- கள்வன்-26
கழுத்தில் தாலி இல்லாமல் அவனுடன் இப்படி ஒன்றாகக் கலப்பது அவளுக்கு உறுத்த வில்லை. அவனுமே ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்தி வந்து அவளிடம் முதலில் வன்மையாக நடந்து கொண்டும் இப்பொழுது அவளை புரிந்து கொண்டு அவள் சம்மதத்தோடு தான் இணைந்தான். அவனுக்கும் தாலி என்பது ஒரு விடயமாகத் தெரியவில்லை. ஏனெனில் இருவருக்கும் தங்கள் இருவரின் அன்புக்கு மத்தியில் அந்த தாலியின் மதிப்பு குறைந்ததாகவே எண்ணினார்களோ என்னவோ..?
மறுநாள் காலையில் மித்ரனே முதலில் எழுந்தவன் தன் நெஞ்சில் குருவிக்குஞ்சு போல் ஒட்டிக் கிடந்தவளின் நெற்றியில் ஒரு முத்தமிட்டவன் அவளை மெதுவாக படுக்கையில் கிடத்திவிட்டு எழுந்து குளியல் அறைக்குச் சென்றான்.
குளியலறைக்கு சென்று குளித்து முடித்துவிட்டு வெளியே வந்தவன் அப்போதும் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளாமல் இருப்பவளை பார்த்தவளுக்கோ இதழில் சிறு சிரிப்பு உண்டாக இரு பக்கமும் தலையை அசைத்து விட்டு அவள் அருகில் வந்தவன் அவளுக்கு போர்வையை போர்த்திவிட்டு அலுவலகம் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தான்.
அதே நேரம் இன்று காலை சீக்கிரமாகவே நந்தா மித்ரனின் வீட்டிற்கு வந்திருந்தான்.
அப்போது லியா அந்த வீட்டின் ஹாலில் உள்ள ஒரு சோபாவில் தனியாக அமர்ந்திருந்தது. வீட்டிற்குள் வந்தவன் நேராக லியாவிடம் வந்து “ஹாய் லியா குட் மார்னிங்.. என்ன நீ மட்டும் இங்க தனியா இருக்க வெண்மதி எங்க..?” என்று கேட்க லியாவோ அவனிடம் “என்னைக்கு உங்க பாஸ் மதி வாழ்க்கையில வந்தாரோ.. அன்னையிலிருந்து எங்க ரெண்டு பேத்தையும் பிரிச்சிட்டாரு.. எப்ப பாரு அவளை தனியாவே தூக்கிட்டு போய்டுறாரு.. நான் இங்க தனியா இருக்கேன்..” என்று அவனிடம் குறை சொல்லிக் கொண்டிருந்தது.
அதைக் கேட்டவனுக்கோ சிரிப்பு வந்தது.
“சரி சரி விடு லியா அதான் நான் உன்னை பார்த்துக்கிறேன்ல என் கூட இருந்துக்கோ மதி வந்ததுக்கு அப்புறம் அவ கூட இரு..” என்க. லியாவோ அவனை ஒரு முறை முறைத்து விட்டு “யாரு நீ என்ன பாத்துக்குவியா..? நேத்து உன் கூட என்ன கூட்டிட்டு போனியே அங்க ரோட்டில ஒரு பிகர் உன்னை பார்த்து சிரிச்சதும் என்னை அம்போன்னு விட்டுட்டு போயிட்டல்ல இப்ப வந்து நான் இருக்கேன் நான் பாத்துக்குறேன்னு டயலாக் வேற சொல்ற..” என்க.
அசடு வழியே நின்று கொண்டிருந்தான் நந்தா.
“போடா போடா எனக்கு என்னைய பாத்துக்க தெரியும்.. சரி நேத்து அங்க என்ன கழட்டி விட்டுட்டு அந்த ஃபிகர் பின்னாடி போனியே ஒர்க்கோட் ஆச்சா..?” என்று கேட்டது. அதற்கு அவனோ “அதை ஏன் கேக்குற லியா..” என்று முகத்தை தொங்கப்போட்டான்.
“சரி விடு கேக்கல போ..” என்று முகத்தை திருப்பிக் கொண்டது.
“ஒரு பேச்சுக்கு கேட்காதன்னு சொன்னா அப்படியே விட்டுடுவியா..?” என்று இவன் கேட்க.
“பின்ன அதான் கேட்டேன் நீ தான் கேட்காத போ அப்படின்னு சொன்ன.. எனக்கு எதுக்கு ஊர் வம்பு போடா..”
“சரி சரி கோச்சிக்காத சொல்றேன்.. அந்த பொண்ணுக்கு எத்து பள்ளு அது எப்பவுமே திறந்த மேனிக்கு தான் இருக்கும்போல இது தெரியாம அது என்ன பாத்து தான் சிரிக்குதுன்னு நெனச்சு நானும் பக்கத்தில போய்ட்டேன்..”
“அப்பறம் என்ன ஆச்சு..?” என்று லியா ஆர்வமாக கேட்க.
“அவ பக்கத்துல மலமாடு மாதிரி
அவ புருஷன் நிக்கிறான்.. எடுத்தேன் பாரு ஓட்டம் நிக்கவே இல்லையே..” என்றான் நந்தா.
அதை கேட்டு லியா காரி துப்ப “சரி விடு அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..” என்று இவர்கள் இருவரும் அந்த பெண்ணை பற்றி பேசிக் கொண்டிருக்கையில் மாடியிலிருந்து மித்ரன் வரும் சத்தம் கேட்டது. அத்தோடு இருவரும் தங்கள் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தார்கள்.
கீழே வந்த மித்ரனும் நந்தாவிடம் “நந்தா ஸ்டடி ரூமுக்கு வா..” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று அந்த அறைக்குள் நுழைந்து கொண்டான்.
“லியா கொஞ்சம் வெயிட் பண்ணு நான் வந்துடுறேன்..” என்று சொல்லிவிட்டு மித்திரனின் பின்னாடியே போனான்.
அவன் உள்ளே வந்ததும் தன் மொபைலில் இருந்த வெண்மதியின் அக்கா நட்டாலியாவின் புகைப்படத்தை நந்தாவிடம் காட்டியவன் “இவளை பத்தி ஃபுல் டீடைல்ஸ் எனக்கு உடனே வேணும் இப்போ அவ எங்க இருக்கா என்ன பண்றான்னு தெரியனும்..” என்று கட்டளையிட்டான்.
வெண்மதி அவனிடம் அவளைப் பற்றி சொன்னதன் பின்பு நேற்று அந்த ஹோட்டலுக்கு போன் செய்து அவர்கள் சென்ற நேரம் குறித்து சிசிடிவி புட்டேஜ் அனுப்பி வைக்குமாறு கேட்டு இருந்தான். அவர்களும் அனுப்பி இருந்தார்கள். அதில் உள்ள நட்டாலியாவின் புகைப்படத்தை எடுத்து நந்தாவிடம் காட்டினான்.
“ஓகே பாஸ் நான் எல்லாத் தகவலும் கலெக்ட் பண்ணிட்டு உங்களுக்கு உடனே சொல்றேன்..” என்றவன் அங்கிருந்து சென்று விட்டான். வெண்மதியோ நேரம் கழித்து எழுந்தவள் குளியலறை சென்று குளித்துவிட்டு வந்தவள் ஒரு சிகப்பு நிற புடவை எடுத்து கட்டிக் கொண்டாள்.
கீழே இறங்கி வந்தவள் அங்கு சோபாவில் மித்ரன் அமர்ந்திருக்கவும் அவனிடம் சென்று “சார் நான் கோவிலுக்கு போயிட்டு வரட்டுமா..?” என்று கேட்டாள். அவனோ அவளை சேலையில் பார்த்ததும் தடுமாறியவன் அதற்கான நேரம் இப்பொழுது இல்லை என்று தன்னை சுதாரித்துக் கொண்டு அவள் அருகில் சென்று அவளது கையைப் பிடித்து தன் அருகில் அமர்த்தியவன் “இந்த மாதிரி நேரத்துல நீ ரொம்ப ரெஸ்ட் எடுக்கணும்.. அத விட்டுட்டு சும்மா அங்க போறேன் இங்க போறேன்னு சொன்னா என்ன அர்த்தம்..?” என்று மென்மையாகவே கேட்டான்.
அதற்கு அவளோ “இல்ல சார் எவ்வளவு நேரம் தான் நான் வீட்டுக்குள்ளேயே இருக்கிறது.. எனக்கும் கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கு.. ஆபீஸுக்கும் வர வேண்டாம்னு சொல்லிட்டீங்க இவ்வளவு பெரிய வீட்டில நான் மட்டும் எப்படி இருக்கிறது.. பக்கத்தில இருக்கிற கோவிலுக்கு மட்டும் போயிட்டு வந்துடறேன்..” என்று செல்லம் கொஞ்ச அவனும் அவள் சொல்வதும் சரி என்று பட கோவிலுக்கு தானே போய்ட்டு வரட்டும் என்று நினைத்தவன் “சரி போயிட்டு வா பார்த்து பத்திரம்..” என்று சொன்னவன் தன்னுடைய கையை எடுத்து அவளுடைய வயிற்றைத் தடவினான்.
அவளோ மென்மையாக புன்னகைத்தவள் “சரி நான் கவனமாக போய்ட்டு வரேன் என்கூட தான் லீயாவ கூட்டிட்டு போறேனே..” என்று அவள் சொல்ல. “யாரு இது உனக்கு பாடிகாடா..?” என்று கேட்க. பக்கத்தில் இருந்த லியாவோ இருவரையும் மாறி மாறிப் பார்த்து மனதிற்குள் “அடேய் நான் என்னடா பண்ண அவ தான டா சொன்னா அதுக்கு ஏன்டா என்ன உருட்டுற..” என்று புலம்பிக்கொண்டது.
“சரி நீ போயிட்டு வா எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு என்னால அவாய்ட் பண்ண முடியாது.. பாடிகார்ட் ஸ அனுப்பி வைக்கிறேன்” என்று சொல்ல
“இல்ல வேண்டாம் ப்ளீஸ் நான் மட்டும் பத்திரமா போயிட்டு வந்துடறேன்.. அவங்க எல்லாம் வேண்டாம்.. அப்புறம் எனக்கு ஒரு மாதிரியா இருக்கும் பக்கத்துல இருக்குற கோவிலுக்கு தான்.. போயிட்டு டக்குனு வந்துருவேன்..” என்று சொல்ல அவனும் சரி என்று ஒத்துக் கொண்டவன் அதன் பின் அவன் அலுவலகம் சென்று விட்டான்.
இவளோ அவன் சென்ற பிறகு லியாவை தன்னுடன் அழைத்துக் கொண்டு அவள் சொன்னது போலவே பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டவள் ஒரு ஆட்டோ பிடித்து மித்ரனின் அப்பா வீட்டை நோக்கிச் சென்றாள்.
எப்படியாவது அவரை பார்த்து உண்மையை சொல்லி அவர்கள் குடும்பத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்.
மித்ரனின் அப்பா வீட்டுக்கு வந்தவள் வாட்ச்மேன் இடம் அனுமதி கேட்க அவரோ மித்ரன் உதைத்த உதையில் நடுங்கிப் போனவர் அவளிடம் பணிவாக “இங்கே பாருமா சார் உன்னை எப்படியும் உள்ள அனுமதிக்க மாட்டார்.. தயவு செஞ்சு இங்க இருந்து போயிரு..” என்று சொல்ல. இவளோ “அண்ணா ப்ளீஸ் எப்படியாவது நான் சார பாத்து ஆகணும்.. ப்ளீஸ் அவர்கிட்ட கேளுங்க..” என்க. அவரும் முடிந்த அளவுக்கு அவளிடம் சொல்லிப் பார்த்தார். இவள் கேட்கவே இல்லை. சரி என்று ஒரு கட்டத்தில் சிவ சக்கரவர்த்திக்கு போன் செய்து இவள் வந்திருக்கும் விடயத்தை கூற அவரும் எக்காரணத்தை கொண்டும் அவள் உள்ள வரக்கூடாது என்று சொல்லி வைத்து விட்டார்.
அவளோ அந்த வாசலிலேயே நின்று கொண்ட இருந்தாள்.
ஆனால் சிவ சக்கரவர்த்தி அவளை உள்ளே அழைக்கவில்லை. அவர் ஆபீஸ் போகும் போதும் திரும்ப வீடு வரும் வரைக்கும் அவள் அங்கே தான் நின்று கொண்டிருந்தாள். அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு போனாரே தவிர அவளை உள்ளே அழைக்கவில்லை. இப்படியே ஒரு மூன்று நாட்கள் அவள் தினமும் மித்திரனிடம் ஏதாவது ஒரு பொய் சொல்லிவிட்டு இங்கே வந்து நின்று விடுவாள்.
சிவ சக்கரவர்த்தியும் அவள் நிற்பதை சட்டை செய்யாமல் அவர் வேலையை பார்ப்பார்.
ஆனால் லியாதான் வெண்மதி இடம் “இதே மாதிரி இங்க வந்து எத்தனை நாள் காத்து கிடக்க போற அவர்தான் உன்னை உள்ள கூப்பிடவே மாட்டேங்குறாரு..” என்று சொல்ல இவளோ “அது இல்ல லியா இது என்னோட தப்பு.. எனக்கே தெரியாம ஒரு மிகப்பெரிய பாவத்தை நான் பண்ணி இருக்கேன் நான் அதை சரி பண்ணியே ஆகணும்.. இல்லனா அந்த கடவுளே என்னை மன்னிக்க மாட்டார்.. நீ எதுவும் கவலைப்படாத எனக்கு எதுவும் பிரச்சனையும் இல்லை.. நான் பாத்துக்குறேன் ஆனா இந்த விஷயம் மித்ரன் சார்க்கு தெரிய கூடாது.. நீ எக்காரணத்தைக் கொண்டும் சொல்ல கூடாது..” என்க.
“ஆமாம் அந்த ராட்சசன் என்கிட்ட கேட்டுட்டு தான் மறு வேலை பார்ப்பான்.. எப்படா என்னை பொரிச்சி சாப்பிடலாம்னு பார்த்துக்கிட்டே இருக்கான்.. இப்ப இதுக்கும் நான் உன் கூட வந்திருக்கேன்னு தெரிஞ்சது அவ்வளவுதான் கண்டிப்பா என் சோலி முடிஞ்சு.. இதுதானே உனக்கு வேணும்..” என்று பாவமாக சொல்ல. லியா பேசுவது அவளுக்கு சிரிப்பை உண்டாக்க “சரி சரி விடு அவர் அப்படி எல்லாம் பண்ண மாட்டாரு.. அவரு ரொம்ப நல்லவரு..” என்றாள் மதி.
“ஓஓஓ ராட்சசன் பதவியிலிருந்து அவர் எப்ப நல்லவன் பதவிக்கு மாறினாரு..?”என்று கேட்க. வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டவள் “அது அப்படித்தான் உனக்கு தெரியாது..” என்று சொன்னவளுக்கோ தலை சுற்ற ஆரம்பித்தது.
அந்த நேரம் பார்த்து சிவ சக்கரவர்த்தியின் கார் வீட்டிற்குள் உள்ளே வரவும் இவள் மயங்கி விழவும் சரியாக இருந்தது. உடனே காரை விட்டு இறங்கியவர் காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவள் முகத்தில் தெளிக்க அவளோ மெதுவாக தன் கண்களை விழித்தவள் எழுந்து நின்று கொண்டாள்.
சிவ சக்கரவர்த்தி அவளைப் பார்த்தவர் “உள்ள வா..” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார். அவளுக்கும் மிகுந்த சந்தோஷம். அவர் பின்னாடியே உள்ளே சென்றாள்.
அவளை அந்த ஹாலில் இருக்கும் சோபாவில் உட்கார சொல்லிவிட்டு “உனக்கு என்னதான் பிரச்சனை..? உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா..? ஏன் திரும்பத் திரும்ப என் கண்ணு முன்னாடி வந்து இப்படி உயிரை வாங்குற..?” என்று திட்ட ஆரம்பித்தார்.
இவளோ எழுந்தவள் சட்டென்று அவர் காலை பிடித்துக் கொண்டு “சார் ப்ளீஸ் ஒரு ரெண்டு நிமிஷம் நான் சொல்றத காது கொடுத்து கேளுங்க.. அதுக்கப்புறம் நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்..” என்று கெஞ்ச. அவரோ “முதல்ல நீ எழுந்துரு அதுக்கப்புறம் நான் கேட்கிறேன்..” என்றார்.
சரி என்று ஒத்துக் கொண்டவள் அன்று நடந்த அனைத்து விடயங்களையும் ஒன்று விடாமல் அவரிடம் கூறினாள். அதைக் கேட்டு அவருக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை. தன் மகனின் மேல் தவறு இல்லை என்று புரிந்தாலும் தன் மனைவியின் இன்றைய நிலைக்கு இவர்கள்தான் காரணம் என்று நினைத்தவருக்கு அதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
“சரி சரி உங்க ரெண்டு பேர் மேலயும் தப்பு இல்ல நான் ஒத்துக்குறேன்.. இப்போ நான் என்ன பண்ணனும்னு நினைக்கிற..?” என்று கேட்டார். அதற்கு அவளோ “மித்ரன் சார் கூட நீங்க பேசணும்.. நீங்க பழைய மாதிரி சந்தோஷமா இருக்கணும்..” என்று சொன்னாள்.
அதற்கு அவரோ முடியாது என்று மறுத்துவிட்டார்.