்லாத..” என்று வேகமாக வார்த்தைகள் வந்து விழுந்தன.
அதனைக் கேட்டதும் ஸ்ரீநிஷா “நான் பொய் சொல்லல… என்னை நம்புங்க நான் பொய் சொல்லல..” என்று தரையில் உளுந்து தலை கவிழ்ந்த படி அழுது கொண்டே மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டு அப்படியே மயங்கி சரிந்தாள்.
அவள் மயங்கி விழுந்ததும் உடனே பதற்றத்துடன் ஓடிச் சென்ற இராமையா அருகில் உள்ள நீரை எடுத்து அவளது முகத்தில் தெளித்தார். ஆனால் அவரது வதனத்தில் எந்த அசைவும் தெரியவில்லை.
அருகில் இவை அனைத்தையும் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்த இளஞ்செழியனுக்கு புருவங்கள் முடிச்சிட்டன.
உடனே தனது குடும்ப மருத்துவரான வானதிக்கு அழைத்து விடயங்களை கூற அவர் அடுத்த சில நிமிடங்களிலேயே இளஞ்செழியன் வீட்டிற்கு வந்திருந்தார்.