வாடி ராசாத்தி – 13
செல்வராஜ், அம்மு, கிஷோர் என மூவரும் செல்வதை பார்த்தபடி அலுவலகத்தை அடைந்தார் முருகர்.
“என்ன பா, பெரியம்மாக்கு தான் தலைவலி கொடுத்து இருக்கேன்னு பார்த்தா, உன் மாமா வீட்டுக்கும் அதே நிலைமை தான் போல….”
“எல்லாரும் அவங்க அவங்க சொல்றது செய்றது தான் சரினு நினைக்கிறாங்க…. அதனால நானும் அப்படியே இருக்கேன் பெரியப்பா.”
“மத்தவங்களை பத்தி கவலைப்பட தேவையில்லை, ஆனா கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுக்கு பிரச்சனை இல்லாம இருந்தா சரி….” சிரித்தபடி சொன்னார் முருகர்.
“அவளா….? அவளுக்கும் இதில ஆயிரம் பிரச்சினைனு தான் சொல்றா…. சரி என்னை ஆயிரத்து ஒன்னா வைச்சுக்கோ சொல்லிட்டேன்…. அவளுக்கு வேற ஆப்ஷன் கிடையாது!” சொல்லும் மகனின் குரலில் இருந்த உற்சாகமும் உரிமையும் காதலும் அன்பும் அவருக்கு அம்மு அவனுக்கு எவ்வளவு இன்றியமையாதவள் என்று புரிய வைத்தது.
“ம்ம்…. உன் பெரியம்மா அங்க உனக்கு ஆயிரம் பிரச்சனை வைச்சுட்டு காத்திட்டு இருக்கா, அதையும் சமாளி…. ஜோசியரை வரச்சொல்லி உனக்கும் நந்துவுக்கும் பார்க்கிறா…. இன்னைக்கு உனக்கு இருக்கு….”
“என் கல்யாணம் என் விருப்பம் தான்…. நான் பார்த்துக்கிறேன் பெரியப்பா, நீங்க கவலைப்படாதீங்க.”
************
மகளுடன் வீடு வந்த பின், “பத்து மணிக்கு நீ வீட்டுக்கு வர அளவு உனக்கு தைரியமாக இருக்கு தான், இதுவரை நீயும் பத்திரமா இருக்க மாதிரி தான் நடந்துகிட்டு இருக்க. இப்போ மட்டும் என்ன மா? ஏன் இந்த குளறுபடி? யார் உன்னை அழைக்க வந்தாலும் நீ அப்பாவுக்கு போன் பண்ண வேண்டியது தானே?” அலுப்பும் ஆதங்கமுமாக கேட்டார் செல்வராஜ்.
“ஆமா, அந்த பையனை தெரிஞ்சாலும் நீ ஏண்டி அந்த பையன் கூட வந்தே….? யாரையும் நம்ப முடியாது இந்த காலத்தில…. எனக்கு ஏற்கனவே திக் திக்னு இருக்கு….”
“நீ நம்ம கார்த்தியோடவாச்சும் வந்து இருக்கலாம்….” தாத்தா ஒரு பக்கம் மெதுவாக சொன்னார்.
“அப்பா, பேசாம இருங்க நீங்க…. அவனால் தான் நான் இப்போ நாராயணன் கிட்ட சிக்கிகிட்ட மாதிரி இருக்கேன்…. உங்க பேரன் நல்லவன் மாதிரி பேசுறான் இப்போ வந்து….” கொதித்தார் செல்வராஜ்.
“அவன் நல்லவன் தாண்டா…. உன் பிடிவாதம் தான் அவனை இப்படி செய்ய வைக்குது….”
“என் தங்கச்சி போன அப்புறம், அவளை கட்டிக்கிட்ட மகராஜன் ஒரு வார்த்தை நம்ம கிட்ட பேசி இருப்பாரா….? இல்லை அவங்க வீட்டில இருந்து தான் ஏதாவது தொடர்பு இருந்துச்சா….?”
நாமளும் தானே விலகி இருந்தோம்…. இனிமே அதை பத்தி பேசாத டா, ஒன்னும் பிரயோஜனம் இல்லை…. நான் இப்போ நேரா உன்கிட்ட கேட்கிறேன்,என் பேத்தியை என் பேரனுக்கே கட்டி கொடுத்திடு டா…. அவன் ரொம்ப ஆசைப்படுறான்…. எங்களுக்கும் அது தான் விருப்பம் என்றார் சொக்கலிங்கம். அம்சவல்லியும் அதை அமோதிக்க,
“முடியாது பா, முடியவே முடியாது…. போதும் என் தங்கச்சியோட எல்லாம்…. திரும்ப என் பொண்ணையும் அந்த வீட்டில கொடுக்கிற தப்பை நான் செய்யவே மாட்டேன்….” சொல்லிவிட்டு விருட்டென்று வெளியே சென்றுவிட்டார் அவர். அவர் வெளியே வரவும், கிஷோர் அவர்கள் வீட்டிற்கு வரவும் சரியாக இருந்தது. இருந்த மன அழுத்தத்தில்,
“நான் வீடே விற்கலை தம்பி, போதும் நீங்க பண்ண உதவி…. கிளம்புங்க இங்க இருந்து…. போதும் எல்லாம்…. இனிமே எந்த பிரச்சினையும் வேண்டாம் எனக்கு….இங்க வராதீங்க நீங்க இனிமே….” என்று படபடவென்று அவனிடம் பேசி அவனை கிளம்ப செய்தார் செல்வராஜ்.
அவர் பேச பேச, உள்ளம் கொதித்தது கிஷோருக்கு. ஆனாலும் எதுவும் பேசவில்லை அவன். அமைதியாக அதே சமயம் கண்களில் கனன்ற கோபத்தோடு அவரை உறுத்து பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.
********
அன்று மதியமே செல்வராஜை தேடிக் கொண்டு மில்லுக்கே வந்துவிட்டார் நாராயணன். போக வைத்திருந்தான் கிஷோர்.
“என்ன செல்வராஜ், தம்பிக்கிட்ட வித்தியாசமா பேசினீங்களாம்….? அவன் கிட்ட என்ன தப்பு கண்டீங்க….?” மகன் படுத்திய பாட்டில் நாராயணன் இங்கே எகிறினார்.
“செல்வராஜின் மனநிலையும் சரியில்லாதால் அவரும் பணிந்து எல்லாம் போகவில்லை. என் பொண்ணு கிட்டே எதுக்காக அனாவசியமாக பழக போறார் உங்க பையன்? என் கஷ்டத்துக்கு தாங்க நான் என் வீட்டை விற்க நினைச்சேன்…. கல்யாணம் பத்தி நான் உறுதி சொல்லலை…. அதனால் தான்…. உங்க கிட்ட வாங்கின அட்வான்ஸ் பணத்தை நான் திருப்பி தந்துடுறேங்க…. ”
என்ன இப்படி பேசறீங்க….? எதுனாலும் சொல்லுங்க….பேசி சரி செய்வோம்…. கொஞ்சம் இறங்கி வந்தார் நாராயணன்.
வாசுகி அவர் மனதில் ஏற்றிய பயம், கிஷோர் நடந்து கொள்வது என பயந்து இருந்த செல்வராஜ், “அதெல்லாம் எதுவும் வேண்டாம்…. இதை முடிச்சுக்குவோம்….” என்றார் பிடிவாதமாக.
ஒரு நிமிடம் அமைதியான நாராயணன், “அதெப்படிங்க, நீங்க எனக்கு கையெழுத்து போட்டு கொடுத்து இருக்கீங்க…. நான் உங்களுக்கு பத்து லட்சம் கொடுத்து இருக்கேன்…. சேல் டீல்ல டைம் போடலை நான்…. கவனமா படிச்சு கையெழுத்து போடலையா நீங்க….? இப்போ நான் வீட்டை ரிஜிஸ்டர் பண்ணி மிச்ச காசு கொடுக்கணும்னா, உங்க பொண்ணை என் பையனுக்கு கட்டி கொடுங்க, இல்லைனா வீட்டையும் விற்க முடியாது, கடனையும் அடைக்க முடியாது…. சாக வேண்டியது தான் நீங்க….”அலட்டிக்கொள்ளாமல் இடியை இறக்கினார்.
“என்ன….? புதுசா கதை சொல்றீங்க….?” அதிர்ந்து விட்டார் செல்வராஜ். சேல் டீல் போட்டா அடுத்து ரெஜிஸ்திரஷன் தானே….? பாவமாக கேட்டார்.
பத்திரத்தின் நகலை எடுத்து காட்டினார் நாராயணன். அதில் குறிப்பிட்ட மாசத்துக்குள் ரிஜிஸ்டர் செய்யவில்லை என்றால் இந்த டீல் செல்லாது என்ற வாசகமே இல்லை…. டைம் போட்டு இருந்தால் அவர்கள் வீட்டை ரிஜிஸ்டர் செய்ய தாமதம் ஆனால் வாங்கிய முன்பணத்தை திருப்பி கொடுத்து விட்டு அக்ரீமெண்டை முறித்து இருக்கலாம்….வேறு யாரும் வாங்குபவர் பார்த்து இருக்கலாம்…. இப்போது இவர்களிடம் மாட்டி கொண்டார் செல்வராஜ்.
“இங்க பாருங்க செல்வராஜ், என்னை தப்பா நினைக்காதீங்க…. நாங்க கெட்டவங்க இல்லை, ஆனா எங்க உறுதிக்கு இந்த மாதிரி செஞ்சுக்க வேண்டியதா போச்சு…. பையன் உங்க பொண்ணு மேல ரொம்ப பிரியம் வைச்சுட்டான்…. எனக்கு வேற வழி தெரியலை…. இனி நீங்க பின்வாங்க நினைக்காதீங்க…. ஏதாவது முயற்சி பண்ணி வெளிய வரலாம் நினைக்காதீங்க…. கடன்ல முழ்கும் போது பஞ்சாயத்து பண்ண நேரமும் இல்லை…. இன்னைக்கு நான் உங்க வீட்டை வாங்க போறேன்னு தான் கடன்காரன் எல்லாம் உங்களை விட்டு வைச்சு இருக்கான்…. அதோட கோர்ட், கேஸ் எல்லாம் போட உங்க கிட்ட காசு இருக்கா?” செல்வராஜின் நிலையை தங்களுக்கு சாதகமாக உபயோகித்து கொண்டார் நாராயணன்.
“ஏங்க இப்படி எல்லாம்? சே….! என் பொண்ணு வாழ்க்கைங்க….” தொய்ந்து சோர்ந்து போனார் செல்வராஜ்.
“எங்களுக்கு என்ன குறை? எங்க வீட்டில் ராணி மாதிரி வைச்சுப்போம்….”
“இஷ்டமில்லைனு சொல்ற பொண்ணு எப்படி உங்க வீட்டில சந்தோஷமா இருப்பா?”
“அதெல்லாம் என் பையன் பார்த்துப்பான்…. நீங்க கல்யாண வேலையை ஆரம்பிங்க…. இல்லை பிரச்சனை பண்ணி தான் கல்யாணம் பண்ணனும்னா…. அதுக்கும் நாங்க ரெடி!” என்று சொல்லிவிட்டு பதிலை கூட எதிர்பார்க்காமல் கிளம்பி விட்டார் நாராயணன்.
வீட்டில என்ன சொல்வேன்…. கடவுளே வாசுகி சொன்ன மாதிரி யாரையாவது கூட அழைச்சிட்டு போய் இருக்கணும்…. தலையில் அடித்து கொண்டு கண் கலங்க, உள்ளம் மறுக அமர்ந்திருந்தார் செல்வராஜ்.
************
கேபியின் வீட்டில்,
அறைக்குள் கட்டிலில் ஞானம் படுத்து இருக்க, அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து இருந்தார் ஜெயந்தி.
“இந்த கல்யாணம் நடந்தா நம்ம ரெண்டு பிள்ளைங்க வாழ்க்கையும் நல்லா இருக்கும்…. நீங்க கொஞ்சம் அழுத்தமா இதை ராஜா கிட்ட சொல்லணும்….”
“நந்துவுக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்கலாம் நாம, கார்த்தி அவன் கல்யாண விஷயத்தில் முடிவுக்கு வந்துட்டான்…. யார் சொன்னாலும் கேட்க மாட்டான்….”
“நீங்களே இப்படி சொன்னா, நான் யாருக்கிட்ட சொல்வேன்…. நீங்க சொன்னா கேட்பான்…. ஒருநிமிடம் நிதானித்து, கடவுளே…. யாரு அந்த செலவராஜ் மகளை கட்டிக்க நினைக்கிறானா….? அந்த கிழவனும், கிழவியும் தான் அவனை ஏத்தி விட்ருப்பாங்க….
“என்னை மாதிரி தான் அவனுக்கும் ஆசை வந்திருக்கு….” சிரித்தார் ஞானம்.
“ஆமா, உங்க கல்யாணத்தப்போவே சொன்னேன் நான்…. அம்ரிதவல்லி வேண்டாம்…. உங்க குணத்துக்கு கொஞ்சம்கூட பொருந்தி வரமாட்டானு…. கேட்டிங்களா நீங்க….? கடைசியில நான் சொன்ன மாதிரி தான் ஆச்சு…. ஊமை மாதிரி இருந்து உங்களை படுத்தி வைச்சு கடைசியில் போய் சேர்ந்துட்டா….”
இரண்டாவது பிள்ளை உண்டான பிறகு அம்ரிதா ஒரு மாதிரி நடந்து கொண்டது நினைவில் வந்தது ஞானத்திற்கு…. அவர் எவ்வளவ்வோ முயற்சி செய்தும் அவளை சகஜமாக்க முடியவில்லை…. அந்த சமயத்தில் தொழிலை கூட கொஞ்சம் தள்ளி வைத்தார் ஞானம். ஆனாலும் பலன் இல்லை.
அவர் அமைதியாக இருக்கவும் அதையே தனக்கு சாதகம் ஆக்கி கொண்டு மேலும் தொடர்ந்தார் ஜெயந்தி.
“இப்போ அதே வீட்டில இருந்து பொண்ணு, பேர் கூட அதே, அவளை கட்டிக்கிட்டு வந்தா என் பிள்ளை வாழ்க்கை என்ன ஆகும்? அதே நரகம் தான்…. அவனுக்கு புரிய வைங்க…. உங்களை கெஞ்சி கேட்கிறேன்….”
“அவன் அம்ரிதாவோட மகன்…. அவன் மாமா மகள்…. நான் என்ன சொல்ல முடியும்? செல்வராஜ் நல்லவன் வேற….”
“விட்டா நீங்களே கல்யாணம் பண்ணி வைப்பீங்க போல…. சொந்தமே இல்லை இத்தனை வருஷம்…. நம்ம பொண்னை, பேத்தியை நினைச்சு பாருங்க…. துடிச்சு போய்டுவாங்க அவங்க…. நம்ம மாப்பிள்ளைக்கு என்ன பதில் சொல்வேன் நான் முதல்ல….?”
சிந்தனை வயப்பட்டு அமைதியாக இருந்தார் ஞானம்.
“உங்களுக்கே தெரியும் எனக்கு நம்ம பிள்ளைங்க தான் உலகம்…. உங்களை இதுவரைக்கும் ஏதாவது தொல்லை பண்ணி இருக்கேனா…. தயவு செஞ்சு நந்துவுக்கும் ராஜாவுக்கும் கல்யாணம் பண்ணி வைங்க…. வேற மாதிரி எல்லாம் நடந்தா அந்த கொடுமையை பார்க்க நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.”
“ம்ப்ச்…. இதென்ன பேச்சு…. நான் கார்த்திக்கிட்ட பேசுறேன்….”
“ரொம்ப சந்தோஷம்….உங்களுக்கு ஜூஸ் போட்டு அனுப்புறேன்….”
ஜெயந்தி சொல்வதிலும் நியாயம் இருக்கிறது…. ஆனால் மகன் ஆசை…. கண்ணை இறுக்க மூடி திறந்தார் ஞானம்.
***********
“ஹலோ, அண்ணே நான் அய்யப்பன் பேசுறேன்….”
“சொல்லுடா, உங்க முதலாளி என்ன சொல்றார்?”
அய்யப்பன் சொல்ல சொல்ல, “ஓ, சரிடா நாங்க பார்த்துகிறோம்….வேற என்ன தெரிஞ்சாலும், எந்நேரமா இருந்தாலும் எனக்கு போன் பண்ணு….” என்றபடி போனை வைத்தான் சற்குணம்.
உடனே கேபிக்கு அழைத்து,
“மச்சான், உங்க மாமாவுக்கும் நாராயணனுக்கும் இன்னைக்கு ஏதோ வாக்குவாதம் நடந்துச்சாம்…. மில்லுக்கே போய் பேசி இருக்கான் அந்த ஆளு….அப்போ இருந்து உங்க மாமா முகமே சரியில்லையாம்…. நாம வைச்ச ஆள் தகவல் சொன்னான்” என்றான்.
“ஓ…. மாமா என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா போதும்…. ஆனா இப்படி பிடிவாதம் பிடிக்கிறாரே…. சரி நான் மாமாவோட பிரண்ட் கிட்டே கேட்கிறேன்….”
“நீ அவர் மகளை விட்டா அவர் அவரோட பிடிவாதத்தை விட்ருவார்….” கேலி செய்தான் சற்குணம்.
“அவர் அப்படியே இருக்கட்டும், அவர் மகளோட சேர்த்து அவரையும் சரிகட்டுறேன் நான்!”
“நீ நல்லா செய்வே டா ராஜா…. நடத்து நடத்து….”