சீதளம் 2
“இந்தாறு புள்ள எங்க வீரா வந்ததும் சும்மா இடமே அதிரும். அவன் இங்க வந்ததை தானே பார்த்துருக்க களத்துல இறங்கி நீ இன்னும் பார்க்கலையே. இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் களத்துல எப்படி நின்று விளையாடுவான்னு நீ பாரு அப்போ தெரியும் உன்னோட கேள்விக்கு பதில்” என்று சொல்லிவிட்டு அந்த பஞ்சுமிட்டாய் தலை தாத்தாவோ அவ்விடம் விட்டு அகன்று வீரா இருக்கும் இடத்தை நோக்கி சென்றுவிட,
மேகாவோ ஒரு நிமிடம் வீராவின் தோரணையை பார்த்து சற்று பயந்து தான் போனாள் என்று கூறலாம். ஆனால் அடுத்த நிமிடமே ‘அதுவும் ஒரு வாயில்லாத ஜீவன் தான்.
இவங்க சொல்ற மாதிரி அப்படி எல்லாம் எதுவும் இருக்காது.
சும்மா நம்மள பயம் காட்டுறாங்க. வெளியூரிலிருந்து வந்தா பயந்துடுவோமா இந்த மேகாவை யாராலும் பயம் காட்ட முடியாது’ என்று தன்னுடைய தாவணி சட்டையில் இல்லாத காலரை தூக்கி விட்டது போல தன்னை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டாள் மேகா.
“ சரி வாங்க டி ஜல்லிக்கட்டு ஆரம்பமாக போகுது அங்க போகலாம்” என்று பூங்கொடி அழைக்க அப்பொழுது அவளுடைய இன்னொரு தோழியோ,
“ என்னடி உன் ஆளு காயம் படுறதை பார்க்க இவ்வளவு ஆர்வமா” என்று கிண்டல் செய்ய அதைக் கேட்ட பூங்கொடியோ அவளை முறைத்து பார்த்து,
“ கொன்னுடுவேன் டி இன்னொரு தடவை இப்படி சொன்னீன்னா. நானே என்னாகுமோ ஏதாகுமோன்னு பயத்துல இருக்கேன் டி இதுல மட்டும் அவர் ஜெயிக்கலைன்னா எங்க அப்பன் என்னோட அந்த இத்துப்போன மாமனுக்கு கட்டிக் கொடுத்திடவாண்டி. அப்புறம் என் படிப்பும் வீணா போயிடும். தயவு செஞ்சு இப்படி எல்லாம் சொல்லி என்னை கஷ்டப்படுத்தாம எனக்காக சாமிகிட்ட வேண்டிக்கோங்கடி அவர் கண்டிப்பா ஜெயிக்கணும்னு”
“ சரி சரி ஓவரா சீன் போடாத கண்டிப்பா உன் ஆளு தான் ஜெயிப்பான் சரியா. வா போகலாம்” என்று பெண்கள் கூட்டம் ஜல்லிக்கட்டு பார்க்க செல்ல, அப்பொழுது அங்கு கோவில் ஓரத்தில் நான்கு நாய்க்குட்டிகளுடன் ஒரு தாய் நாய் படுத்திருக்க அந்த நான்கு நாய்க்குட்டிகளும் கண் முழித்து ஒரு இரண்டு மூன்று நாட்கள் தான் இருக்கும். தன் தாயை கண்டதும் அந்த நான்கு குட்டிகளும் பால் குடிக்க முட்டிக்கொண்டு ஒருவர் மீது ஒருவர் என தன்னுடைய தாயின் மடுவைத் தேடி ஒவ்வொன்றாக குடிக்க கோவிலில் இருந்து வெளிவந்த பொழுது அதை கண்ட மேகாவோ இவர்களை விட்டு அகன்று அந்த நாய்க்குட்டிகளை காண சென்று விட்டாள்.
“ஐயோ செல்ல குட்டிங்களா எவ்வளவு க்யூட்டா இருக்கு. நாலு பேரும் சோ ஸ்வீட்” என்று ஒவ்வொரு குட்டிகளாக எடுத்து கொஞ்சியவள் அந்த தாய்நாய்க்கும் தன்னுடைய பேக்கில் இருந்து ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்தவள், அதுக்கு கொடுத்துவிட்டு அதையும் கொஞ்சிக் கொண்டிருக்க, தன்னுடனே வரவேண்டும் என்று சொல்லிக் கூட்டி வந்த தோழி தன்னுடன் இல்லாததைக் கண்டு கொண்ட பூங்கொடியோ,
“ எங்கடி போனா இவா” என்று மற்றவர்களிடம் கேட்க அவர்களோ,
“இங்க தானடி இருந்தா அதுக்குள்ள எங்க போனா” என்று மற்ற மூவரும் அங்கு சுற்றி தேடிப் பார்க்க,
“ ஏய் அங்க பாருடி நாய்க்குட்டிகளோட விளையாண்டு கிட்டு இருக்கா” என்று ஒரு பெண் சொல்ல பூங்கொடியோ,
“ ஐயோ இவள வச்சுக்கிட்டு என்ன செய்ய, எங்க நாய் பூனை பார்த்தாலும் இப்படி ஓடிப்போய் அத கொஞ்சிட்டு இருக்கா. பேசாம இவகிட்ட நான் ஊருக்கு வரதையே சொல்லி இருக்க கூடாது. எப்பவும் போல நான் வந்து இருக்கணும். இந்த ஒரு வாரமும் எப்படி போகப்போகுதோ தெரியலையே கடவுளே” என்று புலம்பியவாறு மேகாவின் அருகில் சென்றவள் அவளுடைய முதுகில் நங் என்று ஒரு அடி வைக்க,
“ ஆஆஆ அம்மா அடியே ராட்சசி எதுக்குடி இப்படி அடிக்கிற” என்று தன்னுடைய முதுகை தடவியவாறு எழுந்த மேகா பூங்கொடியை பார்த்து திட்ட,
“ கொன்னுடுவேண்டி உன்னை. உன்கிட்ட நான் என்ன சொல்லிக் கூட்டிட்டு வந்தேன். தனியா எங்கேயும் போகாதன்னு சொல்லி தானே கூட்டிட்டு வந்தேன். இப்ப நீ என்ன காரியம் செஞ்சுகிட்டு இருக்க ஒழுங்கா என்கூட வா” என்று அவளுடைய கையை பிடித்து இழுத்துக் கொண்டு தன்னுடனே அழைத்து சென்று விட்டாள்.
சற்று நேரத்தில் அங்கு ஜல்லிக்கட்டு ஆரம்பமானது.
வாடிவாசல் திறக்கும் முன் பட்டாசுகள் படபடவென வெடிக்கும் சத்தமும், பாட்டு சத்தமும் காதை கிழிக்க மிக பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது வாடிவாசல்.
மாடுபிடி வீரர்கள் அனைவரும் மாடுகளை எதிர்நோக்கி வாசலை அடைத்தவாறு காத்துக்கொண்டிருக்க அவர்களுடைய காத்திருப்பை பொய்யாக்காது முதலில் சீறி வந்தது ஒரு வெள்ளை நிற காளை.
முன்னே இருந்த கூட்டத்தை பார்த்து அது சற்று தயங்க,
அங்கு மேடையில் இருந்து பேசிக் கொண்டிருந்த ஊர் தலைவரோ,
“ வாசலை அடைச்சுக்கிட்டு நிக்காதீங்க மாட்ட வெளியே வர விடுங்க” என்று மைக்கில் சத்தம் போட, வீரர்கள் அந்த மாடு வாசலை விட்டு வெளியே வருவதற்காக சற்று இடைவெளி விட்டு அதை யார் அடக்கலாம் என்று தங்களை தயார் செய்து கொண்டிருக்க, அந்த மாடு பின்னே செல்லவும் வழியில்லை. முன்னே சற்று இடைவெளி கிடைக்க வெளியில் பாய்ந்து வந்தது.
உடனே மாடு பிடி வீரர்கள் ஒவ்வொருவராக அந்த மாட்டினுடைய திமிலை பிடிக்க அதுவோ தன்னால் முடிந்த அளவுக்கு வேகமாக அவ்விடத்தை விட்டு ஓட எதிர்பட்ட வீரர்களை தன்னுடைய கொம்பை கொண்டு முட்டுவதற்கு பாய அதை தடுத்தவாரும் மாட்டினுடைய திமிலில் கண்களை பதித்தவாரும் வீரர்கள் அதனோடு போராடி ஒரு வழியாக அடக்கினார்கள்.
இறுதியில் அந்த மாட்டை அடக்கிய வீரருக்கு உடனே பரிசு பொருளும் வழங்கப்பட்டது.
இதுபோலவே பல மாடுகள் வரிசையாக வந்த வண்ணமே இருக்க, வீரர்களும் தங்களுடைய வீரத்தை காட்டும் பொருட்டு மாடுகளை அடக்கவும் சில மாடுகள் அந்த வீரர்களுக்கு டிமிக்கி கொடுத்து தன்னுடைய வளர்ப்பானுக்கு பரிசை அள்ளிக் கொடுக்க என்று அந்தப் போட்டி நடந்து கொண்டிருக்க,
ஒவ்வொரு மாடும் வாடி வாசலை கடக்கும் முன்பு அது எந்த ஊர் மாடு யாருடைய மாடு என்று மைக்கில் ஊர் தலைவர் சொல்லுவார்.
இங்கு கதிரவனும் வீராவின் பெயரை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தது அவனுடைய செவிகள்.
“ அடுத்ததாக நம்ம மதுரக்காரவுக செல்வரத்தினத்தோட மகன் மதுரவேந்தனோட வீரா என்கிற மாடு வர காத்துக்கொண்டிருக்கிறது. இத்தனை வருடங்களாக எவருடைய கையிலும் சிக்கப்படாத இந்த வீரா என்கிற மாடு இந்த களத்திலாவது அகப்படுமா என்று பார்ப்போம்” என்று மைக்கில் அந்த தலைவர் சொல்லிக் கொண்டிருக்க தன்னுடைய செவிகளை நிறைத்த அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த வார்த்தைகள் வரவும் உடனே தன்னை தயார்படுத்த ஆயத்தமானான் கதிரவன்.
“ டேய் மச்சான் வீரா வரப்போகுதுடா பார்த்துடா கவனமா விளையாடு” என்று சொன்ன ரகுவுக்கே வீராவை நினைத்து சற்று பயமாகத்தான் இருந்தது.
“ என்னடா பயப்படுறியா அந்த வீராவை அடக்கி இன்னைக்கு நான் யாருன்னு அந்த மதுரவேந்தனுக்கு காட்டணும் டா”
என்றவன் தன்னுடைய வேட்டியை காலை தூக்கி மடக்கி கட்டிக் கொண்டு வீராவை அடக்க முன்னே சென்றான்.
எப்பொழுது வீரா வரப்போகிறது என்று தெரிந்ததோ இவ்வளவு நேரமும் வாடி வாசலை அடைத்தபடி விளையாடிக் கொண்டிருந்த மற்ற வீரர்களுக்கோ பயம் பிடித்துக் கொள்ள பின்னே விலகி நிற்க,
கதிரவனோ அவர்களை எல்லாம் ஒரு அசட்டுப் பார்வையோடு பார்த்தவன் வீராவை எதிர்கொள்ள முன்னே சென்றான்.
அங்கு வீராவை திறந்து விடவும் அவனும் கூண்டிலிருந்து விடுபடுவது போல துள்ளி குதித்து தன்னுடைய திமிலை சிலுப்பியவாறே பாய்ந்து வெளியே வர அதனுடைய வருகையைக் கண்டு அனைத்து வீரர்களுமே அங்கு பாதுகாப்பு கம்பிகளோடு ஒட்டிக்கொள்ள, இங்கு ஒற்றை ஆளாக அதை எதிர்கொள்ள நின்ற கதிரவனுக்கோ சற்றே எனும் பயம் தொற்றிக் கொண்டது.
ஆனாலும் மதுரவேந்தனை தான் தோற்கடித்தே ஆக வேண்டும் என்ற குறிக்கோள் அவனுக்குள் இருக்க தன்னுடைய பயத்தை ஒதுக்கி தள்ளியவன் வீராவை எதிர்த்து நின்றான்.
அதுவோ வந்த வேகத்தில் எதிரே நின்ற கதிரவனை தன்னுடைய கூர்வெழிகளால் நோக்கியவாறு தன்னுடைய வேகத்தை அதிகப்படுத்தி பாய்ந்து வர அது வந்த வேகத்தில் அவனுடைய வயிற்றில் தன்னுடைய கொம்புகளை குத்தும் முன்பு அதனுடைய கொம்புக்கும் கதிரவனுடைய வயிற்றுக்கும் ஒரு இன்ச் இடைவெளி தான் சுதாரித்துக் கொண்ட கதிரவனோ சட்டென விலகினான்.
பின்பு ஒரு பத்து நிமிடமேனும் இருவரும் அந்த களத்தில் விளையாடினார்கள்.
கதிரவனும் வீரா அசந்த நேரம் அதனுடைய திமிலை பிடிக்க பார்த்துக் கொண்டிருக்க வீராவோ எதர்க்கும் அசராமல் தன் எதிரே நிற்கும் கதிரவனை மட்டும் நோக்கியவாறு அவன் மேல் பாய இறுதியில் வென்றதோ வீரா தான்.
ஆம் கதிரவன் வீராவை திசை திருப்பியதாக நினைத்துக் கொண்டு அதனுடைய திமிலை தன்னுடைய வலிமை மிகுந்த கரங்களால் பற்றிக்கொள்ள, அவனுடைய பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட வீராவோ அவனுடைய கையில் முட்டி அவனை தலைக்கு மேல் தூக்கி வீசியது.
அடுத்த நொடி யாருக்கும் இதுவரை அடங்காத வீராவே ஜெயிக்க,
அங்கே மைக்கில் தலைவர்,
“ மதுரக்காரவுங்க செல்வரத்தினத்தோட மகன் மதுரவேந்தனோட வீரா ஜெயித்து விட்டது. மாட்டுக்காரங்க வந்து பரிசு வாங்கிட்டு போங்க” சென்று அவர் சொல்ல, இங்கு தன்னுடைய கையில் குத்து வாங்கி கீழே விழுந்த கதிரவனுக்கோ மிகுந்த அவமானமாக போய்விட்டது.
“ ச்சை தோத்துட்டேன் மறுபடியும் அந்த வேந்தன் கிட்ட தோத்துக்கிட்டே இருக்கேன்” என்று தனக்குள் கூனி குறுகினான்.
அவனால் எழுந்திருக்க கூட முடியவில்லை.
அவனுடைய கையில் தான் குத்துப்பட்டது என்றாலும் வீரா தூக்கி வீசியதில் அவனுடைய உடலோ பலம் இழந்து போனது.
கையில் வேறு அதிக அளவு ரத்தம் போக எழுந்திருக்க கூட முடியவில்லை அவனால்.
“டேய் வேந்தா உன்ன தோற்கடிக்காம விட மாட்டேன் டா” என்றவாறு மயங்கி சரிவதற்குள் ரகுவந்தன் உட்பட இரண்டு பேர் சேர்ந்து உடனே அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
“ஐயோ மாடு வருதுடி ஓடிடு மேகா நிக்காத” என்று பூங்கொடி ஒரு பக்கம் கத்திக் கொண்டிருக்க மேகாவோ அங்கு ஒரு மரத்தடியில் நின்றவள் தன்னுடைய தோழி அழைத்த சத்தத்தில் பின்னாடி திரும்பி பார்க்க அவளை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தது ஒரு காளை மாடு.