1. ஜீவனின் ஜனனம் நீ…!!

4.8
(4)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 01

 

அடைமழை பெய்து நின்றதற்கு அறிகுறியாய் வீதியில் தண்ணீர் சாயம் பூசியிருந்தது.

மழை முகில் சூழ் வானை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த ஆடவனின் விழிகள் கலங்கிச் சிவந்திருந்தன.

இரண்டு வருடங்களுக்குப் பின், இந்திய மண்ணை மிதித்தவனது மனதினுள் பல்லாயிரம் எண்ணங்கள்.

விமான நிலையத்திலிருந்து வந்து, மழைக்காக சாலையோரம் ஒதுங்கியவனுக்கு அம்மழை வாசம் பழைய நினைவுகளின் கசப்பை மீண்டுமொரு முறை நினைவுபடுத்திச் சென்றது.

கண்களை இறுக மூடிய நொடி, “டாடீஈஈஈஈ” எனும் அலறலில் கண்களைத் திறந்தவனது இதயத்தில் ஆழ்ந்ததொரு அதிர்வு.

எதிரில் வந்த காரில் மோதப் போன நான்கு வயதுச் சிறுவனை இழுத்து அணைத்துக் கொண்டான்.

“டாடி” சின்னவன் அழைக்க, அவனது பிஞ்சுக் கன்னத்தில் அடித்தவனுக்கு, தான் உடனே சிந்தனையிலிருந்து வெளியேறி இருக்காவிடின் என்ன நடந்திருக்கும் என்பதை எண்ணவே முதுகுத்தண்டு சில்லிட்டது.

தந்தையின் அடியில் இதழ் பிதுக்கி அழுகைக்குத் தயாரானான் அவனது நான்கு வயது மகன்;

யுகி எனும் யுகன்.

“டாடியை விட்டு எங்கேயும் போகக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல? டோன்ட் டூ லைக் திஸ். யூ ஆர் மை எவ்ரிதிங் யுகி” அவனைத் தன் இரும்புக் கரங்களை விரித்து அணைத்துக் கொண்டான்.

“ப்ராமிஸ் டாடி! எனக்கும் நீங்க தான் எல்லாமே. எனக்கு வேறு யாரும் வேணாம். நானும் நீங்களுமே இருப்போம்னு சொன்னீங்க. இப்போ எதுக்கு இங்கே வந்தீங்க? எனக்கு இண்டியா பிடிக்கவே இல்லை” என்றான் யுகன்.

“வீவ் பார்த்துட்டே வா. எவ்ளோ அழகா இருக்கு. ஏன்டா பிடிக்கல?” என்று கேட்டவனது பார்வை, அந்த வீதியோரமாய் விழுந்த நீர்த்துளிகளை ரசிக்கத் துவங்க, அடுத்து மகன் கூறிய வார்த்தைகளில் உறைந்து போனான்.

“பிடிக்காத ஒருத்தவங்க இருக்கிற இடம் எனக்கு எப்படி பிடிக்கும்?” என்று கோபமாகக் கேட்டு விட்டு, “எனக்குப் பிடிக்கவே பிடிக்காத இனியா இருக்குற இண்டியா எனக்கு என்னிக்குமே பிடிக்காது” மழைத் தூறலையும் கண்டு கொள்ளாமல் நின்றான்.

அப்பெயரைக் கேட்டதும் துடித்து இயங்கியது ஆடவனின் இருதயம்.

இனியா!

‘அம்மா’ என்று பாசமிகு அழைப்பு வர வேண்டிய வாயில், வெறுப்போடு அப்பெயர் வரக் காரணமாய் அமைந்தவள் அல்லவா அவள்?

ஆம். அவளே யுகனின் தாய். பத்து மாதம் அவனைச் சுமந்து பொக்கிஷமாய் பெற்றெடுத்தவள்.

அவன் மழையில் நனைவதை உணர்ந்து, தன்னை அதிர்ச்சியில் இருந்து மீட்டுக் கொண்டு, தன்னை நோக்கி இழுத்தெடுத்தான்.

அவன் புக் செய்த கேப் வந்து விட, அதில் ஏறிக் கொண்டவனுக்கு மகனின் பேச்சிலிருந்து வந்த அதிர்வு இன்னும் மீளவில்லை.

அவனுக்கு தாயைப் பிடிக்காது என்பதை நன்கு அறிவான். ஆனால் இத்தனை வெறுப்பு இருக்கும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

அவளைப் பிரிந்ததும், இரண்டு வயது குழந்தையுடன் யூ.எஸ் பறந்து விட்டவன், இன்று மீண்டும் சொந்த நாட்டிற்கு வருகிறான்.

தாய் மேகலைக்கு சுகமில்லை என்ற தகவல், அவனை இங்கு வரவழைத்திருந்தது. மகனுக்கு இங்கே இருக்கப் பிடிக்கவில்லை என்றதும், உடனே கிளம்பி விட வேண்டும் என்று நினைத்தவன் அறியவில்லை, அவன் வாழ்வில் நடக்கவிருக்கும் திடீர் திருப்பங்களை!

செல்வச் செழிப்பில் மிதந்த அவ்வீட்டைக் கண்களால் அளந்து கொண்டே வாயிலில் நிற்க,

“சத்யா…!! எனும் அழைப்போடு அவனை நோக்கி ஓடி வந்தார் மேகலை.

“அம்மா” தன் தாயின் கைகளைப் பிடித்து, அவரது கண்ணீரைத் துடைத்து விட்டான் இருபத்தி ஒன்பது வயது வேங்கையவன்.

அவன் சத்யா!

சத்யஜீவா!

திடகாத்திரமான தேகத்துடன் இருந்தவர், எலும்பும் தோலுமாய் நலிவுற்று இருப்பதைப் பார்த்தவனுக்கு தாங்க முடியவில்லை.

மகனின் புதல்வனைப் பார்த்த மேகலை, “யுகி கண்ணா” என்று அவன் கன்னத்தைப் பிடிக்க, “பாட்டி! உங்க பையனுங்க எங்கே?” என ஆவலுடன் தேடினான்.

“அடேய் மன்னிச்சிரு டா” என ஓடி வந்து மேகலையின் பின்னால் மறைந்தான் ரூபன்.

“உன்னை இன்னிக்கு விட முடியாது. நான் சைட் அடிக்கிற பொண்ணு தான் உனக்கும் தேவைப்படுதா” அவனைத் துரத்தி வந்து அடி வெளுத்தான் அவனது இரட்டையன் தேவன்.

மகேந்திரன் டெக்ஸ்டைல் உரிமையாளர் மகேந்திரன் பெங்களூரில் புகழ்பெற்ற பிசினஸ்மன். அதேயளவு வசதியுள்ள குடும்பத்திலிருந்து மேகலையை திருமணம் செய்து கொண்டார்.

இருவரது காதலின் அடையாளமாகப் பிறந்தவன் சத்யஜீவா.

அதனையடுத்து நான்கு வருடங்கள் கழித்துப் பிறந்தனர் தேவன் மற்றும் ரூபன்.

கடந்த, மூன்று வருடங்களுக்கு முன்பு கார் விபத்துக்கு உள்ளாகி உயிர் துறந்தார் மகேந்திரன்.

“இவனுங்க தொல்லை தாங்க முடியல. என்னை காப்பாத்தி விட்று சத்யா” மேகலை மூத்த மகனின் கையைப் பிடித்துக் கொள்ள,

“சத்யாவாஆஆ” இருவரும் விரிந்த வாய் மூடாமல் அதிர்ச்சியாய் திரும்பிப் பார்த்தனர்.

“அண்ணா! வர்றேனு சொல்லவே இல்ல?” என ரூபன் கேட்க, “அதான் வந்துட்டேன்ல” என்றவனது பார்வை தேவன் மீது படிந்தது.

“வா யுகி” யுகனை அலேக்காக தூக்கிக் கொண்டு சென்றவன் மறந்தும் சத்யா பக்கம் திரும்பவில்லை.

“தேவா” மேகலை அழைக்க, “என்னை அவர் கூட பேச சொல்ல வேணாம். முடியும்னா அவருக்கு உங்களை சரி பண்ண சொல்லுங்க. அது போதும்” கோபமாக சென்று விட்டான் தேவன்.

சத்யாவுக்கு முகம் இறுகிப் போக, கதவைச் சடாரென மூடி அறையினுள் அடைந்து கொள்ள,

இரு மகன்களையும் மாறி மாறிப் பார்த்து கவலையுடன் நின்ற தாயைத் தோளோடு சேர்த்து அணைத்து கண்களால் ஆறுதல் கூறினான் ரூபன்.

………………….

மழையின் வாசம் நாசி நிறைக்க, அவ்வீட்டுத் தோட்டத்தின் ஒதுக்குப்புறமாய் அமர்ந்து மழையை ரசித்த வண்ணம் தேநீர் பருகிக் கொண்டிருந்தாள் ஒரு பாவை.

” கொஞ்சம் பிரகாசம் கண்ணில்

மிஞ்சும் நாணம் நெஞ்சில்

கொஞ்சும் மகிழ்ச்சி என்னில்

விஞ்சும் உணர்ச்சி அள்ளி

உன் மீது – செல்லக் கோபத்தில் இவள்! ” எனும் கவிதை தன் செவி நனைத்ததும், திடுமென நிமிர்ந்தாள் அவள்.

“என்ன சிஸ்டர்! எங்கேயோ கேட்ட கவிதையா இருக்கேனு யோசிக்கிறீங்களா?” என்று கேட்டவாறு வந்தாள், அவளது தங்கை மகிஷா.

“அதை எழுதினது நானு. இதுல என் கிட்ட கேள்வி வேற. அடிங்ங் இங்கே குடு டி” அவள் கையைப் பிடித்திழுத்து தனது டைரியைப் பிடுங்கினாள் ஜனனி!

“அம்மாடி கவிதாயினி! இந்த மாதிரி கவிதை மழையா பொழிய உனக்கு போரடிக்கல?” இயர் ஃபோனில் பாட்டுக் கேட்டவாறு படிக்கட்டில் அமர்ந்தாள் இருவருக்கும் தமக்கையான நந்திதா.

“கவிதை மழைக்குக் காரணம் இந்த மழை இல்லக்கா, அவ மனசுல பெய்யுற காதல் மழை தான் காரணம்” என்று மகி சிரிக்க,

“சும்மா இருடி” அவள் தோளில் அடித்தவளுக்கு தன்னவன் நினைவில் நாணம் துளிர் விடலாயிற்று.

“அப்பா காதுல விழுந்தா மழை பெய்யாது, இடி தான் இடிக்கும் அதுவும் பெல்ட்டால சட்டார் பட்டார்னு” தந்தையை நினைத்து அச்சத்தில் மூத்தவள் நடுங்க,

“ஆமாமா. அன்னிக்கு நமக்கு சங்கு தான்” தலையைச் சுழற்றி அங்குமிங்கும் பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள் ஜனனி.

சில நொடிகளில் மழை வலுக்க, “அக்காச்சிஸ்! மழை வருது நனையலாமா?” உற்சாகமாகக் கேட்டாள் சின்னவள்.

“அன்னிக்கு மழையில் நனைஞ்சு ஜலதோஷம் பிடிச்சுதுன்னு என்னம்மா திட்டு வாங்கின மறந்துருச்சா? திரும்பவும் அப்பா கிட்ட ஏச்சு வாங்க முடியாது” நந்திதா மறுப்பாகத் தலையசைத்தாள்.

“அப்பாவும் அம்மாவும் கல்யாண வீட்டுக்கு போயிட்டாங்க தானே? வர லேட்டாகும். நாம அதுக்குள்ளால ஆட்டம் போட்டுட்டு நல்ல பிள்ளையா நிற்கலாம்” மகிஷா விடாப்பிடியாக நிற்க, இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு சரியென்று அரை மனதாக ஒப்புக் கொண்டனர்.

மூவரும் வெளியில் சென்று நனையத் துவங்கினர். கால்களைத் தண்ணீரில் அடித்து துள்ளிக் குதித்தாள் மகி.

அவள் மழைநீரைக் கைகளால் சேர்த்து, ஜனனியின் மீது தெளிக்க, அவளும் இவளுக்கு மாறித் தெளித்தவள்,

“நீ எதுக்கு ஃபோன் தேடுற?” என்று நந்திதாவிடம் கேட்டாள்.

“பாட்டு போடலனா நம்ம ஆட்டம் கம்ப்ளீட் ஆகுமா?” என்று பாட்டு தேட ஆரம்பித்தாள்.

“அச்சோ செம்மக்கா. குத்துப்பாட்டா போடு. அடிச்சு தூள் கிளப்பிடலாம்” அவளுக்கு பறக்கும் முத்தத்தைக் கொடுத்தாள் மகி.

“அதான் டி தேடுறேன். பொறு”

“குத்துப்பாட்டு வேணாம். நல்ல ஃபீலிங்கான ஒரு சாங் போடு. ரெயின் ப்ளஸ் மெலடி சோங் ஈக்குவல் டு ஹெவன் அக்கா” ரசனை உணர்வோடு கைகளை விரித்துச் சுற்றினாள் ஜனனி.

“இவ ஒருத்தி காதல் பைத்தியம். அது உட்கார்ந்துட்டு கேட்க வேணா நல்லாருக்கும். ஆனா டான்ஸ் ஆட செட்டாகாது” தலையில் அடித்துக் கொண்டாள் தங்கை.

“ஏய் போடி. அது கூட நல்ல ஃபீலா இருக்கும். கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை” என ஜனனி சொல்ல,

“அப்போ என்னை கழுதைங்குறியா? நீ தான் எருமை கொரில்லா” வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்குத் தயாரானாள் அவள்.

“நான் பாட்டே போடல நீங்கள்லாம் டான்ஸ் ஆடவும் தேவல. எப்போ பாரு கீரியும் பாம்பும் மாதிரி சண்டை போட வேண்டியது. போங்க டி” அலுப்புடன் படிக்கட்டில் அமர்ந்து கொண்டாள் நந்திதா.

“நான் இல்லக்கா இவ தான். என் கூட சண்டைக்கு வர்றா. என்னை கழுதைனு சொன்னா பார்த்து பல்லை இளிக்கனுமா?” மகி சிலிர்த்துக் கொள்ள,

“ஒரு பழமொழி கூட தெரியாம என்னைக் குறை சொல்ல வராத. கழுதைனு சும்மா சொன்னதுக்கு நீ ஏன் துள்ளிக் குதிக்கிறே?” சிரிக்காமல் கேட்டாள் அவள்.

“பழமொழி படிச்சு செய்யுள் படிக்கிற வயசுல படிக்க விடாம வீட்டுக்குள்ள அடிச்சி வெச்சா இப்படி முட்டாள் பட்டம் தான் வாங்க வேண்டி இருக்கும்” கோபத்துடன் அமர்ந்து கொண்டாள் மகிஷா.

அவள் பேச்சைக் கேட்ட சகோதரிகளின் முகங்கள் சட்டென கூம்பிப் போயின. தன் உள்ளக்கிடக்கையை கொட்டித் தீர்த்தவளது கோபத்தின் பின்னே மறைந்திருப்பது தீர்க்க இயலா கவலையும் ஏக்கமுமே என்பது இருவருக்கும் புரிந்தது.

“மகி! ஏன்டி?” அவள் தோளில் கை வைத்து ஜனனி சமாதானம் கூற, “ஏன்க்கா நம்ம நிலமை இப்படி?” அவளது தோளில் தலை சாய்த்தாள் சின்னவள்.

“இவ்ளோ நேரம் சண்டை பிடிச்சீங்க. இப்போ ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவி போல இருக்கீங்க. நல்லாருக்கு டி இந்த கூத்து” நந்திதா சிரிப்போடு கூற,

“கண்ணு வைக்காத நந்து! நீயும் வந்து ஜாயின் பண்ணிக்கோ. வா” அவளையும் அணைப்பில் சேர்த்துக் கொண்டாள் மகி.

“என் மகி செல்லம்” இருவரும் ஒருசேர அவளை அணைத்துக் கொள்ள, கார் வரும் சத்தத்தில் பயத்தில் கைகால் உதறியது.

“அப்பா வந்துட்டாரே. நனைஞ்சோம்னு தெரிஞ்சுது செத்தோம்” என்று நந்து பரபரக்க,

“எஸ்கேப்” என்று ஒரேயடியாக மூவரும் ஒரேயடியாக பாத்ரூமினுள் புகுந்து கொள்ள,

“பொண்ணுங்களா” என்ற தந்தையின் அழைப்பில் அதிர்ந்து விழித்தனர், மாரிமுத்துவின் முத்தான புதல்விகள்.

தொடரும்….!!

 

ஷம்லா பஸ்லி

2024-12-02

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!