உலக அதிசயங்கள் எத்தனை இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தின் அதிசயம் என்றும் வசதி படைத்தவர்கள் தான். அவர்களின் உடையில் ஆரம்பித்து பிரம்மாண்டக் கட்டிடம் வரை வாய் பிளந்து பார்ப்பதே அவர்களுக்கு வாடிக்கை. என்றாவது ஒருநாள் தங்களின் வாழ்வும் இந்த உயரத்திற்கு எட்டும் என்ற அதீதக் கற்பனையில், வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்திலிருந்து வந்தவன் எண்ணத்தில் இது போன்ற எந்தச் சிந்தனைகளும் இல்லை.
பறக்கும் கருடன் போல் இரண்டு நாள்களாக அந்த ஏழு மாடி பங்களாவை வட்டமிட்டுக் கொண்டிருக்கிறான். இரவும் பகலும், யார் இந்த உளவாளி என்ற சந்தேகத்தோடு வந்து மறைந்து கொண்டிருக்க, இவன் எதிர்பார்க்கும் நபர் மட்டும் இன்னும் வரவில்லை. சிக்க வேண்டிய ஆள் சிக்கி இருந்தால், இந்நேரம் இவன் கையில் சிறைப்பட்டுச் சிதைந்து இருப்பார்கள்.
அந்த ஆளின் நல்ல நேரம் இன்னும் பார்வையில் விழவில்லை. உணவு உறக்கமின்றித் தனக்கான இரையைக் கவ்விக் கொள்ளும் கருடனாய் நின்றிருக்க, அந்தப் பெரிய பங்களாவின் கதவு திறந்தது. பதுங்கி இருந்தவனின் கண்கள் சுறுசுறுப்பானது. பட்டினி கிடந்தவனுக்குப் பழைய சோறே அமிர்தம்! அதிலும் பிரியாணி காட்டினால் எப்படி இருக்கும்?
அப்படியான மனநிலையில் இருக்கிறான் கருடேந்திரன். கார் எண்ணைப் பார்த்ததும், வந்ததற்கான பலனாய் தன் ஆட்டோவில் பின் தொடர்ந்தான். இரண்டு கால் கருடன் தேடி வருவதை அறியாத அந்த நான்கு சக்கரக்கார் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. மூன்று சக்கர ஆட்டோ அதற்குச் சற்றும் குறைவில்லாமல் அதே பாய்ச்சலோடு சென்று, “சர்ர்ர்” எனச் சுற்றி வளைத்தது.
இதை எதிர்பார்க்காத ஓட்டுநர், பெரிய பாறை ஒன்று உருண்டு வந்து முன் விழுந்தது போல் அதிர்ந்து, “க்ரீச்ச்!” என வண்டியைச் சேதாரப்படுத்தி நிறுத்தினார். கம்பீரமாக ஆட்டோவில் இருந்து இறங்கியவன் சொடக்கிட்டான். எமனை ஒரு நிமிடம் சந்தித்து வந்த உள்ளே இருந்த அந்த ஆள், இவனைக் கண்டதும் மூக்கு விடைக்கக் காரை விட்டு இறங்க, ஏளனச் சிரிப்பு அவன் முகத்தில்.
கூர்மையான நகங்களுக்கு நெயில் பாலிஷ் போட்டுப் பளபளக்கும் உயர்ரக குதிஉயர் காலணியில் பாதுகாப்பாக இருந்தது அந்தக் கால். அதை மறைக்கும் அளவிற்கு மஞ்சள் நிறப் பட்டுப்புடைவை. புடைவைக்குப் பொருத்தமாக அனைத்து அணிகலன்களும் பொருந்தி இருந்தது. எல்லாம் சரியாக இருக்க அவனுக்கு ஏன் இந்த ஏளனச் சிரிப்பு என்றால் அந்தச் சிகை அலங்காரம் தான்.
எம்மாதிரியான அலங்காரங்களும் செய்ய முடியாத அளவிற்கு ஒட்ட வெட்டி இருந்தது. ஆணுக்கு உண்டான சிகை அலங்காரத்தில், பெண் ரூபத்தில் ஒரு பிசாசு நிற்பதைக் கண்டதால் தான் அந்தச் சிரிப்பு கருடேந்திரனுக்கு. கடும் ஆத்திரத்தில் வண்டியை விட்டு இறங்கியவளுக்கு அந்தச் சிரிப்பு உச்சக்கட்டக் கொதிப்பைக் கொடுத்தது.
ஹீல்ஸ் தரையைக் குத்த நான்கு அடி முன்னே நடந்தவள், “என்னடா வேணும் உனக்கு?” எனக் கம்பீரமாகக் குரல் கொடுத்தாள்.
அவன் கொடுத்த ஏளனச் சிரிப்பை இப்போது அவள் கொடுத்து, “இந்த வீர வசனத்தைப் பேசத்தான் இவ்ளோ தூரம் வந்தியா? நான் தான் அன்னைக்கே உன்னைத் துரத்தி அடிச்சிட்டேனே. அப்புறமும் ஏன்டா அடி வாங்க வந்து நிக்கிற.” என்றவள் இன்னும் இரண்டு அடி முன்னே சென்று நின்று,
“ஹீரோயிசம் காட்டுறியா? நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்ல! என் ஃப்ரெண்டோட மேரேஜ்க்குப் போயிட்டு இருக்கேன். தயவு செஞ்சு மூட ஸ்பாயில் பண்ணாத. உனக்கு இன்னைக்கு நல்லநேரம் போல, இப்ப வந்து நின்னுருக்க. நீ சொன்ன உசுர நான் எடுக்குறதுக்குள்ள…” எனப் பேசியவள் கிளம்புமாறு ஒற்றை விரலை அசைத்துக் காட்டினாள்.
இரும்புக் கம்பிக்கு ஈடான ஐவிரல்களுக்குள், அந்தப் பருத்திப் பட்டு விரலைச் சுருட்டியவன் தனக்கு முன்னால் இருந்தவளை இழுக்க, சற்றும் எதிர்பார்க்காமல் சாதாரணமாக நின்றிருந்தவள் அவன் மீது மோதி விலகி நின்றாள். பிடித்த விரலைப் புத்தூர் கட்டு போடும் அளவிற்கு வளைத்தவன்,
“என்னடி! உன் ஒத்த விரலுக்குப் பயந்து ஓடிடுவேன்னு நினைச்சியா? பண்றதெல்லாம் பண்ணிட்டுக் கேவலமாவா பேசுற. இன்னையோட இப்படி ஒருத்தி இருந்தான்ற அடையாளத்தையே அழிக்கிறேன்.” என்ற கருடேந்திரன் தன் உயிர் நாடியைப் பிடித்துக் கொண்டு தொப்பென்று விழுந்தான்.
கற்றுக் கொண்ட கராத்தேவைக் கொண்டு அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள், சிறைப்பட்ட விரலைப் பார்த்தாள். உண்மையாகவே இரும்பு கொண்டு சிறைப்பிடித்தது போல் சிவந்திருந்தது. அவன் தொட்ட விரலைக் கண்டு எரிச்சல் உற்றவள், விழுந்தவன் மீது தன் ஒரு காலைத் தூக்கி வைத்தாள். கருடேந்திரன் கைகள் இரண்டையும் தார்ச்சாலையில் ஊன்றிக் கொண்டு, கொலை வெறியில் பார்த்துக் கொண்டிருந்தான். தன் காலணிகளை உயர்த்திக் காட்டியவள்,
“த்தூ! நான் கால்ல போட்டிருக்க செருப்புக்கான விலைக்குக் கூட நீ தேற மாட்ட, இதுல தொடுறியா? உழைச்சுச் சாப்பிட நிறைய வழி இருக்கு. அடுத்தவனை ஏமாத்திக் காசு வாங்கச் சாக்கைத் தேடாம, கிளம்புடா. இதுதான் உனக்கு நான் தர லாஸ்ட் வார்னிங்…” என்றவள் கால்களை வெடுக்கென்று தள்ளி விட்டான்.
“ஹா ஹா… ஒன்னு பண்ணு. நீ கேட்ட காசை நான் தரேன்.” எனத் தன் கால்களை உயர்த்திக் காட்டி, “பங்க்ஷன் முடிச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் இந்தச் செருப்பு ரொம்ப அசிங்கமா இருக்கும். மண்டியிட்டுத் தொடைச்சி கிளீன் பண்ணி வை, தூக்கிப் போடுறேன். நீயெல்லாம் எனக்கு இந்த ரேஞ்ச் தான்.”
அவள் செய்த அத்தனைச் சம்பவங்களை விட, இந்த வார்த்தைதான் பெரும் புகைச்சலைக் கொடுத்தது கருடேந்திரனுக்கு. பணம் இருக்கும் ஒரே காரணத்திற்காக, செருப்பை விடக் கேவலமாக நடத்தும் இவளுக்குத் தக்க பாடத்தைப் புகட்ட முடிவெடுத்தான். விடாது கருடன் என்பதை அறியாது காரில் ஏறி அமர்ந்தவள், அவன் முகத்தில் அறைவது போல் கார் கதவைச் சாற்றிக் கொண்டு பறந்தாள்.
***
எண்ணிலடங்காத பணத்தின் வாடை அமோகமாகப் பேசியது. ஒவ்வொரு அலங்காரங்களும், இவர்களுக்குப் பணத்தின் அருமை தெரியாது என்பதைப் பறைசாற்றியது. முழுப் பணக்காரச் சூழலில் மிதந்து கொண்டிருந்த ஹோட்டலுக்குள் நுழைந்தவள், தனக்கே உண்டான தோரணையோடு காரில் இருந்து இறங்க,
“ஹாய் ரிது” என்ற குரல் கேட்டது.
“ஹாய் ஆண்ட்டி”
“என்னமா இவ்ளோ லேட்டா வர?”
“வர வழியில ஒரு டாக் குறுக்க வந்துடுச்சு.”
“நமக்குன்னு தனியா ரோடு போட்டா தான், இந்த மாதிரி லோ கிளாஸ் தொல்லை இருக்காது.”
“ம்ம்!”
“உள்ள போ ரிது. உனக்காகத் தான் திவ்யா வெயிட் பண்ணிட்டு இருக்கா.” தோழியின் அன்னைக்குச் சிரித்த முகமாகத் தலையசைத்தவள் மிடுக்காக உள்ளே நுழைந்தாள்.
அங்கிருந்த அனைவரின் பார்வையும் இவள் மீது தான் இருந்தது. அலங்காரத்திற்கும், உருவத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தைக் கண்டு ஆளாளுக்கு ஒரு எண்ணத்தை மனத்திற்குள் வைத்தார்கள். வெளிப்படையாக வைத்தால் இவளிடம் இருந்து தப்பிப்பது எளிதல்லவே! பெரும்பாலான பணக்கார வர்க்கத்திற்கு இவள் யார் என்று தெரியும்.
தந்தையின் தொழிலை, ஆண் வாரிசு கையில் எடுத்துக் கோலூன்றி நிற்பதையே பார்த்துச் சலித்த இந்தச் சமூகத்திற்கு இவள் ஒரு ஆச்சரியக் குறி! தொழில் உலகத்தின் ராணியாக இருக்கிறாள். ஒரு மடங்கு என்றிருந்த தந்தையின் தொழில்கள் அனைத்தையும் பல மடங்காக மாற்றி இருக்கிறாள். சுற்றி எத்தனை ஆண்கள் இருந்தாலும், ஒற்றைப் பார்வையால் ஒதுக்கி வைக்கும் திகிலுக்குச் சொந்தக்காரி.
கருடேந்திரன் செய்த கலவரத்தில் சற்றுக் கடுப்பாக இருந்தவள், தன் தோழிகள் வட்டாரத்தைப் பார்த்த பின் சகஜமாகி விட்டாள். ஒரே அரட்டையும் கூத்துமாக இருந்தது அந்தக் கல்யாண மண்டபம். மணப்பெண்ணை மணமேடையில் அமர வைத்துவிட்டுக் கேலி செய்து கொண்டிருந்தவள் கையில் அட்சதைத் தட்டைக் கொடுத்தார்கள். படியிறங்கி அனைவரிடமும் கொடுத்துவிட்டு, அய்யர் பக்கத்தில் வைக்கக் குனிந்தவள் கழுத்தை மஞ்சள் கயிறு இறுக்கியது.
அவளுக்குப் பக்கத்தில், தேங்காய் மீது இருந்த தாலியை ஒரு கரம் வலிமையாகப் பற்றி இழுத்து, இவள் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டுக் கொண்டிருக்கிறது. நடந்த சம்பவத்தில் மொத்த மண்டபமும் ஸ்தம்பித்து நிற்க, சிவப்பான விழிகளோடு அப்படியே குனிந்து இருந்தவள், முடிச்சுப் போடும் இறுக்கத்தை வைத்து அது யாரென்று தெரிந்து கொண்டாள்.
நான்கு பேருக்கு முன்னால் அசிங்கப்படுத்தப் பின் தொடர்ந்து வந்தவன் கண்ணில் மாங்கல்யம் விழுந்தது. செருப்பை விடக் கேவலமாக நடத்திய ஒருவன் கையால் தாலியை வாங்கினால், அதைவிடப் பெரிய அவமானம் வேறு எதுவும் இருக்காது என்று கருதி, மூன்று முடிச்சைப் போட்டு விட்டான். முடிச்சுப் போட்டதும் அவளை உயர்த்தி,
“எப்படியும் இந்த ஏசில உன் செருப்பு அழுக்காகாது. ஆட்டோ ஓட்டி உழைக்கிற என் செருப்புத்தான் குப்பையா இருக்கும். இனித் தாலி கட்டுனவன் செருப்பத் தொடைக்க ரெடியா இரு.” என்றவனை நவீன நீலாம்பரியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரிதுசதிகா.
அந்தப் பார்வைக்குச் சிறிதும் அஞ்சாதவன், கர்வமாக அங்கிருந்து கிளம்பினான். எதையோ சாதித்து விட்ட மிதப்பில் நடந்தவனுக்கு முன்னால், அவன் கட்டிய தாலி வந்து விழுந்தது. மீண்டும் அந்த மண்டபம் ஸ்தம்பித்து நிற்க, இதைச் சற்றும் எதிர்பார்க்காதவன் உறைந்த முகத்தோடு திரும்பினான்.
“தாலி கட்டிட்டா நீ பெரிய மன்மதனா? அய்யய்யோ! என் கழுத்துல ஒருத்தன் தாலி கட்டிட்டான், என் வாழ்க்கையே போச்சுன்னு உட்கார்ந்து அழற பொண்ணு நான் இல்ல. தாலிக்குக் கட்டுப்பட்டு உன் பின்னாடியே நடக்க நான் பைத்தியக்காரியும் இல்லை.
காலங்காலமா, பழிவாங்கத் தாலி கட்டுறதை முதல்ல நிறுத்துங்கடா. நாங்க நினைச்சா மட்டும் தான் அது தாலி.” என்றவள் படியிறங்கி வந்தாள்.
“நீ கட்டுனதை நீயே எடுத்துட்டுப் போடா.” எனக் கேவலமாகப் பார்த்தவள், “செய்யக்கூடாத வேலையைச் செஞ்சுட்ட. ஏன்டா செஞ்சோம்னு நிமிசத்துக்கு ஒரு தடவை உன்னைத் துடிக்க வைக்கல, நான் ரிதுசதிகா இல்லடா.” என விரல் நீட்டிச் சொடக்கிட்டவள் அவனுக்கு முன்பாக ராஜ நடை நடந்தாள்.
சிகை அலங்காரத்தில் மட்டும் ஆண் அல்ல, தோரணை மொத்தமும் ஆண் தான் என வியக்க வைத்தது அங்கிருந்தவர்களை. ஊரே அவளைப் பிரமிப்பில் பார்த்துக் கொண்டிருக்க, எந்தச் சலனமும் இல்லாமல் கட்டிய தாலியை மிதித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் கருடேந்திரன்.
எந்த ஆணுக்கும் அஞ்சாதவள் கழுத்தில் தாலி கட்டிய இவன் யாரென்ற அடுத்த வியப்பு அங்கிருந்து அனைவருக்கும். அதை இன்னும் அதிகரித்தான் ஆட்டோவில் ஏறியமர்ந்து. ஒரு ஆட்டோக்காரன் தான் இந்தப் பணக்காரிக்குத் தாலி கட்டினானா என்ற எண்ணத்தில் பலரின் இதயம் வெடித்தது.
இன்னும் வெடிக்கவும், வெடிக்க வைக்கவும் பல சம்பவங்கள் இருக்கிறது என்பது தெரியாமல், இரு துருவங்களும் இருவேறு திசையில் பயணித்தது.
Interesting
Thank you 😊