வாடி ராசாத்தி – 15

4.5
(2)

வாடி ராசாத்தி – 15

கேபி அவளை வரச்சொல்லி இருப்பானோ இல்லைனா இந்த பொண்ணுக்கு எப்படி இவ்வளவு தைரியம் இங்கே வர என்று யோசித்த ஜெயந்தி,

“இந்த வீட்டுக்கு வந்து பார்த்து பேசி பழகற வேலையெல்லாம் எனக்கு பிடிக்காது….”

“என்ன அத்தை, நான் ஏதோ உங்களை பொண்ணு பார்க்க வந்துட்டு போன மாப்பிள்ளை மாதிரி, என்னை பார்க்கமாட்டேன், பேசமாட்டேன், பழக மாட்டேன்னு பதறி போறீங்க….”

“என்ன உளர்ற?” ஜெயந்திக்கு தான் புரியவில்லை மற்ற இருவருக்கும் அவள் ஜெயந்தியை கிண்டல் அடிப்பது புரிந்து சிரிப்பை அடக்கினார்கள்.

“நீங்க மட்டும் எங்க வீட்டுக்கு வரலாம், நான் உங்களை பார்க்க உங்க வீட்டுக்கு வர கூடாதா…. என்ன நியாயம் அத்தை இது….?”

இவள் பார்க்க தான் அம்ரிதவல்லி போல் ஆனால் குணம் அவளை போல் இல்லை என்று சட்டென்று உணர்ந்து கொண்டார் ஜெயந்தி.

“நீ வீடு தங்குற ஆள் இல்லை போலையே….” குத்தினார் ஜெயந்தி.

“ஆமா அத்தை உங்களை மாதிரி தான், நீங்க எப்படி தனியா எங்க வீட்டுக்கு வந்தீங்க அது மாதிரி தான் நானும் அத்தை, வேலை இருந்தா நானே போய்ப்பேன் அத்தை…. எங்க அம்மா தான் ஆள் தேடுவாங்க…. நாம சூப்பர் தானே அத்தை….” நக்கலாகவும் அதே சமயம் வார்த்தைக்கு ஒரு அத்தை போட்டு ஜெயந்தியை வாயடைக்க வைத்தாள் அம்மு.

அவள் பேசுவதை சின்ன சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தவனை கண்டு எரிச்சலாக வந்தது ஜெயந்திக்கு. இந்த சாமர்த்தியம் தன் பேத்தியிடம் இல்லையே என்று ஏமாற்றமாகவும் இருந்தது அவருக்கு. அந்த கடுப்பை எல்லாம் அம்முவிடம் காட்டினார்.

“சரி வந்து பார்த்திட்டேல்ல நீ கிளம்பு….” என்றவர் அதற்கு மேல் அப்படி ஒரு ஜீவன் அங்கு இருப்பதை போல் கூட காட்டிக்கொள்ளாமல்

“நந்து நீ வா, நமக்கு ஆயிரம் வேலை இருக்கு, அதை பார்ப்போம். மாமாக்கு என்ன வேணுமோ அது என்னனு கேட்டு கவனி. தம்பி நீ போய் ரெஸ்ட் எடுப்பா…. நான் உனக்கு வேணுங்கிறதை நந்து கிட்ட கொடுத்து விடுறேன்….இனிமே அவதானே எல்லாம் பார்க்கணும்”

“ஏன், நந்தினி வேலைக்கு ஆள் இல்லையா? ஏதாவது யூனியன் மாதிரி வைச்சு இங்க மட்டும் வேலைக்கு வரமாட்டோம்னு ஸ்டரைக் பண்றாங்களா?” ஜெயந்தியை கொடுமையான முதலாளியாக சித்தரித்து ஆனால் கேட்பதை மட்டும் அப்பாவியாக கேட்டாள்.

இதற்கு மேல் விட்டால் பெரியம்மாவின் பொறுமை போய் விடும் என்று உணர்ந்தவன், அம்மு நீ கிளம்பு, பாட்டி தாத்தாவை கேட்டதாக சொல்லு என்று அவளை கிளப்பி விட முயன்றான்.

அவள் தான் அனைத்திற்கும் தயாராக வந்தாளே…. குறிப்பாக பேசினாலும் நேராக பேசினாலும் எதுவும் புரியாத மாதிரியே இருந்தாள். இன்று ஜெயந்தியை ஒரு கை பார்த்து விடுவது என்று தான் வந்தாள். ஆனால் நந்துவை எதிர்பார்க்கவில்லை அவள்.

“என்ன அத்தான், பிஸியா? வெளில எல்லாம் பார்த்தா என்கிட்ட பேசிட்டே இருப்பீங்க….? இப்போ உங்க வீட்டுக்கு வந்து இருக்கேன்…. இப்படி என் மனசை உடைக்கிற மாதிரி கிளம்ப சொல்லிட்டீங்க….” சோகமாக வைத்து கொண்டாள் முகத்தை அம்மு.

“சில்மிஷம்….” முனகி கொண்டான் வாய்க்குள் செல்லமாக. பொங்கி வரும் சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டான் கேபி.

அவனுக்கு கண் காட்டி விட்டு மெதுவாக தோட்டம் பக்கம் நகர்ந்தாள் அம்மு. அவளை அனுப்பிட்டு வரேன் பெரியம்மா என்று அவசரமாக சொல்லி விட்டு அவள் பின்னேயே நடந்தான்.

“ஹேய் சில்மிஷம்…. என்ன வீட்டுக்குள்ள எனக்கு சிக்னல் எல்லாம் காட்டுற…. கேடி டி நீ…. அத்தான் கிட்ட இருந்து என்ன வேணும் என் கண்ணுக்குட்டிக்கு?”

“ஹலோ ஹலோ…. அடங்குங்க மிஸ்டர் பாண்டி, ரொம்ப நல்ல பையன் மாதிரி இருந்தீங்க…. என்னை எப்படி வம்பு பண்ணுவீங்க வெளியில்….அது தான் நானும் உங்களை உங்க வீட்டில மாட்டி விடலாம்னு வந்தேன்…. அப்படியே உங்க பெரியம்மாவுக்கும் கொஞ்சம் பிபி ஏத்தலாம்ல….”

“அடிப்பாவி, மோசமானவடி….”

“இருக்கட்டும்….இவங்க கிட்ட நல்ல பேர் வாங்கி எனக்கு என்ன ஆக போகுது….?” என்று அசால்ட்டாக சொன்னவள் ஜெயந்தி எங்கே என்று பார்க்க அவர் இவர்களை பார்க்கும் படி நின்று கொண்டு இருந்தார். இப்போ பாரு கதையை என்று நினைத்தவள்,

“நீங்க ரொம்ப நல்ல பையனாம் உங்க பெரியம்மாவுக்கு, நான் தான் உங்க மனசை கலைச்சேனாம்… அப்படியா….?”

“ஆமா! இல்லையா பின்னே….”

“ஓ! சரி என்கிட்ட வந்து என் தோளை தொடுங்க, ஒத்துகிறேன்…. ”

“ஹேய் என்ன பிளான் பண்ற சில்மிஷம், திரும்பி பார்க்க போனவனை, ஷ்ஷ்…. திரும்பி பார்க்க கூடாது…. தொடுங்க, ஆறுதல் சொல்ற மாதிரி தட்டி கொடுங்க….”

அவனுக்கு என்ன பயம்? அவள் சொன்னதை எல்லாம் ரசித்து சிரித்தபடி செய்தான். நல்ல பண்றடி நீ…. நாளைக்கு இதெல்லாம் சற்குணம் கிட்ட சொல்லணும்.

ம்ப்ச்…. ஒழுங்கா சொல்றதை செய்ங்க….இப்போ குட் கேர்ள்னு கன்னத்தை தட்டுங்க…. அப்போ தான் நான் சிரிக்க முடியும்.

ஓ! அப்படியா மேடம்….? என்றவன், அவள் சொல்லியதோடு சேர்த்து சின்னதாக அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான்…. முத்தம் கொடுத்து விட்டு அவளை பார்த்து கண்ணடிக்க,

கோபத்தை முகத்தில் காட்ட முடியாதே…. ஜெயந்தி பார்த்து கொண்டு இருக்கிறார்…. இவள் கோபப்பட்டால் காரியம் சொதப்பி விடுமே…. அதனால் சிரித்துக்கொண்டே பண்டி பயலே இப்போ எதுக்குடா முத்தம் கொடுத்தே….? கடுப்படித்தாள்.

“நீ சொன்னதை மட்டுமே செஞ்சா நான் எப்படி கேபி….? என் டச் வேணாமா….? எப்படி உன் அத்தான்….?”

“செத்தான் அவன் இப்போ…. உங்க தோட்டத்தில ஒரு கிணறு இருக்குமே….அதில தள்ளி விடுறேன் இரு….”

ஒரு நிமிடம் அதிர்ந்து விழித்து உறைந்து நின்றான் கேபி.

“என்ன என்ன ஆச்சு….அத்தான்….?” பயந்து விட்டாள் அம்மு. அவளின் பயந்த முகம் கண்டு சட்டென்று தன்னை சுதாரித்து கொண்டவன்,

“நீ இதுக்கு முன்னாடி இந்த தோட்டத்துக்கு வந்து இருக்கியா? அந்த கிணறு பத்தி எப்படி தெரியும்?” அவசரமாக கேட்டான்.

“இல்லையே…. எனக்கு வீட்டுக்குள்ள வந்ததில் இருந்தே தோட்டத்துக்குள்ளே போகணும் போல இருந்தது…. தோட்டத்தோட இமேஜ் வந்தது…. கிணறும் தெரிஞ்சது….”

“ஓ! பெரிய இயற்கை ரசிகை இந்த அம்மா? இமேஜ் தோணுச்சாம்….உருட்டுடி…. என்னை தனியா தள்ளிட்டு வந்துட்டு கதை சொல்றியா…. கிளம்பு கிளம்பு….”

அவளை வாசல்புரம் நோக்கி திருப்பியவன், அவள் தோள்களில் கையை வைத்து தள்ளி கொண்டே சென்றான். இயல்பாக ஆனது போல் காட்டிக்கொண்டாலும், அவனுக்கு இன்னும் உள்ளே பதட்டம் இருந்தது. அம்மு பிறக்கும் முன்பே அம்ரிதவல்லியின் இறப்பால் மூடிய கிணறு பற்றி அம்முவிற்கு எப்படி தோன்றியது. அவனுக்கு சர்வநிச்சயம் யாரும் அந்த கிண்று பற்றி பேசி இருக்கவே மாட்டார்கள்.

“நீ ஏன் அவ்ளோ ஷாக் ஆனே…. ?” அம்முவின் மனதை அரித்து கொண்டு இருந்த கேள்வியை கேட்டாள் அம்மு.

“ஒன்னுமில்லை ஏனோ எனக்கு அப்போ அம்மா நியாபகம் வந்துருச்சு.”

அவன் சொன்னதை கேட்டவுடன் எதுக்கு வந்தோம் என்ன செய்தோம் எல்லாம் மறந்து விட்டது அவளுக்கு.

“அப்படியா….? எனக்கும் வந்துச்சு…. !”

“என்ன சொல்றாங்க உங்க அத்தை? அவங்க பையனை கட்டிக்கிட்டு ஒழுங்கா பார்த்துக்க சொல்றாங்களா….?”

அப்படி எல்லாம் ஒன்னுமில்லை…. ஆனா கொஞ்சம் நாளா ஏதாவது ஒரு விஷயம் திரும்ப திரும்ப தோணுது.”

“அப்படினா….?”

“இன்னைக்கு மாதிரி தோட்டத்துக்கு போகணும்னு….”

“ஊரு சுத்தி வர ஒரு சாக்கு….உருட்டு மன்னி…. உன் ஆசை எல்லாம் தானா தோணுதுனு அடிச்சு விடுற….போடி…. பத்திரமா வீட்டுக்கு போய் சேர் ….”

“ஏதோ எக்ஸ்பிரஷன் காட்டி பேச்சை மாற்றி வாசல் வரை அழைச்சிட்டு வந்து என்னை தொரத்தி விடுற….ம்ம்….பார்த்துக்கிறேன் உன்னை….”

“காலம் புல்லா நீ தான் என்னை பார்த்துக்கணும்…. இப்போ கிளம்பு….”

அவளை அனுப்பி விட்டு சிந்தனை வயப்பட்டபடி வீட்டிற்குள் வந்தான்.

உள்ளே வந்தவனை பிடித்து கொண்டார் ஜெயந்தி.

“நீ இப்படி எல்லாம் செய்வேனு கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கலை ராஜா. நந்து நீங்க ரெண்டு பேரும் நெருக்கமாக நின்னு பேசுறதை பார்த்து அழுதிட்டா. மாமா என்னை கட்டிக்க மாட்டார்னு உங்களுக்கு புரியலையா பாட்டினு கேட்டா…”

“நான் முன்னாடியே சொல்லியிருக்கேன் பெரியம்மா உங்க கிட்ட! என்னையும் நந்துவையும் சேர்த்து வைச்சு பேசாதீங்கனு…. நீங்க தான் கேட்கலை.”

“இப்போவும் ஒன்னும் கெட்டு போகலை…. நீ நந்துவை கல்யாணம் பண்ணிக்க…. எல்லாம் நல்லா இருக்கும்! இப்போ போய் அவளை சமாதானம் செய்.”

இவரிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று உணர்ந்தவன் நந்துவை பார்க்க சென்றான்.

படுத்து இருந்தவளின் அருகில் சென்றவன்,

“பெரியம்மா பில்டப் பண்றாங்க தானே….? நீ நல்லா தானே இருக்க?”

“ஏன் மாமா எனக்கு பீலிங்ஸ் இருக்காதா?” அவள் வருத்தமாக கேட்ட விதத்தில் கொஞ்சம் அதிர்ந்து போனது கேபியின் உள்ளம்.

“நந்து குட்டி, மாமா தான் உன்கிட்ட முன்னாடியே பாட்டி பேச்சை கேட்காதேனு சொல்லி இருக்கேன்ல…. என்னடா இது….நீ இப்படி வருத்தப்பட்டா எப்படி….? நான்….?” என்ன பேசுவது என்று புரியாமல் தவித்தான் கேபி.

மாமாவின் வருத்தத்தை உணர்ந்த நந்து, அவனை சமாதானம் செய்தாள்.

“நான் உங்களை லவ் எல்லாம் பண்ணலை மாமா, ஆனா மனசில் கொஞ்சம் ஆசை இருந்தது…. இன்னைக்கு அம்மு அக்காவோட பார்த்த உடனே தான் எனக்கே தெரிஞ்சுது அது. அதே சமயம் இன்னொன்னும் புரிஞ்சது, நீங்க அவங்க மேல வைச்சு இருக்க ஆசை…. நான் சரி ஆய்டுவேன் மாமா…. நீங்க வருத்தப்படாதீங்க.”

“சாரி டா நந்து….”

“மாமா ப்ளீஸ்…. உங்க மேல ஒன்னும் தப்பு இல்லை…. ஆனா அம்மா, பாட்டி, அப்பா எல்லாரையும் எப்படி சமாளிக்க போறீங்க?”

நான் ஒன்னு யோசிச்சு வைச்சு இருக்கேன்…. அதுக்கு உன் ஹெல்ப் வேணும்…. இங்க இருக்க போற இந்த கொஞ்ச நாள் நாம ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டே இருப்போம். என்னோட கோபம், குணம் உன்னை ரொம்ப ஹார்ட் பண்ற மாதிரி நடி, அவங்களுக்கே நமக்குள்ள சரி வராதுனு புரிஞ்சுடும்…. வேற யார் ஒத்துகிறாங்களோ இல்லையோ நிச்சயம் சிவகுமார் மாமா உன்னை எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுங்கிற எண்ணத்தை விட்டுருவார்.

“ஓக்கே மாமா டன்!”

“தேங்க்ஸ் டா….”

**********

அம்மு வீட்டுக்கு திரும்புவதற்கு சற்று நேரம் முன்பு தான் செல்வராஜூம் வீட்டுக்கு வந்திருந்தார். அப்பாவிடம் பேச செல்ல இருந்த அம்முவை தடுத்த வாசுகி,

“ஜெயந்தி வந்ததை அப்பா கிட்ட சொல்லாத….” என்றார்.

“அய்யோ ஏன்மா…. நான் இப்போ சூப்பரா அவங்களை வம்பு பண்ணிட்டு வந்தேன் தெரியுமா? அதை அப்பாகிட்ட சொல்லணும் மா.”

“அடிப்பாவி, உங்க அத்தை வீட்டுக்கா போயிட்டு வர?”

“ஆமா….”

“உன்னை…. என்ன பண்ணுவேன் நான்….கடவுளே…. சரி அப்பா கிட்ட எக்காரணத்தை கொண்டும் சொல்லிடாத…. உங்க அத்தை இறந்த அன்னைக்கே நாங்க அந்த காம்பவுண்ட் சுவத்துக்கு வெளியே தான் இருந்தோம்…. என் தங்கச்சியை வாழ விடாம செஞ்ச இந்த வீட்டுக்குள்ள எங்களுக்கு என்ன வேலைனு உங்க அப்பா உள்ளே வரவில்லை…. அவ்ளோ வருத்தம் அவருக்கு…. அதுவும் வயத்திலே பிள்ளையோடு கிணத்தில குதித்து தற்கொலை பண்ணிட்டு இருக்கான்னா என் தங்கச்சிக்கு எவ்ளோ மனவேதனையா இருந்திருக்கணும்னு சொல்லி சொல்லி அழுதார்….”

“அத்தை கிணற்றில் குதித்து தான் செத்தாங்களா…. அதுவும் மாசமா இருக்கும் போது?”

“ஆமா….”

வாசுகி சொன்ன நிமிடம் அம்முவின் மனதில் அம்ரிதவல்லியும் அவர் இடுப்பில் ஒரு பெண் குழந்தையின் உருவமும் தோன்ற, மயங்கி சரிந்தாள் அவள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!