•°○ விஷ்வ மித்ரன் ○°•
அத்தியாயம் 01
நிலவு மகளைப் பிரசவித்த வானம் வலியெனும் இருளில் சோர்ந்து கிடக்க மினுக் மினுக்கென மின்னும் தாரகைகளின் சில்மிசத்தில் தன் தாயவள் மடி மீது சாய்ந்து கீற்றாக சிணுங்கிற்று நிலவு.
அந்த இரவு வேளையிலே ஹோவென இரையும் கடலின் கரையில் ஒருவன் அமர்ந்திருக்க அவன் தோள் மீது சாய்ந்திருந்தான் மற்றொருவன்.
தன் தோளில் தலை சாய்த்திருந்தவனைப் பார்த்து அவன் இதழ்களில் குறு நகையும் தான் அரும்பலானது.அதே புன்னகையுடன் “டேய் மாப்ள” என அழைக்கவும் தான் செய்தான் தோழன்.
அவனிடமோ எவ்வித அசைவுகளும் இல்லாது போக “விஷு” காதருகில் மீண்டும் கிசுகிசுக்க அதற்கும் மௌனமே பதிலாய்க் கிடைத்தது.
இதில் கடுப்படைந்தவன் சற்றே விலக அவனோ சடாரென கீழே சரிந்தான். ஓர் நொடி உயிர் பிரியும் வலியை உணர்ந்த மித்து பின் ஏதோ தோன்ற அவன் இடுப்பில் கிச்சு கிச்சு மூட்ட பதறியடித்துக் கொண்டு நிமிர்ந்து முறைக்க, அதற்கு சற்றும் குறையாத முறைப்புடன் எதிர்கொண்டான் இவனும்.
“எதுக்குடா கிச்சு கிச்சு மூட்டின? நிம்மதியா தூங்க கூட விட மாட்டியா ” என்று சிணுங்க, “என்னது தூங்கினியா? பேசப் பேச அமைதியா இருக்கவும் நான் கூட ஒரு நிமிஷம் பயந்து போய்ட்டேன் தெரியுமா” என்றான் இவன்.
அவனைப் பார்த்து கண் சிமிட்டி “உன்ன பயம் காட்ட தான் தூங்குற மாதிரி ஆக்ட் பண்ணேன்” என்று சொல்ல, “யேன் விஷு இப்படி பண்ணுறே…? அன்னக்கி கூட கால் பண்ணி உனக்கு ஆக்சிடன்ட் ஆன மாதிரி பயம் காட்டின. உனக்கு ஏதாவது ஆச்சுனா நான் என்னடா பண்ணுவேன்? என்னைக் கஷ்டப்படுத்துறதே உனக்கு வேலையா போச்சுல” கவலையில் கரகரத்து குரல்.
இதைக் கண்டு பதறியும் தான் போனான் விஷு.
“ஹே சாரிடா நான் சும்மா விளையாட்டுக்கு தான் பண்ணேன். இனிமே பண்ண மாட்டேன்”
“உனக்கு எல்லாமே விளையாட்டாப் போச்சு தானே?” இன்னும் தெளியாமல் உரைத்தான்.
“அதான் இனிமே பண்ண மாட்டேன்னு சொல்லிட்டேன்ல உன் விஷு மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? ஓகே இப்போ நான் என்ன பண்ணனும்னு சொல்லு” என நண்பனின் நாடி பிடித்து கொஞ்சினான்.
இருபத்தைந்து வயது வாலிபன் தன் முன் குழந்தையாக மாறி கெஞ்சுவதைப் பார்த்து தன்னையும் மீறி சிரித்து விட்டவன் “எதுவும் பண்ண வேணாம். எப்போவும் என்ன விட்டுப் போக மாட்டேனு ப்ராமிஸ் பண்ணு. என் கூடவே நீ இருக்கனும் என்னைக்குமே” என்ற கை நீட்ட,
“ப்ராமிஸ் மித்து. எப்போவும் நான் உன் கூடவே இருப்பேன் டா” என்று அவன் கை மேல் தன் கையை வைத்து உறுதியளித்தான் விஷு எனும் விஷ்வஜித்!
“தாங்க் யூ டா. இது போதும் எனக்கு” என தன் உயிர்த் தோழனின் வாக்கில் நிறைவாகப் புன்னகைத்தான் அருள் மித்ரன்!
இருவரும் எழுந்து கொள்ள மித்ரனின் தோளைச் சுற்றி கையைப் போட்டுக் கொண்டு நடந்தான் விஷ்வா.
அவனைத் திரும்பி நோக்கி மித்ரன் “ஒரு வேளை நான் உன் நட்புக்கு துரோகம் செஞ்சிட்டு போய்ட்டேனா என்ன பண்ணுவ?” என்று கேட்க அடுத்த நொடி அவன் சேர்ட் காலரைப் பிடித்திருந்தான் விஷ்வா.
“பேச்சுக்கு கூட அப்படி சொல்லாத மித்து. நீ என் நண்பன்டா. என்னிக்குமே துரோகியாக மாட்ட. நமக்குள்ள பிரிவு வராது வரவும் விட மாட்டேன் மாப்ள!” என்று கோபத்தில் ஆரம்பித்து கவலையில் முடித்தான்.
அதில் உள்ளுக்குள் மகிழ்ந்த மித்ரன் “கூல் கூல் இவ்ளோ கோவம் உடம்புக்கு ஆகாது டா” என்று கிளுக்கிச் சிரிக்க,
“நீ இப்படியே பேசிட்டு இருந்தீனா கோவப்பட மாட்டேன். கொன்றுவேன் டா ராஸ்கல்” என முகத்தை திருப்பி விலகி நடக்க, கைப்பிடித்து இழுத்து அவன் முடியைச் செல்லமாகக் கலைத்து விட்டான் விஷ்வாவின் மித்திரனான அருள் மித்ரன்.
பின்னிருந்து கேட்ட சிரிப்பொலியில் இருவரும் விழுந்தடித்துக் கொண்டு திரும்ப அங்கு முத்துப்பற்கள் பளீரிட சிரித்துக் கொண்டிருந்தாள், விஷ்வாவின் தங்கை அக்ஷரா!
“பிசாசு நீ எப்போடி வந்த? நெஜமாவே மோகினிப் பிசாசு மாதிரி பின்னாடி இருந்து சிரிக்குறே” என்று அவளிடம் வினவ, அவளோ “உங்க சென்டிமென்ட் மழை பெய்ய ஸ்டார்ட் ஆகும் போதே வந்துட்டேன். இன்னிக்கு ஜலதோஷம் பிடிக்குறது கன்பார்ம்” என்று கூறியவளின் உதடுகள் குறும்பில் துடித்தன.
அவளை மித்ரன் ஏறிட்டு நோக்கவும் “என்ன மித்து சார்? என் அண்ணன விட்டுட்டு போறேன் துரோகம் அது இதுன்னு பேசிட்டு இருந்தே. திரும்ப இந்த வார்த்தை உன் வாயில இருந்து வந்துச்சுனா நீ விரும்பி சாப்பிடுற உப்புமால விஷத்த வெச்சிடுவேன்” என விரல் நீட்டி எச்சரிக்க, “உத்தரவு மகாராணி” என இடை வரை குனிந்தான் மித்து.
“மரியாதை மனசுல இருந்தா போதும். அப்புறம் நீ போனா எனக்கு ஒன்னும் இல்லை. விஷுண்ணா உடைஞ்சு போயிடுவார்னு தான் சொன்னேன்” என்று சொன்ன அக்ஷராவின் தலையில் செல்லமாக தட்டினான் விஷ்வா.
மித்ரன் “நீ சொன்னீல உப்புமால விஷம் வைப்பேனு. அதுக்கு இவன் நீ சமைக்குற உப்புமாவே விஷம் தான்னு சொன்னான். அது தெரியாம நீயும் அவனுக்கு சப்போர்ட் பண்ணுறியே அக்ஷு” என்று பாவமாக சொன்னவனை, ஆவென வாய் பிளந்து “நான் எப்போடா அப்படி சொன்னேன்? இப்படி மாட்டி விடுறியே டா” எனும் ரேஞ்சில் பார்த்தான் தோழன்.
இதைக் கேட்டு பத்திரகாளியான அக்ஷரா “அப்படியா சொன்ன? இருடா மவனே” என விஷ்வாவை துரத்த ஆரம்பிக்க, “பிசாசு கிட்ட கோர்த்து விட்டிடியே மாப்ள” என அலறிக் கொண்டே அவள் கையில் சிக்காமல் ஓடத் துவங்கினான் விஷ்வா.
“நில்லுடா பக்கி. இன்னிக்கு உன்ன கைமா பண்ணாம விட மாட்டேன்” என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடியவள் மித்ரனின் மேல் சடாரென மோதிட “அருள்” என்று கத்தியபடி நிமிர்ந்தவள் திகைத்துத் தான் போனாள்.
ஏனெனில் அவள் இருந்தது கடற்கரையில் அல்ல மாறாக அவளது அறையிலேயே. வியர்வைத் துளிகள் நெற்றியில் பூத்து கழுத்து வழியே வழிந்திட லைட்டை ஆன் செய்து விட்டு எழுந்தமர்ந்தாள் அக்ஷரா.
தான் கண்டது கனவு என்று புரிந்தவளுக்கு பெரும் ஏமாற்றமும் வலியும் தான் சூழலாயிற்று இதயத்தில். எட்டு மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த இதே நிகழ்வு தினம் தினம் கனவில் வந்து இம்சிக்கின்றது.
தனது செல்போனை எடுத்து தன்னவனின் போட்டோவை பார்த்தாள். அதில் குறும்புப் புன்னகையூடே நின்றிருந்தான் அக்ஷுவின் உயிர்க் காதலன் அருள் மித்ரன்.
அவனைக் கண்டவளின் கண்கள் லேசாக கலங்கவும் தான் செய்தன. அழுது அழுது கண்ணீர் கூட வற்றிப் போயிருந்தது பாவையவளின் விழிகளில்.
கலங்கிய கண்களைத் துடைத்து விட்டு ” அருள்! முடியலடா என்னால. நீயில்லாத வாழ்க்கைய வாழவே புடிக்காம இருக்கு. ஏன்டா இப்படி பண்ணின? கண்ணுக்குத் தெரியாத என்னோட காதல விடு, உன் மேல உசுரயே வெச்சி இருந்த விஷுவ நடைப் பிணமாக்கிட்டியே.
நான் அன்னக்கி சொன்னேன் தான் நீயில்லனா எனக்கு எதுவும் ஆயிடாதுன்னு. ஆனா இப்போ இருக்க முடியலடா. ஒவ்வொரு அணுவும் அருள் அருள்னு உனக்காக துடிக்குது. சாகுறதுக்கு முன்னாடி உன்ன ஒரு தடவையாவது பார்க்க கிடைக்காதானு தவிக்கிறேன். உன்ன கண்டே எட்டு மாசத்துக்கு மேல ஆகுதுடா”
“நீ இப்போ கல்யாணம் எல்லாம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருப்பேல? இங்க என் அண்ணனும், நானும் சந்தோஷத்தையே தொலைச்சிட்டு வாழுறோம். மிஸ் யூ அருள்! உன் கிட்ட சொல்ல நினைச்சு சொல்லாமலே சிதறிப் போன என் காதலை இப்போ சொல்லுறேன்டா. லவ் யூ லாட்” என்றவளின் குரலில் சோகம் நிறைந்திருந்தது.
……….
காலைக் கதிரவனின் கதிர்கள் பூமியின் கவலை நீக்க, வீட்டில் அனைவரும் காபி அருந்தியவாறு கதையளந்து கொண்டிருந்தனர். மேல் மாடியில் ஆக்சர்சைஸ் அறையில் கடுமையாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான் ஒருவன்.
முழங்கால் அளவு சார்ட்ஸ் மற்றும் முறுக்கேறிய புஜங்கள் வெளித்தெரியும் படி கையில்லாத பனியனுடன் ஓடியவனின் உடல் முழுவதும் வியர்வை ஆறாக ஊற்றியது.
“விஷு” எனும் குரலில் தன் ஓட்டத்தை நிறுத்தி அக்ஷராவின் புறம் கவனத்தைத் திருப்பியவன் சாட்ஷாத் நம் நாயகன் விஷ்வஜித்தே!
அவள் மீண்டும் “அண்ணா” என்றழைக்க என்ன என்பது போல் நோக்க “கா… காபி” என்று மெதுவாக இழுத்தாள் தங்கை.
அவனோ கடுப்புடன் “காபி குடிக்கலனா ஒன்னும் செத்துட மாட்டேன்” என்று கடுமையாக சொன்னவன், பின் அவளது பயந்த முகத்தைத் திரும்பி ஒரு முறை பார்த்து விட்டு வெளியேறினான்.
போகும் தன் உடன்பிறப்பினைப் பார்த்து சோகப் பெருமூச்சு ஒன்றும் தான் வெளிப்படலானது இவளுக்குள். முன்பெல்லாம் காலையிலேயே மித்ரனின் கலாட்டாவில் எழுந்து கொள்பவன் அவனுடனேயே ஜாகிங் செய்ய சென்று விடுவான். இப்பொழுதோ வெளியே செல்ல மனமின்றி வீட்டிலேயே அசுரத்தனமாக உடற்பயிற்சி செய்கின்றான்.
தன்னையும் மறந்து அவ்விடத்திலேயே நின்றிருந்தவள் கதவு திறக்கும் சத்தத்தில் தனதறையில் இருந்து வெளியே வந்தவனை ஏறிட்டு நோக்கினாள் அக்ஷரா.
கோர்ட் சூட்டில் கம்பீரமாக தெரிந்தவன் பாலீஷ் செய்த மினு மினுக்கும் ஷூ அணிந்து ரெட் டை கட்டி, பொக்ஸ் கட் வெட்டிய முடியை ஜெல் பூசி வாரி விட்டு, பார்ப்போர் மனதில் அக்கணமே பச்சக்கென ஒட்டிக் கொள்ளும் அழகுடன் திகழ்ந்தான்.
ஆனால் முகமோ இறுகிப் போய் சிரிப்பை மொத்தமாய்த் தொலைத்தும், சிவந்த அதரங்கள் அழுத்தமாக ஒட்டிக் கொண்டு தம் கடுமையை பறைசாற்றிட, விழிகளோ எதிரில் நிற்போரின் உள்மனம் வரை சென்று துளைக்கும் கூர்மையுடன் விளங்கின. கூடவே ஒரு வித வலியும் பிரிவுத் துயரும் அவ்விழிகளில் மறைந்திருந்ததை அவளால் உணர முடிந்தது.
அக்ஷராவின் பார்வையை உணர்ந்தவனோ கையிலிருந்த கூலிங் க்ளாஸை கண்களில் மாட்டி தன் சோகத்தை மறைத்தான். தடதடவென படிக்கட்டில் இறங்கிச் சென்ற விஷ்வா “கண்ணா” எனும் அழைப்பில் நடையை நிறுத்தி விட்டு தன் தாய் நீலவேணியைப் பார்த்தான்.
“என்னமா எதுக்கு கூப்பிட்டீங்க?” என்று கேட்க,
“சாப்பிட்டு போ விஷு. இன்னும் எத்தனை நாளக்கி தான் போனவன நெனச்சி உன் வயித்த காயப்போட்டுட்டு இருக்க போறே?” என்று ஆதங்கமாக வினவியவரை ஒரு பார்வை பார்த்து விட்டு “பசிச்சா நானே சாப்பிடுவேன். யாரும் எதுவும் கேட்கத் தேவயில்ல” என்று ஒற்றை வரியில் பேச்சைக் கத்தரித்துக் கொண்டு சென்றிட நொந்து போனது தாயுள்ளம்.
“நீலா” என்று கூப்பிட்டுக் கொண்டு வந்த கணவரைப் பார்த்து “என்னங்க! விஷு யேன் இப்படி பண்ணிட்டு இருக்கான்? சாப்பிடாம சரியாத் தூங்காம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகுறது? சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்குறான். சொல்லுறத நின்னு கேட்க கூட நேரமில்ல அவனுக்கு” என்று புலம்பினார் நீலவேணி.
அவரது மடியில் தலை வைத்து தாயை அண்ணாந்து நோக்கிய அக்ஷரா “விடுமா பீல் பண்ணாத. அண்ணா சரியாகிடுவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அவன் மனசு இன்னும் மித்துவோட பிரிவுல இருந்து வெளிய வரல. அதான் நம்ம மேல இருக்கற பாசத்த காட்ட விடாம தடுக்குது” என்று ஆறுதலளிக்க,
அதற்கு ஆமோதிப்பாக தலையசைத்து “ஆமா நீலா. அவனே காயப்பட்டுப் போய் கிடக்குறான். இதுல நீ வேற எதுவும் சொல்லிட்டு இருக்காத. அவன அவன் போக்குலயே விட்டுப் பிடிச்சா தான் சரி” என்றார் சிவகுமார்.
அதில் சற்று தெளிந்த நீலவேணியும் “என்னமோ சொல்லுறீங்க. எல்லாம் சரியாகினா ஓகே. நம்ம பையன இப்படி பார்க்க ரொம்பவே கஸ்டமா இருக்கு” என்க, “நான் சொல்லுறேன் மா எல்லாமே நல்லதா நடக்கும். கூடிய சீக்கிரமே என்ன? நாளைக்கே நம்ம அண்ணா லைப்ல ஒரு மாற்றம் வரத்தான் போகுது” என்று கண்ணடித்த அக்ஷரா அறியவில்லை, தன் கூற்று உண்மையாகப் போவதை.
……….
அக்ஷரா க்ரூப் ஆப் கம்பனீஸ் என்று மின்னிய அந்த வளர்ந்து வரும் நிறுவனத்தின் முன் சறுக்கிக் கொண்டு வந்து நின்றது ஒரு கார். அதிலிருந்து கம்பீரமாய் இறங்கினான் அதன் எம்.டி.
உள்ளே நுழைந்தவனைக் கண்டு ஸ்டாப்ஸ் எல்லாரும் எழுந்து நிற்க குண்டூசி விழுந்தால் கேட்குமளவிற்குத் தான் எங்கும் பேரமைதி நிலவியது. கூலிங் க்ளாஸை கழற்றி கோர்ட்டில் சொருகிக் கொண்டு சிறு தலையசைப்புடன் சென்றான் விஷ்வஜித்.
அவன் அழகிலும், குளிர் கண்ணாடியை சொருகிய ஸ்டைலிலும் பெண்கள் மயங்கி விழாத குறையாக அவனை சைட் அடித்தபடி நின்றனர்.
தனது கேபினுக்குள் நுழைந்து சேரில் அமர்ந்து கொண்டவனோ எங்கோ வெறித்தான். அவன் கண்களில் எவ்வித சலனமுமின்றி இருந்தது எனில், மனதினுள்ளோ கோடிக் கணக்கான வினாக்களும் சோகங்களும் அலை பாய்ந்தன.
அங்கிருந்த கண்ணாடியில் தன்னைத் தானே பார்த்துக் கொண்டான். முன்பு மென்மையே உருவாய் எப்பொழுதும் சிரிப்புக்கும் குறும்புக்கும் குறைவின்றித் தெரியும் முகம் கல்லாக இறுகிப் போய் சிரிப்பென்பது மருந்துக்கும் இன்றித் தான் தோன்றலானது.
டிசர்ட் பேன்ட்டுடன் கழுத்தில் செய்ன் கையில் வெள்ளிக் காப்பு அணிந்து முடியை கலைத்து விட்டு மித்துவுடன் சுற்றுபவன் இப்போதோ கோர்ட் சூட்டில் ஏதோ இயந்திர மனிதன் போல விளங்கினான்.
மித்ரன் அவனை விட்டுச் சென்றதில் இருந்து தனிமையில் உழன்றவன் நாட்கள் செல்லச் செல்ல தனிமையை வெறுத்து தந்தையின் கம்பனியைப் பொறுப்பேற்று தொழிலில் அசுரத்தனமாக இறங்கினான். அவனது கடும் முயற்சியில் கம்பனி புகழ் பெற்று உயர் நிலை வகித்து மென்மேலும் வளர்ந்தது. ஆனாலும் அவனிடம் எந்தவொரு மாற்றமும் வராது தான் போயிற்று.
அலுவலக வேலை நேரங்கள் போக இரவு வேளைகளில் தனிமை பூதாகரமாகத் தோன்றி தோழனை நினைவுபடுத்தி விடும். அதில் நிம்மதியிழந்து தூங்க முயன்றால் கனவில் கூட அவனே வந்து நிற்பான். என்ன செய்தும் அவன் நினைவுகளில் இருந்து மீள முடியவில்லை. அவனை மறக்கவும் முடியவில்லை.
பீ.ஏ அழைக்கும் சத்தத்தில் தன்னை மீட்டுக் கொண்டவன் அவனுடன் பேசி விட்டு இருக்கையில் சாய்ந்து கண்களை மூடினான் விஷ்வா. மூடிய விழித்திரைக்குள்ளும் வந்து “விஷு” என்றழைத்தான் மித்ரன்.
அவனையறியாதே “மி…மித்து மாப்ள” என்று கொண்டு படக்கென நிமிர்ந்தவனின் சிந்தனையில் ஏதேதோ காட்சிகள் உதிக்க, பாறையாக இறுகித் தான் போகலானது முகம்.
கண்களும் கோவைப் பழமாக சிவக்க மேசையிலிருந்த பூச்சாடியைத் தூக்கித் தரையில் ஓங்கி அடித்தான், விஷ்வஜித் எனும் வெறி கொண்ட வேங்கை.
தொடரும்………!!
~~~~~~~~~~~~~~~~~~~~~
ஷம்லா பஸ்லி