கள்வன்-10
ஆறு மாதங்களுக்கு முன்பு
சென்னையில் உள்ள ஆடம்பர பகுதியில் உள்ள மிகப்பெரிய லக்சரிஸ் பங்களா.
பார்க்கவே அவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் பார்ப்போரின் கண்ணை கவர்ந்திழுக்கும் வகையில் இருந்தது அந்த மாளிகை. தமிழ்நாட்டிலேயே டாப் பிசினஸ்மேன்களின் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர்களின் வீடு என்றால் சும்மாவா.
எஸ்.எஸ்.வீ குழுமத்தின் சேர்மன் மிஸ்டர் சிவ சக்கரவர்த்தி. அவரது மனைவி யமுனா சக்கரவர்த்தி. இவர்களுக்கு இரு பிள்ளைகள் மூத்தவன் பெயர் மித்ரன் சக்கரவர்த்தி வயது இருபத்தி ஒன்பது. இரண்டாவது மகளின் பெயர் இதயா சக்கரவர்த்தி. மித்ரனோ பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் தொடர்பாக வெளி நாட்டில் படித்தவன், தன் படிப்பு முடிந்ததும் தந்தையின் தொழிலை இந்த இரண்டு வருடங்களில் திறம்பட நடத்திக் கொண்டிருக்கின்றான். அவன் தங்கை இதயாவும் தனக்கு மிகவும் பிடித்த ஃபேஷன் டிசைனிங் முதல் வருடம் பாரிஸில் படித்துக் கொண்டு வருகிறாள்.
அதிகாலை ஆறு மணிக்கு மித்ரன் தனது ஜாக்கிங் முடித்து விட்டு வந்து நேராக கிச்சன் சென்று காபி கலக்கி விட்டு தனக்கும் தனது பெற்றோருக்கும் எடுத்துக் கொண்டு அவர்கள் அறை நோக்கிச் சென்றான்.
இது அவர்களது வீட்டீன் வழக்கம். வீட்டில் மற்ற வேலைகளை பார்ப்பதற்க்கு ஏனைய வேலையாட்கள் உண்டு. சமையல் மட்டும் யமுனா தன் பொறுப்பில் வைத்துக் கொள்வார்.
தான் ஒரு பெரிய பிஸ்னஸ்மேன் என்று கர்வம் கொள்ளாமல் அவனே காபி கலக்கிக் கொண்டு அவனுடைய பெற்றோர்க்கு கொடுத்து மகிழ்வது அவனுடைய அன்றாட வாழ்க்கையில் அவனுக்கு மிகப் பிடித்த விடையம்.
அதேபோல இன்றும் தன் தாய் தந்தையை எழுப்புவதற்கு கையில் காபி கப்போடு சென்றான்.
அவனின் பெற்றோர்களுக்கும் காலையில் அவர்கள் முதலில் கண்விழிப்பது தன் மகனின் முகத்தில் தான். அவர்களுக்கும் அது மிகுந்த ஆனந்தத்தை கொடுக்கும்.
“குட் மார்னிங் ப்பா.. குட் மார்னிங் ம்மாஆ..” என்று புன்னகையுடன் உள்ளே வந்தான்.
“குட் மார்னிங் மித்ரா..” என்று இருவரும் ஒரேபோல சொல்லி விட்டு தங்களுடைய காஃபியை அருந்தத் தொடங்கினார்கள் மூவரும்.
“என்ன மித்ரா இன்னைக்கு சீக்கிரம் வந்த மாதிரி இருக்கு..” என்று அவனது தாயார் யமுனா கேட்க, அவன் தந்தையோ “அவன் என் புள்ளடி.. என்ன மாதிரி தான் இருப்பான். உன்னை மாதிரியா..? கல்யாணமாகி இத்தனை வருஷம் ஆச்சு என்னைக்காவது சீக்கிரம் எந்திரிச்சு புருஷனுக்கு ஆசையா காபி போட்டு கொடுப்போம்னு கொடுத்திருக்கியா..? கல்யாணத்துக்கு அப்புறம் நான் போட்டுக் கொடுத்தத நீ குடிச்ச.. இப்போ என் பையன் போட்டுக் கொடுக்கிறான் நீ குடிக்கிற..” என்று காலையிலேயே அவர்களின் செல்ல சண்டை ஆரம்பமானது.
ஆனால் யமுனாவின் முகத்தை பார்க்க வேண்டுமே மகனின் முன்னால் சக்கரவர்த்தியை எதுவும் சொல்ல முடியாமல் பல்லை கடித்துக் கொண்டு “போதும் சிவா இதோட நிறுத்திக்கோங்க.. காலையிலேயே என்னை வம்பு இழுக்காதீங்க.. அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும். ஒரு காபி போட்டு கொடுத்துட்டு நீங்க பேசுற பேச்சு இருக்கே அப்பப்பா..” என்று அங்கலாய்த்தார் யமுனா.
பின்னே இருக்காதா தந்தையும் மகனும் காலையில் ஒரு காபி கொடுத்து அவரை எழுப்பி விட்டுவிட்டு அதன் பின்பு பாவம் யமுனாவுக்கு உட்கார கூட நேரம் இருக்காது.
அந்த அளவுக்கு தந்தையும் மகனும் எதற்கெடுத்தாலும் அவர் தான் வேண்டும். சக்கரவர்த்திக்கு அவர் அணியும் ஆடையில் இருந்து அவர் சாப்பிட்டு முடித்து ஆபீஸ் செல்லும் வரை அனைத்தும் அவர்தான் பார்க்க வேண்டும். தந்தைக்கு குறைந்தவனா மகன் அவன் பங்குங்குக்கும் அவரை படுத்தி எடுப்பான்.
“அம்மா இன்னைக்கு என்ன ட்ரெஸ்..? அம்மா வாட்ச் எங்க..? அம்மா என் ஷூ காணோம்..? அம்மா டை கட்டிவிடு.. அம்மாஆஆ..” என்று அவன் அடுத்த வார்த்தை சொல்வதற்குள் அவன் கையில் போனை கொடுத்தார் யமுனா. “தங்க்யூ ம்மா..” என புன்னகையுடன் அவரது கன்னத்தில் முத்தமிட்டான். அவனுக்கு அவன் அம்மா என்றால் உயிர்.
அவர் இல்லாமல் ஒருநாள் கூட இருக்க மாட்டான். இப்படி இருவருமே ஆபீஸ் கிளம்பும் வரை அவரை பாடாய்ப் படுத்தி விடுவார்கள். அதன் பின்பாவது ஓய்வு கிடைக்குமா..? அவர்களுக்குக்கு மதிய சாப்பாடு இவர்தான் சமைத்துக் கொண்டு ஆபீஸில் கொண்டு போய் கொடுக்க வேண்டும்.
அதிலும் மகனுக்கு இவர்தான் ஊட்டியே விட வேண்டும். இல்லை என்றால் அவன் அன்றைய நாள் முழுவதும் சாப்பிடவே மாட்டான்.
அப்படி இருக்கும் போது ஒரு காபி போட்டுக் கொடுப்பதை இவர்கள் இருவரும் பெருமையாக பேசுவதை பார்க்கும் போது அவருக்கு கோபம் வருவது இயல்பு தானே. இப்படிப்பட்ட இந்த அழகான குடும்பத்தில் அவர்கள் எஞ்சான்றும் எதிர்பார்க்காத அந்த நாளும் வந்து சேர்ந்தது.
இந்தக் குருவிக் கூட்டை மொத்தமாக களைத்துப் போட என்றே அந்த சூறாவளி காற்றும் வந்தது.
இன்று டிசம்பர் 5 2022 யமுனாவின் பிறந்தநாள். தந்தையும் மகனும் அவருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் ஆக ஒரு ஹோட்டலில் பர்த்டே பார்ட்டிக்கு அரேஞ்ச் பண்ணி இருந்தார்கள் அவருக்கு தெரியாமல்.
அன்று மாலை அவர்கள் பிஸ்னஸ் சார்பாகவும், உறவினர்கள் சார்பாகவும் அந்த ஹோட்டல் முழுவதும், பணக்கார வர்க்கமும் அதிகமாக இருந்தது. பிறந்தநாள் பார்ட்டி அழகாக சென்று கொண்டிருந்தது. அப்போது பிஸ்னஸ் விடையமாக மித்ரனுக்கு ஒரு கால் வந்தது.
“அம்மா இப்போ வந்துடுறேன்..”
“சரிப்பா போய்ட்டு வா..” என்க. அவனும் போனை காதில் வைத்து பேசிக்கொண்டே வர, அப்போது கையில் கூல் ட்ரிங்க்ஸ் கொண்டு வந்த வெயிட்டர் தெரியாத்தனமாக எதிரில் வந்து கொண்டிருந்த மித்ரனை பார்க்காமல் அவன் மேல் கொட்டி விட்டார். ”
ஓ.. சாரி சார்.. தெரியாம சாரி சார்.. சாரி..” என்று மீண்டும் மீண்டும் அவனிடம் மன்னிப்பு வேண்டினான் எங்கே தன் வேலை பறிபோய் விடுமோ என்று. ஆனால் மித்திரனும் “பார்த்து வரக்கூடாதா..? சரி இட்ஸ் ஓகே.. ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு..?”
“வாங்க சார் நான் கூட்டிட்டு போறேன்..” என்று மித்ரனை கையோடு கூட்டிச் சென்றான் அவன். இங்கே சக்கரவர்த்தியும் யமுனாவும் வந்திருக்கும் விருந்தாளிகளை மகிழ்வுடன் வரவேற்றுக் கொண்டிருந்தார்கள்.
அங்கே மித்ரனோ தன் கோட்டில் கொட்டி இருக்கும் ஜூசை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே வர சார் இந்த ரூம் என்று அந்த வெய்ட்டர் கை காட்ட அவனோ ஓகே என்று தலை அசைத்தவன் அந்த அறைக்குள் நுழைந்து வாஷ் ரூம் உள்ளே சென்று தன் கோர்ட்டை சுத்தம் செய்து வெளிய வர அப்போது அந்த அறையில் ஒரு பெண் நிற்க மிகவும் சிரம பட்டவளாக தன் துப்பட்டாவை நன்கு சுத்திக் கொண்டு இருந்தாள்.
வெளியே வந்தவனோ தன் முன்னே கவனிக்காமல் கீழே தண்ணீர் கொட்டி இருப்பதை பார்க்காதவன், அதில் காலை வைக்கவும் வலுக்கி விட பிடி மானம் இன்றி எதிரே இருந்த ஒரு பெண்ணின் மீது விழுந்தான்.
அவன் விழுந்த வேகத்தில் அவனுடைய வலது கை அந்த பெண்ணின் மார்பில் அழுத்தமா பதிய அந்த பெண்ணோ “ஆஆஆ..” என்று கத்தினாள்.
அந்த சத்தத்தில் திடுக்கிட்டு தலை நிமிர்ந்தவன் எதிரில் இருந்த பெண்ணை கண்டு அதிர்ச்சியாக “சாரி சாரிங்க..” என்ற மித்ரன் சட்டென அந்தப் பெண்ணை விட்டு எழுந்து கொள்ள, “ஹவ் டேர் யூ.. ச்சீ இதுக்குன்னே வருவிங்களா மரியாதையா வெளிய போயிடு..” என்று சத்தமாக கத்தினாள். அவள் அப்படி சொன்னதில் அவனுக்கோ கோபம் வர “ஹே சாரி சொல்றேன்ல்ல தெரியாம தான் பட்டுச்சி ஏன் கத்துற இடியட்..” என்று கேட்க அவளுக்கோ யாரோ ஒரு ஆடவன் தன்னை தவறாக தொட்டதை தாங்க முடியாமல்
“ப்ளீஸ் யாரவது வாங்க.. காப்பாத்துங்க காப்பாத்துங்க..” என்று கத்தினாள்.
இவளின் சத்தம் கேட்டு அங்கு அனைவரும் விரைந்து வந்தார்கள். மித்ரனுக்கோ அவள் மேல் கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.
” ப்ளீஸ் காப்பாத்துங்க இவன் என்கிட்ட தப்பா நடந்துக்க பார்க்குறான்..” என்று அனைவருக்கும் முன்னிலையில் மித்ரன் மீது பழியைப் போட்டாள் அவள்.
அதைக் கேட்ட அனைவரும் மித்திரனையே பார்க்க மித்ரனோ யாரையும் கவனிக்காமல் தன் தாய் தந்தையை பார்த்தான்.
அவர்களோ இவனையும் அந்த பெண்ணையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்கள். கூட்டத்திலிருந்து ஒருவர் அந்தப் பெண்ணிடம் என்ன ஆனது என்று கேட்க அவளும் “நான் ட்ரெஸ் சரி பண்ணிட்டு இருக்கும் போது இவன் உள்ள வந்து என்கிட்ட தப்பா நடக்க ட்ரை பண்றான்..” என்றும் சொன்னாள். அங்கு இருந்தவர்களும் இதைக் கேட்டதும் தங்களுக்குள் கிசுகிசுக்க தொடங்கினார்கள்.
மித்ரன் தன் தாய் தந்தையிடம் வந்து
“அம்மா அவ பொய் சொல்றா.. நான் தெரியாம தான் வந்தேன்.. அதுக்கு சாரி கூட சொல்லிட்டேன்ம்மா ஆனா அவ வேணும்னே என்னை மாட்டி விட பார்க்குறா..” என்று தன்னை தன் தாய் தந்தை நம்பினால் போதும் என்று கூறினான்.
யமுனாவும் தன் மகனைப் பார்த்துக் கொண்டிருக்கையில் பக்கத்தில் சிலர் பேசுவது அவர் காதிற்க்கு கேட்டது.
“நல்ல பெரிய இடத்து பையன்ங்கிற திமிருல தப்பு பண்ண வேண்டியது கையும் காலுமா மாட்டுனதும் நடிக்க வேண்டியது..” என்று ஒவ்வொருத்தரும் பேசிக் கொண்டிருக்க யமுனாவிற்கோ நெஞ்சம் படப்படக்க மயங்கி விழப் போனவரை பக்கத்துல் இருந்த சக்கரவர்த்தி யமுனா விழுவதற்குள் தாங்கிக் கொண்டார்.
பின் மித்ரனைப் பார்த்து “இனிமேல் எங்க மூஞ்சிலையே முழிக்காத..” என்றும் சொன்னார்.
அந்த ஒரு வார்த்தையில் ஸ்தம்பித்துப் போய் நின்றான் மித்ரன்.