வாடி ராசாத்தி

5
(7)

வாடி ராசாத்தி – 1

அதிகாலை மூன்று மணி….

“வேலா இல்லம்”

அந்த அதிகாலை வேளையில் அப்பெரிய பங்களாவில் இருந்த வேலைக்காரர்கள் அனைவரும் சுறுசுறுப்பாக வேலை பார்த்து கொண்டு இருந்தனர். வீட்டின் எஜமானி ஜெயந்தி அம்மாள் அனைவரையும் மேற்பார்வை பார்த்தபடி இருந்தார்.

“சீக்கிரம் துடைக்கிற வேலையை முடிங்க, ஐயர் வந்துடுவார்.” வீடு துடைப்பவர்களை விரட்டி கொண்டு இருந்தார் அவர். அவரின் குணம் யாருக்கும் பிடிக்காவிட்டாலும் அங்கு கிடைக்கும் சம்பளத்திற்காக அமைதியாக வேலையை வேகமாக செய்தனர். ஜெயந்தி அம்மாள் யாரிடமும் தன்மையாக பேச மாட்டார். எப்போதும் அதிகாரம் தூள் பறக்கும் அவர் குரலில்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தான் இந்த குடும்பத்தின் சொந்த ஊர்.

அந்த ஊரில் ஒரளவிற்கு வசதியாக இருந்த ஆத்மநாதனின் வாரிசுகள் முருகவேல் மற்றும் ஞானவேல். மூத்தது மோளை, இளையது காளை என்பது இந்த அண்ணன் தம்பி விஷயத்தில் உண்மை. முருகவேல் கொஞ்சம் சாது. தொழிலை நிர்வகித்து விடுவார்…. ஆனால் பெரிய அளவில் துடிப்பான ஆள் இல்லை. ஆனால் ஞானவேல் அதிரடி. அவர் தந்தையின் தொழிலான அரிசி ஆலை, மாவு மில்லோடு சேர்த்து நகை கடை, ஜவுளி கடை, மளிகை கடை என்று அந்த ஊரின் முக்கிய வர்த்தகம் அனைத்தையும் தன் கரங்களில் வளைத்தார். அனைத்திலும் புதிய புதிய ரகங்களை அறிமுகப்படுத்தினார். அவரின் துடிப்பும் வேகமும் அலாதியாக இருக்க தொட்ட தொழில் எல்லாம் வெற்றி, புகழ் தான். முருகவேல் இருக்கும் இடமே தெரியாது போயிற்று ஞானவேலின் அதிரடியான குணத்தில்.

முருகவேலின் மனைவி தான் ஜெயந்தி அம்மாள். ஜெயந்திக்கு முருகவேலின் வரன் வரும் போது மிக சந்தோஷம் தான். அப்போது ஆத்மநாதன் இறைவனடி சேர்ந்து இருந்தார். மாமியார் மட்டும் தான். அவர் மிகவும் சாது. அம்மாவை போல் தான் முருகவேல்.

பெரிய இடம், இரு ஆண்மகன்களுக்கும் தந்தையின் தொழில் இருக்கிறது என்று தான் ஜெயந்தியின் வீட்டில் திருமணம் செய்து கொடுத்தனர். ஆனால் உள்ளே வந்த பின் தொழில் முழுவதும் தம்பியின் கைப்பிடியில் தான் இருக்கிறது, அண்ணன் கணக்கு பிள்ளை போல் தான் என்று புரிய, ஜெயந்தியின் ஏமாற்றத்தை சொல்லில் வடிக்க முடியாது!

ஒரு குழந்தை ஆனபின் முருகவேலின் திறமையை குறைத்து மதிப்பிட்டு ஜெயந்தி எந்நேரமும் திட்ட, தன்னை மொத்தமாக சுருக்கி கொண்டு விட்டார் அவர். இருந்த பேச்சு இன்னும் குறைந்து ஒரு தபஸ்வி போல மாறி போனார்.

**************

ஐயர் வந்துவிட, அவர் கேட்டதை எல்லாம் வேகமாக எடுத்து வந்து கொடுத்தாள் விஜயலட்சுமி. ஜெயந்தி, முருகவேலின் ஒரே மகள் தான் அவள். அவள் கணவன் சிவகுமார் திருப்பூரில் பெரிய ஜவுளி கடை வைத்து இருக்கிறான். வியாபாரம் மிக நன்றாக போகிறது. அவர்களுக்கு இரு பிள்ளைகள். நந்தனா, இருபது வயது ஆகிறது. கல்லூரியில் இரண்டாம் வருடம் கணிதம் படிக்கிறாள். குருநாத், வயது பதினேழு. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறான். நந்துவும் குருவும் திருப்பூரிலேயே படிக்கிறார்கள். விஜயலட்சுமி நந்தனாவிற்கு அக்கா போல் தான் இருப்பாள். அவளை பத்தொன்பது வயதிலேயே திருமணம் செய்து கொடுத்து விட்டார் ஜெயந்தி, அடுத்த வருடமே நந்தனாவும் பிறந்து விட்டாள்.

பூஜைக்கு தேவையானது எல்லாம் எடுத்து வைத்த ஐயர்,

“தம்பதி சமேதரா வந்து மனையில் உட்காருங்க…. பூஜையை ஆரம்பிக்கலாம்!” என்றார்.

“இருங்க இருங்க, எங்க பிள்ளை வரலை…. அவனுக்கு தான் இன்னைக்கு பிறந்தநாள், அவனுக்காக தான் இந்த ஆயசு ஹோமம்….! என்றார் ஜெயந்தி வேகமாக.

“ஓ! நான் உங்களுக்கு நினைச்சேன்…. சீக்கிரம் அவரை வர சொல்லுங்க…. நாழி ஆறது….”

“நேத்து ராத்திரி தான் சிங்கப்பூரில் இருந்து வந்தான், இப்போ வந்துடுவான்….” என்றவர் இன்டெர்காம் எடுத்து அவனை அழைத்தார்.

“ஹலோ….!”

“———–”

“வாப்பா கீழே…. பூஜைக்கு நேரம் ஆச்சு…. எல்லாம் ரெடியா இருக்கு….”

“——–”

“ராஜா வந்துருவான்…. நீ போய் உங்க சித்தப்பாவை அழைச்சிட்டு வாடி…. தனியா சொல்லணுமா உனக்கு….? கணவனை பார்த்தபடி மகளிடம் சத்தம் போட்டார் ஜெயந்தி.

விஜயலட்சுமி செல்வதற்குள் ஞானவேல் சரியாக வந்துவிட, “வாங்க….” என்றார் ஜெயந்தி.

“தம்பி வரலையா இன்னும்?” மகனை காணாமல் அவர் கேட்க,

“அஞ்சு நிமிஷத்தில வந்துருவான் பாருங்க….” என்றார் ஜெயந்தி குரலில் பாசத்தை தேக்கி. சொன்னது போலவே ஐந்து நிமிடத்தில் மாடிப்படியில் அவன் தலை தெரிய, அனைவரின் பார்வையும் அவனை நோக்கி சென்றது. வந்திருந்த ஐயர் முதல் வீட்டில் வேலை செய்பவர்கள் வரை அவனை தான் பார்த்தார்கள்.

படியில் வேகமாக அவன் இறங்கும் வேகத்தில் அலை அலையாய் முடி அசைந்தது. அழகும் கம்பீரமும் போட்டி போட இருந்த அவனை அனைவரும் கண் எடுக்காமல் ரசித்து பார்த்தனர். பட்டு வேஷ்டியும், கண்ணை உறுத்தாத ஆலிவ் நிறத்தில் சட்டையும் அணிந்து வந்தவனை கண்ட ஞானம், அவன் அம்மா மாதிரி தேஜஸ் என் மகனுக்கு என நினைத்து கொண்டார். அவரின் மனைவி இறந்து பல வருடம் ஆகி இருந்தது!

கொழுந்தனார் மகன் என்று நினைக்காமல் தன் மகன் போல் தான் பார்த்து கொள்வார் ஜெயந்தி அவனை. அவன் வந்ததும்,

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜா….” என்று முதல் ஆளாக சென்று மகனை கட்டி தழுவி கொண்டார். பின் அனைவரும் வாழ்த்து சொல்ல, வாழ்த்துடன், பெரியவர்களிடம் ஆசீர்வாதமும் வாங்கி கொண்டு பூஜையில் அமர்ந்தான் அவன். அவன்,

“கார்த்திகேய பாண்டியன்….!”

தொழில் வட்டத்தில் கேபி என்றால் தெரியாதவர்கள் காங்கேயம், திருப்பூரில் யாரும் இல்லை. காங்கேயம் காளையை போல் இந்த இளம் காளை அந்த வட்டாரத்தில் அவ்வளவு பிரபலம்.

ஐயர் சொல்வதை எந்த கவனச்சிதறலும் இல்லாமல் சிரத்தையாக செய்து கொண்டு இருந்தவனை பார்த்து கொண்டு இருந்த குடும்பத்தினர் ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு எண்ணம்.

ஞானம், மகனை பெருமை பொங்க பார்த்து கொண்டு இருந்தார். தொழிலில் மகன் காட்டும் அதீத வேகம் சில சமயம் பயங்காட்டினாலும் தானும் ஒரு காலத்தில் இப்படி தானே இருந்தோம் என்று நினைத்து கொள்வார். இருக்கிற தொழில் போதாது என்று புதிதாக கட்டுமான கம்பெனி, கலைக்கல்லூரி மற்றும் ரியல் எஸ்டேட் என ஆரம்பித்து அதிலும் வெற்றி கொடி கட்டி வருகிறான். அவன் சிவில் என்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ படித்து இருக்கிறான்.

முருகருக்கு கார்த்திக் மேல் மிகுந்த பிரியம். அவனை வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டு இருந்தார். அழுத்தமும் பிடிவாதமும் சற்று தூக்கலாக இருந்தாலும் பிரியமானவன் கார்த்திக். அவன் அம்மாவின் இழப்பு அவனுள் நிறைய பாதிப்பை உண்டு செய்து இருந்தது. அதை உணர்ந்த முருகர் அவனிடம் அவன் அம்மா பற்றிய நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார். அப்படி தான் அவர்கள் நெருக்கம் ஆனது. மற்றவரிடம் காட்டும் ஒதுக்கம், அமைதி எதையும் அவனிடம் காட்ட மாட்டார் முருகர். நன்றாக சிரித்து சகஜமாக பேசுவார். அவன் என்றென்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டி கொண்டார்.

தம்பியை கண்ட விஜிக்கு, நந்துவை எப்படியும் அவனுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று இருந்தது. தன் தம்பியை விட சிறந்த மாப்பிள்ளை அவளுக்கு ஏது? அவள் கணவன் குடும்பத்தினர்களுக்கும் அதுவே விருப்பம்.

ஜெயந்திக்கு என்றுமே கார்த்திக் மேல் பாசம் அதிகம். அவன் மேல் உரிமையுடன் அதை காட்டுவார். அவனின் வாழ்க்கையில் எல்லா இடத்திலும் அவரின் பங்கு இருக்க வேண்டும் என்று விரும்புவார். இப்பொழுது திருமண வயது வந்ததும் தன் உரிமையை இன்னும் ஸ்திரமாக நிலைநாட்ட முயற்சிக்கிறார்.

அனைவருக்கும் பிரியமானவன் அனைவரிடமும் பிரியமாக நடந்து கொள்வான். ஆனால் என்றும் அவன் மனதில் இருக்கும் எண்ணங்களை வெளியிட மாட்டான், அவன் அதை செயலாற்றும் போது தான் மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியும். அவ்வளவு ரகசியம் காப்பான் அனைத்திலும். இந்த குணம் தான் தொழிலில் அவனை தனித்து காட்டுகிறது. மற்றவர்களுக்கு ஒரு விஷயம் தெரியும் முன்பே இவன் அதை முடித்து இருப்பான்.

பூஜை முடிந்து, ஐயர் மனம் குளிரும்படி தட்சணை வைத்து வழியனுப்பி வைத்தார் ஜெயந்தி. பின் அனைவருக்கும் காபி டீ என அவரவருக்கு வேண்டிய பானம் வர பேசியபடி அனைவரும் ஹாலில் அமர்ந்தனர்.

அப்போது விஜயலட்சுமியின் கணவன் அவளிடம் பேசு என்பது போல் கண்ணை காட்ட, அதை கவனித்த கார்த்திக்,

“நீங்க எல்லாரும் பேசிட்டு இருங்க, எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு, நான் கொஞ்சம் நேரம் தூங்குறேன்….” என்றபடி யார் பதிலுக்கும் காத்திருக்காமல் வேகமாக மாடிக்கு சென்று விட்டான்.

கணவனை இயலாமையுடன் பார்த்தாள் விஜி. அவள் நிலை புரிய, ஒன்றும் பேசாமல்,

“நானும் கிளம்புறேன், எனக்கு வேலை இருக்கு….” என்றபடி கிளம்பினான் சிவகுமார்.

“சாயந்திரம் பிள்ளைகளோட வாங்க மாப்பிள்ளை, ராத்திரிக்கு இங்கேயே சாப்பிட்டு எல்லாரும் போலாம்….” என்றார் ஜெயந்தி. குரு பன்னிரெண்டாம் வகுப்பு என்பதால் விடுமுறை எடுக்கவில்லை. நந்து தம்பியுடனே மாலை வருவதாக சொல்லி விட்டாள்.

“பிள்ளைங்க வருவாங்க கண்டிப்பா, எனக்கு வேலை எப்படினு தெரியாது அத்தை…. பார்ப்போம்….” என்றபடி கிளம்பினான் அவன். அவனை வழியனுப்ப பின்னோட சென்ற மனைவியிடம்,

“இன்னைக்கு பேசி ஏதாவது முடிவு தெரிஞ்சுட்டு வா….” என்றபடி கிளம்பினான்.

“சரிங்க, கண்டிப்பா நான் பேசுறேன்….” என்று அவனை அனுப்பிவிட்டு வந்தவள், சித்தப்பா அறைக்கு சென்று விட்டார் என்பதை கவனித்து தாமதிக்காமல் பேச்சை ஆரம்பித்தாள்.

“அம்மா, தம்பி நந்தனாவை கட்டிப்பானா இல்லையா…?”

“நந்துவுக்கு இருபது வயசு தான் ஆகுது விஜி…. என்ன அவசரம்?” என்றார் முருகர்.

“தம்பிக்கு கல்யாண வயசு வந்துடுச்சே பா….”

“உன்னையே சீக்கிரம் கட்டி குடுக்க வேண்டாம் சொன்னேன்…. நந்துவுக்கும் அதே பண்ண போறீங்களா?” ஆற்றாமையுடன் கேட்டார் முருகர்.

“ஏன்….? இப்போ என்ன குறைஞ்சு போய்ட்டா….? அவ்ளோ சீக்கிரம் கட்டி குடுத்தா தான் எனக்கு பேத்தி பிறந்து இந்த வீட்டை ஆள வர முடியும்னு யோசிச்சு செஞ்சேன்…. உங்களை மாதிரி தேமேனு இருக்க முடியாது என்னால….”

விஜிக்கும் கார்த்திக்கும் பன்னிரெண்டு வயது வித்தியாசம். விஜிக்கு பத்தொன்பது வயதிலேயே திருமணம் செய்து வைத்து விட்டார் ஜெயந்தி.

“விஜிக்கு ரெண்டும் பையனா பொறந்து இருந்தா என்ன பண்ணி இருப்பே…?” அமைதியாக கேட்டார் முருகர்.

தன்னை நக்கல் செய்கிறார் என்று வெகுண்டு எழுந்த ஜெயந்தி,

“வாயே திறக்காம தானே இருப்பீங்க எப்போதும்! அப்படியே இருங்க…. என்ன தான் கிழிச்சீங்க உங்க வாழ்க்கையில்….? சாமியார் மாதிரி காவி வேஷ்டி கட்டிக்கிட்டு கோயில் கோயிலா போறதுக்கு எதுக்கு உங்களுக்கு கல்யாணம், குடும்பம்….? அப்போவே சாமியார் ஆக போறேன்னு சொல்லி இருந்தா என் வாழ்க்கை தப்பிச்சு இருக்கும்ல்ல…. நாங்க எங்களுக்கு வேணுங்கிறதை பார்த்துக்கிறோம்….” என்று அவரை வாங்கு வாங்கினார். பெரிய வீடு என்பதால் பிறர் காதில் விழாது.

“பேசினது தப்பு தான்! மன்னிச்சுடு….” என்றார் முருகவேல் அதற்கும் அமைதியாக.

“உடனே மன்னிப்பு கேட்டுற வேண்டியது! மானம் ரோஷம் இருக்கவன் யாரும் இப்படி அடுத்தவன் கிட்ட உடனே கால்ல விழ மாட்டான்…. உங்க தம்பியை பார்த்தாவது தெரிஞ்சுக்கலாம் தானே….? ஒன்னும் கிடையாது! என் வாழ்க்கையே போச்சு….!” ஜெயந்தி தொடர்ந்து அங்கலாய்க்க,

“ஏன் மா….? இப்போ அறுபது வயசாச்சு உனக்கு….! இன்னுமும் அப்பாவை திட்டணுமா….? சும்மா இரு மா….” என்ற விஜி, எதிர்ப்பார்ப்புடன் அப்பாவை பார்த்து,

“அப்பா, நீங்க சித்தப்பா கிட்டே கேளுங்க பா…. கார்த்திக்கு இருப்பதியெட்டு வயசாச்சு…. நந்துவை தான் எடுத்துக்கணும்னு சொல்லுங்க பா….”

“நீயே கேட்கலாம் மா உன் சித்தப்பன் கிட்டே….உங்களுக்கு இல்லாத உரிமையா அவன் கிட்டே….?” ஒட்டாமல் மகளுக்கு பதில் சொன்னார் முருகர். எப்படி இவர்கள் கார்த்திக்கை வித்தியாசமாக பார்ப்பதில்லையோ அதே போல் விஜியை ஞானமும் வித்தியாசம் இல்லாமல் சொந்த மகளை போல் தான் நடத்துவார்.

“அவர் எல்லாம் தம்பி இஷ்டம் தான்னு சொல்றார் பா…. அவன்கிட்டே யாராவது பேச முடியுமா….?”

“கஷ்டம் தான்!” என்று சிரித்தவர், தம்பி மகனை பற்றி பேச்சு வந்ததில் முருகவேல் முகத்தில் தானாக பெருமிதம் வந்தது. முகமெல்லாம் பூரிப்பாக,

“அவ்வளவு அறிவு, திறமை, ஆளுமை…. அவனுக்கு எல்லாம் தெரியும்! அவங்க அப்பனையே பிசினஸில் மிஞ்சிட்டானே…. அதான் உன் சித்தப்பன் அடங்கி போய் கிடக்கிறான்….” என்றார்!

“அவன் வயசில அவரும் தான் அப்படி பிசினஸ் பண்ணார்…. உங்களை மாதிரியா….?” ஜெயந்தி நொடிக்க, மறுபடி அம்மாவை அடக்கினாள் விஜி. ஜெயந்தியை சற்றும் பொருட்படுத்தவில்லை முருகவேல்.

விட்டால் அம்மா அப்பாவை பேசியே ஒரு வழி செய்து விடுவார் என்று நினைத்த விஜி,

“எங்க வீட்டிலையும் என்ன முடிவு , உன் தம்பி கட்டிப்பானா இல்லையா….? இல்லைனா நான் என் பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பார்க்கிறேன்னு சொல்றார்…. இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும் பா” என்று வருத்தமாக பேசினாள் விஜி.

“இருடி, பிள்ளை தூங்கி எழுந்து வரட்டும், இன்னைக்கு ஒரு முடிவு வாங்கிடுவோம் அவன் கிட்ட இருந்து….” மகளுக்கு ஜெயந்தி நம்பிக்கை அளித்து கொண்டிருந்த அதே நேரத்தில்,

மாடி அறையில்,

“என்ன சற்குணம்….? நான் சொன்ன வேலை முடிஞ்சுதா….? என் மாமாவுக்கு சரியான தகவல் போய்டுச்சா….? கொஞ்சமும் மிஸ் ஆக கூடாது நம்ம பிளான்….” என்று அவனின் நம்பிக்கைக்குரிய நண்பனிடம் கேட்டு கொண்டு இருந்தான் கேபி.

“எல்லாம் பக்கா மாப்பிள்ளை….” என்ற நண்பனின் பதிலில், மனதினில்,

“வரேன்டி சில்மிஷம்…. வந்து உன்னை தூக்குறேன்!” என்று சூளுரைத்தான்.

பல வருடங்களாக பிளான் போட்ட ஜெயந்தியா அல்லது இப்போது பிளான் போடும் கேபியா யார் எண்ணம் ஈடேறும்….?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!