வாடி ராசாத்தி – 16

5
(3)

வாடி ராசாத்தி – 16

“ஹலோ தம்பி நல்லா இருக்கீங்களா?” செல்வராஜின் நெருங்கிய நண்பரிடம் தொடர்பில் இருந்தான் கேபி. பேசும் விதத்தில் பேசி அவரை வசீகரித்து அவரிடம் இருந்து தகவல்களை பெற்று கொள்வான்.

“நல்லா இருக்கீங்களா மாமா…. உங்க நண்பர் என்ன சொல்றார்….?”

“உன்மேல கோவமா இருக்கேன் நான். நீ அவன் நிலத்தை விற்க விடாமா செஞ்சு இப்போ அவன் அனாவசியமான பிரச்சனையில் போய் மாட்டிக்கிட்டு இருக்கான். கூடவே பொண்ணு வாழ்க்கையும் மாட்டிக்கிட்டு இருக்கு….” என்று நாராயணன் செய்த வேலையை பகிர்ந்து கொண்டார்.

ரத்தம் சூடானது கேபிக்கு. அம்முவை பொண்ணு பார்க்க சென்றதில் இருந்தே அவர்கள் மீது ஆத்திரத்தில் தான் இருக்கிறான். ஆனால் என்ன செய்தாலும் செல்வராஜிற்கு பிரச்சனை ஆகி விடும், இவன் திருமண விஷயம் இன்னும் குளறுபடி ஆகும் என்பதால் கஷ்டப்பட்டு பொறுமை காத்தான். இப்போது நிச்சயமாக களத்தில் இறங்க வேண்டிய சூழ்நிலையை அவர்களே உருவாக்கி விட்டார்கள்.

“அப்படி எல்லாம் மாமாவை விட்ற மாட்டேன் நான்….என்ன நம்புங்க நீங்க….”

“பார்த்து செய் பா…. அவன் பாவம்….ரொம்ப நொந்து போய்ட்டான். நல்லது நடக்கணும்”

“கண்டிப்பா மாமா.”

நாராயணன் செய்த குளறுபடியில், சட்ட ரீதியாக திருமணம் குறித்து ஏதும் செய்ய முடியாது…. பெண்ணை கட்டி தந்து தான் ஆக வேண்டும் என்ற எந்த சட்டமும் இல்லை. ஆனால் வீடு விஷயத்தில் லாக் ஆகி விடுவார் செல்வராஜ். கேபி உதவி செய்வதாக கூறினாலும் ஒத்துக் கொள்ள மாட்டார். அவரை எவ்வாறு சிக்கலில் இருந்து விடுவிப்பது….? தீவிரமாக யோசித்தவனுக்கு ஒரே ஒரு வழி தான் புலப்பட்டது…. புன்னகை பூத்துக் கொண்டான். சில்மிஷத்துக்கு மட்டும் தெரிஞ்சுது…. என்னை பின்னி பெடலெடுப்பா…. சிரித்துக் கொண்டான்.

உடனே சற்குணத்திடம் சொல்ல வேண்டும் என்று தோன்ற, அவனை அழைத்தான்.

“என்ன மச்சான், அன்னைக்கு வண்டியை தூக்கினோம்…. இன்னைக்கு உன் ஆளையே தூக்கணுமா….?”

“ஆளை தூக்கணும்…. ஆனா என் ஆளை இல்லை…. என் ஆளை பெத்தவரை…. என் அருமை தாய் மாமனை….”

“அடப்பாவி, மாமன் மக கிட்ட விளையாடலாம்…. இப்படி மாமன் கிட்டயே விளையாடுறியே…. அவர் வயசு என்ன….பாவம் டா அந்த மனுஷன்….”

“இல்லைடா, அந்த நாராயணனும் கிஷோரும் மாமாவை லாக் பண்ண பார்க்கிறாங்க…. அதுக்கு தான் மாமாவை நாமே கடத்தி பத்திரமா ஒளிச்சு வைச்சுட்டு, பழியை மட்டும் அவங்க மேல் போட்டு சீக்கிரமா இந்த வீட்டு விஷயத்தையும் கல்யாண விஷயத்தையும் முடிக்கணும்….”

“அவரை தூக்கினது நீ தான்னு தெரிஞ்சா உன் சோலி முடிஞ்சுது மாப்பிள்ளை…. அப்பறம் கல்யாண கனவு மட்டும் தான் உனக்கு….”

“அதெல்லாம் யோசிக்காம இருப்பேனா…. கடத்தி வைச்சு இருக்கும் போது கிஷோர் கடத்தின மாதிரியே மெயின்டெயின் செஞ்சுடுவோம்….”

“ஐடியா என்னவோ நல்லா தான் இருக்கு…. எதிரிங்க நீ நினைச்ச மாதிரி ரியாக்ட் பண்ணுவாங்களானு தான் தெரியலை….”

“என்னவா இருந்தாலும் ஒரு கை பார்த்திடுவோம்….”

************

மயங்கி சரிந்த அம்முவை கண்டு வாசுகி அலற, அனைவரும் ஓடி வந்தனர். தண்ணீர் தெளிக்க சில நிமிடங்களில் கண் விழித்து விட்டாள் அவள். குடிக்க கொடுத்து, அவளை சற்று நேரம் படுக்க சொல்லி, அவள் சரியான பின் என்னவென்று கேட்க, தெரியவில்லை என்று சமாளித்து விட்டாள். அனைவரும் படுக்க சென்ற பின் அம்மாவிடம் கேட்டாள் அம்மு,

“ஏன்மா அந்த மாமா அத்தையை ஏதும் கொடுமை செஞ்சாரா மா…. எனக்கு கேட்கவே பயமா இருக்கு….? ஏன் அந்த அளவுக்கு போனாங்க….?”

“யாருக்கும் ஒன்னும் தெரியலைடா, வேலைக்காரி ஒருத்தி தான் வீட்டுக்குள்ள வேலை பார்ப்பா, இப்போ மாதிரி நிறைய பேர் இல்லை, அவ ஒருத்தி தான், அங்கேயே தங்கி இருந்து வேலை செஞ்சா, ஆனா அவ ஊமை…. அவகிட்ட போய் என்ன கேட்க?”

“ஓ! அத்தை எப்படி மா? அமைதியா? நல்லா பேசுவாங்களா?”

“அளவா தான் பேசுவா…. தன்னை பத்தி மத்தவங்க ஏதும் பேசிடக் கூடாதுனு ரொம்ப ஜாக்கிரதையா இருப்பா, அதனால் ரொம்ப பேசி பழக மாட்டா…. எல்லாத்துக்கும் யோசிப்பா, ஆனா ரொம்ப அன்பானவ.”

“அந்த ஜெயந்தி?”

“அது தான் மாமியார் மாதிரி நடந்துக்கும்…. ரொம்ப ஆட்டம்…. உங்க மாமா அத்தையை நல்லா வைச்சு இருக்கார்னு நாங்க ஜெயந்தியை கண்டுக்காம இருந்தோம்…. உன் அத்தை எதுவுமே சொல்லையே….”

“ம்ம்ம்….”

“நாம என்ன வாங்கிட்டு போனாலும் குறை சொல்ற மாதிரியே பேசும், எப்படியாவது மட்டம் தட்டணும்னு இருக்கும்…. உங்க அத்தைக்கு ரொம்ப பிடிக்கும்னு நம்ம வீட்டு வாழைப்பழம் அடிக்கடி கொண்டு போய் கொடுப்பார் உங்க அப்பா. அதுக்கு பரவாயில்லை, விலை குறைச்சல் சாமான் தான் பிடிக்கிற மாதிரி வளர்த்து இருக்கீங்க, செலவு மிச்சம்னு கிண்டல் பண்ணுச்சாம், உடனே உங்க அப்பா, டஜன் டஜனா ஆப்பிள், மாதுளைனு கொண்டு போய் தள்ளிட்டார்.”

“அவங்க உங்களை பேசினா எனக்கு கஷ்டமா இருக்கு, இனிமே நீ வராதே அண்ணானு உங்க அத்தை சொல்ல, அதில இருந்து தான் உங்க அப்பா வாசல்ல இருந்தே தங்கச்சியை பார்த்து பேசிட்டு வர ஆரம்பிச்சார்.”

இப்படியே அம்ரிதவல்லியை பற்றி பேசியபடி தூங்கி போயினர் இருவரும்.

மறுநாள் காலை,

மனைவி, அம்முவை தனியாக அழைத்த செல்வராஜ், சம்பத்திற்கும் அழைத்து அவனை வீடியோ காலில் வைத்துக் கொண்டு பேசினார். வாசுகி என்மேல் கோபப்படாதே…. எனக்கு இவ்ளோ தூரம் வரும்னு தெரியலை என்று, நாராயணன் இப்போது மகளை கட்டிக்கொடுத்தால் மட்டுமே வீட்டை ரிஜிஸ்டர் செய்து மீதி பணம் கொடுப்பேன் என்று சொன்னதை சொன்னார்.

“கல்யாணம் பத்தி எல்லாம் அவங்க பேச முடியாது பா, அதுக்கு எல்லாம் அவங்களுக்கு ரைட்ஸ் இல்லை…. அக்ரீமெண்ட் சம்பந்தமா நாம ஏதாவது லாயர் பார்ப்போமா?” என்றான் சம்பத்.

“நான் விசாரிச்சுட்டேன் பா, கோர்ட்டுக்கு போனாலும் ரொம்ப கஷ்டம், முன் பணம் வாங்கி இருக்கிறதால, அவங்க கொஞ்சம் நாள் கழிச்சு ரிஜிஸ்டர் பண்றோம்னு சமாளிப்பாங்க. கேஸ் இழுக்கும், அதை விட முக்கியமா என் கடன் தீராது, வீடும் மாட்டிக்கும்…. நானும்….” வாயை பொத்தி கொண்டு குலுங்கி குலுங்கி அழுதார் செல்வராஜ்.

எதுவும் பேசாது கண்ணீர் விட்டார் வாசுகி….பேசுவதற்கு வார்த்தைகள் முட்டி கொண்டு வந்தாலும் பல்லை கடித்து கொண்டு அமைதி காத்தார். இனி பேசி தான் ஒன்னும் பிரயோஜனம் இல்லையே…. அதோடு செல்வராஜும் தான் செய்ததை நினைத்து தவிக்கிறாரே….

“நான் ஊருக்கு வரேன் பா, வந்து என்ன செய்யலாம்னு பார்க்கலாம் பா, பாண்டியை கூட கேட்கலாம் பா….”

“அவன் பேரே சொல்லாத…. அவனால் தான் இவ்வளவும்….” கசப்பாக சொன்னார் செல்வராஜ்.

“ஏன் உங்க பிடிவாதத்தினாலேனு கூட சொல்லலாமே….” பட்டென்று சொல்ல,

“அவன் கிட்ட என்னை பிச்சை வாங்க சொல்றியா…. அதுக்கு நான் தூக்கிலே தொங்கலாம்…. அதுக்கு அப்பறம் நீ அவனை அழைச்சு வைச்சு உன் பொண்ணை கட்டிக்கொடுத்து சொந்தம் கொண்டாடிக்க….” குரூரமாக பேசினார் செல்வராஜ்.

சரி வாங்க இப்போவே நாம ரெண்டு பேரும் தொங்கிடலாம்…. எனக்குனு என்ன இருக்கு தனியா….? வாசுகி முகத்தை மூடிக் கொண்டு அழ,

அம்மா அப்பா இருவரும் அழுவதை பார்த்து,

“நான் கிஷோரையே கல்யாணம் பண்ணிக்கிறேன் பா….” மனதை கல்லாக்கி கொண்டு அறிவித்தாள் அம்மு. அந்த வார்த்தைகளை சொல்லும் போது, கேபியின் முகம் தான் அவள் மனதுள், அவர்களுக்குள் சமீபமாக நடந்த எல்லாம் படமாக ஓடியது. ஆனாலும் இந்த உறவுக்கு எதிர்காலம் இல்லை என்று உணர்ந்து சொன்னாள். முன்பே தெரியும் தான், ஆனாலும் அவன் எங்கே விட்டான்…. சரி போனது போகட்டும் இனி இல்லை, அவன் வேண்டாம், எனக்கு அப்பா தான் வேண்டும்! மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

“ஹேய், அம்மா அப்பா சண்டைக்கு எல்லாம் யோசிச்சு கல்யாணம் முடிவு பண்ணுவியா…. நான் வரேன் பர்ஸ்ட் ஊருக்கு….” என்றான் அண்ணன்.

“எனக்கு இந்த கல்யாணம் தான் சரியா வரும்னு தோணுது…. நானும் பையன் பத்தி விசாரிச்சேன்…. தப்பா ஒன்னும் யாரும் சொல்லலை…. அம்முவுக்கு சரினா நீ குழப்பாத பா….” கையை எடுத்து கும்பிட்டார் செல்வராஜ்.

இவர் கையாலாகாத தனத்துக்கு என் பொண்ணு வாழ்க்கையா….மனதிற்குள் பொறுமி தவித்தார் வாசுகி. ஆனால் எதுவும் தான் சொல்ல முடியாதே…. சொன்னால் அம்முவே ஒத்துக் கொள்ள மாட்டாள். என்ன நடக்குமோ அது தானே நடக்கும்….விதி விட்ட வழி என்று நினைத்து கொண்டார். நம் முயற்சி எல்லாம் தோல்வி அடையும் போது நம் மனதை வேறு எப்படி தான் தேற்றி கொள்வது?

அதையே தான் அம்முவும் சொல்லி கொண்டாள் மனதினில்…. எல்லாருக்குமா ஆசைப்பட்டது நடக்கிறது….?

இவர்கள் இப்படி இருக்க, கேபியை அழைத்த சம்பத், என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டான். தொழிலில் இருக்கிறான், பல பேரை தெரியும்,பல அனுபவம் இருக்கும், முந்தைய தலைமுறை போல் அல்லாது எல்லா விதமாகவும் சிந்திப்பான் அல்லவா? அதோடு அவனுக்கு கேபி தன் தங்கையை விரும்புவது தெரியும். ஆனால் இவனிடம் சொல்லததால் அவன் காதில் விஷயத்தை மட்டும் போட்டான். சம்பத்திற்கு அம்முவை கேபிக்கு திருமணம் செய்து கொடுக்க தான் விருப்பம்.

சம்பத் சொன்னதும் மிகுந்த ஆவேசமானான் அவன். சம்பத்திடம்,

“மச்சான், உங்க தங்கச்சி கிட்ட சொல்லி வை, எவன் கூட வேணுமானாலும் நிச்சயம் பண்ணிக்க சொல்லு, ஏன் கல்யாண மேடை வரை கூட போக சொல்லு, எனக்கு கவலை இல்லை….. ஏன்னா அவள் கழுத்துல தாலி கட்ட போறது நான் மட்டும் தான்! அவ என் பொண்டாட்டி…. விட்ருவேனா அவ்ளோ சுலபமா….?”

“கோச்சுக்காத அத்தான்…. அப்பா நிலைமைனால தான் அம்மு இப்படி யோசிக்கிறா….”

“நான் அவ தான் வேணும்னு போராடற மாதிரி அவ நான் வேணும்னு நினைக்கலையே …. என்னை ஈசியா தள்ளி விட்டுகிட்டே இருக்கா…. இனி நானா போய் அவகிட்ட ஏதும் பேசமாட்டேன் மச்சான்…. ஆனா அவளை தான் கட்டுவேன்….”

என்னை மாதிரியான பிடித்தம் இது? குழம்பி போனான் சம்பத். அவனுக்கு என்ன தெரியும் அவள் தான் அவனின் ஆதாரம், மூச்சுக்காற்று என்று.

“கடன் தொல்லை, மானப் பிரச்சனைனு அப்பா அழுதா ஒரு பொண்ணா அவ என்ன பண்ண முடியும் அத்தான்….? அவளை புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்….”

“என் பொண்டாட்டிக்காக நீ பேச வேண்டாம் மச்சான், எனக்கு தெரியும், நான் பார்த்துக்கிறேன்…. அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் வைத்து விட்டான் கேபி. இங்கு தான் உள்ளம் ஒருத்தியையே சுத்தி சுத்தி வந்ததே….”

மீன் தொட்டிக்குள் சுற்றி வரும் மீனை போல் அவள் சொன்னதாக சம்பத் சொன்ன வார்த்தைகளும் அதனால் ஏற்பட்ட வலியுமாக இருந்தான் கேபி.

நீங்காத எண்ணம் ஆக
ஆனாய் இன்று
உன்னோடு நானும் போன
தூரம்
யாவும் நெஞ்சிலே
ரீங்கார நினைவுகளாக
அலையை
இங்க மிஞ்சுதே
நூலறுந்த பட்டம் போலே
உன்னை சுற்றி நானும் ஆட
கைகள் நீட்டி நீயும் பிடிக்க
காத்திருக்கிறேன்….

எங்கோ இந்த பாடல் ஒலித்தது. அதை கேட்டவன்,

நீ பிடிக்கலைனா நான் உன் கையை பிடிச்சுப்பேன்…. கெட்டியா, இந்த உலகத்தில் நான் இருக்கவரை விடமாட்டேன்…. சூளுரைப்பது போல் சொல்லி கொண்டான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!