வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 04

4.5
(17)

வாழ்வு : 04

வீட்டின் உள்ளே செல்ல தடுமாறிய தீஷிதனை பிடிக்க வந்த புகழைத் தடுத்தான் அவன். “விடு புகழ் என்னால மனேஜ் பண்ணிக்க முடியும்…”

“தீஷி நீ நிற்கவே தடுமாறிட்டு இருக்க வா நானே உன்னை விட்டுட்டு போயிடுறேன்…”

“நோ புகழ் ஐ ஆம் ஸ்டெடி….” என்றவன் தன்னை பிடித்திருந்த நண்பனின் கையை விலக்கி விட்டு உள்ளே சென்றான். வாசலில் நின்றவாறு தீஷிதன் உள்ளே சென்றதைப் பார்த்த புகழுக்கு பெருமூச்சு வந்தது. அங்கிருந்து செல்லத் திரும்பியவன் முன்னால் நின்றிருந்தார் பரந்தாமன். 

அவரைப் பார்த்ததும் புகழ், “அங்கிள்…” என்றான். 

“என்ன புகழ், தீஷி எப்பவும் போல இன்னைக்கும் குடிச்சிருக்கானா…?” “ஆமா அங்கிள்….”

“எனக்கு தீஷியை நினைத்தால் என்ன பண்றதுனே தெரியல புகழ்…. எதுவும் கேட்டால் ரொம்ப கோவப்படுறான்…. அவன் முன்னால நின்னு பேசக்கூட முடியல…. ஒரு கல்யாணம் பண்ணி வச்சா சரியாயிடுவான்னு பாத்தா அதுக்கும் சம்மதிக்கிறான்ல…. பொண்ணுங்கனாலே அவ்வளவு வெறுப்பா இருக்கு அவனுக்கு….”

“கவலைப்படாதீங்க அங்கிள் எல்லாம் சீக்கிரம் சரியாயிடும்….”

“அந்த நம்பிக்கைலதான் புகழ் இப்ப வரைக்கும் இருக்கேன்….”

“அங்கிள் மதுரா எப்ப வாரதா இருக்கா…?” 

“இன்னும் கொஞ்ச நாள்ல படிப்பு முடிஞ்சிடும் புகழ்… அப்புறம் இங்க வந்துடுவா…. அவ வந்ததுக்கு அப்புறம் அவ என்ன பண்ணனும்னு இப்பவே இவன் ஷெட்யூல் போட்டு வச்சிருக்கான்…. அவ சின்னப் பொண்ணு கொஞ்ச நாள் ஜாலியா இருக்கட்டும்னா கேக்குறானே இல்ல…”

“தீஷியை பத்தித்தான் தெரியுமே அங்கிள் ஒரு முடிவு எடுத்துட்டு அதுல இருந்து அவனை மாத்தவே முடியாதுன்னு…. பரவால்ல அதுவும் கம்பெனி விஷயங்களை கத்துக்க தானே வேணும்….”

“அதுவும் சரிதான் புகழ்… நான் இல்லைன்னு சொல்லல ஆனா காலேஜ் முடிச்சுட்டு வந்த கையோட கம்பெனியை கொடுக்கணுமானு யோசிக்கிறேன்….”

“அங்கிள் தீஷி எதையும் யோசிக்காமல் பண்ண மாட்டான்னு தெரியும்ல உங்களுக்கு…. அவசரமா எந்த ஒரு முடிவும் எடுக்க மாட்டான்…. நல்லா யோசிச்சு தான் ஒரு முடிவு எடுப்பான்…. வெயிட் பண்ணி பாக்கலாம்….”

“சரி புகழ் நீ பத்திரமா போ….”

“ஓகே அங்கிள் நீங்க இத பத்தி யோசிச்சிட்டு இப்படி இருக்காதீங்க… நான் போயிட்டு வரேன்….” என்ற புகழ் பரந்தாமனிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டான். ‘இறைவா என்னோட மகனுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நீ தான் அமைச்சுக் கொடுக்கணும்…’ என்று ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு உள்ளே சென்றார். 

கீதா திட்டிய திட்டை வாங்கிக் கொண்டு அறைக்குள் சென்ற சம்யுக்தா அழுதழுது கன்னங்கள் உப்பி, கண்ணீர் வற்றியது தான் மிச்சம். இரவு பிரகாஷிற்காக காத்திருந்தாள் சம்யுக்தா. அவன் வந்ததும், “உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்….” என்றாள். 

“என்கிட்ட பேச என்ன இருக்கு….?”

“என்ன இருக்கா நான் உங்க பொண்டாட்டி தானே…. உங்கம்மா என்ன திட்டுறாங்க… பாக்குற சொந்தக்காரங்க எல்லாரும் என்கிட்ட வந்து குழந்தை இல்லையா குழந்தை இல்லையானு கேக்குறாங்க… ஏன் எனக்காக நீங்க ஒரு வார்த்தை கூட பேசல….?”

“உனக்காக எதுக்கு நான் பேசணும்…?”

“என்ன கேட்டீங்க எனக்காக ஏன் பேசணுமானா… நான் உங்க பொண்டாட்டிங்க…. அதாவது ஞாபகம் இருக்கா…?”

“இத பாரு என்ன பொறுத்த வரைக்கும் நீ என் பொண்டாட்டி கிடையாது… நைட்டுக்கு பெட்ல என்னோட என்ஜாய்மென்டுக்கு மட்டும் தான் நீ… ஊர பொருத்தவரைக்கும் தான் நீ என் பொண்டாட்டி புரிஞ்சுதா…. இதுக்கு அப்புறம் உனக்கு சப்போர்ட் பண்ணல… அது பண்ணல இது பண்ணல சொல்லி என்கிட்ட வரவே கூடாது…. ஒரு குழந்தையை பெத்து கொடுத்தா இந்த வீட்ல நீ இருக்கலாம்… இல்லன்னு வையேன் எங்கம்மா எனக்கு அடுத்த பொண்ண பாத்து கல்யாணம் பண்ணி வச்சிட்டு வாங்க…. எனக்கு நீ இல்லன்னா இன்னொரு பொண்ணுனு நான் ஜாலியா இருப்பேன்….”

“ச்சீ இப்படி சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்ல…. இதே பொண்ணுங்க நாங்க இப்படி சொன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்…? நீங்க ஏத்துக்குவீங்களா…? இல்ல இந்த சமூகம்தான் ஏத்துக்குமா…?”

“ஏய் என்னடி வாய் ஓவரா போகுது… தொலைச்சிடுவேன் தொலைச்சு… ஒழுங்கு மரியாதையா ஹாஸ்பிடல் போய் ட்ரீட்மென்ட் எடுக்குற வழிய பாரு வந்துட்டா பேச… இந்த முகர கட்டைக்கு நாங்களே பெருசு…. இதுக்குள்ள இன்னொரு புருஷன் கேக்குதா இன்னொரு புருஷன்….” என்று அவளை தள்ளிவிட்டு போன் வர அதை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான் பிரகாஷ்.

சம்யுக்தாக்கு அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுக்கு ஈட்டியை போல பாய்ந்தது. ‘கடவுளே எனக்கு ஒரு குழந்தையை தராட்டியும் பரவால்ல… மரணத்தையாவது கொடுத்துடு….’ என்று வேண்டிக் கொண்டாள் அந்த அப்பாவிப் பெண். 

அந்த பிரபலமான ஹாஸ்பிடலில் அவளுக்கான ட்ரீட்மெண்ட் நடந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அந்த டாக்டரிடம் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா. ட்ரீட்மென்ட் எடுக்கும் காலத்தில் அவள் ஓய்வாக இருக்க வேண்டும் என்று டாக்டர் சொன்னார். ஆனால் கீதாவோ அவளிடம் நன்றாக வேலை வாங்கிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் இந்த ஊரை விட்டு எங்கேயாவது கண்கானாத தொலைவிற்கு சென்றால் என்ன என்று எண்ணுவாள் சம்யுக்தா ஆனால் அவள் அப்படி சென்றால் கணவன் தன் ஒழுக்கத்தை கேள்விக்குறியாக்கி விடுவான் என்றும் அவளுக்கு தெரியும். ஓரிரு முறை தற்கொலைக்கும் முயன்றாள், ஆனால் விதி அவளைக் காப்பாற்றி விட்டது. இப்படியாக அந்த வீட்டில் அவள் நரக வேதனை அனுபவித்து வந்தாள்.

இங்கே ஒருநாள் கீதாவிடம் பிரகாஷ், “அம்மா நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்…”

“என்ன பிரகாஷ் என்ன உன் பொண்டாட்டி விஷயமா…?”

“அம்மா நீங்களும் அப்பாவும் சொன்னீங்கன்னு தான் நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… அவளை என் பொண்டாட்டின்னு சொல்லாதீங்க…. ஏதோ அவளை கட்டிக்கிட்டா அவளோட சொத்து வரும்னு சொன்னீங்க…. ஆனால் ஒரு பைசா கூட வர்ற மாதிரி இல்ல…”

“இத்தனை நாள் பொறுமையா இருந்துட்ட இன்னும் கொஞ்ச நாள் அமைதியா இரு பிரகாஷ்…. எல்லாத்தையும் நம்ம கைக்கு எடுத்துக்கலாம்…. ஆனா அதுக்கு அவ இங்க இருக்கணும்…”

“அம்மா எனக்கு அவளை கொஞ்சம் கூட பிடிக்கலம்மா…. சீக்கிரமா அந்த சொத்தை நம்ம பேருக்கு மாத்திட்டு அவளை விரட்டி விட்ருங்க அம்மா….” என்றான்.  

“நானுமே அப்படித்தான் நினைக்கிறேன் பிரகாஷ்…. இவளால சொந்தக்காரங்க முன்னாடி தல காட்ட முடியல…. எப்ப போனாலும் எந்த ஃபங்சனுக்கு போனாலும் உன் மருமக மாசமா இருக்காலான்னு கேட்டே என்னை சாவடிக்கிறாங்க….”

“எனக்கும் அப்படித்தான் அம்மா… கம்பெனிக்கு போன ஜாடமாடயா பேசுறாங்க…. ரொம்ப கஷ்டமா இருக்கு…” என்று நடித்தான் பிரகாஷ். அவனின் நடிப்பை உண்மை என்று நம்பிய கீதா, “இங்க பாருப்பா… இதோ ரெண்டு நாள்ல அந்த ட்ரீட்மென்டோட முடிவு தெரிஞ்சிடும்ல்ல அதுக்கு அப்புறம் அவளுக்கு குழந்தை பிறக்காதுனு டாக்டர் சொன்னா அவளை இங்க இருந்து அனுப்பிடலாம்…. அதுக்கப்புறம் உனக்கு நான் நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்…”

“சரிமா இப்பவும் உங்க இஷ்டப்படி தான் நடக்குறன் எப்போவும் உன்இஷ்டப்படி தான் நடப்பேன்…. நீங்க எது பண்ணாலும் அதுக்கு எனக்கு சம்மதம்…” என்று விட்டு சென்றான் பிரகாஷ். 

இரண்டு நாட்களும் பெரும் தவிப்புடன் இருந்தாள் சம்யுக்தா. அவளுக்கு ஆறுதல் கூறக்கூட அங்கே யாரும் இல்லை. டாக்டர் என்ன சொல்லுவாரு என்று மிகவும் பயமாக இருந்தது. அந்த ஹாஸ்பிடலில் மேடிட்ட வயிற்றுடன் வரும் பெண்களை பார்க்கும் போது தன் வயிற்றிலும் ஒரு உயிர் பிறக்காதா என்று அவளிடம் ஏக்கம் தோன்றியது இயற்கையே. ஆனால் இப்போது, ‘ஒரு குழந்தை இல்லாவிட்டால் எதுக்காக இந்த சமூகம் பெண்களை மட்டுமே கேள்விக்குறியாக்குகிறார்கள். அத்தனை டெஸ்ட்டும் எனக்கு மட்டும் தானே… பிரகாசுக்கு எந்த டெஸ்டும் எடுக்கலையே… ஏன் பிரச்சனை அவர்கிட்ட இருக்காதா என்ன…’ என்று அவளுக்கு அவளே கேட்டுக்கொள்வாள். அதை வாயைத் திறந்து வெளியே கேட்க முடியாதே. காலையிலிருந்து கீதா அவளை அவசரப் படுத்திக் கொண்டே இருந்தார். “இங்க பாருடி சீக்கிரமா அந்த டாக்டர் கிட்ட போய் ரிப்போர்ட்ட கேட்டு என்ன முடிவு என்று கேளு…. அந்த ரிப்போர்ட்ல தான் உன் வாழ்க்கையோட முடிவே இருக்கு… என்ன புரிஞ்சுதா…?”

“சரிங்க அத்தை புரிஞ்சுது….”

“நீ முன்னாடி போ. எனக்கு சில வேலை இருக்கு அதை முடிச்சுட்டு நான் ஹாஸ்பிடல் வந்துடுறேன்…”

“சரிங்க அத்தை….” என்றவள் தனியாக ஹாஸ்பிடலுக்கு சென்றாள். எவ்வளவு அழைத்தும் பிரகாஷ் வரவில்லை. 

அறை ஒன்றில் டாக்டர் ஒருவரின் முன்னிலையில், கையில் ஒரு ரிப்போர்ட்டை வைத்துக் கொண்டு, கண்களில் இருந்து வந்த கண்ணீரை துடைக்கவும் மனம் இன்றி இருந்தாள் சம்யுக்தா. அவளைப் பார்க்க டாக்டருக்கும் பாவமாகத்தான் இருந்தது. என்ன செய்வது விதி வலியது அல்லவா. “சம்யுக்தா நீங்க தான் உங்களோட மனச தேத்திக் கொள்ளணும்…. இந்த மூணு மாசமா நீங்களும் என்கிட்ட ட்ரீட்மென்ட்டுக்கு வாரீங்க…. என்ன செய்றது நானும் என்னால முடிஞ்ச அத்தனை ட்ரீட்மென்ட்டும் பண்ணிப் பார்த்தேன்…. கடைசியாக ஃபாரின்ல இருந்து கூட டாக்டரை வர வச்சு உங்களுக்கு ட்ரீட்மென்ட் பண்ணினேன்…. ஆனால் அதோட பலன்கூட உங்களுக்கு கை கொடுக்கவே இல்லையே… நீங்க உங்களுடைய ஹஸ்பண்ட்கிட்டேயும், உங்களோட மாமியார்கிட்டேயும், உங்க அம்மாகிட்டேயும் உண்மையை எடுத்துச் சொல்லுங்க…. அவங்க புரிஞ்சிப்பாங்கன்னு நான் நினைக்கிறேன்…. இதுக்கு மேல என்னால எதுவும் பண்ண முடியாது….” என்று சொன்னார் டாக்டர் வசுந்தரா. 

டாக்டரிடம் பதில் எதுவும் சொல்லாமல், கண்களைத் துடைத்து விட்டு கையில் இந்த ரிப்போர்ட் எடுத்து வெறுமையுடன் பார்த்த சம்யுக்தா, டாக்டரிடம் எதுவும் பேசவில்லை. கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள். 

வெளியே வந்த சம்யுக்தாவிற்கு என்ன செய்வதென்றே தெரியாமல் மெதுவாக நடந்து வந்தாள். அவள் மனதிலோ ஆயிரம் எண்ணங்கள். கண்களில் கண்ணீரோ வடிந்தது. அதைக்கூட அவள் உணரவில்லை. இந்தக் கல்யாண வாழ்வில் அவளுக்கு கண்ணீர் மட்டுமே மிச்சம். நடந்து வந்தவள் முன்னால் வந்து நின்றார் கீதா. அவரைப் பார்த்த சம்யுக்தாவிற்கு பயமாக இருந்தது. 

“என்ன சொன்னாங்க டாக்டர்…?”

“அதுவந்து…. அதுவந்து…” என்று தடுமாறிய சம்யுக்தாவை அவர் அறைய காலையில் சாப்பிடாது, டாக்டர் சொன்னதால் மன உளைச்சலில் இருந்தவள் அவரின் அறையை தாங்க முடியாமல் கீழே விழுந்தாள் சம்யுக்தா. 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

1 thought on “வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 04”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!