வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 02

4.5
(13)

வாழ்வு : 02 

அவர் சென்றதும் காலில் சலங்கை கட்டாத குறையாக ஆட ஆரம்பித்தார் கீதா. “ஏய் என்னடி உனக்கு கண்ணிலையும் உடம்பிலையும் பிரச்சனைனு பார்த்தால்… இப்போ வயித்துலயும் பிரச்சனை போல…. ஒரு சீக்காளியை புடிச்சி என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சி அவனோட வாழ்க்கையை நாசமாக்கிட்டேனே….” என்று சத்தம் போட்டார். கணவன் தனக்கு ஆதரவாக ஏதாவது பேசுவான் என்று பார்த்தாள் சம்யுக்தா. ஆனால் அவனோ எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்பதைப் போல நின்றிருந்தான்.  

அவளும் எதுவும் பேசாமல், ஆதரவாக ஒருவரும் பேசுவதற்கு இல்லாமல் அவரிடம் ஏச்சுக்களை வாங்கிக் கொண்டு சிலை போல நின்றிருந்தாள் சம்யுக்தா. அவள் பேசாமல் நிற்பதைப் பார்த்த கீதாவுக்கு கோபம் வர அவளை இழுத்து அறைந்தாள். அவளது உப்பிய கன்னங்கள் கீதாவின் அறையில் மேலும் உப்பியது. தலைகுனிந்து கொண்டு நின்றாள். அவளது கூந்தலைப் பிடித்து இழுத்தாள். வலியில் சம்யுக்தாவிற்கு உயிர் போனது. “அத்தை விடுங்க வலிக்குது…. என்னால முடியலை அத்தை….” என்று வலி தாங்காமல் கதறினாள். 

கீதாவோ சற்றும் மனமிரங்காமல் மேலும் சம்யுக்தாவின் கூந்தலை பிடித்து மேலும் இறுக்கினாள். “வலிக்குதா…? நல்லா வலிக்கட்டும்…. இப்படித் தானே அந்த தாமரை எங்கிட்ட குடும்ப வாரிசு இன்னும் இல்லையானு கேட்கும் போது, எனக்கும் வலிச்சிருக்கும்…. உன்னால எந்த விழாவிலும் தலையைக் காட்ட முடியலை….” என்றார். 

பின்னர் அவளை விட்டவர், “பிரகாஷ் இவளை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் செக் பண்ணி இவளுக்கு என்ன பிரச்சினைனு பாரு…. இவளுக்கு பிரச்சனை இருந்தால் அதை சரிப்படுத்த முடியுமானு கேளு…. அப்படி முடியலைன்னா இவளை டைவர்ஸ் பண்ணிடு…. உனக்கு இவளை மாதிரி குண்டான கேவலமான பொண்ணா இல்லாமல், இவளை விட அழகான பொண்ணைப் பார்த்து உனக்கு கட்டி வைக்கிறன்….” என்றார். 

அவரது ஒவ்வொரு வார்த்தையும் அவளைக் கொன்றது. எதற்காக இந்த நிலை என்று தெரியாமல் அழுது கொண்டு நின்றாள். அவளை தள்ளி விட்டு சென்றார் கீதா. கீழே விழுந்தவளை தூக்கி விடாமல் அவளை மிதித்து விட்டு வெளியே சென்றான் கட்டிய கணவன். மெல்ல அருகில் இருந்த சோபாவை பிடித்துக் கொண்டு எழுப்பினாள். 

பிரகாஷ் உதைத்ததில் வலது காலில் அதிக வலி இருந்தது. மெதுவாக நடந்து அறைக்குள் சென்று அவள் படுத்துறங்கும் பாயை எடுத்து விரித்துப் படுத்துக் கொண்டாள். கண்ணீர் காவிரி போல பாய்ந்து, தலையணையை நனைத்தது. தேற்றுவார் இன்றி அழுது கொண்டு இருந்தாள். 

வெளியே வந்த பிரகாஷ் ஒரு ஹாஸ்பிடலுக்குச் சென்று, சம்யுக்தாவை செக் பண்ண டாக்டரிடம் அப்பாயின்மெண்ட் எடுத்துக் கொண்டு கம்பனிக்குச் சென்றான். 

லேடிஸ் கிளப்பிற்கு வந்த கீதா, நேராக லீலாவதி இருக்கும் இடத்திற்கு சென்று அவரை அழைத்துக் கொண்டு தனியாக வந்தார். “என்ன கீதா, வந்ததும் வராததுமா தனியாக கூட்டிட்டு வர்ற…? ஏதாவது பிரச்சினையா…?” என்றார். 

அதற்கு கீதா, “உன்னோட பொண்ணு என்னைக்கு என் வீட்டுக்கு மருமகளா வந்தாளோ, அப்போ இருந்து பிரச்சனைதான்…. கல்யாணமாகி ஒரு வருஷமாச்சு ஆனால் இன்னும் சம்யுக்தா உண்டாகலையானு எங்களோட சொந்தக்காரவங்க கேட்க ஆரம்பிச்சுட்டாங்க…. லீலா உண்மையை சொல்லு சம்யுக்தாவிற்கு ஏதாவது பிரச்சினை இருக்கா…..?” என்று கேட்டார். 

லீலாவதியோ, ‘என்னடா இது புது பிரச்சனை…..’ என்று மனசுக்குள் நினைத்தவர் வெளியே கீதாவிடம், “இல்லை கீதா அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை… அவள் நல்லாத்தான் இருக்கா….” என்றார். 

அவரிடம் கீதா, “எனக்குத் தெரியாது லீலா…. நான் சம்யுக்தாவை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போகச் சொல்லி இருக்கிறன்… அவளுக்கு ஏதாவது பிரச்சனை இருந்து, அதை சரி பண்ண முடியும்னா, எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை…. ஆனால் அவளுக்கு ஏதாவது தீர்க்க முடியாத பிரச்சினை இருக்கும் என்றால், என்னை மன்னித்து விடு லீலா… உன்னோட பொண்ணை உன் வீட்டிற்கே திருப்பி அனுப்பிடுவன்…. அது மட்டுமல்ல என்னோட பையனுக்கு வேற நல்ல… எப்படி உன்னோட பொண்ணை விட எல்லாத்துலயும் உயர்ந்த பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சிடுவன்….” என்ற கீதா, லீலாவதியின் பதிலை எதிர்பாராது அங்கிருந்து சென்றார். 

கீதா அவரிடம் இவ்வாறு பேசிச் சென்றது, லீலாவதிக்கு பிடிக்கவே இல்லை. கீதா இப்படி தன்னை பேச காரணமான மகள் மீது அவரது கோபம் திரும்பியது. கிளப்பில் இருந்து நேராக வீட்டிற்கு வந்தார். அவர் வந்ததும், “காப்பி போட்டு தரவா அம்மா…..” என்று பணிவுடன் நின்ற வேலைக்காரி சாந்தியிடம், “என்னோட அறைக்கு ஜூஸ் எடுத்திட்டு வா….” என்று சொல்லிவிட்டு மேலே சென்றார். 

அறைக்கு வந்ததும் முதல் வேலையாக சம்யுக்தாவிற்கு போன் பண்ணினார். கடைசியாக எப்போது அவளுக்கு போன் பண்ணி பேசினார் என்று அவருக்கு ஞாபகம் இல்லை. நம்பரை தேடி எடுத்து போன் பண்ணினார். அந்தோ பாவம் அவளது போன் வேலை செய்யவில்லை. ஆம், பிரகாஷ் அவளிடம் இருந்து போனைக் கூட பறித்து விட்டான். பாவம் அது இவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்ததும், அவள் எப்பிடி இருக்கிறாள், நல்லா இருக்கிறாளா? கல்யாண வாழ்க்கையில ஏதாவது பிரச்சனை இருக்கானு விசாரிச்சா அவளோட நிலைமை இவருக்கு தெரிஞ்சிருக்கும். லீலாவதியோ சம்யுக்தாவிற்கு கல்யாணம் செய்து குடுத்ததும் தன்னோட கடமை முடிந்துவிட்டது என்பது போல அவளை கைகழுவி விட்டார். பிறகு எப்படி அவருக்கு சம்யுக்தாவின் நிலை தெரியும். மகள் வேண்டும் என்றே போனை அணைத்து வைத்திருப்பதாக நினைத்தவர், கோபத்தில் தனது போனை தூக்கி எறிந்தார். 

உமேஸ்வரனின் கம்பனியில் ஒரு வெளிநாட்டு கம்பனிக்கான ப்ராஜக்ட் நடந்து கொண்டு இருந்தது. அவரின் முழுக் கவனமும் அதில்தான் இருந்துது. வீட்டில் என்ன நடக்குது என்பதை அறியாமல் இருந்தார். பிரகாஷ் டாக்டரிடம் அப்பாயின்மெண்ட் வாங்கி விட்டு வீட்டிற்கு செல்லாமல், கம்பனிக்கு வந்தான். உமேஸ்வரன் சொல்லும் வேலைகளை சரியாக செய்து கொண்டிருந்தான். 

வேலையை முடித்துவிட்டு, “அப்பா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…” என்றான். அதற்கு அவர், “இந்த ப்ராஜக்ட் ரொம்ப முக்கியம் பிரகாஷ் நீ எது பேசுறதா இருந்தாலும் இந்த ப்ராஜக்ட் முடிஞ்ச அப்புறம் பேசு….. இல்லைனா உன்னோட அம்மாகிட்ட பேசு என்னை டிஸ்டர்ப் பண்ணாதே….” என்று சொல்லி விட்டார். பிரகாஷ்க்கு கோபம் வந்தது. இருந்தாலும் அதை உமேஸ்வரனிடம் காட்டிக் கொள்ளவில்லை. 

மணிகண்டன் லீலாவதியின் இரண்டாவது மகள் வித்யா அமெரிக்காவில் படித்துக் கொண்டு இருக்கிறாள். அவளுக்கு காலேஜ்ஜில் விடுமுறை இல்லாததால் தனது அக்காவின் கல்யாணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அதன் பிறகு நாட்டிற்கு வரலாம் என்றால், தாய் லீலாவதி அவளை இங்கு வருவதற்கு அனுமதிக்கவே இல்லை. மாறாக ஒவ்வொரு மாதமும் மணிகண்டனும் லீலாவதியும் அமெரிக்கா சென்று அவளை பார்த்து ஒரு வாரம் மகளுடன் இருந்து விட்டு வருவார்கள். பக்கத்தில் இருக்கும் மூத்த மகளைப் பார்க்க அவர்களுக்கு நேரம் இல்லை. ஆனால் இரண்டாவது மகளை கடல் கடந்து போய் பார்த்து விட்டு வருவார்கள். காலேஜ்ஜில் இறுதி ஆண்டில் பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் படித்துக் கொண்டு இருந்த வித்யாவின் அருகில் வந்து அமர்ந்தாள் அவளது தோழி மதுரா. “என்ன வித்து யோசிச்சிட்டு இருக்கிற…..?” என்றாள். “ஒண்ணுமில்லை மது, அக்காகூட பேசி ஒன் இயர் ஆகுது…. அக்காவோட ஞாபகமாக இருக்கு…. நான் அவங்களை ரொம்ப மிஸ் பண்றன்…..” என்றாள். 

அதற்கு மதுரா, “அதுதான் இன்னும் ஐந்து மாசத்தில நம்மளோட படிப்பு முடிஞ்சிடும்ல… அப்புறம் நீ போய் உன்னோட அக்காவைப் பார்க்கலாம்…. ஆமா நீ ஊருக்கு போயிட்டு என்ன பண்ணப் போற….?” என்று கேட்டாள். 

வித்யா தோழியை பார்த்து சிரித்தாள்,”என்னோட அம்மாவும் அப்பாவும் எங்கிட்ட ஒரு மாதிரியும் அக்கா கிட்ட ஒரு மாதிரியும் நடந்துப்பாங்க மது…. அது ஏன்னு எனக்கு இப்போ வரைக்கும் தெரியாது…. நான் ஊருக்கு போய் என்ன பண்ணணும்னு என்னோட அம்மா இப்பவே ஒரு ஷெட்யூல் போட்டு வச்சிருப்பாங்கனு நினைக்கிறன்… நீ என்ன பண்றதா இருக்கிற மது…..?” என்றாள். 

மதுரா, “நான் என்ன பண்றது…? முதல்ல ஊட்டிக்கு போயிட்டு அப்பாகூட கொஞ்சநாள் இருக்கணும்…. அப்பாவோட கம்பனியை பார்த்துக்கலாம்னு இருக்கிறன்….. ஆனால் உன்னை மாதிரியே நான் என்ன செய்யணும்னு ஒருத்தன் ஷெட்யூல் போட்டிருப்பான்…..” என்றாள் வருத்தத்துடன். அவளது வருத்தம் வித்யாக்கு புரிந்தது. 

“உன்னோட நிலைமை என்னை விட ரொம்ப பாவம் மது…. என்னோட அம்மா கிட்ட கொஞ்சமாவது பேசி சமாளிச்சிடலாம்….. ஆனால் உன்னோட அண்ணா கூட பேசறது என்ன….? முன்னாடி நிற்கவே முடியாதே மது…. எனக்கு அன்னைக்கு நம்ம யூனிவர்சிட்டி ஃபங்ஷன்ல அவர பார்த்ததும் உதறலே வந்திடுச்சு….” என்ற வித்யாவிடம், “உனக்கே அப்பிடின்னா…? அப்போ எனக்கு எப்பிடி இருக்கும்னு யோசிச்சி பாரு…. சரி இதை பற்றி பேசிட்டு இருந்தால் என்ன நடக்க போகுது…. வா நாம இங்க இருக்கிற நாட்களை என்ஜாய் பண்ணலாம்…..” என்று தோழியை இழுத்துக் கொண்டு சென்றாள் மதுரா. 

மறுநாள் டாக்டர் வசுந்தரா முன்னால் பிரகாஷூடன் இருந்தாள் சம்யுக்தா. டாக்டர் வழமை போல இருவரிடம் சில கேள்விகளை கேட்டார். பின் நர்ஸ் ஒருவரை அழைத்து சம்யுக்தாவிற்கு எடுக்க வேண்டிய டெஸ்ட் எல்லாவற்றையும் எடுக்குமாறு, சிலவற்றை எழுதி குடுத்து, அவருடன் சம்யுக்தாவையும் அனுப்பி வைத்தார்.

பிரகாஷிடன் பேசிக் கொண்டு இருந்தார். அரைமணி நேரம் கழித்து நர்ஸூடன் வந்தாள் சம்யுக்தா. நர்ஸ் ரிப்போர்ட்டை டாக்டரிடம் குடுத்து விட்டு அங்கிருந்து சென்றார். ரிப்போர்ட்டை பார்த்துக் கொண்டு இருந்தார். பின் அதை மூடி வைத்து விட்டு, இருவரையும் பார்த்தார். 

சம்யுக்தா டாக்டரிடம், “டாக்டர் ரிப்போர்ட் எப்பிடி வந்திருக்கு….?” என்று கேட்டாள். அவளை பார்த்து வலியுடன் சிரித்தார். “சம்யுக்தா நான் சொல்லப்போற விசயத்தை கவனமா கேளுங்க.. உங்களோட கர்ப்பப்பையிலதான் பிரச்சனை இருக்கு…..” என்றார். 

இதைக் கேட்ட சம்யுக்தாவிற்கு இடி விழுந்தது போல இருந்தது. பிரகாஷ்க்கு மகிழ்ச்சியாக இருந்தது. சம்யுக்தா தனது மனசை தேற்றிக் கொண்டு, “டாக்டர் இதை சரிப்படுத்த முடியாதா…..?” என்றாள். அதற்கு டாக்டர், “என்னால உறுதியாக சொல்ல முடியாது…. மூணு மாசம் ட்ரீட்மென்ட் எடுத்துக்கோங்க…. அதுக்கு பிறகு மற்றதை பார்க்கலாம்…. ” என்றார். 

“சரி டாக்டர், அப்போ ட்ரீட்மென்ட்டுக்கு எப்போ வரணும்….?” என்றாள். டாக்டரும், நெக்ஸ்ட் வீக்ல இருந்து வருமாறு சொன்னார். இருவரும் டாக்டரிடம் சொல்லி விட்டு வீட்டிற்கு சென்றனர். 

காரில் வரும் வழியில் எல்லாம் சம்யுக்தாவை வார்த்தைகளால் காயப்படுத்திக் கொண்டு வந்தான் பிரகாஷ். அவனது வார்த்தைகளை கேட்ட சம்யுக்தாவிற்கு இப்படியே செத்தாலும் நல்லது என்று தோன்றியது. தலைஎழுத்து என்று அமர்ந்திருந்தாள். வீட்டின் உள்ளே செல்ல முயன்ற சம்யுக்தாவை தடுத்து நிறுத்திய கீதா சொன்னதைக் கேட்ட சம்யுக்தா அதிர்ச்சி அடைந்தாள். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!