கள்வன்-21
வெண்மதியை தன்னுடைய அறையில் விட்டு வந்தவன் அவளுக்கான உணவை தயாரிப்பதற்கு சென்று விட்டான்.
அவளோ சிறிது நேரம் அசதியில் உறங்கினாள். பின் சிறிது நேரம் கழித்து எழுந்தவளின் முன்னால் ஒரு சூட்கேசை வைத்தவன் “இதுல உன் ட்ரெஸ் இருக்கு இதை மாத்திட்டு வா சாப்பிட போகலாம்..” என்றான்.
அவளோ “இல்ல எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு… நான் சாப்பிட்டு வந்து அப்புறமா ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கிறேன்..” என்று கூற அவனும் “சரி ஓகே ஒன்னும் பிரச்சனை இல்ல.. உனக்கு சிரமமாக இருந்தா நானே மாத்தி விடுறேன்..” என்று அவள் தோள் மேல் கை வைக்க பதறியவள் சட்டென அவனிடம் இருந்து விலகி நின்று கொண்டு “இல்ல நான் இப்பவே மாத்திட்டு வரேன் நீங்க போங்க..” என்று சொல்லிவிட்டு அந்த சூட்கேசில் அவளுக்கான இரவு உடைய எடுத்துக்கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள்.
அவள் செல்வதைக் கண்டு தன் இதழ்களில் புன்னகை மலர அந்த அறையை விட்டு வெளியே வந்தான். அவளோ ஆடையை மாற்றிக் கொண்டு அவன் பின்னாலையே வந்தவள் லியாவைத் தேடினாள்.
அவள் தேடுவதை பார்த்தவன் “என்ன தேடுற..?” என்று கேட்க “இல்ல லியாவை நான் ரொம்ப நேரமா பாக்கவே இல்ல எங்க இருக்கா..?” என்று அவனிடம் கேட்க “அதுவா அது நந்தா கூட இருக்கு நீ வந்து சாப்பிடு..” என்று சொல்ல “இல்ல லியாவையும் சாப்பிட கூப்பிடுங்க அவ இல்லாமல் நான் சாப்பிட்டது கிடையாது..”
சிறிது நேரம் அவளை அமைதியாக பார்த்தவன் நந்தாவிற்கு கால் செய்து லியாவை கொண்டு வருமாறு கூறினான். லியா வந்ததும் மூவரும் சாப்பிட அமர வெண்மதியோ நந்தாவை பார்த்து “நீங்களும் உட்காருங்க அண்ணா சாப்பிடலாம்..” என்று சொன்னாள். நந்தாவோ மித்ரனை ஒரு நிமிடம் பார்த்தவன் வெண்மதி இடம் புன்னகை முகமாக “இல்லமா வேண்டாம் நான் சாப்பிட்டேன் நீங்க சாப்பிடுங்க..” என்று கூறிவிட்டு “சரி சார் நான் காலையில வந்து உங்களை பார்க்கிறேன் சார்..” என்று விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
அதன் பிறகு மூவரும் தங்கள் உணவை முடித்துவிட்டு தங்கள் அறைக்கு சென்றனர். உள்ளே வந்தவன் குளிப்பதற்காக குளியலறைக்குள் சென்றுவிட்டான். இவளோ எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள். அதன் பிறகு அவன் வந்ததும் கட்டிலில் சென்று படுத்துக் கொள்ள இவளோ அங்கேயே நின்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தவன் “ஏன் அங்கேயே நிற்கிற தூங்கலையா..?” என்று கேட்க “தூங்கனும் ஆனால் எங்க தூங்குறது..?” என்று கேட்டாள். “இது என்ன கேள்வி நீ என்ன லூசாடி இதுக்கு முன்ன எங்க படுத்த..?”
“ம்ம் பெட்ல தான்..” அப்பறம் என்ன இப்பவும் வந்து படு..” என்று சொல்ல “இல்ல உங்க பக்கத்துல எப்படி தூங்குறது..” என்று இழுக்க அவனோ ஒரு முறை அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் “உன் வயித்துல இருக்கிறது என்னோட குழந்தை. என் பக்கத்துல படுக்குறதுக்கு உனக்கு அவ்ளோ யோசனையா..? நீயா வந்து படுக்குறியா இல்ல நானே வந்து உன்னை தூக்கிட்டு வந்து படுக்க வைக்கவா..” என்று கட்டிலை விட்டு எழப்போக அவன் சொல்வதை செய்வான் என்று அவளுக்குத்தான் தெரியுமே உடனே வந்து பெட்டில் ஒரு ஓரமாக படுத்துக்கொண்டாள்.
அவள் பெட்டில் வந்து படுத்ததும் இவனும் அவள் அருகில் உருண்டு வந்து அவளை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான். அவளுக்கோ மூச்சே நின்று போனது. அவன் முகம் அவளது பின்னங்கழுத்தில் அழுத்தமாக பதிந்து இருந்தது.
அவனது ஒரு கை அவளுடைய வயிற்றை இதமாக தடவியவாறு இருந்தது. “இங்கு பாரு இனிமே டெய்லி இப்படி தான்.. எனக்கு என் குழந்தை கூட இருக்கணும் நீ எவ்வளவுதான் என்ன விட்டு விலகி விலகி போனாலும் நான் வந்துகிட்டு தான் இருப்பேன்..” என்று கூறியவன் அவளை இறுக்கி அணைத்தவாறு தூங்கிப் போனான்.
அவளும் அவனுடைய அணைப்பில் திகைத்தவள் பின் சிறிது நேரத்தில் அவளும் தூங்கிப் போனாள். இப்படியே இரண்டு நாட்களாக அவன் நேரத்திற்கு அவளுக்கு சாப்பாடு கொடுப்பது. அவ்வப்போது அவளைப் பிடித்து இழுத்து அவள் வயிற்றில் முத்தம் பதிப்பது. இரவில் அவளை அணைத்த படியே துயில் கொள்வது இப்படியே கடந்தன. அடுத்த நாள் அலுவலகத்தில் அவனுடைய அறைக்குள் வந்தவள் “சார் சார் நான் கொஞ்சம் வெளியே போகணும் கொஞ்ச நேரத்துல திரும்பி வந்துடுவேன் போகட்டுமா..?” என்று அவனிடம் அனுமதி கேட்க அவனும் புருவங்கள் இடுங்க அவளைப் பார்த்தவன் “எங்க போகணும்..?” என்று கேட்டான்.
“அது வந்து எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு அத முடிச்சிட்டு நான் உடனே வந்துடுறேன் ப்ளீஸ் அனுமதி கொடுங்க..” என்று கேட்க அவனும் “முடியாது..” என்று மறுத்து விட்டான். அவளுக்கோ சட்டென்று கோபம் வர “சார் நான் தான் சொல்றேன்ல்ல ஒரு வேலை இருக்குன்னு அதான் கேட்கிறேன்..” என்று சொல்ல, அவனும் கூலாக “எவ்வளவு பெரிய எமர்ஜென்சினாலும் எங்கன்னு சொல்லு நானே கூட்டிட்டு போறேன்..” என்றான்.
“நீங்க ஒன்னும் வர வேண்டாம் நானே போயிக்குவேன் எனக்கு வழி தெரியும்..” என்றாள். இருக்கையை விட்டு எழுந்தவன் அவள் அருகில் வந்து “நீ தனியா இருந்தா நீ எங்க வேணாலும் போலாம் வரலாம் எனக்கு எந்த கவலையும் கிடையாது.. ஆனால் இப்போ உன் வயித்துக்குள்ள இருக்குறது என் குழந்தை.. அதுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது என் பொறுப்பு.. அதனால உன்னை அப்படியே போக என்னால விட முடியாது.. போ போய் வேலையை பாரு.. இல்ல ரெஸ்ட் எடு..” என்று சொல்லிவிட்டு அவனுடைய வேலையை பார்க்கத் தொடங்கினான்.
அவளோ அவனை தீயாக முறைத்து விட்டு அவளுடைய கேபினுக்குள் வந்தவள் எப்படியாவது இங்கிருந்து சென்றாக வேண்டுமே என்று யோசிக்க அவனுக்கு தெரியாமல் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். அதேபோல சிறிது நேரம் கழித்து அவனுடைய அறையை எட்டிப் பார்த்தவள் அவன் வேலையில் மும்முரமாக இருக்கவும் தன்னுடைய கைப்பையை எடுத்தவள் அவளுடைய கேபினை விட்டு வெளியே வந்து ஆட்டோவில் ஏறிச் சென்றாள்.
இன்று காலை நந்தா அவளை பார்க்க வந்த போது அவள் மித்ரனின் அப்பா அம்மாவைப் பற்றி கேட்டதும் அவர்கள் இருக்கும் இடத்தை அவளிடம் கூறினான்.
உடனே அவர்களைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தவள் மித்ரனிடம் அதை சொன்னால் அவன் கண்டிப்பாக அனுமதிக்க மாட்டான் என்று தனக்கு வேலை இருக்கிறது என்று அவனிடம் அனுமதி கேட்டாள். அவனும் மறுத்துவிட்டான். அதனால் அவனிடம் சொல்லாமலே அவர்களை சந்திப்பதற்கு புறப்பட்டு விட்டாள். ஆட்டோ நேராக மித்ரனின் அப்பா அம்மா இருக்கும் வீட்டிற்கு வந்து நின்றது. பெரிய போர்ட் “சக்கரவர்த்தி இல்லம்” என்று அந்த வீட்டு வாசலில் நின்றவள் அந்த வீட்டை பார்க்க மலைத்துப் போனாள். இவ்வளவு பெரிய வீடா என்று ஆச்சரியப்பட்டவள் வாட்ச்மேனிடம் அவர்களை பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்க அவரும் “இருங்கம்மா நான் போய் கேட்டுட்டு வரேன்..” என்று சொன்னவர் உள்ளே போய் அனுமதி கேட்டவர் அவளுக்குப் பார்ப்பதற்கு அனுமதி கொடுக்கவும் அவளை உள்ளே அனுப்பினார்.
நடுநாயகமாக அமர்ந்திருந்த சிவச்சக்கரவர்த்தியை பார்த்து “சார் நான் உள்ள வரலாமா..?” என்று கேட்டாள். பேப்பர் படித்துக் கொண்டிருந்தவர் வெளியே குரல் கேட்கவும் நிமிர்ந்து பார்த்தார். அவளைப் பார்த்ததும் அவருக்கு அப்படி ஒரு கோபம் வந்துவிட்டது. இவளா எதற்காக இங்கே வந்தாள் என்று நினைத்தவர் “நீயா நீ எதுக்காக இங்க வந்த..?” கோபமாக கேட்டார்.
“ஒரு உண்மையை சொல்லத்தான் வந்துருக்கேன் சார் தயவு செய்து நான் சொல்றத கேளுங்க அதுக்கு அப்புறம் நானே இங்க இருந்து போயிடுவேன் ப்ளீஸ் சார்..” என்று கெஞ்சினாள்.
“என்ன சொல்லப் போற உன்னால என் குடும்பம் என்ன நிலைமைல இருக்குன்னு பார்த்தியா..? இதுக்கப்புறம் நீ என்ன உண்மையை சொல்ல போற..” என்று கேட்டார்.
அதற்கு அவளும் “சார் ப்ளீஸ் அண்ணிக்கு நடந்த பிரச்சனைக்கு நான் தான் காரணம் மித்ரன் சார் மேல் எந்த தப்பும் இல்லை ப்ளீஸ் அவரை நம்புங்க சார்..” என்று அவர் காலைப் பிடித்துக் கெஞ்சினாள்.