வாடி ராசாத்தி – 12

5
(1)

வாடி ராசாத்தி – 12

 

வீடு வந்தவனின் மனதில் கோபத்தீ கொழுந்து விட்டு எரிந்தது. அதை மீறி என்னை என்னவென்று நினைத்தாள் அவள்….? நான் அழைக்கும் போது அசையாமல் அப்படியே அமர்ந்து இருந்தாள்…. நினைத்து நினைத்து நிலைகொள்ளாமல் தவித்தான் கேபி. அவளை வார்த்தைகளால் விளாசி தள்ள துடித்தது அவன் மனம். இப்பிடியே சற்று நேரம் இருந்தவன், உடனே சற்குணத்தை அழைத்தான். அழைத்து சில வேலைகள் செய்ய சொல்ல, அந்த நடுராத்திரியில் இது அவ்ளோ முக்கியமா என்று தலையில் அடித்து கொண்டான் அவன்.

 

“மச்சான் ஏண்டா இப்படி ஆய்ட்டே….?”

 

“என்ன….? என்னை பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி இருக்கா?”

 

“சே…. சே…. நீ எப்போதுமே அம்மு விஷயத்தில் சரியாகாத பைத்தியம்னு எனக்கு தெரியும் டா….”

 

“டேய்….” அவன் சொன்னதை கேட்டு அவ்ளோ கோபத்திலும் சிரிப்பு வந்தது கேபிக்கு. கொஞ்சமாக சிரித்தபடி சொன்னதை செய்டா என்று அழைப்பை துண்டித்தான்.

 

அப்போதே இரவோடு இரவாக சென்று அம்முவின் வண்டியை எடுத்து வந்து இவர்கள் அலுவலகத்தில் விடுமாறு சொன்னான் கேபி. நாளை அந்த வண்டிக்காக கூட கிஷோரும் அம்முவும் சந்திக்க கூடாது என்று நினைத்தான். வண்டியை எடுத்து வந்ததையும் அவளுக்கு தெரிவிக்க சொல்லி இருந்தான்.

 

சற்குணமும் அவன் சொன்னதை செய்து விட்டு அவளுக்கு மெசேஜ் அனுப்பி விட்டான். அவளிடம் பேசி திட்டு வாங்க அவனுக்கு என்ன தலையெழுத்தா?

 

மறுநாள் காலை,

 

கேபியின் அலுவலகத்தில் இருந்தாள் அம்மு. அவளே அவனை சந்திப்பதாக தான் இருந்தாள். இன்று கேபியே அவளுக்கு ஒரு காரணம் கொடுத்து விட்டான்…. இல்லையேல் இவளாக அவனை தேடி வந்தாள் என்று புரிந்தால் அவன் ஆட்டம் வேறு லெவலில் அல்லவா இருக்கும்….

 

அம்ரிதா வந்திருக்கிறாள் என்று தெரிந்ததும் அவ்வளவு சந்தோஷம் கேபிக்கு. ஆனாலும் நேற்று அவள் அவனுடன் வரவில்லை என்ற கோபத்தில் அவளை காக்க வைத்தான் அவன். ஒரு பத்து நிமிடம் ரிஷப்ஷனில் அமைதியாக காத்திருந்தவள், அதற்கு மேல் பொறுக்க முடியாமல், ரிஷப்ஷனில் இருந்தவனை தள்ளி விட்டு இன்டெர்காமை எடுத்து,

 

“என்ன ஓவரா பண்ற….?” என்றாள் கோபமாக.

 

சிசிடிவி வழியே அவளை ரசித்து கொண்டு இருந்தவன், அவள் உரிமையுடன் பேசுவதை இன்னும் அதிகமாக ரசித்தான். அவன் அமைதியாகவே இருக்கவும்,

 

“ஒழுங்கா என் வண்டி எங்க இருக்கு சொல்லு, நான் எடுத்திட்டு கிளம்புறேன்….” என்றாள் கடுப்பாக.

 

“ஓ…. உன் காரியமா என்னை தேடி வந்திருக்க….ம்ம்….” என்றான் நக்கலாக.

 

“அப்பறம் உன்னை ஆசையா வா தேடி வருவாங்க பண்டி….? பண்றது எல்லாம் அடாவடி…. ஆளை பாரு….” இவள் அவனை அதட்டி பேசுவதை ஆவென்று பார்த்தான் அங்கு பொறுப்பில் இருந்தவன்.

 

“நேத்து எதுக்கு மேடம் எனக்கு லொகேஷன் அனுப்பினீங்க….?” அவள் அமைதியாக இருக்க, இதற்கு மேல் வெளியில் இருந்து பேச வேண்டாம் என்று நினைத்தவன், “சரி உள்ள வா….” என்றான்.

 

அவன் கேட்டதற்கு அவளிடம் பதில் இல்லாததால், அதை பற்றி கேட்டால் அவள் மனதை உரைக்க வேண்டி வரும் என்பதால் அதை மறைக்க மேலும் அவனை அதட்டினாள் அம்மு.

 

“ஓ! நீ காக்க வைப்பே…. அப்பறம் கூப்பிடுவ…. நான் சொல்லுங்க எஜமான்னு ஓடி வரணுமா…. முடியாது, நீ வெளிய வா….” என்றாள்.

 

“தலைவர் டையலாக் எல்லாம் பேச ட்ரை பண்ணாத சில்மிஷம்…. வரேன்….” என்று சிரித்தப்படி வெளியே வந்தான் கேபி.

 

வெள்ளை வேஷ்டி, வெள்ளை முழுக்கை சட்டையில் இருந்தவனை கண்டவளின் பார்வையில் உற்சாகமானான் கேபி. அவனை முழுங்கி விடுவது போல் பார்த்தாள் அம்மு. அம்மாடி இவனுக்கு எங்க இருந்து இப்படி ஒரு ஆளுமை என மனதிற்குள் அசந்து விட்டாள் அவள்.

 

“இன்னைக்கு யார் கூட எங்க போற….?” கிண்டலாக கேட்க,

 

“என்ன கொழுப்பா….? யாரும் தேவையில்லை எனக்கு…. நாங்களே எங்களை பார்த்துப்போம்….”

 

நிமிடத்தில் முகம் கடு கடு என்றாக, “ம்ம்…. நேத்து தான் பார்த்தேனே….” என்றான்.

 

அவனின் சிரிப்பு மறைவதை கண்டவளுக்கு, நேற்றைய நிகழ்வின் கோபத்தை உள்ளே வைத்திருக்கிறான் என்று புரிந்தது. அதனால்,

 

“வண்டியை கொடு, கொடுக்கிற எண்ணம் இல்லை வெறும் வம்பு தான் செய்வேன் சொல்லு…. வண்டி உன்கிட்டயே இருக்கட்டும்னு நான் கிளம்புறேன்….”

 

சுற்றி பார்த்தவன், ஆபிஸ் ரூமுக்கு வா என்று வேகமாக அவன் அறை நோக்கி சென்று விட்டான். அவனை தொடர்ந்து சென்றவள், இன்னைக்கு ஏதோ சம்பவம் இருக்கு என்று தோன்றியது.

 

“நான் சொல்றதை எல்லாம் கேட்கிற ஆள் மாதிரி பேசுற…. நான் சொல்ற எல்லாத்தையும் செய்வியா?” கேட்டபடி அவளை நெருங்கினான் கேபி.

 

“இங்க பாரு, நான் இப்படி எல்லாம் உன்னை பார்க்க வர்றதே பெரிசு…. எதுவும் பிரச்சனை வேண்டாம் நமக்குள்ள, பழைய மாதிரி இருப்போம்…. எங்க அப்பா பாவம்” என்றாள் அம்மு வேகமாக.

 

“ஆமா ஆமா எங்க மாமா பாவம் தான்…. நான் அவரை ஒன்னும் பண்ணலையே….”

 

“ம்ப்ச்….புரியாத மாதிரி நடிக்காத….ப்ளீஸ்….”

 

“சரி நீ ஏன் எனக்கு லோகேஷன் ஷேர் பண்ணே…. அதுக்கு மட்டும் உண்மையான காரணம் சொல்லு….”

 

என்ன சொல்வது என்று முழித்தாள் அம்மு…. என்ன யோசித்தும் நேற்று இரவில் இருந்து அவன் நம்புவதை போல் ஒரு காரணம் அவளுக்கு தோன்றவே இல்லை.

 

“அவன் கூட போறேன்னு பெருமை அடிச்சிக்க நினைச்சு அனுப்பினியா….?” அவளை எப்படி சீண்டினால் ரியாக்ட் செய்வாள் என்று தெரிந்தே கேட்டான் கேபி.

 

அவள் அவனை எரித்து விடுவது போல் முறைத்து, “நான் ஒன்னும் ஆசைப்பட்டு போகலை….” என்றாள் அதே முறைப்புடன். அவள் சொன்ன விதத்தில் பொங்கி சிரித்தான் கேபி. அவளை நெருங்கி நின்றிருந்தவன், அவள் வலது கன்னத்தை ஒரு கையால் தாங்கி, மற்றொரு கையால் அவளை தன்னோடு சேர்த்து அணைத்தான். அவளை கைக்குள் வைத்து கொண்டே,

 

ரொம்ப யோசிச்சேன், எதுக்கு அனுப்பி இருப்பேனு…. எதுக்காக அனுப்பி இருந்தாலும் எனக்கு தானே அனுப்பினே…. அந்நேரத்தில் அவன் கூட இருக்கப்போ உனக்கு என் நியாபகம் தானே இருந்திருக்கு….அது போதாதானு விட்டுட்டேன்….

 

அவன் சொன்னதை கேட்டு அவனை ஏறிட்டு பார்த்தவளின் கண்ணில் இருந்த பரிதவிப்பை உணர்ந்தவன், அவள் கண்களின் மேல் மென்மையாக முத்தமிட்டான். பதறி விலக பார்த்தவளை அழுத்தமாக பிடித்து அணைத்தவன், மென்மையாக அதே சமயம் அழுத்தமாக,

 

“கண்ணை மூடி, இன்னும் பத்து வருஷம் கழிச்சு நீ இப்படி இருக்கணும்னு யோசி…. யார் பொண்டாட்டியா….? யாரோட பிள்ளைங்களுக்கு அம்மாவா….? உன் வேலையில் எப்படி இருக்கணும் யோசி…. அந்த கற்பனையில் நான் இல்லைனு மனசார சொல்லு நான் உன்னை விட்டுறேன்….” என்றான்.

 

அவள் ஏன் அதை யோசிக்கணும்…? அவளுக்கு தான் பதில் தெரியுமே…. அதனால் அவனிடம் குறும்பாக,

 

“இந்த குரங்கை நினைச்சுக்கிட்டு மருந்தை குடிக்காதேனு சொன்ன கதையால்ல இருக்கு…. நீ சொன்னதுக்கு அப்பறம் உன்னை தான் நினைப்பு வரும்…. டேய் கேபி நீ ஒரு கேடி டா….போடா போடா….” என்று அவனிடம் இருந்து விலகி ஓட பார்த்தாள் அம்மு.

 

“ஹேய் சில்மிஷம்….” அவளின் அடாவடி பேச்சில் மயங்கியவனாக அவளை இறுக பற்றி இதழில் முத்தமிட்டான் கேபி. வழக்கம் போல் அவனிடம் இருந்த மீளவும் முடியாமல் ஒன்றவும் முடியாமல் தவித்தாள் அம்மு. சில நிமிடங்கள் நீடித்த முத்தம் முற்று பெறுவதற்குள் அவன் தொலைபேசி விடாமல் அலறியது. அதை அவன் எடுக்கவில்லை என்றதும் இன்டெர்காமும் சேர்ந்து அலறியது. மனமே இல்லாமல் அவளை விட்டு விலகி, அழைப்பை ஏற்றான். வெளியில் இருந்து சற்குணம் தான் அழைத்திருந்தான். அவன் சொன்னதை கேட்டவன், இதோ வரோம் என்று வைத்தான்.

 

“மாமாவும் கிஷோரும் ஆபிஸ் வாசல்ல இருக்காங்களாம்….” வா என்றான் சிரித்துக் கொண்டே.

 

“அப்பா வா….?” அதிர்ச்சி ஆனாள் அம்மு.

 

“எதுக்கு இப்போ இவ்ளோ ஷாக்….? கொஞ்ச நேரம் முன்னாடி என்கூட இருந்ததை நினை…. என்ன செய்யணும்னு புரியும் உனக்கு….”

 

“நீ உன் காரியம் ஆகணும் தானே அடிக்கடி இப்படி பண்ற….சே….”

 

“ஹாஹா நீ இப்படி எல்லாம் பேசினா எனக்கு கோவம் வரும்னு நினைக்காத….சிரிப்பு தான் வருது…. என் காரியம் மட்டும் தான் எனக்கு குறிக்கோள்னா நீ எப்போவோ என் பொண்டாட்டி ஆகி இருப்பேடி தங்கம்…. தப்பு தப்பா பேசாத…. இன்னொரு நாள் சண்டை போடுவோம்…. மாமா ஏற்கனவே ரொம்ப நேரமா காத்திட்டு இருக்கார்”

 

“அப்பா….”

 

“வாங்க மாமா, ஆபிஸ் ரூமில் போய் பேசலாம், ஏன் உள்ள கூட வராமா இருக்கீங்க….”

 

“நான் புதுசா எதையும் ஆரம்பிக்க விரும்பலை, என் பொண்ணுக்கு எந்த பிரச்சனையும் வர வேண்டாம்…. அது ஒன்னு தான் இப்போ எனக்கு வேணும்….”

 

அவர் குரலில் நிஜமான பயம் இருந்தது. காலையில கிஷோர் வந்து நேற்று இரவில் நடந்தது, இன்று காலையிலும் அம்முவை அழைத்து செல்ல வந்ததாக கூறவும் கவலை வந்து விட்டது அவருக்கு. நேற்று இரவு அம்மு அவனுடன் வந்ததை யாரிடமும் கூறவில்லை. வாசுகி ஏற்கனவே கிஷோர் குறித்து கவலையில் இருந்ததால் மறைத்து விட்டாள்.

 

“நமக்குள்ள எதுவும் புதுசு இல்லை மாமா, எல்லாம் ஏற்கனவே இருக்கிறது தான்…. நம்மளை பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம் மாமா…. சொல்ல போனா நீங்க எதை பத்தியும் கவலைப்பட வேண்டாம்…. புதுசா வந்திருக்க பிரச்சனை எல்லாரையும்…. ஐ மீன், எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் மாமா….” என்றான் கேபி கூலாக.

 

“நீங்க எல்லாத்தையும் பார்த்துக்கிட்டதால தானே மாமா வீட்டை விற்கவே முடிவு பண்ணினார்…. ஆனா அதுக்கு நான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும் மாப்பிள்ளை….” கிஷோர் நக்கல் அடிக்க, சூழ்நிலை அங்கே கனமானது.

 

செல்வராஜ் பிரச்சனை பேச விரும்பவில்லை, அதனால் மகளிடம்,

 

“வாம்மா, இனி நீ எங்கே போறதுனாலும் அப்பா கிட்ட சொல்லு. நான் அழைச்சிட்டு போய் அழைச்சிட்டு வரேன்….” என்று அவளை அழைத்து கொண்டு அமைதியாக கிளம்பி விட்டார்.

 

கேபியை நிமிர்ந்தும் பார்க்காமல் அப்பாவுடன் சென்றாள் அம்மு. அவர்களை தொடர போன கிஷோரை நிறுத்தினான் கேபி.

 

“ராஜா வீட்டு கண்ணுக்குட்டியா ஹேப்பியா இருக்கிறதை விட்டுட்டு ஏன் வாழ்க்கையில் நரகத்தை பார்க்கணும்னு நினைக்கிற?” கிஷோரிடம் அப்படி கேட்ட கேபியின் முகத்தில் சிரிப்பு இருந்தது, ஆனால் குரலில் எந்த உணர்வும் இல்லை. அந்த தொனியின் அர்த்தம் சற்குணத்திற்கு புரிந்தது. இனி கிஷோர் பாடு கொஞ்சம் கஷ்டம் தான் என்று நினைத்து கொண்டான்.

 

“யார் நரகத்தை பார்க்க போறானு பொறுத்து இருந்து பார்ப்போம் மாப்பிள்ளை….” சளைக்காமல் சவால் விட்டான் கிஷோர்.

 

“ம்ம்…. உனக்கு குட் லைப் இருக்கட்டுமேனு கொஞ்சம் அக்கறைபட்டு பேசினேன்…. ஆனா உனக்கு லைப்பே வேண்டாம்னு நீ ஆசைப்படுற…. சரி விடு பார்த்துக்கலாம்….”

 

அலட்டிக் கொள்ளாமல் அவனை அதிர வைத்து விட்டு அலுவலகத்தின் உள்ளே சென்றான் கேபி.

 

அதிர்ந்த உள்ளத்தை சமாளித்து கொண்டு, திருமணத்தை முடிந்த வரை விரைந்து நடத்த வேண்டும் அதோடு சேர்த்து இவனையும் ஒரு கை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு கிளம்பினான் கிஷோர்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!