Home Novelsஎன் திமிர் தலை சாயா...!!❤️‍🔥 என் திமிர் தலை சாயா…!!

❤️‍🔥 என் திமிர் தலை சாயா…!!

திமிர் 03

by Shamla Fasly
5
(1)

❤️‍🔥 என் திமிர் தலை சாயா…!!❤️‍🔥

 

திமிர் 03

 

‘சாணக்கியன்’ என்றாலே பாகற்காய் தான் அவளுக்கு‌. அவள் தொழில் சாம்ராஜ்யத்தில் நுழையும் போது தான் அவனும் அதனுள் காலடி எடுத்து வைத்திருந்தான்.

 

ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல எனும் அளவிற்கு போட்டி போட்டுக் கொள்வார்கள். ஆனால் இளம் தொழிலதிபருக்கான விருது அவனுக்குத் தான் கிடைத்தது.

 

அவ்விருதினைப் பெற வேண்டும் என்பது நேத்ராவின் தீராத ஆசை. அவனை வீழ்த்தி ஜெயிக்க நினைக்கவில்லை. அவனை வெற்றி கொண்டு தன் வெற்றிக் கொடியை நிலை நாட்ட வேண்டும் என்று கடினமாக உழைத்தாள். இன்றும் உழைத்து வருகின்றாள்.

 

சாணக்கியன் நேத்ராவை நன்கு அறிவான். அவளின் தொழில் முன்னேற்றங்களை முற்று முழுதாக அறிந்து வைத்திருந்தான். அவளின் கம்பீரத்தையும், தனியாளாக நின்று தொழிலைக் கையாளும் திறமையையும் கண்டு உள்ளுக்குள் மெச்சிக் கொள்வான்.

 

கிட்டத்தட்ட ஒரே நிலை வளர்ச்சி கண்ட நிறுவனங்கள் அவர்களுடையது.  

டென்டர் என வரும் போது தான் இருவரிடையேயும் போட்டி ஆரம்பிக்கும். மாறி மாறி அதில் வெற்றியீட்டுவார்கள். 

 

ஒருவருக்கொருவர் அவ்வளவாகப் பேசியதில்லை. ஆனால் அவனைப் பற்றி அவளுக்குத் தெரியும். அவனுக்கும் அவ்வாறே. போட்டியின் காரணமாக கிட்டத்தட்ட பொறாமை என்று சொல்லும்படியான உணர்வு தான் இருவருக்கு இடையிலும் இருந்தது.

 

தொழிலை நேசித்து, அதிலேயே ஒட்டுமொத்த கவனத்தையும் அவர்கள் குவித்து வைத்திருந்தார்கள். அப்படியொரு பொழுதில் தான் கடனாவில் இருந்து பெரிய ப்ராஜெக்ட் ஒன்று வந்தது.

 

தனியொரு நிறுவனத்தால் எடுத்துச் செய்ய முடியாது என்பது நன்கு தெரிந்தது. அதனைக் கைவிட முடியாது என்பதால் பணம் கொடுத்தும், பேச்சு வார்த்தை நடாத்தியும் சாணக்கியன் எப்படியோ அதனைப் பெற்றுக் கொண்டான். இருப்பினும் அவனால் அதைத் தனியாக செய்ய முடியாது என்பதும் பெரும் சவாலாகவே இருந்தது.

 

வழக்கம் போல் அவனைப் பற்றி அறிந்து கொண்ட நேத்ராவுக்கு அவனிடம் சென்று பார்ட்னராக இணைந்தால் என்ன என்று தோன்றியது. அதை அப்படிக் கேட்பது சரியா என்ற தன்மானப் பிரச்சினை ஒரு புறம் இருந்தாலும், அந்த ப்ராஜெக்டைச் செய்து முடித்தால் தனது நிறுவனம் உலகப் புகழ் பெற்று விடும் என்பதற்காக அவன் முன்பு சென்று நின்றாள்.

 

“நான் உன் கூட சேர்ந்து ப்ராஜெக்ட் செய்யலாமா?” நேரிடையாகவே கேட்டாள் காரிகை.

 

எவ்வித உணர்வையும் காட்டாமல் முகத்தை வைத்துக் கொண்டவனின் மூளை தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. அவனுக்கும் அது வேண்டும் தான். ஆனால் வெளிப்படையாக சொல்லவில்லை.

 

தொழில் வட்டாரத்தில் நேத்ரா தான் அவனுக்கு சரியான போட்டி. அவளுடன் இணைந்தால் வெகு சிறப்பாகவே செய்து விடலாம் என்று தோன்றியது.  ஆனால் அதை வாய்வழி வெளிப்படுத்துவது தனது தன்மானத்திற்கு இழுக்கு என்பதும் அவன் எண்ணம்.

 

“பதில் வேணும் எனக்கு” மார்புக்குக் குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டாள்.

 

“இதனால எனக்கு என்ன லாபம்னு யோசிக்கிறேன்” கூலிங் க்ளாஸில் இதழ் குவித்து ஊதி விட்டு ஸ்டைலாக மாட்டிக் கொண்டான்.

 

“தி கிரேட் பிசினஸ்மேன் சாணக்கியன் எதையும் யோசிக்க அவ்வளவு டைம் எடுத்துக்க மாட்டாரே” நக்கலும் அவள் குரலில் இருக்கத் தான் செய்தது.

 

“அய்ம் ஆல்ரெடி இன் சம் பர்சனல் ப்ராப்ளம்ஸ்” நெற்றி சுருக்கியவன் தற்போது தான் புவனாவின் வீட்டிற்குச் சென்று திருமணத்திற்கான மறுப்பைத் தெரிவித்து விட்டு வந்திருந்தான்.

 

வேண்டாம் என்று சொல்லி விட்டான். ஆனால் அவனுள்ளும் குடும்பம் பற்றிய எண்ணமொன்று உள்ளதல்லவா? இதனால் தன் தாயை பாட்டி ஏதாவது கூறுவார் என்று நினைத்தவன் உடனடியாக தாராவுக்கு அழைத்து வீட்டில் என்ன நடந்தாலும் சொல் என்பதாகக் கட்டளையிட்டான். அந்த எண்ணம் அவனை இன்னும் இடைக்கிடையே குடைந்து கொண்டிருந்தது.

 

தெரியும் என்பதாக நேத்ராவின் தலை ஆடியது. புவனா அவளது தோழி. சற்று முன் புவனாவை எதேர்ச்சையாக சந்திக்க நேர்ந்த போது அவனது மறுப்பைக் கூறியிருந்தாள்.

 

“இப்போ என்ன நெனக்கிற?” அவள் மீண்டும் கேட்க,

 

“அந்த ப்ராப்ளம் எப்படி சால்வ் ஆகுமோ தெரியல. இது பத்தி நான் யோசிச்சிட்டு சொல்றேன்” எனும் போது அவனுக்கு ஒரு எண்ணம் உதித்தது.

 

“நீ என்னை கல்யாணம் பண்ணிக்க. நான் உனக்கு ப்ராஜெக்ட் தர்றேன். டீலா?” மனதில் தோன்றியதை உடனே கேட்டும் விட்டான்.

 

அவளின் விழிகள் அதிர்ந்து விரிந்தன. அவனிடம் இப்படியொரு வார்த்தையை எதிர்பார்க்கவில்லை.

 

“நான் கேக்குறது பிசினஸை மெயினா வெச்சு தான். வேற எதுக்காகவும் இல்ல. என் சுயநலத்துக்காக உன்ன யூஸ் பண்ணிக்கிட்டேன்னு எந்த பேச்சும் வரக் கூடாது. இதனால உனக்கும் நல்லது தான்” அதையும் அவன் சொன்னான்.

 

“அப்படி எதுவும் வராது” என்றவளுக்கு அவன் சொன்ன விடயம் நன்றாகத் தான் இருந்தது‌.

 

“உனக்கு ஹேப்பியா தான் இருக்கும். ஸ்பை வேல மிச்சம்ல?” என்று கூற, “ஸ்பையா?” புருவம் இடுங்க வினவினாள்.

 

“என்னை பத்தின அப்டேட் எடுக்க ஸ்பை வெச்சிருப்பியே. என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்கே அந்த ஜாப்ப ஏத்துக்கலாம் தானே?” பேன்ட் பாக்கெட்டினுள் கை விட்டுக் கொண்டான்.

 

“நான் ஒன்னும் அப்படி ஸ்பை வெச்சுக்கல. ஆனா‌ உன்ன பத்தின அப்டேட் எப்படியோ எதிர்பார்க்காம கூட கெடச்சிடுது. நான் என்ன பண்ண?” முறைப்போடு கூறியவளைப் பார்த்து, “ஓகே ஓகே. என்ன முடிவு பண்ணி இருக்க?” என்று கேட்டான்.

 

சில நொடி நேர சிந்தனைக்குப் பின் சரியென ஒப்புக் கொண்டாள். அவளுக்கு இது இரட்டிப்பு இலாபம். ஒன்று பிசினஸ் என்றால் மற்றொன்று திருமணம். இவனைத் தினுமணம் செய்தால் வீட்டாரின் திருமணம் பற்றிய கலவரத்தில் இருந்தும் விடுதலை அல்லவா?

 

“ஓகே. வீட்ல சொல்லிடு” என்றவன் கிளம்ப, அவளும் தன் காரில் ஏறிப் புறப்பட்டாள்.

 

…………………

வீட்டினுள் அடியெடுத்து வைத்த சாணக்கியன் தற்போது கலவரமொன்று வெடிக்கும் என்பதை எதிர்பார்த்தவனாய் தனது அறையை நோக்கிச் செல்ல ஆரம்பிக்க,

 

“நில்லு” எனும் பாட்டியின் குரல் அவன் நடைக்குத் தடை போட்டது.

 

திரும்பி அவரைப் பார்த்தவன் “இதோ பாருங்க பாட்டி. எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்ல. அதுவும் புவனாவ கட்டிக்க கொஞ்சம் கூட விருப்பம் கெடயாது” அவர் கேட்க முன்னதாகவே கூறி விட்டான்.

 

“இப்படியே எத்தன காலம் இருக்கப் போற? பிசினஸ்னு ஓடுறது சரி தான். ஆனா பிசினஸும் பணமும் பேரும் புகழும் மட்டும் நமக்கு எப்பவும் துணையா இருந்துடாது. ஒரு ஆபத்து, அவரசம்னு வரும் போது நம்ம கூட இருக்க நாலு மனுஷங்க தான் தேவ” என்று அவர் பாடம் எடுக்கும் போது அந்த சத்தத்திற்கு மற்ற அனைவரும் கூடி விட்டனர்.

 

“பாட்டி சொல்லுறதும் சரி தானே? நீ ஏன்ப்பா அங்க போய் கல்யாணம் வேண்டாம்னு சொன்ன? உனக்கு கல்யாணம் பண்ணிப் பாக்கனும்பா” மென்மையான குரலில் சொன்னார் யாமினி.

 

தாயின் பக்கம் தலை திருப்பி “உங்க ஆச நிறைவேறும். அதை பத்தி பேசலாம்னு தான் வந்தேன். நான் நேத்ராவ கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணிட்டேன்” என்றதும்,

 

“யாரு நேத்ரா?” புரியாமல் பார்த்தார் சிவநாதன்.

 

“நேசன் டெக்ஸ்டைல் ஓனர் மிஸ்டர் நேசனோட பொண்ணு” என்றவாறு சோஃபாவில் அமர்ந்து கொள்ள,

 

“இதென்ன கூத்தா இருக்கு? எடுத்தோம் கவிழ்த்தோம்னு நீயா முடிவு பண்ணுறது இல்ல கல்யாணம். அத பெரியவங்க தீர விசாரிச்சு ஜாதகம் பாத்து பண்ணனும்” மீண்டும் ராணியம்மாள் ஆரம்பிக்க,

 

“எனக்கு அதுல நம்பிக்க இல்ல. அன்ட் நான் நேத்ராவ தான் கல்யாணம் பண்ணுவேன்” என்றான் உறுதியாக.

 

“என்னண்ணா லவ்ஸா?” நிரஞ்சன் பட்டென்று கேட்டு விட, அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தானே அன்றி பதில் கூறவில்லை.

 

“நீ நல்லா யோசிச்சு தான் சொல்றியா? பிறகு வேறொன்னு சொல்ல மாட்டியே?” என்று கேட்ட சிவநாதனுக்கு மகன் நேத்ராவை மணக்க நினைப்பது அன்பினாலோ ஆசையினாலோ அல்ல என்பது நூற்றுக்கு நூறு வீதம் தெரிந்தது.

 

“என் முடிவு எப்பவும் மாறாது. அப்படியான முடிவ நான் எடுக்கவும் மாட்டேன்” பிடித்த பிடியில் இருந்து பின்வாங்காதது அவன் குணமாயிற்றே.

 

“அப்படின்னா ஓகே” அவர் தலை சம்மதமாக ஆடியது.

 

“என்ன சிவா பேசுற? இவன் வேணும்னே பண்ணுற மாதிரி இருக்கு. இன்னிக்கு தான் புவிய வேணானு சொன்னான். அப்போ வரை கல்யாணம் வேண்டாம்னு சொன்னான். இப்போ திடீர்னு எப்படி நேத்ரா வந்தா? அவ யாரோ என்னவோ? யாருன்னே தெரியாத ஒருத்திய எப்படி நம்ம வீட்டு மருமகளாக்குறது?” ராணியம்மாளுக்கு நேத்ரா என்ற பெயரைக் கேட்கும் போதே கசந்து வழிந்தது.

 

“அவ நல்ல பொண்ணும்மா. எனக்கு நேத்ராவ தெரியும். பிசினஸ் மீட்டிங்ஸ்ல பாத்திருக்கேன்” என்றார் சிவநாதன்.

 

“பிசினஸ் பண்ணுறாளா? சரியாப் போச்சு போ. ரெண்டு பேரும் அதையே கட்டிக்கிட்டு திரிஞ்சா வீட்ட யாரு பாத்துக்கிறதாம்? அதெல்லாம் வேண்டாம்” என அவர் மறுக்க,

 

“அப்பா சம்மதம் சொன்னா எனக்குப் போதும்” என்றவனுக்கு அங்கு நிற்கவே பிடிக்கவில்லை.

 

“பாத்தியா என்ன பேசுறான்னு உன் மகன்? அப்பா சொன்னா போதுமாம். நீ எதுக்கு என் வாழ்க்கையில் தலையிடுற அப்படின்னு சொல்லாம சொல்லுறான். அந்தளவுக்கு எனக்கு மரியாதை இல்லாம போச்சு” மருமகளிடம் கோபம் பார்வையை வீசினார்.

 

“என்ன பேச்சு இதெல்லாம்?” மாமியாரின் கோபம் பொறுக்காமல் யாமினி கேட்க,

 

“நான் நேத்ராவ கல்யாணம் பண்ணிக்க தான் போறேன். என் முடிவு மாறாது. நீங்க என் முடிவ ஏத்துக்கங்க. இல்லன்னா கஷ்டம்” இத்தோடு பேச்சு முடிந்தது என்பதாக எழுந்து அறைக்குள் சென்றான்.

 

“அது சரி. பெத்த அம்மாவுக்குக் கூட மரியாத இல்லாம போச்சு. இதுல நான் எதை எதிர்பார்க்க? எல்லாமே அவங்கவங்க இஷ்டம் தானே? நடக்கிறது நடக்கட்டும். நானும் பாக்குறேன் யாரு அந்த நேத்ரான்னு” பிடவை முந்தானையை உதறிக் கொண்டு விறு விறுவெனச் சென்றார் ராணியம்மா.

 

யாமினியின்‌ முகம் வாடியது. அவன் எப்பொழுதும் அப்படித் தான். அன்பாக, மென்மையாக பேச மாட்டான். அதிகாரமாகத் தான் அவன் பேச்சு இருக்கும். அதை அவ்வளவாகக் கண்டு கொள்ள மாட்டார். ஆயினும் மாமியார் அதைக் கோடிட்டுக் காட்டும் போது தான் வலிக்கும்.

 

“நீங்க ஒன்னும் ஃபீல் பண்ணாதீங்கம்மா. அந்த நேத்ராவ நான் பாத்திருக்கேன். அண்ணன மாதிரி செம மாஸா இருப்பாங்க. அவங்களாவது இவரை மாத்தட்டும்” தாயை அணைத்து சமாதானம் செய்தான் நிரஞ்சன்.

 

“அப்படி நடந்தா சந்தோஷம் தான். அவனும் குடும்பமா சந்தோஷமா வாழனும். அன்பு உறவுன்னு அதோட பெறுமதி உணர்ந்து அதுக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்குற மாதிரி மாறனும். அழகான சிரிப்ப அவன் முகத்துல பாக்கனும். அது தான் என்னோட பெரிய ஆச” என்றுரைத்தார் யாமினி.

 

“எல்லாம் நடக்கும்மா. அப்படியொரு காலம் வரட்டும்” தாராவும் தன் பங்கிற்குக் கூற, இருவரையும் அணைத்துக் கொண்ட யாமினியின் பார்வை, மூத்த மகனின் அறைக்கதவை ஏக்கத்துடன் தழுவியது.

 

சாயும்…….!!

 

ஷம்லா பஸ்லி 

2025-10-11

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!