அத்தியாயம் 1
மலேசியா முருகன் கோவிலில் அபிஷேகம் அலங்காரம் முடிந்து அங்கே வரும் பக்தர்களுக்கு தன் மகள் கையால் அன்னதானம் வழங்கிக்கொண்டிருந்தான் வெற்றிவேல். மலேசியாவில் தொழிலதிபர்கள் வரிசையில் மகுடம் சூடா மன்னனாக கொடி கட்டி பறந்துக் கொண்டிருக்கிறான். இன்று அவனது மகள் தியாவுக்கு 18வது பிறந்தநாள். எப்போதும் ஃபார்மல் ட்ரெஸில் முகத்தில் கடுமையும் கம்பீரமுத்துடன் இருப்பவன் வெற்றிவேல். இன்று பட்டு வேஷ்டி சட்டையில் கூடுதல் அழகுடன் ஐந்து வயதை குறைத்து காட்டும் வகையில் நின்ற வெற்றிவேலை அங்கே வந்த மலேசிய பெண்கள் கூட்டம் அவனை சைட் அடித்துச் சென்றுக் கொண்டிருந்தனர்.
வெற்றிவேல் கோதுமை நிறம். க்ளீன் ஷேவ் செய்து முகத்தை பளப்பளப்பாக வைத்துக்கொள்வான். காந்தக் கண்கள். கண்களில் கூர்மை. உடற்பயிற்சி செய்து அவனது தேகத்தை கட்டுமரம் போல செதுக்கி வைத்திருந்தான். ஜெல் வைத்து அடக்கிய முடி காதோரம் ஓரிரண்டு வெள்ளைமுடிகள் அவனுக்கு 40 வயது என்று சூடம் வைத்து சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள்.
“ஹாய் ஹேண்ட்சம் நீங்க தியா மசாலா கம்பெனியோட சேர்மன்தானே உங்களோட ஒரு செல்ஃபி எடுத்துக்குறேன்” என்றாள் அந்த பெண் வாயெல்லாம் பல் தெரியும்படி சிரித்துக்கொண்டு.
“ஓ ஷுயர்” என்று உதட்டுக்கு வலிக்கா வண்ணம் சிரிப்புடன் தோளைக்குலுக்கினான் வெற்றிவேல்.
அந்த பெண்ணை விட்டு தள்ளி நின்றாலும் வெற்றிவேலின் தோளோடு லேசாக உரசி நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டு “நான் இன்னிக்கு என்னோட போன்ல ஸ்டேடஸ் வைக்கப்போறேன் சார்” என்று கண்ணை சிமிட்டிச் சென்றிருந்தாள் அந்த பெண்.
வெற்றிவேலின் மனைவியோ “செல்ஃபி எடுத்தது போதும் இன்னும் யாராவது போட்டோ எடுக்கணும்னு வந்துட போறாங்க வாங்க போகலாம்” என முகத்தை காட்டமாக வைத்து செல்ஃபி எடுத்துச் சென்ற பெண்ணை முறைத்துக்கொண்டு காரில் ஏறினாள்.
தியாவோ காரில் தந்தையின் பக்கம் ஏறி அமர்ந்தவள் தலையை திருப்பி பின்னால் இருந்த மாதவியை பார்த்தவள் “ஏன் மம்மி டாடியை கோவிலுக்கு வந்த பொண்ணுங்க பாதிபேர் சைட் அடிக்குறாங்கனு பொறாமையில பொங்குறீங்களா! எனக்கு பெருமையா இருக்குப்பா என்னோட டாடியை எல்லாரும் சைட் அடிக்கறது… எனக்கு மட்டும்தான் யூத்தான டாடி கிடைச்சிருக்காங்க” என்று விளையாட்டாய் பேசியவளை முறைத்த மாதவியோ “உனக்கு வாய்க்கொழுப்பு அதிகம் ஆகிடுச்சுடி வீட்டுக்கு வா வச்சுக்குறேன்” என்று மகளை முறைத்தாள் மாதவி.
“மாதவிஇஇ அவ ஏதோ ஃபன்னுக்கு பேசறா விடு” என்று கண்ணை சுருக்கி மனைவியின் கோபத்தை குறைக்க சொல்லி காரை ஸ்டார்ட் பண்ணினான். மகளை சிறு அதட்டல் போட விடாது செய்துவிடுவான் வெற்றிவேல்.
வெற்றிவேலின் உயிர் மூச்சு அவனது மகள் தியா மட்டுமே… மகள் இது வேண்டும் என்று கேட்ட அடுத்த நொடி அவளுக்கு வாங்கி வந்துவிடுவான். மகள் தும்மினால் கூட துடித்துப்போவான் தொழிலதிபன் வெற்றிவேல். அவனுக்கு தொழில் இரண்டாம்பட்சம்தான்.
“டாடி என்கூட இன்னிக்கு நீங்க இருக்கணும்” என்று சொல்லிவிட்டால் கோடி ரூபாய் பிஸ்னஸாக இருந்தாலும் அங்கே செல்லமாட்டான். மகளுடன் அன்றைய பொழுதை கரைத்துவிடுவான். தினமும் மகளின் முகத்தில் தான் அவன் கண் விழிப்பான். இதுநாள் வரை மகளை ஒரு சிறு அதட்டல் கூட அவன் போட்டதில்லை. ஒரு அடி செல்லமாய் வைத்தது இல்லை.
அவளது பிறந்தநாளை கொண்டாட சிம்பிளாக வீட்டு தோட்டத்தில் பார்ட்டி வைத்திருந்தான். பார்ட்டிக்கு அவனது தொழில் நண்பர்கள் மட்டுமே அழைத்திருந்தான்.
அதில் நிர்மல்ராஜ், அவனது நெருங்கிய நண்பன் அவனது மனைவி எஸ்தருடன் முதல் ஆளாக வந்து நின்றான். மாலை நேரம் வண்ண விளக்குகளால் வெற்றிவேலின் வீடு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் போல ஜொலித்து மின்னிக் கொண்டிருந்தது.
பிங்க் நிறத்தில் வேலைபாடுகள் செய்த லெஹங்காவை மகளுக்கு வாங்கிக்கொடுத்திருந்தான். ஆனால் தியாவோ “டாடி எனக்கு சேலை கட்டணும் போல இருக்கு பட்டுச் சேலை வேணும்” என்று கேட்டதும் அப்போதே தமிழ்நாட்டில் பட்டுப் புடவைக்கு ஆர்டர் போட்டு வைத்து விட்டான். மெரூன் கலர் புடவை கனம் இல்லாமல் கண்ணுக்கு உறுத்தா வண்ணம் சன்னமாய் பார்டருடன் புடவை வேண்டும் என்றிருந்தான் வெற்றி.
குங்கும கலரில் பட்டுச் சேலையை வாங்கி கொடுத்திருந்தான். அவன் மெரூன் நிற கோட் சூட் போட்டிருந்தவன் வந்த நண்பர்களை மனைவியுடன் சேர்ந்து நின்று வரவேற்றுக்கொண்டிருந்தான்.
“எங்க வெற்றி பர்த்டே பேபியை காணோம்?” என்று நிர்மல்ராஜ் வெற்றியின் தோளை தொட்டான்.
“இருங்க நான் போய் கூட்டிட்டு வரேன்” என்று குறுஞ்சிரிப்புடன் வெற்றிவேல் மகளின் அறைக்குச் செல்ல வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதையாய் அவன் மகள் சேலை முந்தானையை பிடித்து கையில் பிடித்துக்கொண்டு முகத்தில் ஆனந்தச் சிரிப்புடன் தந்தையை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள்.
மகளை அலங்காரம் செய்து விட பியூட்டிஷியனை வரவைத்திருந்தான் வெற்றிவேல்.
“என் முருகன் மகாலட்சுமியாட்டம் பொண்ணை எனக்கு தந்திருக்காரு” என்று பூரிப்பு பொங்கும் முகத்துடன் மகளை விழி அகலாமல் பார்த்திருந்தவன் கண்கள் லேசாய் கலங்கியது.
தியா பக்கம் வந்ததும் “டாடி சேலையில நான் எப்படியிருக்கேன்?” என்று புருவம் உயர்த்தினாள்.
அவன் வாழ்வில் மறக்க வேண்டுமென்று நினைத்த நினைவுகள் எல்லாம் அவன் கண்முன் வந்து போனது. கண்ணை மூடி திறந்து “என் மகள் வானத்திலிருந்து இறங்கி வந்த தேவலோகத்து பொண்ணாட்டம் இருக்கா டா இந்த சிரிப்பு முகத்தோடு எப்பவும் இருக்கணும் என் சாமி” என்று மகளின் நெற்றியில் முத்தமிட்டான்.
“என்னங்க எல்லாரும் வந்துட்டாங்க வந்தவங்க எல்லாரும் வெற்றி எங்கே தியா எங்கனுதான் கேட்குறாங்க. அப்பாவும் பொண்ணும் பேச ஆரம்பிச்சா உலகத்தை மறந்துடுவீங்க போங்க ரெண்டு பேரும் பார்ட்டி முடிஞ்சதும் கொஞ்சிக்கோங்க” என்று பெரும்மூச்சுவிட்டாள்.
“இதோ வரோம்டி என் பொண்ணுக்கு அடுத்ததுதான் எல்லாருமே ஏன் நீயும் தான்” என்று அழுத்தியதில் அவள் முகம் வாடினாலும் முகத்தில் சிரிப்போடு “எல்லாருக்கும் தெரிந்த விசயம்தானே வாங்க போகலாம்” என்று மகளின் கையை பிடித்துக்கொண்டாள்.
“மம்மி டாடி வாங்கிக்கொடுத்த சேலை செமயா இருக்கா. சேலைல நான் எப்படி இருக்கேன்?” என்று தாயிடம் கேட்டதும்
“உன் அப்பா வாங்கி கொடுத்த சேலையில் அழகான பொம்மை போல இருக்கடி என் கண்ணே பட்டிடும் இன்னிக்கு நைட் சுத்திப்போடணும்” என்று பார்ட்டி நடக்கும் இடத்திற்குச் சென்றனர்.
பேபி டாலுடன் மகள் உயரத்திற்கு கேக்கை வைத்திருந்தான்.
சேலையில் வந்து நின்ற தியாவை கண்ட அவனது நண்பர்கள் வெற்றி பொண்ணு இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாளா. வெற்றி தோளுக்கு மேல வளர்ந்துட்டா பா என்று சலசலத்துக் கொண்டனர்.
“ஹேப்பி பர்த்டே தியா” என்று பாட்டு பாட கேக்கை வெட்டினாள் வெற்றிவேலின் மகள் தியா. முதலில் தந்தைக்கு கேக்கை ஊட்டி விட்டதும் அவள் கையில் இருந்த கேக்கை வாங்கி மகளுக்கு ஊட்டி விட்டு “என் தங்கத்துக்கு என் ஆயுசையும் கூட்டி இருநூறு வயசு இருக்கணும்” என்று மகளின் நெற்றியில் முத்தமிட்டான்.
“தேங்க்ஸ் டாடி” என்று சந்தோஷ சாரல் சிரிப்புடன் தந்தையை அணைத்துக்கொண்டாள் தியா.
மாதவி மகளையும் கணவனையும் என்னை வழக்கம் போல மறந்துட்டாங்க என்று ஏக்கமாய் பார்க்க “உன் அம்மா உன்னை பாவமா பார்க்குறாடா அவளுக்கு கேக் ஊட்டி விடு தங்கம்” என்றான் மாதவியை ஒரு பார்வை பார்த்துக்கொண்டு.
தியாவோ கேக்கை எடுத்து மாதவிக்கு ஊட்டி விட “உன் அப்பா போல உயர்ந்த நிலைக்கு வரணும் தியாக்குட்டி” என்று மனம் நிறைந்த சிரிப்புடன் மகளின் கன்னத்தில் முத்தமிட்டாள்.
தியாவோ “டாடி நீங்க இந்த கன்னத்துல முத்தம் கொடுங்க இப்படி ஒரு போட்டோ நம்ம வீட்ல இல்லை இப்போ போட்டோ எடுத்துப்போம்” என்று பூரிப்பாய் மகள் கூறவும் மகள் கன்னத்தில் முத்தமிட்டான் இந்த காட்சியை சில கண்கள் பொறாமையுடனும், இந்த குடும்பத்து மேல யார் கண்ணும் படக்கூடாது சாமி என்பது போல பார்ட்டிக்கு வந்தவர்கள் கண்ணை விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
வந்திருந்த நண்பர்களில் ஒருவர் “இப்படி பொண்ணை பாசத்தை கொட்டி வளர்க்குறான் வெற்றி நாளைக்கு பொண்ணை எப்படித்தான் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கொடுத்து பிரிஞ்சு இருக்கப்போறானோ தெரியலை” என்று வருத்தப் பட்டு கூறவும்
“நீ வேறப்பா வெற்றிக்கு இருக்க சொத்து மதிப்புக்கு வீட்டோட மாப்பிள்ளையாதான் பார்த்து பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைப்பான் அவனாவது மகளை மட்டும் பிரிந்து இருக்கறதாவது இருக்கமாட்டான்” என்றனர் கிசுகிசுப்பாய்.
வந்திருந்த அனைவருக்கும் விருந்து தடபுடலாக இருந்தது. அசைவம் கிடையாது சைவ உணவுகள்தான் அதுவும் இந்திய உணவுகள் இட்லி, இடியாப்பம்ழ், ஊத்தாப்பம் இனிப்பு பல வகை என்று ஒரு மினி கல்யாண விருந்து போல அசத்தியிருந்தான்.
நிர்மல்ராஜோ “வெற்றி என்னடா என் மருமகளை இப்பவே பரிசம் போட்டுக்கட்டுமா?” என்று அவன் கிண்டலாய் கேட்கவும் வெற்றியின் முகம் மாறியது. எல்லா தந்தையும் மகள் பெரியவள் ஆகிறாள் அவளுக்கு அடுத்து கல்யாணம்தான் என்று கனவு கண்டிருப்பார்கள். மகளுக்கு வயது கூட கூட வெற்றிக்கு கவலை அதிகரித்து வருகிறது. என் மகளை பிரிய வேண்டிய நாள் வந்துவிடுமேயென்று பல நாள் தூங்காமல் தோட்டத்தில் உலாவிக்கொண்டிருப்பான்.
“நிர்மல் என் பொண்ணு இப்பதான் ஸ்கூல் முடிச்சிருக்கா ரெண்டு டிகிரி முடிக்கணும் அப்புறம் பார்க்கலாம் பெண்ணை பிரிய வேண்டுமா என்னால முடியாது” என்று நிர்மலிடம் சமாளித்து பேசி முகத்தில் புன்னகையை வரவழைத்துக்கொண்டான் வெற்றி.
எஸ்தரோ “அண்ணா உங்க பொண்ணை என்கிட்ட கொடுத்துடுங்க இப்பவே எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடறேன் புடவையில் பார்க்கும் போது கல்யாணப் பொண்ணு போல இருக்கா ஆசையா இருக்கு” என்று அவள் விளையாட்டுக்குத்தான் கேட்கிறாள் என்று புரிந்தாலும் வெற்றிக்கு மனம் மகளை பிரிய வலித்தது.
“தி…தியா படிச்சு முடிக்கட்டும் உன் மகன் ரியான்தான் எனக்கு மாப்பிள்ளைனு முடிவு பண்ணியிருந்தா யாராலயும் தடுத்து நிறுத்த முடியாது எஸ்தர் இருங்க நான் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்” என்று அங்கிருந்து வாஷ் ரூம் வந்தவனுக்கு மகளுக்கு ஏன் இந்த பர்த்டே பார்ட்டியை வைத்தோமென்று தோன்றியது.
மாதவியோ கணவனின் முகம் வெளிறிபோனதை கண்டு பெரும்மூச்சு விட்டவள் பூ மலர்ந்தா பறிக்கத்தானே செய்வார்கள் மகளை தன்கூடவே வச்சிக்கணும்னு நினைக்கறது எந்த விதத்துல நியாயம். இப்பவே பொண்ணை கல்யாணம் பண்ணிக்கொடுத்தவர் போல முகம் சோர்ந்து போய்ட்டாரா என்று மாதவிக்கு கவலை வந்தது.
“டாடி எங்க இருக்கீங்க?” என்று மகளின் குரலில் முகத்தை தண்ணீரில் அடித்து கழுவிக்கொண்டு துண்டில் முகத்தை துடைத்துக் கொண்டு வெளியே வந்தான் வெற்றிவேல்.
“என்னடா?”
“டாடி எல்லாரும் கிளம்பறாங்களாம் உங்ககிட்ட சொல்லிட்டு போக வெயிட் பண்ணுறாங்க”
“வாடா போகலாம்” என்று மகளின் தோளில் கைப்போட்டு வெளியே தோட்டத்திற்குச் சென்றதும்
“அப்பா பொண்ணு போல தெரியல ஏதோ இவன் கடைசி தங்கச்சி போல இருக்காங்க” என்று சிரித்தனர் அவனது தொழில் நண்பர்கள்.
அனைவரையும் இன்முகத்துடன் வழியனுப்பி வைத்தபிறகு கடைசியாய் நிர்மல்ராஜும் எஸ்தரும்தான் இருந்தனர்.
நிர்மல் ராஜோ “என்ன டிகிரி எடுக்கப்போற தியா?” என்ற நேரம் “ஹாய் தியா” என்று ரியான் அங்கே கையில் பரிசுப் பெட்டியுடன் வந்து நின்றான் புன்னகை மாறா முகத்துடன். எம்.பி.ஏ இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருக்கிறான்.
“மெனி மோர் ஹேப்பி பர்த்டே தியா” என்று பரிசுப் பெட்டியை தியாவின் கையில் கொடுத்தான்.
“தேங்க்ஸ் ரியான்” என்று அவள் அவன் கொடுத்த பரிசை வாங்கி டேபிள் மீது வைத்து விட்டு “டாடி எனக்கு டயர்டா இருக்கு நான் கிளம்பட்டுமா?” வெற்றியின் காதருகே சென்று கேட்டாள்.
“ரியான் வந்திருக்கான்ல அவன் கிட்ட பேசாம போனா நல்லாயிருக்காதுடா ரெண்டு வார்த்தை பேசிட்டு போ” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும்படி.
“எ.எனக்கு இவனை கண்டாலே பிடிக்கல டாடி அவனும் ஆளும் அவன் மண்டையும்” என்று முகத்தை அஷ்ட கோணலாக்கினாள்.
“அப்படி சொல்லக்கூடாதுடா தப்பு நம்மை தேடி வந்தவங்களை அவாய்ட் பண்ணக்கூடாது” என்றான் மகளின் தலையை தடவி பொறுமையாக.
வெற்றிவேல் சொல்லிவிட்டால் மறுவார்த்தை மறுத்து பேசமாட்டாள். “ஓ.கே டாடி” என்று சலிப்பாக தலையை அசைத்தாள் தியா.
கொஞ்சம் நேரம் ரியான் பேசிவிட்டு
“நீ படிக்க போற?” என்றான் ரியான்.
நிர்மல்ராஜும் தியாவின் பதிலை கேட்க ஆவலாக இருந்தான்.
“நான் ஃபுட் டெக்னாலஜி படிக்கப்போறேன் அங்கிள் அதுவும் இந்தியாவில்” என்றாள் பயம் கலந்த கண்ணுடன் தந்தையை பார்த்தவாறே.