🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍
👀 விழி 10
ஆபீஸ் செல்ல ஆயத்தமாகி வந்த ருத்ரனின் விழிகள் தன்னவளைத் தேடிப் பயணித்தன. எழும் போது கண்டதற்குப் பிறகு அவளைக் காணவில்லையே என்று தேடினான்.
அவ்வேளை அவன் நாசியைத் தீண்டிய நறுமணம் நொடியில் தன்னவளை அடையாளம் காட்ட “அம்மு” என அழைக்கவும் தான் செய்தான் அவன்.
சத்தமில்லாது போகவே திரும்பியவன் அதிர்ந்து அப்படியே சிலையாக சமைந்திருந்தவள் முன் சொடக்கிட சிந்தை கலைந்து ஏறிட்டாள்.
“இன்றெனக்கு நன்நாள் என மனம் நவின்றது காலையில் கிடைத்த என் தேவதையின் தரிசனத்தில்” தலை சரித்துச் சொன்னவனின் வார்த்தைகளில் அவள் இதயத்தில் பெய்யெனப் பெய்தது ஆனந்த அடைமழை.
இப்போதெல்லாம் அவன்பால் செக்கனில் சாய்கிறாள். விரும்பியே வீழ்கிறாள். தெரிந்தே தொலைகிறாள். அவனோ அவளை இன்னுமின்னும் அன்பால் ஆழ்கிறான்.
அறியாதவன் போல் அவன் இல்லை. நெருங்கிய தொடர்பு தனக்கும் இந்த அன்பானவனுக்கும் உண்டு எனத் தோன்றிற்று. சில நாட்கள் தான் ஆனாலும் அவனுடன் பல காலம் பழகியது போன்ற உணர்வு.
“ஓய் அம்மு குட்டி காபி தானே கொண்டு வந்த. சீக்கிரம் கொடு. சூடு குறைஞ்சா எனக்கு பிடிக்காது” அவன் பேச்சில் மீண்டும் அகன்றன அவள் விழிகள்.
அவளது தந்தை அடிக்கடி இதே வார்த்தைகளைப் பயன்படுத்துவார். அவருக்கும் காபி அவ்வளவு சூடாக வேண்டும்.
அவள் கையிலிருந்த கப்பை எடுத்து காபியை பருகிக் கொண்டே “அஞ்ச விழியால் என்னைக் கொல்லாதே அஞ்சன விழியாளே!” என கண்ணடித்தான்.
“உங்களுக்கு இப்படி அழகா எல்லாம் பேச தெரியுமா?” என்று கேட்டாள்.
“ஏன் ஏன் இப்படி ஒரு கேள்வி? ஆக்சுவலி எனக்கு தமிழ் பாடம்னா ரொம்ப பிடிக்கும். ஸ்கூல் காலேஜ் டேய்ஸ்ல நிறைய பேச்சு , கவிதை போட்டிக்கு எல்லாம் போயிருக்கேன். இப்போ தான் கொஞ்சம் டச் விட்டு போச்சு”
அவளுக்கும் பிடித்த பாடம் தமிழ் அல்லவா? ஆவல் மேலீட்டால் எம்பி நின்று “சூப்பர்! எனக்கும் ரொம்ப பிடிக்கும்” என அவன் முடியைக் கலைத்து விட்டாள்.
அவளின் இச்செய்கை அவனுள் ஆயிரமாயிரம் மலர்க்கணைகளை மார்பில் சரமாரியாக எய்தியது. அவனது வியப்பில் தான் செய்ததை உணர்ந்து கொண்டவள் “சாரி சாரி” என மூன்றடி தள்ளி நின்றாள்.
“சாரி கேட்டா நான் விட்றுவேனா? அப்படி தப்பிச்சு போயிட முடியாது” என்றான் வன்மையாக.
“தப்பிக்க முடியாத அளவுக்கு நான் என்ன பண்ணுனேன்?” சளைக்காமல் அவளும் கேட்டாள்.
“நான் எவ்ளோ அழகா முடியை வெச்சிருந்தேன். நீ கலைச்சு போட்டுட்ட. இப்போ அதை சரி பண்ணி விடனும்” அதிகார தோரணையில் கூறினான் ருத்ரா.
“நல்லாருக்கே இந்த நியாயம்”
“என் முடிக்கு அநியாயம் பண்ணுன நீயெல்லாம் அநியாயம் பத்தி பேச கூடாது. எனக்கு தெரியும் அம்மு நீ ஏன் என்னை இப்படியே அனுப்ப பார்க்கிறனு” என்றவனை ஏறிட்டவளின் வதனத்தில் ஏனாம்?’ என்ற வினா தொக்கி நின்றது.
“நான் அழகா போனா ஆபீஸ்ல இருக்கிற பொண்ணுங்க என்னை சைட் அடிப்பாங்கனு உனக்கு பயம். அதான் முடியை கலைச்சு விட்டு இப்படி அனுப்ப போற” கண்கள் பளிச்சிடக் கூறினான் அவன்.
“ஆபீஸ்ல என்ன? யார் உங்களை சைட் அடிச்சாலும் எனக்கு ஒரு பயமும் இல்லை. நீங்க இப்படி ஒரு கான்சப்ட சொல்லுறீங்க. அய்யய்யோ நான் எதுக்கு வீணா உங்க கிட்ட இந்த பேச்செல்லாம் கேட்கனும். வேற வினையே வேண்டாம். இருங்க” என்றவள் அருகிலிருந்த சீப்பை எடுத்துக் கொண்டு அவனருகே வந்தாள்.
இதுக்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?’ என குத்தாட்டம் போட்ட மனதுடன் நின்றவனை நோக்கி “இப்படி நெடு நெடுன்னு நின்னுட்டே இருந்தா நான் ஏணி வெச்சி தான் உங்க தலையை எட்ட முடியும்” என்றுரைத்தாள் அஞ்சு.
“அதை இப்படி சுத்தி வளைச்சு சொல்லாம உட்காருங்க மாமானு சொன்னா சமத்தா உட்கார போறேன்” என்றவனுக்கு நேற்றைய ஞாபகம் சிந்தையில் உதிக்க,
“நேற்று என்ன சொன்னேன்? மாமானு கூப்பிட சொன்னேனா இல்லையா? மறந்துட்டனே” புருவத்தை கட்டை விரலால் நீவி விட அவளோ நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
“ஞாபகம் வந்துருச்சே இவருக்கு. இனி மாமா கோமானு வெச்சு செய்ய போறார்” இது அஞ்சனாவின் மைன்ட் வாய்ஸ்.
“கள்ளி! எனக்கு மறந்தா ஞாபகமூட்ட மாட்டியா?” அவன் கேட்க,
“அப்போ நான் ஓரமா போய் மாமானு கூப்பிட ப்ராக்டீஸ் பண்ணுறேன். நீங்க ஆபீஸ் போங்க” நழுவ சந்தர்ப்பம் கிடைத்த குதூகலத்தில் நகர எத்தனித்தாள்.
“இது தான் சாக்குனு கழன்று ஓட பார்க்குறியா? அதெல்லாம் அப்பறம் கூப்பிட்டுக்கலாம். இப்போ முடியை சரி பண்ணி விடு” கட்டிலில் அமர்ந்தான் அவன்.
“சரியான அலப்பறை கேஸ் ஒன்னு” சலித்தாலும் அவன் கூறியதைச் செய் என்றே மனம் சொன்னது.
அருகினில் நெருங்கி அவன் தலையில் கை வைக்க அவனுக்கோ புதுவித உணர்வு. இவள் தனக்குக் கிடைப்பாள் என்று நினைத்தான் தான். ஆனால் இவ்வளவு எளிதில் கிடைப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை.
எட்டாக்கனியாக இருந்தவள் கைக்கெட்டி விட்டாளே?! அவளைக் கட்டியணைத்து தன் ஒட்டுமொத்த காதலையையும் அவள் மீது அளவின்றிக் கொட்ட வேண்டும் போல் அவனது சர்வ அணுக்களும் துடியாய்த் துடித்தன.
அவனது முடியை அழகாகக் கோதி விட்டாள். அவனுக்கோ இனம்புரியா சந்தோஷம். அவளைத் தூக்கி சுற்ற வேண்டும் போல் இருந்தது.
சீப்பை வைத்து விட்டு “இப்போ சரிங்க சார். நீங்க அழகா இருக்கீங்க. அத்தனை பொண்ணுங்க கண்ணும் உங்க மேல தான் இருக்கும்” அதைக் கூறுகையில் அவளுக்குள் ஏதோ மாற்றம்.
“எத்தனை பொண்ணுங்க கண்ணு என் மேல இருந்தாலும் என் கண்ணு ஒரே ஒரு பொண்ணு மேல மட்டும் தான் இருக்கும். என் மனசும், பார்வையும் உன்னை மட்டுமே சுற்றி வரும் அம்மு” அன்புருகப் பார்த்தான் அவளை.
அவன் கூறியது பெண்ணவளை அடியோடு வீழ்த்தியது. அவன் தனக்கு மட்டுமே என மனம் வாதிட்டது. அவனை உரிமை கொண்டாடும் உணர்வை அடக்க முடியவில்லை.
அதே சமயம் அதனை வெளிக்காட்டவும் முடியாது போயிற்று. அவனுக்கு எப்படியோ? ஆனால் அவளுக்கு இந்த திருமணம் ஒரு ஆக்சிடன்ட் மாதிரி இருந்தது. திடீரென மோதியவர்களை அவனால் இடப்பட்ட மூன்று முடிச்சு நொடிப்பொழுதில் கணவன் மனைவியாக கரை சேர்த்து விட்டது.
ஏதோ ஒரு உந்துதலில் அவனோடு வந்து விட்டாள். அவன் மீது தனக்கு ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டு வருகிறது. அது நொடிகள் கடக்க கடக்க அதிகரிப்பது போலவும் தோன்றியது.
ஆனால் அதனை வெளிக்காட்ட முடியாத தயக்கம் அவளைக் கவ்விப் பிடித்திருந்தது. தனது தந்தையிடமிருந்து கேட்ட அவரது காதல் வாழ்வைப் போல் தனக்கும் வாழ வேண்டுமென்ற ஆசை அவளுக்கு எப்போதோ உண்டு.
தனது வாழ்வு இந்த அபய்யுடன் என்று முடிவாகி விட்டது. அவனோடு அத்தகைய வாழ்வை வாழக் கிடைப்பது எப்போது? என அவள் எண்ண,
“உனக்கு என்னை பிடிச்சிருக்கு அம்மு! அதை கூடிய சீக்கிரம் உன் வாயால உன்னையே சொல்ல வைக்கிறேன். அதுவரை தான் உனக்கு சான்ஸ். அப்பறம் உன்னை விடுறதாவே இல்லை டி செல்லக் குட்டி” அவள் எண்ணவோட்டம் புரிந்தவனாக மனதினுள் சொல்லிக் கொண்டான் அவன்.
“நான் போயிட்டு வரேன் டா. பத்திரமா இரு. அம்மா கூட இருந்துக்க. எதுனாலும் கால் பண்ணு” வேலைக்கு செல்லும் தந்தை குழந்தையிடம் சொல்வது போல அத்தனை கரிசனையுடன் கூறியவனின் கள்ளமில்லா நேசம் அவளை வியக்கத் தான் வைத்தது.
வெளியில் சென்றவன் காரில் செல்லும் முன் மாடியை நோக்க, பல்கணியில் நின்றிருந்த அஞ்சனா தனையறியாமலே கையசைத்துக் காட்ட அழகிய புன்னகையோடு சென்றான் கணவன்.
♡♡♡♡♡
“என்னை மன்னிச்சிருங்க கோபால்” தன்னிடம் மன்னிப்புக் கேட்ட தங்கை வீட்டுக்காரரைக் கண்டு பதறித் தான் போனார் கோபால்.
“ப்ச் அதெல்லாம் இல்லை மாப்ள! விடுங்க” மறுத்துரைத்தார்.
“எனக்கு தெரியும் உங்களுக்கு என் மேல கோபம்னு. ருத்ரா எவளோ ஒருத்தியை கூட்டிட்டு வருவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. யாரோ எவளோ? இங்கே இழுத்துட்டு வந்திருக்கான்” கடுமையாக சொன்னார் செல்வன்.
“நீங்க இப்படி பேசுறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல. அவ இப்போ உங்க மருமக. அதை தெரிஞ்சுக்கிட்டு பேசுங்க” கண்டிப்பாக வந்தன கோபாலின் வார்த்தைகள்.
“என்ன இப்படி மாத்தி பேசுறீங்க? உங்க பொண்ணுக்கு ருத்ரன்னு சொல்லி என்னை விட உறுதியாக இருந்தது நீங்க தான். இப்போ ஏன் திடீர்னு அதை மறந்துட்டு பேசுறீங்கனு எனக்கு புரியல”
“உறுதியா இருந்தா ருத்ரா கிடைச்சிருவானா இல்லையே? நடக்காத ஒன்ன நெனச்சி எதுக்கு வீணான நம்பிக்கைகளை வளர்த்துக்கனும்? அவன் கல்யாணம் பண்ணி அந்த பொண்ணை வீட்டுக்கும் கூட்டிட்டு வந்துட்டான். இனி மறுக்குறதால பிரச்சினை தான் மிஞ்சும். அதை விட்டுட்டு அவன் கூட நல்லபடியா நடந்துக்கங்க மாப்ள”
“எனக்கே அட்வைஸா? பரவாயில்லையே நல்லா தான் பேசுறீங்க. உங்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியலயேனு தான் நான் கவலைப்பட்டுட்டு இருந்தேன். ஆனா பேச்சு இப்படி ஆகுது. நல்லாருக்கு மச்சான்” சற்றே ஆத்திரத்தோடு பேசி விட்டு,
“நான் போயிட்டு வரேன். வரேன்மா” லீலாவிடமும் விடைபெற்றுச் சென்றார்.
செல்வனுக்கு ஆத்திரம் என்றால் கணவனை எண்ணி லீலாவுக்கு ஆச்சரியம் பெருகியது.
“ருத்ரன் தான் ஆலியாவுக்கு புருஷன். எங்க வீட்டு மாப்பிள்ளை. அது இல்லனு பண்ண யாராலயும் முடியாது. அதை நான் ஏத்துக்கவே மாட்டேன்” என்று அத்தனை உறுதியாக இருந்தவர் கோபால்.
அப்படி இருந்தவரின் உறுதி தளரச்சியடையக் காரணம் என்ன என்பது இடியாப்ப சிக்கலாக இருந்தது.
அவ்வேளை “மாமா” என்ற ருத்ரனின் குரல் கேட்க கணவனும் மனைவியும் திரும்பிப் பார்த்தனர்.
தன் மனைவி அஞ்சனாவுடன் நின்றிருந்தான் ருத்ரன் அபய்.
கணவன் என்ன சொல்வாரோ என்ற பயத்தில் லீலா அமைதியாக இருக்க “வாங்க. உள்ளே வாங்க” என அழைத்தார் கோபால்.
அதில் தைரியம் வரப்பெற்ற லீலாவும் “என்னடா மாமானு கூப்பிட்டு அங்கே நிக்கிற யாரோ மாதிரி?” எனக் கேட்டார்.
உள்ளே வந்து அமர்ந்தவனோ “இப்போ அப்படி தானே இருக்கு என் நிலமை. மாமா என்னை வீட்ட விட்டு போன்னு சொல்லிடுவாரோனு தான் அங்கேயே நின்னேன்” மனதில் தோன்றியதை மறைக்காமல் பகிர்ந்து கொண்டான்.
“உங்கப்பா கோச்சுக்கிட்டதை வெச்சு இப்படி சொல்லுறியா ருத்?” எனக் கேட்டார் கோபால்.
“ஆமா மாமா! இருந்தாலும் அவர் பக்கம் எந்த தவறும் இல்லை. இப்படி திடீர்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தா என்ன பண்ணுவார்? அவரோட மனசு ஆறி என் கூட பேசும் வரை வெயிட் பண்ணுறோம்” இதழ்களில் விரக்திப் புன்னகை.
அவனை இப்படிப் பார்க்க கஷ்டமாக இருந்தது. எப்போதும் கலகலப்பாக இருப்பவனின் இந்த நிலை அவ்விதம் இருந்தது.
“உன் அம்மு பேச மாட்டாங்களா?” லீலா கேட்க, “இதே கேள்வியை அவ கிட்ட கேட்டுடாதீங்க அத்தை. அப்பறம் பேசலனா எப்படி பேச முடியும் பேசினா பேசுவேன்னு லாஜிக் பேச ஆரம்பிச்சிருவா” என சொன்னான் ருத்ரன்.
“அப்படிலாம் இல்லை சித்தி. நான் பேசுவேன் தான். ஆனா இவரை மாதிரி லொடலொட வாய் இல்லை” என்று புன்னகையோடு கூறினாள் அஞ்சனா.
“என் மருமகனை லொடலொட வாய்னு சொல்ல என்ன தைரியம் உனக்கு?” போலியான கோபத்துடன் கேட்டார் கோபால்.
“ஓஓ சாரி சித்தப்பா! இனிமே சொல்லல” வாயை மூடிக் கொண்டாள் சாதாரணமாக.
“என்ன மாமா என் பொண்டாட்டியை வந்ததும் கலாய்க்கிறீங்க? அவ எப்படி பயந்துட்டா பாருங்க” என்றதும் அஞ்சு செல்லமாக முறைக்க கோபாலின் பார்வை அவள் மீது பதிந்து மீண்டது.
“ஆலியா வந்தாளா அங்கே?” என்ற லீலாவின் கேள்விக்கு “ஆமா அத்தை! அம்மா கூட பேசிட்டு இருந்தா. நாங்க கூப்பிட்டும் வர முடியாதுனு சொல்லிட்டா” என்றான் ஆடவன்.
“உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பற்றி பேச தான் வந்தேன் மாமா” அவன் இழுக்கும் போது, “நிதின் விஷயமா பேசுறதா இருந்தா வேணாம்” உடனடியாக மறுப்புத் தெரிவித்தார்.
“அது விஷயமா தான். இன்னிக்கு ஆலியா என் கிட்ட நீங்க நிதினை வேண்டாம்னு சொல்லுற விஷயம் எல்லாம் சொன்னா. அவ நிதினை லவ் பண்ணுறா மாமா” மெதுவாக சொன்னான் அவன்.
“லவ்வுனு சொன்னா பெரிய இதுவா? லவ் பண்ணுறதா சொன்னா உடனே எதையும் யோசிக்காம கட்டி கொடுத்துடனுமா? அவன் நல்லவனா கெட்டவனா நமக்கும் அவங்க குடும்பத்துக்கும் ஒத்து வருமானு எதையும் யோசிக்க வேணாமா?” இத்தனை நேரம் இருந்த அமைதியும் மென்மையும் அவரிடம் மொத்தமாக காணாமல் போயிருந்தது.
“யோசிக்கனும் அது நம்ம கடமை தான். ஆனா நீங்க நிதினை மறுக்க காரணம் அவனோட தொழில் தானே?”
“எஸ் ருத்ரா! விவசாயம் பண்ணுறவனால எப்படி என் பொண்ணை நல்லபடியா பார்த்துக்க முடியும்? அவனோட சம்பளம் அதுக்கெல்லாம் போதுமா?”
“மாமா நிதின் யாருன்னு தெரியுமா உங்களுக்கு? அவன் ஒன்னும் அந்த வயல்ல வேலை செய்யுற விவசாயி இல்லை. அந்த வயலோட சேர்த்து இன்னும் நாலு வயலும் அஞ்சு தென்னந்தோப்பும் அவனுக்கு சொந்தமா இருக்கு. அது அவனுக்கு பரம்பரையா வந்தது இல்லை, அவனா உழைத்து சம்பாதித்தது.
ஆனாலும் அதை காட்டிக்காம அவனும் அதே வயல்ல எல்லாரோடயும் சேர்ந்து வேலை செய்யுறான். இதை வெச்சு உங்களை மாதிரி பலபேர் அவனை இப்படி தான் நெனச்சிட்டு இருக்கீங்க”
ருத்ரன் சொல்லச் சொல்ல சிலையாக சமைந்து போனார் கோபால். இந்த விஷயமெல்லாம் அவருக்குப் புதிது.
“அது மட்டுமல்ல மாமா, அவனை பலதடவை என் கம்பனிக்கு வா. உனக்கு பீ.ஏ போஸ்ட் தரேன்னு சொல்லிருக்கேன். அந்தளவுக்கு படிச்சிருக்கான். ஆனா அவனுக்கு அதெல்லாம் பிடிக்கல. அவன் வயல்ல உழைச்சு சம்பாதிச்சு குடுக்குறது தான் அவன் அம்மாவுக்கு இஷ்டம் அவனுக்கும் பிடிக்கும்னு கம்பனிக்கு வரல”
“இந்த விஷயம் எல்லாம் எனக்கு தெரியாது டா. கேட்கும் போது அந்த நிதினை நெனச்சு பெருமையா இருக்கு. இப்படி ஒரு பையன் எனக்கு மாப்பிள்ளையா வர கொடுத்து வெச்சிருக்கனும்” என்றுரைத்தார் கோபால்.
மகள் சந்தோஷமாக வாழ வேண்டும். நிதினின் ஏழ்மை நிலை அந்த சந்தோஷத்தைக் கொடுக்கா விட்டால் மகள் வாழ்க்கையில் சிக்கல் ஏற்படும் என்பதே அவரது பிரச்சனையாக இருந்தது. அதுவும் தீர்ந்த பிறகு மறுப்புச் சொல்ல வேறு காரணங்கள் அவரிடம் இருக்கவில்லை.
அப்போது தான் வீட்டிற்கு வந்த ஆலியா தந்தையின் பேச்சைக் கேட்டு இன்ப அதிர்ச்சியில் நின்றாள். அவளால் நம்பவே முடியவில்லை.
“அப்பாஆஆ” என ஓடி வந்து அவரை அணைத்துக் கொண்டாள்.
“உன்னை கஷ்டப்படுத்திட்டேன்லமா. சாரி. நாம நல்ல நாளா பார்த்து நிதின் வீட்டுக்கு போய் பேசலாம்” அவளது தலையை வருடி விட்டார் கோபால்.
“அச்சோ போதும் போதும்! உங்க பாச மலர் படத்தை பார்க்க சகிக்கல” அலுத்துக் கொண்டான் ருத்ரன்.
“அதோட டைரக்டரே நீங்க தான் மாமா. தாங்க் யூ தாங்க் யூ! உங்களால தான் அப்பா ஓகே சொன்னார்” ருத்ரனுக்கு நன்றியுரைத்தாள் ஆலியா.
“அஞ்சு நீங்களே சொல்லுங்க. உங்க ஆளு அவரு அம்மா கூட சேர்ந்து ஓட்டுற பாசமலர் படத்துக்கு இது எவ்ளோவோ மேல் இல்லையா?” அஞ்சனாவைப் பார்த்து கண்ணடித்தாள் ஆலியா.
“ஆமா ஆலியா. அது அத்தனை படத்தையுமே மிஞ்சிரும். என்னா பாசம்” ஆலியாவுக்கு ஏற்றது போல் கிண்டலாக சொன்னாலும் அவள் மனம் அந்த பாசமெல்லாம் தனக்கு இல்லையே என்று ஏங்கியது.
“பயப்படாத அம்மு! இனிமே அந்த படத்தை டபுள் மடங்கா உன்னை வெச்சு ஓட்டுவான் பாரேன்” என்று லீலா சொல்ல,
“அத்தை! அஞ்சு சொல்லுங்க. அவ எனக்கு மட்டும் தான் அம்மு” சிறு குழந்தையாய் உரிமை கொண்டாடினான் காளை.
“எனக்கு வேணாம்டா உன் அம்முவை நீயே வெச்சிக்கோ” லீலா அவள் கையைப் பிடித்து ருத்ரனின் கையில் ஒப்படைத்தார்.
“சரிங்க அத்தை” தன்னவளின் கையைப் பிடித்து அழுத்தினான் அபய்.
அவன் கையின் தொடுதல் மெல்லியவளின் இருதயத்தில் மின்னல் பாய்ச்சியது. மலர் விழியால் தன் மன்னவனை நோக்கினாள் அவனுள் மலர்ந்த காதல் மலரானவள்.
தொடரும்…….♡
ஷம்லா பஸ்லி