“மாணவர்கள் அனைவரும் அவர்களின் குழுக்களின் பயிற்சி கூடங்களுக்கு சென்று பயிற்சியை துவங்கலாம்”, என்று ஒலித்தது அந்த கணீர் ஒலி. அந்த குருகுலத்தையே ஆட்டி வைக்கும் ஒலி அது!
அந்த குரலின் கட்டளைக்கு தான் அந்த மொத்த குருகுலமும் அடங்கும். அவர் தான் பாஞ்சாலன். பஞ்ச சக்தி குருகுலத்தின் தலைவர் அவர் தான். பஞ்சபூதங்களில் அவர் நெருப்பை அடக்குபவர்.
“இன்னைக்கு என்ன பிரச்சனை பண்ண போறாங்களோ?”, என்று அவரின் முன் வந்தார் குருகுலத்தின் துணை தலைவி பூங்குழலி. இயற்கையின் சக்தியான நிலத்தை ஆள்பவர் அவர்.
“நமக்கு என்ன புதுசா? எது வந்தாலும் பார்த்துக்கலாம்… இந்த குருகுலம் என்னைக்குமே திறமைக்கு தலைவணங்கும். எல்லாரும் திறமைசாலிங்க ஆனா அவங்களோட கோவம், ஆகங்காரம், துயரம், ஆசைன்னு நிறைய உணர்ச்சிகளை அடக்கி ஆள துவங்குனா அவங்க தான் இந்த பஞ்சபூத குருகுலத்தோட அடுத்த தலைவர்.”, என்று அவர் முடிக்கவும், “நாலு பேரும் நாலு விதமா இருக்காங்களே… எப்படி தான் தேர்வு செய்ய போறிங்களா”, என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.
பாஞ்சாலனின் எண்ணம் பின்னோக்கி சென்றது. அவர் இந்த குருகுலத்தை நிறுவும் போது அவருடன் இருந்த அவரின் இரண்டு நண்பர்கள் இப்போது இல்லை.
இந்த குருகுலத்தை அவர் நிறுவ, துணை நின்றது அவர்கள் தான். ஆனால் அவர்கள் இல்லாமல் இப்போது வரை சந்நியாசியாக வாழ்ந்து விட்டார்.
அடுத்த தலைவரை தேர்ந்து எடுக்க வேண்டும்… யாரென்று தெரியவில்லை. இந்த முறை தலைவராக இருக்கும் ஒருவரை தான் தேர்வு செய்வதாக அவரின் உத்தேசம். அதற்கு காரணம், அவர்கள் நால்வரும்!
இந்த குருகுலம் மொத்தம் நான்கு பிரிவுகளை கொண்டது.
சுடர், ஆழி, பூமி மற்றும் வாயு. பெயருக்கேற்ப அந்த அந்த சக்தியை கையாள்பவர்கள் அதற்கு ஏற்ற பிரிவிற்கு செல்வார்கள்.
முதலில் சுடர் குலத்தவர், யாரிற்கும் அடங்கா நெருப்பை அடக்கி ஆள்பவர்கள் அவர்கள். அதே தான் அவர்களின் குணநலனும் கூட… அந்த குழுவின் தலைவனின் வார்த்தைக்கு தவிர யாருக்கும் இந்த குருகுலத்தில் அவர்கள் அடங்குவதில்லை. அவனே யாருக்கும் அடங்க மாட்டான் என்பது தான் அவர்களுக்கு பெரும் பாடு. இந்த குலத்தின் அடையாளம் பீனிக்ஸ் பறவை. என்றுமே அந்த பறவையை போலவே அழிக்க முடியாதது அவர்களின் குலம்.
அடுத்து வருவது ஆழி குலம். நெருப்புக்கு நீருக்கும் என்று ஒத்து போகி இருக்கிறது? இங்கும் அப்படி தான். நீரை அடக்குபவர்கள் நெருப்பை அடக்குபவர்களை எப்போதும் அடக்க முடிவதில்லை. ஆனால் அனைவரைக்கும் ஏற்றார் போல் வளைந்து கொடுத்து போய் விடுவார்கள். நீரும் அப்படி தானே, இடத்திற்கு ஏற்றார் போல் வளைந்து செல்லும். அவர்களும் அப்படியே! அந்த குலத்தின் தலைவனும் அப்படியே! ஒருவனுக்கு மட்டுமே அவன் அடங்க மாட்டான். அவர்கள் குலத்தின் அடையாளம் சுறா மீன் தான். யாருக்கு பரபச்சம் என்பது அவர்களிடம் கிடையாது.
பூமி குலத்தவரை பற்றி சொல்லவும் வேண்டுமா? பொறுமை என்றால் அப்படி ஒரு பொறுமை என்று இருப்பவர்கள் அவர்களுக்கு ஒன்று என்றால் பூகம்பமாக வெடிக்கவும் தவறுவதில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்கள் தான். அனைத்து குலத்தினரிடமும் நட்பு உறவுடன் இருப்பவர்கள். இதற்கு காரணம் அவர்களின் தலைவி என்று கூட சொல்லலாம், அவள் தான் மூன்று தலைவர்களையும் ஆட்டி படைப்பவள். நிலத்தை ஆள்பவர்களின் சின்னமும் காட்டை ஆளும் சிங்கம் தான்.
இறுதியாக வேலியே இல்லாத காற்றையே அடக்கும் வாயு குலத்தவர். எங்கும் எப்போதும் அவர்களுக்கு தடை இல்லை என்று கூட சொல்லலாம். சுற்றி திரியும் பறவை போல பறப்பவர்கள், அவர்களின் எண்ணங்களும் கூட அப்படியே! எல்லாரிடமும் வம்பு இழுத்தாலும் அவர்களை அனைவருக்கும் பிடிக்கும் தான். அவர்களின் தலைவனும் அப்படி தான் இருப்பான்! பறப்பவர்களின் சின்னமும் பறவைகளின் ராஜா கழுகு தான்.
இந்த நாலு குழுவினரை கொண்டது தான் இந்த பஞ்ச சக்தி குருகுலம். இந்த குருகுலத்தில் மெர்மெய்டுகளும் கவி பாடும், ஆவிகளும் கதை பேசும், மரங்களுக்கும் காது கேட்கும், மாயாஜாலங்களின் உலகம் இது.. ஜாலங்களை செய்யும் ஜாம்பவான்களை உருவாக்கும் உலகம் இது!
அந்த ஜாலங்களை கற்று ஜாம்பவான்கள் ஆகுவார்களா? என்று நாம் கதையில் காண்போம்.
சூரியன் விடைபெறும் நேரம் வந்து விடவும் தான், மாணவர்கள் அவர்களின் தனி பயிற்சிகளை துவங்க வேண்டும்.
இது தான் அந்த குருகுலத்தின் முதன்மை விதி. அதற்கு காரணமும் இருந்தது. நிறைய நேரம், குருகுலத்தில் வகுப்பிற்கு வராமல் அவர்கள் பயிற்சி செய்கிறேன் என்று அங்கேயே அமர்ந்து விடுகிறார்கள் என்பது தான்.
இப்போது பாஞ்சாலன் இந்த அறிவிப்பை அறிவித்ததும் அவர்கள் அனைவரும் அவர்களின் பயிற்சி அறை அல்லது ஓய்வறைக்கு சென்று விட்டார்கள்.
மாலை மங்கும் நேரம் அது! அந்த குருகுலத்தின் ஆழி குழுவினர் வந்து செல்லும் இடம். அது பொது இடம் தான். நீர் அனைவருக்கும் உரியது தானே! ஆனால் ஆழி குழுவினர் தான் அதிகம் புழங்கும் இடம். அதுவும் இந்த நேரத்தில் அந்த குழுவின் தலைவனை தவிர வேறு எவரும் அங்கு இருக்க மாட்டார்கள்.
வருணேஷ்! வருணனையே அடக்கி ஆள்பவன் அவன்! அவன் சொன்னால் ஆழியும் ஆக்ரோஷமாய் ஆர்ப்பரிக்கும், நில் என்றால் நிற்காமல் பெய்யும் மழை கூட நின்று விடும்.
அவனின் பயிற்சி முடிந்து அந்த இடத்தை விட்டு வெளியே வரும் வேளையில், அவனின் காலை சுற்றி வட்டம் இட்டது அவனது செல்ல சுறா மீன் மச்சிலி.
“நாளைக்கு வரேன்”, என்று அவனிடம் சொன்னவன், வெளியே வர, அங்கே அவனையே பார்த்து வரைந்து கொண்டிருந்தாள் அந்த பாவை.
அவனின் கண்கள் அவளை பார்க்க, “நீ என்ன தினமும் இதே நேரத்துக்கு இங்க வர?”, என்று கேட்டே விட்டான். அவளின் கண்ணாடியை சரி செய்தவள், “நீங்க தான் நான் வர நேரத்துக்கு வரீங்க”, என்று அவளும் விடமால் பேசினாள்.
“இரண்டாவது வருஷம் ஸ்டூடன்ட் நீ பைனல் இயர் என் கிட்ட ஏட்டிக்கு போட்டி பேசுற அதுவும் எங்க குழுவுக்கான இடத்துலயே வந்து… தைரியம் தான்… ஜகத்திக்கு நீ இங்க வந்து இருக்கறது தெரியுமா?”, என்று கேட்கவும், “அவளுக்கு தெரிஞ்சா என்ன தெரியலானா என்ன… இது எல்லாருக்கும் பொதுவான இடம் தான் சீனியர்”, என்று அவள் பேசி கொண்டு இருக்கும் போதே அவளின் செல்ல பிராணி வந்து அவளின் அருகில் அமர்ந்தது.
“வஜ்ரன்”, என்று அவள் தலையை வருடி கொடுக்கவும், ஆக்ரோஷமான சிங்கம் அது, ஏதோ நாய்க்குட்டி போல அவளின் அருகில் படுத்து விட்டது.
அவளையும் அதையும் ஒரு பார்வை பார்த்தவன், “பூமிகா”, என்று அழைக்க, என்னவென்று அவள் பார்க்கவும், அவள் சூதாகரிக்கும் முன் அவளின் அருகில் வந்தவன், இருவரின் மூச்சு காற்றும் உரச, “நீ சுனாமி கிட்ட வர ஆசைப்படற”, என்றான்.
அவளோ, “நான் சுனாமியையே தாங்குற பூமி குளத்துல பிறந்தவ”, என்றவள் முடிக்கும் முன், அவளின் இதழை சிறை செய்து இருந்தான் ஆழியின் அரசன்.
“ஹே உன்ன தான் கேட்குறேன்… இங்க என்ன பண்ற?”, என்று அவன் மீண்டும் அதட்ட, சட்டென சுயத்திற்கு வந்து இருந்தாள் பூமிகா.
“அது… அது..”, என்று திக்கி திணறி கொண்டு இருந்தாள் பூம்பாவை அவள்.
அவளுக்கு இப்படி எல்லாம் பேச வேண்டும் என்று ஆசை தான். ஆனால் பாவம் பெண்ணவளுக்கு தான் தைரியம் என்பதே கொஞ்சம் கூட கிடையாதே… அவளுக்கு அவள் உண்டு அவள் ஓவியம் உண்டு என்று இருப்பவள்.
“என்ன அது அதுனு… இங்க என்ன பண்ற?”, என்று அவளை மிரட்ட, வஜ்ரன் தான் சீறியது.
“என்ன உன்ன மிரட்டுனா இவனுக்கு கோவம் வருதா?”, என்றவன் அவளை தாண்டி சென்று அவளது செல்ல பிராணியை கொஞ்சினான். முதலில் முரண்டு பிடித்தாலும், பூமிகாவின் கண்ணசைவை வைத்தே அவளுக்கு பிடித்தவன் இவன் என்று கண்டு கொண்டது வஜ்ரன்.
“இங்க இப்படி எல்லாம் தனியா வராத.. புரியுதா?”, என்று வஜ்ரனை கொஞ்சி கொண்டே அவன் கூறவும், அவளும் சரி என்று தலையைத்தவள், அவளின் ஓவியங்களை எடுத்து கொண்டு அங்கிருந்து நகர, அவனோ, “இரு நானே கொண்டு விடறேன்”, என்று சொல்லவும், “இல்ல வேண்டாம் நானே போய்டுவேன்”, என்று சொல்லவும், அவனோ, “நீ, அருவி, ருத்ரா, எல்லாம் ஒரே கிளாஸ்ல?”, என்று கேட்கவும், அவளும் ஆமோதிப்பாக தலையசைத்தாள்.
“அருவி கிளாஸ்ல எல்லாம் எப்படி?”, என்று கேட்கவும், அவளோ குரலை செருமிக்கொண்டு, “ஓகே தான்”, என்று முடித்து விட்டாள். அவனிடம் சென்று உன் தங்கை தான் அங்கே குரங்கு வித்தை காட்டுகிறாள் என்றா சொல்ல முடியும்?
“சரி கிளம்பு…”, என்றவன் சொல்லவும் நகர போனவளை நிறுத்தி, “ஒய்’, என்று அழைக்கவும், அவளும் திரும்ப, “ஜகத்தி கிட்ட எதையும் சொல்ல கூடாது”, என்று ஒற்றை விரலை நீட்டி எச்சரிக்கை செய்யவும், அவளோ திருதிருவென்று முழித்தவள், மேலும் கீழும் தலை அசைத்தாள்.
“போ”, என்று அவன் மிரட்டவும், ஓடியே விட்டாள் அந்த குட்டி பெண்.
இதே சமயம், மற்றொரு ஒலி எழுப்பப்பட்டது, “மாணவர்கள் அனைவரும் உணவு சாப்பிட வர ஆரம்பிக்கலாம்”, என்கிற தகவல் வரவும், “வியான் சார்”, என்று அவனது இதழ்கள் முணுமுணுத்தது.
வருணோ அவனின் அறைக்கு சென்றவன், உடையை மாற்றி கொண்டு, சாப்பிடும் இடத்திற்கு வர, அங்கே நல்ல வேளையாக அவர்கள் மூவருமே இல்லை. அவனிற்கு அது பெரும் நிம்மதி தான்.
இருந்து இருந்தால் பிரச்சனை ஆகி இருக்கும். அதுவும் அவள் ஒருத்தி இருக்கிறாளே, அவனை வைத்து செய்து இருப்பாள்.
வந்தவன், உணவு உட்கொண்டு அவனின் அறைக்கு சென்று விட்டான். அவனுக்கு அவனின் தந்தையின் நினைவுகள் தான். அவர் சொன்னது இன்றும் அவனின் செவிகளில் ஒலித்து கொண்டே இருந்தது.
“உங்க கனவை நான் கண்டிப்பா நிறைவேத்துவேன் அப்பா.. என்ன ஆனாலும் சரி… என் உயிரை கொடுத்தாவது நிறைவேத்துவேன்”, என்று அவன் எண்ணிக்கொண்டே இருக்கும் சமயம், அவனின் கையில் ஆலமர இலை ஒன்று வந்து அமர்ந்தது.
அதில் எழுதி இருந்த செய்தியை வாசித்தவனுக்கு அய்யோடா என்று இருந்தது.
‘இன்னைக்கும் லெக்ச்சர் கொடுப்பாளே… போகலானாலும் திட்டுவா…’, என்று நினைத்து கொண்டே வெளியில் பார்க்க, அதுவோ இரவு பொழுது ஆகி இருந்ததை உணர்த்தியது.
போக வேண்டாம் என்று ஒரு மனம் உரைத்தலும் மற்றொரு மனமோ போய் ஆக வேண்டும் இல்லை என்றால் நாளை உனக்கு பாறாங்கல் தலையில் விழும் பரவா இல்லையா என்று கேட்க, அவனுக்கு திட்டு வாங்குவதே சரி என்று பட, அவனின் மந்திர கோலை எடுத்து கொண்டவன், அவர்கள் எப்போதும் சந்திக்கும் இடமான வர்ணஜாலங்களின் வனத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
இதே சமயம், தூங்கி கொண்டு இருந்த ஒருவனின் மீது வந்து விழுந்தது ஆப்பிள்.
“அம்மா… யாரோ என்ன தாக்குறாங்க தாக்குறாங்க”, என்று கத்திகொண்டே எழுந்தவன், ஆப்பிளை பார்த்ததும் தான் அவனுக்கு உயிரே வந்தது.
“இந்த நேரத்துல எதுக்கு டி ஆப்பிள்”, என்று நினைத்து கொண்டே அவன் சாப்பிட, அதில் ஒரு பேப்பர் சொருகி இருந்தது.
“ஐயோ இவனுங்க இப்போ என்ன பண்ணி தொலச்சானுங்களோ தெரியலையே! இவனுங்களால என்ன வேற அவ செய்வாளே.. இவனுங்கள கழட்டி விடவும் முடியல… கூட இருக்கவும் முடியல.. ஆண்டவா எனக்கு மட்டும் என் இந்த சோதனை?”, என்று நினைத்து கொண்டே தலையெழுத்தே என்று அவர்களை சந்திக்க புறப்பட்டு இருந்தான்.
இங்கோ ஒருத்தி மறைந்து மறைந்து எங்கோ சென்று கொண்டு இருந்தாள்.