வாடி ராசாத்தி – 17
எவ்வளவு வேலை பளு இருந்தாலும் அது எதுவுமே கேபியை பாதிக்காது. அவன் எல்லா வேலைகளையும் விரும்பி செய்வதால் எந்நேரமும் உற்சாமாகவும் துடிப்பாகவும் தான் இருப்பான். ஆனால் இன்று அவன் வாழ்வின் ஆதாரமே லேசாக ஆட்டம் கண்டு விட, மனம் கொஞ்சம் துவண்டு தான் போனது அவனுக்கு. சிறு வயதில் இருந்து எல்லாமே இருந்தும் அம்மா இல்லாததால் எதுவுமே இல்லாதது போல் தான் உணர்ந்திருக்கிறான். அம்முவை இழந்து விட மாட்டான் என்று அவனுக்கு நம்பிக்கை இருந்தது ஆனாலும் மனதின் ஓரம் சின்ன சஞ்சலம்.
“என்னடா, மாமாவை தூக்கணும்னு சொன்னவன் சூப்பர் பிளான் தருவேனு பார்த்தா, என்னவோ டல் அடிக்கிற….? என்னடா ஆச்சு?”
“இப்போ அந்த பிளான் ஒர்க் அவுட் ஆகாது டா.” என்று சம்பத் சொன்னதை எல்லாம் சொன்னான் கேபி.
“எப்போ மாமாவே கல்யாணம் வரை தயார் ஆய்ட்டாரோ, அதுக்கு அப்பறம் நான் அவரை கடத்தி பழியை கிஷோர் மேல் போட்டா காமெடி ஆய்டும்…. வேற பார்ப்போம், இப்போ என்னை கொஞ்சம் தனியா விடு டா ப்ளீஸ்.”
“அப்படி எல்லாம் விட முடியாது, நீ என்ன புதுசா சோக பாட்டு வாசிக்கிற…. சே! கன்றாவியா இருக்கு…. அந்த கிஷோர் எல்லாம் ஒரு ஆளுனு …. அவனுங்க பிஸினஸ்ல எவ்ளோ மோசம்னு நமக்கு தெரியாதா….?”
“நிறைய பேர் அப்படி தானே டா, இதெல்லாம் ஒரு காரணமா காட்ட முடியுமா? முக்கியமா, நான் மாமா கிட்டயோ, அம்மு கிட்டயோ இதை பத்தி பேசவே விரும்பலை, எனக்குனு கொஞ்சம் சுயமரியாதை இருக்கு. அதே மாதிரி எங்க கல்யாணம் நடக்கும் ஆனா எப்படினு தெரியாது.”
“டேய் ஒழுங்கா சொல்லு, இந்நேரம் நீ ஒரு மாஸ்டர் பிளான் போட்டு இருப்பே….”
“இம்ம்….” மர்மாக புன்னகைத்தான் கேபி.
“தெரியும் டா எனக்கு…. யார்டா…..?”
“ஜெயராஜ்!” கேபியின் ஒற்றை வார்த்தையில்,
“ரியல் எஸ்டேட் தாதா…. செம ஐடியா மச்சி….நீங்க ரெண்டு பேரும் க்ளோஸ் பிரண்ட்ஸ்னு யாருக்குமே தெரியாது…. உலகம் உங்க ரெண்டு பேரையும் எதிரினு நினைக்கிறதை யூஸ் பண்ணிக்க போறியா….சூப்பர்….!”
***********
கேபி ரியல் எஸ்டேட் தொழிலில் கால் பதித்த போது இந்த ஜெயராஜுடன் பல பிரச்சனை, கருத்து வேறுபாடு வந்தது. பின் ஒரு சந்தர்ப்பத்தில், கேபி அவனுக்கு உதவும் சூழ்நிலை வந்த போது எந்த கருத்து வேறுபாட்டையும் நினைவில் கொள்ளாமல் உதவினான். அதனால் இருவரும் அதன் பின் நல்ல நண்பர்கள் ஆனார்கள். வெளியில் தெரியாத அளவு பார்த்துக் கொண்டார்கள். இதனால் தொழிலில் அவர்களுக்கு குழி நோண்ட நினைப்பவர்கள், ஏமாற்ற பார்ப்பவர்கள் எல்லாம் தெரிய வந்தது. அந்த ரகசிய நட்பு தான் இப்போது உதவ போகிறது.
************
“ஹலோ, நான் செல்வராஜ் பேசுறேன்….”
“சொல்லுங்க சொல்லுங்க…. நல்ல விஷயமா தான் இருக்கும் நம்புறேன்….”
“ம்ம்…. பர்ஸ்ட் வீட்டை ரிஜிஸ்டர் செஞ்சுடலாம், அப்பறம் கல்யாணம் வைச்சுக்கலாம்…. எங்க வீட்டில் எல்லாருக்கும் இந்த கல்யாணத்தில சம்மதம்.”
“ரொம்ப சந்தோஷம், ஆனா ரிஜிஸ்ட்ரேஷன் முன்னாடி நிச்சயம் மட்டும் வைச்சுக்கலாம்….”
“ஏங்க என் நிலைமை தெரிஞ்சும் இப்படி சொல்றீங்க….? கடன் என் கழுத்தை நெறிக்குதுங்க…. நான் வீட்டில விசேஷம் வைச்சா என்னை காறி துப்புவாங்க எல்லாரும். ஏன் எங்க மேல் நம்பிக்கை இல்லையா உங்களுக்கு? அதுக்கும் வேணா ஒரு டீல் போடுங்க….” ஆதங்கமாக சொன்னார்.
“சே சே…. சரி…. நான் என் பையன் கிட்ட கலந்துகிட்டு சொல்றேன்….”
*************
“கிஷோர், வீட்டை ரிஜிஸ்டர் பண்ணிட்டு கல்யாணம் வைச்சுக்கலாம் சொல்றார் டா செல்வராஜ்.”
“என் மாமனார்னு சொல்லுங்க பா….”
“ரொம்ப ஓவரா போகாத, நல்லா இல்லை….”
“அம்ரிதாவுக்காக செய்யலாம் பா….”
எரிச்சலாக இருந்தது நாராயணனுக்கு. என்ன இவன் கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி பண்றான்.
“ஊர்ல இருக்கவன் யாரும் என்னை பார்த்து சிரிக்கிற மாதிரி எதுவும் செஞ்சுடாதே…. என்ன பண்ணனும் அதை சொல்லி தொலை.”
“நீங்க என்ன வேணா செய்ங்க, எனக்கு கல்யாணம் மட்டும் தான் முக்கியம்.” சொல்லிவிட்டு, அதே சந்தோஷத்துடன் அம்முவை பார்க்க கிளம்பி விட்டான் கிஷோர்.
***********
அவன் அப்படி கிளம்பியதும், நாராயணனிடம் மட்டுமே இந்த திட்டத்தை பற்றி பேச வேண்டும் என்ற பிளான்படி, ஜெயராஜின் ஆள் அவரை சந்திக்க வந்தான்.
“நான் ராஜ் ரியல் எஸ்டேட் ஆபிஸ்ல இருந்து வரேன், எங்க சார் உங்க கிட்ட பேசணும் சொன்னார். போன் பண்ணி தரவா….?”
“என்ன விஷயமா?”
“அது எங்கே சாரே சொல்லுவார், எனக்கு தெரியாது.”
“சரி கொடுங்க.”
“ஹலோ மிஸ்டர் நாராயணன், நான் நேரா விஷயத்துக்கு வரேன். நீங்க கார்த்திக்கேய பாண்டியன் வாங்கணும்னு ரொம்ப முயற்சி பண்ண அவர் மாமா வீட்டை வாங்க போறதா கேள்வி பட்டேன், எனக்கு அந்த வீடு வேணும். கேபி முயற்சி பண்ணி அவனுக்கு கிடைக்காத விஷயம் என்கிட்ட இருக்கணும்…. அவனுக்கு அது பெரிய அவமானமா இருக்கணும்! என்ன சொல்றீங்க…. நீங்க கொடுக்கிற விலையை விட உங்களுக்கு நான் அதிகம் கொடுக்கிறேன், நானே அந்த ப்ராபெர்ட்டியை வாங்குற மாதிரி ஏற்பாடு பண்ணுங்க.”
“இருங்க இருங்க சார், நீங்க வேகமா பேசிட்டே போறீங்க…. இது என் பையன் கல்யாணத்தோட சம்பந்தப்பட்டது…. அப்படி எல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்ய முடியாது. வீட்டை வாங்கி பொண்ணுக்கே கொடுக்கிறோம்னு சொல்லி இருக்கோம்….”
“எனக்கு விற்க போறதா யாருக்கிட்டயும் சொல்லாதீங்க….”
“இதனால் எனக்கு என்ன சார் லாபம்?”
“பணம் சார்…. பணம்…. வேண்டாமா?”
“நான் யோசிச்சு சொல்றேன்….”
நாராயணனுக்கு கிஷோர் இப்படி தாழ்ந்து போவது, அம்ரிதாவை ரொம்ப கொண்டாடுவது எதுவும் பிடிக்கவில்லை. ஆனாலும் மகன் ஆசையை கெடுக்கவும் மனம் இல்லை, சொல்ல போனால் பயமாக இருந்தது ஏதாவது குளறுபடி ஆனால் கிஷோர் பைத்தியமாகி விடுவானோ என்று.
அழைப்பை துண்டித்து விட்டு நிமிர, அக்கவுண்ட்ன்ட் வந்து,
“தம்பி வந்து ஒன்றரை லட்சம் கேஷ் வாங்கிட்டு போனார்….” என்றார்.
“யோவ், அது அந்த ரஹிம் பாய்க்கு கொடுக்கணும் யா….”
“தம்பிக்கும் அது தெரியுங்க….”
உடனே மகனுக்கு அழைத்தவர், “எதுக்கு டா உனக்கு இப்போ அவ்ளோ பணம்?”
“அம்முவை பார்க்க போறேன், சும்மா போனா எப்படி….? ஒரு இரண்டு பவுன்ல ஒரு செயின் வாங்கி இருக்கேன் பா…. அவ கழுத்திலே நான் வாங்கி கொடுத்த செயின், சூப்பரா இருக்கும்ல, தாலி கட்டுற வரை என் உரிமை பா….”
இவன் வாழ்க்கை பூரா இப்படி தான் இருப்பானா…. பயம் வந்தது அவருக்கு.
அதே நேரம் வீட்டில் இருந்து கிஷோரின் அம்மாவும் அழைத்தார். அவருக்கு இந்த செயினை அவன் போட்டோ அனுப்ப, அவருக்கு மிகுந்த கோபம்.
“நம்ம கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம இவனே நகை வாங்குற அளவு இருக்கான், இத்தனைக்கும் இன்னும் எதுவும் முடிவு கூட ஆகலை…. அவங்க அவ்ளோ யோசிக்கிறாங்க, இவன் இப்படி அலையுறான்…. இந்த பொண்ணு வேண்டாம், எல்லாத்தையும் நிறுத்துங்க….அதிசயமா ஊர்ல இல்லாத பொண்ணு….” அவர் கோபத்தை எல்லாம் கொட்டிவிட்டு பட்டென்று வைத்தார் போனை.
நாராயணன், ரொம்ப யோசித்தார். பேசாம இந்த கல்யாணத்தை கலைச்சு விட்ருவோமா…. ஆனால் உடனே, அப்புறம் மகன் தன்னை சும்மா விட மாட்டான் என்று நினைத்து கொண்டார். மிகுந்த யோசனைக்கு அப்பறம், ஜெயராஜ் கொடுத்த வாய்ப்பை எடுத்து கொள்வது என்று முடிவு செய்தார். இதனால் ஏதாவது குழப்பம் வந்து கல்யாணம் வேண்டாம் என்றால் நல்லது. இல்லையென்றால் தலையெழுத்து என்று விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தார்.
***********
செல்வராஜின் வீட்டிற்கு சென்ற கிஷோரை அங்கு யாருமே எதிர்பார்க்கவில்லை. அதுவும் அவன் நகையுடன் வர, அவன் வேகம் கண்டு மிரண்டு போயினர்.
“செயினை போட்டு காட்டு அம்ரிதா….”
அவள் முழிப்பதை கண்டு, “சாமிக்கு கிட்ட வைச்சுட்டு, அப்பறம் நல்ல நேரம் பார்த்து போடலாம்….” உதவிக்கு வந்தார் வாசுகி.
“ஆன்ட்டி, அங்கிள் ரொம்ப தேங்க்ஸ், இந்த சந்தோஷத்தை கொண்டாட, நான் அம்ரிதாவை வெளியே அழைச்சிட்டு போகவா?”
பதறினார் வாசுகி. “அதெல்லாம் இல்லை தம்பி, வேண்டாம். நிச்சயம் கூட ஆகலை….”
மிகுந்த ஏமாற்றம் அடைந்த கிஷோர், இன்னும் கொஞ்சம் நாள் தான் உங்க பெர்மிஷன் எல்லாம்…. அப்பறம் பாருங்க என்கூடவே தான்! அவன் குரலில் கிண்டலோ, கேலியோ இல்லை….
அவன் பேசும்முறை பிடிக்காமல், “என்னைக்கு இருந்தாலும் அவ எங்க பொண்ணு தம்பி” என்றார் உம்மென்று செல்வராஜ்.
“கரெக்ட் தான்…. ஆனா எனக்கு தானே உரிமை ஜாஸ்தி! சரி நான் கிளம்புறேன், என் கூட வாசல் வரை வா அம்ரிதா.
வேறு வழியின்றி அவனுடன் நடந்தாள் அம்மு.
“அன்னைக்கு நைட் என்கூட காரில் வந்துட்டு, இப்போ ஏன் இப்படி தயங்குற அம்ரிதா….? கல்யாணம் பண்ணிக்க போற நாம தான் ஒருத்தருக்கு ஒருத்தர் முக்கியம். சரியா….?”
உலகத்துக்கு கருத்து சொல்றான் லூசு பய…. அவனின் பேச்சிற்கு கவுண்டர் கொடுத்தாள் மனதிற்குள்.
“நெக்ஸ்ட் டைம் உங்க அம்மா அப்பாக்கு தெரியாம வெளில போலாம்….”
லூசு பயலே….நீ பேசுறது எனக்கு பிடிக்காதா இல்லையானு கூட தெரியலை…. புடிங்க சார்…. இவனை பிடிச்சு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் போடுங்க சார்….
சரியாக அந்நேரம் அவர்கள் வீட்டை கேபியின் கார் கடந்து போக, உள்ளமெல்லாம் பதறியது அம்முவிற்கு…. இவனுடன் தன்னை நிச்சயம் பார்த்து இருப்பான், என்ன நினைப்பான்…..? துக்கம் தொண்டையை அடைத்தது …. அத்தான் அத்தான் என்று மனம் ஓலமிட்டது.