அத்தியாயம்-1 “ஏன்மா வினாலிகா உனக்கு வயசு 28க்கும் மேல ஆகிடிச்சே எப்போ தான் கல்யாணம் பண்ணிக்க போற. இல்ல கல்யாணம் பண்ணாமலே ஓட்ட போறியா என்ன உன் வாழ்க்கைய.”என்று அண்டை வீட்டில் இருக்கும் மாமி அன்றாடமாக கேட்கும் கேள்வியையே இன்றும் சலிக்காமல் கேட்க. அதில் வழக்கம் போல சலித்து போனவள் என்னமோ வினாலிகா தான். “ஏன் மாமி இந்த இந்த உலகத்துல கல்யாணத்த தவற வேற ஏதும் உருப்பிடியான வேலை இல்லையா என்ன. ஆளாளுக்கு எப்போ கல்யாணம் எப்போ கல்யாணம்னு அதையே கேட்குறீங்க.இதே கேள்விய தினமும் கேட்குற உங்களுக்கு சலிச்சு போதோ இல்லையே. எனக்கு காதே தேய்ற அளவுக்கு புளிச்சி போச்சி.”என்று தன் வீட்டின் வாசலில் இருக்கும் பைப்பில் தண்ணீரை பிடித்தவாறே கேட்டாள் பெண்ணவள். அதில் அந்த மாமியோ தாடையில் ஆச்சரியமாக கை வைத்துக்கொண்டவறோ.. “என்னடிம்மா.. இப்போ வாடக வீட்ல ஒருத்த இருக்கா அவா கிட்ட போய் சொந்த வீட்டுக்கு எப்போ போறேள்ன்னு கேட்குறதில்லையா அது மாதிரின்னோ இதையும் உங்கிட்ட கேட்டேன். அதுக்கு போய் இப்டி சலிச்சிக்கிறியேடி.”சலித்துக்கொண்டே அவசர அவசரமாக வாசலை கூட்ட.. “ம்கூம் உண்மைக்கும் இதுல சலிச்சிக்க வேண்டியவ நானு.. ஆனா இந்தம்மா சலிச்சிக்கிது பாரு.”குடத்தை தூக்கியவாறே அவள் புலம்ப. “அம்மாடி வயசு பொண்ணு இருந்தா இப்டி நாலு பேர் கேப்பாதான்டி.”அப்போதும் மாமி விடாமல் குடைய. “நாலு பேர் கேட்குறாங்களோ இல்லையோ மாமி தினமும் நீங்க ஒராளு கேட்டுடுறீங்க. ஒன்னு கேள்விய மாத்துங்க இல்லனா வீட்ட மாத்துங்க. வயசுக்கு வந்ததுல இருந்து இதே கேள்வியா கேட்டு இம்ச தர வேண்டியது.”புலம்பியவாறே குடத்தை தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் சென்றுவிட்டாள் வினாலிகா. “எப்டி பேசிட்டு போறா பாரு அடங்கா பிடாரி. சின்ன புள்ளைல இருந்து தூக்கி வளத்தவன்ற ஆதங்கத்துல எப்போ கல்யாணம்னு கேட்டேனாம் அதுக்கு துள்ளுறா துள்ளுகென்டையாட்டம்.”புலம்பியவர் மீனை பற்றி பேசியதில் தன் தலையிலையே அடித்துக்கொண்டவர். “அபச்சாரம். இந்த குக் வித் கோமாளி பாக்க ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சேன் நான் வெஜெல்லாம் ரசிச்சு பாக்குறேன். அவாளுக்கு மட்டும் தெரிஞ்சிது ஆஞ்சிபுடுவா ஆஞ்சி..”அவரின் கணவரை பற்றி புலம்பியவர் இன்னும் வேறு என்ன என்னவோ முனுமுனுத்தவாறே தன் வீட்டிற்குள் சென்றுவிட்டார். இங்கு வினாலிகாவோ தன் வீட்டிற்குள் சென்று கிட்சனின் குடத்தை இறக்கி வைத்தவள் நேராக போய் நின்றது சாமி அறையில் தான்.சென்னையில் மடிப்பாக்கத்தில் இருக்கும் இரட்டை அறையும், மேலே மாடியில் ஒரு ஒற்றை அறைக்கொண்ட வீடு தான் அது. வினாலிகாவின் அப்பா அவளுக்காக விட்டுச்செப்ற ஒற்றை சொத்து. ஆனால் சொத்தை விட கடமைகள் அதிகம் விட்டு சென்றிருந்தார். ஆம் வெளியில் வாங்கிய கடன் சிறிதும் அவர் பெற்ற மகன் ஒருவனும் இவள் கடமையாக விட்டு சென்றிருந்தார். அந்த கடனை இப்போது தான் சிறிது நாட்களுக்கு முன்பு அடைத்து முடித்திருந்தாள். அதற்காக அவள் பட்ட பாடு அது வேறு. இன்னும் அந்த வீட்டின் மீது பேங்கில் வாங்கிருந்த கடன் இருக்கின்றது. இன்னும் சில வருடங்கள் அதற்கு மாதம் தோறும் வட்டி கட்ட வேண்டும். இதற்கும் மேல் அவள் தம்பி அவனை படிக்க வைக்க வேண்டும். வினாலிகா சாமி அறையை திறந்தவள் அதில் இருந்த தன் அன்னை, தந்தை போட்டோவிற்கு முன்னால் இருந்த விளக்கை ஏற்றியவள் தன் அன்னை, தந்தை புகைப்படத்தையே ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தாள். அவள் அன்னை துளசி வினாலிகாவிற்கு பத்து வயது இருக்கும் போது அவள் தம்பி நிவின் பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கலினால் மூன்று மாதம் படுத்த படுக்கையாக கிடந்து இறந்து போனார். அப்போது வினாலிகாவின் தந்தை ரகுபதிக்கு உலகமே இருண்டது போல தான் இருந்தது. என்னதான் காதல் மனைவி இல்லை என்றபோதும் கூட அவரின் மனைவியுடன் அன்னியோன்யமாக தானே வாழ்ந்தார். அதனால் அவரின் மனைவியின் இழப்பு அவரை பாதித்திருந்தது. ரகுபதி ஆரம்பத்தில் ஏனோ தானோ வென்று இருந்தாலும் தன் குழந்தைகளின் நலன் கருதி தன்னை வெகுவாக சமாளித்துக்கொண்டார். வினாலிகாவிற்கு வேறு அவளின் தம்பியை வளர்க்கும் பொறுப்பு அந்த பத்து வயதிலையே கொடுக்கப்பட.. அதனை ஆசையுடனே செய்தாள் பெண்ணவள். அவளுக்கு அவள் தம்பி நிவின் என்றால் கொள்ளை பிரியம். அவனுக்கு ஒரு வயது வரும் வரை பள்ளிக்கு செல்லாமல் இருக்க ரகுபதி அதன் பின் நிவினை தெரிந்தவர் வீட்டில் விட்டுவிட்டு தன் மகளையும் பள்ளி அனுப்பினார். முதலில் வினாலிகாவிற்கு அதில் அவ்வளவு விருப்பம் இல்லை.. ஆனால் ரகுபதி பள்ளி போக வேண்டும் என்று கட்டாயப்படுத்த மனமே இல்லாமல் பள்ளி சென்றாள். ஆனால் பள்ளி முடிந்து வந்ததும் அடுத்த வேலையாக அவள் பார்ப்பது தன் தம்பியை கொஞ்சுவது தான். அதுவே தான் இன்றுவரை நடந்துக்கொண்டிருக்கின்றது. அதன் பின் வினாலிகாவிற்கு இருபத்திரெண்டு வயதிருக்கும்போது தான் அவள் தந்தை ஒரு ஆக்ஸிடென்டில் உயிரை துறந்தார். அதன் பின் வினாலிகாவிற்கு அவன் தம்பி நிவினே அனைத்துமாகி போனான். இதனை எல்லாம் யோசித்தவாறே நின்றிருந்தவளை தடை செய்வது போல வீட்டின் கடிகாரம் மணி அடிக்க ஆரம்பிக்க.. அதில் மணி ஏழு என்று காட்டியது. “அய்யோ யோசிட்டே நின்னுட்டேனே..”புலம்பியவாறே சமையலறைக்கு ஓடியவள் அரக்க பறக்க நேற்று அரைத்து வைத்த மாவில் இட்லியை ஊற்றியவள் அதற்கு தொட்டுக்கொள்ள கொத்தமல்லி துவையலை அறைத்து வைத்தாள். அதன் பின் மதியத்திற்கு சாம்பார் சாதத்தை செய்தவள் அதற்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கை செய்தவள் வேக வேகமாக இரண்டு டிபன் பாக்ஸில் எடுத்து வைத்துக்கொண்டு சமையல் அறையில் இருந்து தன் அறைக்கு ஓடியவள் அங்கு மடித்து வைத்திருந்த சிகப்பு நிற அரக்கு பாடர் கொடுக்கப்பட்ட சேலையை வேக வேகமாக சுற்றியவள். கண்ணாடியை பார்த்து வேகமாக தன் நீள கூந்தலை சீவி கொண்டை போட்டுக்கொண்டாள். அடுத்து நெற்றியில் ஒரு பொட்டை வைத்தவள் சிறிது டார்க் சிகப்பில் லிப்ஸ்டிக்கை போட்டுக்கொண்டு தன் ஹேன்ட் பேக்கை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள். வினாலிகாவின் பார்வை ஹாலின் ஒரு ஓரத்தில் படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிவினின் மீது படித்தது. நிவின் இப்போது தான் தன்னுடைய பன்னிரென்டாம் வகுப்பை முடித்திருந்தான். ரிசல்ட்டிற்காக காத்துக்கொண்டிருக்கின்றான். அவனின் குழந்தை தனமாக முகத்தை ரசனையுடன் பார்த்தவளோ.. “சின்ன குழந்த மாதிரி தூங்க வேண்டியது..”என்று செல்லமாக திட்டிக்கொண்டவளோ வழக்கம் போல குனிந்து அவன் நெற்றில் முத்தமிட்டவள். “நிவி அக்கா வேலைக்கி கெளம்பிட்டேன்.. டிபன் செஞ்சிருக்கேன். லஞ்சும் உனக்கு பிடிச்ச சாம்பார் சாதம் பண்ணியாச்சி. ஒழுங்கா சாப்டு.. அப்புறம் லீவ்ன்னு வெளில விளையாட ஓடாத. நல்லா அரவிந்த் சாமி மாதிரி இருந்தவன் இப்போ காக்கா சாமி ஆகிட்ட. அப்புறம் டிவி ரொம்ப பாக்காத. டாக்டர் ஏற்கனவே கண்ணாடி போட சொல்லிருக்காரு. சொல் பேச்ச கொஞ்சம் கேளு..”என்று அவனிடம் பேசியவள். “பாய் டா..”என்று கிளம்பிவிட்டாள். அவன் காதில் கேட்டானா இல்லை என்பதெல்லாம் பிரச்சனை இல்லை.. ஏனென்றால் அவள் வேலைக்கு சென்று சேர்ந்த பின்னும் போன் செய்து இதனை கூறத்தான் போகிறாள். வினாலிகா வேகமாக வீட்டினை பூட்டியவள் வெளியில் நின்றிருந்த தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு பறந்தாள். அந்த வீட்டினை உள் பக்கமாகவும் திறக்க முடியும் என்பதால் தான் வெளியில் பூட்டிவிட்டு ஓடுகின்றாள். தன் கையில் கட்டிருக்கும் வாட்சினை ஒருதரம் பார்த்தவளோ… “காட் அந்த மடையனுட்ட மாட்ட போறேன் இன்னிக்கி..”என்று புலம்பியவளோ தன் ஸ்கூட்டியை வேகமாக போய் நிறுத்தியது என்னவோ சென்னையின் புகழ்பெற்ற ஹோட்டலான ஹோட்டல் ரெட் கில்ஸில் தான். ஹோட்டல் ரெட் கில்ஸ்.. அது ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் தான். கிட்டதட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக இயங்கிக்கொண்டிருக்கின்றது இந்த ஹோட்டல். அங்கு தான் வினாலிகா ரிசப்ஸனிஸ்டாக இருக்கின்றாள். அங்கையே ரெஸ்டாரன்டும் இருக்கின்றது. வித் ஸ்விம்மிங் பூலோடு. சென்னை ஏர்போர்ட்டிற்கு அருகில் இருப்பதால் நிறைய வெளிநாட்டு பயணிகள் அங்கு வந்து தங்குவது வழக்கம். வினாலிகா வாசலில் வைக்கப்பட்டிருந்த விநாயகருக்கு ஒரு சலாமை போட்டவள் நேராக ரிசப்ஷன் பக்கம் ஓட. அங்கோ அவளுடன் வேலைப்பார்க்கும் துர்கா ஏற்கனவே வந்திருந்தாள்.துர்கா திருமணம் ஆனவள். அவளுக்கும் வினாலிகா வயது தான். அவளோ வினாலிகாவை பார்த்து புன்னகைக்க… “ஹாய் துர்க் அந்த மடையன் வந்துட்டானா…”என்று கேட்டவாறே தன் இடத்தில் போய் நிற்க. “உன் நேரம் இன்னும் வரல..”புன்னகையுடன் கூறியவள் லெட்சரை தூக்கி வைத்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தாள். “காட் காப்பாத்திட்ட..”என்று புலம்பியவளோ தன் வேலையை பார்க்க ஆரம்பிக்க அந்நேரம் அங்கு வந்தான் அவள் மடையன் என்று அழைக்கும் மார்ட்டின். “ஷாட் ரெடியா..”என்று அந்த இடமே அதிர ஒருவர் மைக்கில் கத்த. “ரெடி மாஸ்டர்..”என்று கத்தினான் ஒருவன். “குரு ரெடியா.. இப்போ அவனோட ஷாட் தான் இருக்கு. ஷீன் என்னனு அவனுக்கு சொல்லியாச்சா..”என்று அவர் கத்த. “ஆல்ரெடி அவருக்கு சொல்லியாச்சி மாஸ்டர். இப்போ ஹீரோ மூணாவது மாடில சண்ட போடும்போது அவர எதிரிங்க பிடிச்சி தள்ளிவிடுறாங்க.. ஹீரோ விழுறது நேச்சுரலா இருக்கனும். அத குருச்சேத்ரன் தான் செய்ய போறாரு..”என்று ஒருவன் விளக்கம் கூற “குட்.”என்றவறோ. “நோ சோஃப்ட்டி ரோப்ஸ்.. அது தெரியுமா குருவுக்கு..”என்று அவர் கேட்க “எஸ் மாஸ்டர் அவர் ஓகே சொல்லிட்டாரு..”என்றவனோ.. “குருவ தவிர வேற எந்த இழிச்சவாயன் இதெல்லாம் செய்வான். இவரு ரியலா எடுக்குறேன்னு ஸ்டன்ட் மேன்ஸ் உடம்பெல்லாம் புண்ணாக்கிட்டு இருக்காரு.. வேற எவனும் வரமாட்டேனு சொல்லிட்டானுங்க.. ஆனா இந்த குரு மட்டும் எப்டி ஒத்துக்கிட்டான்னே தெரில..”புலம்பலாக கூற. “நீ புலம்பறது நல்லா கேட்குது வினய். அவன் ஒத்துக்க காரணம் அவனுக்கு இந்த ஸ்டென்ட் சொல்லிக்கொடுத்ததே நான் தான்..”என்றார் இவ்வளவு நேரமாக மைக்கில் கத்திக்கொண்டிருந்த மூத்த ஸ்டென்ட் மாஸ்டரான மார்த்தாண்டம். அதில் அவன் கப்பென்று வாயை மூடிக்கொள்ள.. “வேற எவனும் செய்யமாட்டான் இவன் மட்டும் தான் செய்றான்னா இவனுக்கு தொழில் பக்தி அதிகம் அதான் செய்றான்.. சும்மா தேவை இல்லாம பேசாத போய் வேலை பாரு… ஷாட் ரெடி பண்ணு..”என்று கத்த.. அவன் பதறி ஓடிவிட்டான். “குரு ஆர் யூ ரெடி..”என்று மார்த்தாண்டம் மைக்கில் கத்த. அது மூன்றாவது மாடியில் ஆம் கட் பணியனுடன் கைகள் திரண்டு, நெஞ்சய் நிமிர்த்திக்கொண்டு குதிப்பதற்கு ஏதுவாக நின்றிருந்த குருச்சேத்ரன் காதில் விழ. அவனோ காதுகளையும், கண்களையும் கூர்மையாக்கியவாறே அவரை நோக்கி தம்ப்ஸப் காட்ட… அவரோ “ஷாட் ரெடி..”என்று கத்த. அந்த படத்தின் டைரக்டரோ.. அனைவருக்கும் இன்ஸ்ட்ரைக்ஷன் கொடுத்தவர்.. “ஆக்ஸன்..”என்று கத்த. அந்நேரம் மூன்றாவது மாடியில் இருந்து குதித்திருந்தான் குருச்சேத்ரன்.