கள்வன்-27
அவர் முடியாது என்று மறுக்கவும் இவளுக்கோ சங்கடமாக இருந்தது.
“ஏன் சார் நான் தான் அன்னைக்கு நடந்த எல்லா விஷயத்தையும் உங்க கிட்ட சொல்லிட்டேன.. சோ இதுல அவர் மேல எந்த தப்பும் இல்லை.. அப்படி இருந்தும் அவரு இத்தனை மாசமா எவ்வளவு கஷ்டப்பட்டுருக்காரு.. இனியாவது அவர் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறேன்.. ப்ளீஸ் தயவு செஞ்சு நான் சொல்றத கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. அப்புறம் அவங்க அம்மாவை நான் பார்க்கலாமா..?” என்று தயங்கி கேட்டாள் வெண்மதி.
“இல்ல முடியாது அவ இங்க இல்ல.. அந்த சம்பவத்துக்கு அப்புறம் அவளுக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சு.. ஒரு ரெண்டு மாசம் படுத்த படுக்கையாக இருந்தா.. அதுக்கப்புறம் அவளோட ட்ரீட்மென்ட்காக நான் வெளிநாடு அனுப்பி வச்சிட்டேன்.. இப்போ என் மக கூட தான் தங்கி இருக்கா.. நானும் அங்க தான் இருந்தேன்.. பிஸினஸ்க்காக அப்ப அப்ப வந்து போவேன்.. நீ சொன்னதை நான் யோசிச்சிப் பார்க்கிறேன்.. இப்போ நீ போகலாம்..” என்று சொன்னார்.
அவளும் அதை கேட்டு விட்டு தன்னுடைய வீட்டை நோக்கிச் செல்லத் தொடங்கினாள்.
இங்கு மித்ரனோ அவளுடைய அக்காவைப் பற்றி விசாரிக்கச் சொன்னதால் அவன் கவனம் அதிலே இருக்க இவள் என்ன செய்கிறாள் என்று பார்க்கவில்லை. அவ்வாறே அன்றைய நாள் கழிய மறுநாள் காலை எழுந்த மித்ரன் வெளியே வரவும் அவனுடைய வீட்டின் காலிங் பெல் அடித்தது.
யார் என்று போய் பார்க்க கதவை திறந்து பார்த்தான்.
பார்த்தவன் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தான்.
ஏனென்றால் அவன் முன்னால் நின்றது அவனுடைய அம்மா அப்பா அவனது தங்கை.
நேற்று வெண்மதி சிவ சக்கரவர்த்தியின் வீட்டிலிருந்து வெளியேறவும் அந்த நேரம் ஒரு கார் ஒன்று உள்ளே வந்தது. அவள் வெளியேறுவதை பார்த்துக் கொண்டிருந்த யமுனா உள்ளே வந்ததும் சிவ சக்கரவர்த்தியிடம் யார் என்று விசாரித்தார்.
அவரோ நடந்த அனைத்தையும் கூற “நான் தான் உங்ககிட்ட அன்னைக்கே சொன்னேனே என் புள்ள தப்பு பண்ணி இருக்க மாட்டான்.. நம்ம வளர்ப்பு அப்படி இருக்காதுன்னு.. ஆனா நீங்க என் மேல இருக்க பாசத்துல என் பிள்ளைய இப்படி தள்ளி வச்சிட்டீங்களே.. நான் எப்படி அவன் மூஞ்சில முழிப்பேன்.. என்ன நடந்தாலும் சரி நான் உடனே என் புள்ளையை பார்த்தாகணும்..” என்ற யமுனாவுக்கோ அங்கு ஒரு நொடி கூட நிற்க முடியவில்லை உடனே தன்னுடைய மகனை பார்க்க வேண்டும் என்று தோன்ற சிவ சக்கரவர்த்தி தான் மறுநாள் சென்று பார்க்கலாம் என்று சமாதானப்படுத்தினார்.
மறுநாள் காலை விடிவதற்கு முன் அவன் வீட்டு வாசலில் வந்து நின்றார்கள் முவரும். அவர்களை இங்கு எதிர்ப்பார்த்திராதவன் அந்த நொடி அவனுக்கு எப்படி உணர்கிறோம் என்று சொல்ல முடியவில்லை. அப்படியே சிலை போல் நிற்க அவனுடைய அன்னையோ முன்னால் வந்து அவனுடைய தோளை உலுக்க அப்போதே சுயம் வந்தவன் “அ..அ.அம்மா..” என்று அவனுக்கே கேட்காத குரலில் அழைத்தான்.
இதற்காகவே காத்திருந்தவர் போல தன் மகனை வாரியணைத்துக் கொண்டவர் அவன் தலையை தடவி விட்டு அவரும் கண்ணீர் வடித்தார். சிவ சக்கரவர்த்தியோ மித்ரன் முன்னாடி கை கூப்பி “என்னை மன்னிச்சிரு பா..” என்று சொல்ல அவனும் அவருடைய கையை பிடித்து கொண்டு அவரை அணைத்துக் கொண்டான்.
அதன் பிறகு அவனுடைய தங்கையைப் பார்த்தவன் அவளுடைய உச்சந்தலையில் கைவைத்து வருடியவாறு “எப்படி இருக்கடா..?” என்று கேட்டான்.
அவளோ தன் அண்ணனை அணைத்துக் கொண்டு “நான் நல்லா இருக்கேன் அண்ணா.. நீ செய்யாத தப்புக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க.. இதுக்கப்புறமாவது நம்ம எல்லாரும் ஒன்னா சந்தோஷமா இருக்கலாம்..” என்று சொல்ல ஆறுதலாக அவளை அணைத்துக் கொண்டான்.
மேலே இருந்து இறங்கி வந்த வெண்மதியோ கீழே இருந்தவர்களை பார்த்து இன்பமாக அதிருந்தாள்.
எப்படியோ அவன் அவன் குடும்பத்துடன் இணைந்து விட்டான் என்ற சந்தோஷத்துடன் கீழே இறங்கி வந்தவள் தயக்கத்தோடு நின்று கொண்டிருந்தாள்.
அவளின் அருகே வந்த மித்ரன் அவளை கைப்பிடித்து கூட்டி வந்து அவன் குடும்பத்துடன் அமர்ந்து கொண்டான்.
அவர்கள் அனைவருமே சந்தோஷமாக அன்றைய நாளை கழித்தார்கள்.
ஒன்றாக சாப்பிட்டார்கள். ஒன்றாக உட்கார்ந்து நிறைய கதைகள் பேசினார்கள்.
இந்த இடைப்பட்ட நாட்களின் பிரிவை இன்று ஒரே நாளில் பூர்த்தி செய்ய நினைத்தார்கள் போல, மித்ரனும் தன் குடும்பத்துடன் நெடுநாள் கழித்து மிக சந்தோஷமாக இருந்தான்.
இரவு அனைவரும் அவரவர்கள் அறைக்கு சென்று உறங்க சென்றார்கள்.
மறுநாள் காலை மித்ரன் எழுந்தவன் தன் அருகே வெண்மதியை தேடினான்.
அவளோ பக்கத்தில் இல்லை. ஒருவேளை பாத்ரூம் போயிருப்பாளோ என்று நினைத்தவன் அவளுக்காக காத்திருந்தான்.
நேரம் ஆனதே தவிர அவள் வரவில்லை.
‘என்ன இவ்வளவு நேரம் ஆகுது..?’ என்று நினைத்தவன் பாத்ரூம் அருகே சென்று கதவைத் தட்டினான். உள்ளிருந்து எந்த பதிலும் இல்லை. கதவை திறந்து பார்த்தவன் உள்ளே அவள் இல்லை என்றதும் “எங்க போனா..? ஒருவேளை கிழே போயிருப்பாளோ..?” என்று தனக்குள் கூறியவன் கீழே சென்றான்.
அங்கு யமுனா சிவசக்ரவர்த்தி அவனது தங்கை இவர்கள் மூவரும் தான் இருந்தார்கள்
வெண்மதியைக் காணவில்லை.
அப்போ கிச்சனுக்குள்ள இருப்பா என்று கிச்சனுக்குள் நுழைந்தான். அங்கும் அவள் இல்லை. பின்பு ஹாலுக்கு வந்தவன் தன் அன்னையிடம் “அம்மா வெண்மதியை பாத்தீங்களா..?” என்று கேட்டான்.
அவரும் “ஏம்பா அவ கீழே வரலையே..” என்றார்.
“இல்லம்மா ரூமிலையும் அவ இல்ல கீழ உங்க கூட இருப்பான்னு பார்த்தா உங்க கூடவும் இல்ல.. சரி கிச்சன்ல இருப்பான்னு பார்த்தா அங்கேயும் அவளை கானோம்.. அதான் உங்ககிட்ட கேட்டேன்..”
“அவளை ஏம்பா தேடுற..?” என்று சிவ சக்கரவர்த்தி கேட்டார்.
அவர் அப்படி கேட்டதும் அதிர்ச்சியாக அவரைப் பார்த்தவன் “என்னப்பா இப்படி கேக்குறீங்க நா கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு அவளை காணோம்னு பதறிக்கிட்டு இருக்கேன்.. நீங்க என்னடான்னா அவளை ஏன் கேக்குறன்னு கேட்குறிங்க..?”
அதற்கு அவரோ சற்று கோபத்துடன் “உனக்கு ஊர் உலகத்துல வேற பொண்ணே இல்லையா.. உன்னை எங்க கிட்ட இருந்து பிரிச்சதுக்கு காரணமே அவதான்.. அவளை போய் நீ கல்யாணம் பண்ணிக்க போறன்னு சொல்ற..” என்று தன் விருப்பமின்மையை தெரிவித்தார். அவனோ அவர் பதிலில் அதிர்ந்தவன் “அப்போ அவ இப்ப வீட்ல இல்லாததுக்கும் உங்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு அப்படித்தானே..?” என்று தன் அப்பாவைக் கேள்வியாகப் பார்த்தான்.
அதற்கு அவரோ எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் “ஆமா நான் தான் அவள போக சொன்னேன்.. இப்ப என்ன அதுக்கு..?” என்றார். அவர் அப்படி சொன்னதும் அங்கு உள்ள சோபாவில் பொத்தென்று அமர்ந்தான்.
பின்பு தன் இரு கைகளாலும் தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவன் ஒரு பெருமூச்சோடு “ஏன்பா இப்படி பண்ணீங்க..?” என்று கவலையாகக் கேட்டவன் “அவளை நான் விரும்புறேன் பா அவ வயித்துல என் குழந்தை வளருது அத உங்ககிட்ட சொல்லி அவளையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா..? ஆனால் என் ஆசையில மண்ண அள்ளி போட்டு அவளை இந்த வீட்டை விட்டு துரத்திட்டீங்களே..” என்று சோர்ந்து போய் அமர்ந்தான்.
சிவ சக்கரவர்த்திக்கோ அவர்களுடன் வெண்மதியும் இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை. தன் குடும்பம் இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்திற்கு அவள் தான் காரணம் என்று நினைத்தவருக்கு இப்போது அவளும் தன் கண்முன்னே இருக்க அவருக்கு அவள் மேல் வெறுப்பு தான் வந்தது.
அதனால் நேற்று இரவு அவள் தண்ணீர் குடிப்பதற்காக கிச்சனுக்கு வரும் போது இவரும் தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு தன்னுடைய ரூமிற்கு செல்லும் போது அவளைப் பார்த்தார்.
அப்போது அவளை நிறுத்தி “நீ சொன்ன மாதிரி என் பையன் என் குடும்பத்தை கூட சேர்ந்துட்டான்.. ஆனா உன்ன பார்த்தாலே எனக்கு அன்னைக்கு நடந்த சம்பவம் தான் ஞாபகத்துக்கு வருது தயவு செஞ்சு எங்க குடும்பத்தை விட்டு நீ போய்ரு..” என்று சொல்ல அவளுக்கோ தலையில் பெரிய இடி விழுந்தது போல் இருந்தது. மித்ரனை விட்டு அவளால் இருக்க முடியுமா..? அதுவும் அவனது குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு.
சிறிது நாட்கள் ஆயினும் அவன் காட்டும் பாசத்திற்கு அடிமையாக இருந்தாளே. அவள் சிறு வயது முதல் ஏங்கிய பாசத்தை அவன் இந்த இடைப்பட்ட நாட்களில் காட்டினானே. எப்படி அதை விட்டுச் செல்வது என்று நினைத்தவள் மித்ரனின் சந்தோஷத்திற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று நினைத்தவள் அவரிடம் “நான் போய்டுறேன் சார்..” என்று கண்களில் வழிந்த கண்ணீரோடு சொன்னவள் நேராக தனது அறைக்கு வந்தாள்.
அங்கு மித்ரனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். மெதுவாக அவனது அருகில் வந்தவள் அவனுடைய போர்வைக்குள் நுழைந்த அவனுடைய நெஞ்சில் தலை சாய்த்து அவனை இறுக அணைத்துக் கொண்டு மௌனமாக கண்ணீர் வடித்தாள்.
இதுவே அவனிடம் கிடைக்கும் கடைசி அணைப்பு என்று நினைத்தவள் அவளுடைய அணைப்பை மேலும் மேலும் இறுக்கினாள். அவனோ தூக்கத்தில் அவளுடைய நெருக்கம் அதிகமாக தெரிய அவனுமே அவளை இறுக அணைத்து அவள் நெற்றியில் தாடையை வைத்தவன் தூங்கி விட்டான்.
அவளுக்கோ அந்த இரவு தூங்கா இரவாக மாறிப்போனது. அதிகாலை அவனை விட்டுப் பிரிந்தவள் அவனுக்கு போர்வையை போர்த்திவிட்டு அவனுடைய நெற்றியில் அழுந்த முத்தமிட்டவள் “நான் போறேன் மித்துமா.. நீங்க உங்க குடும்பத்தோட சந்தோஷமா இருக்கணும்..” என்று சொன்னவள் அப்பொழுதே அந்த வீட்டை விட்டுக் கிளம்பி விட்டாள்.