சீதளம் 5
செண்பகப் பாண்டியன் தன்னுடைய காளை களத்தில் இறங்கியது முதல் எதிர்கொண்ட அனைத்து வீரர்களையும் குத்தி கிழிப்பதை ஆனந்தத்தோடு பார்த்தவர் வேந்தனிடம் நீ உண்மையிலேயே ஆம்பளையாக இருந்தால் என்னுடைய காளையை அடக்கி விடு பார்க்கலாம் என்று மைக்கில் சவால் விடுக்க,
சும்மா இருந்த சிங்கத்தை சொரிந்து விடுவது போல வேந்தனின் தன்மானத்தை சீண்டி விட்டார் செண்பக பாண்டியன்.
களத்தில் இறங்கிய அந்த காளை தன்னை எதிர்கொண்ட அனைவரையும் குத்தி கிழிப்பதை பார்த்துக் கொண்டிருந்த வேந்தனோ இனி சரிப்பட்டு வராது என்று அந்த மாட்டை அடக்க முன்வந்த சமயம் செண்பக பாண்டியன் இப்படி ஒரு சவாலை விடுக்க அதுவே அவனுக்கு கொம்பு சீவிவிட போதுமானதாக இருந்தது.
தன்னுடைய வேஷ்டியை தூக்கி மடக்கி கட்டியவன் ஒரு கையால் மீசையை கம்பீரமாக முறுக்கி விட்டுக் கொண்டு ஒத்த காலை தூக்கி தொடையை தட்டிக் கொண்டு அந்த காளையை எதிர்கொண்டு சென்றவன் அதனுடைய கவனத்தை தன் பக்கம் திருப்பும் பொருட்டு இரு விரலை வாயில் வைத்து விசில் அடிக்க அந்த காளையோ உடனே இவனை நோக்கி திரும்பியது.
திரும்பிய வேகத்தில் இவனை நோக்கி ஓடி வர வேந்தனோ ஒரே தாவில் அந்த காளையின் மேலாக வந்தவன் அதன் பின்னே நின்று அதனுடைய திமிலை பிடித்தான்.
சீறிக் கொண்டிருந்த அந்த காளையோ துள்ளி குதித்தது அவனை தன் மேல் இருந்து விழ வைக்க.
அவனும் தன்னுடைய பிடியை உடும்பு பிடியாக பிடித்தவன் விடவேயில்லை. அதுவும் இவன் பக்கமாக தன்னுடைய தலையை தொடர்ந்து சிலுப்பியது அவனை முட்டுவதற்கு.
அவனோ அதை தடுத்துக் கொண்டே பிடியை மட்டும் விளக்கவே இல்லை.
ஒரு கட்டத்தில் அந்த காளையினுடைய மூக்கணாங்கயிறு அவனுடைய கையில் அகப்பட பிடித்து விட்டான்.
அவனிடம் வசமாக மாட்டிக் கொண்டது.
அந்த கயிற்றை பிடித்த ஒரே நிமிடத்தில் அந்த ஐந்தடி காலையை சாய்த்து விட்டான் வேந்தன்.
அப்பொழுது “ஹேஏஏஏஏஏ” என்று அங்கு உள்ள அனைவரும் கரக்கோசங்கள் எழுப்பி அவனை உற்சாகப்படுத்தினார்கள்.
அவனோ அதை எதையும் கண்டுகொள்ளாமல் அவனுடைய பார்வை நேராக செண்பக பாண்டியனின் மீது விழ, தன்னுடைய மீசையை முறுக்கி விட்டவாறு ஒற்றைப் புருவத்தை மேலே உயர்த்தி ‘எப்படி’ என்பது போல காட்டினான்.
அவருக்கோ அதை பார்த்ததும் உடம்பெல்லாம் எரிய ஆரம்பித்தது.
மீண்டும் மீண்டும் இவர்களிடம் தான் தோற்பதா.
எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் அந்த காளையின் மீது அவர்.
இப்படி ஒரே நிமிடத்தில் அனைத்தையும் பொய்யாக்கிவிட்டதே என்ற வெறி அவருக்கு மூண்டது.
தன்னுடைய வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் அங்கு அவ்வளவு கூட்டத்தில் வேந்தனிடம் சவால் விடுத்து பட்டவர்த்தனமாக தோற்றும் போய்விட்டார்.
அவமானத்தில் கூனி குறுகி நின்றவரோ அந்த காளையை அவனிடம் ஒப்படைப்பதா. என்னை இத்தனை பேர் முன்னிலையில் அவமானப்படுத்திய அந்தக் காளை இனி உயிரோடு இருக்கவே தேவையில்லை என்று தன்னுடைய இடுப்பில் எப்பொழுதும் சொருகி வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து அந்தக் காளையை சுட போக,
அதை நொடியில் புரிந்து கொண்ட வேந்தனோ களத்திலிருந்து அவர் இருக்கும் திசைக்கு பாய்ந்து தாவியவன் சட்டென அவருடைய கையில் இருந்த துப்பாக்கியை பறித்துவிட்டான்.
வேந்தனுக்கோ அவர் தன்னை அவ்விடத்தில் வைத்து அவர் சீண்டியது கூட அவனுக்கு பெரியதாக தெரியவில்லை. ஆனால் எந்த ஒரு பாவமும் செய்யாத அந்த மாட்டை கொல்ல துணிந்து விட்டாரே என்ற ஆத்திரம் அவனுக்கு மேலோங்க சட்டென அவரை நோக்கி கையை ஓங்கியவனோ சுதாரித்துக் கொண்டவன்,
“ நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷன் இப்படி தோத்துட்டமேன்னு அந்தக் காளையை கொல்ல துணிஞ்சிட்டியே உன்ன எல்லாம் கொன்னா கூட ஆத்திரம் அடங்காது. ஆனா உன்ன கொன்னுட்டு அந்த பாவத்தை நான் ஏத்துக்க தயாராக இல்லை. நீ சொன்ன மாதிரி போட்டியில நான் தான் ஜெயிச்சேன். அப்பவே அந்த காளை எனக்கு சொந்தம் ஆயிட்டு. எவ்வளவு தைரியம் இருந்தா எனக்கு சொந்தமான மாட்ட கொல்றதுக்கு நீ முன் வந்திருப்ப. இதோட நிறுத்திக்கோ சும்மா சும்மா என் வழியில குறுக்க வரணும்னு நினைக்காத. இத உன் புள்ளைக்கும் தெளிவா சொல்லி புரியவை வீணா அப்பனும் மகனும் வந்து மண்ணை கவ்விட்டு போகாதீங்க” என்று எச்சரித்தான் வேந்தன்.
மேகா வீட்டிற்கு வந்தவள் அங்கு பூங்கொடியின் குடும்பத்திடம் வீரா அவளை காப்பாற்றியதைப் பற்றியே இடைவிடாது சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஆன்ட்டி நீங்க மட்டும் பார்த்திருக்கணும் தெரியுமா வீரா சும ஹீரோ மாதிரி வந்து காப்பாத்தணான்”
என்று இதுவரை எத்தனையாவது முறை சொல்லிக் கொண்டிருந்தாள் என்று தெரியாத அளவுக்கு அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். தன்னுடைய அறையில் இருந்து வந்த பூங்கொடியோ அவள் செய்யும் அலப்பறையை பார்த்தவள்,
“ அடியே போதும் உன் வீரா புராணம் அவங்க பாவம்டி விடு” என்று அவளிடம் இருந்து அவர்களை காப்பாற்றினாள். அவளுடைய அம்மாவோ இதுதான் சாக்கு என்று ஓடிவிட்டார்.
“ என்னடி நீ வீரவை பத்தி எவ்வளவு பெருமையா சொல்லிக்கிட்டு இருந்தேன் அவங்களும் எவ்வளவு ஆர்வமா கேட்டுக்கிட்டு இருந்தாங்க தெரியுமா” என்று பூங்கொடியிடம் சண்டைக்கு போனாள்.
“ யாரு அவங்க ஆர்வமா கேட்டுட்டு இருந்தாங்களா கொஞ்சம் திரும்பி பாரு செல்லம்” என்றாள் பூங்கொடி.
அங்கே யாரும் இல்லை அனைவரும் ஆளுக்கு ஒரு மூளைக்கு அப்பவே சென்றிருந்தார்கள்.
அதை பார்த்த மேகாவோ,
“ என்னடி இது யாரையுமே காணோம்” என்று கேட்க, பூங்கொடியோ அவள் கேட்ட தோணியில் சிரித்து விட்டாள்.
அப்பொழுது அவர்கள் வீட்டு வாயிலில் வந்து நின்றான் பூங்கொடியின் காதலன் ராம்.
அவனைப் பார்த்த பூங்கொடியின் தந்தையோ, உள்ளே அழைத்தார்.
“ ஹேய் அங்க பாருடி உன் ஆளு வந்து இருக்கான்” என்றாள் மேகா.
பூங்கொடி ராம் மேக மூவருமே ஒரே காலேஜில் சென்னையில் தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ராமும் பூங்கொடியும் கடந்த ஆறு மாத காலமாக ஒருவரை ஒருவர் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ராமினுடைய வீட்டில் அவனை திருமணத்திற்கு வற்புறுத்த அவனும் பூங்கொடியிடம் அதை சொல்ல அவளோ, என்னுடைய அப்பாவிடம் வந்து பெண் கேள் என்று சொல்ல அதைப்போல ராமும் நேராக அவளுடைய தந்தையிடம் வந்து பெண் கேட்டான்.
அவரோ விவசாயம் செய்பவர். தன்னுடைய ஒரே பெண்ணை பட்டணத்தில் கட்டி கொடுக்க விருப்பமில்லை.
அதனால் அவர்களுடைய திருமணத்திற்கு முதலில் சம்மதிக்கவில்லை.
பின்பு இருவரும் தங்களுடைய காதலுக்காக அவரிடம் மன்றாட ஒரு கட்டத்தில் தன்னுடைய பெண்ணின் சந்தோஷமும் முக்கியம் என்று ஒரு பக்கம் நினைக்க, அவரோ ராமிடம் வரும் ஜல்லிக்கட்டில் தன்னுடைய வீட்டு மாட்டை நீ அடக்கி விட்டால் என்னுடைய பெண்ணை மனப்பூர்வமாக உனக்கு கட்டிக் கொடுக்க சம்மதிக்கிறேன் என்று கூறினார்.
அவனும் பட்டணத்தில் வளர்ந்தவன். ஜல்லிக்கட்டை பற்றி ஓரளவிற்கு அவனுக்குத் தெரியும்.
களத்தில் இறங்கியது கிடையாது.
அவர் சொல்வதைக் கேட்டு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.
ஆனாலும் பயத்தை ஓரம் கட்டியவன் பூங்கொடியை கை பிடிக்க நினைத்து அவரிடம் சரி என்று ஒப்புக்கொண்டான்.
அதேபோல இன்று நடந்த ஜல்லிக்கட்டில் அவருடைய வீட்டின் மாட்டையும் அடக்கியவன் புன்னகை முகமாக அவரைக் காண வந்திருந்தான்.
“வாங்க தம்பி வாங்க உண்மைய சொல்லணும்னா எனக்கு என் பொண்ணை பட்டணத்தில கட்டி கொடுக்க விருப்பம் இல்லை. அதனாலதான் உங்கள மாடு பிடிக்க சொன்னேன். நீங்க பட்டணத்துல வளர்ந்தவரு இதுல எல்லாம் உங்களுக்கு பழக்கம் இருக்காது எப்படியும் முடியாதுன்னு சொல்லிட்டு போவீங்கன்னு நினைச்சேன். ஆனாலும் நீங்க அன்னைக்கு சரின்னு சொன்னதும் என் மக மேல உள்ள பிரியத்தை நான் புரிஞ்சுகிட்டேன். அதே மாதிரி இன்னைக்கு நடந்த ஜல்லிக்கட்டிலும் சொன்ன மாதிரியே நீங்க மாட்ட அடக்கிட்டிங்க எனக்கு ரொம்ப சந்தோஷம் தம்பி. இப்ப சொல்றேன் மனப்பூர்வமா என் பொண்ண உங்களுக்கு கட்டி கொடுக்கறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். வீட்ல அப்பா அம்மா கிட்ட சொல்லி கூட்டிட்டு வாங்க. இன்னும் ரெண்டு நாள்ல நிச்சயதார்த்தம் வச்சுக்கலாம்” என்று அவர் சொல்ல இங்கு ராமின் முகத்திலோ அவ்வளவு சந்தோஷம். மேகாவோ பூங்கொடியை அணைத்துக் கொண்டு,
“ கங்கிராட்ஸ் டி உன் ஆளு சொன்ன மாதிரியே ஜெயிச்சுட்டான். என்ன ராம் ஹேப்பி தானே” என்று பூங்கொடியை அணைத்தவாறே அவனிடம் விசாரிக்க அவனும்,
“ ஆமா மேகா ரொம்ப சந்தோஷமா இருக்கேன் இப்பவே நான் வீட்ல பேசி அம்மா அப்பாவ வர சொல்ல போறேன். நிச்சயதார்த்தத்தை முடிச்சிட்டு தான் இந்த ஊரை விட்டு போறோம் என்ன ஓகேவா” என்று ராம் சொல்ல,
“ ஹேஏஏஏ” என்று கூச்சலிட்டாள்.
இங்கு மதுரவேந்தனின் வீட்டிலோ வேந்தனையும் வீராவையும் வரவேற்க தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஒரு பக்கம் வீரா போட்டியில் ஜெயித்தான் என்றால் இன்னொரு பக்கம் மதுர வேந்தன் மாட்டை அடக்கி பல பரிசுகளை ஒரு வண்டி முழுக்க கொண்டு வந்திருந்தான்.
இருவரும் ஒன்றாக வீட்டிற்கு வர உள்ளே இருந்து கையில் ஆரத்தி தட்டுடன் வெளியே வந்த அன்னலட்சுமி,
“ இருங்க இருங்க இருங்க ரெண்டு பேரும் அப்படியே அங்கேயே நில்லுங்க சுத்துப்பட்டி கிராமத்தில் உள்ள அத்தனை பேர் கண்ணும் என் பிள்ளைங்க மேல தான் இருக்கும்” என்றவர்,
“ ஊர் கண்ணு, உறவு கண்ணு ,கொள்ளிக்கண்ணு, நல்ல கண்ணு, நொல்ல கண்ணு, எல்லா கண்ணும் பட்டுப்போக” என்று சுத்தியவர் இருவருடைய நெற்றியிலும் திலகத்தை வைத்து விட்டு,
“ இப்போ உள்ள போங்க ரெண்டு பேரும்” என்றவர் ஆரத்தியை வீட்டின் வாசலில் வந்து ஊற்றி விட்டு உள்ளே வந்தார். செல்வரத்தினம் அன்னலட்சுமி அவர்களுக்கு மூத்த புதல்வன், மதுர வேந்தன்.
வயது 28 அக்ரிகல்ச்சர் படித்துவிட்டு அவர்களுக்கு சொந்தமான பல ஏக்கரில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறான்.
அவனுக்கு ஒரு தங்கை.
பெயர் அறிவழகி வயது 21 மதுரையிலேயே ஒரு காலேஜில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கிறாள்.
அந்த ஊரில் இவர்கள் குடும்பம் பெரிய தலைக்கட்டு.
அந்த ஊரில் உள்ள சுத்துப்பட்டி கிராமத்தில் எந்த ஒரு நல்ல விசேஷம் நடந்தாலும் இவர்களைத்தான் முதலில் அழைப்பார்கள்.
அதனால் இவர்களை தெரியாதவர்கள் என்று ஊரில் யாருமே இருக்க மாட்டார்கள்.
அதேபோல இவர்களுடைய குடும்பத்தை கண்டாலே செண்பக பாண்டியனின் குடும்பத்திற்கு பிடிக்காது.
எங்கு சென்றாலும் அவர்களுக்கு தான் முதல் மரியாதை.
தாங்கள் எந்த விதத்தில் குறைந்து விட்டோம்.
அப்படி என்ன அவர்கள் இந்த ஊருக்கு செய்தார்கள். எதற்கெடுத்தாலும் அவர்களையே முன் நிறுத்துவதற்கு. என்ற எண்ணத்தை தனக்குள் பதிய வைத்தவர் சிறுக சிறுக அது பகையாகவே மாறிப்போனது.
அதையே தன் மகனுக்கும் சொல்லிக் கொடுத்து அவனையும் கெடுத்துவிட்டார்.