அந்த இரவு நேரத்தில் பாலத்தின் மீது ஏறி நின்றாள் சம்யுக்தா. தொட்டுத் தாலி கட்டிய கணவன் ஏமாற்றி விட்டான். தாய் வீட்டுக்குச் செல்லலாம் என்றால் தாயோ இவள் ஒரு அநாதை என்ற பட்டத்தைக் கொடுத்து வெளியே அனுப்பி விட்டார். சொந்த பந்தம் எதுவும் இல்லாமல், தனக்கென்று ஒரு உறவு இல்லாமல் யாருக்காக இந்த வாழ்க்கை…? எதற்காக இந்த வாழ்க்கை..? என்று எண்ணம் தான் சம்யுக்தாவிற்கு தோன்றியது.
இதற்கு மேல் இந்த உலகத்தில் இருந்து என்னதான் செய்யப் போகின்றேன்… பேசாமல் செத்து விடலாம்… என்ற விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டாள் அவள். அவள் பாலத்தின் மீது ஏறி நிற்பதை பார்த்த அந்த இரு விழிகளுக்கு சொந்தக்காரர் தனது காரில் இருந்து இறங்கி வேகமாக அவளிடம் வந்தார். சரியாக அவள் குதிக்கச் செல்லும் போது அவள் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினார். தனது கையைப் பிடித்திருந்தவரை பார்த்த சம்யுக்தா. “என்னை எதுக்காக தடுக்கிறீங்க…. என்னோட கையை விடுங்க…. நான் சாகனும்…” என்றாள். அவளைப் பார்த்து சிரித்தவர், “கீழ இறங்கி வாம்மா…” என்றார்.
“இல்ல நான் சாகணும்… என்னை விடுங்க…” என்றாள் மறுபடியும்.
“அம்மாடி நான் சொல்றதை கேளுமா… முதல்ல கீழ இறங்கு…” என்றவர் அவள் கையை பிடித்து கீழே இறக்கி விட்டார். சம்யுக்தா அவரைப் பார்த்து, “என்ன எதுக்காக காப்பாத்தணும்னு நினைக்கிறீங்க…. என்ன விடுங்க நான் சாகணும்…. எனக்கு தான் இங்க யாருமே இல்லையே…. இங்கிருந்து நான் என்ன பண்ண போறேன்…. எல்லாரும் என்னை ஏமாத்துறாங்க…. துரோகம் மட்டுமே என்னோட வாழ்க்கையில இருக்கு….” என்றாள்.
அவளை பாவமாக பார்த்தவர் அவளின் தலையை வருடி விட்டு, “அம்மாடி நான் சொல்றத கேளு… இங்க சாகணும்னு நீ முடிவு எடுத்து இருக்க… அந்த முடிவு எடுக்கவே ஒரு தைரியம் வேணும்…. அப்படி தைரியமான நீ ஏன் வாழ நினைக்க கூடாது…”
“எதுக்காக வாழனும்…. நான் யாருக்காக வாழனும்…. இத்தனை நாள் என்னோட அப்பா அம்மானு நினைச்சவங்க, இன்னைக்கு அனாதைனு சொல்லிட்டாங்க…. தாலி கட்டின புருஷன் நான் உயிரோட இருக்கும்போதே இன்னொரு பொண்ணோட வாழ்ந்து இப்போ அவ கர்ப்பமாக வேற இருக்கா….. இப்படி இருக்கும்போது நான் யாருக்காக இருக்கணும்…. என்ன விடுங்க..” என்றாள். “இருக்கணுமா நீ இருக்கணும்… இங்க எத்தனையோ பொண்ணுங்களோட நிலை இதுதான்…. ஏன் அநாதைங்க வாழறது இல்லையா…? எத்தனையோ ஆச்சிரமங்கள்ல பாரு எத்தனையோ அநாதைங்க வாழ்ந்திட்டு இருக்காங்க…. மத்தவங்களுக்கு வாழ்க்கை கொடுத்துட்டு இருக்காங்க…. இந்த பரந்த உலகத்துல எல்லாருக்குமே ஏதோ ஒரு உறவு ஒன்னு இருக்கும்…. அந்த உறவை நீ தேடு… உன்னை ஏமாத்திட்டு போனவங்க, உனக்கு துரோகம் பண்ணிட்டு போனவங்களை பத்தி ஏன் யோசிக்கிற…. உனக்கு என்ன முடியும்னு பாரு உனக்காக வாழு…. வேறு யாரையும் எதிர்பார்த்து வாழாத….” என்றார்.
சம்யுக்தாக்கு அவர் கூறுவது புரிந்தாலும் அவளால் அந்த விரக்தியில் இருந்து வெளியே வர முடியவில்லை. “சார் நீங்க சொல்றது சரிதான்… ஆனா என்னால இதுல இருந்து வெளிவர முடியல….”
“இங்க பாருமா நான் ஊட்டியில் இருக்கிறன்… என் பேரு பரந்தாமன்… பிஸ்னஸ் பண்ணிட்டு இருக்கேன்… ஒரு பிஸ்னஸ் விஷயமா தான் இங்க வந்தேன்… அந்த நேரத்தில் என்னோட ப்ரெண்டு ஹாஸ்பிடல் இருக்கிறது தெரிஞ்சது…. அதுதான் அவன பாத்துட்டு போலாமேனு அந்த ஹாஸ்பிடலுக்கு வந்தேன்…. அங்கதான் உன்னை உன் மாமியார் புருஷன் நடத்தின விதத்தை நான் பார்த்தேன்…. ஏனோ உன்னை பாக்க பாவமா இருக்க, உன்னை தொடர்ந்து வந்தேன்…. நீ பேசாம என் கூட ஊட்டிக்கு வந்திடு…. என் வீட்ல தங்கிக்க…. என் கம்பெனியில் வந்து உனக்கு ஒரு வேலை போட்டு கொடுக்கிறேன் கொஞ்ச நாளைக்கு இந்த இடத்தை இந்த ஊரை மறந்துட்டு…. புது இடத்துல புது மனுஷங்களோட பழகிப் பாரு… உனக்கு வாழ்க்கைனா என்னன்னு தெரியும்…. நீ ஒரு கூட்டுக்குள்ளயே இருக்குற… அம்மாடி அந்த கூட்டை விட்டு வெளியே வா…. இந்த உலகத்தைப் பாரு… உன்னை சுத்தி இருக்கிறவங்க பாரு.. அவங்க கூட பழகு அப்பதான் உனக்கு இந்த வாழ்க்கைனா என்னனு புரியும்…. இந்த வாழ்க்கைல எவ்வளவு பேரு இருக்காங்க…. எப்படிப்பட்ட மனுஷங்க இருக்காங்கன்னு உனக்கு புரியும்…..” என்று கொஞ்சம் கொஞ்சமாக பேசி அவளின் மனதை மாற்றினார்.
“என்னை நம்புமா…. எனக்கு ஒரு பொண்ணு ஒரு பையன் இருக்காங்க…. பொண்ணு அமெரிக்கால படிச்சிட்டு இருக்கா…. பையன் தான் பிசினஸ் பாத்துகிட்டு இருக்கான்…. நீ என்கூட வாம்மா… என் பொண்ணா இருந்தா உன்ன இப்படி நடுரோட்டில் விட்டுட்டு போவனா…. என்கூட வாமா…” என்று அழைத்தார்.
“சம்யுக்தாவிற்கு வேறு இடத்திற்கு சென்றால் நல்லது என்ற எண்ணம் தோன்ற, “சரிங்க சார் நான் உங்க கூட வரேன்….” என்றாள்.
“வாமா….” என்று அவளை அழைத்துக் கொண்டு காருக்கு வந்தவர். காரில் அவளை ஏற்றிவிட்டு வண்டியை ஓட்டினார். கொஞ்ச தூரம் சென்றதும், “அம்மாடி உன் பேர் என்ன… நீ சொல்லவே இல்ல…” என்று பேச்சுக் கொடுத்தார் அவளிடம்.
“என்னோட பேரு சம்யுக்தா சார்…”
“ரொம்ப அழகான பேருமா… எனக்கு கொஞ்சம் பசிக்குது நான் டைம்க்கு டேப்லெட் போடணும்… அந்த ஹோட்டல்ல சாப்பிட்டு போலாம்…”
“இலங்க சார் எனக்கு பசி இல்ல…. எனக்கு எதுவும் வேணாம்….”
“அப்படி எல்லாம் சொல்லாதம்மா… தனியே சாப்பிட முடியாது… என்கூட வந்து ஒரு காபியாவது குடிமா..” என்று அவளை வற்புறுத்தி ஹோட்டலுக்கு அழைத்து வந்தார். இருவருக்கும் சேர்த்து உணவை ஆர்டர் பண்ணினார். சாப்பாடு வந்ததும் அவளுக்கும் பரிமாறி இவரும் உண்டார்.
உண்டுவிட்டு மீண்டும் வந்து பயணத்தை தொடர்ந்தார். காரில் வரும்போது சம்யுக்தா அவரிடம், “சார் நான் எம்பிஏ படிச்சிருக்கேன்… ஆனா என்னோட சர்டிபிகேட் எல்லாம் வீட்ல தான் இருக்கு…. நான் வரும்போது எதையுமே எடுத்துட்டு வரல…”
“அதனால என்னமா அதுக்குண்டான வேலையை நான் போட்டுக் கொடுக்கிறேன்…. நான் உனக்கு வேலை கொடுக்காமலேயே என் வீட்டிலேயே உன்னை வச்சிருக்க முடியும் ஆனா உனக்குன்னு ஒரு தைரியம் வரணும்…. அதுக்கு நீ சொந்தக்கால்ல நிக்கணும்… அதுக்கு தான் இந்த வேலை…. கவலைப்படாதம்மா இன்னும் கொஞ்ச நாள்ல என் பொண்ணு வந்துடுவா அப்புறம் உனக்கு இப்பொழுது நல்லாவே போகும்… ரொம்ப வாயாடி அவ…” என்று சொல்லி சிரித்தார். இதைக் கேட்ட சம்யுக்தாவின் இதழிலே புன்னகை வந்தது. உடல் களைப்பினாலும் மனவலியினாலும் சம்யுக்தா வெளியே இருந்து வந்த காற்றின் உதவியால் நன்றாக தூங்கி விட்டாள். அவள் தூங்கியதை பார்த்த பரந்தாமன் தனது ஃபோனை எடுத்து, தீஷிதனுக்கு போன் போட்டார்.
“டேட் என்ன காரியம் பண்ணிட்டு இருக்கீங்க….? யாரை இங்க கூட்டிட்டு வர்றீங்க…..?” என்று எடுத்த எடுப்பிலேயே கேள்வி கேட்டான்.
“டேட் நீங்க என்ன பண்றீங்கனு உங்களுக்கு புரியுதா….? யாரோ ஒரு பொண்ண எதுக்கு நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர்றீங்க….? இந்த பொண்ணுங்களே ரொம்ப மோசமானவங்க டாட்….”
“இங்க பாருப்பா… உனக்கு ஏதோ ஒரு காரணத்துக்காக பொண்ணுங்கள பிடிக்காம போயிருக்க லாம்… ஆனா எல்லா பொண்ணுங்களுமே அப்படி மோசமானவங்க இல்ல…. உன்னோட அம்மா… உன் தங்கச்சி இவங்க மோசமானவங்களா இல்லல்ல…. அதே மாதிரி நிறைய பொண்ணுங்க இருக்காங்க இந்த உலகத்துல…. தீஷி நான் இப்போ உனக்கு போன் போட்டது எதுக்காகன்னு தெரியுமா…? இந்தப் பொண்ணு ரொம்பவே மன உளைச்சல்ல இருக்கா…. மத்தவங்களால ரொம்ப காயப்பட்டு இருக்கா…. அவள நான் அங்க கூட்டிட்டு வரும்போது நீ வார்த்தையால அவளை எதுவும் காயப்படுத்திடாத…. எவ்ளோ கஷ்டம் இருந்தா அவ சாகுற நிலைமைக்கு போயிருப்பான்னு என்னால புரிஞ்சுக்க முடியுது…. அதை நீயும் புரிஞ்சிப்பேன்னு நினைக்கிறேன்….”
“டேட் ஆனா அந்த பொண்ணை நான் எதுக்காக புரிஞ்சுக்கணும்…?”
“தீஷி இந்தப் பொண்ண நீ எதுவுமே பேசக்கூடாது புரிஞ்சுதா….?” என்று தனது உறுதியான குரலில் கூறினார். பொதுவாக பரந்தாமன் அந்தக் குரலை பயன்படுத்த மாட்டார். எப்போவாவது அதைப் பயன்படுத்தினால் அதற்கு மறுப்பு எதுவும் தீஷிதன் சொல்ல மாட்டான். “சரி டாட் நான் எதுவும் சொல்லல…” என்றான் தீஷிதன்.
“குட் நான் இன்னும் த்ரீ ஹவர்ல வீட்ல இருப்பேன்….”
“ஓகே டாட் பார்த்து பத்திரமா வாங்க…” என்றவன் ஃபோனை வைத்தான்.
“ஓகே ரிஷி பாய்…” என்ற ஒரு போனை வைத்துவிட்டு பின்னர் திரும்பி சம்யுக்தாவை பார்த்தார். அவள் நன்றாக தூங்குவது தெரிந்தது. ‘உன்னோட வாழ்க்கை கண்டிப்பா நல்லபடியா மாறுமா…” என்று சொல்லிக்கொண்டு அந்தப் பயணத்தை தொடர்ந்தார்.
‘டாட் எதுக்கு இப்படி பண்றாரு… அந்த பொண்ணுக்கு ஏதாவது பண்ணனும்னா வேற ஹெல்ப் எதுவும் பண்ணாமல்… சும்மா நம்மளோட வீட்டுக்கு கூட்டிட்டு வர்றாரு… நம்மள மீறி ஏதாவது ஏமாத்து வேலை பண்ணா அப்புறம் பாத்துக்கலாம்….’ என்று நினைத்தான் தீஷிதன்.
“தீஷி என்ன ரொம்ப யோசனையா இருக்க சாப்பிடுடா…” என்றான் புகழ். “புகழ் உனக்குத் தெரியுமா… எங்க அப்பா சென்னையில இருந்து ஒரு பொண்ண கூட்டிட்டு வராரு….”
“என்னாது ஒரு பொண்ணை கூட்டிட்டு வர்றாரா என்னடா சொல்ற…”
“ஆமா புகழ் யாரோ ஒரு பொண்ணு சாகப் போயிருக்கு அதை எங்க அப்பா காப்பாத்தி கூட்டிட்டு வராரு…” “அப்படியா அது நல்ல விஷயம் தானேடா சாகப் போறவங்களை காப்பாத்துறது….”
“அது நல்ல விஷயம் தான் டா… ஆனா அவங்கள எதுக்காக இங்க கூட்டிட்டு வரணும்…. அதுத்தான் எனக்கு குழப்பமா இருக்கு…”
“தீஷி அங்கிள் என்ன பண்ணாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும் உன்ன மாதிரி…. சோ ஃப்ரீயா விடு… நீ இதை நினைச்சு டென்ஷன் ஆகாத….”
“ஓகே புகழ்… வரட்டும் அந்த பொண்ண பாக்கலாம்…”
“சரி லேட்டாயிடுச்சு நான் வரேன் மச்சான்….”
“ஓகேடா காலையில ஆபீஸ்ல மீட் பண்ணலாம்….” என்று இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்றனர்.
பிரகாஷ் தனது காதலி சீமாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான். சீமாவை கீதாவிற்கும் கீதாவை சீமாவிற்கும் அறிமுகப்படுத்தி வைத்தான்.
“பிரகாஷ் நாளைக்கு உனக்கும் சீமாக்கும் கல்யாணம்…”
“ஓகே அம்மா… அம்மா டாட் என்ன சொல்லுவாருனு தெரியலை…”
“உங்க டாட் எதுவும் சொல்ல மாட்டாரு… நீ பண்ணது தப்பு… இன்னொரு தடவை இதை பண்ணாத… சீமாகூட சந்தோஷமா வாழுற வழியப்பாரு…”
“கண்டிப்பா அம்மா… சீமாவை தவிர என் வாழ்க்கையில யாருக்கும் இடம் இல்லை… அந்த சனியன் தொலைஞ்சதே போதும்…”
“ஆமா பிரகாஷ்… சரி நீ சீமாவை கூட்டிட்டு போ…”
“சரி அம்மா… சீமா வா போகலாம்..” என்று அவளை அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்றான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Super divi