08. தணலின் சீதளம்

5
(6)


சீதளம் 08

இவ்வளவு நேரமும் வேந்தனை கடுப்பேற்றிக் கொண்டிருந்த மேகாவினுடைய செம் மாதுளை இதழ்களோ வேந்தனின் முரட்டு இதழ்களுக்குள் சிக்கிக்கொண்டு தவித்தது.
சிறிது நேரம் அவளால் என்ன நடந்தது என்று கூட கிரகிக்க முடியாத அளவிற்கு இருந்தது அவனுடைய இந்த செயல்.
பின்பு அவனை தன்னிலிருந்தும் விளக்கியவளோ அவனை அடிக்க கையை ஓங்க அதை லாபகமாக பிடித்தவனோ,
“ இங்க பாரு மொதல்ல ஒரு பொண்ணா அடக்க ஒடுக்கமா இருக்க கத்துக்கோ. சும்மா ஏதோ முத்தம் முத்தம் கடுப்பேத்துற இப்ப சொல்லுடி இந்த இந்த வேந்தனோட முத்தம் எப்படி இருந்துச்சு” என்று அவளைப் பார்த்து கண்ணடித்து அவன் கேட்க அவளுக்கோ ஒரு நிமிடம் கண்களில் நீர்படலம் கோர்த்துக் கொண்டன.
தன்னுடைய பலவீனத்தை அவனுக்கு காட்ட விரும்பாதவள் கண்ணைச் சிமிட்டி கண்ணீரை உள் இழுத்தவள்,
“ ஒரு பொண்ணு கிட்ட எப்படி நடந்துக்கணும்னு கூட தெரியல இடியட்”
“ பொண்ணுங்க கிட்ட எப்படி நடந்துக்கணும்னு எனக்கு தெரியும். ஆனா உன்னை மாதிரி ஆளுங்க கிட்ட இப்படி தான் நடக்கணும். ஏதோ நீ வீராவுக்கு முத்தம் கொடுத்ததை பார்த்து நான் ஏங்குற மாதிரியே சொல்லிக்கிட்டு இருக்க. இந்த வேந்தனுக்கு வாங்கி பழக்கம் கிடையாது கொடுத்துதான் பழக்கம் அதான் நீ பேசினதுக்கு எல்லாம் சேர்த்து வைத்து வட்டியும் முதலாமா கொடுத்துட்டேன். இனி ஒரு வாட்டி என் முன்னாடி வாயைத் திறந்த மகளே அப்புறம் என்னுடைய முத்தம் தான் பேசும்” என்றவன் அவளுடைய கையை விட்டுவிட்டு அங்கிருந்த செல்ல, இவளோ அவனுடைய இந்த பேச்சில் திடுக்கிட்டவள் கையில் அவனுடைய வேஷ்டி இருக்க அதைப் பார்த்தவளோ,
“ எல்லாம் இதால வந்தது. இதை கொடுக்க வந்தது தப்பா போச்சு. ச்சை இந்த ஏலியன். இவன் எப்படி எனக்கு முத்தம் கொடுக்கலாம்” என்றவள் அந்த வேஷ்டியை முன்னே செல்லும் வேந்தனுடைய முதுகில் தூக்கி எறிந்தாள்.
அதை லாபகமாக பிடித்தவன்,
“ ரொம்ப தேங்க்ஸ் புது வேஷ்டியை உனக்கு கொடுத்துட்டோமேன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன் கொண்டு வந்து கொடுத்ததற்கு ரொம்ப நன்றி” என்று சிரித்துக் கொண்டே சொன்னவன் சென்று விட்டான்.
“என்னம்மா எதுக்கு கூப்பிட்டீங்க” என்றவாறு உள்ளே வந்த அறிவழகியோ தன் அன்னையிடம் கேட்டாள்.
அன்னலட்சுமி,
“ அறிவு மூணு நாள் பூஜை முடிச்சு இன்னைக்கு படப்பை பிரிச்சாச்சு இந்த புடவையை ஒரு கல்யாணம் ஆகாத வயசு பொண்ணுக்கு கொடுக்கணும் அதான் உன்ன கூப்பிட்டேன்”
“ என்னம்மா இது புதுசா இருக்கு முன்னாடி எல்லாம் இப்படி வச்சதே இல்லையே படைப்பு மட்டும் தான் செய்வீங்க. இந்த மாதிரி புடவை எல்லாம் வைக்க மாட்டீங்களேம்மா ஏன் இப்போ” என்று தன்னுடைய சந்தேகத்தை கேட்டாள் அறிவழகி.
அப்பொழுது அவர்கள் அருகே வந்த வடிவுக்கரசியோ,
“ அதுவா இதுக்கு முன்னாடி நீ சின்ன பிள்ளை இப்பதான் உனக்கு கல்யாண வயசு வந்துட்டுல்ல அதான் உன் அம்மா இந்த மாதிரி புடவையை வைத்து படைப்பு போட்டு மூணு நாள் சாமி பாதத்தில் வைச்சு கும்பிட்டு கல்யாணம் ஆகாத ஒரு வயசு பொண்ணுக்கு உன் கையால கொடுத்தா அடுத்த வருஷத்துக்குள்ள உனக்கு கல்யாணம் கூடி வரும். நான் தான் உன் அம்மா கிட்ட செய்ய சொல்லி சொன்னேன். இன்னைக்கு காலேஜ் போகும்போது இதை எடுத்துட்டு போ உன் சிநேகிதிங்க யாருக்காவது கொடு” என்றார் அப்பத்தா.
இதைக் கேட்டதும் அறிவழகியோ,
“ என்னது எனக்கு கல்யாணமா வேண்டாம் இன்னும் ஒரு அஞ்சு வருஷம் போகட்டும் அப்பத்தா”
“ ஏன் நேரடியா அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கோவேன்”
“ அப்பத்தாஆஆஆஆ”
“பின்ன என்னடி நீ இப்படி சொன்னா உன்னை என்ன நாளைக்கேவா கல்யாணம் பண்ணி புருஷன் வீட்டுக்கு அனுப்ப போறோம் அதுக்குன்னு நேரம் காலம் வரணும் இல்ல இப்பவே எல்லாம் செஞ்சாதான் சரியா நடக்கும். அதுவும் போக உனக்கும் 21 வயசு ஆகுது. இன்னும் எத்தனை நாளைக்கு இங்கே இருக்கிறதா முடிவு பண்ணி இருக்க. காலா காலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி பேரப்பிள்ளைகளை பெத்து கொடுத்தா இந்த அப்பத்தாவும் சந்தோஷப்படுவேன்ல்ல” என்று தன்னுடைய பேத்தியை கொஞ்ச அவளே,
“ அப்பத்தா இப்போ உங்களுக்கு என்ன கொள்ளு பேரனோ பேத்தியோ கொஞ்சனும் அவ்வளவுதானே அதுக்கு நீங்க உங்க பேரனுக்கு கல்யாணம் பண்ணி வைங்க முதல்ல. அதுக்கு அப்புறமா எனக்கு கல்யாணம் பண்ணுங்க” என்று தன்னுடைய அண்ணனை கோர்த்து விட்டாள் அறிவழகி.
உடனே அப்பத்தாவோ,
“ அவன் தான் கல்யாண பேச்சை எடுத்தாலே பிடி கொடுக்க மாட்டேங்கிறானே 28 வயசு தாண்டுது இந்த பயல நான் என்னன்னு சொல்றது” என்று புலம்பினார்.
அறிவழகியோ,
“ ஏன் அப்பத்தா அண்ணா வேண்டாம்னு சொன்னா அதுக்காக கல்யாணம் பண்ணாம விட்டுடுவீங்களா எப்படியும் கல்யாணம் செய்ய தானே செய்வீங்க. அண்ணா அப்படி தான் சொல்லிக்கிட்டு கிடக்கும் நீங்க ஏற்பாடு செய்யுங்க” என்று தன்னுடைய பாதையில் அவர்களை வரவிடாமல் தன் அண்ணனை முழுவதுமாக மாட்டி விட்டாள்.
“ சரி சரி அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் நீ முதல்ல இந்த புடவையை எடுத்து உன் பேக்ல வச்சுக்கோ” என்று அன்னலட்சுமி கூற அப்பொழுது அறிவழகிக்கு ஒரு யோசனை வந்தது.
மேகாவை வெளியே நிற்க சொல்லிவிட்டு வந்தது.
அவளும் கல்யாணமாகாத பெண் தானே.
ஏற்கனவே இவளுக்கு அவளை மிகவும் பிடித்தும் போனது.
மேகாவையே தன்னுடைய அண்ணனுக்கு கல்யாணம் செய்து வைத்தால் எப்படி இருக்கும் என்றும் கூட அவளுடைய யோசனை இருந்தது.
உடனே இந்த புடவையை மேகாவுக்கு கொடுக்கலாம் என்று முடிவு செய்தவள் தன் அன்னையிடமும் அப்பத்தாவிடமும்,
“அம்மா அப்பத்தா வெளியே அண்ணாவுக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு வந்து இருக்காங்க அவங்களும் கல்யாணம் ஆகாத பொண்ணுதான் அவங்களுக்கு இந்த புடவையை கொடுப்போமா. எனக்கும் அவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொன்னாள்.
உடனே இவர்கள் இருவரும்,
“ என்னது உன்னோட அண்ணனுக்கு தெரிஞ்ச பொண்ணா அவனுக்கு பொண்ணுங்க கூட எல்லாம் பழக்கம் இருக்கா” என்று அப்பத்தா கேட்க அதற்கு அவளோ லேசாக சிரித்தவள்,
“ ஆமா அப்பத்தா அண்ணாவுக்கு அந்த பொண்ணு மேல ஒரு இதுபோல” என்று சொல்ல அன்னலட்சுமியோ,
“ அது என்னடி இது” என்று புரியாமல் கேட்டார்.
“ அதாம்மா ஒரு கண்ணு”
“ என்னடி சொல்ற என் புள்ள அப்படி எல்லாம் கிடையாது”
“ நீ வேணா உன் புள்ளைய அப்படி நினைச்சுக்கோ அவனையே தேடி வீட்டுக்கு ஒரு பொண்ணு வந்து இருக்குன்னா இன்னும்மாம்மா நீ நம்பாம இருக்க. வேணும்னா என்கூட வெளியே வந்து பாரு அந்த பொண்ணும் அவனும் பேசிக்கிட்டு தான் இருக்காங்க” என்று சொன்னாள் அறிவழகி.
அன்னலட்சுமிக்கும் வடிவக்கரசிக்கும் அவள் சொல்வது மேல் சுத்தமாக நம்பிக்கை இல்லை.
எப்படியும் வெளியே வந்து இவள் தான் மூக்கு உடைபட போகிறாள் என்ற நம்பிக்கையோடு அவளுடன் இவர்கள் இருவரும் வெளியே வந்து பார்க்க, அப்பொழுதுதான் வேந்தன் மேகாவுக்கு மிக அருகில் இருந்து விலகி செல்வதை கண்டவர்களோ அதிர்ந்துதான் போனார்கள்.
“என்னடி இது இவ சொல்ற மாதிரி உண்மையிலேயே உன் பிள்ளைக்கு அந்த பொண்ணு மேல கண்ணு தானோ” என்று வடிவுக்கரசி மருமகளிடம் கேட்க அன்னலட்சுமியும்,
“ தெரியலையே அத்தை” என்று பாவம் போல் முகத்தை வைத்திருந்தார். அப்பொழுது மேகாவோ அவன் தன்னிடம் இருந்து சென்றதும் அவனை திட்டியவாறு அங்கிருந்து செல்ல எத்தனிக்க அப்பொழுது அவளுடைய இடையில் எரிச்சல் அதிகமாக இருந்தது.
என்ன என்று தொட்டுப் பார்த்தவளோ வலியில் கொஞ்சம் கத்தினாள்.
“ என்னடா இப்படி வலிக்குது” என்று சற்று குனிந்து பார்க்க வேந்தனுடைய இடது கையின் ஐந்து விரல்களும் அவளுடைய வென்னிறை இடையில் செந்நிறமாக தன்னுடைய அடையாளத்தை அவளுக்கு காட்டியது.
“ பாவி லூசு பைய எப்படி புடிச்சிருக்கான் சரியான காண்டாமிருகம்” என்றவாறு லேசாக தன்னுடைய இடையை தடவி விட்டவள் அந்த அடையாளம் வெளியே தெரியாத அளவிற்கு தாவணியை சரி செய்தாள்.
இது அனைத்துமே இவளை பார்த்துக் கொண்டிருந்த அந்த மூவரின் கண்ணிலும் அச்சு பிசகாமல் விழுந்தது. அப்பத்தாவும் அன்னலட்சுமியும் ‘தங்களுடைய பிள்ளையா’ என்று ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்க அறிவழகையோ,
‘ என்னடா இது நம்ம இருக்கிற வரைக்கும் ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் அடிச்சுக்கிற அளவுக்கு அப்படி சண்டை போட்டாங்க இப்ப என்னடான்னா இந்த பொண்ணு இடுப்ப தடவிக் கிட்டே தாவணிய வேற இழுத்து விடுறா நம்ம நெனச்சது கூடிய சீக்கிரம் நடந்துரும் போல இருக்கே’ என்று யோசித்துக் கொண்டிருக்க, அப்பொழுது மேகா அங்கிருந்து செல்லப் போனாள். உடனே அவள் முன்னே வந்த அறிவழகியோ,
“ ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம் எங்க போறீங்க நான் ஒரு ரெண்டு நிமிஷம் இருங்கன்னு சொல்லிட்டு தான போனேன். அதுக்குள்ள இப்படி சொல்லாம கொள்ளாம போன என்ன அர்த்தம்” என்று அவளுடைய வழியை மறித்து நின்று கொண்டு கேட்டாள்.
மேகாவோ அவளுடைய அண்ணன் அவளிடம் அத்துமீறி நடந்ததை கூறாமல் மறைத்தவாறு,
“ இல்ல நான் வந்த வேலை முடிஞ்சிட்டு அதான் கிளம்பிட்டேன்” என்றாள்.
அறிவழகியோ,
“ அதுக்காக இப்படி வீட்டுக்கு வந்தவங்க வாசலோடையே திரும்பி போனா எங்கள பத்தி என்ன நினைப்பாங்க. உள்ள வந்து ஒரு காபி ஆவது குடிச்சிட்டு தான் போகணும் வாங்க உள்ள வாங்க” என்று அவளுடைய கையைப் பிடித்து அழைக்க மேகாவோ,
“ இல்ல நான் வரல எனக்காக பூங்கொடி அங்கே கோயில்ல வெயிட் பண்ணிட்டு இருப்பா நான் போறேன்” என்று வர மறுத்தாள்.
உடனே அறிவழகியோ,
“ அங்க பாருங்க அம்மாவும் அப்பத்தாவும் கூட உங்களைத்தான் எதிர்பார்த்து பாத்துட்டு இருக்காங்க இப்படி உள்ள வராம போனா எப்படிங்க உள்ள வாங்க. அம்மா அப்பத்தா கூப்பிடுங்க” என்று அவர்களையும் கோர்த்து விட அவர்களும் வரவழைக்கப்பட்ட புன்னகையோடு மேகாவை உள்ளே அழைத்தார்கள்.
“ உள்ள வாம்மா” என்று அழைத்த பெரியவர்கள் முன்னால் தட்டிச் சொல்ல முடியாமல் உதட்டில் சிறு புன்னகையோடு உள்ளே வர சம்மதித்தாள்.
மேகா உள்ளே வந்தவள் அந்த வீட்டை சுற்றி பார்க்க அந்த வீடோ மிக அழகாக இருந்தது.
அவர்களின் குடும்ப புகைப்படம் பெரியதாக மாட்ட.ப்பட்டு இருக்க அதில் வேந்தனின் முகத்தைப் பார்த்தவளுடைய முகமோ சட்டென இறுக்கத்தை தத்தெடுத்துக் கொண்டது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!