1. பரிபூர்ணதேவி

5
(12)

பரிபூர்ணதேவி

அம்பிகா ராம்

அத்தியாயம் – 1

“என்ன சிவசாமி, ஏதாச்சும் பதில் சொல்லு பா…. நம்ம சனம் எல்லாம் காத்திட்டு இருக்காங்க…” சிவசாமியின் வீட்டில் குழுமி இருந்த கூட்டத்தில் இருந்து அவர் பங்காளி ஒருவர் குரல் கொடுத்தார்.

“நான் சொல்றதுக்கு இதில ஒண்ணுமே இல்லை, கணபதி, அவனோட கடைசி நிமிஷத்தில் கூட அவங்க குடும்பத்தோட எந்த தொடர்பும் வைச்சுக்க வேண்டாம்னு தான் சொன்னான்.”

“ஏன்பா, இருபது வருஷத்தில் எவ்ளோவோ மாற்றம் வந்துருச்சு, அப்போ ஏதோ கோபத்தில இருந்தாங்க, இப்போவும் அதை பிடிச்சுக்கிட்டு தொங்கணுமா?” இன்னொரு பெரிசு குரல் கொடுத்தார்.

வீட்டு கூடத்தின் மூலையில் நின்று அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த மஞ்சுளாவை நோக்கி, ப்ளீஸ் ஏதாச்சும் செய்யேன் என்பது போல் கண்களால் இறைஞ்சினார் சிவசாமி.

“எங்களுக்கு உங்க கூட சம்பந்தம் பண்ணிக்க கொஞ்சமும் இஷ்டம் இல்லை. அதுவும் இந்த பையனுக்கு நல்ல குடி, கெட்ட பழக்க வழக்கம் இருக்குனு என் பொண்ணை கேட்டு வந்து இருக்கீங்க, இதே போன மாசம் அமெரிக்கால வேலை பார்க்கிற ஒரு பையனுக்கு நிச்சயம் நடந்துச்சே, அப்போ என் பொண்ணு நியாபகம் வரலையா?” நறுக்கு தெறித்தார் போல் கேள்வி கேட்டார் மஞ்சுளா, கணவனின் கெஞ்சலுக்கு பின் தன் அமைதியை கைவிட்டு.

“ஏதோ எங்க வீட்டு ரத்தம் பாதி ஓடுதேனு கேட்க வந்தா, ரொம்ப பண்றே! இந்தா இருக்கானே சிவசாமி இவன் வீட்டில இருந்து யாராவது உங்ககிட்டே சம்பந்தம் பேச வரப் போறாங்களா என்ன?” நக்கலாக பேசினார் பெண் கேட்க வந்த குடும்பத்தில் இருந்து ஒருவர்.

“என்னை யாரும் பொண்ணு கேட்டு வர வேண்டாம், நீங்களும் கிளம்புங்க” என்ற குரல் வாசல் பக்கம் இருந்து வந்தது. அப்போது தான் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்தாள் தேவி, பரிபூர்ணதேவி!

“என்ன இந்த பிள்ளை இப்படி பேசுது?” அவர் அங்கலாய்க்க,

“அய்யே என்ன இந்த கிழவி இப்படி வாயை பொளக்குது?” அவள் கலாய்த்தாள்.

“உன்னை பொண்ணு பார்க்க வந்து இருக்கோம், இப்படி எல்லாம் வாய் துடுக்கா பேசாம போய் அடக்க ஒடுக்கமா உட்கார் ஆத்தா.” வேறு யாரோ ஒருவர் கூற,

“யார் மாப்பிள்ளை?” என்று அங்கிருந்த கூட்டத்தை அலசியவள்,

“ஓ! இவனா? அலங்ககோலமா தண்ணி அடிச்சிட்டு ரோட்டில் கிடப்பான்…. இவனுக்கு அடக்கம் ஒடுக்கமா பொண்ணு வேணுமா?” என்று எகிறினாள்.

“ஏய்!” அந்த தண்ணி வண்டி இவளை பார்த்து உறும முயற்சி செய்தான். அவனை கொஞ்சம் கூட சட்டை செய்யவில்லை தேவி.

“பொம்பிளை பிள்ளையை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறீங்க?” மாப்பிள்ளையின் அம்மா கேட்க,

“இவ்ளோ நேரம் நீங்களும் தானே பேசினீங்க? அப்போ நீங்க யாரு?” மஞ்சுளா பட்டென்று கேட்க,

“ஆத்தி, தாயை போல் பிள்ளை, நூலை போல் சேலைனு சும்மாவா சொன்னாங்க?”

“எங்க வீட்டுக்கே வந்து எங்க அம்மாவை பத்தியே தப்பா பேசுவீங்களா? கிளம்புறீங்களா இல்லையா இப்போ?” தேவி சத்தமிட,

“இதுக்கு மேலே இங்க இருக்க எங்களுக்கு என்ன மரியாதை கெட்டு போச்சா? நாங்களும் பார்க்கிறோம் எந்த சீமையிலே இருந்து எந்த ராசா வந்து இந்த பிள்ளையை கட்டுறான்னு….?”
மாப்பிள்ளை என்று வந்திருந்த குடிகாரன், ரத்த சிவப்பாக இருந்த விழிகளுடன் தேவியை நெருங்கி,

“உன்னை சும்மா விடமாட்டேன்டி” என்றான்.

“நீ முதல்ல கை உதறாம நேரா நில்லுடா”
வந்திருந்த அனைவரும் மஞ்சுளாவையும் தேவியையும் திட்டிக் கொண்டே செல்ல,

“நீங்க ஏதாவது சமாளிக்காம, வழக்கம் போல் அம்மாவை கோர்த்து விட்டுட்டீங்களா பா?”

“ஹிஹி…. அம்மா பேசினா தாண்டா எல்லாரும் போவாங்க, நான் பேசினா எடுபடாது.” மகளிடம் சமாளித்தார் சிவசாமி.

“அம்மா, அப்பா ஊருக்குள்ள நமக்கு கெட்ட பேர் மட்டும் வாங்கிக் கொடுக்கலை, அவர் அப்பாவியாம், நம்ம கிட்டே மாட்டிக்கிட்டு கஷ்டப்படுற மாதிரி பில்டப்பும் பண்ணி வைச்சு இருக்கார், தெரியுமா?”

“ஐயோ, இல்லை மஞ்சு, நான் அப்படி எல்லாம் சொல்வேனா? இவளை நம்பாதே” அலறினார் சிவசாமி.

“சே சே நீங்க சொல்லி இருக்க மாட்டீங்க, யாராவது உங்ககிட்டே வந்து, பாவம் சாமி நீ, ரெண்டு ராட்சஷிங்க கிட்டே மாட்டிகிட்டு கஷ்டபடுறேனு சொல்லி இருப்பாங்க, நீங்க ஆமானு தலையை மட்டும் அசைச்சு இருப்பீங்க, அது ஊரெல்லாம் பரவி இருக்கும், அவ்ளோதான்! நீங்க பொறுப்பு இல்லை அதுக்கு…” கேலியாக மஞ்சு சொல்ல,

“ஆமா, யாரோ என்னவோ பேசட்டும்…. விடு மஞ்சு….ஹிஹி….” அசடு வழிந்தார் சிவசாமி.
அவர் முகத்தில் இருக்கும் அசட்டு சிரிப்பை கண்டு அம்மாவும் மகளும் சிரிப்பை அடக்க முடியாமல் சத்தமாக சிரித்தனர்.

ஆரணியில் இருந்து அரைமணி தூரத்தில் இருக்கிறது இவர்கள் ஊர். சிவசாமியின் சொந்த ஊர். சின்ன ஊர் என்பதால் அவர்கள் சொந்தங்கள் யார் யார், அவர்கள் வீட்டு கதை என்ன என்று ஊரே அறியும். மஞ்சுளாவின் சொந்த ஊர் கும்பகோணம், ஐயர் வீட்டு பெண். சிவசாமி, மஞ்சுளாவின் இரண்டாவது கணவர். மஞ்சுளாவின் முதல் கணவர் தான் கணபதி, முழு பெயர் பாலகணபதி. சிவசாமியின் நெருங்கிய நண்பர், சொந்தமும் கூட பங்காளிகள். கணபதி, சிவசாமி, மஞ்சுளா மூவரும் வாத்தியார்கள். ஒரே இடத்தில் வேலை செய்தனர். அப்போது கணபதிக்கும், மஞ்சுவிற்கும் காதலாகி விட, மஞ்சு அவர் வீட்டை எதிர்த்து கணபதியை திருமணம் செய்துக் கொண்டார். அதோடு மஞ்சுவின் வீட்டோடு அவருக்கு தொடர்பு விட்டு போயிற்று. அவர்களுக்கு பிறந்த குழந்தை தான் பரிபூர்ணதேவி. அவளுக்கு ஒரு வயதாக இருந்த போது, ஒரு ஆக்ஸிடெண்டில் கணபதி இறந்து போனார். அவரின் கடைசி நிமிடத்தில், சிவசாமியிடம் மஞ்சுவின் கையை பிடித்து கொடுத்து, நீதான் தான் அவளை கல்யாணம் பண்ணிக்கணும். என் பொண்ணுக்கு நீதான் அப்பாவா இருக்கணும் என்று சொல்லிவிட்டு இறந்து போனார். அவரின் திருமணத்திற்கு பின்னரும் அவரை சேர்த்துக் கொள்ள தயாராக இல்லாத அவர் குடும்பம் அவரிடம் காட்டிய வன்மத்தில், அவர்கள் சங்காத்தமே வேண்டாம் சொல்லி விட்டார். அவர்கள் மூவரும் அதுவரை காஞ்சிபுரத்தில் வேலை செய்தனர். அங்கேயே ஒரே வீட்டில் தான் வசித்தனர். சிவசாமிக்கு அப்போது தான் வீட்டில் பெண் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
கணபதி மறைந்து ஒரு மாதத்திற்கு பிறகு,

“கணபதி சொன்னதால நீங்க என்ன கல்யாணம் பண்ணிக்கணும்னு அவசியம் இல்லை சாமி. அவர் எங்களை பத்தி கவலையில அப்படி சொல்லி இருப்பார். நீங்க உங்க வாழ்கையை பாருங்க… நான் சமாளிச்சுபேன்.” என்றார் மஞ்சுளா. இயல்பிலேயே நல்ல தைரியசாலி அவர்.

“பாப்பா இப்போ என்னை தான் அப்பா சொல்றா….” சிவசாமி தயங்கி மெதுவாக கூறினார். அவர் கொஞ்சம் மென்மையானவர். எதை பேசவும் யோசிப்பார். இப்போது மஞ்சு கூறுவதை மீறி, திருமணம் குறித்து பேசினால் அவள் கோபப்படுவாளோ என்று பயந்தார்.

“அவக் குழந்தை சாமி, கொஞ்ச நாள் நீங்க இல்லைனா, உங்களையும் மறந்துருவா….” மஞ்சுளா சொல்லியதும் பொல பொலவென்று இறந்து போன நண்பனை நினைத்துக் கண்ணீர் உகுத்தார் சிவசாமி.

“உங்களுக்கே தெரியும், கணபதி தான் எனக்கு எல்லாம். அவனால் தான் நான் படிச்சேன், வேலைக்கு வந்தேன், என்கூடவே இருப்பான். யார் எப்படிப்பட்டவங்க, யார்கிட்டே எப்படி பேசணும், பழகணும் எல்லாம் அவன் தான் சொல்லிக் கொடுப்பான். அவன் சொன்னதை செய்யாம என்னால இருக்க முடியாது. நீங்க தான் இனிமே என்னை பார்த்துக்கணும் அவன் இடத்தில இருந்து. பாப்பாவோட தான் நான் இருப்பேன். வேற ஒன்னும் எனக்கு வேண்டாம், என்னை எங்கேயும் போக சொல்லாதீங்க. ப்ளீஸ்….” கைகூப்பினார் சிவசாமி.

“உங்களை பார்த்துக்கிறது பத்தி ஒண்ணுமில்லை. இப்போவே நம்மளை பத்தி அக்கம் பக்கம் பேசுறாங்க சாமி. நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க, அந்த பொண்ணோட வாங்க, நாம தொடர்பிலே இருக்கலாம்.”

“கணபதி சொன்னதை செய்ய முடியலைனாலும், நான் உங்க கூட தான் இருப்பேன், யார் என்ன வேணா பேசட்டும், எனக்கு கவலை இல்லை! வேற யாரையும் கல்யாணம் எல்லாம் பண்ணிக்க மாட்டேன்” என்றார் சிவசாமி உறுதியாக.
சொன்னது போலவே உறுதியாகவும் இருந்தார். அவ்வளவு சாது, இவ்வளவு உறுதியாக இருக்க முடியுமா என்று மஞ்சுவே ஆச்சரியப்பட்டு போனார். சிவசாமியின் வீட்டில் இருந்து இவர்களை தேடி காஞ்சிபுரம் வந்து அவருடன் சண்டை போட்டும், அவர் மசியவில்லை. ஒருவழியாக அவர்கள் இறங்கி வந்து,

“போனா போகட்டும் இந்த பொண்ணை கல்யாணமாது பண்ணிக்க” என்று சொல்லும் போது வருடங்கள் இரண்டை கடந்து இருந்தது. அப்போதும் சிவசாமி மஞ்சுவின் முடிவை தான் எதிர்பார்த்தார். இரண்டு வருடங்கள் ஒரே வீட்டில் இருந்தாயிற்று, தேவியும் சிவசாமியை தான் அப்பா என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாள், சிவசாமியும் பிடிவாதமாக இருக்க, மஞ்சு திருமணத்திற்கு சம்மதித்தாள்.

திருமணமும் ஆயிற்று, சிவசாமியின் வீட்டில் அனைவரும் அவரை விட்டுகொடுக்க முடியாமல் மஞ்சுவையும் தேவியையும் ஏற்றுக் கொண்டனர். ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் சிவசாமி தங்களை ஒதுக்கி வைத்து விடுவார் என்று கடந்த இரண்டு வருடத்தில் கண்டு இருந்தனரே. அதுவும் ஒரு காரணம். அவர்கள் அனைவருக்கும் கணபதியையும் ரொம்ப பிடிக்கும், சொந்தமும் அல்லவா! அதனால் உள்ளுர உண்மையான அன்பு இருக்கா இல்லையா என்பது அவரவர் மனதிற்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மஞ்சு அனைவருடன் அளவோடு இருந்து கொண்டார்.
திருமணம் முடிந்தும் சிவசாமியும் மஞ்சுவும் கணவன் மனைவியாக எல்லாம் வாழவில்லை. தாம்பத்தியம் தவிர மற்ற விஷயத்தில் ஒரு குடும்பமாக இருந்தனர். அடுத்த மூன்று வருடமும் ஓடி, கணபதி இறந்து ஐந்து வருடம் ஆகி இருந்தது. சிவசாமி வீட்டில் அவருக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று எதிர்பார்கிறார்கள் என்றும் மஞ்சுவிற்கு புரிந்தது. அவை எல்லாம் விட ஒரு கட்டத்தில், நமக்காக வாழும் இந்த மனிதனுக்கு என்னால் முடியும் என்றால் குடும்பம் மட்டும் கொடுக்காமல், குடும்ப வாழ்க்கையையும் கொடுப்பதில் என்ன தவறு என்று தோன்ற, மஞ்சுவே தான் சிவசாமியிடம் பேசினார்.

“நம்ம தேவி ஒத்தை பிள்ளையா நிற்க வேண்டாம்…” என்றார் மஞ்சு சூசகமாக.

“நீ யாருக்காவும் உன்னை மாத்திக்க வேண்டாம்” என்றார் சிவசாமி அலட்டிக்கொள்ளாமல்.

“என்னை பத்தி நல்லா தெரிஞ்சும், நீங்க இப்படி சொல்றீங்களே? நான் என் முடிவை யாருக்காவும் எடுக்கிறது இல்லை….”

“அப்போ எனக்காக இந்த முடிவு எடுத்தியோ?” சரியாக கேட்டார் சாமி.

“ஒரு நிமிடம் யோசித்தவர், இல்லைனு பொய் சொல்லமாட்டேன், அப்படி எடுத்ததும் தப்புனு தோணலை…”

அவர் பேசி முடிப்பதற்குள், சாமி ஏதோ பேச வாய் எடுக்க,

“இருங்க நான் முடிச்சுடுறேன்…. உங்களுக்காக எடுக்கிறேன்னு தான் நினைச்சேன்…. ஆனா இந்த நிமிஷம் நமக்காகனு தோணுது….” என்றார் மெல்லிய குரலில்.

அவர் சொன்ன விதத்தில், குரலில் இருந்த மாற்றத்தில், அவரை கண்ணோடு கண் பார்த்த சிவசாமி, “ஆகட்டும்… நீ சொல்லி நான் எதை கேட்காம இருந்திருக்கேன்” என்று மெல்லமாக சிரித்தார்.

அடுத்த பத்து மாதத்தில், தேவிக்கு ஏழு வயதாகி இருந்த போது அவளுக்கு தம்பி பிறந்து இருந்தான். நண்பனின் பெயரின் பாதி எடுத்து பாலகுமரன் என்று மகனுக்கு பெயர் வைத்தார் சிவசாமி. நண்பன் நினைவில் அவனை வாய் நிறைய பாலா பாலா என்று தான் அழைப்பார் சிவசாமி.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

1 thought on “1. பரிபூர்ணதேவி”

Leave a Reply to ArundathiPosalan Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!