அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தாள் சம்யுக்தா. அவள் இங்கே வந்திருந்தாலும், நடந்ததையே அவள் மனம் எண்ணிக் கொண்டிருந்தது. அதன் வெளிப்பாடாக அவளது முகம் கவலையை தத்தெடுத்துக் கொண்டது. கணவன் எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை பண்ணியிருக்கிறான். தாயோ கஷ்டத்தில் இருக்கும் போது தான் அனாதை என்று கூறி வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டாரே என்பதை நினைக்க நினைக்க அவளுக்கு வேதனை மிகுந்தது. கண்களில் கண்ணீர் திரள அதை தனது இரு கையாலும் துடைத்தாள். ஆனால் அதுவோ அணை போட்டாலும் அடங்காத காவிரி போல அவள் துடைக்க துடைக்க கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. ஒரு மூச்சு அழுது தீர்த்தவள் எழுந்து குளித்துவிட்டு வந்த தனது முன்னே இருக்கும் கண்ணாடியில் தனது பிம்பத்தைப் பார்த்தவள், ‘சம்யுக்தா உனக்கு இங்க யாருமே உண்மையா இல்ல.. ஆனா நீ எப்பவும் உண்மையா நேர்மையா இருக்கணும்.. இந்த கடந்து வந்த பாதையை எல்லாம் மறந்துட்டு, யார்னே தெரியாத உன்னை இந்த வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து வேலை போட்டு குடுக்கிறேன்னு சொன்ன இந்த பரந்தாமன் சாருக்கு நீ உண்மையா இருக்கணும்.. உன்னால முடிஞ்ச அளவு அவர் குடுக்கிற அந்த வேலையில உண்மையா இரு.. அந்தப் பிரகாஷிடம் இருந்து உனக்கு விடுதலை கிடைச்சிடுச்சு… இனிமே நீ சுதந்திரமா வாழப் பழகு…. உனக்கு நீ தான்.. உனக்கு ஒரு வேலை இருக்கு, ஒரு இடம் இருக்கு, அவ்வளவும் போதும்.. உன்னால முடிஞ்ச அளவுக்கு மத்தவங்களுக்கு உதவி பண்ணு. இனிமே உன்னோட கடந்த காலத்தை எப்போதுமே நீ நினைக்கவே கூடாது..’ என்று தனக்குத்தானே பேசியவள் கட்டிலில் வந்து அமர்ந்தாள். அவளை அவளே திடப்படுத்திக் கொண்டாள். எல்லாம் காரில் வரும்போது பரந்தாமன் கூறிய அறிவுரைகளே அவள் இப்படி ஒரு முடிவெடுக்க காரணம். என்னதான் இருந்தாலும் தனது தங்கை வித்யாவை கடைசிவரை பார்க்க முடியவில்லை. அவளுடன் பேசவும் முடியவில்லை என்ற தவிப்பு அவளுள் இருந்தாலும், காலம் அனைத்துக்கும் பதில் சொல்லும் என்றாவது ஒருநாள் தனது தங்கையை பார்த்து விடலாம் என்ற நம்பிக்கையில் கண் அயர்ந்தாள்.
எப்போதும் அதிகாலையிலே விழித்து எழும் சம்யுக்தாவிற்கு இன்றும் தூக்கம் கலைந்து விழிப்பு வந்து விட்டது. எழுந்து குளித்து விட்டு வரலாம் என்று குளியலறைக்குச் செல்ல அந்தத் தண்ணீர் ஜில்லென்று இருந்தது. இருந்தாலும் அதிலேயே குளித்து விட்டு வந்து வாங்கி வந்திருந்த சுடிதாரை அணிந்து கொண்டவளுக்கு அறைக்குள் இருப்பது போரடித்தது.
வெளியே வந்து தோட்டத்தில் சிறிது நேரம் நடந்தாள் சம்யுக்தா தோட்டத்தில் நடந்து கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு வேட்டை நாய் அவளை நோக்கிப் பாய்ந்து வந்தது. அந்த நாயைப் பார்த்ததும் சம்யுக்தாவின் விழிகள் இரண்டும் வெளியே வந்து விடுவது போல விரிந்தன. பயத்தில் நா வறண்டு விட்டது. அந்த வேட்டை நாயின் பற்கள் அவளை மேலும் பயமுறுத்தின. யாரை அழைப்பது என்று கூட அவளுக்குத் தெரியவில்லை. அவளால் அந்த நாயிடமிருந்து தப்பிக்க ஓடவும் முடியாது. என்ன செய்வதென்று. தெரியாமல் அப்படியே நின்றாள். சரியாக அந்த வீட்டினை அவளை நோக்கி பாயும் தருணத்தில், “ஜாக்கி பேக்..” என்ற கணீர் குரல் கேட்டது.
அந்தக் குரலை கேட்டதும் பாய்ந்து வந்து வந்த வேட்டை நாய் ஒரு சிறு பூனையைப் போல அந்த இடத்திலே நின்றது. குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தாள். ஜாக்கிங் செய்து கொண்டு இருந்திருப்பான் போல தீஷிதன். அப்படியே கையில்லாத டீசெர்டுடனும் பாட்டமுடனும் வேகமாக வந்தான். அவனைப் பார்த்ததும் தலை குனிந்து கொண்டாள் சம்யுக்தா. “ஜாக்கி திஸ் இஸ் அவ கெஸ்ட்.. சோ கீப் குவைட்…” என்றான்.
அந்த நாய்க்கு என்ன புரிந்ததோ வாலையாட்டிக் கொண்டு கீழே படுத்து விட்டது. உடனே அந்த ஜாக்கியின் அருகில் வந்து அதன் தலையை தடவிக் கொடுத்தான் தீஷிதன். அப்போதுதான் அந்த ஜாக்கியை பார்த்துக் கொள்ளுபவன் பதட்டத்துடன் அவ்விடத்திற்கு மூச்சிரைக்க ஓடி வந்தான்.
“சார் சாரி சார்.. இவங்க புதுசுல இவங்களப் பாத்ததும் ஜாக்கி என் கையில இருந்த பட்டியை இழுத்துட்டு ஓடி வந்துட்டு..”
“இங்க பாரு ராஜேஷ் ஜாக்கிய நல்லா பாத்துக்குறது தான் உன்னோட வேலை.. நான் வராமல் இருந்திருந்தால் ஜாக்கி வேற இவங்கள கடிச்சிருப்பான்.. இதுக்கு அப்புறமா ஜாக்கிரதையா இரு இப்போ ஜாக்கியை கூட்டிட்டு போ..” என்று அந்த வேட்டை நாயை அவனுடன் அனுப்பி வைத்தான். நாய் சென்ற பின்னரும் சம்யுக்தாவிற்கு பயம் விலகவில்லை.
அவளைப் பார்த்த தீக்ஷிதன், “இங்க பாருங்க சம்யுக்தா இந்த நேரத்தில் எதுக்காக இங்க வந்தீங்க.. நல்ல வேளை நான் வந்தேன் இல்லன்னா ஜாக்கி உங்களை கடிச்சி வச்சிருக்கும்..”
“ஏங்க அதுக்காக இந்த பனியிலேயா வந்திருப்பீங்க? நீங்க வேற இந்த ஊருக்குப் புதுசுங்க அப்புறம் உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா எங்க டாட் சும்மா இருக்க மாட்டாரு.. கொஞ்ச நாள் இந்த ஊரு பழகினதுக்கு அப்புறம் இந்த டைம்ல வெளியில வாங்க.. காலைல எட்டு மணிக்கு ஆபீஸ்க்கு போகணும் ரெடியா இருங்க..” என்றவன் அதற்கு மேல் அவளிடம் பேசாமல் உள்ளே செல்ல அவளும் எங்கே மறுபடி நாய் வந்துவிடுமோ என்ற பயத்தில் அவன் பின்னாடியே உள்ளே சென்று விட்டாள்.
………..………..………..………..…………..
சென்னையில் பிரகாஷ் வீட்டில் கீதா அந்த பெரிய சோபாவில் தோரணையாக உட்கார்ந்திருந்தார். சீமா இன்னும் எழுந்து வந்த பாடில்லை. கீதாவிற்கு காலையில் டீ குடித்தே ஆக வேண்டும். இல்லையென்றால் அவருக்கு அன்றைய நாள் நன்றாக போகாது என்ற எண்ணம். அதனால் டீ குடிக்க வேண்டும் என்று, “சீமா.. சீமா..” என்று அங்கேயே இருந்தே குரல் கொடுத்தார். பிரகாஷின் அணைப்பில் இருந்த சீமாவிற்கு அவர் அழைத்த குரல் கேட்டது. இருந்தாலும் எழுந்து போகாமல் மேலும் பிரகாஷ் அணைத்துக் கொண்டு தூங்கினாள். பிரகாஷ் அவளிடம், “சீமா அம்மா கூப்பிடறாங்க இல்ல..”
“கூப்பிடட்டும் பிரகாஷ் அதுக்கு இப்போ என்ன? எனக்கு தூக்கம் வருது நான் தூங்கணும்..”
“சீமா அதுக்காக அம்மா கூப்பிடும் போது பேசாம இருக்கலாமா போ போய் முதல்ல அம்மா கிட்ட என்னன்னு கேட்டுட்டு வா..”
“இங்க பாரு பிரகாஷ் என்கிட்ட இந்த உருட்டுறது மிரட்டுவது இதெல்லாம் வைச்சிக்கொள்ளாதே.. நான் ஒண்ணும் உன் மொத பொண்டாட்டி மாதிரி அடங்கிட்டு போக மாட்டேன்.. எனக்கு தூக்கம் வருது நான் இப்ப தூங்கணும் அவ்வளவுதான்.. உனக்கு தேவைன்னா நீயே போய் என்னன்னு கேட்டுட்டு வா..” என்றவள் மறுபக்கம் படுத்து தூங்கிவிட்டாள்.
பிரகாஷ்சும் முதல் நாள் தானே விட்டுவிடலாம் என்று நினைத்தவன் எழுந்து வந்தான் தாயிடம். “அம்மா என்ன?”
“என்ன என்னம்மா.. சீமா எங்க?”
“அவ தூங்குறா..”
“அவள எழுப்பு பிரகாஷ்.. எனக்கு டீ வேணும் டீ போட்டுக் கொடுக்க சொல்லு..”
“அம்மா என்னம்மா வந்த முதல் நாளே அவ கிட்ட இப்படி வேலை வாங்கலாமா? அவ வேற மாசமா இருக்கா..”
“மாசமா இருந்தா வீட்டு வேலை செய்யக்கூடாதுன்னு இருக்கா என்ன?”
“சரி அடுத்து நம்ம சீமாக்கும் உனக்கும் இன்னைக்கு கோயில்ல வச்சு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு எடுத்து இருக்கேன்..”
“ஆனா அம்மா அப்பா இல்லாம..” என்று இழுத்தான் பிரகாஷ்.
“உங்க அப்பா தான் ஏதோ கம்பனி விஷயமா வெளியூர் போயிருக்கிறாரு.. அவரு வெளியூர்ல இருந்து வர்றதுக்கு ரெண்டு மூணு வாரமாகும்..”
“ஆனா சொல்லனும் இல்லமா..”
“அவர் வந்த பிறகு நான் பேசிக்கிறேன்.. நீ போய் சீமா கிட்ட சொல்லு.. பத்து மணி மாதிரி கோவிலுக்கு போகணும்..”
“சரிமா நான் சீமா கிட்ட சொல்றேன்..” என்று கூறி விட்டு மீண்டும் அறைக்குச் சென்றான். ஒரு பெண்ணின் வாழ்க்கையை அநியாயமாக கெடுத்து விட்டோமே என்ற உறுத்தல் யாரிடமுமே இல்லை.
………..………..………..………..……………
டைனிங் டேபிளில் பரந்தாமனும் தீஷிதனும் சாப்பிட அமர்ந்தனர். பரந்தாமன் சம்யுக்தாவை சாப்பிட அழைத்தார். “சம்யுக்தா.. சம்யுக்தா.. வாம்மா சாப்பிடலாம்..” என்று அழைக்க, அவளோ தயங்கித் தயங்கி மெல்ல வந்தாள்.
“இல்ல சார் நீங்க சாப்பிடுங்க.. நான் அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்..”
“அப்புறமானா எப்போமா? இப்போ சாப்பிட்டு கிளம்பினால் தானே கம்பெனிக்கு போக முடியும்..” என்று வற்புறுத்தி அவளை சாப்பிட வைத்தார்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பரந்தாமன் தீஷிதனிடம், “தீஷி சம்யுக்தாக்கு என்ன வேலை கொடுக்கலாம்னு இருக்க..?” என்று கேட்டவர் தீஷிதன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்று ஆவலை மறைத்துக் கொண்டு அவனையே பார்த்தார்.
“டேட் இப்போதைக்கு எந்த வேலைக்கும் ஆட்கள் தேவையில்ல.. ஆனா ஒரு டீம்ல மட்டும் ஒரு பொண்ணு கல்யாணம் பிக்ஸ் ஆயிடுச்சுன்னு வேலையை விட்டுட்டு நீன்னுட்டா.. அந்த வேலைய வேணும்னா இவங்களுக்கு கொடுக்கலாம்.. கொஞ்ச நாள் அந்த டீம்ல இருந்து வேலை பார்க்கட்டும் டாட் அதுக்கப்புறம் இவங்களோட திறமையை பார்த்து அதுக்கு ஏத்த மாதிரி நான் வேலை போட்டு கொடுக்கிறேன்…”
“ஆனா தீக்ஷி இவ எம்பிஏ படிச்சிருக்கால்ல..”
“டேட் இவங்க எப்படி வேலை பாப்பாங்கன்னு தெரியாதுல்ல நமக்கு.. சோ கொஞ்ச நாள் அந்த டீமோட இருந்து ஒர்க் பண்ணட்டுமே..” என்றான்.
பரந்தாமன் அதை மறுத்து மேலும் ஏதோ கூற வர, ‘சார் பரவால்ல சார்.. நான் டீமோட இருந்து ஒர்க் பண்றேன்.. எனக்கு எந்த சர்டிபிகேட்டும் இல்லாம நீங்க வேலை கொடுக்குறதே பெரிய விஷயம்.. எந்த வேலையா இருந்தாலும் நான், எனக்கு கொடுக்கிற வேலையை சரியா செய்வேன்..”
“குட்.. பாத்தீங்களா டாட் அவங்களே ஒத்துக்கிட்டாங்க.. உங்களுக்கு என்ன பிரச்சனை?”
“எனக்கு ஒன்னு இல்ல தீஷி.. சரி சம்யுக்தா பாத்து நடந்துக்க.. உனக்கு ஏதும் டவுட் இருந்தா என்கிட்டேயோ அல்லது திஷிகிட்டேயோ நீ தாராளமா கேட்கலாம்..” என்றார். அவளும் சரியென்று தலையாட்டி வைத்தாள்.
சாப்பிட்டுவிட்டு தீக்ஷிதன் காருக்கு செல்ல, பரந்தாமனும் சம்யுக்தாவை அழைத்துக் கொண்டு வந்தார். கார் அருகில் வந்ததும் சம்யுக்தா, “சார் உங்ககிட்ட வேலை பாக்க வர்ற நான் உங்க கூட கார்ல வருவது அவ்வளவு சரியா இருக்காது..”
“ஆனா சமித்தா உனக்குத் தான் இந்த ஊட்டி பழக்கம் இல்லையே.. அப்புறம் எப்படி ஆபீஸ்க்கு வருவ?”
“நீங்க ஆபீஸோட அட்ரஸ் மட்டும் கொடுங்க சார்..”
“அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல சம்யுக்தா.. நீ எங்க கூட கார்ல வர.. ஆனா கம்பெனிக்கு கொஞ்சம் தூரத்துக்கு முன்னாடியே இறங்கிக்க இறங்கி நடந்து வா.. அப்போ நீ எங்க கூட வர்றது யாருக்கும் தெரியாதுல்ல நீயும் ஆபிஸை தேடி அலையறதுக்கு கஷ்டப்படவும் தேவையில்லை..” என்று ஒருவாறு அவளை சம்மதிக்க வைத்து அந்த காரிலேயே அழைத்துச் சென்ற பரந்தாமன்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Waiting for next epi divi
Very nice… Waiting for next epi…